தொழில்சார் பண்பாட்டில் தோணி
தமிழர்களின் வரலாற்று எழுதுகையானது கடல் கடந்து செல்லுகிற வணிகம், போர், சமயப் பரவல் என ஆழமாகக் காணப்படுகிறது. கடல் கடந்து பயணம் செய்யவும், படையெடுத்துச் செல்லவும் கலன்கள் முக்கியப் பங்காற்றின. அவற்றில் தோணிக்கென்று முக்கிய இடமுண்டு. சங்க காலத்திலும் தோணி பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. சமகாலத்திலும் தோணிகள் காணப்படுகின்றன. தோணி கட்டுமானத்தில் பண்டைய வணிக நகரமாக விளங்கிய தூத்துக்குடி முக்கிய இடம்பெறுகிறது. மரபுசார் தொழில்நுட்பத்துடன் தோணி கட்டுமானம் காணப்படுகிறது.
கடலில் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் வள்ளம் என்ற சிறு படகின் பிரம்மாண்டமான வடிவமாக இத்தோணியானது காட்சியளிக்கும். கீல் தார் அடிக்கப்பட்டுக் கருப்புநிறமாகக் காட்சியளிக்கும். தோணி இரு வகைகளில் காணப்படுகிறது. கப்பல் நடைத் தோணி தூத்துக்குடி துறைமுகத்தினுள் சரக்குகளை ஏற்றி இறக்கப் பயன்படுகிறது (ஆ. சிவசுப்பிரமணியன் 2007:31). கொழும்பு, அரபிக்கடலுக்குச் செல்லும் தோணிகளை கோஸ்டிங் தோணி என்றழைக்கின்றனர்.
முந்தைய கால கடல்வழி போக்குவரத்திற்கு மட்டுமல்லாமல் வணிகத்திற்கும் தோணி பயன்பட்டுள்ளது. 'தோணி' என்பது ஒரே மரத்தில் குடைந்து செய்யப்படும் ஒரு கலமாகும். தோணி என்னும் சொல் ‘தொள்' எனும் வினையடியிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். 'தொள்' என்பது தமிழில் குழித்து எடுப்பது என்னும் பொருள் தருகிறது. ‘தொள்' 'தொடு' என்னும் சொல்லாக மாறி அதிலிருந்து 'தோடு' 'தோண்டு' 'தோணி' என்னும் சொற்கள் உருவாகி இருக்கவேண்டும்.
தொள் -> தொடு -> தோடு -> தோண்டு -> தோணி
ஒரு மரத்திலிருந்து தோண்டி எடுக்கப்படும் கலம் ஆகையால் அது ‘தோணி' எனும் பதத்தைப் பெற்றுள்ளது. பெரிய மரக் கலங்களிலே கொண்டு வரப்பட்ட பொருட்கள் சிறிய தோணிகளில் ஏற்றப்பட்டுக் கரைக்குக் கொண்டு வரப்பட்ட செய்தி புறநானூற்றுப் பாடலில் (343:5,6) கூறப்பட்டுள்ளது. வேறொரு புறநானூற்றுப் பாடலில் (299,3) பகைவருடைய படையினை ஊடுருவிச் செல்லும் குதிரைக்குக் கடல்நீரைக் கிழித்துச் செல்லும் தோணி உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய்நடைப் புரவி,
கடல்மண்டு தோணியின்,
படைமுகம் போழ (புறம் - 299,3)
இப்பாடல் வரிகள் வாயிலாகத் ‘தோணி’ குதிரை வேகம் போன்று மிக வேகமாகச் செல்லும் என்பது புலப்படுகிறது. கடல் ஒலி அடங்கி இருத்தலால் பரதவர் கடலில் செலுத்தும் தோணிகளும் இயக்கமின்றிக் கடலினுள் சென்றதை அகநானூற்றுப் பாடல் (50:1) தெரிவிக்கின்றது.
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்;
செவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,.... (அகம்-50)
முற்காலத்தில் ‘தோணி’ பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பிற்கால இலக்கியங்களை நோக்கும்போது இவ்வுண்மை வெளிப்படுவதைக் காணலாம். பெருங்கதைப் பாடல் வரிகள் (1:37:264-267), 'தோணி', புனல் விளையாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ள உண்மை தெரியவருகிறது. முற்காலத்தில் தோணியைச் செலுத்த துடுப்பு பயன்படுத்தப்பட்டிருப்பதை, பெருங்கதை வரிகள் (1:36:174) வாயிலாகக் கண்டுகொள்ள முடிகிறது.
