மேக நோய்

மேக நோய்களான கிரந்தி, வெட்டை நோய்கள் இந்தியாவிற்குள் போர்த்துக்கீசியர்கள் மூலம் நுழைந்தன. சரக சம்ஹிதா, கசுருத சம்ஹிதாவில் பல பாலின நோய்களைப் பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், மேக நோய்களைக் குறித்த குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை. 1550 இல் பாபு மிஷ்ரா என்பவர் பாவ பிரஸ்ஷா (Bhava Prasha) என்னும் நூலில் மேக நோயைப் பற்றி எழுதி, அதற்கு, பிரங்க ரோகா (Phiranga roga) எனப் பெயரிட்டிருக்கிறார். இதன் பின்பு ஜன்ஹெகன்வான் லின்கோசன் என்ற டச்சு யாத்ரீகர் 1596 இல் வெளிவந்த அவருடைய நூலில் மேக நோயைக் குறித்து விவரித்து எழுதி இந்தியாவில் முக்கியமாகக் கோவாவில் அதிகமாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

hosp army 600இராணுவத்தில் மேக நோய்

காலனி அரசின் செயற்கைப் பஞ்சம் காலராவை உருவாக்கியது என்றால், அவர்களின் காமப்பசி உண்டாக்கியது மேகநோய் என்ற சிஃபிலிஸ் எனும் பரங்கிப் புண். இது முறைகேடான பாலுறவின் காரணமாக ஏற்படுவது. இதனால் ஆண் உறுப்பு அல்லது பெண் உறுப்பில் கொப்புளங்களும், புண்களும், கட்டிகளும் தோன்றி மரண வேதனை ஏற்படுத்தும். மேக நோய் போலவே கோனாரியா என்ற வெட்டை நோயும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த அத்தனை நாடுகளிலும் ராணுவ வீரர்களால் பரவின.

1830களில் இங்கிலாந்தில் 3 லட்சத்து 68 ஆயிரம் வேசிகள் இருந்திருக்கின்றனர். இதில் லண்டன் நகரில் மட்டும் 29,572 - பெண்கள் பாலியல் தொழில் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து 1864 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொற்று நோய்த் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிச்சிறை போன்ற கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். ராணுவ வீரர்கள் முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது, கப்பல் பயணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்தச் சட்டம் அனைத்து பிரிட்டிஷ் காலனிகளிலும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இந்தியாவிற்கு ராணுவப் பணியாற்ற வந்த பிரிட்டிஷ் வீரர்களில் பெரும்பான்மையினர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் இங்கு வேசிகளுடனும், வேலைக்காரிகளில் அடிநிலைப் பெண்களுடனும் தொடர்ந்து பாலுறவு அனுபவித்து வந்தனர். அதன் காரணமாக அந்தப் பெண்களுக்கு மேக நோய் ஏற்பட்டது. சில வேளைகளில் அவர்கள் வழியாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் நோய்க் கூறுகள் இருந்தன.

தொற்றுநோய்த் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தவுடன் நோய் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் தனி மருத்துவமுகாம்களில் அடைக்கப்பட்டனர். பிரிட்டிஷ்காரர்களோடு தொடர்புள்ள வேசிகள் பிரிக்கப்பட்டு அவர்கள் வேறு எந்த இந்தியர்களுடனும் உடலுறவு கொள்ளக்கூடாது என்று மிரட்டப்பட்டனர். அவர்களுக்கு ஒரு குடியிருப்புப் பகுதி உருவாக்கப்பட்டது. அதுதான் சிவப்பு விளக்குப் பகுதி எனப்படும் லால் பஜார். பிரிட்டிஷ் ராணுவத்தினர் இடையே மேக நோய்த் தாக்கம் பற்றி ஆராய்ந்துள்ள மார்கரெட் . “பிரிட்டிஷ் ராணுவத்தின் முக்கியப் பிரச்சினை உணவும் உடலுறவுமே, உணவு அபரிமிதமாகக் கிடைத்தது. பெண்கள்....” அதை வீரர்கள் தாங்களே தேடிக்கொள்ள வேண்டும். ராணுவ முகாம்கள் இருந்த எல்லா ஊர்களிலும் சிவப்பு விளக்கு விடுதிகள் உருவாக்கப்பட்டன.

