13 ஆண்டுக்காலம் சிறைவாசம்பெற்ற சுதந்திரப்போராட்ட வீரரும், முதுபெரும் தோழரும், பத்திரிகை ஆசிரியருமான (லோகசக்தி, ஜனசக்தி, தீக்கதிர்) தோழர் ஐ.மாயாண்டிபாரதியை மதுரை காக்காதோப்பு, சுப்புராயர் தெருவிலுள்ள பாரதமாதா இல்லத்தில் சந்தித்து 'உங்கள் நூலகம்” மதுரை புத்தகக் கண்காட்சி சிறப்பிதழுக்காக நேர்முகம் கண்டோம். 93 வயது நிரம்பியபோதும் அடிதடிகளும் ஆவேசங்களும் வேதனைகளும் வீரத்தழும்புகளும் நிறைந்த பழைய தியாக வரலாற்றை ஆண்டு, மாதம், தேதிகூட மாறாமல் ஞாபகப்பிசகின்றி அவர் எடுத்துரைத்தது எம்மை வியப்பிலாழ்த்தியது.

நேர்காணல்: பா.ஆனந்தகுமார்

ஐயா, உங்களுடைய குடும்பப் பின்னணி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க.

ஐ.மா.பா.: நான் மதுரை நகரில் மேலமாசிவீதி எழுபதாம் எண் வீட்டில் 1917ஆம் ஆண்டு பிறந்தேன். என்னுடைய தகப்பனார் இருளப்பன், தாயார் தில்லையம்மாள். எங்கம்மாவுக்குப் பதிமூனு குழந்தைகள். நான் பதினோராவது ஆள்.

ஐயா உங்கள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்க.

ஐ.மா.பா.: நான் முதல்ல ஏட்டுப்பள்ளிக் கோடத்துல படிச்சேன். அப்புறம் வாய்பேசாதார் பள்ளிக்கோடத்தில் என்னிய சேர்த்தாங்க. ஒரு வருசத்துல வாய்பேச வந்திடுச்சு. பத்து வயது வரைக்கும் ஏட்டுப்பள்ளிக்கூடத்துல படிச்சேன். அதுக்கப்புறம் அமெரிக்கன் கல்லூரிக்குள்ள இருந்த ஏ.எம்.மிடில் ஸ்கூல் எட்டாவது வரைக்கும் படிச்சேன்.

ஐயா, எந்த ஆண்டில் அரசியலுக்கு வந்தீங்க?

1932-ஆம் ஆண்டு கள்ளுக்கட மறியல் நடந்துச்சு. அப்போ, இப்ப இருக்கிற பெரியாஸ்பத்திரி, ஒரே காடு; அந்தக் காட்டுக்குள்ளே ஒரு கள்ளுக்கடை இருந்துச்சு; மதிச்சியத்துல ஒரு கள்ளுக்கட இருந்துச்சு. சம்மட்டிபுரத்தில் ஒரு கள்ளுக்கடை இருந்தது. மதிச்சியம் கள்ளுக்கடை மறியலுக்கு மாணவர்களோட நான் போனேன். துப்பாக்கிச்சூடு நடந்துச்சு, நாலுபேரு செத்துப் போயிட்டாங்க. நான் தப்பிச்சுட்டேன்.

பதினஞ்சு வயதிலேயே அரசியலுக்கு வந்துட்டீங்க. உங்களை வழிநடத்திய தலைவர்கள் யார் யார்னு சொல்ல முடியுமா?

மதிச்சியம் கள்ளுக்கடை மறியல்ல என்.எம்.ஆர்.சுப்புராமன் என்னைப் பார்த்தாரு, ரொம்ப சந்தோசப்பட்டாரு, அப்போ அவருக்கு 35, 40 வயசிருக்கும். என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாரு; சௌராஷ்ட்ரா ஹை-ஸ்கூல்ல சேர்த்துவிட்டாரு. ஒன்பது-பத்தாவது படிச்சேன்.

அப்புறம் என்ன உங்க வாழ்க்கையிலே முக்கியமான நிகழ்ச்சி ஐயா?

1934இல் ஹரிஜன நிதி திரட்டுறதுக்காக காந்தி மதுரைக்கு வந்தாரு, அப்போ என்.எம்.ஆர்.சுப்புராமன் பங்களா இருக்குற அனுப்பானடி கண்மாய்க்கரை மணல்மேடு மைதானத்தில் மாலை ஐந்தரை மணிக்குப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. ஊரே திரண்டது. சௌராஷ்டிரா சமூகம் முழுமையாகக் கலந்துக்கிச்சு. காந்தியடிகள் ஓராள் மட்டுமெ நிக்கக்கூடிய அந்த மேடைக்கு மூங்கில் படியில ஏறினாரு, ஏறி, நாலு பக்கமும் கும்பிட்டாரு, நா அவரப் பார்த்தேன். தங்கம் மாதிரி ஜொலிச்சாரு. ஹிந்தியா, இங்கிலீஷா-எந்த மொழியில பேசினாருன்னு தெரியல. எனக்கு ஒன்னும் புரியல. கூட்டத்த விட்டுக் கீழே இறங்கினவுடனே சுத்தி இருந்த சௌராஷ்டரா பெண்கள், தங்களுடைய மூக்குத்தி, தோடு, செயின், மோதிரம் ஒன்றுவிடாம எல்லாத்தயும் கழற்றி காந்திகிட்ட நிதியாக் கொடுத்தாங்க. காந்தி, சுப்புராமன் வீட்டுக்குள்ளே போனாரு, ஒரே ஜன நெரிசல் வீட்டுக்குள்லே நானும் போனேன். வீட்டு மேடையிலே காந்தியும், சுப்புராமனும் ஒக்கார்ந்திருந்தாங்க. நெரிசல் தாங்காம நான் கத்திட்டேன். உடனே சுப்புராமன் என்னைப் பார்த்துப் பக்கத்துல கூப்பிட்டாரு. நா கிட்டே போனேன். பேசிக்கிட்டிருந்த காந்தியின் ரெண்டு கையையும் பிடிச்சு என் தலைமேல ஆசீர்வாதம் மாதிரி வச்சாரு. எனக்கு சொர்க்கத்துக்குப் போற மாதிரி இருந்துச்சு.

