mikhailbakhtin 350மிகைல் மிகைலோவிச் பக்தின் (Mikhail Milkhailovich Bakhtin)  (1895-1975) ரஷ்ய அறிஞராவார். ரஷ்ய உருவவியல் திறனாய்வோடு இவரை இணைத்துப் பேசுவர். அதே வேளையில் புதிய காண்ட்டிய சிந்தனையின் அடையாளமாகவும் பக்தின் திகழ்கிறார். பக்தின் ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ நகரின் தென்பகுதியில் இருக்கின்ற ‘ஓரியல்’ எனும் சிற்றூரில் பிறந்தார். பக்தினின் தந்தையார் ஒரு வங்கியில் அதிகாரியாக இருந்தவர். அதன் காரணமாக பல பகுதிகளுக்கு மாறிக்கொண்டே சென்றார்.

எனவே, மிகைல் பக்தினுக்கும் பல ஊர்களுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இளமைக்காலத்தில் பக்தினை வளர்த்தவர் ஒரு ஜெர்மானியப் பெண். எனவே, சிறு வயதிலேயே பக்தினுக்கு ருஷிய மொழி மட்டுமல்லாமல் ஜெர்மானிய மொழியும் தெரியும். தந்தையார் மாற்றம் பெற்று சென்ற காலகட்டத்தில் வெவ்வேறு பண்பாட்டுக் கூறுகள் கொண்ட விலேனெஸ், ஒரேஷா ஆகிய நகரங்களுக்குச் சென்றார்.

‘விலேனெஸ்’ எனும் நகரம் வடபகுதியிலுள்ள ஜெருசலேம் எனும் புண்ணிய தலமாகக் கருதப்பட்டது. கிறித்தவர்கள் (குறிப்பாக யூதர்கள்) அதிகம் வாழ்ந்த பகுதி. பழைய லிசிடோனியா அரசு ஓங்கி நடந்த இடம். அங்கு போலிஷ், ஹீப்ரு ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். இங்கே இவ்விரு மொழிகளையும் பக்தின் கற்றுக்கொண்டார். அங்கிருந்து ஒடேஷா நகரத்திற்கு அவருடைய தந்தையார் மாற்றலாகிச் சென்றபோது 1917 இல் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்தார்.

அங்கு படிக்கும்போதே பல மொழிகளைக் கற்றார். கிரேக்க, ரோம மொழிகளை இங்கு பயின்றார். எனவே இவர் பன்மொழி அறிஞராக (Hetroglossia)  இருந்தார். பக்தினின் மூத்த சகோதரர் மிசேகாலை பக்தின் என்பவர் இவருக்குத் தூண்டுதலாக இருந்தார். இவர் லண்டனிலுள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

பக்தின் 1918ஆம் ஆண்டிற்குப் பிறகு தன் நண்பர் களோடு சோந்து ஓர் அமைப்பை உருவாக்கினார். ‘பக்தின் வட்டம்’ ((Bakthin’s Circle) என்று அவ்வமைப்பு அழைக்கப்பட்டது. இவ்வமைப்பில் ஏராளமான இசைக் கலைஞர்கள், இலக்கியவாதிகள், தத்துவ அறிஞர்கள் இணைந்திருந்தனர். இதனை கலை, இலக்கிய, தத்துவ வட்டம் எனலாம். இதில் இருவர் பக்தினோடு இறுதி வரை இருந்து விவாதங்களில் கலந்து கொண்டனர். அவரோடு இணைந்து நூல்கள் பல எழுதினர்.

ஒருவர் பாவெல் மிகைலோவிச் மெதவ்தேவ் (Pavel Milkhailovich Medvedev). மற்றொருவர் வேலன்டின் மிகைலோவிச் வலோசினோவ் (Valentin Milkhailovich Voloshinov). இவர்கள் பின்னால், பக்தினின் கருத்தியலை ஏற்று அத்துறையில் நூல்கள் இயற்றினர். பக்தின் இவ்வாறு வளர்ந்து வரும் காலகட்டத்தில் 1918இல் ஒரு கட்டுரை எழுதினார். ‘அழகியல் செயல்பாட்டில் படைப் பாசிரியனும் வீரத்தலைவனும்’ (Author and hero in Aesthetic Activity)  என்ற அக்கட்டுரை அவரது முதல் கட்டுரை.

1917இல் ரஷ்யாவில் புரட்சி நடந்தது. லெனினின் ஆட்சிக்குப் பின் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை. மிகக் கறாரான முறையில் சோவியத் யூனியன் அங்குக் கட்டமைக்கப் பட்டது. ஸ்டாலினால் மாற்றுச்சிந்தனை உள்ளோ ரெல்லாம் நாடு கடத்தப்பட்டனர் (அ) கொலை செய்யப்பட்டனர்.

ருசிய நாவலாசிரியர் தஸ்த யேவ்ஸ்கியும் அவ்வாறே குற்றம் சாற்றப்பட்டு சாவிலிருந்து மீண்டு வந்தார். அதுபோல மிகைல் பக்தினுக்கு பழைமைவாத தேவாலயத்தினரோடு தலைமறைவான தொடர்பு இருக்கிறது எனக்கூறி அவரைக் கைது செய்து பீட்டர்ஸ்பெர்க்கிலிருந்து வேறு இரு இடங்களுக்கு கொண்டு சென்றனர். ஒன்று கஜகஸ்தான். இவ்வாறு அவர் நாடு கடத்தப்பட்டு, பல ஆண்டுகள் சிறையிலிருந்து உடல்நலம் குன்றி எலும்பு நோய் ஏற்பட்டு ஒரு கால் செயல்படாமல் இறுதியில் பீட்டர்ஸ்பெர்க் வந்து லெனின்கிராடு வந்து சேர்ந்தார்.

1975 வரை வாழ்ந்து மறைந்தார். இறுதிவரை ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜ.பி.யின் கண்காணிப்பி லிருந்தார். வாழ்வின் இறுதிவரை அச்சுறுத்தல்களோடு வாழ்க்கையைக் கழித்தார்.

