தமிழில் குழந்தை இலக்கியத்தைப் பற்றி விவாதிக்க ஒரு தளமாக “குழந்தை எழுத்தாளர் பிளாக் ஸ்பாட்” தொடங்கப்பட்டது.அதில் எழுதப்பட்ட “தமிழில் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை” என்ற கட்டுரை எழுத்தாளர், பெற்றோர், ஆசிரியர் ஆகியோரின் எதிர் வினையைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.நேற்று நிறைய பேர் எழுதினார்கள்.  படைப்புகளும் அதிகம் வந்தன.  இன்று ஒன்றுமில்லை என்று கூறுகிறீர்கள்.  அப்படியென்றால் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்குக் காரணமென்ன என்பதை ஆராய வேண்டும் என்று எழுத்தாளர் புதிய ஜீவா ஒரு கருத்தை முன்வைத்தார்.

மூத்த எழுத்தாளர் பொன்னீலனின் எதிர் வினை நெகிழ்ச்சியோடு இருந்தது.  ‘கட்டுரை மூலம் ஒரு முக்கிய பிரச்சினை கிளப்பப்பட்டிருக்கிறது.  நான் கூட குழந்தைகளுக்காக எதுவும் எழுத வில்லை என்பதைக் குற்ற உணர்ச்சியாக உணருகிறேன். இனி மேல் எழுதுவேன்’ என்றார்.

சென்னையில்சென்றவாரம்“குழந்தைகளைக்கொண்டாடுவோம்”அமைப்பினர் குழந்தைகளுக்குக் கதை எழுதுவதற்கு இருபது ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி முகாம் நடத்தினர்.  அதிலும் இக்கட்டுரை விவாதிக்கப்பட்டது.“மழலைச் சொல் பதிப்பகம்” மலர்விழி,  ‘சமூகம் மாறியிருக்கிறது.  மாற்றத்தின் தேவைக்கேற்ப படைப்புகள் வராமல் பின்தங்கியிருப்பதும் தமிழில் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்குக் காரணம்’ என்று கூறினார்.

எனக்கு மலர்விழியின் கருத்தை ஒப்புக்கொள்ளத் தோன்றியது.  தமிழில் குழந்தை இலக்கியம் பின் தங்கியிருப்பதற்குக் காரணம் குழந்தை எழுத்தாளர்கள் தான்.  காலத்திற்கேற்ப படைப்புகளை அவர்கள் தரவில்லை.  செக்கு மாட்டைப்போல் குழந்தை இலக்கியம் பழகிய தடத்திலே சுற்றிச்சுற்றி வருகிறது.  அதிலிருந்து மீளும் முயற்சி இந்த நிமிடம் வரை இல்லை.

குழந்தைப் பாடல்களை எடுத்துக் கொள்ளுங்கள்: சுமார் 100 வருடங்களாக ‘பாப்பா, பாப்பா, பள்ளிக் கூடத்திற்கு ஓடி வா’ என்று அழைக்கும் பாடல்களும், ஆடு, மாடு, கோழி, கிளி, பட்டம், வானவில், நிலா, மழையைப் பற்றிய பாடல்களும் குவியல் குவியல்களாக எழுதப்பட்டு வருகின்றன.  குழந்தைக் கவிஞர்கள் அனைவரும் விடாமல் இவற்றைப் பற்றியே எழுதிக் குழந்தைப்பாடல்களுக்கு ஒரு “ஃபார்முலா”வை உருவாக்கி விட்டார்கள். 

இந்த வாய்பாட்டைப் பின்பற்றி ஒரு தமிழாசிரியர் சிரமமில்லாமல் “குழந்தைக் கவிஞர்” என்ற பட்டத்தைப் பெற்று விடலாம்.  தன்னுடைய அனுபவத்தையோ, குழந்தைகளின் உலகத்தையோ வெளிப்படுத்தாத இந்த வாய்பாட்டுப் பாடல்களை எந்தக் குழந்தைகள் விரும்பக்கூடும்? வார்த்தைச் சேர்க்கைகள் குழந்தைப் பாடல்களாகிவிட முடியுமா? குழந்தைப் பாடல்கள் தாளலயத்தோடு இருக்க வேண்டாமா? உணர்ச்சித் துள்ளல் வேண்டாமா? குழந்தைக்குத் தெரிந்த பொருள்களையெல்லாம் பட்டியலிட்டு அதைத் தலைப்பாக்கி விளக்கி விளக்கி எழுதி ‘பாப்பா விரும்பும் பாடல்கள்’ ‘சிறுவர்களுக்குச் சின்ன சின்ன பாடல்கள்’ என்று நூலாக்கிச் சந்தைக்குக் கொண்டு வருவதால் தமிழ்க் குழந்தைகள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.  குழந்தைப் பாடல்கள் என்றால் மதிப்பு மரியாதை இல்லாமல் போய் விட்டது.

