இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி.  இக்காலக் கண்ணாடி காலந்தோறும் சமூகத்தில் நிகழும் இன்ப துன்பங்கள், ஏற்றத்தாழ்வுகள், நிறைவேறாத ஆசைகள், போர் முறைகள், வழிபாடுகள், இயற்கைப் பேரழிவுகள் முதலியவற்றை ஆவணப்படுத்துகிறது.  இவ்வா வணங்கள் பின்னர் வரலாறாகப் பரிணமிக்கிறது.  குறிப்பாக, தமிழரின் திருமணமுறை எங்ஙனம் நிகழ்ந்தது என்பதை அறியவேண்டுமெனில் நமக்குச் சங்க இலக்கியமான அகநானூறு துணையாக நிற்கிறது.  இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஒரு புதிய பிரச்சினையோ அல்லது ஒரு புதிய கருத் தாக்கமோ உருப்பெற்றால் நமக்கு ஆதாரமாக இருப்பது தொல்காப்பியமும் சங்க இலக்கியமுமே.  இன்றைய சூழலில் நாட்டையே கலங்க வைக்கும் பாலியல் வல்லுறவு இலக்கியங்களில் இடம் பெற்று உள்ளதா? அங்ஙனம் இடம்பெற்றால் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது? பாலியல் வல்லுறவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை எத்த கையது என ஆராய்வது இக்கட்டுரையின் நோக்க மாகும்.

ஆண், ஒரு பெண்ணுடன் கொள்ளும் பலவந்த மான உடலுறவை, கற்பைச் சூறையாடுதல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, வன் புணர்ச்சி, பாலியல் வல்லுறவு ஆகிய பெயர்களில் அழைக்கின்றனர்.  இச்சொற்கள் எப்படி வளர்ச்சி பெற்றதோ, அதைப் போன்று பாலியல் வல்லுறவிலும் ஆண்கள் புதிய புதிய உத்திகளைக் கையாளுகின்றனர்.  குறிப்பாக, ஆண்கள் பெரும்பாலும் பாலியல் வல்லுறவுக்குமுன் போதைப்பொருட்களை உட் கொள்வதும், பாலியல் வல்லுறவுக்குப்பின் பெண்களின் பிறப்புறப்புகளையும், மார்பகங்களையும் சிதைப்பதும்; அப்பெண் உயிரோடிருந்தால் தனக்குத் தண்டனை கிடைத்துவிடும் எனக் கருதி அப்பெண்ணைக் கொலை செய்வதும் இயல்பாகி விட்டது.

“மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படு வார்” (குறள்: 1289)

மனித வாழ்க்கையில் இயற்கையாய்த் துய்க்க இருக்கும் இவ்வுணர்வைச் சமூக ஒழுங்குகெடாமல் அளவோடிருக்க வேண்டும் என்றார் வள்ளுவர்.  ஆனால், இன்று பன்னாட்டு நிறுவனங்களின் வர வாலும், நுகர்வுக் கலாசாரத்தாலும் பார்க்கும் இடங் களெல்லாம் பாலியல் உணர்வைத் தூண்டும் படங்கள், விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள், உடலுறுப்புகள் தெரியும் கவர்ச்சியுடைகள், பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் உணவுகள் எனச் சிக்குண்டு சமூக ஒழுங்கே கெட்டுவிடுகிறது.

“காதலுக்கு நான்கு கண்கள்
கள்வனுக்கு இரண்டு கண்கள்
காமுகனின் உருவத்தில்
கண்ணுமில்லை காதுமில்லை”

என்கிறார் மருதகாசி.  இவரின் கூற்றிற்கிணங்க காம வெறியர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம், அறம், மனித நேயம், கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு, நல் லொழுக்கம் முதலிய மனிதப் பண்புகளில் நாட்ட மில்லை.  இவர்களின் நோக்கமெல்லாம் உடல் மற்றும் உள்ள இச்சைகளைத் தணிப்பதேயாகும்.

