இலக்கியங்கள் சமூகத்தைப் பிரதிபலிப்பன. ஏதோவொரு வகையில்/தன்மையில் ஒரு சமூகத்தின் எல்லா நிலைகளையும் இலக்கியங்கள் பதிவுசெய்து விடுகின்றன. இந்த வகையில்தான் ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக நிலையை அறிந்துகொள்ள இலக்கியத் தரவுகள் துணைக்கு இட்டுக்கொள்ளப்படுகின்றன.

Spinacia-oleraceaசங்க காலச் சமூகச் சூழலை அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களே இன்றைக்குப் பெருந் துணையாக உள்ளன. தொல்தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தின் அடையாளங்களாக எஞ்சி நிற்பவை சங்க இலக்கியங்கள் மட்டுமேயாகும். எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் இரு தொகுப்பின் வழியாக அடையாளப் படும் அந்நூல்கள் பண்டைத் தமிழகத்தின் பண்பாடு களையும் கலாசாரங்களையும் தமிழ் இலக்கியப் பாரம்பரியங்களையும் அறிந்துகொள்ள பெருந்துணை புரிகின்றன. இந்த இரு தொகுப்புகளைக் கொண்டுதான் தமிழ் இலக்கிய உருவாக்க மரபு குறித்த தெளிவான வரலாற்றை, பண்டைத் தமிழகத்தின், தமிழரின் அடையாளங்களை எழுதவும் பேசவும் முடிகின்றன.

மாந்த இனத்தின் பண்பாட்டு அடையாளங்களுள் உணவுமுறை முக்கியமான ஒரு அடையாளமாகும். இதனால்தான், மாந்தவியல் ஆய்வாளர்கள் ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளங்களை அறிந்து கொள்ள உணவு முறையைத் துணையாகக் கொள் கின்றனர். ஒரு சமூகத்தின் பொருளாதார நிலையை அறிந்துகொள்ளவும் உணவு முறை பெருந்துணை செய்கின்றன.

தொல்தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை சங்ககால உணவு முறை வழியே அறியமுடிகின்றது. வாழும் நிலப் பகுதியை ஒட்டியே சங்க கால மக்களின் உணவுமுறைகள் வழங்கியிருந்தபோதும், மக்கள்தம் நிலைக்கு ஏற்பவே உணவுமுறைகள் வழங்கியிருந் துள்ளதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

வறியவர்களும், வசதி படைத்தவர்களும் உண்டு வாழ்ந்த உணவு வகைகள் வெவ்வேறாக இருந்துள்ளன. பொருளாதார நிலையில் மேலோங்கி இருந்த மக்கள் பன்றியின் ஊனையும் ஆட்டின் இறைச்சியையும் செல்வர்களால் காய்த்து உருக்கிய நெய்யில் பொரித்துண்ட குறிப்புகள் சங்க இலக்கியங்களில் (புறம்.120, 160) கிடைக்கப்பெறுகின்றன.

செல்வச் செழிப்பான மக்கள் பொன், வெள்ளிக் கலன்களில் உணவுப் பொருட்களை வைத்துண்ட குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன (புறம். 24,160, 390). அவர்கள் ஒரே நேரத்தில் பலவகையான உணவுவகைகளை ஒருங்கு வைத்து கொண்டு உண்ட குறிப்புகளும் அங்குக் கிடைக்கப் பெறுகின்றன (பொரு. 102).

பொருளில் உயர்ந்த மக்கள் நெய்யில் பொரித்த உணவு வகைகளை உண்ட குறிப்புகளையும், அந்த உணவுப் பொருட்களைப் பொன், வெள்ளிக் கலங்களில் வைத்துண்ட குறிப்புகளையும், ஒரே நேரத்தில் பல வகையான உணவு வகைகளை வைத்துண்ட குறிப்பு களையும் காட்டும் சங்க இலக்கியங்கள் வறுமை சூழ்ந்த வறியவர்கள் உண்ட உணவு வகைகள் பற்றியும், அவர்கள் கிடைத்த பொருட்களை உண்டு அன்றாட வாழ்க்கையை எப்படி நகர்த்தினார்கள் என்ற வறுமைச் சூழலையும் காட்டுகின்றன.