அந்தக் கால கட்டத்தில் மதுரையில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்ச்சி என்னங்கையா?

அந்தக் காலகட்டத்துல காங்கிரஸ்காரங்க சமூக சேவையில இறங்கினாங்க. மதுரையில ஹரிஜன சேவை நடந்தது. 1935ஆம் வருசம் ஜூலை மாசம் 9ஆம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலயப்பிரவேசம் நடந்தது. வைத்தியநாதய்யர் மேலச்சந்தப் பேட்டையிலுள்ள அவருடைய வீட்டிலேருந்து தனது பழைய காரிலே நாடார், ஹரிசனங்கள், கூட ரெண்டு ஐயரு எல்லோரையும் ஏத்திக்கிட்டு மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரத்துக்கு வந்தாரு. தெற்குக்கோபுர வாசலிலே நுழைஞ்சு பொற்றாமரக் கொளத்துக்குள்ள எறங்குனாங்க. கைகால கழுவுனாங்க. விபூதிப் புள்ளையாரக் கும்பிட்டாங்க. பிள்ளையாரு பெர்மிசன் குடுத்தவுடனே அம்மன் கோயிலுக்குள்ளே நுழைஞ்சாங்க. இவங்க வர்றதப் பார்த்தவுடனே பட்டர்கள் வெளியே ஓடிட்டாங்க. வைத்தியநாதய்யர் கூட்டிட்டு வந்த ஐயர்கள் தீபாராதனை காட்டினாங்க. எல்லாரும் சாமி கும்பிட்டாங்க. அப்புறமா அம்மன் சன்னிதிக்கு வந்தாங்க. எல்லாரும் கீழே விழுந்து கும்பிட்டாங்க. ஆலயப்பிரவேசம் முடிஞ்சதுன்னு வைத்தியநாதைய்யர் அறிவிச்சாரு. எல்லோரும் கைதட்டினாங்க.

தோழர், ஹரிஜன மக்கள் ஆலயப் பிரவேசத்துல கலந்துகிட்டதாச் சொன்னிங்க. அவங்கள எங்கிருந்து அழச்சிட்டு வந்தாங்க?

மதுரையிலே பெரியாஸ்பத்திரி பின்னாலிருக்கிற ஆழ்வார்புரத்தில் அரிசன மக்கள் இருந்தாங்க. அவங்க எடுப்பு கக்கூஸ்வேலை பார்க்கிறவங்க. அவங்கள்ல கொஞ்சபேர வைத்தியநாதய்யர் கோயிலுக்குள்ள கூட்டிட்டுப் போனாரு. அதுக்கு அப்புறம் அழகர் ஆத்துல எறங்குற அந்தப் பகுதியிலே ஒரு மண்டபத்தப் பிடிச்சு ஹரிஜன சேவாலயத்த முதல்ல ஏற்படுத்தினாங்க. அங்கு பலருக்குக் கல்வி கத்துக்கொடுத்தாங்க. இப்ப அது செனாய்நகர்ல இருக்கு. நெறைய புள்ளைங்க படிக்கிறாங்க.

ஆலயப்பிரவேசத்துக்கப்புறம் மதுரையிலே வேறென்ன முக்கிய நிகழ்ச்சிங்க ஐயா?

சீமைத்துணி பகிஷ்கரிப்பு. இப்ப இருக்கிற ஹாஜி மூசா ஜவுளிக்கடை, ஜவுளிக்கடல் அதுக்கு முன்னாடி, 'சீமைத்துணிய வாங்காதே! கதர்த்துணிய வாங்கு!” அப்படீன்னு காங்கிரஸ் தொண்டர்கள் கோசம் போட்டாங்க. துணி வாங்க வர்றவங்க கால்ல விழுந்து வணங்கிக் கேட்டாங்க. வைத்தியநாதய்யர் மனைவி கோதண்டம்மா, என்.எம்.ஆர்.சுப்புராமன் மனைவி பர்வதவர்தினி, லட்சுமிகாந்தம்மா அதுல கலந்துக்கிட்டாங்க. போலிஸ்காரங்க வந்தாங்க, அடிதடி நடந்தது. பொதுமக்கள் கல்ல விட்டெறிஞ்சாங்க.

இந்தப் போராட்டங்கல்ல எல்லாம் நீங்க எப்படிங்க ஐயா பங்கெடுத்துக்கிட்டீங்க?

