bkrvwதிருவிழாக் காலங்களில் வந்து சேரும் விருந்தினர்கள் வீட்டிலிருக்கும் ஒரு அக்காவையோ, அத்தையையோ, பெரியம்மாவையோ, கொழுந்தியையோ பார்த்து ”அதே அரிசி, அதே மாவு, அதே வெல்லம். ஆனா நீ புடிக்கிற கொழுக்கட்டையில மட்டும் எப்படித்தான் இந்த இனிப்பு வந்து சேருதோ” என்று வியந்து பாராட்டி கண் மலர்வதைப் பார்க்காதவர்களே இருக்கமுடியாது. பல சமயங்களில் நாமே கூட அப்படி ஏதேனும் ஒரு வீட்டில் கண்மலர்ந்து நின்றிருப்போம்.

அதற்கு நிகராக வண்ணதாசன் சிறுகதைகள், அவற்றைப் படிக்கும் வாசகர்களை ஒவ்வொரு தருணத்திலும் கண்மலர்ந்து நிற்கவைக்கின்றன.

எல்லோரையும் சுற்றி நிற்கும் அதே மனிதர்களே வண்ணதாசனையும் சுற்றி நிற்கிறார்கள். அதே வாழ்க்கை. அதே வருத்தம். அதே மகிழ்ச்சி. ஆயினும் அவருடைய கதைத் தருணங்களிலிருந்து பாய்ந்தெழும் நொடிநேர அரைவட்டத்தின் வீச்சு அவருடைய சிறுகதைகளை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது.

மிகமிக நுட்பமாக நிகழும் இந்தத் தளமாற்றமே அவருடைய சிறுகதைகளின் சிறப்பம்சம். அவருடைய முதல் தொகுப்பான கலைக்கமுடியாத ஒப்பனைகள் முதல் எழுபத்தைந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வெளியீடாக பிரசுரமாகியுள்ள தீராநதி வரை அந்தச் சிறப்பம்சம் வைரமென ஒளிவீசுகிறது.

தொகுப்பில் முதல் படைப்பான வண்டு சிறுகதை­யிலேயே இந்தத் தளமாற்றத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறார் வண்ணதாசன். சாமியாருக்கும் சிறுவனுக்கும் இடையில் ஒரு விளையாட்டுப் பேச்சாக மாம்பழத்தில் இருக்கிற வண்டு பற்றிய உரையாடல் தொடங்குகிறது. “எந்தப் பழத்துல வண்டு இருக்கும்னு சொல்லு” என்கிற சாமியாரின் கேள்விக்கு சிறுவன் பதில் சொல்லவில்லை.

பழம் துண்டுபடும் விதத்தைக் கவனிப்பதிலேயே அவன் மனம் குவிந்திருக்கிறது. எதிர்பாராத விதமாக அந்தப் பழத்தின் கொட்டையிலிருந்து முதலில் கரித்தூள்போல வெளிப்படும் வண்டு சில கணங்களிலேயே முழு உருவத்துடன் பறந்துபோய் விடுகிறது. எதிர்பாராத விதமாக அதே கணத்தில் சாமியார் நிலைகுலைந்து விழுகிறார்.

அவர் உயிர் பிரிந்துவிடுகிறது. அதுவரை, இரு பாத்திரங்களிடையில் நிகழும் உரையாடலின் மையமாக இருந்த வண்டு திடீரென இன்னொரு புதுப்பரிமாணம் கொள்கிறது. உடலைவிட்டுப் பிரியும் உயிரென்னும் வண்டாக அக்கணத்தில் அது மாறிவிடுகிறது.

வண்ணதாசனின் சிறுகதை இத்தகு தளமாற்றத்துடன் முடிவடைவதில்லை. அச்சிறுகதைக்கு அதையும் கடந்து செல்லக்கூடிய ஆற்றலுள்ளது. அதுவே வண்ணதாசனின் கலை. சூம்பிய கையை மடக்கிக்கொண்டு ஒற்றைக்கையால் பெருக்கும் அம்மாப்பொண்ணு ”மாடசாமி மகன்தான நீ? அவன மாதிரியே இருக்கே நீ” என்று தொடங்கும் உரையாடலை ஒரு திறப்பாக எடுத்துக்கொள்ள முடியும்.