17, 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய இராணுவத்தினரின் முக்கியமான கேளிக்கை, மது அருந்துதலும், உள்நாட்டு மகளிரிடம் கலந்து உறவாடுவதும் ஆகும். ஏனெனில், இச்சிப்பாய்களுக்கு, குடும்பம் கிடையாது. ஆகவே, இவர்களுடன் கூடி உறவாடும் பொழுது மேக நோயைக் கொள்வதும் கொடுப்பதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

1869 ஆம் ஆண்டு, அரசு துப்புரவு கமிஷனரின் ஆறாவது ஆண்டு அறிக்கையின்படி உள்நாட்டு இராணுவ வீரர்களில் 1000க்கு 46 நபர்களுக்கு மேக நோய் இருந்திருக்கிறது. அதிலும் ஐரோப்பிய வீரர்கள் இந்திய வீரர்களைவிட 4 மடங்கு அதிகமாக மேகநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனை உள்நோயாளியாக 1881 இல் 1000க்கு 260 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு மேக நோய் அதிகம், ஏன்?

இதற்கு முக்கிய காரணம், திருமணமாகாத வீரர்கள் எண்ணிக்கை அதிகமானதும், வீரர்களின் சராசரி வயது குறைவானதும் ஆகும். எடுத்துக்காட்டாக, 1881 இல் திருமணமான வீரர்கள் 594 சதவீதம் மட்டுமே. இவர்களில் 43 சதவீதம் 25 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள். இந்நிலை பல ஆண்டுகள் கழித்தும் குறைந்தபாடில்லை.

1970 இல் இது 1000க்கு 899 நபர்கள் என்ற அளவில் இருந்தது. எடுத்துக்காட்டாக ஜெர்மனில் 1000க்கு 198 என மிகவும் கூடுதலாகவே இருந்தது. இதற்குக் காரணம் மற்ற நாட்டு ராணுவத்தினரைவிட நீண்ட நாட்கள் இராணுவத்தில் பணியாற்றுவதும் கூடுதலான ஓய்வு கிடைப்பதுமாகும். 1933 இல் இந்திய மருத்துவப் பணித்துறையின் கணக்குப்படி இந்தியாவில் 5.5 மில்லியன் பேர் கிரந்தி நோய்க்கும், 7.6 மில்லியன் பேர் மேக வெட்டை நோய்க்கும் உள்ளாகி இருந்தார்கள் அதில் மிகக் கூடுதலாக மதராசிலும், வங்காளத்திலும் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மேக நோய் மருத்துவமனை (Lock Hospital)

காலனி அரசு தன் நாட்டுப் படைவீரர்களை நம்பி இருந்தாலும், 1857 சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, நீதிக்குப் புறம்பானதாகவும், பிறப்பு இயல்புகளுக்கு மீறினதாகவும் இருந்தபோதிலும், தன் நாட்டுப் படைவீரர்களுக்கு எது தேவையோ அதைப் பூர்த்தி செய்ய முழுக்கவனம் செலுத்தியது.

இதன் விளைவாக “எங்கள் இளம் வீரர்கள்”, “எங்கள் இளைஞர்கள்” என்று செல்லமாக அழைக்கப்படும் இராணுவ வீரர்களின் காம இச்சைக்கு இந்திய மகளிரைப் பயன்படுத்த அரசு புதிய கொள்கைகளை வகுத்தது. பரத்தமைத் தொழில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இருந்தாலும், பிறகு பொதுவில் ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டு நடைபெற்றது.

இதன்படி இராணுவ முகாம் விலைமகளிர் மனை, மேக நோய் மருத்துவமனை ஆகியவை இரண்டு விதமாக ஐரோப்பிய இராணுவ வீரர்கள் இச்சையைத் தணித்து, அவர்களை மேக நோயிலிருந்து காப்பாற்ற உதவியது. இது ஏனெனில், பிரிட்டிஷ் வீரர்கள் ஒழுக்கமுறை தெரியாத மிகத் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாகப் பெரும்பாலும் இருப்பதால், அவர்களின் பாலுணர்வுக்குத் தீனி போட அரசு முழு கவனம் எடுத்துக் கொண்டது. இதே போல சில வீரர்கள் திருமணம் செய்து கொள்ளப் போதுமான வசதி இன்றி இருப்பதும் பரத்தமைக்கு வழிவகுத்தது.

இதற்கு மாறாக அரசு மேலதிகாரிகள் இந்திய மக்களின் தொடர்பை வெறுத்து, தங்கள் மனைவியுடனே வாழ்வை மேற்கொண்டனர். ஏனெனில் இராணுவ வீரர்களைப் போல உள்ளூர் பொது மகளிருடன் காம இச்சைக்குப் பலியானால் பொதுமக்கள் தங்களைத் தரக்குறைவாக எண்ணக்கூடும் என்றும், இத்துடன் தங்கள் தன்மானமும் பறந்துபோகும் என்றும் ஆளும் மேலதிகாரிகள் அஞ்சினர். (op.jaggi. p. 185)