தொல்காப்பியர் களவியலில் ‘மறையோர் தேஎத்து மன்றலெட்டனுள்’ என்று குறிப்பிடு கிறார்.  அதாவது, பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய எண்வகைத் திருமணமுறைகளில் இராக்கதம், பைசாசம் ஆகிய இரண்டும் பாலியல் வல்லுறவைக் குறிக்கின்றன.  பெண் விரும்பாமலும், பெற்றோர் கொடாமலும் இளைஞன் வலியவந்து திருமணம் செய்து புணர்வது இராக்கதம்; கள்ளுண்டு களித்தும், துயில்பவளைப் புணர்வதும் பைசாசமாகும்.

சங்க காலத்தில் தோன்றிய இலக்கியமான அகநானூற்றில் தலைவன் தலைவியைவிட்டுப் பரத்தை யோடு வையையாற்றில் புனலாடுகிறான்.  இதைக் கண்ட தோழி, தலைவியிடம் தலைவனின் செயலைக் கூறுகிறாள்.  உடனே தலைவி தலைவனைக் கண்டிக் கிறாள்.  அதற்குத் தலைவன் ‘அவ்வாறு நிகழவில்லை யென’ மறுக்கிறான்.  அப்பொழுது பின்வரும் நிகழ்வைச் சுட்டி ‘இச்செயலைவிட நின் செயல் பெரியது’ என்கிறாள்.

“கரும்பு அமல் படப்பை, பெரும்பெயர்க் கள்ளூர்,
திருநுதற் குறுமகள் அணிநலன் வவ்விய
அறனிலாளன், ‘அறியேன்’ என்ற
திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி,
நீறுதலைப் பெய்த ஞான்றை,
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே”
(அகநானூறு, பா. 256: 15-20)

‘கள்ளூர்’ என்னும் ஊர் பழமையானதாகும்.  இவ்வூர் பலவகையான பூக்கள் நிறைந்த அழகிய வயல் களையும், கரும்புத் தோட்டங்களையும் கொண்டது.  அழகிய நெற்றியினையுடைய இளையாள் ஒருத்தி யுடன் கூடி, அவளின் அழகிய நலத்தினைத் தீவினையே தொழிலாகக் கொண்ட ஒருவன் நுகர்ந்து விடு கிறான்.  அதன்பின் அவளை நாடி அவன் வரவே இல்லை;  அவளைக் கைவிட்டு விடுகிறான்.  அந்நிலையில் என்ன செய்வதென்று அறியாத அந்நங்கை இறுதி யாகச் சான்றோரிடம் முறையிட்டுக் கதறுகிறாள்.

அவளின் துயர்நிலை கேட்ட சான்றோர், அத் தீயவனை அழைத்து விசாரிக்கின்றனர்.  அத் தீயவனோ சற்றும் மனசாட்சியின்றி ‘இதற்குமுன் இவளை அறியேன்’, ‘இவள் யார் என்பதுகூடத் தனக்குத் தெரியாது’ என்றும் துணிவுடன் பொய்ச் சூள் கூறி அவளை ஏற்க மறுக்கிறான்.  நீதியிலா அவனின் சூளினை நன்கு ஆய்ந்த அவையினர், அவன் கூறியது முற்றிலும் பொய் என்பதைத் தக்க சாட்சியாளர் கூற்றினால் தெளிவடைகின்றனர்.  அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவுசெய்து, இத்தண்டனையை மக்கள் முன்னிலையில் வழங்குகின்றனர்.