ஆலயப்பிரவேசம், சீமைத்துணி பகிஷ்கரிப்பு இதெல்லாம் நடக்கும்போது நான் பள்ளிக்கூடத்துப் பையன். போராட்டம் எங்க நடந்தாலும் கறிவேப்பிலைக்காரத்தெரு, லஜபதி நிலையத்திலிருந்து மாணவர்களோட வேடிக்கை பார்க்கக் கிளம்பிடுவேன். ஹாஜிமூசா கடை முன்னாடி நடந்த அடிதடில காயம்பட்டவங்கள, நாங்க கயித்துக் கட்டில்ல தூக்கிப் போட்டு சந்து பொந்தெல்லாம் நொழஞ்சு கறிவேப்பிலைக்காரத் தெருவிலிருக்கிற கோழிக்குஞ்சு பயில்வான் குஸ்தி பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு போயிருவோம். அங்க, காயம்பட்டவங்களுக்குப் பெண்கள்தான் வயித்தியம் பார்ப்பாங்க. டாக்டர்கள் யாரும் வரமாட்டாங்க. இராமசுப்பிரமணியம் டாக்டர் மட்டும் தெரியாம வந்து உதவி செஞ்சுட்டுப் போவாரு.

ஐயா, காங்கிரஸ் இயக்கத்துக்குள்ள நீங்க எப்படிப் போனீங்க?

1938இல் இராஜபாளையத்தில் தமிழ் மாகாண காங்கிரஸ் மகாநாடு நடந்துச்சு. வரவேற்புக்கமிட்டித் தலைவர் குமாரசாமிராஜா, நானும் என் நண்பன் பிரம்மநாதனும் லஜபதி நிலையத்திலிருந்து 'திருப்பூர் குமரனுக்கு நினைவுச் சின்னம் எழுப்புக!” என்ற கோரிக்கை உள்ள 5000 நோட்டீசுகளை அடிச்சிட்டு மதுரையிலிருந்து இராஜபாளையத்துக்கு சைக்கிள்ல இரவுல கிளம்பினோம். பல இடங்கள்ல விழுந்து எழுந்திருச்சு சிராய்ப்புக் காயத்தோட காலையிலே இராஜபாளையம் போய்ச் சேர்ந்தோம். அங்க பெருங்கூட்டம். வத்தராப்பிலிருந்து விவசாயிகள் ஆயிரம் மாடுகளுடன் வந்திருந்தாங்க. இராஜாஜி, ஓமாந்தூர் இராமசாமிரெட்டியார், பக்தவத்சலம், எம்.ஜி.ரெங்கா, முத்துரங்கமுதலியார் இவங்கெல்லாம் பேசினாங்க. நாங்க கூட்டத்துல திருப்பூர் குமரன் நோட்டீஸ விநியோகம் பண்ணினோம். சென்னையிலேர்ந்து மாநாட்டுக்கு வந்த தேசிய இளைஞர்கள் ம.கி.திருவேங்கடம், கே.இராமநாதன், சக்திதாசன் சுப்பிரமணியன் ஆகியோர் என்னைப் பார்த்து, ''திருப்பூர் குமரனப் பற்றி நல்லா எழுதியிருக்கிங்க!”” என வாழ்த்தி, ''நாங்க சென்னையில பத்திரிகை ஆரம்பிக்கப்போறோம், நீங்க அங்க வாங்க!””னு அழைச்சாங்க. நான் உடனே கிளம்பிட்டேன்.

அப்போ, பள்ளிக்கூடப் படிப்பு என்னாச்சு தோழரே?

பள்ளிக்கூடம் என்ன, எல்லாப்பாடமும் பெயில்தான், தமிழ்தவிர எல்லாப் பாடமும் பெயில்தான். இராஜபாளையம் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு சென்னை கூவம் நதிக்கரையில உள்ள, கோமளீஸ்வரன் பேட்டையில ஒரு தகரக் கொட்டகையில என்னிய ஒக்கார வச்சாங்க. பகல்ல அது அச்சகம்; இரவில அது பள்ளி. அந்த எடத்துலதான் லோகசக்தி பத்திரிகை தொடங்கினது. இரவிலே அரிக்கேன் விளக்கு வெளிச்சத்துல அரசியல் கட்டுரைகள் எழுதினேன். லோகசக்தியில் 'போருக்குத் தயார்!” என ஒரு கட்டுரை எழுதினேன். வெள்ளைக்கார அரசாங்கம் 750 ரூபாய் அபராதம் போட்டிச்சு. பணம் கட்ட முடியல. பத்திரிகை நின்னுபோச்சு. 'பாரதசக்தி”ங்கிற பேர்ல இன்னொரு பத்திரிகை தொடங்கினோம். 1939-இல், 'கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்”னு ஒரு கட்டுரை எழுதினேன். கட்டபொம்மன் பத்தி வெளிவந்த முதல் கட்டுரை அதுதான். பிறகு பாரத சக்தியில சுபாஷ்சந்திரபோஸ், எம்.என்.ராய், மாசேதுங் ஆகியோரப் பற்றிக் கட்டுரைகள் எழுதினேன். 'பொதுவுடைமை ஏன் வேண்டும்?” என்று எழுதினேன். போலீஸ்காரங்க என்னிய தேடி வந்துட்டாங்க. கருப்புப் போலீசு, வெள்ளப் போலீசு எல்லாம் வந்துட்டாங்க. 'மாயாண்டி பாரதி எங்கே?”ன்னு கேட்டாங்க. 'கீதா கபேக்குப் போயிருக்கார். கொஞ்ச நேரங்கழிச்சு வருவாருனு சொன்னேன். கொஞ்சநேரம் காத்திருந்து பார்த்தாங்க. 'நாளைக்கு வாங்க’ அப்படின்னு சொல்லி அனுப்பிட்டேன். மறுநாள் வந்தாங்க. திரும்ப அதே மாதிரி சொன்னேன். இனிமே தப்பிக்க முடியாதுன்னு தலைமறைவாகி மதுரைக்கு வித்அவுட் டிரெயினில் வந்துட்டேன்.