‘தோணி’ கடலில் மீன் பிடித்தலுக்கும் பயன்படுத்தப் பட்டிருப்பதைத் திருவிளையாடற்புராண வரிகள் (3:57:34) எடுத்து இயம்புகின்றன. இவ்வரிகள் வாயிலாகப் பெரிய சுறா மீன்கள் தனக்கு எதிரில் அகப்படும் தோணி, படகு போன்ற கலங்களைத் தாக்கியும் சரக்கைக் கொண்டு செல்லும் ‘சோங்கு' கலனை அழித்தும் பிற மீன்களைத் தனது கொம்பால் அடித்துக் கொன்றும் செல்வது தெரியவருகின்றது.
பகலிலும் இரவிலும் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் ஆற்றின் மறு கரைக்குச் சென்று தோணி என்னும் கலத்தைத் துறையில் இறுக்கமாகக் கட்டிப் போடும் செய்தியை முக்கூடற்பள்ளு (36) தெரிவிக்கின்றது.
இக்கரைக்கா லிற்பொருநை
அக்கரைக் காலின் - மழைக்
கேம மென்றுஞ் சாம்மென்றும்...... (மூக்கூடற்-36)
இச்சான்றுகளின் வாயிலாகத் ‘தோணி' எனும் கலம் பயணத்திற்கும் புனல் விளையாட்டிற்கும் மீன் பிடித்தலுக்கும் குறிப்பாக சுறா மீன் பிடித்தலுக்கும், நீரைக் கடக்கவும் பயன்படுத்தப்பட்டமை புலப்படுகிறது.
சடங்கியல் மரபில் தோணி
சடங்குகள் (RITUAL) என்பது சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பு ஆகும். சடங்குகள் செய்யப்படுவதன் நோக்கம் சமூக அனுமதி பெறுவதற்காகும். பொதுவாக, குறியீட்டுத் தன்மைகளைக் கொண்டவையான இச்செயல்பாடுகள் மனிதரின் அல்லது சமூகத்தின் பயன்கருதிச் செய்யப்படுகின்றன. மரங்கள் போன்றவற்றில் தீய ஆவிகள் இருக்கும். தீய ஆவிகளைப் பலியிட்டு வெளியேற்றுவதை தென்மாவட்டங்களில் 'தச்சுக்கழித்தல்' என அழைக்கின்றனர். உதாரணமாக, புதிதாக வீடு கட்டி குடியேறும் முன் இச்சடங்கினை செய்கின்றனர். தச்சுக்கழித்தல் செய்வதால் புதிய வீடு கட்டும் போது பயன்படுத்திய மரங்களில் உள்ள தீய சக்திகளை தச்சுக்கழித்தல் சடங்கு மூலம் வெளியேற்றலாம் என எண்ணுகின்றனர். தச்சுக்கழித்தல் சடங்கு மாற்றீட்டு சடங்கு (Rite of Transference) ஆகும். இச்சடங்கினைத் தச்சுத் தொழில் செய்பவர்கள் மேற்கொள்கின்றனர்.
தூத்துக்குடி நகரில் 150 டன் முதல் 300 டன் வரை சரக்குகளை ஏற்றிச்செல்லும் தோணிகள் செய்யப்படுகின்றன. இத்தோணிகளைக் கடலில் இறக்குவதற்கு முன்னர் நள்ளிரவில் தச்சுக்கழிக்கும் நிகழ்வு செய்யப்படுகிறது. வீடுகளைப் போலவே, இங்கும் தச்சுக்கழிக்கும் போது தச்சர்களைத் தவிரப் பிறரை அனுமதிப்பதில்லை.
“தோணியின் முன்பகுதி 'அணியம்' எனப்படும். இப்பகுதியில் பாய்மரம் ஒன்று இருக்கும். தோணியைக் கரையிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்தினுள் கொண்டு வந்த பிறகே பாய் மரத்தைத் தோணியில் நிலை நிறுத்துவர். பாய் மரத்தின் பருமனுக்கேற்றபடி துவாரம் ஒன்று தோணியின் மேல்தளத்திலும் அதன் அடித்தளத்திலும் அமைந்திருக்கும். இதன் உட்புறம்தான் பாய்மரம் பொருத்தப்படும்.
தோணியில் தச்சுக்கழித்தலின்போது, அணியப் பகுதியிலுள்ள இத்துவாரத்திற்கு நேர் எதிராக இலை விரித்து, புதிய வேட்டி கட்டப்பட்டுத் தேங்காயும் மாவிலையும் வைக்கப்பட்ட மூன்று அல்லது ஐந்து பூரண கும்பங்களையும் மஞ்சள் பிள்ளையாரையும் தெற்கு முகமாக வைப்பர். பாய்மரம் பொருத்தப்படும் துவாரத்தைத் தகரம் அல்லது இரும்புத் தகட்டால் மறைத்து, அதன் மேல் கற்களை அடுப்புக்கட்டிகளாக வைத்துச் சர்க்கரைப் பொங்கல் சமைப்பர்.”1
பூரண கும்பங்களுக்கும் பிள்ளையாருக்கும் எதிரில் உள்ள ஓர் இலையில் எண்ணெயில் தோய்க்கப்பட்ட மூன்று அல்லது ஐந்து பஞ்சுத்திரிகளும் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், காணிக்கைப் பணம் ஆகியன இடம்பெறும். ஒரு புதுச்சட்டியில் பருத்திக்கொட்டையும் நவதானியங்களும் கலந்துவைக்கப்படும்.
