“அவர்தான் எல்லாத் தொடக்கங்களுக்கும் தொடக்கமாக இருக்கிறார்” என்று அலெக்சாண்டர் புஷ்கினைப் புகழ்ந்துரைத்தார் மாக்ஸிம் கார்க்கி.

“ரஷ்ய உரைநடை இலக்கியங்களில் தலைசிறந்தது கேப்டன் மகள்” என்று பாராட்டினார் நிக்கலாய் கோகல்.

captain makalகேப்டன் மகள் புதினம் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கதை. இது 18ஆம் நூற்றாண்டில் நடந்தது. எமேலியன் புகச்சேவ் என்னும் கிளர்ச்சித் தலைவன் தன்னை ஜார்ஜ் மூன்றாம் பீட்டர் என்று அறிவித்துக் கொண்டு விவசாயிகளை வளைத்து, வசப்படுத்தி கிளர்ச்சியை நடத்துகிறான். ஆள் கொஞ்சம் திமிர் பிடித்தவனாக இருந்தாலும், சில இடங்களில் அவனிடம் நன்றியுணர்வு, மன்னிக்கும் பண்பு ஆகியன புலப்படுகின்றன.

புகச்சேவின் இந்தக் கிளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட கலகலப்பான காதல் கதைதான் கேப்டன் மகள்.

அந்திரேய் பெத்ரோவிச் கிரின்யோவ் தனது இளம் பருவத்தில் இராணுவத்தில் மினிஹ் பிரபுவின் கீழ் பணியாற்றி மேஜராக ஓய்வு பெற்றவர். அவருக்குத் திருமணமாகி ஒன்பது குழந்தைகள் பிறந்தன. ஒரே ஒரு குழந்தையைத் தவிர அனைவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். அந்தக் குடும்பத்தில் தப்பிப் பிழைத்த அந்த ஒரே உயிர்தான் கேப்டன் மகள் என்னும் இந்தக் கதையின் தலைவன்.

அவன் கருவில் தோன்றியவுடனே, அவனை இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று அவனுடைய தந்தையான முன்னாள் இராணுவ அதிகாரி முடிவெடுத்து விட்டார். அவனுக்கு இப்போது வயது பதினேழு. நல்ல வேளை, அவன் பெண்ணாகப் பிறக்க வில்லை.

“அவன் இராணுவத்தில் சேர வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று முன்னாள் அதிகாரி மனைவியிடம் உரையாடும் போதுதான் கேப்டன் மகள் புதினம் 'விறுவிறு' வென்று புறப்படுகிறது.

நாயகன் பியோத்தர் இராணுவத்திற்குச் சேர்வதற்கான பரிந்துரைக் கடிதத்தை அப்பாவிடம் இருந்து பெற்றுக்கொண்டு புறப்படுகிறான். உடன் செல்பவர் அவன் வீட்டுப் பணியாளர் வயது முதிர்ந்த சாவெலிச் வழியில் பனிமழை, இடையில் தங்குதல், மீண்டும் பயணப்படுதல் என்று கதை நகர்கிறது.

ஒரு விடுதியில் குடித்துவிட்டு. சூதாடி ஒரு தொகையை இழக்கிறான், பியோத்தர்.

கடும் பனிப்புயலில் சிக்கித் தவிக்கும். பியோத்தரை வழிப்போக்கர் ஒருவர் காப்பாற்றுகிறார். பியோத்தர் நன்றிக் கடனாக. தனது முயல் ரோமச் சட்டையை அந்த மனிதருக்குப் பரிசாகத் தருகிறான்.

கரடுமுரடான பயணத்தை முடித்து, ஒரு வழியாக ஓரென்புர்க் நகரத்தை அடைந்ததும், தன்னுடைய அப்பா சந்திக்கச் சொன்ன ஜெனரலைச் சந்தித்தான், பியோத்தர்.

“காலத்தை வீணாக்காமல் நீ நாளையே பெலகோர்ஸ்க் கோட்டைக்குப் புறப்படு. அங்கேயுள்ள காப்டன் மிரோனவ் கீழ் பணியாற்ற வேண்டும். ஓரென்புர்க்கில் உனக்கு ஒரு வேலையும் இல்லை” என்று கதைத் தலைவனைத் துரிதப்படுத்தி அனுப்பினார், அந்த ஜெனரல்.

ஓரென்புர்க்கிலிருந்து நாற்பது கி.மீ தொலைவில் பெலகோர்ஸ்க் கோட்டை இருந்தது. யாயிக் நதியின் உயரமான கரையின் வழியே பியோத்தரும் சாவெலிச்சும் செல்ல வேண்டும். அந்த ஆற்றில் தண்ணீர் இன்னும் உறைய ஆரம்பிக்கவில்லை.