காங்கிரஸ் இயக்கத்துல இருந்த நீங்க, எப்படி கம்யூனிஸ்ட் தலைவர்கள், கம்யூனிஸ்ட் தத்துவம் பத்தியெல்லாம் எழுதத் தொடங்குனீங்க?

காங்கிரஸ்குள்ளேயே சோஷலிஸத்து மேலே ஈடுபாடுள்ள தலைவர்கள் இருந்தாங்க. ஜவஹர்லால் நேரு சோஷலிஸத்த ஆதரிச்சாரு. “Socialism is only cure for all ill” னு சொன்னாரு. காங்கிரஸ் இளைஞர்களைத் தேடி சோஷலிஸ்ட் ஒரு பக்கம் வந்தாங்க. கம்யூனிஸ்ட் காரங்க வந்தாங்க. ரஷ்ய புரட்சி நடந்து அதனுடைய தாக்கம் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை பண்ணியிருந்தாங்க.

சென்னையிலிருந்து மதுரைக்கு வந்ததும் என்ன பண்ணுனீங்க?

1940இல் மதுரைக்கு வந்தேன். இரண்டாம் உலகப்போர் வந்தது. இராணுவத்திற்கு இளைஞர்களைச் சேர்த்தார்கள். நான் சாத்தூர் பக்கம் கிராமங்களில் கூட்டம் போட்டு “பட்டாளத்தில் சேராதே, பணம் காசு கொடுக்காதே” எனப் பேசினேன். தகவல் போலிசுக்குப் போனது. கன்னிசேரி கிராமத்தில் நான் பேசிக்கொண்டிருந்த போது என்னைக் கைது செய்து வச்சகாரப்பட்டி போலிஸ் ஸ்டேசனில் அடைத்தார்கள். அப்போது சிவகாசியில் டெப்யூட்டி கலெக்டராக இருந்த ஷி.நி. ஜாரி எனக்கு அரெஸ்ட் வாரண்ட் கொடுத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜெயிலில் 2 மாதம் போட்டு சிவகாசி கோர்ட்டில் என்னை ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி 6 மாதம் சிறைத்தண்டனையும் 50 ரூபாய் அபராதமும் விதித்தார். 50 ரூபாய் அபராதம் கட்டாவிட்டால் மேலும் 1 மாதம் சிறையெனத் தீர்ப்பும் சொன்னார். அபராதம் கட்ட சொத்து இருக்கிறதா? எனக் கேட்டார். நான் சொன்னேன் மதுரை ரெயில்வே ஸ்டேசனுக்கு எதிரிலே இருக்கிற மங்கம்மா சத்திரம் என் சொத்து. மீனாட்சியம்மன் கோவிலும் , திருமலை நாயக்கர் மகாலும் எங்க அப்பன் சொத்து. இருபுறமும் கடல் சூழ்ந்து தெற்கே கன்னியாகுமரியும் வடக்கே இமயமலை வரையும் இருக்கிற பாரதநாடு என் பாட்டன் சொத்து அப்படின்னு சொன்னேன். தேக ஆரோக்கியத்தோடு சிறையிலிருந்து மீண்டு தேசசேவை செய்ய ‘ஏ’ கிளாஸ் வேணுமின்னு கேட்டேன். சோத்துப்படி கேட்டேன். ஜட்ஜ் ‘சி’ கிளாஸ் ஜெயில், கேப்பைக் களின்னு ஆர்டர் போட்டார்.

பாரதநாடு எங்கள் பாட்டன் சொத்து இதில் வீண் பஞ்சாயத்திற்கு என்ன வேலைஎன்கிற நாமக்கல்லார் பாடல் உங்கள் பதிலுக்குள் இருக்குதே ஐயா!

ஆமா! அப்பவெல்லாம் என் மூளைக்குள்ளே பாரதிபாட்டுத்தான் இருந்தது. என் புத்தகத்தைப் படிச்சீங்கன்னா அதுலே இந்த மாதிரி பாட்டுகள் நிறைய வரும்.

ஐயா என்னென்ன புத்தகம் எழுதியிருக்கீங்க?

‘படுகளத்தில் பாரததேவி’ என்ற புத்தகத்தை 1939-இல் வெளியிட்டேன். அதற்கு விருதுபட்டி காமராசர் விற்பனை ஏஜென்ட். மதுரையிலே பழ.நெடுமாறன் சித்தப்பா பழனிக்குமார் பிள்ளை ஏஜெண்டு. பழனியிலே லட்சுமிபதிராஜா ஏஜெண்டு. லோகசக்தி பிரசுரமாக வந்த அந்தப் புத்தகத்தை NCBH 2ஆம் பதிப்பா 1992-இல் வெளியிட்டார்கள். இப்போது மூன்றாவது பதிப்பு வந்திருக்கிறது.

