shajkhan 450“முஸ்லிமாக இருப்பதே ஆபத்தானது என்று பாதுகாப்பின்மை உணர்வினை உருவாக்கியுள்ள குஜராத் படுகொலைகளின் பின்னணியில் தமிழகச் சூழலைக் கவனிக்க வேண்டும். எனது ‘மிதவாத’ முஸ்லிம் நண்பர்கள் ‘பயங்கரவாதிகள்’ என்று அரசால் சித்தரிக்கப்படும் முஸ்லிம்களை எப்படி மெச்சுகிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. நான் மார்க்சியவாதி என்பது போல இப்போது நான் ‘இஸ்லாமியவாதி’ என்று சொல்லுகிற ஃபாஷன் உருவாகி வருகிறது” என ஷாஜஹான் அவர்கள் கறுப்பு என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கண்ணோட்டத்தின் உட்சார்ந்த கருத்தினையும் இந்து முஸ்லிம் என்ற எதிர்ப்புணர்வு குறித்த கதைப்பாடல்கள், ஆவணங்கள், பலவற்றைத் தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறந்த மாற்றுப்பாதை வடிவிலான முறையில் விதைத்து வரலாறெழுதியலில் இந்தியாவிற்கு முன்னோடியாகத் திகழ்பவர் ரொமிலா தாப்பர் ஆவார்.

வரலாறு என்ற அறிவியல் துறையில் கல்வெட்டு, செப்பேடுகள், வெளிநாட்டார் பயணக் குறிப்புகள், தொல்லியல் ஆய்வுகளின் சான்றுகள், நாணயவியல் ஆகியன வரலாறு எழுத அடிப்படைத் தரவுகளாக அமைகின்றன. இவற்றின் அடிப்படையில் எழுதப் பட்டதே சோமநாதர் - ‘வரலாற்றின் பல குரல்கள்’ என்னும் புத்தகமாகும்.  இந்நூலை நம் தமிழுலகிற்கு மொழிபெயர்ப்பு மூலம் அறிமுகம் செய்தவர் சிறந்த எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான கமலாலயன் அவர்கள். சோமநாதர் ஆலயத்தின் மீது கஜினி முகமது நடத்திய தாக்குதலின் தொடர் விளைவுகளாக நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றியதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.

இந்நூல் எட்டு பகுதிகள் கொண்டதாக இருக் கின்றது. ‘சூழல்’ என்ற முதல் பகுதியில் நூலாசிரியர் ஆறு மூலத்தரவுகளைப் பற்றி விவாதிப்பதாகவும், எண்ணிக்கையில் அதிகமாகவும் உள்ள பாரசீக அரசியற் பின்னணி என்ற நீண்ட பட்டியலைத் தந்து இவ்வாறாக ஆய்வு செய்யப்போவதாக உரைத்துள்ளார். சோமநாதர் ஆலயத்தின் மீது முகமது படையெடுப்புக் காரணமாக இந்துக்கள் மிக ஆழமான துயரமிக்க அதிர்ச்சிக்குள்ளாக நேர்ந்தது எனப் பதிவு செய்துள்ளார்.

முகமது ஹபீப், நஸீம் போன்றோர் மேற்கொண்ட ஆய்வு கஜினி முகமது குறித்த செய்திகள் விளக்கப் பட்டுள்ளன. ஒரு நவீன கல்விப்புலம் சார்ந்த துறையான இந்திய வரலாறு பற்றிய முதலாவது கருத்தாக்கங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தில் வரலாற்றியல் விளக்கங்கள் உள்ளன. பாபர் மசூதியை இடிப்பதற்கு ரதயாத்திரை 1990 - முன்னோட்டமாக அமைந்தது என கோடிட்டு சொல்லப்பட்டுள்ளது.

