நமக்கு மிகப்பழமையான ஒரு இலக்கிய மரபு உண்டு. கிரேக்க, லத்தீன், ஜப்பானிய, மொழிகளில் உள்ளதைப் போன்ற மிகப்பழமையான இலக்கிய மரபு நமக்கு இருக்கிறது. இது பெருமை அன்று. ஆனால் மிகச் சாதாரணமான உண்மை. நம் தமிழ்மொழி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இரட்டை வழக்குத் தன்மையுடன் வழங்கி வருகிறது. நம்முடைய மொழி பேசுவது போல எழுதப்படுவதில்லை. எழுதுவது போலப் பேசப்படுவதில்லை. இதனால் தான் இத்தனை ஆண்டு காலமாகத் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகிறது. இந்த இரட்டை வழக்குத்தன்மை மொழிக்கு மிக முக்கிய மானதாகும். இப்படியரு பழமையான தன்மை பெற்ற மொழியில் நவீனத்துவ மரபைக் காணவேண்டிய தன்மை இன்று முக்கியத்துவம் பெறுகிறது.

modernism 350நவீனத்துவம் என்ற சொல் ‘modernism’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ‘modernism’ என்பது என்ற modernity சொல்லின் பெயர்ச்சொல் வடிவம் . modernity என்பது நேற்றுச் சொன்னதிலிருந்து புதிதாக ஒன்றைச் சொல்வது. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது என்ற நிலையிலிருந்து புதிய செய்திகளைப் - புதிய நோக்கில் சொல்வது என்ற அடிப்படையில் நாம் modernity என்ற சொல்லைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இந்தச் சமூகம் அப்படியான இயக்கத்திலேதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. புதிய புதிய விடயங்களும் நிகழ்வுகளும் நமது கருத்தை மாற்றுகின்றன. இதனால் நமது வாசிப்பின் தன்மையும் மாறுகிறது. இந்தத் தன்மையை modernity என்கிறோம். தமிழில் ‘சமகாலத்தன்மை’(contemporary) என்றும் இதனைப் புரிந்துகொள்ளலாம்.

சமகாலத்தன்மையற்ற பொருள் இருப்பின் அது அருங்காட்சியகத்துக்குத் தான் செல்ல வேண்டும். இலக்கியத்துக்கும் இது பொருந்தும். பல நூறு ஆண்டுகளாகப் பேசப்படும் ஒரு இலக்கியமோ(அ) இலக்கணமோ சமகாலத் தன்மையைத் தன்னுள் கொண்டிருந்தால் மட்டுமே அதை நாம் கொண்டாட முடியும். நமது தொல்பழங்கால இலக்கியங்கள் இந்தச் சமகாலத்தன்மையைப் பெற்றிருக்கிறதா? என்று ஆராய வேண்டும்.

ஐரோப்பியர்களுக்கென்று ஒரு பழமையான செறிவான வரலாற்று மரபு இருக்கிறது. கிரேக்க - எகிப்திய - ரோமானியர்களுக்கென்று பண்டைய விரிவான மிகப் பழமையான இலக்கிய மரபு உண்டு . பிளேட்டோ, அரிஸ்டாடில், பித்தாகோரஸ் போன்ற அறிஞர்கள் கி.முவில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களது கருத்துகள் லத்தீன் மொழிவழியாகப் பரவியது. கிரேக்க - லத்தீன் மொழிகளில் இருந்தவையே இன்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன. இவ்வாறு தான் ஆங்கில மொழி செறிவு பெற்றது. கி.பி 500 வரை ஒரு மரபும், கி.பி 500 முதல் கி.பி 1200 வரை ஒரு மரபும், இருந்தது. அதன் பின் கி.பி 1200க்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளால் தொழிற்புரட்சி ஏற்பட்டது. இதனால் மிகப்பெரிய சமூக மாற்றம் உருவானது.