தொல்காப்பியரையும் பக்தினையும் ஒப்பிடு வதற்கான பொதுத் தளமானது, இருவரும் மொழியின் அமைப்பு பற்றிச் சிந்தித்துள்ளனர். மொழியின் கட்டமைப்பு பற்றி விளக்கியுள்ளனர். ஒருவர் நவீன 20ஆம் நூற்றாண்டுச் சிந்தனையாளர். இரண்டாமவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்தனை யாளர். இருப்பினும் அடிப்படையில் மொழி குறித்த ஆய்வானது கீழ்த்திசை மரபில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்பதை இன்று உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.

பக்தின் படைப்புக்கள்

இயற்பியல் தத்துவத்தில் மிக முக்கியமான ஐன்ஸ்டினைப் படித்தார். சார்பியல் கோட்பாட்டை (Relativity Theory) உருவாக்கியவர் அவர். மூளையின் இயக்கத்தைப் பற்றி ஆய்வுகள் செய்த மருத்துவ நண்பர் ஒருவரோடு பக்தினுக்குத் தொடர்பு இருந்தது. ஐன்ஸ்டின் மூளை நரம்பியல் மருத்துவ நண்பர் ஆகியோரது கருத்துக்கள் மொழி பற்றிய கோட் பாட்டைப் பக்தின் உருவாக்க உதவியாக இருந்தன.

1929-இல் ‘தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் சிக்கல்கள்  (Problems in the work of Dosteyevsky) எனும் நூலை வெளியிட்டார். அந்நூலில் அவர் புதிய கருத்தை உருவாக்கினார். ‘பலகுரல் தன்மை’  (Poly Phony)  என்பது அது. உரையாடலியம் (Dialogism) என்பதைப் பற்றியும் ஆய்வு செய்தார். உரையாடல் தன்மை எப்படி உள்ளது, ஒவ்வொரு பாத்திரமும் எப்படி தனித்தனியான விதத்தில் உரையாடுகின்றனர். அவ்வுரையாடலில் எவ்வாறு அதிகாரம் செயல்படுகின்றது.

ஏற்றத்தாழ்வு எப்படி செய்யப்படுகிறது என்பனவற்றை மிக நுட்பமாக ஆய்வுசெய்தார். தஸ்தயேவ்ஸ்கியின் ஒவ்வொரு பாத்திரமும் இன்னொரு பாத்திரத்திலிருந்து முற்றிலும் வேறுவிதமான குரலில் - வேறொரு வெளிப்பாட்டில் - பேசுகின்றனர் என்பதை நிறுவினார். இரண்டாவதாக, உண்மை என்பது ஒன்று இல்லை. ஒருவர் சொல்வது தான் உண்மை கிடையாது. உண்மைக்குப் பல பக்கங்கள் உள்ளன. அது விரிந்து பரந்துள்ளது என்றார். உண்மை என்பது, கண்ணாடி முன் ஒவ்வொருவராக நிற்கும்

போது அது ஒவ்வொருவரையும் அது பிரதிபலிப்பதைப் போன்றது. அது உண்மை. அதனை வேறுபுறம் காட்டினால் வேறொன்றைக் காட்டும். எனவே, பலரும் சொல்லக்கூடிய உண்மை என்பது, பகுதிபகுதியான உண்மைகள் என்பதல்ல, உண்மைக்குப் பல முகங்கள் இருக்கின்றன என்பதையே அவர் வலியுறுத்திச் சொன்னார். தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் உண்மை என்பது பல குரல் தன்மையோடு வெளிப்பட்டுள்ளது என்பதை அந்நூலில் விவாதித்தார்.

பக்தினின் கட்டுரைகள் பிற்காலத்தில் நூல்களாகத் தொகுத்து வெளியிடப்பட்டன. 1980 வரைக்கும் பக்தினின் படைப்புகள் வெளியுலகிற்குக் கிடைக்க வில்லை. அவை ருசிய மொழியில் இருந்தன. ஆங்கிலத்தில் வெளிவரவில்லை. 1975இல் அவர் இறந்தார். அக்காலத்தில் சோவியத் யூனியன் உடைந்த பிறகு இவரது கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. அவ்வாறு வெளிவந்த சில நூல்களில் அவருடைய பெயரில்லாமல் வோல்சினோவின் பெயரிலோ மெதவ்தேவின் பெயரிலோ இருந்தன.

ஆசிரியர் யார் என்பது கேள்விக்குறியானது. பக்தினின் கட்டுரைகளை எழுதியது அவர் மட்டும் தானா? பலரா எனும் சர்ச்சை இன்னும் உள்ளது. மொழியைப்பற்றி அவர் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களைப் பற்றி அவர் செய்தவை உட்பட பல மொழி சார்ந்த ஆய்வுகளே. குறிப்பாக மொழியின் இயக்கத்தை - செயல்பாட்டைப் பற்றி அவர் கட்டமைத்த கொள்கைதான் உலகில் அவரது முக்கியமான கொள்கையாக உள்ளது.

உரையாடலியம்

பக்தின் மொழியைப் பற்றி உருவாக்கிய கோட்பாடு ‘உரையாடலியம்’  (Dialogism) ஆகும். இதனை இருமையியல் என்றும் கூறலாம். ‘மோனோலாக்’ (Monologue)  என்றால் ஒற்றைக்குரல்; தனிமொழி. ‘டயலாக்’ (Dialogue) என்பது இருவர் பேசக்கூடியது. உரையாடல் இதனை ‘உரையாடலியம்’ என நாம் மொழிபெயர்த்தாலும் இதில் ‘இருமைத்தன்மை’ உள்ளது என்பதையும் நாம் சேர்த்து கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அவர் மொழியைப்பற்றி எழுதிய கட்டுரைகளில் இரண்டு மிக முக்கியமானவை. ஒன்று, ‘பேச்சு வகைகள்’  (Speech Genres) . இன்னொன்று, ‘மார்க்ஸியமும் மொழியின் தத்துவமும்’ (Marxism and Philosophy of Language)  இத்தலைப்பில் பக்தின் எழுதியதும் உண்டு. மெதவ்தேவ் எழுதிய கட்டுரைகளும் உள்ளன. மார்க்ஸிய அடிப்படையில் மொழியை எவ்வாறு புரிந்துகொள்வது எனும் இக்கட்டுரைகள் மிக முக்கியமானவை. இக் கட்டுரைகளில் பக்தின் கூறியுள்ளவை மிக அடிப்படை யானவை. மொழி என்பது, பேச்சில்தான் இருக்கின்றது.