மகன் முகத்தில் அப்பாவின் சாயலைக் கண்டு சொல்பவளின் மனத்தில் அப்பாவின் உருவத்துக்கும் இடமளித்திருக்காது என்று சொல்லமுடியுமா என்ன? ”கிளிமூக்கு காய்ப்பு முடிஞ்சிபோச்சி. தெக்கு கடைசியில நாலு பழம் எடுத்து வச்சிருக்கேன். போய் எடுத்துக்கோ” என்று பரிவோடு சொல்லும் உரையாடலும் இன்னொரு திறப்பு.

”உனக்கு போக மிச்சத்தை சாமியார்கிட்ட கொடுத்திடு இவனே” என்று சொல்லியனுப்பும் அதே அம்மாப்பொண்ணுவின் இன்னொரு உரையாடலை மற்றொரு திறப்பாக எடுத்துக் கொள்ளலாம். அச்சொல்லில் ஆதரவில்லாமல் கோவிலை அடைக்கலமாக நினைத்துவந்து தங்கியிருக்கும் சாமியாரின் பசியையும் ஒரு பொருட்டாக நினைக்கும் தாய்மையின் சுவடுகளை இல்லையென்று சொல்லமுடியுமா என்ன? விருப்பமாகவும் இரக்கமாகவும் பாசமாகவும் கனிவாகவும் தாய்மையாகவும் வடிவெடுத்து மனத்தில் நிறைந்திருப்பவை அனைத்தும் ஒவ்வொரு வகையான வண்டு அல்லவா?

யாரும் யாரிடமும் சொல்லாத சொற்களே கதைகளென விரிவடைகின்றன. சிறுவனிடம் சாமியார் ஒரு புதிர்போல “எல்லாத்துக்கும் எல்லாமும் தெரியும். ஆனால் யாருமே சொல்றது இல்ல” என்று சொல்லும் சொற்கள், அவை சொல்லப்படும் கணத்தில் எடையற்ற ஒரு வேடிக்கைப் பேச்சு போலவும், கதையைப் படித்துமுடிக்கும் கணத்தில் மொத்தக்கதையின் எடையையும் தாங்கி நிற்கும் பீடம் போலவும் காட்சியளிக்கிறது.

அவை ஏன் சொல்லப்படுவதில்லை என்பதை ஒரு கேள்வியாக எடுத்துக்கொண்டால், அவையனைத்தும் தன்னை நிறைத்துக்கொள்வதற்காக எழும் உணர்வுகளே தவிர ஒருபோதும் தன்னை அடையாளத்துடன் நிறுவிக்கொள்வதற்காக அல்ல என்பதே அதற்கான பதில். மாம்பழத்து வண்டு என்னும் தளத்திலிருந்து உயிரென்னும் வண்டு என்னும் தளத்தைத் தொட்டு பிறகு உணர்வென்னும் வண்டாக ரீங்காரமிட்டு மற்றொரு தளத்தை நோக்கிப் பறந்துபோகிறது.

சுத்தம் சிறுகதையில் இந்தத் தளமாற்றம் வேறொரு விதத்தில் நிகழ்ந்துவிடுகிறது. வீரபத்திரனும் சைலப்பனும் கூடப் பிறந்த சகோதரர்கள். அப்பா இறக்கும் முன்பு எழுதிவைத்துவிட்டுச் சென்ற சொத்து தொடர்பான நிகழ்ச்சிகளால் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தையே இல்லை. மரணப்படுக்கையில் இருக்கும் வீரபத்திரனைப் பார்க்கச் செல்லும் ராமையா தாத்தாவிடம் நிகழ்ந்துவிட்ட தவற்றுக்கு மன்னிப்பு கேட்பதற்காக தம்பியை அழைத்துவரும் பொறுப்பை ஒப்படைக்கிறான் வீரபத்திரன்.