ர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் எழுந்தன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முதலான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. கி.பி 13,14 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த இந்தப் பிரெஞ்சுப் புரட்சி உலகிற்குப் புதிது. இதனால் ஐரோப்பியர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்தனர். இங்கிலாந்திலிருந்து சென்றவர்கள் அமெரிக்க, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறினர். அங்கு தமது சாம்ராஜ்யங்களை நிறுவிப் பலப்படுத்திக் கொண்டனர். உலகின் பல இடங்களில் இப்படியான அரசியல் - தொழில் புரட்சிகள் நிகழ்ந்தேறியபோது நமது நாட்டில் குறிப்பாக, தமிழகம் என்று சொல்லக் கூடிய இந்த நிலப்பரப்பில் என்ன நிகழ்ந்தது?.

ஐரோப்பியர்கள் கி.பி 16ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை இங்கு ஆதிக்கம் செலுத்தியபோது தங்கள் பல்வேறு அறிவுசார் வளங்களை நமக்கும் கொடுத்தனர். குறிப்பாக அவர்களால் நம் கல்விமுறை பெரும் வளர்ச்சி பெற்றது. பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகள் என்று சகல தரப்பினர்க்கும் கல்வி கிடைத்தது. ஐரோப்பியர்கள் இல்லாவிட்டால் இப்படியரு வாய்ப்பு நமக்குச் சாத்தியமில்லை.

இப்படியான சூழல்களில் நமது செவ்விலக்கியங் களான சங்க இலக்கியங்கள் மிகச்சிறப்பான நவீனத் தன்மையை உள்வாங்கியுள்ளன. ஈரோடு மாவட்டத்தி லுள்ள கொடுமணல் என்ற ஊர் கி.மு 400, 500களில் மிகச் செழுமையான ஒரு வணிக நகரமாக இருந்திருக் கிறது. கி.மு 1900 இல் ஹரப்பா, மொகஞ்சதாரோ என்ற நாகரிகமரபு தமிழ் நாகரிகத்தின் மூலமரபாக இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற அகழாய்வுகள் நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு வளமான மொழி பேசிய மக்கள் கூட்டம் என்பது தெளிவாகிறது. இப்படியான பின்புலத்தில் உருவான சங்க இலக்கியங்கள் கி.மு 500 லிருந்து கி.பி 500 வரையான ஏறக்குறைய 483 புலவர் களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அக் காலகட்டத்தில் பல புலவர்களால் - பல இடங்களில் பாடப்பட்டவை. சிதறிக் கிடந்த இப்பாடல்கள் கி.பி 6ஆம் நூற்றாண்டு அளவில் தொகுக்கப்படுகின்றன. இந்தத் தொகுப்புப் பணியில் கி.பி.6இல் கிரேக்க,லத்தீன் மொழிகளில் செயல்பட்டதைப் போல் தமிழிலும் புலமையாளர் கூட்டம் ஈடுபட்டது. இவர்கள் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் சமகாலத்தன்மை உடையவர் களாவர் (modernities). நவீன கால பிரக்ஞை உடையவர் களாக அப்போதே இருந்திருக்கின்றனர். தொகுப்பு மரபில் இந்தப் புலமையாளர்கள் மிகுந்த சிரமங்களுக் கிடையில் பாட்டும் தொகையும் எனப்படும் இந்த இலக்கியங்களைத் தொகுத்தனர். அவர்கள் தொகுத்த பாடல்களுக்குக் கீழே திணை, துறை, பண், பாடியவன், பாடப்பட்டவன் முதலான குறிப்புகளைத் தந்து தொகுத்ததை நாம் மிக முக்கியமான நவீனத் தன்மை யாகக் கருத முடியும். பழையது என்றும், உதவாது என்றும் அவர்கள் நம் பழைமை இலக்கியங்களைக் கருத வில்லை.

