“வாழ்க்கை
ஒரு பட்டாம்பூச்சி போல
அது என்னவாகயிருந்த போதும்”
- நிஷியாமா சோயின்

erode_tamilanban_449மேற்சுட்டப்பட்ட கவிதை, ஒரு வாசகனுக்குள் கிளர்த்தும் உணர்வுகள் ஆயிரமாயிரம். வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலை இது வரை யாரும் சொல்லியதில்லை. சுலபமாகச் சொல்லி விடவும் முடியாது. வாழ்க்கை ஒரு பட்டாம்பூச்சி போல. படபடப்பு, துடிதுடிப்பு, காற்றில் ஒரு தடுமாற்றம்; நிலையாமையின் அழகு; அழகின் நிலையாமை; மலர்களில் அமரும் தவம்; சட்டெனப் பறக்கும் லாவகம்; மூச்சு நின்ற பிறகும் வண்ணங்கள் தொலையாமல் மண்ணில் சாயும் கம்பீரம் என்று பல்வேறு உணர்வுகளை இவ்வரிகள் கிளர்த்து கின்றன. மனிதர்களின் வாழ்க்கைகள் யாவும் ஒரு ‘பட்டாம்பூச்சி போல; அது என்னவாக இருக்கும் என்று யாராலும் சொல்லிவிட முடியாது’ என்ற பொருண்மையில் கவிதை எழுதிய நிஷியாமா சோயினின் ஹைகூவைப் போல நூறு ஹைகூக்களை ‘ஜப்பானிய ஹைகூ 100’ என்ற நூலில் அறிமுகம் செய்துள்ளார் கவிஞர் தமிழன்பன்.

தமிழில் ஹைகூவை அறிமுகப்படுத்திய கவிஞர் களும் அறிஞர்களும் எழுத்தாளர்களும் அநேகம். மகாகவி பாரதி, கவிஞர் அப்துல் ரகுமான், முனைவர் நிர்மலா சுரேஷ், லீலாவதி, அறிவுமதி, அமுத பாரதி, அமரன், சுஜாதா, புதுவை சீனு. தமிழ்மணி, மு. முருகேஷ் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1988ஆம் ஆண்டு முதல் புதுவையில் கரந்தடி என்னும் ஹைகூ இதழ் ஒன்று சீனு. தமிழ்மணி என்பவரால் நடத்தப்பட்டதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

‘சூரியப் பிறைகள்’ என்னும் ஹைகூ தொகுப்பு 1985ஆம் ஆண்டு தமிழன்பனால் எழுதப்பட்டது. கடந்த கால் நூற்றாண்டாக ஹைகூவை ஒரு தவம் போலக் கருதி, தமிழில் அதனைப் பேசியும் எழுதியும் வருகிறார் தமிழன்பன். ஓர் ஆராய்ச்சியாளனுக் குரிய நுட்பமான அறிவுடனும், மேதைக்குரிய நுண் மாண் நுழைபுலத்துடனும், கவிஞனுக்குரிய மெல்லிய உணர்வுடனும் இந்த நூலைப் படைத்துள்ளார் தமிழன்பன்.

இந்த நூலுக்குத் தமிழன்பன் வரைந்துள்ள முன்னுரை (எதற்கு இந்த நூல்?) அற்புதமானது. பத்து முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு நிகரானது. பல நூல்கள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய அரிய செய்திகளைத் தன் முன்னுரையில் பதிவுசெய்துள்ளார். தமிழன்பன்.

1994ஆம் ஆண்டு வில்லியம் வார்னர் எழுதிய நிறுவனம்சார் ஹைகூவைப் பற்றிக் குறிப்பிடும் தமிழன்பன், இன்று காலமாற்றத்தால் ஹைகூவின் பொருண்மைகள் எவ்வாறு மாறி வந்துள்ளன என்பதையும் சுவையாக எழுதியுள்ளார். கனடாவின் முக்கியமான ஹைகூ விமர்சகர் ராட் விட்மாட் ஹைகூவை ‘உளவியல் ஹைகூ’என்றும், காமவியல் ஹைகூ என்றும் வகைப்படுத்தியுள்ளதையும், அதை ஹ்யூவல் என்னும் அறிஞர், ‘மோசமான சென்ரியூ’ என்று விமர்சனம் செய்துள்ளதையும்கூட, போகிற போக்கில் குறிப்பிடு கிறார் தமிழன்பன். தமிழன்பனின் முன்னுரையில் என்னைக் கவர்ந்த அம்சங்கள் இரண்டு.