தெரிந்தோ, தெரியாமலோ ‘சந்தை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன்.  உண்மை அதுதான்! குழந்தை இலக்கிய நூல்களுக்கு ஒரு சந்தை இருக்கிறது.  அரசு நூலகம், பள்ளி நூலகம் என்ற அந்தச் சந்தையைக் குறிவைத்துக் குறுகிய காலத்தில் தயாரிக்கப்படும் வணிகப் பண்டமாக மலிவடைந்துவிட்டதும் குழந்தை இலக்கியம் பின்தங்கிப் போனதற்கு ஒரு காரணமே!

பெரும்பாலும் குழந்தை எழுத்தாளர்கள் பள்ளி ஆசிரியர்கள்தான்.  அவர்களின் தேடல் எல்லை தெரிந்ததே.  காந்தித் தாத்தா, நேரு மாமா என்று தேசத் தலைவர்களைப் பற்றிப் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு எழுதியவற்றை நூலாக்குகிறார்கள்.  அல்லது கோடை விடுமுறையில் பதிப்பகத் தேவை களுக்காக எழுதுகிறார்கள்.  குழந்தைப் பாடல்களில் பாப்பாப் பாட்டுதான் நூறு வருடங்களைக் கடந்தும் நிற்கிறது.  அது பாரதி பதிப்பகத் தேவைக்காக எழுதியதில்லை.  பாப்பா சகுந்தலாவிற்காக எழுதியது.  குழந்தை எழுத்தாளர்கள் தங்கள் குழந்தைகளுக்காக எழுதியிருந்தால் கூட அவை மனங கொள்ளத்தக்கவையாக இருந்திருக்கும்.

ஆங்கிலத்தில் குழந்தை இலக்கியத்தின் செழிப்பைப் பார்த்து நமக்குப் பொறாமை வர வேண்டும்.  இந்த விஷயத்தில் பொறாமை நல்ல குணமே! ஆங்கிலத்தில் குழந்தை இலக்கியத்தின் பல பிரிவு களைப் பார்க்கும்போது, பயன்பாடுகளை நோக்கும் போது நீதி இலக்கியம் மட்டும்தான் குழந்தை இலக்கியம் என்பதை நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம்.  திருக்குறள், அகநானூறு, புறநானூறு, நாலடியார், கொன்றைவேந்தன், ஆத்திசூடி, நல்வழி ஆகிய நீதி நூல்களுக்கு எளிய உரையும், கதைகளும் வலிந்து எழுதி குழந்தை இலக்கியம் என்கிறோம். 

 குழந்தையின் அனுபவங்களையும் உலகத்தையும் முன் நிறுத்துவதுதான் குழந்தை இலக் கியத்தின் இலட்சணம் என்று உலகக் குழந்தை இலக்கிய வரையறை கூறுகிறது.  இதற்கு நேர் மாறாக, தமிழில் குழந்தை இலக்கியச் செயல் பாடுகள் இருக்கின்றன.  குட்டிகளுக்குக் குறள் நெறிக் கதைகள், சிறுவர்களுக்கு ஆத்திசூடி ஒழுக்கக் கதைகள் என்று குழந்தைகளின் உளவியலைக் கருத்தில் கொள்ளாத உபதேசக் கதைகள் தமிழில் குழந்தை இலக்கியம் என்ற பெயரில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன. 

பழிக்குப்பழி உணர்வு, பணிவு, கீழ்ப்படிதல், வணங்குதல், ஈகை, துறவு, அடக்கம் போற்றும் குணம், தொண்டுள்ளம் ஆகிய நெறி களெல்லாம் சமூக மாற்றத்திற்கேற்ப பரிசீலனைக் குரியவை.  அச்சமின்மை, நேர்மை, பகுத்தறிவு, ஆய்வு மனப்பான்மை, சகிப்புத்தன்மை, பகிர்ந்து கொள்ளல், இரக்கம் ஜனநாயகம், சமத்துவ உணர்வு போன்ற புதிய நெறிகள் காலமாற்றத்திற் கேற்ப வழிமொழியப்படுபவை.