 முகமது இந்தியாவில் படையெடுத்து 12 முறை சோமநாதர் ஆலயத்தில் சேதப்படுத்தியதும் இந்துக்கள் புலம்பியதும் என தொடர்ந்து வந்த நிலை விவரிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்திய நாகரிகம் என்பது 19 ஆம் நூற்றாண்டு வரை முற்று முழுதாக இந்து மதத்தின் அடித்தளத்திலும், சமஸ்கிருத மொழியின் அடித் தளத்திலும் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் கூறப் பட்டுள்ளது. முன்ஷியின் தீவிர முன் முயற்சியால்தான் சோமநாதர் ஆலயம் விரைவில் மீண்டும் கட்டப்பட்டது என்ற செய்திகளையும் சொல்வதாக இப்பகுதி உள்ளது.

இரண்டாவது பகுதியான ‘களம்’ என்பதில் சோமநாதர் ஆலயம் என்பது ஒரு புனிதத்தலம் என்றும் சீனாவிற்கும், ஜான்ஜ் என்ற இடத்திற்கும் போகிற மக்களுக்கான துறைமுகப்பட்டினமாக விளங்கியதாக அல்பரூனி குறிப்பிட்டுள்ளார். சோமநாதரின் மூலத் திருவுரு தொன்மக்கதை பற்றி மகாபாரதம் போன்ற புராணப்பிரதிகளில் சொல்லப்பட்ட கருத்துகள் நூலில் கூறப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியாக வளம் பொருந்திய பகுதியாக இப்பகுதி  இருந்ததாகவும்  சொல்லப்பட்டுள்ளது.

பிரபாஷா என்ற இந்தப்புனிதத்தலத்தில் பிராமணர் கட்கு எட்டு மனைவியரை தானமாக வழங்கியதை ஒரு சத்ரபா அரசனின் மருமகனான உஷாவதத்தா பதிவு செய்திருக்கிறார். இது பௌத்த மத கட்டுமானமாக இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம். பின்னால் சைவர் களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப் பட்டுள்ளது.

மூலராசா பத்தாம் நூற்றாண்டில் பழைய கோவிலை சீர்செய்து இருக்கக்கூடும் என்றும், அல்பரூனி இங்கு கோவில் இருக்கவில்லை என்று கூறியுள்ளதும் எண்ணுதற்குரியது.

ரேணுகாதேவி சதியாகிவிட்டமையால் அவளது தியாகத்தைப் போற்றும் வகையில் இப்போது இந்த இடத்தில் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது என்ற செய்தியும் விளக்கப்பட்டுள்ளது.  அப்ஹிராக்கள் போன்ற உள்ளூர்த் தலைவர்களால் சோமநாத பட்டணம் முதலான செல்வச் செழுமைமிக்க நகரங்களின் மீது தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருந்தன. அராபியக் குதிரைகளை அபுல்ஃபாஸல் புகழ்ந்த விதமும், கோயிலுக்கு நன் கொடை வழங்குபவராக மனிதரும், சிவன் பெறு பவராகவும் இருந்திருக்கின்ற சூழலும் சொல்லப் பட்டுள்ளது. பாரசீக காலவரிசைப்படுத்தப்பட்ட வரலாற்றுக் கூறுகள், இந்தக் காலகட்டத்தில் கோயில் மீண்டும் மீண்டும் மசூதியாக உருமாற்றம் செய்யப் பட்டதென்று கூறுவதற்கு மாறான ஒரு சித்திரத்தை தரவுகளிலிருந்து பெறமுடிவதாக நூலாசிரியர் உரைத் துள்ளார்.

மூன்றாவது பகுதியான ‘துருக்கிய பாரசீக விவரணைகள்’ என்னும் பகுதியில் கஜினி முகம்மது படையெடுத்து சோமநாதர் ஆலயத்தை தாக்கிச் சூறையாடியது மிக அதிகபட்ச அளவு நிதானமான கூற்று என்பது அல்பரூனியின் கூற்றாக உள்ளது.  சோமநாதர் கோயில் புனிதத்தலம் என்பதற்குமாகத் தாக்கினர் என்று அறியமுடிகின்றது.  தாக்குதல்களின் நோக்கம் பன்முகத்தன்மை வாய்ந்தது, அதனுள் திருவுருவங்களை உடைப்பவனாக நிறுவிக் காட்டுவதும் ஐயத்திற்கிடமில்லாமல் ஓர் உள்நோக்கமுடையதாக அமைந்துள்ளது என்பதை நூலாசிரியர் நிறுவியுள்ளார்.