 ‘எல்லோரும் பரிசில் பெற்றனர் யாம் மட்டும் இன்னும் பெறவில்லை’ எனப் பரிசில் பெறும் விருப்பத்தைப் புலப்படுத்திப் பரிசில் கொடுப்போனாகிய குமணன் என்னும் மன்னனைப் பார்த்துப் பெருஞ் சித்திரனார் எனும் புலவன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் காணப்படுகின்றது (159). வறுமையின் உச்சத்தை இந்தப் பாடலைப் போன்று வேறெந்த சங்கப் பாடலும் புலப்படுத்தவில்லை என்பது என் கருத்து. வயது முதிர்ந்த தாயின் நிலை, வறுமையில் வாடும் மனைவியின் நிலை, இதனால் கைக்குழந்தையும் பாலின்றித் தவிக்கும் பரிதாபநிலை என குடும்ப நிலையைச் சொல்லிப் பரிசில் வேண்டுவதாக அமைந்தவை அப்பாடல். மனைவியின் துன்ப நிலையைச் சொல்லுமிடத்து நம் மனதும் துன்புறுகிறது.

குழந்தைகள் பிசைந்து மெல்லுதலால் பாலின்றி வாடிய மார்பினை உடைய வறுமையுற்ற புறநானூற்றுக் காலத்துப் புலவனின் மனைவி பசியால் துன்புற்று, குப்பைக் கீரையின் இளைய தளிரைக் கொய்து வந்து அதை உப்பிட்டுச் சமைக்கவும் வழியில்லாமல், முன்பு விரும்பியுண்ட புளித்த மோர் கலந்த சோற்றுணவையும் மறந்து பசிய இலையாகத் தின்று வாழ்ந்திருக்கிறாள். அந்தப் புறநானூற்று வரிகள்:

குப்பைக் கீரை கொய்கண் அகைத்த

முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்புஇன்று

நீர் உலையாக ஏற்றி மோர் இன்று

அவிழ்ப் பதம் மறந்து பாசடகு மிசைந்து (புறம். 159: 9-12).

என்பதாகும்.

வறுமையில் உண்ட அந்தக் குப்பைக் கீரையை ‘அடகு’ என்று பெயரிட்டு அழைக்கும் வழக்கமிருந்ததை இந்தப் புறநானூற்றுப் பாடலால் அறியவருகின்றது. சமைக்கவும் வழியில்லாமல் பச்சையாக உண்பதால் ‘பாசடகு’ என்று சுட்டியுள்ளார் புலவர். ‘அடகு’ என்பதற்கு ‘இலைக் கறி’ என்று பொருள் கூறுகிறது தமிழ்ப் பேரகராதி (ப.43). கீரையை ‘அடகு’, ‘இலைக் கறி’ என்று பண்டைத் தமிழர்கள் அழைத்துள்ளனர்.

வறிய நிலையில் வாழ்ந்த மக்களே ‘அடகினை’ உண்டு வாழ்ந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியச் சான்றுகள் வழி அறியவருகின்றன. நாஞ்சில் வள்ளுவன் என்னும் மன்னனின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து பாடும் வகையில் ஒளவையார் பாடிய பாடல் புறநானூற்றின் 140ஆவது பாடல். வறுமையில் வாடிய ஒருவன் நாஞ்சில் வள்ளுவனிடம் பொருள் வேண்டிச் செல்கிறான். அதுவும் அன்றைய பொழுது வறுமை நீங்கும் வகையில் அரிசி மட்டும் தந்தால் போதும் என்ற மனநிலையிலேயே பரிசில் கேட்டுச் செல்கிறான் அந்த வறியவன். ஆனால் அம்மன்னன் மலைபோன்ற

தொரு யானையையே பரிசாக அளித்தான் என்பதாக அப்பாடல் அமைந்திருக்கும். அரிசி கேட்டு வந்த வறியவனுக்கு யானையையே பரிசாகத் தந்தான் மன்னன். பரிசளிப்பதில் சிறந்த மன்னன் நாஞ்சில் வள்ளுவன் என்பது பாடலின் பொருள் (இந்தக் காலத்துப் புலவர்கள் போன்று பொருளுக்காக அதிகார வர்க்கத்தைப் புகழ்ந்து பாடியிருப்பாரோ ஒளவையார். யார் அறிவார்). அந்த அரிசியும் எதற்குத் தெரியுமா,

வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த

அடகின் கண்ணுறையாக யாம் சில

அரிசி வேண்டினே மாகஞ்.   (புறம். 140: 3-5).

வளையணிந்த கையராகிய விறலியர், மனைப் பக்கத்தில் பறித்துச் சமைத்த அடகின் (கீரையின்) மேல் தூவும் பொருட்டேயாகும். வறுமை நிலையில் வாழும் மக்கள் அடகினை உணவாகச் சமைப்பதும், அதில் வறுத்த அரிசி மாவை மேலே தூவிச் சமைத்துண்ணும் வழக்கமிருந்ததை இப்பாடல் காட்டுகிறது. புறநானூற்றின் இன்னொரு பாடலில் வறுமையில் வாடிய புலவனொருவன் அடகின் அருமையைப் பற்றிப் பாடிய குறிப்பொன்று காணப்படுகின்றது.