இலக்கணத்திலோ, அகராதிகளிலோ இல்லை என்றார். அகராதியிலுள்ள செயல்கள், பொருள்களின் அடிப் படையில் பொருள் உருவாவது இல்லை.

1. மொழி என்பது இலக்கண அமைப்பில் இல்லை, பேச்சில் இருக்கிறது.

2. மொழியிலுள்ள சொற்களின் பொருள் அகராதியில் இல்லை; அது கணத்தில் இருக்கிறது. நிகழ்வில் இருக்கிறது என்றார். பக்தினுக்கு சசூரின் பிராகு மொழியியல் சிந்தனையை மொழியின் அமைப்பு சார்ந்த அமைப்பியல் கொள்கையை உள்வாங்கிக் கொண்டு பேசினார்.

சில இடங்களில் சசூரை ஏற்றுக் கொள்கிறார். சில இடங்களில் மறுக்கிறார் (அ) கடந்து செல்கிறார். மொழிக்கிடங்கு (Language) x பேச்சு மொழி  (Parole)  ஆகியவை பற்றி சசூர் பேசினார். என்பது மொழிக்கிடங்கு என்பது மாறாத இலக்கண விதிகளைக் கொண்ட அமைப்பு. பேச்சு வழக்கு என்பது நிகழ்த்தப் படுவது; மாறும் தன்மை கொண்டது என்று சசூர் பேசினார்.

பக்தின் மொழிக்கிடங்கு என்பதைப் பற்றி அதிகம் பேசவில்லை. அதற்கு அழுத்தம் கொடுக்காமல் - மொழியின் மாறாத இலக்கண அமைப்பிற்கு அழுத்தம் தராமல் - பேச்சு மொழிக்கு அழுத்தம் கொடுத்துப் பேசுகிறார். மொழி என்பது பேச்சில்தான் உள்ளது என பக்தின் கூறினார். எனவே, மொழியின் பொருளைச் சூழல்தான் உருவாக்குகின்றது. பக்தின் ‘சொல்லின் வருகை’ (Utterance)  என்பதை சசூர் கூறிய பேச்சு மொழிக்கு இணையான சொல்லாகப் பயன்படுத்து கின்றார். ஒரு வாக்கியம் இலக்கண அடிப்படையில் சரியானதாக இருந்தாலும், அதன் பொருள் என்பது சூழல் சார்ந்துதான் உருவாக்கப்படுகின்றது என்பதைக் கூறினார். சான்றாக, ‘அது பார்க்க அழகாக இருக்கிறது’ எனும் வாக்கியத்தை யார்-யாரிடம் எதைப்பற்றி கூறினார் என்பதைப் பொருத்தே அதன் பொருள் அமையும். இது எதிர்மறைப் பொருளைத் தருவதாகவும் அமையலாம். அந்த வாக்கியத்தை உச்சரிக்கக் கூடிய விதத்தில், அதைக் கேட்பவர் யார்? சொல்பவர் யார்? என்பவற்றிலிருந்தே அதன் பொருளானது உருவாகிறது.

எனவே, ஒரு சொல்லின் பொருள் உருவாக்கம் என்பது ஒரு சொல்லாடல் வாயிலாகத்தான் நிகழ்த்தப் படுகின்றது. பேசும் இருவருக்கு இடையிலான இடையீடு (Interaction)  வழியாகத்தான் பொருள் உருவாகின்றது. தனியாகப் பொருள் உருவாவதில்லை. பொருள் என்பது உருவாகும்பொழுது பொருள் உருவாக்கச் செயல்பாட்டில் கேட்போன் (Other)  இருக்கிறான். சொல்பவன் (Self)  இருக்கின்றான். தனது X மற்றமை என்பது அமைப்பியலிலும், பின்னை அமைப்பியலிலும் இடம்பெற்றுள்ள கருத்தாக்கம்.

பொருள் என்பது எப்படி உருவாகின்றதெனில், தனக்கும், பிறருக்குமான இரண்டு உணர்வுநிலைகளின் இணைவாக்கத்தில் தான் பொருள் என்பது பிறக்கின்றது என்று பக்தின் சொல்கிறார். பொருள் உருவாவதற்கு குறைந்தபட்சம் இரண்டு சமூக மனிதர்கள் இருக்க வேண்டும். ஒரு தனிமனிதனால் பொருளை உற்பத்தி செய்ய முடியாது.