நமது அரிய இலக்கணச் செல்வமான தொல் காப்பியம் இந்தத் தொகுப்பு மரபைப் புரிந்துகொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. அது குறிப்பிடும் முதல், கரு, உரிப் பொருள்களெல்லாம் வெறும் வார்த்தைகளன்று. அவை மனித உணர்வுகள். ஆனால் நமக்குக் கற்பித்த வர்கள் அதை மனப்பாடம் செய்யும் வார்த்தைகளாகக் கட்டமைத்துவிட்டனர். இரண்டு விஷயங்களை நாம் யதார்த்தமாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று மனிதன். இன்னொன்று அவனைச் சுற்றியுள்ள சூழல். இந்த இரண்டுக்குமான உறவே உலகம். இதற்குக் காரணம் மறு உற்பத்தி. ஆனால் இதனை மனிதன் சாதாரணமாக நிகழ்த்துவதில்லை. அதைக் கொண்டாடு கிறான். இந்தக் கொண்டாட்டமே சடங்கு. அதாவது திருமணம். இந்தத் தன்மையைத்தான் புலவர்கள் தன்னுணர்ச்சிக் கவிதைகளாக வெளிப்படுத்துகின்றனர். இது அகம் என்று குறிக்கப்படுகிறது. எனவே சங்கப் பாக்கள் அனைத்தும் தன்னுணர்ச்சிக் கவிதைகளாகும். இதனை ஆங்கிலத்தில் மிஹ்க்ஷீவீநீs என்று கூறுவர். அதே போல் சங்கப்பாடல்கள் மட்டுமல்ல, உலகின் எல்லா செந்நெறி மொழிகளிலும் உருவான எல்லாப் பாடல்களும் தன்னுணர்ச்சிப் பாடல்களே. தன்னுணர்ச்சி என்பது ஒரு மனிதன் தன் சக தோழியோடு (அ) தோழனோடு உறவாடக் கூடிய ஒரு தன்மையாகும். இது எல்லோரிடமும் உள்ள ஓர் அடிப்படையான பண்பு தான். இந்தப் பண்பைத்தான் இலக்கியங்கள் தன்னுணர்ச்சிப் பாக்களாகக் கொண்டுள்ளன. யாப்பு வடிவத்தில் பாடப்படும்போது இது அகவற்பா என்று அழைக்கப்படுகிறது. இவை சமகாலத்தன்மையுடை யனவாக உள்ளன. காரணம் ஆண்- பெண் அகவுணர்வை வெளிப்படுத்தும் பாங்கு - அதன் புற வடிவம் முதலியன மாறும். ஆனால் உறவு- உணர்வு ஆகியவை மாறாது.

கி.பி 7ஆம் நூற்றாண்டு தொடங்கி எழுதப்பட்ட தேவார - திருவாசகப் பாடல்களில் என்னால் ஈடுபட முடியாது. அதில் ஒரு பக்திமான் தான் ஈடுபடமுடியும். ஆனால் சங்கப் பிரதிகள் அப்படியல்ல. காரணம் அவை நவீனத்தன்மையை உள்வாங்கியுள்ளன . சமயச் சார்பற்ற மனித உறவை முதன்மைப்படுத்துகின்ற இலக்கியங் களாக உருப்பெறுகின்றன. இந்தத் தன்மையை நாம் செவ்வியல் இலக்கியத்துக்கான முக்கிய பண்பாகக் கூறமுடியும். இன்றேல் அது செவ்வியல் இலக்கியம் அல்ல. இந்தச் செவ்விலக்கியம் 5ஆம் நூற்றாண்டு வரை அக்காலத்திய இலக்கியமாகவே வாசிக்கப்பட்டது. ஆனால் 6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அதன் வாசிப்புமுறை மாறுகிறது. கி.பி 6 - 9 ஆம் நூற்றாண்டு களில் அதாவது பிற்காலப் பாண்டியர்கள் இவற்றைத் தொகுத்ததாகக் கூறுவர். இந்தக் காலகட்டம் மிக அதிகமான பக்தி இலக்கிய உருவாக்க மரபைக் கொண்ட காலமாகும். ஒருபுறம் கடவுள், துதி, வழிபாடு, கோயில் உருவாக்கம் என்றிருந்த போதிலும் மறுபுறம் ஓர் அறிவாளிக் கூட்டம் இந்தத் தொகுப்புப் பணியில் ஈடுபட்டது. இதனையட்டி நிகண்டுகள், பாட்டியல் நூல்கள், ஆகம நூல்கள் முதலியன பெருமளவில் உருவாக்கப்பட்டன.