தம்பியை அழைக்கவந்த இடத்தில் வேறொரு விதமான வாக்குவாதம் தொடங்கி உச்சத்துக்குச் சென்று கீழிறங்குகிறது. இறுதியாக தம்பியின் மனைவி மயிலம்மை பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்து ஒதுக்கிவிட்டு “எல்லாத்தயும் தொடச்சி போட்டுட்டா சுத்தமாயிடும்” என்று அறிவிக்கிறாள்.

ஒரு காலத்தில் சொற்களால் கறைபடுத்தியவன் தன் இறுதிக்காலத்தில் வேறொரு விதமான சொற்களால் சுத்தப்படுத்த விழைகிறான். சொல்லின் கறையோடு கசப்பான நினைவுகளுடன் காலம் முழுதும் தொடர்வதா அல்லது கறைபடுத்தியவனே சுத்தப்படுத்த விடுக்கும் அழைப்பை ஏற்றுச் செல்வதன் வழியாக அந்த வாய்ப்பை அவனுக்கு வழங்குவதா என்னும் உரையாடல்தான் சிறுகதை.

இறுதியாக சுத்தப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் விவேகமான முடிவை அறிவிக்கிறாள் மயிலம்மை. கறையும் சுத்தமும் சார்ந்து நீண்டு முடிகிறது கதை. சொற்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அக்கினிப்பிரவேசமாக நீடிக்கின்றன. ஒரு சொல் அக்கினிக்குள் தள்ளுகிறது. மற்றொரு சொல் அக்கினியிலிருந்து மீட்டெடுக்கக் காத்திருக்கிறது.

தம்பி மனைவியை அவதூறாகப் பேசி பொய்ப்பழியைச் சுமத்தியவனே அப்பழியிலிருந்து அவர்களை விலக்கி சுத்தப்படுத்தி, தன் நெஞ்சைச் சுத்தப்படுத்திக்கொள்வது என்பது ஒரு தளம். அந்த வாய்ப்பு அண்ணனுக்குக் கிட்டிய வாய்ப்பு மட்டுமல்ல, தம்பி குடும்பத்துக்கும் தம்மை கசப்பற்றவனாக சுத்தப்படுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பு. இந்தச் சிறுகதைக்கு மழையை ஒரு பின்னணியாக அமைத்திருப்பது வண்ணதாசனின் கலைத்தகுதிக்கு ஓர் அடையாளம்.

எல்லாவிதமான துர்நாற்றங்களையும் கசடுகளையும் இல்லாமலாக்கி சுத்தப்படுத்தி, அழுக்கின் சுவடே தெரியாமல் மறைந்துபோகச் செய்துவிடும் சக்தியுடையது மழை. மண்ணுக்கு ஒரு மழை பொழிவதுபோல, மனிதனுக்கும் ஒரு மழை உண்டு. ஆணவம், சீற்றம், அழுக்காறு என அனைத்தையும் அவன் கைவிட்டு உண்மைக்கு அருகில் சென்று நிற்கும்போது, அந்த மழை அவன் மீது பொழிகிறது. அது சத்தியத்தின் மழை. அதுவே அனைவரையும் சுத்தமாக்குகிறது. இந்தச் சத்தியத்தின் மழையைத்தான் வள்ளுவர் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்ற சொற்களால் குறிப்பிடுகிறார். இந்தச் சத்தியத்தருணம் வீரபத்திரனுக்கு மட்டுமல்ல, சைலப்பனுக்கும் தம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ள கிடைத்தற்கரிய வாய்ப்பு.

