eppadiyumsollalam 400எப்படியும் சொல்லலாம்

ஆசிரியர்: இரா.எட்வின்

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

புதிய எண் : 77, பழைய எண் : 57 A,

53-ஆவது தெரு, 9-ஆவது அவென்யூ,

அசோக் நகர், சென்னை - 83

விலை: 65.00

மாயாகோவ்ஸ்கி அட்லாண்டிக் மாக்கடலைக் கடந்து அமெரிக்காவைக் கண்டறிந்த கொலம்பஸ் பற்றிய தனது கவிதையை இப்படி எழுதிச் செல்வார்:

“நீ ஒரு கழுதை, கொலம்பஸ்

ஆம், உண்மை சொல்கிறேன்

நான் நீயாக

இருந்திருப்பேனானால்

இதை நான் செய்திருப்பேன்

அமெரிக்காவின் வாயில்களை மூடி

இந்தக் கடல் நீரால் கழுவியிருப்பேன்

பின்னர் புதிதாய்

அதனைத் திறந்திருப்பேன்....”

மாயாகோவ்ஸ்கிக்கு கலை அழகியல் நுட்பங்களுக்கு இணையாக அரசியல் முனைப்பும் இருந்தது. உலகின் மாபெரும் கவிஞர்களும் கலைஞர்களும் சமகாலத்தின் மனசாட்சியாக இருந்திருக்கின்றார்கள். எல்லாவற்றிலும் அரசியலும் நுகர்வியமும் உலக மயமும் ஊடுருவியுள்ளச் சூழலில் சுத்த சுயம்புவான, இயக்கமற்ற, அரசியலற்ற, ஆத்மாக்கள் தமிழ்ச் சூழலில் படைப்பாளிகளாக உலவி வரு வதும், இப்போக்குதான் சரி என வாதிடுவதும் நடக்கிறது.

இவற்றிலிருந்து மாறுபட்டு வெடிப்புறப் பேசும் எழுத்துக்கு சொந்தக்காரர் இரா. எட்வின். எப்பொழுதும் தன் சார்புத்தன்மையை மறுக்காதவர். ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஒருவித எள்ளல் தன்மையோடு வெளிப்படுத்துபவர். உரைநடையில் கூர்மையும், நுட்பமும் மிக்க எழுத்தைத் தந்து தமக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொண்ட இரா.எட்வினின் அண்மை கவிதைத் தொகுப்பு “எப்படியும் சொல்லலாம்.”

நிகழ் வாழ்வின் கரிசனங்கள் கவிதைத் தெறிப்பு களாகி உள்ளன. இவர் வண்ண வார்த்தை ஜாலங்களுக்குத் தவமிருக்கவில்லை. எளிய நேர்ப் பேச்சாய் கவிச்சொற்கள். முரண்களின் வெளிப் பாடும் எள்ளல்தனமும் கவிதைகளாகின்றன.

ஹைகூ வடிவிலான கவிதைகள் ஈர்க்கின்றன.

பழகிக் கொள்ள

வேண்டியதுதான்

கானலில் நீந்த

இது நம் கல்வி, வேலைவாய்ப்பு, காதல், தேர்தல், அரசியல், பொருளாதாரம், வாழ்க்கை.... என எல்லாவற்றிற்கும் பொருந்தக்கூடியது.

வாழ்வு சிக்கல்களால் பின்னப்பட்டுள்ளது. சிக்கல்களைக் களைவதுதான் வாழுங்கால வேலைத் திட்டமாகிவிடுகிறது. என்றாலும் வாழ முடிகிறது. கவிஞனுக்கு மட்டுமே இதெல்லாம் வாய்க்கும்.

ஏழும்

நிற்காமல் போன

எரிச்சலை

நின்று துடைத்தது

எட்டாவது பேருந்து

ஜன்னலோர இருக்கை

குந்தவும்

அந்த தைல மரத்துக் கிளிகள்

‘காச்’ ‘மூச்’ என்று கத்தவும்

அடச்சே....

இந்த

எட்டாவது சனியன் மட்டும்

ஏன்

நின்று தொலைத்ததோ?

தைலமரத்துக் கிளிகளின் அழகு கவிதை யழகாய் விரிகிறது இங்கே. எல்லாம் கடந்த நேசிப்பு கவிதை மனத்துக்கே சாத்தியம்.

வறுமை தின்னும் வாழ்வின் சித்திரத்தைக் கீழ்க்காணும் கவிதையை விட எப்படி சொற்களில் காட்ட முடியும்?

அரச்சிடலாம் துவையல்

இருக்கும்

பழைய பாக்கிக்காய்

வசவிக் கொண்டே

அய்யாத்துரை தந்த

வறுகடலை

கொஞ்சம் சுள்ளியோடு

இருக்கு

ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர்வீடு போன மக

நனச்சிராம கொண்டு வரணும்

நெருப்ப.

அடுப்புக்கு மட்டுமல்ல. நெஞ்சிலும் நெருப்பு அணையாமல் இருக்க வேண்டியிருக்கிறது.

கவிதை வாசகனிடம் ஒருவித எதிர் மனத் தூண்டலை உருவாக்க வேண்டும் என்பதில் எட்வின் வெற்றி பெறுகிறார். சாதி வெறியில் மலம் தின்ன வைத்த கொடுமையைப் பார்த்த ஒருவரின் குமுறல் இது.