சமூகச் சூழலில்தான்  (Social Context) உற்பத்தியாகின்றது. இருவர் (அ) இரண்டிற்கு மேற்பட்டோரின் உணர்வுநிலைகளின் சொல்லாடலில்/ தொடர் இயக்கத்தில் தான் பொருள் இருக்கின்றது. பொருள் உருவாகும்போது, முதலில் ஒருவர் ஒரு சொல்லைச் சொல்கின்றார் - கேட்கிறார். அப்பொழுது கேட்டோரிடமிருந்து ஒரு எதிர்வினையை எதிர் பார்க்கின்றார். எனவே எல்லாச் சொற்களும் எதிர் வினையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தொடர் பாடல் என்பது, வரலாற்று நிகழ்தகவில் ஒரு தொடர் கண்ணிகளின் இயக்கமாக இருக்கின்றது (Chain of Communication).  அது முடிவடையாத இயக்கமாகப் போய்க்கொண்டேயிருக்கிறது என்று அவர் மேலும் விளக்குகிறார். ஆகவே பேச்சு என்பது முடிவடையாத இயக்கமாக தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே போகின்றது. எனவே, ஒவ்வொரு பேச்சும் மற்றவர் களிடமிருந்து ஒரு எதிர்வினையை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கின்றது. இருவருக்குமான தனதுக்கும், மற்றமைக்குமான - இடையீடு என்று உரையாடல் தன்மை கொண்டதாக இருக்கின்றது என்பதைக் கூறுகின்றது. அடுத்ததாக, பொருள் உருவாகின்ற பொழுது குறிப்பிட்ட சூழல் என்பது அங்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. எந்தச் சூழலில் பேசுகின்றனர்? என்பது முக்கியமானது. வகுப்பறைச் சூழலில் உருவாகும் பேச்சு வேறு; வெளியில் பலர் கூடியுள்ள சந்தையில் அங்கு பேசும்முறை என்பது

வேறு. எனவே பொருள் எந்த இடத்தில் தன்னைச் செயல்படுத்துகிறது என்றால், குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அது அதற்கான அர்த்தத்தை நிலைநிறுத்திக் கொள்கிறது என்று பக்தின் சொல்கிறார். எனவே எல்லா அர்த்தங்களும் சார்பியலானவை. ஒரே சமயத்தில் இடம்பெறுகின்ற இரண்டு உடல்களுக்கிடையிலான உறவுநிலையின் விளைவாகவே அர்த்தம் உருவாகிறது. ஆயின் அவ்விரண்டு உடல்களும் வேறுபட்ட வெளி களில் இருப்பவை. அர்த்த உருவாக்கத்தில் நமது பௌதீக உடல்கள் அரசியல் உடல்களாகவும் கருத்தியல்களின் உடல்களாகவும் உருவெடுக்கின்றன. எனவே பக்தின் கருத்துப்படி மனித உணர்வு நிலை களுக்கிடையிலான தானுக்கும் மற்றமைக்கும் இடையிலான படைப்பாக்க எல்லைப் புறத்தில் எல்லைக் கோட்டில் மொழி வாழ்கிறது. மொழி என்பது இரட்டைக் குரல் (Double Voiced)  தன்மை கொண்டது. அது இருமையியப் பண்புடையது (Dialogic)  என்பதே பக்தினின் அடிப்படைக் கருத்தியலாகும்.

‘அழகியல் செயல்பாட்டில் படைப்பாசிரியரும் வீரத்தலைவனும்’ எனும் கட்டுரையில், எந்தவொரு அழகியல் செயல்பாடும் - எப்படிப் பேச்சில் தனக்கும் பிறருக்குமான இரண்டு உணர்வு நிலைகளின் மோதலில், இரண்டு உணர்வுநிலைகளின் ஊடாட்டத்தில் அர்த்தம் பிறக்கின்றதோ அதுபோல இரண்டு/ இரண்டிற்கு மேற்பட்டோரின் செயல்பாட்டில்தான் உருவாகின்றது என்கிறார். எனவே, ஒரு மனிதனுடைய உணர்வுநிலை என்பது வெளியே இருக்கக்கூடிய இன்னொரு மனிதனுடைய உணர்வுநிலையோடு சம்பந்தப்படும் போது தான் அது ஒரு காட்சித் தோற்றத்தை உருவாக்கு கின்றது என்று கூறினார்.

சசூர் X பக்தின் வேறுபாடு

சசூருக்கும் பக்தினுக்கும் என்ன வேறுபாடு எனும் கேள்வி இங்கு எழுகின்றது. சசூரிடத்திலிருந்து இவர் எங்கு வேறுபடுகின்றார்? சசூர் மொழிக்கிடங்கு X  பேச்சு வழக்கு என்பதைத் தனிமனிதனுக்குள் இருப்பதாகத் தான் பார்த்தார். பேச்சு சார்ந்த எல்லா விதிகளும் பேச்சு என்பதும் ஒரு தனிமனிதனுக்குள் இருப்பதாகத்தான் பார்த்தார். ஆனால், பக்தின் மொழியின் இயக்கம் (அ) செயல்பாடு ஒரு தனிமனிதனுக்குள் இல்லை. அது தனிமனிதனுக்கும் மற்றவருக்கும் இடையிலான உரையாடல் உறவில்தான் இருக்கின்றது என்றார்.

ஒரு தனிமனிதனால் மொழியின் இயக்கத்தைச் செயல்படுத்த முடியாது எனக்கூறினார். சசூர் மொழிக்கிடங்கு X பேச்சு வழக்கு என்பனவற்றை ஒரு தனிமனிதனுக்குள் இருக்கும் இருமைத்தன்மையாகப் பார்த்தார். (Inner Duality).  பக்தின், மொழியின் பேச்சுச் செயல்பாடானது ஒரு தனிமனிதனுக்கும் இல்லை, தனிமனிதனுக்கும் வெளியில் உள்ள ஒரு சமூகச்சூழல் என்று சொல்லக்கூடிய மற்றவர் களுக்கும் இடையிலான ஓர் ஊடாட்டத்தில்தான் இருக்கின்றது என்பதை அவர் எடுத்துக்காட்டினார்.

எனவே, பொருளைப் பற்றி அவர் பேசும்பொழுது மிக முக்கியமாக இருமையியம் / உரையாடல் தன்மை என்பதையே வலியுறுத்தினார். ஜெர்மானிய தத்துவ அறிஞர் கான்ட்டின் மனத்திற்கும் புறவுலகிற்குமான இருப்பு குறித்த தத்துவத்தை விளக்கும்பொழுது பக்தின் மனதிற்கும் புறவுலகிற்குமான இருப்பு என்பது இருமைத்தன்மை உடைய உறவு என விளக்கினார். தனதுக்கும் மற்றமைக்கும் இடையில் ஊடாட்டம் எப்படி இருக்கின்றதோ அதுபோலவே மனதிற்கும் புறவுலகிற்குமான ஊடாட்டம் இருக்கின்றது எனக் கூறினார்.