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் எனும் புலவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனிடம் பரிசில் கேட்டு வருகிறான். வறுமையின் உச்சநிலையில் இருக்கிறான் புலவன். மன்னனோ பரிசில் கொடுக்கக் காலம் நீட்டித்துக்கொண்டே செல்கிறான். மன்னனின் இச்செயலைக் கண்டு புலவன் கோபமுற்று அவனுக்கு அறிவுறுத்தும் பொருட்டு,

இடுமுள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த

குறுநறு முஞ்ஞைக் கொடுங்கண் முற்றடகு

புன்புல வரகின் சொன்றியடு, பெறூஉம்,

சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்

பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே (புறம். 197: 10-14).

என்று பாடுகிறான். நீ பெரிய வேந்தனாக இருந்தும் என்ன பயன். வறுமையில் வந்து பரிசில் கேட்போர்க்குக் காலமறிந்து உதவும் பண்பில்லாத உன்னைவிட ‘வேலியில் படர்ந்த ஆடுமேய்ந்து எஞ்சிய முன்னை யடகும் (முஞ்ஞைக் கீரை) நிலத்தில் விளைந்த எளிய வரகுச் சோறுமாகிய உணவைத் தருகின்ற சிற்றூர் வேந்தனே மதிக்கத்தக்கவன், துன்பம் அறிந்து உதவும் பண்பினன்’ என்கிறான் அப்புலவன். வறுமை நிலையில் முன்னைக் கீரையும், வரகுச் சோறும் உணவாகக் கொள்ளப்படும் எனும் செய்தி இப்பாடலால் பெறப்படுகின்றது.

ஒரு நாட்டில் போர் நடைபெறும் காலத்தில் அன்றாட வாழ்க்கை முறைகள் முற்றாகச் சிதைந்து, உற்பத்திக் குறைந்து வறுமை தோன்றுவது இயல்பாக இருக்கும். இன்றைக்கும் இந்த அவல நிலையைப் பல நாடுகளில் காணமுடிகின்றது. போர் நடைபெறும் காலத்தில் பொருளீட்ட முடியாமல் வறுமை சூழ்ந்த நிலையில் அடகினைப் பறித்துவந்து உணவாகச் சமைத்து உட்கொள்ளும் நிலை ஏற்பட்டதைக் காட்டுகிறது மற்றோர் புறநானூற்றுப் பாடல். காடும், வயலும் நிறைந்த பகுதியில் அடகு (கீரை) எளிதில் எங்கும் கிடைக்கும் ஒரு உணவு வகையாகும். எளிதாகக் கிடைக்கும் என்பதால் வறியவர்கள் மட்டுமே உட்கொள்ளும் உணவுப் பொருளாக இருந்துள்ளது. அப்படி எளிதில் கிடைக்கக்கூடிய அடகினைப் பறித்து வந்து, கொண்டுவந்த விறகுகளால் வேகவைத்து (சமைத்து) உண்பதற்கும் இயலாத நிலையில் போர் தொடங்கிற்று என்கிறது அப்பாடல். அந்த அவலத்தைச் சுட்டும் பாடலடிகள்:

கொய்அடகு வாட தருவிறகு உணங்க

மயில்அம் சாயல் மாஅயோளடு

பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே (புறம். 318: 1-3).

என வருகின்றன.

போரினால் வறுமை சூழ்ந்திருந்த நிலையில் எளிதில் கிடைக்கக்கூடிய அடகினைப் பறித்துவந்து சமைப்பதற்கும் வழியில்லாமலிருந்த ஊர், போருக்குப் பின்னர் வளம் பல பெற்று வறுமை நீங்கிச் செழிப்புற்று விளங்கியது என்பதாக அப்பாடல் நீண்டு செல்லும். இங்கும் வறுமைக் காலத்தில் பசி போக்கும் பொருளாக அடகு (இலைக்கறி) உணவே பயன்பட்டுள்ள குறிப்பைப் பெறமுடிகின்றது.

போரில் கணவனை இழந்து தனிமையில் வாழும் பெண்கள் தமது காமப் பசியை ஆற்றிக்கொள்ள அடகினை உணவாக உட்கொள்வர் என்ற குறிப்பைத் தருகின்றது இன்னொரு புறநானூற்றுப் பாடல்.