தளிர்கள் பொருந்திய மூன்று கவராய கிளை களின் நடுவே அவனை இறுகப் பிணித்துக் கட்டி, அவன் தலையில் அதிக அளவில் சுண்ணாம்புத் தண்ணீரினை ஊற்றினர்.  சுண்ணாம்புத் தண்ணீர் தன் தலையில் பட்டதினால் எரிச்சல் தாங்காமல் அவன் துடிக்கிறான்.  ‘ஐயோ’ என்று அலறுகின்றான்.  அவன் துடிப்பதைக் கண்ட ஊர்ப்பொதுமக்கள் அவன்மேல் இரக்கம் கொள்ளாமல், மாறாக ‘இது அவனுக்குச் சரியான தண்டனையே’ என்று மகிழ் கின்றனர்.  இவ்வாறு சங்ககாலத்தில் பாலியல் வல்லுறவு செய்த ஆடவனுக்குத் தண்டனை வழங்கப் படுகின்றது.  இத்தகைய நிகழ்வு பெரும்பாலும் மிகுதியாகவில்லை.  சங்க கால மக்கள் களவு வாழ்க் கையில் ஈடுபட்டு, பின்னர் கற்பு நெறியில் வாழ்ந்தனர்.  இல்வாழ்க்கையின் பயனால் மிகுதியான குழந்தை களைப் பெற்றெடுத்தனர்.  இத்தகைய நிலையில் ‘காமம்’ என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட ஒழுக்கம் சார்ந்த பண்பாக இருந்தது.  ஆனால் இன்று தனி மனித ஒழுக்கம் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது.

“பாரா வாரப் பல்வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப்பாளன் ஒருமகள் உள்ளேன்
ஒருதனி அஞ்சேன் ஓராநெஞ்சமொடு
ஆரா மத்திடை அலர்கொய்வேன்தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
திருவிழை மூதூர் தேவர் கோற்கு எடுத்த
பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரான் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் விசும்பில்
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்குஅவன் ஈங்குஎனை அகன்று கண்மாறி
நீக்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும்
மணிப்பூங் கொம்பர் மணிமேகலைதான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்”
(மணிமேகலை, மலர்வனம்புக்ககாதை, பா. 28-43)

சங்கமருவிய காலத்தில் தோன்றிய மணிமேகலையில் பாலியல் வல்லுறவு செய்தற்கான நிகழ்வு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.  “பரந்துபட்ட கடலிலிருந்து கிடைக்கும் வளம் நிறைந்த வேளாளர் நகரமான ‘சண்பை’ நகரத்தில் வாழும் ‘கௌசிகன்’ என்னும் அந்தணனின் ஒரே மகள் நான்(சுதமதி).  ஒரு நாள் ஒற்றையாகத் தனிவழியாகச் செல்ல அச்சப் படாமல் எதையும் யோசிக்காத பேதை மனதுடன் பூங்காவில் சென்று பூப்பறித்துக் கொண்டிருந்தேன்.  அந்த நேரத்தில் ‘மாருதவேகன்’ என்னும் விஞ்சையன் ஒருவன், திருமகளே விரும்புகின்ற பழம்பெரும் நகரமான காவிரிப்பூம்பட்டினத்திற்கு இந்நிர விழா வினைக் காண வந்திருந்தான்.  பூமாலையும் பொன் மாலையும் அணிந்தவனாக உலக மக்கள் கண்டிராத, பலரும் தொழும் தேவவடிவிலே அவன் தோற்ற மளித்தான்.  அவன் என்னை அப்படியே தூக்கிக் கொண்டு வானத்து வழியே சென்று தன் வயப்படுத்தி விட்டான். 

நான் ஏதும் செய்யத் தோன்றாமல் அவனுக்கு இணங்கிவிட்டேன்.  பின்னர் அவன் என்னை அருளில்லாமல் இங்கே விட்டுவிட்டு நொடிப்பொழுது நேரத்தில் தொலைவில் இருக்கும் தன் ஊருக்குச் சென்றுவிட்டான்” என்கிறாள் சுதமதி.  இந்நிகழ்வில் அந்தணரின் மகளான சுதமதியை ‘மாருதவேகன்’ என்னும் விஞ்சையன் பாலியல் வல்லுறவு செய்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இப்பனுவல் எவ்வகையில் உண்மையெனப் புரிய வில்லை.  அந்தணர்கள் தங்களை மேன்மைப்படுத்து வதற்காகவோ அல்லது சமணர்கள் அந்தணர்களை இழிவுபடுத்துவதற்காகவோ பதிவு செய்திருக்கலாம்.