மாற்றுக் கருத்து கொண்ட புத்தகங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ள செய்தியும், எஞ்சியவை கஜினிக்கோ, சாமர்கண்டிற்கோ கொண்டு செல்லப் பட்டன.  உடன் இலக்கிய கர்த்தாக்களும் அரசவைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களுள் ஒருவரே அல்பரூனி. பாரசீக கவிஞர் ஃபிர்தவ்ஸா முகமது குறித்து இருவேறுபட்ட கருத்துகளை பகிர்ந்த விதம் கூறப் பட்டுள்ளது.  தாராள மனம் படைத்த புரவலர் என்றும், கஞ்சப்பிரபு என்றும் கூறப்பட்டுள்ளது.

கன்னோஜ் பகுதியில் ஆக்கிரமித்து 53000 கைதிகளை சிறைப்படுத்தினர். கஜினிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  அடிமைகளை விற்பனை செய்த முறை விவரிக்கப்பட்டுள்ளது.  அடிமைகள் ஒருவர் 2 முதல் 10 திர்பம்களைப் பெற்றுத் தந்தனர். சோம நாதாவில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தின் அளவு 20 மில்லியன் தினார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  முகம்மது சோமநாதர் கோயிலுக்கு தீ வைத்தாரா என்பது குறித்து இருவேறுபட்ட கருத்தும் பதிவு செய்யப் பட்டுள்ளது.  திருக்குரானில் சொல்லப்பட்ட மூன்று பெண்தெய்வம் லாட், உஸ்ஸா, மனத் என்பது குறித்தும், முதல் இரு பெண் தெய்வங்கள் அழிக்கப்பட்டன என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளன.  பிராமணர்கள் விக்கிரகத்தை பாதுகாக்க வேண்டினர்.  ஷேக்பரீது என்பவர் மறுத்து விடுகின்ற செய்தியும், விக்கிரகத்தை பின் தருவதாகக் கூறி முகமது, பிராமணர்க்கு வழங்கப்பட்ட வெற்றிலை பாக்குடன் அதைத் தூளாகப் பொடித்து உள்ளே சுண்ணாம்பாக வைக்கப்பட்டதென்றும் கூறப் பட்டுள்ளது.  பல அரசுக் கருவூலங்களைக் காட்டிலும் அதிக நகைகளையும், தங்கத்தையும் உடைமையாகக் கொண்டிருந்தது என்பதும் முகமது தாக்குவதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

பரணி, இஸாமி ஆகிய இருவருமே முகமதுவை இலட்சிய முஸ்லிம் வீரநாயகராக முன்னிலைப் படுத்தினர்.  1395 இல் சோமநாதாவைத் தாக்கி அந்தக் கோயிலை ஒரு மசூதியாக மாற்றியமைத்ததாக ஃபெரிஷ்டா கூறியுள்ளார்.  ஒவ்வொரு நூற்றாண்டு அல்லது அதற்குக் குறைந்த காலத்திற்குள், யாரோ ஒரு சுல்தான் அல்லது படைத்தளபதி சோமநாதர் விக்கிரக உடைப்புடன் இணைத்துக் கூறப்படுகிறார்.  மேலும் வெவ்வேறு காலங்களில் அந்தக் கோயில் மசூதியாக மாற்றப்பட்டுவிட்டதெனக் கூறப்படுகிறது.   வல்லபசேனா, துர்லபசேனா பற்றிய கதையாடல்களும் கூறப் பட்டுள்ளன.