இவ்வாறு புதிய சிந்தனைகள் உள்ளடக்கமாக வேண்டும்.  அதை அற்புத ஆற்றலுடன் படைப் பாக்க வேண்டும்.  இது குழந்தை இலக்கியத்திற்குச் சிறப்பான நிபந்தனை.  அதனால்தான் குழந்தை களுக்கு எழுதுவது கடினம் என்றார்கள்.  நடையை மாற்ற வேண்டியிருக்கிறது.  ஒரு தாய் சாதாரண மாக நடக்கும் போது வேகமாக நடப்பாள்.  கையில் குழந்தையைப் பிடித்துக் கொண்டு நடக்கும்போது மெதுவாகத்தான் நடப்பாள். 

குழந்தை எழுத்தாளர் தாயைப்போல் நடையை மாற்ற வேண்டும்.  ஒரு வாக்கியம் ஒரு பத்தியைப்போல் எழுதப்பட்டுள்ள குழந்தை நூலை நான் பார்த்திருக்கிறேன்.  அறிவுரை மட்டும் கூறுகின்ற ‘பெரிய அண்ணன்’ மனோ பாவம் கொண்ட வழிகாட்டும் நூல்கள் சிறுவர் இலக்கியமாகி விட்டது.  தமிழில் இதைப் போன்ற நூல்கள் அதிகம்.

சரி, இப்படிக் குழந்தை இலக்கியத்தின் உள்ளடக்கம், உருவத்தைப் பற்றியெல்லாம், விமர்சனம், விவாதம் தமிழில் பெருமளவு நடைபெற்றனவா?

குழந்தை இலக்கியத்தை மதித்து அதை வளர்த்தெடுக்க முயற்சிகளும், பயிற்சிகளும் தமிழில் நடை பெறவில்லையே! மேலை நாடுகளில் ஏன், இந்தியா விலேயே பிற மாநிலங்களில் குழந்தை இலக்கியத்தின் போக்குகள், வளர்ச்சிகளைப்பற்றிக் குழந்தை எழுத் தாளர்களுக்குத் தெரியுமா? இப்படி எத்தனையோ ‘அறியாமைகள்’ நமக்குள் இருந்து தமிழில் குழந்தை இலக்கியத்தை ஆமை வேகத்திற்குத் தள்ளிவிட்டன.

ஆமையைப்பற்றிக் குறிப்பிட்டவுடன் முயல் எனக்கு நினைவுக்கு வருகிறது.  இப்போது குழந்தை களை நாம் ஓடும் முயல்களாக்கி விட்டோம்.  வாழ்க்கை, பந்தய மைதானமாகி விட்டதால் குழந்தைகளைப் போட்டிகளுக்குத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கிறது.  குழந்தைகள் இலக்கியம் படித்துக் கொண் டிருந்தால் கல்வி, வேலை வாய்ப்பு பேட்டிகளில் பங்கேற்க நேரம் கிடைக்குமா? அதுமட்டுமில்லாமல் போட்டி உலகில் கதைப் புத்தகம் படிப்பதற்கான இடமென்ன? இது குறித்துப் பெற்றோரும், ஆசிரியரும் கொண்டுள்ள பார்வைகள் தமிழில் குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சியைப் பாதித்துள்ளன.

தம் குழந்தைகள் டாக்டராக வேண்டும், பொறியாளராக வேண்டும், அதிகாரிகளாக வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.  யாரும் நல்ல மனிதராக வேண்டும் என்று நினைப்ப தில்லை.  பெற்றோரின் நோக்கத்திற்கு ஏற்ப பிள்ளைகள் கல்வியைச் சுமக்க வேண்டியிருக்கிறது.  கல்வியின் நோக்கம் வேலைவாய்ப்புக் கனியைப் பறிக்க என்றாகி விட்டதால் குழந்தைகள் “கோல்” கைக் கொண்டு வாழ்கிறார்கள்.  அந்தக் “கோல்” என்பது மதிப்பெண், அதிக மதிப்பெண் பெறும் போட்டியில் கதைப் புத்தகத்திற்கு இடமேது? மதிப்பெண் மந்திரக் கோல்களைப் பிள்ளைகளுக்கு வாங்கித் தரப் பெற்றோர் முடிவு செய்து விட்டதால் கல்வி வியாபாரமானது. 

வியாபார உத்திகளைக் கொண்ட இன்றைய கல்வி முறையில் இலக்கியக் கல்விக்கு இடமில்லாமல் போய் விட்டது.  மேலும்கொடுமை என்னவென்றால் பள்ளி, கல்லூரிப் படிப்புகளில் தாய்மொழியின் இடம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலம் கோலோச்சுகிறது.  தமிழில் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்கு இது முக்கிய காரணமென்று நான் நினைக்கின்றேன்.