இலக்கணத் துறையில் நன்னூல் மரபு உருவானது. தொல்காப்பியத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த மரபு 11ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் தொடங்கி 17ஆம் நூற்றாண்டின் இலக்கணக் கொத்து வரை ஒரு புதிய இலக்கண மரபாக உருவாகிறது. இந்தக் கால கட்டத்தில் உருவான புதிய அறிவாளிக் கூட்டத்தை நாம் உரையாசிரியர்கள் என்கிறோம். தொகுப் பாசிரியர்கள் சங்கப் பிரதிகளுக்குக் குறிப்புகளைக் கொடுத்து அதை நவீனத் தன்மையுடையதாக மாற்றினார் களோ அதேபோல் உரையாசிரியர்களும் உரையில் குறிப்புகளைக் கொடுத்து இலக்கண மரபை நவீனப் படுத்தினார்கள். இவர்களில் நச்சினார்க்கினியரும் பரிமேலழகரும் முக்கியமான ஆளுமைகள் இவர்கள் தமிழ் மொழி அளவிற்குச் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர்கள். இந்தப் புலமையாளர்கள் சங்கப் பாடல்களைத் தம் குறிப்புகளையும் அறிவாழத்தையும் கொண்டு நவீனப்படுத்தினார்கள்.
நமக்கு அறம், பொருள், இன்பம் என்ற முப் பொருள்களைத் தான் திருக்குறள் வலியுறுத்துகிறது. அதுவே நம்மரபு. ஆனால் சமஸ்கிருதம் நுழைந்த பின்பு வீடுபேறு என்ற புதிதான மரபு வருகிறது.

இதனை உரையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பாடியவர்கள் கூறிய மரபிலிருந்து - தொகுத்தவர் கூறிய மரபிலிருந்து புதிய மரபை உரையாசிரியர்கள் நமக்கு அறிமுகப்படுத்துகின்றனர். குறிப்பாக நச்சினார்க்கினியர் உரையின் எடுகோள் பாங்கு, சங்கப்பிரதிகளை அக்காலத்திய மிக நவீனமாகக் காட்டுகின்றன.

கி.பி 16 - 19 வரையான காலகட்டம் சங்கப் பிரதிகளுக்கு வளமான காலகட்டமாக அமையவில்லை. 17ஆம் நூற்றாண்டில் எழுந்த இலக்கணக் கொத்து எழுதிய சுவாமிநாத தேசிகர் ஒரு சைவப்பற்றாளர். சைவ சமயம் 12ஆம் நூற்றாண்டு முதல் மிகத் தீவிரமாக இருந்து வந்தது. சிவஞான முனிவர் உள்ளிட்ட சைவப்பெரியார்கள் சங்க இலக்கியங்களை சமண - பௌத்த இலக்கியங்களாகப் பார்த்தார்கள். அவர்களின் சமயக் காழ்ப்புணர்வு காரணமாகத் திருக்குறள், சிலப்பதி காரம் முதலியவற்றோடு சங்க இலக்கியங்களையும் புறக்கணித்தனர். இலக்கணக் கொத்தின் ஆசிரியர் சுவாமிநாத தேசிகர் தம் நூலின் முன்னுரையில் “சைவர் களெல்லாம் திருக்குறள், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்ற மோசமான இலக்கியங்களைப் படித்துக் கெட்டுப்போகிறார்கள்” என்ற பொருளில் குறிப்பிடு கிறார்.

பாட்டு மரபு, தொகுப்பு மரபு, உரை மரபிலிருந்து சைவமரபாளர்கள் இவ்வாறு மாறுபடக் காரணம் என்ன? நமது பழைய மரபு என்பது சமயச் சார்பற்றது. இயற்கை மரபு, மனித உறவைப் பேசுவது. இதனைப் பின்னர் வந்த வைதீக மரபு உடைத்தது. இம்மரபில் உருவானவையே சைவ - வைணவ சமயங்கள். இந்தச் சமயங்களுக்கு அடிமைப்பட்ட நாம் மனித உறவை முதன்மைப் படுத்திய சார்பற்ற இலக்கிய மரபை (secular literature) இழந்தோம். இதற்குச் சைவர்களும் முக்கிய காரணமாக விளங்கினர். இது 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை தொடர்ந்தது.

