‘வளர்ப்பு மகள்’ என்ற நாவலை எழுத்தாளர் சு. சமுத்திரம் அவர்கள் எழுதியுள்ளார். இதனைப் பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. 2010 இல் முதற்பதிப்பு வெளிவந்துள்ளது.

கதையும் மாந்தரும். கதைத் தலைவியின் பெயர் மல்லிகா. செல்லம்மாளும் பெருமாளும் பெற்றெடுக் கின்றனர். பார்வதியும் சொக்கலிங்கமும் வளர்க் கின்றனர். வளர்ப்புத் தாய் மல்லிகாவுக்கு அத்தை முறை என்பது குறிக்கத்தக்கது. மல்லிகாவுக்கு இராமனை மணம் பேசுகின்றனர். இராமன் படிக்காதவன், குடிகாரன். இவனைப் பிடிக்காமல் பெற்றவரிடம் சென்றுவிடுகிறாள் மல்லிகா.

பெற்றோர் ஏழையாக உள்ளனர். கூட்டுக் குடித்தனத்தில் வசிக்கின்றனர். செல்வச் செழிப்பில் வளர்ந்த மல்லிகாவுக்குத் தொடக்கத்தில் இச்சூழல் பிடிக்கவில்லை. பின்னர் ஓரளவு ஒத்துப்போகிறாள். அங்குள்ள படிக்காதவர்களுக்கு எழுத்தறிவு அளிக் கிறாள். அவர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறாள்.

வளர்ப்புத் தந்தை மற்றொரு சிறுவயதுப் பெண்ணை மணக்க முயல்கிறார். அதையும் தடுக்கிறாள் மல்லிகா. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வளர்ப்புத் தந்தையைச் சென்று பார்க்கிறாள். சமாதானம் அடைகின்றனர். ஒரு நாள் வளர்ப்புத் தந்தையின் செல்வச் செழிப்பிலும் மற்றொரு நாள் பெற்ற தந்தையின் ஏழ்மைச் சூழலிலும் வாழ்ந்திட முடிவு செய்கிறாள் மல்லிகா.

கதைக் கரு. முதலில் மேல்தட்டிலும், பின்னர்க் கீழ்த்தட்டிலும் வாழ்கின்ற இளம் பெண்ணின் வாழ்க்கையும் போராட்டங்களும் கதைக் கருவாகி உள்ளன. பொருளாதாரமே கதையின் இயக்குச் சக்தியாக உள்ளது. பாலியல் துரத்தல்களும் பதிவாகி உள்ளன.

கவித்துவ நடை கையாளப்பட்டுள்ளது. ‘மேக்கப் போட்ட கிழவி போலவும், மேக்கப் இல்லாத இளம் பெண்களிலும் நாட்டுக்கட்டை இளம்பெண் போல் ஒரு வீடு காட்சியளித்தது’ என்ற உவமை மொழிநடை நாவலைப் படிக்கத் தூண்டுகிறது.

‘கோபப்பட வேண்டிய இடத்துல சிரிக்கிறவன் ஆபத்தான மனுசண்டி. ரோஷம் இருந்தால்தான் கோபம் வரும். வேஷம் இருந்தால் சிரிப்புத்தான் வரும்’ என மனிதர்களைப் பற்றிய புரிதல்கள் அறிவுக்கு விருந்தளிக்கின்றன.

‘நிர்வாகிகள் ஆளுக்கொரு வார்த்தை பேசுவதில், அதுவும் வாழ்த்திப் பேசுவதில் என்ன கோளாறு என்று கேட்கலாம். தன் பஷன்கார மோதிரங் களையும், டெர்லின் சட்டைப் பைகளுக்குள் தெரியும் நூறு ரூபாய் நோட்டுக்களையும் ஏழை பாழைகள் தொடாமலே பார்க்க வேண்டும் என்பதுபோல, அரைமணி நேரமாவது பேசுவார். இந்த அரைமணிக்குள், ‘அதாவது.... அதாவது’ என்ற வார்த்தை மட்டும் ஆயிரந்தடவை வரும்’ என்ற நிகழ்ச்சி விளக்கங்கள் சமுதாய நிகழ்வுகளைக் கிண்டல் செய்கின்றன. சாராயம் குடித்தல், பொருந்தா மணம் போன்றனவும் கண்டிக்கப்படு கின்றன. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள் எதிர்க்கப்படுகின்றன. இவ்வகையில், இந்நாவல் சமுதாய சீர்திருத்த நாவலாகத் திகழ்வது காலம் வரவேற்க வேண்டியதொன்றாகும்.