1. வெண்பாவிற்கும் ஹைகூவிற்கும் தமிழன்பன் காட்டும் வேறுபாடு.
2. மரணப் பண்பாடு என்று கருதத்தக்க ஜப்பானியப் பண்பாட்டின் பின்புலத்தில் ஹைகூவின் விஸ்வ ரூபத்தைத் தமிழன்பன் செதுக்கியுள்ள பாங்கு.

“வெண்பா என்பது ஒரு கவிதை வடிவம் மட்டுமே. அது ஒரு கவிதை வகைமையன்று; ஆனால், ஹைகூ முதன்மையான ஒரு கவிதை வகைமை; அப்புறம் ஒரு கவிதை வடிவமும்தான்!” (ப.9) என்று எழுதும் தமிழன்பன், இன்று ஜப்பானில் இருபது இலக்கத்துக்கும் மேற்பட்ட ஹைகூக் கவிஞர்கள் உள்ளனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

“ஹைகூ பொறிக்கப்பட்ட கற்கள் நகரங் களிலும் நாட்டுப்புறங்களிலும் காணப்படுகின்றன. பெரும் படைப்பாளிகள், கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் கவிதை உணர்வுத் தூண்டல் தேடி நெடும்பயணங்களில் வந்து தங்கிய இடங்களிலும், ஹைகூ கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன” (ப. 9) என்று எழுதும் கவிஞர், ஆர். எச். பிளித்தின் நான்கு தொகுதி ஹைகூ மொழிபெயர்ப்புகளைக் கொண்டாடுவதும் ஹைகூ ஆய்வாளர்களுக்கு அரிய செய்தி. ஹைகூ கல்வெட்டைத் தாங்கும் பாறை ஒன்றின் அழகான நிழற்படம், இந்நூலின் முகப்பு அட்டைப் படமாகத் தரப்பட்டுள்ளது.

ஜப்பானிய ஹைகூக் கவிதைகளை ஆங்கிலத்தி லிருந்து மொழிபெயர்த்து, அதை இயற்றியவர், அவரைப் பற்றிய குறிப்புகள், அக்கவிதை குறித்து வெளியாகியுள்ள விமர்சனம், அக்கவிதை எழுதப் பட்டுள்ளதன் வரலாற்றுப் பின்னணி, கவிதை தொடர்பான முக்கிய நிகழ்வு முதலிய அழகிய குறிப்புரைகளைத் தந்துள்ளார் தமிழன்பன். நூறு குறிப்புரைகள்; நூறும் வரலாற்று ஆவணங்கள்.

ஜப்பானிய வரலாறு, அதன் சமூகப் பின்புலம், ஜப்பானியர்களின் பண்பாடு, ஹைகூக் கவிஞர் களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள், மரணத்தை அவர்கள் கொண்டாடும் அழகு என்று ஏராளமான செய்திகள் குறிப்புரைகளாகத் தரப்பட்டுள்ளன.

நிலவிற்குக் கைப்பிடி (விசிறி) போட நினைக்கும் யமாசகி சோகன், செர்ரி மலர்களைக் கவிதையில் நிறைக்கும் மட்சுயி ஷகியோரி, தன்னை வண்ணத்துப் பூச்சியாகக் கனவு கண்ட நிஷியாமா சோயின், கனவில் தாயைக் கனவு கண்ட கிககு, அழும் குழந்தையின் திக்கில் நாற்று நடும் பெண்ணை வடித்த இசா, இருபத்தி ஏழாவது வயதில் கணவனை இழந்த பெண்கவிஞர் சிய்யோ - நி, ஹைகூ உலகின் பிதாமகன் பாஷோ, அமிலோவல் என்ற கவிஞனிடம் தாக்கத்தை ஏற்படுத்திய பூசன், ஒரேநாளில் 23,500 கவிதைகளை எழுதிய இகாரா சாய்ககு, வசந்தம் பிரிவது தெரியாமல் உறங்கும் வண்ணத்துப்பூச்சியை வரைந்த சுயூயு - நோ, மலர்களின் கூட்டத்தில் பெண்களை ரசிக்கும் பாஷோவின் மாணவர் ஹரிட்சு, யாஹாவின் மாணவி ஷோக்கியு - நி, மரணத்தை அலங்கரிக்கும் மலர்களைப் படைக்கும் மெய்செட்சு, பதின்மூன்று வயதிலேயே கவிதை களைப் படைத்த சூஷிகி, புதினப் படைப்பாளியான சோசெகி, கோடை நிலாவை ஏன் விரைவாகப் போய்விட்டாய் என்று வினவுகின்ற சுடி - யோ, அழியும் தன் வாழ்வினூடாகப் பிரபஞ்சத்தின் துயரத்தில் சங்கமமாகும் ஒஜகி ஹோசாய், சாளர நிலாவைத் திருட முடியாது என்று கவிதை சொன்ன ரியோகன், இறக்கும் தருவாயில் மரணக் கவிதையை எழுதிய பகோ, கிறிசாந்தம் என்னும் மரத்திற்காக இறக்கும் நிலையிலும் பரிதாபப்படும் கிஜன், தற்கால ஹைகூவின் தந்தை சீய்ஷி யமா குச்சி என்று பல்வேறு கவிஞர்களின் குறிப்புகள்... எப்படி இவ்வளவு தகவல்களைத் தமிழன்பன் திரட்டினார் என்று மலைப்பாக இருக்கிறது.