தோழர் உங்கள் சிறைவாசம் பற்றிச் சொல்லுங்க.

1940-இல் சிவகாசி கோர்ட்டிலே 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தார்கள். மதுரை ஜெயில், திருச்சி ஜெயில், வேலூர் ஜெயில், கோயமுத்தூர் ஜெயில் (1941) என மாற்றிக்கொண்டே இருந்தார்கள். கோயமுத்தூர் ஜெயிலில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜமத்கனி, வி.பி.சிந்தன், கே.ஏ.தாமோதரன் ஆகியோரைச் சந்தித்தேன்.

கே.ஏ.தாமோதரன் கேரளத்துத் தோழர்தானே?

ஆமா. மலையாளத்துக்காரர்தான். அருமையா மார்க்சிய வகுப்புகள் எடுப்பார். தமிழ்நாட்டுக் காரர்களுக்கு வகுப்பு எடுக்கத்தெரியாது. புள்ளி விபரங்கள் அறிக்கைகள் பற்றி பேசுவாங்க. 1941-இல் மார்ச் 21 ஆம் நாள் கோயமுத்தூர் ஜெயிலில் இருந்து விடுதலை பண்ணினாங்க. ரெயிலில் ஏத்தினாங்க. ஒவ்வொரு ஸ்டேசனிலேயும் நிறுத்தி சில தலைவர்களோட படத்தைக் காட்டிக் கேட்பாங்க. அப்போ மலையாளத்துத் தோழர்கள் கோயம்புத்தூர் பொன்னேரிப்பக்கம் தலைமறைவாக இருந்தாங்க. நான் யாரையும் தெரியாதுன்னுட்டேன். என்னை வீட்லே கொண்டாந்து விட்டுட்டு, ‘அம்மாகிட்டே வீட்டைவிட்டு வெளியே விடாதே, விட்டாப் பிடிச்சுக்கிடுவோம்’னு சொல்லிட்டுப் போனாங்க. அப்போ மதுரை ஹார்வி மில்லில் தொழிலாளர் போராட்டம். அதிலே கலந்தேன். திரும்பவும் சிறை, 1942-இல் ஜூலையில் விடுதலை. அப்போது ஆகஸ்ட் புரட்சி வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது. அதுலே கலந்துக்கிட்டேன். 1943, 1944-இல் ஜெயிலில் இருந்த போது காமராசர், ஆர்.வெங்கட்ராமன், முத்துராமலிங்கத்தேவர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் என்னைப் பிடிப்பார்கள், சிறையில் அடைப்பார்கள்; குற்றம் சாட்ட மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டால் விசாரணையில் நைசா பேசி விடுதலை ஆயிடுவேன். அப்ப பஸ் எல்லாம் கிடையாது. என்னைப் பிடித்து ரெயிலில் ஏத்தி வேற ஊரு சிறையிலே அடைப்பாங்க, “ஏறுனா ரயிலு இறங்கினா ஜெயிலு”-ங்கிறது என் வாழ்க்கை ஆச்சு.

தோழர், ‘ஜனசக்திஇதழோடு உங்களுக்கு எப்படித் தொடர்பு வந்தது?

ஐ.மா.பா. : 1944-இல் பி.ஆர். (பி.இராமமூர்த்தி) என்னை சென்னைக்கு வரச்சொல்லி ஜனசக்தியில் சேர்த்தார். அப்போ தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் ஜனசக்தி பொறுப்பில் இருந்தார். இப்போ ஈரோடு புத்தகக் கண்காட்சிக்குப் போனபோது அவரைப் பார்த்தேன். 100 வயசுக்கு மேலாயிடுச்சு. வாரப்பத்திரிகையாக வந்த ஜனசக்தியில் துணை ஆசிரியராக இருந்து கட்டுரைகள் எழுதினேன். செய்திகள் வெளியிட்டேன். 1945-இல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தை விடுதலை செய் என நமது கட்சி போராட்டம் நடத்தியது. நானும் கலந்துக்கிட்டேன். 1946இல் RIN – Royal Indian Navy கப்பற்படை அதுலே கலகம் வந்தது. பிரிட்டிஷ் கப்பற்படையில் இருந்த நமது வாலிபர்கள் வெள்ளையருக்குக் கீழே வேலை பார்க்கமாட்டோம் என அங்கு இருந்து கிளம்பி halt என ஜனசக்தி ஆபீசுலே வந்து நின்னாங்க. நான் மேலேயிருந்து பார்த்தேன். தலைவர் வேணுமின்னு கேட்டாங்க. அப்போ எம்.ஆர்.வெங்கட்ராமன், கல்யாண சுந்தரம் RIN-க்கு ஆதரவு தெரிவிச்சாங்க.