குழந்தையின் உணர்ச்சிகளுக்கு உணவாக இருக்க வேண்டிய தாய்மொழியும், இலக்கியமும் இல்லை என்றாகிவிட்ட பிறகு “மேகி நூடுல்ஸ்” போல் தொலைக்காட்சி கார்ட்டூன் சேனல்களும் டி.வி.டி களும் இணையமும் தீனிகளாகி விட்டன.  நொறுக்குத் தீனிகள் ஜீரணக் கோளாறுகளுக்கு வழி வகுப்பது போல் குழந்தைகளின் உளச் சிக்கல்களுக்கு இவையும் உதவுகின்றன.

கிரிக்கெட் சேனல் விளையாட்டாகி அது நம்மைப் பார்வையாளராக்கி நாம் விளையாடி மகிழ்வதைப் பின்னுக்குத் தள்ளி விட்டது போல் கார்ட்டூன் சேனல்கள் குழந்தைகள் படித்து மகிழ் வதையும் கதை கேட்டு மகிழ்வதையும் இல்லாமல் செய்துவிட்டன.  குழந்தைகளுக்கு நாம் கதை சொல்லும்போது கதை சொல்லச் சிந்திக்கிறோம்.  கேட்கும் குழந்தையும் யோசிக்கிறது, கேள்வி கேட்கிறது.  நவீன ஊடகங்கள் இந்த ஊடாடல் இல்லாமல் செய்து விட்டது.  இதனால் நேர்ந்து விட்ட கற்பனை வறட்சி தமிழில் குழந்தை இலக் கியத்தைப் பாதித்துள்ளது.
உலகமயம், நுகர்வுக் கலாசாரத்தைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது.  அது மொழி, கல்வி,

குடும்பம், சமூகம் என்று எல்லா அமைப்புகளையும் பாதித் துள்ளது.  உலகமயம் தன் நோக்கத்திற்கேற்ப எல்லா வற்றையும் புரட்டிப் போடுகிறது.  இதனால் மனித வாழ்க்கையின் பன்முகத் தன்மைகள் நெருக்கடிக் குள்ளாகின்றன.  “சூப்பர் மேன்”, “ஸ்பைடர் மேன்” தமிழ்க் குழந்தைகளின் கதாநாயகர்களாகிவிட முடியாது.  நம் மண்ணுக்குரிய தலைமகனை குழந்தை களுக்கு ஆதர்ச பாத்திரமாக்கிக் காட்டத் தவறி விட்டோம்.  வாழ்க்கையைப் பற்றிய சரியான மதிப்பீடுகளைக் குழந்தைகளுக்கு உருவாக்கும் இலக்கியத்தைப் படைக்கத் தவறி விட்டோம்.

அந்தகார இருட்டில் வானில் மின்னும் நட்சத் திரங்களைப்போல் சோவியத்தில் உருவான குழந்தை இலக்கியத்தின் தமிழ் மொழிபெயர்ப்புகள் இருந்த காலத்தை மறந்துவிட முடியாது.  ஆனால் அந்த மொழிபெயர்ப்புகள் குழந்தையின் பற்களுக்குப் பதமானவை அல்ல.  அறிவியல், எதார்த்தம் சார்ந்த குழந்தை இலக்கியத்தின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு தமிழில் குழந்தை இலக்கியம் பிறப் பெடுத்திருக்க வேண்டும்.  அது முழுமையாக நடை பெறாமல் போனதும் தமிழில் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்குக் காரணமென்பேன்.  தமிழில் துளிர், அரும்பு போன்ற இதழ்களின் முயற்சிகளை நாம் அறிவோம்.  அவை தமிழில் குழந்தை இலக்கியத்தின் திசை வழியை நிர்ணயிக்கும் பேராற்றலுடன் இல்லை.

தமிழில் குழந்தை இலக்கியத்தைப் பலவீனப் படுத்தும் காரணிகளில் முக்கியமானது நமது கல்வி முறையின் தோல்வி.  அது குழந்தைகளுக்கு, படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.  வறுமை, கோடிக்கணக்கான குழந்தைகளைப் பள்ளிக்கு வெளியே நிறுத்தியிருக்கிறது. 

இந்தியாவில் 12 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.  குழந்தையின் உரிமைகள் காக்கப்படாத நிலையில் குழந்தை இலக்கியம் யாருக்காக? நம்மைப் பலவீனப் படுத்தும் காரணிகளை முதலில் அறிவோம், அகற்று வோம்! ஆக, சமூக அக்கறையுடன் கூடிய முயற்சி களே தமிழில் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சியை மாற்றும் மருந்து என்று நான் நினைக்கிறேன்.  இன்னும் தொடர்ந்து விவாதிப்போம்!

Pin It