“கண்கள் ஃபுஜி மலைமேல்
பதிந்திருக்க நான் திடீரென்று
கண்மூட வேண்டும்.”

ரங்காய் என்னும் கவிஞரின் கடைசி விருப்பம் இது. ஃபுஜி மலை புனிதத் தன்மை உடையது என்று கருதப்பட்டது. கலையிலும் இலக்கியத்திலும் இடம்பெற்ற புகழ்வாய்ந்த மலை அது. ஆனால், பெண்கள் இம்மலையில் ஏறி, இறங்க அனுமதியில்லை. இன்று 3,00,000 மக்கள் ஃபுஜியின் உச்சிக்குச் செல்கின்றனர் என்ற அரிய தகவலைக் கவிஞர் தந்துள்ளார்.

“பயணத்தில் நோய்
என் கனவு அங்குமிங்கும் அலைகிறது
வறண்ட வயல்கள் மீது”

இக்கவிதை மாபெரும் கவிஞர் பாஷோவின் கடைசிக் கவிதை என்பதை மறக்காமல் பதிவு செய்துள்ளார் தமிழன்பன்.

என் மனத்தைக் கொள்ளை கொண்ட சில ஹைகூக்களை இங்குப் பதிவு செய்கிறேன்.

“ஆழ்ந்த தனிமை
யாரையேனும் பார்க்கத்தான்
என் நிழலை அசையச் செய்தேன்”  - ஒஜகி ஹோசாய்

“எந்த இலைகள்
முதலில் உதிர வேண்டும்
காற்று மட்டுமே அறியும்” - சோசெகி

“அற்புத நிலா!
பறவைகளும் தம் கூடுகளின்
கதவு மூடவில்லை” - சிய்யோ - நி

“இந்தக் குயில் ஒரு பூவாக
இருக்குமாயின் அதிலிருந்து
குரல் ஒன்று பறித்துக் கொள்வேன்” - கொதோ

“இந்த இறுதிக் காட்சி
இறுதிவரை நான் காணமாட்டேன்
தேய்கிறது என் கனவு” - சோகோ

“என் சரக்குக் கிடங்கு
எரிந்து விழுந்தது இப்போது
எதுவும் நிலாவை மறைக்கவில்லை” - மாசாஹைடு

மேற்சுட்டப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள் குறித்து, தமிழன்பன் தரும் வரலாற்றுப் பின் புலங்கள் சுவையானவை. அவை அவர், எவ்வாறு ரசித்துள்ளார் என்பதைச் சில வரிகளில் சொல்லி விட்டு வாசகர்கள் அவற்றை ரசிக்கவும் இடம் தந்துள்ளார்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது வாழ்க்கை. அந்த வாழ்க்கையைக் கொண்டாட ஆயிரம் உண்டு என்பதை வலியுறுத்துகிறது இந்நூல்.

குறிப்புரைகள் தரும்போது, தாயுமானவரையும், பாரதியையும், திருமூலரையும், பெருங்கதையில் இடம்பெறும் இலாவண காண்டப் பகுதிகளையும் மறவாமல் நினைவு கூர்ந்துள்ளார் தமிழன்பன்.

ஜேம்ஸ் கிர்கப், ஹைகூவைப் பற்றி, ‘ஹைகூ வடிவிலேயே ஒரு கவிதை எழுதினார்.

“கிணற்றுள்
சிறிய ஒலியோடு விழும்
சிறு சிறு கற்களே ஹைகூ”

வாசகர்களின் மனக்கிணற்றில் தமிழன்பன் எறிந்த அழகழகான கற்கள் நிரந்தரமாக மெல்லிய ஒலிகளை எழுப்பியவண்ணம் இருக்கும்.

ஜப்பானிய ஹைகூ 100 குறிப்புரையுடன்

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

வெளியீடு: விழிகள் பதிப்பகம்

விலை ரூ.100

Pin It