இத்தொகுதியின் மிகமுக்கியமான நீள்கதை தீராநதி. பிரதான பாத்திரங்களாக இடம்பெற்றிருக்கிற சுடலைத்தேவரும் சண்முகமும் போலவே கதையில் சிறுபங்கை மட்டுமே வகிக்கிற வடிவும் தளவாயும் சிறுவனும் கூட முக்கியமானவர்கள். ஒவ்வொருவருக்கும் கதைக்குள் தனித்த முக்கியத்துவம் இருக்கிறது.

இதிலும் பல்வேறு தளங்கள். சுடலைத்தேவருக்கும் சண்முகத்துக்கும் உள்ள நட்பு ஒரு அழகிய தளம். சுடலைத்தேவருக்கும் அவருடைய பெண்தோழிகளுக்கும் இடையிலுள்ள நட்பு மற்றொரு தளம். தளவாயின் கலையின் மகத்துவம் மிளிரும் இன்னொரு தளம். எல்லாம் கூடிக் கலந்து பேருருவம் கொண்டிருக்கிறது இந்த நீள்கதை. தாமிரபரணி நதிக்கு இக்கதை ஒரு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்கியிருக்கிறது. அது கதை நிகழ்ச்சிகளுக்கு ஒரு பின்னணியாக மட்டுமன்றி, ஒரு படிமமாகவும் சுடர்விடுகிறது.

நிலவையும் நட்சத்திரங்களையும் மெல்ல மெல்ல கரையும் இருளையும் அமர்ந்து ரசிக்கும் இடமாக மட்டுமன்றி மனிதர்கள் ஒருவரையருவர் அறிந்துகொள்ளும் இடமாகவும் இருக்கிறது. அவ்வகையில் அன்றொரு காலத்தில் நதிக்கரையில் வாழத் தொடங்கி, தலைமுறை தலைமுறையாக இன்று வரைக்கும் வாழ்கிற மானுடகுலத்தை அருகிலிருந்து அறிந்த பேரன்னையாக ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆகவேதான் அது தீராநதி. முக்காலத்துக்கும் உரிய நதி. அதன் ரகசியத்தை அறியச் செல்லும் ஒவ்வொருவரும் இறுதியில் தன் ரகசியத்தை அதனிடம் ஒப்படைத்துவிட்டு வருகிறார்கள்.

இன்று சில புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு நதியின் ஆழத்தை அறிந்துவிடலாம். ஆனால் மானுடமனமோ, ஒருவராலும் கண்டறிந்து சொல்ல முடியாத ஆழம் கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொருவரிடமும் இன்னொருவர் அறியாத மற்றொரு பக்கம் இருக்கிறது.

கண்ணீர் அஞ்சலியில் தொடங்கி துக்கம் விசாரித்துவிட்டு ஆற்றுநீரால் காலை அபிஷேகம் செய்துவிட்டுத் திரும்பும் வரையிலான கால இடைவெளியில் சுடலைத்தேவரின் ஆளுமைச் சித்திரம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீட்டி முழுமை செய்யப்பட்டிருக்கிறது. இனி, சுடலைத்தேவர் இல்லை.

அவர் நினைவாக அவரே அன்பளிப்பாக அளித்த ரவிவர்மாவின் ஓவியம் மட்டுமே துணையாக இருக்கும். வங்கிக்கே வந்து வடிவு கொடுத்துவிட்டுச் சென்ற மரப்பாச்சிப் பொம்மைகளும் துணையாக இருக்கும். அவையும் நதியும் ஒன்றல்ல. அது சண்முகத்துக்கும் தெரியும். ஆனால் அவற்றின் வழியாக அவனால் நதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தீராநதி என்பது, மணலைக் கரையாகக் கொண்டு கரைபுரள ஓடும் தாமிரபரணி நதி மட்டுமல்ல, மானுடனின் நினைவில் என்றென்றும் சுழித்துக்கொண்டோடும் நதி என்னும் வாசகத்தை ஒரு வாசகன் உருவாக்கிக்கொள்ளும்போது தீராநதி முற்றிலும் வேறொரு படிமமாக மாறிவிடுகிறது.

- பாவண்ணன்

Pin It