ஒழுங்கீனம் ஒருபுறம், ஒழுக்கம் மறுபுறம்

இவ்வாறு காலனி அரசு இருவிதமான கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதாக இருந்தது. அதாவது ஒருபுறம், ஒழுங்கீனம், மற்றொருபுறம் ஒழுக்கம் என்பதாகும். ஒருபுறம் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் ஆண்மை வீரியத்திற்கு உதவியும் மறுபுறம் மேல்மட்டத்தில் உள்ளவர்களை உள்நாட்டு சமூகத்தினரிடமிருந்து சற்றுத் தள்ளியும் இருக்க வைத்து மக்களை ஆள வேண்டியதாய் இருந்தது. இது தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட தந்திர செயல்பாடாகும்.

மேலும் பரத்தமையை இராணுவத் தளங்களில் ஒழிப்பது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக இருந்தது. ஏனெனில், காம இச்சை கொண்ட வீரர்கள் கடைவீதிகளில் தங்கள் வலிமையைக் காட்டி சண்டையிட்டு இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவித்தனர். இத்துடன் ஓரினச் சேர்க்கை சமூகத்தில் ஒத்துக்கொள்ளப்படாததும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

கன்டோண்மென்ட்டில் வசிக்கும் விலைமகளிர், உரிமம் பெற்று அங்கு இருக்கும் துப்புரவுத் தொழிலாளி, தெருவைச் சுத்தம் செய்பவர்களைவிட உயர்ந்தவர் என்ற செருக்குடன் வாழ்ந்தனர். இதனைக் கண்ணுற்ற இராணுவ அலுவலர்கள் ஐரோப்பாவில் மணமுறிவிற்குப்பின் வாழும் மகளிரின் கேடான வாழ்வை ஒப்பிட்டு வியந்தனர். இந்த உரிமம் பெற்ற மகளிர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் மதிக்கப்பட்டனர். இதற்கு மாறாக இரவில் மறைவான இடங்களில் ஆண்களை வேட்டையாடும் பெண்கள் இராணுவத்தினரை மேக நோய்க்கு ஆளாக்கினர்.

இதனால் மறைமுக தாசித் தொழிலை ஒடுக்க, இவர்களை மரத்தில் கட்டி வைத்து அரசு சாட்டையால் அடித்தது. ஆனால் இதற்குக் காரணமாக இருந்த இராணுவத்தினருக்கு எந்தவிதமான தண்டனையோ அல்லது அவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த எந்தச் செயல்பாடுகளையோ மேற்கொள்ளவில்லை.

மேகநோய் மருத்துவமனை குறித்த மருத்துவக் கொள்கை 1805 முதல் 1897 ஆம் ஆண்டுவரை அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தது. ஏனெனில் ஒரு காலகட்டத்தில் மேக நோய் விகிதம் குறையாமல் இருந்தது. ஆகவே மருத்துவமனை தேவையற்ற பணச்செலவை உண்டாக்குகிறது என்று மூடப்பட்டது. இதே சமயம் நோயின் விகிதம் அதிகரிக்கும் நிலையில், கூடுதலான மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.

19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய இராணுவ வீரர்களுக்கு மேக நோய் 27.43 சதவீதம் காணப்பட்டது. ஒரு சோதனையாக 1830க்குப் பிறகு மேகநோய் மருத்துவமனைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக பிறகு இந்நோயின் சதவீதம் கூடுதலாகக் காணப்பட்டதால் மீண்டும் திறக்கப்பட்டது. இம்மருத்துவமனைகள் முதலில் குறிப்பிட்ட இடங்கள் என்றிருந்தது. பிறகு ஒரு கொள்கையாக இந்தியா முழுவதும் பல இடங்களில் திறக்கப்பட்டது. இச்செயல் 1834 இல் ரெவரண்ட் தாமஸ்காரல் என்பவர் மீண்டும் அரசு ஒழுக்கக்கேட்டிற்குத் துணை போகக்கூடாது என வற்புறுத்தினார்.

ஆனால், 1888 இல் இது ஒழுக்கக்கேட்டை விளைவிக்கிறது என்று நீதி போதகர்கள் கொடுத்த அழுத்தத்தினால் இம்மருத்துவமனைகள் மூடப்பட்டன. இம் மருத்துவமனைகள் மூடும்போது இராணுவ வட்டாரத்தில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் மேகநோய் பரவிக் கூடுதலாகக் காணப்பட்டதால் 1897 இல் மறுபடியும் இம்மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.