நான்காவது பகுதியாக ‘சோமநாதாவிலும் அதன் சுற்றுப் புறத்திலும் சமஸ்கிருத சாசனங்கள்’ என்னும் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.  சாசனங்களில் வெளிப் படையாகத் தெரியும் கண்ணோட்டங்கள், மற்ற மூலத்தரவுகளிலிருந்து வேறுப்பட்டுள்ளன என்றும் சமண மூலத்தரவுகள் முற்றிலும் முரண்பட்டதாக உள்ளன என்பதை ஒப்பு நோக்கிக் கூறப்பட்டுள்ளது.  நூற்றாண்டு வாரியாக மானியங்கள் கொடுத்த தகவலும் தரப் பட்டுள்ளது.

சோமநாதாவுடன் நேரடித் தொடர்புடைய சாசனங்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் குமாரபால சாளுக்கியரின் ஆட்சிக் காலத்தில் தொடங்குகின்றன.  அரசரைக் கடற்பயணத்தில் காப்பாற்றியதால் அரேபிய வர்த்தகருக்கு இதற்கு நன்றிக்கடனாக அவருடைய பேரன் நிர்வாக அலுவலகத்தில் பணியாற்ற நியமிக்கப் பட்டான்.  பாசுபத சைவப்பிரிவினருக்கு ஒரு முக்கிய மான மையமாக சோமநாதர் ஆலயம் நீடித்திருந்தது.  மசூதி, சூழல் போன்றவை ஆண்டு அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன.  பூரியார் குறித்தும் திரபுராந்தக புரோகிதர், ஜமாத்தா அமைப்பின் விளக்கம், உறுப்பினர் செயல்பாடு எனப் பலவற்றை இப்பகுதி பேசியுள்ளது.  குரானை முழுமையாக இரவு முழுவதும் ஓதும் காடமாராத்தி விழா போன்றவைகள், மதம் சார்ந்த விக்கிரக வழிபாட்டு முறைகளை எதிர்ப்பது என பலவற்றை இப்பகுதி பேசியுள்ளது.

ஐந்தாவது பகுதியான ‘வாழ்க்கை வரலாறுகள், காலவரிசைப்படியான வரலாறுகள், காவியங்களை’ என்பதினுள் குஜராத் வரலாறு, மீட்டுருவாக்கம், அறிஞர்களின் காலவரிசைப்படியான வரலாறுகளும் கூறப்பட்டுள்ளன.

கதையாடல்கள் குறித்து ஆசிரியர் வினா எழுப்பி உள்ளதையும் காண முடிகின்றது. வரலாற்றுக் கதை யாடலில் பிரபந்த சிந்தாமணி, ஹேமச்சந்திரர் அல்லது சகோதரர்களான வாஸ்துபாலர், தேஜபாலர் போன்ற

சில மாணவர்கள் குறித்தும் அறிய முடிகின்றது.  பிரபந்தங்கள், வம்சாவளிகள் எனப்படும் கதையாடல் களும் காலவரிசையிட்ட வரலாறுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. முஸ்லிம் போர் வெற்றிக்கு எதிர்ப்பின் காவியங்கள் என எந்தெந்த இலக்கியங்கள் இருந்தனவென்று இதன்வழி தெரிந்து கொள்ள முடிகின்றது. சமணசமயப் பிரதிகள், வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ளவேண்டுமென்று கோருவதில்லை. 

விக்கிரக உடைப்பாளர்கள் பற்றிய குறிப்புகள் யவனர்களுக்கும், துருக்கியர்களுக்கும் அதிகபட்சமாக அடிக்கடி பொருந்துகிறவையாக இருந்தன.

ஆறாவது பகுதியான ‘இன்னும் மற்றவர்களின் கண்ணோட்டங்கள்’ என்னும் பகுதியில் தொன்மக் கதைகள், கோஹிலாக்கள் குடியேறியவிதம், ஒரு கதைப்பாடலில் முகம்மது சோமநாதப்பட்டினத்து ராஜா, ஒரு ஹாஜி ஆகிய மூவரையும் ஈடுபடுத்துவதாக அமைந்துள்ளதையும் தெரிவிக்கின்றது.