தனக்கும் மற்றவருக்குமான உறவானது பேச்சில் எப்படி இருக்கின்றது எனும் பொழுது அம்மாவுக்கும் குழந்தைக்குமிடையில் எப்படி ஊடாட்டம் இருக்கிறதோ - இடையுறவு இருக் கின்றதோ, அது போலத்தான் பேச்சில் தனக்கும் மற்றவருக்குமான உறவு இருக்கின்றது எனச் சொன்னார். காதலர்களுக்கு இடையில் எப்படி ஊடாட்டம் இருக்கின்றதோ அதுபோல பேச்சில் தனக்கும் மற்றவருக்குமான உணர்வுநிலைகளின் மோதலில் அது இருக்கின்றது. ‘தான்’ எனும் ஒருவன் மட்டும் மொழியின் அர்த்தத்தை உருவாக்க முடியாது. ‘தான்’ என்பதில் எப்பொழுதுமே ஒரு சிறு இடைவெளி இருக்கும். அதனால் முழுவதும் பொருளை உருவாக்க முடியாது. மற்றமையே சேர்ந்து வருகின்றபொழுது தான் அது பொருளை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

மொழி என்பது நமக்கு உள்ளே இருக்கின்றது. நாம் மனதில் சிந்திக்கின்றோம். அது உள்மனம் சார்ந்தது. நம் மனம் உருவாக்குகின்றது. இது உளவியல் சார்ந்த விஷயம், இது தனியானதா? என பக்தின் கேட்கிறார். உள் மனதிற்குள் உள்ள அந்தக் ‘குறி’ (மொழிக்குறி) தன்னளவில் நிறைவுடையதா? எனும் கேள்வியை எழுப்பி, உள்ளே இருக்கும்போது அது தனியாக உள்ளது. வெளியே வரும்போதுதான் அது அர்த்தப் படுகிறது. மனதிற்குள் இருக்கக்கூடிய கருத்தானது, வெளியே வரும்போதுதான் அர்த்தத்தைப் பெறுகின்றது. அப்போது அது புறவுலகோடு உறவாடுகின்றது - ஊடாட்டம் செய்கின்றது. எனவே அப்போது அதற்குள் எந்த உளவியல் தன்மையும் இல்லை என்கிறார்.

பேச்சு வெளியே வரும்போது உடலுக்கும் புறவுலகிற்குமான உடலின் இயக்கத்தில், உயிரோட்ட மான ஒருங்கிணைப்பிற்கும் - புறவுலகிற்குமான ஊடாட்டத்தில்தான் மொழி வெளிப்படுகின்றதே தவிர, மொழியின் குறி என்பது தனித்தன்மையானது அல்ல என்றார். இது, நரம்பு மருத்துவ நண்பரோடு அவருக்கிருந்த தொடர்பு காரணமாக - மூளை எப்படி பேச்சை உருவாக்குகின்றது? அப்போது நம்முடைய உடலின் ஒருங்கியக்கம் (Organism)  எப்படி இருக் கின்றது என்பதை அவர் விளக்கும்போது, பேச்சில் நம் உடலுடைய பாகங்களின் ஒருங்கிணைப்பு என்பது, புறவுலகத்தோடு கொள்கின்ற உறவில்தான் உருவா கிறதே தவிர தனியாக ‘உள்ளுணர்வு’ என்பது இல்லை என அவர் மறுக்கிறார்.

உரையாடலில் அதிகாரம்

பேச்சு வழக்கில் அதிகாரம் என்பதும் ஏற்றத்தாழ்வு படிநிலை என்பதும் முக்கியமான பங்கை வகிக்கின்றன என்பதை பக்தின் சொன்னார். அவர், இருவர் பேசுகின்ற பொழுது அவர்களுக்கிடையிலுள்ள உறவுநிலைகள் என்னவோ, அதனுடைய அடிப்படையில் பொருள் புலப்பாடு நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்றார். நண்பர்கள், தோழர்கள் என்பதில் உறவு வேறு; அரசன், சேவகன் என்று அதிகாரம் சம்பந்தப் பட்டோரிடையே நிகழ்த்தும் உரையாடல் என்பது வேறு.

எனவே, உரையாடலில் அதிகாரத்தின் செயல் பாடு என்பதும், அவ்வுரையாடலில் பங்கு பெறக்கூடிய கேட்போன் X கூறுவோன் ஆகியோருக்கிடையிலான சமூகப்படிநிலை சார்ந்த வேறுபாட்டின் அடிப்படையில் உரையாடலின் குரல் என்பதும் உரையாடலின் வெளிப்பாடு என்பதும் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பதைக் கூறினார். எனவே ‘சொல்’ (word)  என்பதை இருபக்கச் செயல்தன்மை கொண்டதாக பக்தின் விளக்கினார்.

கூறுவோருக்கும் கேட்போருக்கும் இடையிலான அதிகாரம், அவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய சமூகப்படிநிலைகள் என்பது பேச்சினுடைய குரலை (Tone)  தீர்மானிக்கின்றது என்றார். சான்றாக ஆசிரியரின் முன் மாணவரின் குரல் தாழ்ந்திருக்கும். ஆசிரியரது குரல் ஓங்கியிருக்கும். உரையாடலில் அதிகாரம் என்பதும் சமூகப் படிநிலைகள் என்பதும் உரையாடலின் குரலை, அதன் நடையைத் தீர்மானிக்கின்றது என்றார் பக்தின். எனவே, ஒரு சொல் என்பது எப்போதும் இருபக்கச் செயலாக இருக்கின்றது. கேட்போருக்கும் கூறுவோனுக்கும் இடையிலான உறவு நிலைகளில் சொல்லின் பொருள் உருவாகின்றது எனக் கூறினார்.