இதனை இன்னொரு ஆளுமை மூலமும் நாம் விளங்கிக் கொள்ள முடியும். நமக்கு நன்கு அறிமுகமான சைவப் பெரியவர் ஆறுமுக நாவலர். இலங்கையிலும் தமிழகத்திலும் கிறித்தவர்களுக்கு இணையாகப் பள்ளிக் கூடங்களை நிறுவியவர். அவரது நூலகத்தில் சங்க இலக்கியம் உள்ளிட்ட பலவகையான சுவடிகள் இருந்தன. ஆனால் அவர் பிற சங்க இலக்கியங்களைப் பதிப்பிக்காமல் 1851 - இல் திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித்தார். அவர் சங்க இலக்கியங்களைப் பதிப்பித் திருந்தால் தமிழ்த்தாத்தா வந்திருக்க மாட்டார். உ.வே.சாவுக்கு அந்தப் பெயர் ஏற்பட ஆறுமுகநாவலர் பெரும் பங்காற்றியிருக்கிறார். காரணம் அவரது சைவப்பற்று. இந்தப் பற்றால் சைவர்கள் சங்க இலக்கியத்தைப் பதிப்பிக்கவில்லை.

கி.பி 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அச்சு இயந்திரத்தின் வளர்ச்சியால் கிறித்தவர்கள் ஏராளமான நூல்களைப் பதிப்பித்தார்கள் . குறிப்பாக சமண- பௌத்த சமயங்களைத் தூக்கிப் பிடித்து சைவத்தை ஓரம் கட்ட முயற்சித்தனர். இதனால் திருக்குறளை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்த்தனர். சீவகசிந்தா மணியைப் பதிப்பித்தனர். காரணம் அது சமண நூல். கிறித்தவ - சைவ சமயங்களுக்கான இந்த எதிர்மறைச் சூழலில் சி.வை.தா.வும், உ.வே.சா.வும் இதிலிருந்து விலகி ஆக்கபூர்வமான வேலையைச் செய்தனர். இருவரும் சைவப்பற்றாளர்கள் என்றபோதிலும் சமயக் காழ்ப்புணர்வைக் கைக்கொள்ளவில்லை. சி.வை.தா முதலில் பதிப்பித்தது வீரசோழியம் என்னும் பௌத்த நூல். உ.வே.சா முதலில் பதிப்பித்தது சீவக சிந்தாமணி என்னும் சமண நூல். இந்தப் புலமையாளர்கள் இருவரும் நவீனப் பிரக்ஞை உடையவர்களாக இருந்தனர். குறிப்பாக உ.வே.சா - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் பெற்ற பயிற்சியும் தியாகராச செட்டியாரிடம் பெற்ற புலமையும் இதற்கு அடிப்படையாக அமைந்தன. அக்காலத்தில் மடங்களைச் சேர்ந்தவர்கள் அவருக்கு உதவினர்.

அவர் தம் கல்வியில் நவீன சிந்தனையைப் போதித்த ஆசிரியராக விளங்கினார். இந்தப் பழமை இலக்கிய மரபு அழிந்து போகக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இவ்வாறாகவே உ.வே.சா ஒரு நவீன சிந்தனைவாதியாக (modern intellectual) விளங்கினார். இதற்காகத் தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார். இதனாலேயே அழிந்து போகவிருந்த நமது பிரதிகள் அச்சாக்கம் பெற்றன.

ஆங்கிலேயர் வருகையால் உருவான மற்றொரு துறை தொல்லியல் துறையாகும். இத்துறையின் மூலம் கண்டறியப்பட்ட பல உண்மைகள் முக்கியத்துவம் பெற்றவை. ஆதிச்சநல்லூரில் சிந்துச் சமவெளி நாகரிகக் கூறுகளும், கொடுமணலில் சங்ககாலக் கூறுகளும் உறையூர், புகார், வஞ்சி முதலிய நகரங்கள் பற்றிய உண்மைகளும் ஆராய்ச்சிகளும் நம் பழம்பிரதிகளை நவீனமாகப் புரிந்துகொள்ள உதவின. நவீன உணர்வு களைக் கொடுத்தன.