ஹேக்தீன் கதை மற்றும் சூஃபி மரபின் ஒரு சில பகுதிகள் என சில விவரணைகளையும் இப்பகுதி நமக்குத் தருகின்றது.  காஜிமியான் குறித்து சொல்லப்படும் கதை யாடல் முஸ்லிம்களுக்கு ஒரு புனிதத்தலமாக இருந்துள்ள செய்தி, சூழல் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஞ்பீர் குறித்தும் தாந்திரீக மரபுவிழா, சாக்த மரபிலும் பெண் தெய்வத்தை நோக்கியதாகவே வழிபாடு மையமிட்டிருந்தன.

ஏழாவது பகுதியான ‘காலனிய விளக்கங்களும் தேசியவாத எதிர்வினைகளும்’ என்னும் பகுதி அமைந் துள்ளது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் விவாதிக்கப் பட்ட விதம், முகமதுவால் சோமநாதாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் இந்துக்களின் நடுவே தீவிரமான ஓர் அதிர்ச்சிமிக்க மன அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் அதனால் முஸ்லிம்களின்பால் ஓர் உறுதியான நீண்ட காலமாகப் புரையோடிப் போன வெறுப்பு நிலவுவதாகவும் கூறப்பட்டது. 

somanathar histopry book 450முகமது இந்தியா வந்தபோது இந்தியா ஒரு தோட்டம் என்று கண்டார்.  ஆனால் அதைப் பாலை வனமாக மாற்றிவிட்டார். பாலைவனத்தில் மீண்டும் பயிர்களை விதைப்பதற்கு காலனிய அதிகாரம் தேவைப்பட்டது.  அந்தப் பாலைவனத்தைக் காலனிய அதிகாரம் மீண்டும் ஒரு தோட்டமாக மாற்றியமைத்தது. 

முகமது சோமநாதாவின் நெடுங்கதவை எடுத்துச் சென்றாரா? இல்லையா? என்று நடைபெற்ற விவாதம் குறிப்பிடப்பட்டுள்ளது.  எல்லென்போரோவின் நோக்கங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பன்முகத்தன்மை வாய்ந்தவை.  இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்டவை எவையோ அவற்றைத் திருப்பித் தர வேண்டுமென்று ஆப்கானியர்களுக்கு எச்சரிக்கைச் செய்திகளிட்ட பதிவுகளும் தரப்பட்டுள்ளன.

முகமது சோமநாதர் கோயிலின் நெடுங்கதவுகளை கஜினிக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அவை 800 ஆண்டுகளுக்குப்பிறகு பிரிட்டிஷ் ராணுவத்தினால் திரும்பக் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.  நெடுங்கதவுகள் பற்றிய தகவல் செவிவழிச் செய்தி எனவும் கூறப்படுகின்றது.  பெரிஷ்டாவும் இது குறித்து சொல்லவில்லை.  இக்கதவு குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்பட்டுள்ளன.

காலனிய எதிர்ப்பு தேசியவாதம் ஓர் இயக்கமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தொடங்கியது.  இதனுடைய இறுதியான குறிக்கோள் என்பது, காலனிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கிய பணிகளை மேற்கொள்வதாகும்.

முன்ஷி, நந்தாஷங்கர் மேத்தா போன்றோரின் இலக்கியம் சார்ந்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.  முன்ஷி விஸ்வ ஹிந்து பரிசத்தின் தலைவராக 1964இல் இருந்திருக்கின்ற சூழல் போன்றவை பதிவு செய்யப் பட்டுள்ளன. 

தொல்லியல் ஆய்வின் முடிவுகள் வெளிவந்தவிதம், முன்ஷியின் செயல்பாடுகள், வரலாற்று நோக்கில் கூறப்பட்டுள்ளன. கோயில் திறப்பதற்கு நேருவின் எதிர்ப்பும் அன்றைய குடியரசுத்தலைவர் பாபுராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட மற்றவர்களின் ஆதரவும் எனப் பல திறப்பட்ட கோணங்களின் பார்வைகளை இந்நூல் முன் வைத்துள்ளது.