அடுத்தநாள் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி, கிமிஜிஹிசி சார்பில் கப்பல்படை வீரர்களுக்கு ஆதரவாக ஹர்த்தால் நடத்தப்பட்டது. கள் இறக்கும் தொழிலாளர்கள், அச்சகத் தொழிலாளர்கள், வர்த்தக தொழிலாளர்கள் என அனைவரும் சென்னையில் திரண்டனர். சென்னை நகரில் கடையடைப்பு நடந்தது. ஜனசக்தியில் வேலை பார்த்த 15, 16 வயது பையன்கள் எல்லாம் ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கினார்கள். ஊர்வலம் ரிப்பன் பில்டிங்கில் தொடங்கி மெரினாபீச்சில் முடிவடைந்து. பீச் பொதுக்கூட்டத்தில் டி.ஆர். கணேசன், கே.எஸ்.கே.ஐயங்கார், ஜீவா எல்லாம் பேசுனாங்க, ஜீவா ஆவேசமான பேச்சு. அரைக்கால் டவுசர் ஸ்கவுட் சர்ட் போட்டிருப்பார். அதுதான் அன்றைய தலைவர்கள் ஆடை. கையை ஓங்கி உயர்த்தி “ஏகாதிபத்தியத்தை ஒழிக்க வேண்டும் புரட்சி ஓங்குக” என்று பேசும் போது கூட்டமே பயந்து நிற்கும்.

தோழர் ஜீவாவை ஜனசக்தியிலேதான் சந்தித்தீர்களா?

இல்ல, இல்ல, அதுக்கு முன்னாடியே நானும் அவரும் மதுரையிலே வாலிபர் சங்கங்கள் நடத்துற கூட்டத்திலே ஒன்னா பேசியிருக்கோம். நான் காந்தியைப் பத்திப் பேசுவேன். அவர் பொதுவுடைமையைப் பத்திப் பேசுவார். நான் “காந்தியைப் போல் தலைவர் கிட்டுமோ” என பாட்டெல்லாம் பாடுவேன். ஜீவா பிற்போக்கு, பிற்போக்கு என்பார். பிறகு என்னை ஜனசக்தியிலே பார்த்தபோது ‘என்கூட சண்டை போட்ட ஆளுயில்ல இவன். இவனை இங்க ஏன் கொண்டாந்தீங்க’ன்னு சி.எஸ்.கிட்டே கேட்டார். பி.ஆர். ‘எல்லாம் கரெக்ட் பண்ணிட்டேன்’னு சொன்னார்.

இந்தியச் சுதந்திரம் அடைந்தபோது என்ன செய்தீர்கள்?

1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது ஜனசக்தி ஆபிசுலே கொடிஏத்தி பெரிசா கொண்டாடுனோம். கே.எம்.கல்யாணம், எம்.ஆர்.வி. பாலசந்திரமேனன் எல்லோரும் கலந்துக்கிட்டாங்க. இப்ப கம்யூனிஸ்டை சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று சொல்கிறார்கள்

தந்தை பெரியாரைச் சந்தித்திருக்கிறீர்களா?

1932-இல் பெரியார் ரஷ்யா சென்று திரும்பிய பிறகு மதுரைக்கு வந்தார். சாந்தி தியேட்டரில், அப்போ சின்ன தகரக் கொட்டகை. திராவிடர் கழகத்தினர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யா நல்ல நாடு, இந்திய சுதந்திரத்திற்கு ஆதரவு தரும் நாடு. ஆகவே ரஷ்யாவுக்குப் போயிட்டு வந்த பேச்சைக் கேட்போமென்று ‘லஜபதி நிலைய’ இளைஞர்கள் திரண்டு கூட்டத்திற்குப் போனோம். பெரியார் ரஷியாவில் உள்ள பெண்கள் முன்னேற்றம், மக்கள் சுதந்திரம், வேலையில்லாத் திண்டாட்ட ஒழிப்பு பற்றியெல்லாம் பேசினார். தொழில் வளர்ச்சி பற்றிப் பேசும்போது, ‘ரஷியாவில் உள்ள மில்லில் 1 நிமிடத்தில் 1 லட்சம் கஜம் துணி நெய்யப்படுகிறது. இங்கே காந்தி கைராட்டையை வைத்து நூல் நூற்கச் சொல்றார். பைத்தியக்காரர்’ என்றார். உடனே எங்களுக்குக் கோபம் வந்தது உட்கார்ந்திருந்த பெஞ்சுகளை தூக்கிப்போட்டு உடைச்சோம், ‘பெரியார் ஒழிக! ஈ.வெ.ரா. ஒழிக! ஈரோட்டு நாயக்கன் ஒழிக!’ என கோசம் போட்டோம். அப்போ கரண்ட் கிடையாது. பெட்ரோமாக்ஸ் லைட்தான். அதையும் உடைச்சோம்.