நமது மரபில் ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக சமசுகிருத - தமிழ் முரண் என்பது இயல்பானது. சிலப்பதிகாரத்திற்குப் பிறகு தமிழில் ஏன் நேரடிக் காவியங்கள் எழுதப்படவில்லை? அதற்குப் பிறகு பெருங்கதை, சூளாமணி, நீலகேசி என்று தழுவல்களே வந்தன. இதற்குக் காரணம் வைதீக மரபுதான். திருவிளையாடற் புராணம், கந்த புராணம், பெரிய புராணம், போன்ற புராணமரபு ஏன் இன்று தொடர்ந்து எழுதப்படுவதில்லை. காரணம் அவை இறந்து போன வடிவங்களாகிவிட்டன. இன்று நாவல் தான் எழுத முடியும் . இப்படியான நவீன தன்மையில் ஆழமாகச் செல்லும்போது மொழிகள் பற்றிய ஆய்வு விரிவாக நடைபெறுகிறது. உலக மொழிக் குடும்பங்களில் தமிழின் தனித்தன்மை ஆராயப்படுகிறது. அந்தத் தனித்தன்மைக்கும் செவ்விலக்கியத்துக்குமான உறவு ஆராயப்படுகிறது.

தொல்லியல் ஆய்வுகளில் பல குறியீறிடுகளும், எழுத்து வடிவங்களும் கண்டறியப்படுகின்றன. குறிப்பாக ‘பிராமி’ எழுத்து வடிவம் தமிழின் மூல வடிவமாகக் கருதப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நமது தொல்எழுத்தியல் மரபு பற்றிய வாதங்கள் மேலெடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் பிராமிக் கல் வெட்டுகள் கண்டறியப்பட்டன. அதன் படிநிலைகள் அறியப்பட்டன. இதனால் நமது தொல் எழுத்தியல் மரபு வளமாக இருந்ததை அறியமுடிகிறது. மனோன் மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய ‘ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து’ என்ற வரி நாம் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் நீக்கப்பட்டுள்ளது. மனோன்மணீயம் எழுதிய வரி எப்படி நீக்கப்பட்டது? அந்த உரிமையை யார் கொடுத்தது. நமது தேசிய இயக்கங்கள் தான் இதனைச் செய்தன. தமிழை முதன்மைப்படுத்திய இயக்கங்கள் சங்கப் பிரதிகளைப் புதிதாக வாசிக்கத் தொடங்கின. அது அவர்களது நவீன மரபாகப் பார்க்கப்பட்டது.

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தனது அகராதியியல் புலமையடிப்படையில் சங்க இலக்கியங் களைப் பதிப்பித்து புதியதொரு மரியாதையை (நீஷீக்ஷீஜீus) அந்தப் பிரதிகளுக்கு ஏற்படுத்தித் தந்தார். இந்த முறை சங்க இலக்கியத்தை மேலும் புதியதாக வாசிக்க உதவிற்று. தொடர்ந்து தனிநாயகம் அடிகள், கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் புதிய திறவுகோல்களின் அடிப்படையில் அந்தப் பிரதிகளை வாசித்தனர். குறிப்பாக கிரேக்க வீரமரபோடு - தமிழில் புறநானூற்று மரபை இணைத்துப் பேராசிரியர் கைலாசபதி ஆய்வு நிகழ்த்தினார். சிவத்தம்பியும் கிரேக்க - லத்தீன் மரபோடு தமிழ்மரபை இணைத்துப் பார்த்தார். இவ்வாறாக சங்க இலக்கியங்கள், புராணம் - பக்தி போலல்லாமல் தனித் தன்மை வாய்ந்த செவ்விலக்கியப் பிரதிகளாக மாறின. அவற்றின் சமகாலத் தன்மையை நாம் வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடியும்.