பூரண கும்பங்களுக்கும் பிள்ளையார்க்கும் பூசை முடிந்ததும், கூவும் பருவமடைந்த சேவலின் கால் நகத்தை அகலமான உளியால் கீறி, இரத்தம் வடியும் காலால் முதலில் அணியப் பகுதிலுள்ள அணியத்துக் கட்டை என்ற பகுதியினைத் தொடுவார்கள். பூசை முடிந்ததும் கூவும் பருவமடைந்த சேவலின் கால் நகத்தை அகலமான உளியால் கீறி, இரத்தம் வடியும் காலால் முதலில் அணியப் பகுதியிலுள்ள அணியத்துக் கட்டை என்ற பகுதியினைத் தொடுவார்கள். அடுத்து, பாய்மரம் நடுவதற்கான துவாரங்களுக்கு நேராகச் சேவலின் காலைக் காட்டி ஒன்றிரண்டு சொட்டு இரத்தம் அதில் விழும்படிச் செய்வார்கள். இதன் பிறகு தோணியிலிருந்து இறங்கித் தோணியின் அடிப்பகுதியிலுள்ள ஏரா என்ற உறுப்பினை இரத்தம் வடியும் சேவலின் காலால் தொடுவார்கள்.
இறுதியாக, தச்சுக்கழித்த தச்சர், வேலை எடுத்துக்கொண்டு முதலில் செல்வார். அவரைத் தொடர்ந்து, படையலாக வைக்கப்பட்ட பஞ்சுத்திரி, முட்டை ஆகியவற்றையும் நவதானியம் வைத்துள்ள புதிய சட்டியினையும் பொங்கல் பானையையும் புதிய பனையையும் புதிய பனை நார்ப் பெட்டியில் எடுத்துக்கொண்டு மற்ற தச்சர்கள் செல்வார்கள். அப்போது எதிரில் யாரும் வரக் கூடாது.
பஞ்சுத்திரியும் வெற்றிலைப் பாக்கும் பருத்திக் கொட்டை மற்றும் நவதானியம் வைத்துள்ள புதிய சட்டியினையும் பொங்கல் பானையையும் மற்ற தச்சர்கள் எடுத்துச் செல்வார்கள். அப்போது எதிரில் யாரும் வரக்கூடாது. பஞ்சுத்திரியும் வெற்றிலைப் பாக்கும் பருத்திக் கொட்டை மற்றும் நவதானியங்களும் நிரம்பிய புதிய சட்டியினையும், புதிய சுளவு (முறம்) ஒன்றில் வைத்து முச்சந்தியில் வைத்துவிடுவார்கள். முட்டைகளை ஒவ்வொன்றாகத் தலையைச் சுற்றி, செல்லும் வழியிலேயே தச்சுக்கழித்த தச்சர் எறிந்துவிடுவார். நன்றாகக் கால் கழுவிய பின்னரே தச்சர்கள் வீட்டிற்குள் செல்வார்கள்.
தூத்துக்குடி நகரில், தோணி மற்றும் வள்ளங்களின் உரிமையாளர்களாகவும் அவற்றில் பணிபுரிவர்களாகவும் கத்தோலிக்கக் கிறித்துவச் சமயத்தைப் பின்பற்றும் பரதவ இனத்தவரே மிகப்பெரும்பான்மையினராக உள்ளனர். ஆயினும், தச்சுக்கழித்தல் நிகழ்த்த தச்சர்களுக்கு அனுமதியளிப்பதுடன், அதற்கான செலவுத் தொகையினையும் அவர்கள் அளிக்கின்றனர். தச்சுக்கழித்த மறுநாள், தோணி அல்லது வள்ளம் கரையிலிருந்து கடலுக்குள் செலுத்தப்படும். அப்பொழுது கத்தோலிக்கக் கிறித்துவ சமயச் சார்பான ஆசிர்வாதங்களும் பிரார்த்தனைகளும் நிகழ்த்தப்படுகின்றன.