அதே தலத்தில் 1951 இல் ஒரு புதிய ஆலயம் கட்டப்பட்டது. அந்தக் கோயில் குஜராத்தின் கோயில் மரபு வழிப்பட்ட சோமாபுரி பில்டர்கள் என்ற குழுவால் கட்டப்பட்டது. இது சோமநாதர் அறக்கட்டளையின் பேரில் கட்டப்பட்டது. இந்திய அரசாங்கம் கட்ட விரும்பவில்லை. ராஜேந்திர பிரசாத்திற்கு நேரு எழுதிய கடிதச் செய்தியும் கொடுக்கப்பட்டுள்ளது. கோயில் குடமுழக்கின் நீராட்டு விழாவிற்கு சௌராஷ்டிர அரசு ரூபாய் ஐந்து இலட்சம் நன்கொடை கொடுத்ததற்கு நேரு தெரிவித்த எதிர்ப்புக்குரல் பற்றியும் பதிவு செய்யப் பட்டுள்ளது. BJP , VK போன்ற தலைவர்கள் செய்த ரதயாத்திரை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியது எனவும் கூறப்பட்டுள்ளன.

எட்டாவது பகுதியாக ‘நினைவுகளைக் கட்டமைத்து வரலாறுகளை எழுதுதல்’ என்னும் தலைப்பு அமைந் துள்ளது. முகமது யார்? அவரின் எண்ணம், சன்னி முஸ்லிமான அவர் எப்படி வெற்றி மன்னனாக இருந்தார், அதன் காரணம், மக்கள் மத்தியில் இந்து, முஸ்லிம் என்று இரண்டுக்குமிடையில் எது பிரிவு ஏற்படுத்தியது என விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

உர்பி, எலியட், டாவ்சன் போன்றோர் முகமது இந்தியாவின் மீது எவ்வாறு, எப்போது படையெடுத் தான் எனக் கூறியுள்ள செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. முகமதுவின் படையெடுப்புகள் கடும் சேதத்தைத் தந்ததால், அதன் காரணமாக இந்துக்கள் முஸ்லிம்களை வெறுத்ததாகவும் அல்பரூனி போன்றோர் கூறியுள்ளனர்.

பதினொன்றாம் நூற்றாண்டில் கிராடு, சாத்ரி, மவுண்ட் அபு போன்ற இடங்களில் முன்பு இருந்த வற்றை விட கோயில்கள் விரிந்தவையாக அமைக்கப் பட்டன. கோயில்கள் குறித்தும், அவை அமைந்தவிதம், சமூகப்பார்வை, சமநிலை எனப் பலவற்றை இப்பகுதி நமக்கு தெளிவுபடுத்துகின்றது. திருவுருவம், பல

கோயில் தோற்றம் போன்றன விளக்கம் பெறுகின்றன. இஸ்லாமியர் வருகைக்கு முன்பே இங்கிருந்த பௌத்த எதிர்ப்பு கல்ஹனர் எழுதிய நூல்களிலிருந்தும்  யுவான் சுவாங் பார்வை,  புத்தமதத்தைப் பின்பற்றியவர்களைத் துன்புறுத்திய செய்தி, பவுத்த விக்கிரகங்கள், துறவு மடங்களும் தகர்க்கப்பட்டவை குறித்தும் இந்நூல் எடுத்துரைக்கின்றது.