இதனை ஒரு விடயத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம். தொகுப்பு மரபில் தொகுப்பாசிரியர்கள் சில வேலைகளைச் செய்கின்றனர். பிற்காலத்தில் இப்பணி நடைபெறுவதால் கடவுள் வாழ்த்துப் பாடலொன்றைச் சேர்த்து விடுகிறார்கள். இதனைத் தவறு என்று வாதிட முடியாது. இந்தத் தன்மையின் உச்சமாகப் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையைச் சேர்க்கின்றனர். நக்கீரநாயனார் எழுதிய 11ஆம் திருமுறையில் உள்ள ஒரு பாடல் திருமுருகாற்றுப் படைப் பாடலாகும். எப்படி ஒரு பக்திசார் தொகுப்பு, சார்பற்ற தன்மை கொண்ட சங்கப்பிரதிக்குள் வந்தது. இதற்குக் காரணம் தொகுத்தவர்களின் கைங்கரியம். அவர்களைக் குறை சொல்ல இயலாது. காரணம் அவர்களின் படிப்புமுறை அப்படிப்பட்டது. ஆனால் மிகப்பெரிய விழிப்புணர்வும், வரலாற்றுப் பிரக்ஞையும் உள்ள காலகட்டத்தில் வாழ்கின்ற நாமோ நற்றிணை, குறுந்தொகையோடு திருமுருகாற்றுப்படையையும் ஒரே தளத்தில் வைத்து வாசிக்கிறோம். இது மிகப் பெரிய சிக்கல். சங்கப் பிரதிகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோம் என்பதற்கு இதுவே சான்று.

பரிபாடல் முருகன், திருமுருகாற்றுப்படை முருகன் போன்றோர் தேவார - திருவாசக மரபின் ஊடாக உருவானவர்கள். திருவிளையாடற் புராணம் மற்றும் கந்தபுராண மரபின் ஊடாக உருவானவர்கள். ஆனால் செவ்விலக்கிய மரபில் புராணீகத்திற்கு இடமில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலைக்கு முக்கிய காரணம் நமக்கு ஏற்பட்ட வைதீக - சமசுகிருத தாக்கம். இவற்றால் நன்மை நடந்தாலும் மிக மோசமான தீமைகளே அதிகம். காரணம் வைதீக மரபில் உருவான வேதங்கள், பாரதக்கதை, பெரிய புராணம் உள்ளிட்டவை புராணீக மரபைச் சார்ந்தவை. இயற்கையைப் பேசும் மரபல்ல. இம்மரபில் வந்த திருமுருகாற்றுப்படை சங்கப் பிரதிகளின் செவ்விலக்கிய மரபிற்கு எதிரானது. ஆகவே அதனைத் தனித்து வாசிக்க வேண்டும். இதனை எனது ‘சங்க நூல்களின் காலம்’ என்ற குறுநூலில் குறிப்பிட்டுள்ளேன். கலித்தொகையை ஆராய்ந்த ஐரோப்பியர்கள் அதனை 9ஆம் நூற்றாண்டு என்கின்றனர். எனவே சங்கப் பிரதிகளின் வைப்பு முறையைக் கூறும்போது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்பதை முதல் வைப்பு முறையாகவும், பத்துப்பாட்டில் மலைபடு கடாம், பெரும்பாணாற்றுப்படை இரண்டையும் ஒரு பிரிவாகவும் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடு நல்வாடை இவற்றை இரண்டாம் பிரிவாகவும் மூன்றாவது பிரிவில் பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை.

இறுதியில் மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை முதலிய வற்றையும் வைத்துப் படிக்க வேண்டும். ஏனென்றால் மதுரைக்காஞ்சியும், பட்டினப்பாலையும் சிலப்பதி காரத்தின் முன்வடிவம். இவற்றைச் சிலம்பின் புகார், மதுரைக் காண்டப் பகுதிகளின் முன்வடிவங்களாகப் பார்க்கமுடியும். இதற்கு ஒரு தர்க்கரீதியான காரணம் உண்டு. உலகச் செவ்விலக்கியங்களில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் முதன்மையாகவும் அதனைத் தொடர்ந்த நீண்ட செய்யுள் மரபு காவியங்களாகவும் இருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் தான் மதுரைக்காஞ்சியையும், பட்டினப்பாலையையும் நாம் வாசிக்க வேண்டும். ஆனால் இதனை நமது ஆராய்ச்சியாளர்களும், ஆசிரியர்களும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் செவ்விலக்கியங்களில் சமகாலத் தன்மை அழிந்துபோய் புராணீகத் தன்மையை அடைவதற்கான ஆபத்தும் நிகழ்கின்றது. இதனைச் சுயமரியாதை இயக்கக்காரர்களும் செய்கின்றனர். வையாபுரிப்பிள்ளை இவற்றின் காலத்தை, கி.பி. 10 என்று கூறியதால் தமிழ்த் துரோகி என்று பாவாணர் போன்றவர்களால் வசைபாடப் பட்டார். இவ்வாறு தர்க்கப்பூர்வமாகச் சிந்திப்பவர்கள் சமூகத்திலிருந்து அந்நியப்பட்டுப்போவார்கள் என்பது நியதி.