பேச்சு வகைகள்

பக்தின் பேச்சுவகைகளைப் (Speech Genres)  பற்றியும் கூறுகிறார். சில பேச்சுக்களை நாமே தேர்ந் தெடுக்கின்றோம். சில படைப்பாக்கம் கொண்ட - சுதந்திரமான பேச்சு வகைகளாக உள்ளன. சான்றாக, ராணுவ அதிகாரியிடம் படைவீரர் பேசும் போது நேரடியான - திட்டமிடப்பட்ட பேச்சு நிகழ்கிறது. இது தனிப்பட்ட வரையறுக்கப்பட்ட (definite speech)  பேச்சு. ஆனால் சாதாரண வாழ்க்கையில் நாம் பேசக் கூடிய பேச்சானது நெகிழ்ச்சித்தன்மை கொண்டதாக  (Creative Speech), சுதந்திரமானதாக, படைப்புத்தன்மை கொண்டதாக இருக்கின்றது. இவ்வாறு பக்தின் பேச்சுவகையை இரண்டாகப் பிரிக்கின்றார். ஒன்று, தனிப்பட்ட வகையான பேச்சுகள் - திட்டமிடப்பட்ட வரையறுக்கப்பட்ட பேச்சுகள்.

மற்றொன்று, சூழலால் தீர்மானிக்கப்படாமல் இயல்பாக அன்றாட வாழ்க் கையில் இடம்பெறக்கூடிய பேச்சு, இது நெகிழ்ச்சித் தன்மை உடையதாகவும், அதே நேரத்தில் சுதந்திர மானதாகவும் இருக்கின்றது என்று பேச்சு வகைகள் பற்றித் தெரிவிக்கின்றார். எந்த வகையான பேச்சு வகையைத் தேர்வு செய்வது என்பது கூறக்கூடிய வருடைய - கேட்கக்கூடியவருடைய தேர்வு சம்பந்தப் பட்டதாக இருக்கின்றது.

திட்டமிட்ட வரையறுத்த பேச்சுகளில் எங்கே, யாருடன் பேசுகிறேன் எனத் தீர்மானிக்கப்பட்டபின் அதில் சொற்களும், குரலில் ஏற்ற இறக்கங்களும் திட்ட மிடப்பட்ட பாங்கில் இருக்கும் என்று பக்தின் சொல்லுகிறார். அன்றாடப் பேச்சு வழக்கானது சுதந்திரமாக அமையும் என்பதைச் சொல்கிறார். திட்டமிடப்பட்ட தனியான பேச்சு வகைகள்.

இவை தனிமனிதனால் தேர்வு செய்யப்பட்டவை. இவற்றில் வரும் சொற்கள், இலக்கண அமைதி, குரல் ஏற்ற இறக்கம் என்பதும் திட்டமிடப்பட்டவை. ஒரு நிலைத்த தன்மை உடையவை. ஆனால், அன்றாட வழக்கிலுள்ள பேச்சுவழக்கு என்பது, சுதந்திரமானது, நெகிழ்ச்சி உடையது, படைப்பாக்கத் தன்மை உடையது என்று பக்தின் சொல்கிறார். இதுவே, இருமைவாத அடிப்படையில் பக்தினின் முக்கியமான கருத்து.

பல்குரல் தன்மை

தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களைப்பற்றி பக்தின் சொல்லும்போது இவற்றில் ஒருகுரல் இல்லை; பலகுரல் இருக்கின்றது என்றார் (Polyphony).  தஸ்தயேவ்ஸ்கியின் ஒவ்வொரு பாத்திரமும் ஒரு நியாயத்தைச் சொல்கிறது. உண்மை ஒன்று மட்டுமல்ல; அதற்குப் பல முகங்கள் இருக்கின்றன என்றார். அழகியல் செயல்பாடு என்பதும் தனியானதல்ல. அது வாசகனோடு சம்பந்தப்பட்டது. படைப்பாசிரியன் என்பவன் தனது கருத்தை பாத்திரத்தின் மீது ஏற்றி உரைக்கின்றான்.

படைப்பாளி என்பவன் பாத்திரத்திற்குள் அமர்ந்து கொள்கிறான். எனவே, படைப்பில் வரக்கூடிய குரல் என்பதும் ஒற்றைக்குரல் இல்லை; அது இரட்டைக்குரல் (Double Voice)  என்கிறார். ஏனெனில், அதற்குள் பாத்திரத்தின் குரல் இருக்கின்றது. அதன் அடியில் ஆசிரியனின் குரலும் இருக்கின்றது. சான்றாக, ‘உன்னைப் போல் ஒருவன்’ நாவலில் வரும் சிட்டி கதைமாந்தரின் குரலில், ஜெயகாந்தனின் குரலும் உள்ளது. எனவே, நாவல்களில் வரும் பாத்திரத்தின் குரல் என்பது இரட்டைக்குரல் தன்மை கொண்டது.

அந்தப் பேச்சில் வரக்கூடிய, உணர்வுநிலை என்பது நனவுநிலையின் மீதான நனவு நிலை (Consciousness of Consciousness) என்று சொல் கிறார். அது இரண்டு வகையான உணர்வுநிலைகள் சார்ந்தது. படைப்பாளியின் உணர்வுநிலை, பாத்திரத்தின் உணர்வுநிலை. படைப்பாளியின் உணர்வுநிலையானது பாத்திரத்தின் மீது ஏற்றி வேறொரு குரலாக வருகின்றது. அது ஒரு உணர்வுநிலையின் மீது கட்டமைக்கப்பட்ட இன்னொரு உணர்வுநிலை சார்ந்தது என்று சொல்கிறார்.

பக்தினியப் பார்வையில் தொல்காப்பியம்

தொல்காப்பியத்தைப் பக்தினின் கருத்தாக்கங்கள் சார்ந்து வாசிப்பதற்கு பக்தினுடைய உரையாடலியம் எனும் கோட்பாட்டில் இடம் இருக்கின்றது. இதன் அடிப்படையில் பார்க்கின்றபோது, தொல்காப்பியத்தின் கிளவியாக்கத்தில் உரையாடல் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.