சமுதாயக் கருத்துகள் படம்பிடிக்கப்படுவதோடு, தீர்வை நோக்கிய விவாதங்களும் இந் நாவலில் இடம்பெறுகின்றன. ‘இந்த சமூக அமைப்பிலே பியூனோட வாழ்க்கை முறை வேறே, ஆபிசரோட வாழ்க்கை முறை வேறே. ஏழையோட கலாசாரம் வேறே, பணக்காரன் கலாசாரம் வேறே. இவை போய் கலாசார ஒருமையும் வாழ்க்கை முறையில் ஒருமையும் வந்தால்தான், தொழில் அந்தஸ்து, சமூக அந்தஸ்தோட இணைக்கப்படாத காலம் வந்தால்தான், வரதட்சணைப் பிரச்சினை தீரும். இல்லை என்றால், அது அன்பளிப்புப் பிரச்சினையா மாறுவேடம் போடும்’. இவ்வகையில் சமுதாய சீர்திருத்தம்பற்றிய பரந்த அறிவினையும் இந்நாவல் ஏற்படுத்துவது பாராட்டத்தக்கது.

செயலொன்றில் நிறைகளுடன் குறைகளும் ஏற்படுவது இயற்கை. கதை நிகழ்வுகள் பெரும் பான்மை வளர்ப்புப் பெண் மல்லிகா+படிக்காத, குடிகார ரவுடியான இராமன் திருமணத்தையே சுற்றியுள்ளன. ஆனால், இராமனை மணமகனாகப் பரிந்துரை செய்வதற்கான காரணம் தெளிவாக இருக்கிறதோ இல்லையோ, - வலிமையானதாக/ அழுத்தமானதாக இல்லை. இதனால் கதைப்பின்னல் தொய்வு அடைந்து விறுவிறுப்புக் குறைகின்றது.

தேவையற்ற குணச்சித்திரங்கள் படிப்பவரைக் களைப்படையச் செய்கின்றன. சான்றாக வளர்ப்புத் தந்தை பின்காலில்கூட நீர் படாமல் குளிப்பவராகக் காட்டப்பட்டுள்ளது. இத்தகு குறை குணம் தொடர்பான கதை நிகழ்வு அவருக்கு அளிக்கப்படவில்லை.

கதை சமூக சீர்திருத்தத்தை முன்னிட்டது என்று கொண்டாலும் அதிலும் தெளிவான கருத் தோட்டம் இல்லை. ஏழைகளைக் கிள்ளுக் கீரையாக மேட்டுக் குடியினர் நினைப்பதை எதிர்க்கிறாள் மல்லிகா. ஆனால், அவளே ஏழைகள் செய்யும் வேலையான முறைவாசல் பெருக்கும் வேலையினைச் செய்யத் தயங்குகிறாள். படிக்காத, குடிக்கும் இயல்பு உள்ளவனை மணக்க விரும்பவில்லை. திருத்த முயலவில்லை. மேட்டுக் குடித்தனத்தை எதிர்க்கும் கதைத்தலைவியிடமும் மேட்டுக்குடி மனப்பான்மை இருக்கின்றது. எனவே மேலோட்ட மாகப் பார்க்கும்போது மேட்டுக்குடி மனப்பான் மையை உடைக்கின்ற நாவலாகத் தென்பட்டாலும், ஆழ்ந்து பார்க்கும்போது மேட்டுக்குடியில் காணப் படுகின்ற அதிகாரப் போட்டியே நாவலாக அமைந்துள்ளது.

கதையில் ஏற்படுகின்ற மற்றொரு கேள்வி மிக மிக முக்கியமானது. ஒடுக்கப்பட்ட மக்களை யார் வழிநடத்துவது? சுதந்திரப் போராட்ட காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிக் காந்தியடிகள் குரல் எழுப்பியபோதும் இக்கேள்வி கேட்கப் பட்டது. இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் இக்கேள்வி கேட்கப்படுகின்றது. இதன் வெடிப்பாகத் தென்னாப்பிரிக்கக் கறுப்பு இன மக்கள் தங்களுக்கான தேவாலயத்தில் கறுப்பு நிறத்தில் இயேசு சிலையை அமைத்துள்ளனர். இவ்வகையில் இந்நாவலில் ஒடுக்கப்படும் மக்களை ஒடுக்கப்பட்ட ஒருவரே வழிநடத்தாமல், மேட்டுக் குடியால் வடிவமைக்கப்பட்ட ஒருத்தியே வழி நடத்துவது அடிமை மனப்பான்மையையும், ஆதிக்க சக்தியின் செல்வாக்கையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக அமைகின்றது.

வளர்ப்புமகள் (நாவல்)

ஆசிரியர் : சு.சமுத்திரம்

வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்

விலை : ரூ. 50.00

Pin It