குடக்கோ நெடுஞ்சேரலாதனும் பெருநற்

கிள்ளியும் பெரும் போரில் ஈடுபட்டனர். இருவர் படைகளும் பெரும் சண்டையில் ஈடுபட்டு அழிந்தன. படைகள் அழிந்த பின்னர் மனந்தளராது இரு மன்னர்களும் நேருக்கு நேர் போரிட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் இறந்தனர்; போர் முடிவுற்றது. போரில் இறந்த வீரர்களின் மனைவியர் எல்லாம் போர்க் களம் வந்து தம் தம் கணவர் இறந்து கிடந்த நிலை கண்டு அழுது புரண்டு அவரவர்தம் கணவர் மார்பில் சாய்ந்து உயிர்த் துறந்தனர். இந்தக் காட்சியைக் இவ்வாறு கூறுகிறது அந்தப் புறநானூற்றுப் பாடல்.

.............. பெண்டிரும்

பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்

மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே

(புறம். 62: 13-15).

கணவன் போர்க் களத்தில் இறந்த பின்னர் ‘பசிய இலைக்கறி உணவை உண்டும், குளிர்ந்த நீரில் குளித்தும் கைம்மை நோன்பிருந்து உயிர் வாழாமல் கணவர் மார்பில் சாய்ந்து உடன் உயிர் துறந்தாள்’ என்கிறது இப்பாடல். கணவனை இழந்து கைம்மை நோன்பிருந்து வாழும் பெண்கள் ‘பசிய அடகு’ உணவை உட்கொள்ளும் வழக்கமிருந்ததை இப்பாடல் வழிப் பெறமுடிகின்றது. இப்பாடலும் வறுமைக் காலத்தில் (காம வறுமை) ‘அடகு’ உணவாகப் பயன்பட்டு உள்ளதைக் காட்டுகின்றது.

பண்டைய மதுரை நகரிலிருந்த அறச்சாலை ஒன்றில் பலவகைக் காய்களோடும் கனிகளோடும் சேர்த்து அடகும் ஒரு உணவுப் பொருளாக வறியவர் களுக்கு வழங்கப்பட்டது என்கிறது மதுரைக்காஞ்சி.

சேறும் நாற்றமும் பலவின் சுளையும்

வேறுபடக் கவினிய தேம் மாங்கனியும்

பல்வேறு உருவின் காயும் பழனும்

கொண்டல் வளர்ப்புக் கொடிவிடுபு கவினி

மென்பிணி அவிழ்ந்த குறுமுறி அடகும்

(மதுரை. 527 - 531).

இங்கும் வறியவர்களுக்கு உணவு வழங்கும் அறச்சாலையில்தான் ‘அடகு’ உணவுப் பொருளாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

வறுமையில் வாடிய புலவனின் குடும்பம், போர்ச் சூழலில் வறுமையுற்று வாழ்ந்த நாட்டு மக்கள், கணவனை இழந்து தனிமைத் துயரில் வாழ்ந்த பெண் மக்கள் ஆகிய இவர்களே அடகினை உணவாகச் சமைத்து உண்டுள்ளனர். வறுமையில் வாடும் வறியவர் களுக்கு மட்டுமே அடகு உணவாக இருந்துள்ளது. வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு உடனே கிடைக்கும் உணவுப் பொருள் ‘அடகு’ (கீரை) மட்டுமே ஆகும். இன்றைக்கும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களே அடகை அதிகம் உண்டு வாழ்கின்றனர். ‘அடகு’க் கடைக்குக்கூட அவர்கள்தான் அடிக்கடிச் சென்றும் வருகின்றனர். வறியவர்களின் வாழ்க்கையோடு மட்டும் தொடர்புடையதாக ‘அடகு’ என்ற சொல் காலந்தோறும் வழங்கிவருகின்றது. வறுமை நிலையில் வாழும் மக்களுக்கு ‘அடகு’ காலந்தோறும் பயன்பட்டும் வருகின்றது.

துணைநின்ற நூல்கள்

1.    சாமிநாதையர் உ.வே. (ப.ஆ.). 1894. புறநானூறு மூலமும் பழைய உரையும், சென்னை: ஜூபிலி அச்சுக்கூடம்.

2.    பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப. ஆ.); செயபால் (உ.ஆ.). 2011 (4ஆம் பதிப்பு). புறநானூறு மூலமும் உரையும் (தொகுதி1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

3.    நமசிவாயம், செ. 2003 (3ஆம் பதிப்பு). தமிழர் உணவு, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

4.    சாமிநாதையர், உ. வே. (ப.ஆ.) 1986 (நிழற்படப் பதிப்பு) பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

Pin It