மிகப் பிரமாண்டமான கோட்டைக்குச் செல்கிறோம் என்கிற கற்பனையோடு செல்கிற பியோத்தரிடம் ‘இதுதான் கோட்டை’ என்று பெலகோர்ஸ்க் கோட்டையைக் காட்டியபோது அவனுக்கு சிரிப்பு வருகிறது. காரணம்? அதை அறிவதற்கு புஷ்கின் எழுதிய வரிகளைப் பார்ப்போம்.

“அப்போது வண்டி அந்தக் கிராமத்தில் நுழைந்தது, வாயிலில் ஒரு பழைய இரும்பு பீரங்கி நிறுத்தப்பட்டிருந்தது. அந்தக் கிராமத்துத் தெருக்கள் குறுகலாகவும் வளைந்தும் இருந்தன. பெரும்பாலான தாழ்ந்த குடிசைகளில் வைக்கோல் கூரை போடப்பட்டிருந்தது. தளகர்த்தரின் வீடு மரத்தால் கட்டப்பட்ட சிறிய வீடு. அதற்கு முன்னால் மேடான இடத்தில் வண்டி நின்றது… வாயிலில், காயமடைந்த வயதான படைவீரன் ஒருவன் பச்சை நிறமுள்ள இராணுவ உடையின் கைப்பகுதியில் ஒரு சிறு நீலநிறத் துணியைத் தைத்துக் கொண்டிருந்தான். சன்னலின் அருகில் மிகவும் வயதான ஒரு பெண் பஞ்சு திணித்த கோட்டு அணிந்து, தலையில் சதுரத் துணியைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவளுக்கு எதிரில் ஒற்றைக்கண் இராணுவ அதிகாரி…"

இப்படி அந்தக் கோட்டையின் தோற்றத்தை மிக இயல்பாக எழுதிச் செல்கிறார்.

மொத்தத்தில், சற்று விசாலமான பழைய பேப்பர்கடை போலக் காட்சியளித்தது, பெலகோர்ஸ்க் கோட்டை.

அங்கு கேப்டன் இவான் குஷ்மிச் மிரோனவின் மகள் மாஷா மிரோனவைச் சந்தித்துக் காதல் கொள்கிறான். பியோத்தர் அந்திரேய் கிரின்யோவ்.

இந்நிலையில், ஏற்கெனவே அவளிடம் காதலைச் சொல்லி, காதல் மறுக்கப்பட்டு இருப்பவன் இராணுவ அதிகாரி ஷ்வாப்ரின். எனவே, பியோத்தரின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, இருவருக்கும் மோதல் நிகழ்கிறது.

அதன் பிறகு, புகச்சேவ் கோட்டையைப் பிடித்தல், தளகர்த்தரும் அவருடைய மனைவியும் கொல்லப்படுதல், ஷ்வாப்ரின் கதைத் தலைவி மாஷா மிரோனாவைக் கடத்தி வைத்தல் எனப் புதினம் பல திருப்பங்களுடன் நீள்கிறது.

இறுதியில் கதை எப்படி முடிகிறது என்பது மிகவும் சுவையானது.

புதினத்தில் இயற்கை வர்ணிப்புகளும் நகைச்சுவை தெறிக்கும் உரையாடல்களும் ஏராளம்!

புஷ்கின் அருகில் அமர்ந்து சொல்வது போல, கேப்டன் மகள் கதையை எழுதியிருக்கிறார்.

கவிஞராகவும், உரைநடையாளராகவும் இருக்கிற ஓர் ஆளுமையின் கவிதைகளில் உரைநடைச் சாயல் காணப்படுவது மிகவும் அரிதாகவே நிகழும். ஆனால், அதில் அதே ஆளுமை உரைநடை எழுதும்போது, கவிதை நடையின் தாக்கம் பெரும்பாலும் தவிர்க்கப்பட முடியாதது. அப்படித்தான், இந்தக் கேப்டன் மகள் புதினத்திலும் உரைநடையினூடாக புஷ்கினின் கவிதைத் துளிகள் ஆங்காங்கே துள்ளிச் செல்கின்றன.

புஷ்கினைத் தமிழில் கதை சொல்ல வைத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் நா.தர்மராஜ். புதினத்தில் வரும் காட்சிகளை வாசகர்களின் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அழகிய ஓவியங்கள் இடம்பெற்றிருப்பது புதினத்தின் கூடுதல் சிறப்பு.

புஷ்கினின் கடைசியாக எழுதிய புதினமான கேப்டன் மகளைக் கட்டு குலையாமல் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறது, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.

- சா.ஜெயராஜ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.