“செப்பும் வினாவும் விழால் ஓம்பல்”           (நூ.496)

வினாவும் செப்பே வினா எதிர் வரினே”         (நூ.497)

“செப்பே வழீஇனும் வரைநிலை இன்றே

அப்பொருள் புணர்ந்த கிளவியான’    (நூ.498

எனும் நூற்பாக்களில் உரையாடல் பற்றித் தொல் காப்பியர்  பேசுகிறார். உரையாடல் என்பது, கேள்வி- பதில். இது பக்தின் கூறியது போல கேட்போன் X  கூறுவோனின் இடையீடு (Speaker & Listener)  தனது X மற்றமை (Self & Other)  உரைப்போன் X உற்றுக் கேட்போன் (Address & Addresser)  ஆகிய வார்த்தை களையும், இதனை விளக்க பக்தின் பயன்படுத்துகின்றார்.

ஆகவே, பொருள் என்பது தனியாக இல்லை; அது ஒரு தொடர்பாடலில் இருக்கின்றது. தொடர்பாடலானது தொடர்ச்சியாகப் பல கண்ணிகளைக் கொண்ட தொடர் இயக்கமாக இருக்கின்றது. தொல்காப்பியர் மேலே குறிப்பிட்ட நூற்பாக்களில் ‘வினாவும் செப்பே வினை எதிர் வரினே’ என்கிறார். அதாவது, கேள்வியும் பதிலாக இருக்கும், அது எதிர் கேள்வியாகும்போது என்பது இதன் பொருள். இங்கே மற்றவரின் எதிர்வினை என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒருவர் சொல்கிறார், மற்றவர் கேட்கிறார். கேட்பவரின் எதிர்வினை இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. ‘செப்பே வழீஇனும் வரைநிலை இன்றே அப்பொருள் புணர்ந்த கிளவியான’ என்ற நூற்பாவில் பதில் நேரானதாக இல்லாமல், பிழைபட அமைந்தாலும் பொருள் கருதி ஏற்கப்படும். ஏன் பள்ளிக்கு வரவில்லை? எனும் கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறாமல், காலில் அடிபட்டுவிட்டது என வேறொரு பதில் கூறுவது, உற்றது உரைத்தலாக வரலாம். அங்கே பொருள் என்பது சமூகச் சூழல் சார்ந்து உள்ளது. இங்கே பொருளின் சமூகத்தன்மையைப் பற்றி தொல்காப்பியர் பேசுகின்றார் எனலாம். தகுதி வழக்கு (மங்கலம், இடக்கரடக்கல், குழூஉக்குறி) இயல்பு வழக்குப் பற்றி வரும் பகுதியும் (நூ.500) பொருளின் சமூகத்தன்மை சார்ந்த விஷயங்களைப் பேசுகின்றன.

“எப்பொருளாயினும் அல்லது இல்லெனின்

அப்பொருள் அல்லா பிறிது பொருள் கூறல்.”  (நூ.518)

என்கிற நூற்பாவில் பேச்சின் எதிர்வினையில் இருக்கக் கூடிய தர்க்கத்தைப் பற்றித் தொல்காப்பியர் உணர்ந்துள்ளார். இந்த நூற்பாவில் வணிகர் உரையாடல் மரபில் வாடிக்கையாளரின் இப்பொருள் (கருப்பட்டி) உள்ளதா? என்ற கேள்விக்கு ‘வெல்லம் இருக்கிறது’ என்று அது அல்லாத ஒரு பொருளைக் கூறுகின்ற பேச்சு வழக்குச் சூழலை எடுத்துக்காட்டியுள்ளார். பேச்சில் குறிப்புப்பொருள், வெளிப்படைப் பொருள் இருப் பதைப் பெயரியல் வரும்

“பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்

சொல்லின் ஆகும் என்மனார் புலவர்”             (நூ.641)

“தெரிபுவேறு நிலையிலும் குறிப்பின் தோன்றும்

இருபாற்றென்ப பொருண்மை நிலையே” (நூ.642)

என வரும் நூற்பாக்களில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பால் பொருள் சொல்லுதல், உள்ளுறைப் பொருள் - ஆகியவை ஆழமான பொருளினுடைய அடுத்த தளத்திற்கானதாகச் சொல்கிறார்.

பக்தினின் உரையாடலியம் என்பதை தொல் காப்பியரின் கூற்றுக் கோட்பாட்டோடு பொருத்திப் பார்க்கலாம். செய்யுளியலில் வரும் கூற்றுக் கோட் பாட்டில், யார் கூறுவோர்? யார் கேட்போர்? கற்பில் யார் கூற்றுக்குரியோர்? களவில் யாரெல்லாம் கூற்றுக் குரியோர்? என்பதை விரிவாகப் பேசியுள்ளார்.

“பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி

சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியோடு

அளவியல் மரபின் அறுவகை யோடும்

களவினிற் கிளவிக் குரியர் என்ப”       (நூ.1445)

“பாணன் கூத்தன் விறலி பரத்தை

யாணம் சான்ற அறிவர் கண்டோர்

பேணுதகு சிறப்பிற் பார்ப்போன் முதலா

முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத்

தொல்நெறி மரபிற் கற்பிற் குரியர்”    (நூ.1446)

இங்கு கற்பில் யாரெல்லாம் பேசலாம். களவில் யாரெல்லாம் பேசலாம் என்பதைப் பற்றிச் சொல்கிறார். இவற்றைக் கேட்போர் யார்?