மாற்று வழியில் பெரியாரை அழைத்துக்கொண்டு மேலமாசி வீதிக்கு வந்துவிட்டார்கள். நான் முன்னாடியே போய் பெரியார் கார்கிட்டே போய் நின்னுக்கிட்டேன். பெரியார் காரிலே ஏறினதும், முன்னாடி போய் ஏன் காந்தியைத் திட்டினே? நீயெல்லாம் பெரிய மனுஷனா?’ என்று கேட்டேன். பெரியாருக்குக் கோபம் வந்தது “காந்தி ஒங்கொப்பனாடான்னு” கேட்டார். ‘ஆமா! ஆமா!’ என்றேன். கல்லெறி விழுந்துருமென்று கார் வேகமாய் கிளம்பிவிட்டது. ரொம்ப வருஷசத்துக்கு அப்புறம் 1946இல் நான் ஜனசக்தியில் இருந்தபோது ஓட்டல் தொழிலாளர் சங்கத்திற்குப் போனோம். அப்போது கீதாகபேக்கு அடுத்த சந்திலே போனபோது இதுதான் பெரியார் வீடுன்னு காட்டுனாங்க. நான் பெரியாரைப் போய் பார்க்கலாம்னேன். எல்லாரும் உயர ஏறி வீட்டுக்குள்ளே போனோம். பெரியார் சேரில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்தவுடன் ‘யார் நீங்க?’ என்றார். ‘உங்களைப் பார்க்க வந்தோமின்னு சொன்னேன். எதுக்கு வந்தீங்கன்னு கேட்டார். மன்னிப்பு கேட்கணுமின்னேன். எதுக்கு மன்னிப்பு என்றார். நீங்க ரஷியா போயிட்டு வந்து மதுரைக் கூட்டத்திலே வந்து பேசினபோது கலாட்டா பண்ணினதுக்குனேன். கல்லைத் தூக்கிப் போட்ட காங்கிரஸ் காலியில் ஒருத்தனா நீ? என்றார். ஆமா நீங்க சொன்னதுதான் சரி. நாட்டிலே நிறைய மில்கள் வரவேண்டுமென்றேன். பிறகு எல்லோருக்கும் டீ வாங்கிக் கொடுத்தார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு உங்கள் அரசியல் வாழ்க்கை எப்படி?

1948-இல் அடக்குமுறை. வெள்ளைக்காரன் இன்னும் இருக்கான். சொத்து அவங்கிட்டதான் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் சுரண்டலை எதிர்த்துப் போராடுனாங்க. காங்கிரஸ் அரசாங்கம் கம்யூனிஸ்ட்கள் மீது அடக்கு முறையை ஏவிவிட்டது. பல தோழர்கள் தலைமறைவானார்கள். கோவை ஜெயிலில் மாரிமணவாளனைச் சுட்டார்கள். தஞ்சையில் இரணியன், சிவராமனைச் சுட்டார்கள். சேலம் ஜெயிலில் புகுந்து 22 பேரைச் சுட்டார்கள். நாங்களும் கடுமையாப் போராடினோம். என்னைக் கைது பண்ணி தூத்துக்குடி ஜெயிலில் போட்டார்கள். அங்கே பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன் பொன்னுவோடு சேர்ந்தேன். தலைமறைவானோம். வேறு வேலைகளில் ஈடுபட்டோம்.

என்ன தோழர் செய்தீர்கள்?

அதான் தண்டவாளத்தைப் பிய்த்துப் போட்டோம். தூத்துக்குடி மீளவிட்டான்கிட்டே. கூட்ஸ் வண்டி 25 பெட்டியும் 2 இஞ்சினும் விழுந்திருச்சு. நாங்க காட்டுக்குள் ஓடிநின்று “புரட்சி ஓங்குக! ஏகாதிபத்தியம் ஒழிக!”-ன்னு கோசம் போட்டோம். காலையிலே தூத்துக்குடியிலிருந்து ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்த்தது. அப்புறம் எங்களைக் கைது பண்ணிட்டாங்க.

1950-இல் நடந்த நெல்லைச் சதி வழக்குதானே, தோழர்?

ஆமா 100 பேர் மேலே சதிவழக்கு போடப்பட்டது. அதிலே 11 பேருக்கு ஆயுள் தண்டனை. பொன்னு, கிருஷ்ணகோனார், பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன், அழகுமுத்து, வேலாயுதம், அம்பை கே.பி.எஸ்.மணி, நல்லகண்ணு, வேலுசாமித் தோழர், ப.மாணிக்கம், ஐ.மாயாண்டிபாரதி, மதுரை ஜெயிலில் 4 வருஷம் இருந்தேன்.

மதுரை ஜெயிலில் இருந்தபோதுதானே தோழர், பாலுவைத் தூக்கில் போட்டார்கள். அவர் எந்த வழக்கில் இருந்தார்?

அது மதுரை கேஸ். சப்இன்ஸ்பெக்டர் கொலை கேஸ். பாலு ரிசர்வ் போலிசா இருந்தவர். கம்யூனிஸ்ட் அனுதாபியாக இருந்தார். அது பொறுக்காத அரசாங்கம் கொலை கேசில் ஜோடித்து அவரை மாட்டிவிட்டு தூக்கில் போட்டுக் கொன்றது. அவரைப் பற்றி ‘தூக்குமேடைத் தியாகி பாலுவின் இறுதி நாட்கள்’ என்று ஒரு புத்தகம் போட்டிருக்கேன்.

பாலுவைப் பற்றியும் உங்களைப் பற்றியும் ஆர்.எஸ்.ஜேக்கப் மரணவாயில்நாவலில் பதிவு பண்ணியிருக்கிறாரே. இப்ப அவருடன் தொடர்பு இருக்கிறதா?

ஆர்.எஸ்.ஜேக்கப் நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்ட 100 பேரில் ஒருத்தர். எங்கூட ஜெயிலிலே இருந்தவரு. போன வருஷம் கூட என்னை வீட்டில் வந்து பார்த்தார்.

நெல்லைச் சதிவழக்கிலிருந்து விடுதலையான பிறகு என்ன செய்தீர்கள்?