நம்பிக்கைகள்
மனித மனங்களில் நம்பிக்கைகள் பலவாறாக இருக்கின்றன. இந்நம்பிக்கைகள் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டு காணப்படுகின்றன. நெய்தல் நில மக்களின் வாழ்வாதாரமானது கடலும் கடல் சார்ந்துமே காணப்படுகிறது. கடல்சார் வாழ்வு மற்றும் பொருளாதாரத்திற்கும் தோணியானது தொழில் சார்ந்து மீனவர்களுடன் பயணப்படுவது ஆகும். எனவே தொழில் சார்ந்த நம்பிக்கைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. தோணியில் சமையலுக்கு முருங்கைக்காயைக் கொண்டுபோனால் பலத்தக் காற்றுடன் மழை பெய்யும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. தோணியில் துடைப்பத்தை வான் நோக்கி உயரக் கட்டினால் காற்றும் மழையும் நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வழக்காறுகளில் தோணி வழக்காறுகள் என்பது மக்கள் வாழ்யியலோடு இயைந்து காணப்படுவது ஆகும். ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு வழியாகக் கடத்தப்படுகிறது. தொல்காப்பியத்திலும் கூட வழக்காறுகள் பற்றிய பதிவுகள் அதிகம் காணப்படுகின்றன. மக்களின் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துகிறது. அவ்வகையில் தோணி பற்றிய பண்பாட்டுப் பதிவுகளை ஆவணப்படுத்துவதில் வழக்காறுகள் முக்கிய பங்காற்றுகின்றன.
”தண்டல் ஏறாத தோணியும் தோணியல்ல
அத்தக்கயிறு குத்தத் தெரியாதவன் தண்டலுமில்லை”2
எனும் பழமொழி இன்றளவும் நிலவுகிறது. இரு முனைகளில் உள்ள கயிற்றுப் பிரிகளைத் தனித்தனியாகப் பிரித்து பின்னர் அவைகளை ஒன்றுடன் ஒன்றாகத் திரித்துப் பிணைத்துவிடுவர். இவ்வாறு முடிச்சிடாமல் கயிறுகளை இணைத்தலைக் குத்துதல் என்பர். இந்த வேலை தெரியாதவன் 'நல்ல தண்டல் இல்லை' என்கின்றனர். சிவசுப்பிரமணியன் 2007:71)
"கானாப்பக்கமும் தண்டல் பக்கமும் போகாதே"
கானாக்கம்பு என்பது காற்றில் வேகமாக அசையும் பகுதியாகும். கானாகம்பு அருகில் நின்றால் உடலில் வலி உண்டாகும். அதே போல் தண்டல் பக்கம் நின்றால் ஏதேனும் வேலைக் கூறிக்கொண்டே இருப்பர். எனவே, இரு பக்கங்களும் செல்லக்கூடாது எனக் கூறுவதற்காவும் இதே போல் எண்ணற்ற பழமொழிகள் உள்ளன.
”தாமான் பக்கமும் தண்டல் பக்கமும் போகாதே"
”தண்டல் முந்தினா பண்டாரி”
"வாணிவாடும் சோனிவாடும் தெரியாதவன்"
“கடுதான் கல்லு வங்காளம் போனக் கதை”
போன்ற, தோணியைப் பற்றிய வழக்காறுகள், வாய்மொழிக் கதைகள் மக்களிடம் இன்றளவும் காணப்படுகின்றன.
நெய்தல் திணையில் தோணியின் பங்கு முக்கியமானது. சமகாலத்தில் தொழில்குடிகள் நவீனத்தின் தாக்குதலால் தங்களின் அடையாளங்கள் இழந்து காணப்பட்டாலும் தொழில்சார் புழங்குப் பொருள்களும் தொழில்முறைச் சடங்குகளும் இன்றும் காணப்படுகின்றன. மரபு மாறா பண்பாட்டுடன் தோணி திகழ்கிறது.
அடிக்குறிப்புகள்
1. ஆ.சிவசுப்பிரமணியன், மந்திரமும் சடங்குகளும் ப 156
2. சிவசுப்பிரமணியன். ஆ தோணி -71
பயன்பட்ட நூல்கள்
ஆ.சிவசுப்பிரமணியன், தோணி, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை.
ஆ.சிவசுப்பிரமணியன், மந்திரமும் சடங்குகளும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
பக்தவத்சல பாரதி, மானிடவியல் பேசுவோம், அடையாளம் பதிப்பகம்.
ஆ.மணவழகன், தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடு புழங்கு பொருள்களும், அய்யனார் பதிப்பகம்.
த. ரெஜித்குமார், புழங்கு பொருள் பண்பாடு, காவ்யா பதிப்பகம்.
சி.மகேஸ்வரன், பண்பாட்டு ஆய்வியல், பாரதி பதிப்பகம்.
காமராசு. இரா, புகையிலை வரலாறும் வழக்காறுகளும் உயிர் பதிப்பகம்.
- இரா. காமராசு, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
ரா. நந்தினி தேவி, முனைவர் பட்ட ஆய்வாளர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்