நவீன இலக்கியமான கவிதைகளிலும் புனை கதைகளிலும் பாலியல் வல்லுறவு பற்றிய நிகழ்வுகள் மிகுதியாக இருக்கின்றன.  குறிப்பாக, பொன்னீலனின் கரிசல், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது, கொள்ளைக்காரர்கள், தேடல் முதலிய வற்றிலும், தஞ்சை பிரகாஷின் மீனின் சிறகுகளிலும், கு.சின்னப்பபாரதியின் சங்கத்திலும், இராஜம் கிருஷ்ணனின் சேற்றில் மனிதர்களிலும், பூமணியின் பிறகிலும், சு.சமுத்திரத்தின் வாடாமல்லி, பாலைப் புறா முதலியவற்றிலும், ச.பாலமுருகனின் சோளகர் தொட்டியிலும், டி.செல்வராஜின் தோலிலும் பாலியல் வல்லுறவு சார்ந்த நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.

பொன்னீலனின் கரிசல் என்னும் புதினத்தில் வயது முதிர்ந்த கிழவன், தன் பண்ணையில் வேலை செய்யும் இளம் பெண்ணைப் பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறான்.  இதனை,

“முதலாளி வேட்டை நாய் போல் அவள் மேல் பாய்ந்தார்.  மூக்காளி பிடி கொடுக் காமல் போக்குக் காட்டிப் பார்த்தாள்.  அவரிடமிருந்து தப்ப முடியாதென்பது அவளுக்கு உறுதியாயிற்று.  வேதனை தாங் காது குமுறிக் குமுறி அழுதவாறு அவள் சொன்னாள்.  ‘இந்தா.... இந்த ஒடம்பு தான வேணும்.  என்ன வேணும்னாலும் செஞ்சிக் கிட்டுப்போ... செஞ்சி முடிச்சதும் எங்கயாச்சும் தூக்கிக் கொண்டு போட்டுப் பொதச்சிரு.  உம்! உனக்கு ஒஞ்சொகந்தான் பெரிசு.  வா, ஆத்திரத்தத் தீத்திடு!’ கத்திக் கொண்டே அவள் தன் ஆடையைக் கழற்றி வீசிவிட்டுத் தரையில் விழுந்தாள்” (பொன்னீலன், கரிசல், ப. 146).

இச்சான்றாதாரத்தின் மூலம் பாலியல் வல்லுறவுக் குள்ளான பெண் தன் இருப்பின் வலியை, காயத்தை, வேதனையைக் குறிப்பிடுகிறாள்.சு.சமுத்திரத்தின் ‘பாலைப்புறா’ என்னும் புதினத்தில் பணிச் சுமைகளாலும், குடும்பப் பிரச்சினைகளாலும் உழலும் பெண்கள் கடற்கரையில் தங்கள் மனஅழுத்தத்தைக் குறைக்கச் சென்றால் காமவெறியர்கள் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்கின்றனர்.  இதனை,

“இவங்க பேட்டை ரவடிங்க மாதிரி கடற் கரை ரவுடிங்க.  பொல்லாத போக்கிரிங்க.  கற்பழிக்கிறதுக்குன்னு சுத்துறவங்க.  போராட முடியாது” (சு. சமுத்திரம், பாலைப்புறா, ப. 254).

சென்னை, மெரீனா கடற்கரையில் மாலை நேரங்களில் ஆணும் பெண்ணும் பொது வெளியில் எந்தவொரு தயக்கமுமின்றி உடலுறவு கொள்வது ஒருபுறமும்; மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் ஆண்களை அழைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது மறுபுறமும் நிகழ்கின்றன. இப்படி திறந்தவெளியில் காமக்களியாட்டத்தைக் கண்ட வளர்இளம் பருவத்துச் சிறுவர்களும், இளைஞர்களும் உணர்ச்சிவயப்பட்டு, பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்ய முயலலாம்.

ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ என்னும் புதினத்தில் வீரப்பனின் தேடுதலின்போது ‘சோளகர்’ என்னும் மலைவாழ் இளம்பெண்களைக் காவலர்கள் கூட்டு வல்லுறவு செய்தும், அவர்களின் மார்பகங் களிலும், பெண்ணுறுப்புகளிலும் மின்சாரத்தைச் செலுத்தியும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.  மக்களின் உரிமைகளையும், நீதிகளையும் காக்கும் காவல் நிலையங்கள் இன்று பாலியல் வல்லுறவுக் கூடங் களாக மாறிவிட்டன.  இதனை,

“இராத்திரி நெறைய ஆளுங்க வந்து என்னைத் தூக்கிட்டுப் போயி கெடுக்கறாங்க.  இந்தப் போலீஸ்காரர்தான் ஆளுங்களைக் கூட்டி வந்து கெடுத்தாரு” (ப. 214).

“மாதியின் சேலையை உருவி அம்மண மாக்கச் சொன்னார்கள்.  அவளை அம் மணமாக நிறுத்தியபோது, செல்வியை, மாதியின் உறுப்பில் மெக்கர் பெட்டியின் கிளிப்பை மாட்ட உத்தரவிட்டான் அதிகாரி.  செல்வி தயங்கினாள்.  ‘இரத்தப்போக்கு’ என்றாள்.  ‘நீயும் துணியை அவிழ்த்துக் கொள்’ என்றதும், அவள் மாதிக்குக் கிளிப் பை மாட்டினாள்.  மேக்கர் பெட்டியைச் சுற்றிப் பொத்தானை அழுத்தியதும் சப்த மிட்டு மாதி மயங்கிப் போனாள்.  அவள் கண்கள் மேலே பார்த்து நெட்டுக் கொண்டது போலிருந்தது.  சித்தி, மாதியின் மீது புரண்டு கத்தினாள்.  இரண்டு போலீசார் பக்கத்தில் வந்து பார்த்தார்கள்” (ச.பால முருகன், சோளகர் தொட்டி, ப.223, 2004).

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களான சோளகர்கள் தங்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளுக்கு நீதிமன்றங்களை நாட வில்லை என்பது வருத்தத்திற்குரியது.  ஆனால், மனித உரிமை ஆர்வலரான ச.பாலமுருகன் அம் மக்களின் துன்பங்களையும் இன்னல்களையும் தன் படைப்பின் வழியாக வெளிப்படுத்தியது பாராட்டுக் குரியது.  இன்று தில்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த விவாதத்தைப் போன்று 1983இல் எல்லா நாளேடுகளும் விரிவாக விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட வழக்கு பதினாறு வயதுடைய ‘மதுரா’ என்னும் மலைவாழ் பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வல்லுறவு வழக்காகும்.

மகாராஷ்டிர மாநில சந்திராபூர் என்னும் நகரின் தேசாய் கஞ்ச் காவல் நிலையத்தில் தங்கள் வீட்டில் நிகழ்ந்த திருட்டு பற்றிய குற்றச்சாட்டைப் பதிவு செய்ய மதுராவின் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வெளியே காத்திருந்தனர்.  ஆனால், மதுராவை மட்டும் அழைத்து இரண்டு காவலர்கள் பாலியல் வல்லுறவு செய்தனர்.  இப்பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்றது.  ஆனால், இறுதியில் காவலர் இருவரும் வல்லுறவு செய்யும்போது, ‘அந்தப்பெண் (மதுரா) சத்தம் ஏதும் போடாமல் இணக்கமாக இருந்தாள்’ எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

1992ஆம் ஆண்டு ‘வாச்சாத்தி’ என்னும் ஊரில் சந்தனமரம் தேடுதலின்போது மலைவாழ் பெண் களைப் பதினேழு பேர் பாலியல் வல்லுறவு செய்தனர்.  இவர்களில் பெரும்பாலும் வனத்துறை, காவல் துறை உயர் அதிகாரிகளும் வருவாய் ஆய்வாளர் களும் ஆவர்.  இவர்கள் செய்த குற்றத்திற்குத் தண்டனை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது.  ஆனால், இன்னும் அம்மக்களுக்கு முழுமையான நீதி கிடைக்கவில்லை.