பசவபுராணம் என்ற நூலில் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட வேண்டுமெனக் கூறிய செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் தாக்கப்படுவதற்கான காரணம், கோயில் பராமரிப்பு, கட்டப்படுதல், கோயில் அமையும் விதம் போன்றன குறித்தும் நூலில் அறிய முடிகின்றது. முகமதுவின் படையெடுப்புக்குப்

பின் சோமநாதாவின் வரலாற்றை வித்தியாசமான பார்வையில் இந்நூல் நமக்கு எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொன்றின் வரலாற்றெழுத்துப் பின்னணியும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. ‘சோமநாதர் கோயில் மீது மக்கள் கொண்ட பார்வை உண்மையில் அப்படிப்பட்டதா? என வரலாற்று நோக்கில் பல்வேறு தரவுகளை ஆய்ந்து அவற்றை உன்னித்துப் பார்த்தபோது தான் பெற்றதை சமூகத்திற்குத் தர வேண்டுமென்ற எண்ணமே இந்நூல் தோன்றக் காரணமாக இருந்திருக்கின்றது’ என ரொமிலா தாப்பர் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை நினைக்கத்தக்கது.

சோமநாதாவின் மீது முகமது மேற்கொண்ட படையெடுப்பு நிகழ்வு, இரு பிரிவுப்பிளவு எதையும் உண்டாக்கவில்லை. காலனிய மறு விளக்கம், சமகால மதச்சார்பின்மை, இந்து தேசியவாதம் எனப் பலவற்றிற்கு ஆழ்ந்த தரவுகளின் அடிப்படையில் விரிவாக விளக்கம் தந்துள்ளது இந்நூல். மேலும் இதுபோன்று பலவற்றை மதிப்பீடு செய்தால் இந்தியாவின் கடந்த காலம் இன்னும் துல்லியமான, கூடுதல் நுண்ணுணர்வு பெறும் எனத் தொடர் ஆய்வுகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றது.

ஒரு மிகப்பெரிய அறிவியல் பூர்வமான ஆய்வினைச் செய்து ஒரு முன்னுதாரணமாக ரொமிலா தாப்பர் விளங்குகின்றார். ஒரு வரலாறெழுதியல் ஆய்வை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்நூல் சிறந்த சான்றாகத் திகழும் என்பது உறுதி.

இப்படிப்பட்ட நூலை நம் தமிழ்ச் சமூகத்திற்கு மொழிபெயர்த்துக் கொடுத்து ஆகச்சிறப்பு படைப்பு களையும், மொழிபெயர்ப்புகளையும் தொடர்ந்து செய்து வரும் கமலாலயன் அவர்களின் பணி பாராட்டத்தக்கது. உண்மையில் வரலாறெழுதியல் ஆய்வு நூலைப் படிப் பதற்கு ஓர் இலக்கிய நூலைப் போன்று மொழிபெயர்ப்பு செய்துள்ள விதம் பாராட்டத்தக்கது.

மூலநூலாசிரியரின் கருத்தைத் தன்னுள் வாங்கி அவற்றை நம் தமிழ் வாசகர்களுக்கு புரியும் வண்ணம் வெளிப்படுத்திய விதம் கவனத்திற்குரியது. இப்பணிக்காக அவர் செய்துள்ள மெனக்கெடல் சிறப்பிடம் பெறு கின்றது. பேச்சுவழக்குச் சொற்கள், ஆய்வுநடை, வரலாற்று நடை எனப் பலவிதத்தில் இந்நூல் மிளிர் கின்றது மொழிபெயர்ப்பாளரின் தூரிகையால். மேலும் நூலில் பின்னிணைப்பாக பலவற்றைக் கொடுத்துள்ள விதம் நன்று. பயன்படுத்திய நூல்களின் எண்ணிக்கை யையும் தந்து இத்துறை சார்ந்து படிக்க வழி செய் துள்ளமையும் சிறப்பிடம் பெறுகின்றது. ஒரு நல்ல மொழிபெயர்ப்பிற்கு சான்றாக இந்நூலை குறிப்பிடுவது மிகையன்று. வெளியிட்ட என்.சி.பி.எச் நிறுவனத் தார்க்கும், மொழிபெயர்த்த கமலாலயன் அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக...

சோமநாதர்

ரொமிலா தாப்பர்

தமிழில் : கமலாலயன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொலைபேசி எண் : 044-26251968

விலை - 300/-

Pin It