‘சோழவள நாடு சோறுடைத்து’ என்ற செஞ் சொற்றொடர் ‘சோழ வளநாடு சோர்வுடைத்து’ எனக் கூறத்தக்க தொய்வு நிலையை அடைந்துவிட்டது. நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி பொய்த்து, அறுவடையாகி யிருக்க வேண்டிய பல லட்சம் டன் நெல் தமிழகத்துக்கு இழப்பாகிப் போனது.

பொதுவாக, காவிரி டெல்டா என்பது ஒட்டு மொத்தத் தமிழகத்தின் ஏறத்தாழ 40 சதவிகித விவசாய நிலங்களை உள்ளடக்கியது. இந்த நிலம் 40 சதவிகிதம் என்றாலும் வேளாண் விளைச்சல் என்பது அதற்கும் மேலானது. இந்த வகையில் பார்த்தால் மழை பொய்த்து, கர்நாடகம் ஏய்த்து, டெல்டா வறளும்போது, பொருளிழப்பு, உயிரிழப்பு என விவசாயிகள் படுகின்ற துன்பங்கள் மட்டு மின்றி தமிழகத்திற்கு நீடித்த, பெரும் பொருளாதார இழப்பும்கூட!

இந்தக் காவிரியில் நீர்வரத்துக் குறைவதால், பெரு நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் எனப் பல பகுதிகள் குடிநீருக்கும் அல்லல்பட வேண்டி யுள்ளது.

இதற்காக, 1960-கள் தொடங்கி ஏராளமான கோரிக்கைகளைத் தமிழகம் நடுவண் அரசை நோக்கி எழுப்பி வருகிறது. இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசு ஆண்டுத் தொடக்கத் திலேயே தண்ணீர் வேண்டுகோளின் மீது தீவிரம் காட்டத் தொடங்கியதன் விளைவாக, காவிரி கண்காணிப்புக் குழுக்கூட்டம் கூடுகிற அளவுக்கு நிலைமை முன்னேறியது.

குறுவைதான் நாசமானது; சம்பாப் பாசனத் திற்காவது 15-10-2012 முதல் 16-02-2013 வரை சுமார் 145 டி.எம்.சி. அடி நீர் தேவைப்படும் என்று தமிழகத்தின் சார்பில் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் 11-10-2012 அன்று வலியுறுத்தப்பட்டது. கர்நாடகத்தின் 4 அணை களில் போதுமான நீர் இருப்பு இருந்தும்கூட, கர்நாடக அரசு தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுத்து வருகிறது.

16-10-2012 முதல் 31-10-2012 வரை தமிழகத் திற்குத் திறந்து விட வேண்டிய தண்ணீரில் உள்ள பற்றாக்குறை யான 2.15 டி.எம்.சி. அடி தண்ணீரை 4.11.2012க்குள் விடுவிக்கும்படியும், 1-11-2012 முதல் 15-11-2012 வரையிலான காலத்திற்கு 3.94 டி.எம்.சி.அடி தண்ணீரை விடுவிக்கும் படியும் கூறி, மொத்தம் 6.09 டி.எம்.சி. அடி தண்ணீரைத் தமிழக்ததிற்குத் திறந்து வரும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற ஆணைப்படி மேற்கொண்டு தண்ணீர் விடுவிப்பது பற்றியும் 15-11-2012 அன்று நடை பெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று காவிரி கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு, கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கு மான சச்சரவு தொடர்கிற வேளையில், தமிழகத் துக்கும், கேரளத்துக்கும் இடையேயான முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ்வாறு இருபுறங்களிலும் நதிநீர்ப் பிரச்சினை களில் சிக்கிப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டுக்கு மின்தட்டுப்பாடு மிகப் பெரிய சிக்கல்!

தென்மேற்குப் பருவமழை கைகொடுக்காத நிலையில், மின்பாதை நெருக்கடி காரணமாக தமிழ கத்தில் மின்சாரப் பற்றாக்குறை மேலும் மக்களை வாட்டியெடுக்கிறது. இந்தப் பெரும் துன்பத்திலிருந்து ஓரளவு மீளும் நோக்கில் தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் நடுவண் அரசை நோக்கி எடுத்து வைக்கும், கோரிக்கையும் நடத்தி வரும் போராட்டங்களுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக் கின்றன; காங்கிரஸ் கூட்டணி அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில், டெல்லி யூனியன் பிரதேசம் தனது மத்திய மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து வரும் மார்ச் மாதம் வரை 1721 மெகாவாட் மின்சாரத்தை ஒப்படைக்க இருக்கிறது.

தமிழகத்துக்கு இவ்வாறு மின்சாரத் தேவை இருக்கிற வேளையில், டெல்லி யூனியன் பிரதேசம் வழங்கும் அந்த மின்சாரத்தை அப்படியே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யு மாறும், அதற்கேற்ப மின்பாதையை ஏற்படுத்தித் தருமாறும் தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிக்கல்கள் - அதாவது, காவிரி நதி நீர் வரத்துக் குறைவு, முல்லைப் பெரியாறு அணையினால் ஏற்படும் தண்ணீர்ப் போதாமை, மின்சாரப் பற்றாக்குறை ஆகிய மூன்று காரணங்களும் தமிழகத்தின் விவசாயம், தொழில் துறை உள்ளிட்டவற்றோடு மட்டுமின்றி, ஒன்றுக்கொன்று சங்கிலித் தொடராகி, தமிழகத்தின் மொத்தப் பொருளா தாரத்தையும், வாழ்வமைதியையும் குலைக்கும்; இப்போதே குலைக்கத் தொடங்கி விட்டது.

தமிழகத்தில் அணுமின் நிலையம், அனல்மின் நிலையம், நீர்மின்நிலையம் ஆகிய மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி ஆகும் மின்சாரம், ‘மின்னாற்றல் நுகர்வு என்பது தேசியமயம்’ என்ற அடிப்படையில் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்போது, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து, செயற்கையான மானுட உழைப் பின்றி இயற்கையாக ஓடி வரும் தண்ணீரை மட்டும் தமிழ்நாடு நுகர்வதில் இத்தனை எதிர்ப்புகள்!

கூட்டாட்சிக் கோட்பாட்டை வாய்கிழியப் பேசும் காங்கிரஸ் கட்சி, இவை போன்ற நடைமுறைப் பிரச்சினை களில் மட்டும் எந்தத் தீர்வுக்கும் வழி காண்பதில்லை. ஏன் - தீர்வுக்கு இடமே கொடுப்பதில்லை!

இந்தியா விடுதலை பெற்று 65 ஆண்டுகள் ஆன பிறகும் மத்திய அரசுக்கும், மாநில அரசு களுக்கும் இணக்க மான உறவு ஏற்படவில்லை. குறிப்பாக, தமிழ்நாடு பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமான மாநிலத் தகராறு களில் சிக்கித் தவிக்கிறது. இதையெல்லாம் தீர்க்க இயலாது மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசு அவ்வப்போது, “இந்திய அரசின் இறையாண்மை” என்ற சொற்றொடரை உச்சரித்து வருகிறதே, அதற்குப் பொருள் தான் என்ன?

Pin It