ஆயிரம் பேர் கூடி நிற்க

ஆதிக்கம்

ஆணவம்

ஜாதித்திமிர்

ஏளனங்கள்

எகத்தாளங்கள்

இவற்றிடையே

அவமானம்

என்னைத் தின்ன தின்ன

நான்

மலம் தின்றால் மட்டுமே

கிடைக்கும்

நீ

மலம் தின்ற அவஸ்தை

சாதி ஒழிப்பின் முதல்படி தன்சாதி அபி மானத்தைத் துறத்தல். அடுத்து தன்னை சாதி இறக்கம் செய்து கொள்ளுதல். இவ்வித உணர் வோட்டம் இக்கவிதையில் பதிவாகின்றது. செருப் பணிந்து தெருவில் வரக்கூடாது என்ற சாதி வெறிக்கு எதிராக நீள்கிறது ஒரு கவிதை.

எங்களுக்கு

கோபம் வரும் வேளை

எம்மெதிரே

நீங்களும் வரலாம்

கழட்ட வேண்டிய

தேவையும் இல்லை

கைகளில்தான்

இருக்கிறது

செருப்பு.

இந்தக் கோபம் செயல்படத் தொடங்குவது தவிர்க்க முடியாதது. இதனைத் தூண்ட ஒரு கவிதை வேண்டும்தான்.

பொருள் தேடும் உலகம் பொருள்கள் நிறைந்த வீடு. நாகரிகம் நடமாடும் குடும்பம். உறவுகள் கேள்விக்குறிகளாக அந்நியமாதலின் விளைவை ஒரு கவிதை இப்படிச் சுட்டுகிறது.

தேர்வென்றும்

நோயென்றும்

நீ சொன்ன ஏதேதோ காரணங்களால்

பேரன்களை மருமகளை

நீ அழைத்து வராமைக்கு சமாதானப்பட்ட

இந்தப் பாழும் கிழவிக்கு

பத்துநாள் பிடித்தது

உண்மையை நீ அழைத்து வரவில்லை என்ற

உண்மை பிடிபட...

நடுத்தர வாழ்வின் இலட்சணம் இதுதான். நம்மில் பலரின் அனுபவமாகி நிற்கிறது இக் கவிதை. அதே வேளை கிராமத்தில் மூத்த தலை முறைத் தாயின் நெஞ்சு கொள்ளா நேசத்தையும் காட்டத் தவறவில்லை கவிஞர்.

பூமிப் பந்தின்

கடைசி மனிதனுக்கும்

தாராளமாய்

தருமளவில் இருக்கிறது

பத்து தேய்த்து

ஜீவிக்குமென் அம்மாவின் நெஞ்சில்

ஈரம்.

இப்படி ஈர நெஞ்சினளான தாய்க்கு மகன் வைக்கும் விண்ணப்பம் வேடிக்கையானதா?

கேட்டிருக்கும்

இடங்களிலிருந்து

ஏதேனும் கிடைக்கும் வரை

எப்படியேனும்

தாக்குப் பிடித்துவிடு தாயே

சாகாமல்.

ஆம். பெரும்பாலும் ஏழை எளிய மக்களின் சாவுமுதல் கடன்தான். வாழ்க்கைக்கு மிக அருகில் கவிஞன் இருப்பதால்தான் இக்கவிதை சாத்திய மாகியிருக்கிறது.

யாரது

ஆடிப் பெருக்கன்று

நடுக்காவிரியில்

ஊற்று தோன்றுவது

எனக் காவிரியின் கண்ணீரைச் சொல்வதும்,

புத்தகம் கேட்கும்

மகளின் கையில்

மயிலிறகு

என மென்மையைக் கவிதையாக்குவதும்,

இணங்கியோ

எதிர்த்தோ

பட்சி சொல்லாத

பிளாஸ்டிக் பல்லியை

எதிர் கடந்து போகும் ஆண்பல்லி

விரகத்தோடு

என மூடநம்பிக்கைக்குக் குட்டு வைப்பதும்,

அந்த மாமா செத்தது

அந்த மாமாவுக்குத் தெரியுமா

மொதல்ல

என குழந்தைமையின் வண்ணம் சொல்வதும், இரா. எட்வினின் கூரிய நோக்கை கவிதை மனசை அடையாளங் காட்டுகின்றன.

தேர்வுகள், ஆசிரியர்கள், குழந்தைகள், குடும்பம், வறுமை. போலி ஆன்மீகம், இயற்கை. அரசியல்... என தன்னைப் பாதித்தவற்றை கவிதைகளாக்கி யிருக்கிறார் இரா.எட்வின். இக்கவிதைகள் கிராமத்து சுடுதேங்காய் மாதிரி சுவையானவை. உப்பிட்ட வடுமாங்காய் போல உவப்பானவை. எளிமையே அழகாய் விரிகிறது. கவிதைகளுக்கு மெய் அழகாயிற்று. தனது இலட்சியமென முன் மொழியும் நீண்ட கவிதையை இப்படி முடிக் கிறார்.

விடுதலை பூமியில்

உச்சி சூரியனின்

வெயிலாய் கசிவேன் நான்.

ஆம். எட்வின் உச்சி சூரியன்தான். தீமை களைத் தீய்க்கும் யுகாக்னிகள்தான் இன்றைய தேவை. ஒடுக்குதலுக்கும் ஒதுக்குதலுக்கும் எதிரான குரல்கள் ஒன்றிணையட்டும். எப்படியும் சொல்லலாம் - வலியை, வேதனையை மட்டுமல்ல. விடுதலையையும்தான்.

 

Pin It