ஆகவே இனிவரும் ஆய்வாளர்கள் சங்கப் பிரதிகளை இந்த நோக்கில் ஆராய்ந்தால் மட்டுமே அவை நவீனத்தன்மை கொண்ட பிரதிகளாக இருக்கும். நான் முன்னர் குறிப்பிட்டது போல நவீனத்துவம் என்பது புதிய பிரக்ஞையை உருவாக்குவது. தற்காலத்தில் எழுதப் படும் நவீன இலக்கியக் கோட்பாடுகள் (moderntheories) இதன் தொடர்ச்சியாகவே உருப்பெறுகின்றன. சசூர், லெவிஸ்டிராஸ், போன்ற அறிஞர்கள் இந்தக் கோட்பாடுகளைக் கட்டமைக்கின்றனர். புதிய கோட் பாடுகள் உருவாக்கப்படுகின்றன. எனவே நவீனத்துவம் என்பது ஒரு வரலாற்றுச் சொல். நமது செவ்விலக்கியம் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தத் தன்மையை உள்வாங்கியே வந்துள்ளது. நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, முதலியவற்றைத் தொடக்க காலத்தில் பதிப்பித்தவர் அடிக்குறிப்புக்களைக் கொடுக்கவில்லை. பிற்காலத்தில் பின்னத்தூர் நாராயணசாமி ஐயங்கார் போன்றவர்கள் இந்த வேலையைச் செய்கின்றனர்.

இதனை நான் நேரடியாகச் சொல்லவேண்டு மானால் நம் பழம்பிரதிகள் என்பவை முக்கியமான வரலாற்றுத் தரவுகளை உள்ளடக்கிய ஆவணம். தமிழ் இனத்தின் நெடிய வரலாற்றுப் பதிவு. இந்தப் பிரதிகளைத் தற்போதுள்ள நீங்கள் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அந்தப் பிரதிகளை நான் முன்னர் குறிப்பிட்டது போல வகை பிரித்து வாசித்தால் பல அரிய வரலாற்று உண்மைகளைக் கண்டறிய முடியும். எடுத்துக்காட்டாக வெறியாட்டு என்ற நிகழ்வு நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூற்றில் அதிகமாகப் பதிவு பெற்றுள்ளன. ஆனால் பிற்காலப் பிரதிகளான திருமுருகாற்றுப்படை, கலித்தொகையில் வெறியாட்டு குறித்த செய்திகள் அவ்வளவாக இல்லை. காரணம் முன்னைய நற்றிணை, குறுந்தொகைப் பிரதிகள்; தொல்குடி மரபை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் பிற்காலத்தில் கலித்தொகை, திருமுருகாற்றுப் படை, போன்றவை வைதீக மரபின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. ஆகவே இவற்றைத் தொல்லியல், மானுடவியல், மொழியியல் போன்ற கண்ணோட்டங்களில் வைத்து நோக்க வேண்டும். அவற்றைச் சமூக வரலாற்றுப் பிரதிகளாக வாசிக்க வேண்டும். அப்படி யான வாசிப்பில் அதன் சமகாலத்தன்மை உயிரோட்ட முள்ளதாக மாறும். இதுவே செவ்விலக்கியத்தின் அடிப்படைத்தன்மையாகும். செவ்விலக்கியத்தை நவீனத்துவ மரபில் இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பு:

(ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியில் நடைபெற்ற ‘நவீனகோட்பாடுகளும் செவ்வியல் இலக்கியமும்’ என்ற கருத்தரங்கில் 25.01.2014 அன்று பேசிய உரையின் எழுத்து வடிவம்)

Pin It