1956 இல் அமெரிக்க அரசாங்கம், ‘ரோசன் பார்க்’ தம்பதிகளை ரஷியாவிற்கு உளவு சொன்னதாக மின்சார நாற்காலியில் வைத்துக் கொன்றுபோட்டது. அதைக் கண்டித்து அமெரிக்கன் எம்பஸி முன்னாலே A.S.K.ஐயங்கார், கே.முருகேசன் தலைமையில் போராட்டம் நடத்தினோம். எங்களைக் கைது பண்ணி ஜெயிலில் போட்டார்கள். R.S.நாதன், நான், R.K.கண்ணன் 3 மாதம் சிறையில் இருந்தோம். 1962-இல் இந்திய சீன எல்லைப்போர். சீனாவோடு சண்டை போடக்கூடாது. சமாதானமா போகணுமி’ன்னு குரல் கொடுத்தோம். ‘சீனாக்காரன் கையாளுன்னு ஜெயிலில் போட்டாங்க. 1964-இல் பார்ட்டி பிளவு பட்டது. நான் பி.ஆரோடு நெருக்கமாக இருந்ததால் ஜனசக்தியிலிருந்து நீக்கினார்கள். CPM-க்குப் போகவில்லை. வீட்டில் தனியாக இருந்தேன். 1965-இல் தீக்கதிருக்கு அழைத்தார்கள். துணை ஆசிரியராகப் போனேன். ஜனசக்தியில் ‘கண்ணோட்டம்’(பத்தி) எழுதினது போல் ‘தீக்கதிரில்’ ‘வாழும் கேடயம்’ எழுதினேன். 1968இல் கீழவெண்மணி கண்டனப் போராட்டம். 144 தடையை மீறினோம். நாகப்பட்டினம் கோர்ட்டில் ஜெயில் என்று தீர்ப்பானது. 1991-இலிருந்து கட்சித் தொடர்பு இல்லை.

தோழர் இப்ப என்ன வேலை செய்றீங்க?

அரசு என்றால் என்ன? லெனின் புத்தகத்தை எல்லோருக்கும் புரியறமாதிரி எளிமையா எழுதியிருக்கேன். நல்லகண்ணு தோழர்கிட்டே படிக்கக் கொடுத்தேன். தோழர் எஸ்.கணேசன் அதைப் புத்தகமாப் போடப்போறார்.

குடும்ப வாழ்க்கை பற்றிச் சொல்லுங்களேன்.

இதோ இருக்காங்களே, என் மனைவி பொன்னம்மாள். இனிமேல் ஜெயில் இருக்காதுன்னு இந்தம்மாவைக் கல்யாணம் பண்ணினேன். குழந்தைகள் இல்லை. தோழர் எஸ்.கணேசனின் உறவுக்காரப் பையன் செந்தில் பாண்டியன் ஒத்தாசை பண்ணுகிறார். ஒரு வீட்டை அண்ணனுக்குக் கொடுத்தேன்; இன்னொரு வீட்டை வித்து தங்கம் தியேட்டருக்குப் பின்னாடி இருந்த கிணற்றை மூடி இந்த வீட்டைக் கட்டியிருக்கேன். தியாகி பென்ஷன் வருது; பத்திரிகையாளர் பென்ஷன் வருது. அதை வச்சி ஓட்டிக்கிட்டு இருக்கோம்.

இடதுசாரி புத்தக நிறுவனங்களோடு உங்களுடைய தொடர்பு எப்படி?

மார்க்சிய அறிவு இல்லாமல் கம்யூனிஸ்ட் இயக்கம் இருக்கமுடியாது. மார்க்சிய அறிவைக் கொடுக்கும் கருவூலங்களான புத்தகங்களை என்.சி.பி.எச். நிறுவனம் விற்றது. மதுரையில் எஸ்.ஆர்.கே.தோழர் இருந்தார். சென்னையில் இராதாகிருஷ்ணமூர்த்தி இருந்தார். என்.சி.பி.எச். இல்லையென்றால் தமிழ்நாட்டில் மார்க்சிய அறிவு இல்லை.

பொதுவுடமையின் மீது உங்களுக்கு இப்போதும் நம்பிக்கை இருக்கிறதா?

மனித குல லட்சியம், மகரிஷிகள் கண்ட கனவு, பொதுவுடமை தான். பொதுவுடமையில்தான் ஆளும் கட்சி இல்லை; எதிர்க்கட்சி இல்லை. சிறுபான்மை இல்லை; பெரும்பான்மை இல்லை. நசுக்கல் இல்லை; அவமானம் இல்லை. சுரண்டல் இல்லை. எல்லோரும் சகோதரர்கள்! நண்பர்கள்! தோழர்கள்.

மதுரையில் இப்போது புத்தகக் கண்காட்சி நடக்கிறது. உங்கள் நூலகம் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

ஜனங்கள் படிக்க வேண்டும். பார்க்கும் அறிவு பத்தாது. ஜோப்பில் காசு இருந்தாலும் புத்தகம் வாங்க மாட்டார்கள். தலைப்பை மட்டும் பார்ப்பார்கள். ஓசிப்படிப்புகூடாது. காசு போடாமல் சாப்பிடமுடியாது. சாப்பிடுவது வயிற்றுக்கு. படிப்பது மூளைக்கு, புத்தகம் படிப்பதன் மூலம் நிறைய அனுபவம் கிடைக்கும். தப்பாகப் போக மாட்டோம். சரியாக நடக்கப் புத்தகம் படிக்கணும். எல்லோரும் புத்தகம் படியுங்கள்!

(உங்கள் நூலகம் செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)

Pin It