“மனையோள் கிளவியும் கிழவின் கிளவியும்

நினையுங் காலை கேட்குநர் அவரே’               (நூ.1452)

 தலைவன், தலைவியின் பேச்சைக் கேட்போரும் பேசுவோரும் அவர்கள் இருவர் மட்டுமே. ஆனால்,

“பார்ப்பான் அறிவர் என்றிவர் கிளவி

யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே”  (நூ.1453)

எனும் நூற்பாவில் பார்ப்பான், அறிவன் ஆகியோர் கூறுவதை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். இவ்வாறு கூற்றில் கேட்போன் - சொல்வோன் பற்றிப் பேசுகிறார். ஆனால், இதில் முக்கியமான தன்மை யாவது, இது இலக்கியத்திற்குச் சொல்லப்பட்டுள்ளது. பேச்சு என்பதைப் பக்தின் வரையறுக்கப்பட்ட பேச்சு சுதந்திரமான பேச்சுவகை என இருவகையாகப் பிரிக்கிறார்.

வரையறுக்கப்பட்ட பேச்சிற்கு தொல் காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகமாந்தர்களுக்கு கூறப்பட்ட பேச்சைச் சான்றாகக் கூறலாம். இதில் திட்டமிடப்பட்ட இலக்கியச் சூழல் சார்ந்த பேச்சை அவர் சொல்கிறார். இச்சூழலில் யார் பேச வேண்டும்? யார் கேட்க வேண்டும்? யார் சொல்லக்கூடாது? என்பதைக் கூறியுள்ளார். இப்பேச்சினுள் அதிகாரம் செயல்படுகிறது என்பதையும் தொல்காப்பியர் பேசியுள்ளார். பொருளியலில், தலைவன் எப்படிப் பேசலாம் என்பதை,

“உயர்மொழிக்கிளவி, உறழும் கிளவி

ஐயக்கிளவி ஆடுவிற்குரியதே’                            (நூ.1183)

எனும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். இதில் ஓர் ஆடவன் எப்படிப் பேசலாம், ஒரு பெண் எப்படிப் பேசலாம் என்பது உள்ளது. உயர்வாக செருக்குத் தோன்றப் பேசுதலும் எதிர்மறுத்துப் பேசுதலும் சந்தேகப்பட்டுப் பேசுதலும் ஆடவர்க்கு மட்டுமே உரியது.

மகளிர்க்கு இல்லை என்பதாம். இதில் “அச்சமும் மடமும் நாணமும் நிச்சமும் பெண்பாற்குரிய’ எனப் பாலின அடையாளம் சார்ந்து எவ்வாறு வேறுபாடு கற்பிக்கப்பட்டிருக்கின்றதோ - அதேபோன்று பாலின அடையாளமானது பாலின கடமைக்கூறுகள் சார்ந்தும் சொல்லப்பட்டுள்ளது. ஓர் ஆணின் கடமை என்ன? பெண்ணின் கடமை என்ன? எனும் அடிப்படையில் இங்கு வேற்றுமை கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியரின் கூற்றுகளின் வரையறைகளின் வழி உரையாடலில் பாலின வேறுபாடும் அதிகார விளையாட்டும் (Power Play) எப்படி உள்ளது என்பதைத் தொல்காப்பியர் நுட்பமாகச் சொல்லியுள்ளார். அது சமூகத்தினுள் இருந்துள்ளது.

“உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின்

உரியதாகும் தோழிகண் உரனே”         (நூ.1184)

தோழி மட்டும் சற்று வலிமையாகப் பேசலாம். ஆனால், தலைவி வலுவாகப் பேசக்கூடாது. அதேபோன்று ‘வாயிற்கிளவி வெளிப்படக் கிளத்தல் தாவின்றுறிய தத்தங் கூற்றே.’ (நூ.1186) எனும் நூற்பா வாயிலாக வரக்கூடியோர், வெளிப்படையாகப் பேசவேண்டுமே தவிர குறிப்பாகப் பேசக்கூடாது என்கிறது. குறிப்பாக தலைவன், தலைவிதான் பேச முடியும். வாயிலாக வரக்கூடியோர் இன்னொரு அர்த்தத்தை வைத்துக்கொண்டு குறிப்பாகப் பேசக் கூடாது. இந்தப் பகுதிகளில், மொழியில் நிலவும் சமூகப் படிநிலை என்பது பற்றியும், அதிகார விளையாட்டு என்பது பற்றியும் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார்.

எனவே, தொல்காப்பியத்தில் வரக்கூடிய களவு, கற்பு ஆகியவற்றுக்கான கூற்று; செய்யுளில் வரக்கூடிய கூற்று கேட்போர் ஆகிய பகுதிகளைக் கொண்டு பார்க்கும் போது, பக்தின் சொல்லக்கூடிய கேட்போர் - கூறுவோர் - இவர்களுக்கு இடையிலான அதிகாரம், சமூகப் படிநிலை, இது சார்ந்த வேறுபாடுகள் ஆகியவை யெல்லாம் அவற்றுள் இருக்கின்றன. இவையெல்லாம் சாதாரண - அன்றாட பேச்சுவழக்குச் சார்ந்தவை அல்ல; வரையறுக்கப்பட்ட பேச்சு. தனிவகைப்பட்ட இலக்கியப் பேச்சுக்குரியதாக தொல்காப்பியர் இக் கூற்றுக்களை - பேச்சுக்களைக் கட்டமைத்திருக்கின்றார். ஆக, பொருளதிகாரத்தில் அவர் சொல்லக்கூடிய பேச்சு என்பது, இலக்கியத்திற்குரிய - பாத்திரங்கள் பேசக்கூடிய - தனிப்பட்ட வகையான பேச்சே தவிர, அன்றாட வாழ்க்கையில் நிகழும் சுதந்திரமான பேச்சுக்கள் இல்லை.

துணைநூற் பட்டியல்

1) தொல்காப்பியம், தமிழண்ணல் (..), மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2008.

2) Michael Holquist, Dialogism - Bakhtin and his works Routledge, London, 2nd Edition, 2002

3) Pam Morris (Ed.) The Bakhtin Reader, Arnold,London, 2003.

Pin It