சிவப்பு விளக்குப் பகுதி - லால் பஜார்

இராணுவத் தளங்களில் இருந்த லால் பஜார் என்று அழைக்கப்படும் சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு சிறப்பு என்னவெனில், அங்கு வயதான பெண் அங்குள்ள விலைமகளிருக்கு மேக நோய் உள்ளதா, இல்லையா என்பதை அறிந்து தேவையானால் மேக நோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார். அல்லது அங்கிருந்து நீக்கிவிடுவார்.

18 ஆம் நூற்றாண்டு இறுதியில் மேக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிக் கட்டடங்கள் பல இடங்களில் இருந்தன. இதில் அனுமதிக்கப்பட்டவர்கள் வீரர்களானாலும் விலைமகளிரானாலும் குணமாகாதவரை வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கான மேலாண்மையை உயர்சாதிக்காரர்கள் பாதுகாப்பாகச், சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நியமிக்கப்பட்டனர்.

பொதுவாக இந்தியப் பெண்கள் விலைமகளிர் ஆவதற்கான காரணம் அவலம், இழப்பு அல்லது அவர்கள் கட்டாயப்படுத்தப்படும் நிலை ஆகும். சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களே 10 -20 சதவீதம் ராணுவத்திற்கான விலைமகளிரானார்கள்.

இதில் முக்கியமாக குழந்தையில் திருமணமாகி கணவனை இழந்தவர்கள் மற்றும் சிலர் பெற்றோரை இழந்து கவனிப்பாரற்று இருந்த அநாதைகள் மற்றும் பஞ்ச காலங்களில் கிராமப்புறங்களில் இருந்துவரும் பெண்கள். இது தவிர, சில நேரங்களில் பெண்கள் கடத்தப்பட்டும் இத்தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதுபோல கிழக்கு ஐரோப்பாவிலிருந்து செமிடிக் இனத்திற்கு எதிரான வெள்ளையின அகதிகளும் இத்தொழிலில் சில நகரங்களில் ஈடுபட்டனர். (Medicine and the Raj, p.108)

மேகநோய் மருத்துவமனையில் பெண் மருத்துவர் இல்லை

வங்கத்திலுள்ள பொது மகளிருக்கு நோய் வந்த காலங்களில் அரசால் நடத்தப்பட்ட மேக நோய் மருத்துவமனைகளில் ஆண் மருத்துவர்களால் சோதனை செய்யப்பட்டது. இந்நோயாளிகள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட இடங்கள் மிகவும் பராமரிக்கப்படாத, சிறைச்சாலையைவிட மோசமாக இருந்தன. இதனை மேம்படுத்த மதராசில் 1868இல் சில யோசனைகள் பரிந்துரைக்கப்பட்டன. அதன்படி பெண் செவிலியர்களைப் பணியமர்த்தக் கோரப்பட்டு அரசால் மறுக்கப்பட்டது. பின்னர் 1898 இல் ஆஸ்பிடல் அசிஸ்டண்டுகளைப் பணியமர்த்த பரிந்துரைக்கப்பட்டது.

இதுவும் மறுக்கப்பட்டது. அதன்பிறகு, டப்ரின் மருத்துவமனையிலிருந்து பெண் மருத்துவரை இதற்காகப் பணியமர்த்தக் கோரப்பட்ட நிலையில் அவர்களும் இதற்கு இசைவு தெரிவிக்க மறுத்து, அப்படி மருத்துவர்களை அனுப்பினால் மகளிருக்கான தனி மருத்துவமனை செயல்பாடுகள் தடைபடும் என்று காரணம் கூறினர். ஆக மேக நோய் மருத்துவமனைகள் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில் எந்தவித மாற்றமுமின்றி நடைபெற்று வந்தன. காலனி அரசு விலைமகளிரை நுண்மக்கடத்திகளாக நினைத்தார்களே தவிர, வீரர்களால் மேக நோயைப் பெற்றவர்கள் என்று எண்ணவில்லை.

ஆக ஆளவந்தவர்கள், இராணுவ வீரர்கள் தொற்றுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே பொது மகளிருக்கு மருத்துவம் செய்யப்பட்டது எனலாம். சில ஆயிரம் பெண்கள் இராணுவ வீரர்களின் இச்சைக்கு உட்பட வேண்டிய ஒழுக்கக்கேட்டை ஆராய அல்லது கவலைப்பட சுதேசி நிலப்பிரபுக்களோ அல்லது மேம்பட்ட மத்தியதர வர்க்கமோ எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அரசைப் பொறுத்தவரையில் இது வெறுப்பூட்டுகிற ஒரு செயல் எனினும், 

வஞ்சனையான செயல் அல்ல, மனிதகுல வரலாற்றின் படி பரத்தமை சட்ட ரீதியாக ஆண்டாண்டு காலமாக நடைபெறுவதே என நினைத்தது.

Pin It