டி.செல்வராஜின் ‘தோல்’ என்னும் புதினம் 2011க்கான சிறந்த புதினமாகத் தேர்வு செய்யப்பட்டு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றது.  இப் புதினம் ‘தோல்’ பதப்படுத்தும் தொழிலகத்தில் பணிபுரியும் கீழ்ச்சாதிப் பெண்ணை, இஸ்லாமிய ஆண், பாலியல் வல்லுறவு செய்கிறான்.  அதனால் அப்பெண் மருத்துவப் பலனின்றி இறந்துவிடுகிறாள்.  இதனை,

“அடி ஆத்தே, இந்த அக்குருவத்தைக் கேக்க நாதியில்லையா? நேத்து ருசுவாயி வந்திருக்க பச்சைமண்ணெ, அம்மணமா ஆக்கிப் பருந்தாட்டமா தூக்கிட்டுப் போரானே” (டி.செல்வராஜ், தோல், ப.3).

“முஸ்தாபா தனது இடதுகரத்தால், துடித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைத் தூக்கிப் பிடித்த வண்ணம் அவர்களை ஏளனமாகப் பார்த்தான்.  அவனால், நிர்வாணப்படுத்தப்பட்ட சின்னக்கிளி, வேடன் கையில் சிக்கிய பறவையாகத் துடித்துக் கொண்டிருந்தாள்.  பிறகு, தனது இச்சையைப் பூர்த்தி செய்யும் முகத்தான், அவளைத் தூக்கிக் கொண்டு, தோல் ஷாப்பு ஸ்டோர் ரூமுக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டான்.  அந்த இளம் பிள்ளையின் கதறல் மட்டும் ஏகாந்தமாக அந்தப் பிர தேசத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தது” (டி.செல்வராஜ், தோல், ப.4).

“அந்தப் பெண்ணின் யோனி பிளந்து உதிரம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.  தாமரை மொட்டுக்கள் போன்ற மார் பகங்கள் கடித்துக் குதறப்பட்டுச் சிதைந்து போயிருந்தன.  அஞ்சலைக் கிழவி தனது மாராப்புச் சேலையைக் கிழித்து அவளது மானத்தை மறைத்தாள்” (டி.செல்வராஜ், தோல், ப. 6).

டி. செல்வராஜின் தோல் என்னும் புதினத்தில் சின்னக்கிளிக்கு நிகழ்ந்த நிகழ்வு கற்பனையல்ல.  அவை உண்மை நிகழ்வு என்றார் இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு.  அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் “சின்னக்கிளி என்ற பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்து உடம்பைச் சிதைத்த தால் அவள் இறந்தாள்.  இறந்த பெண்ணின் சடலத்தை முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் அமிர்தலிங்கம் ஐயரின் (கதையில் சுந்தரேச அய்யர் என்னும் பாத்திரம்) மகன் பாலசுப்பிர மணியன் (கதையில் சங்கரன் என்னும் பாத்திரம்) தூக்கிச் சென்று புதைத்தார்.  இந்த நிகழ்வைத் தான் நண்பர் டி.செல்வராஜ் பதிவு செய்திருக் கிறார்”.  (டி.செல்வராஜுக்கு நிகழ்ந்த பாராட்டு விழா உரை, 36ஆவது சென்னைப் புத்தகக் கண் காட்சி மேடை, நந்தனம், சென்னை, 17. 1. 2013, மாலை 6 மணி) என்றார்.

சமகாலத்தைப் பாலியல் வல்லுறவுக் காலம் என்றே கூறலாம்.  உலகமயமாதல், சந்தைப் பொரு ளாதாரம், நுகர்வுக் கலாசாரம் என்ற கருத்தாக்கங் களின் மனித மனம் மரத்துப்போனது.  தினந்தோறும் நாளேடுகளில் திருப்பும் பக்கங்களெல்லாம் பள்ளி களில் ஆசிரியர்களும், காவல் நிலையங்களில் காவலர்களும், அலுவலகங்களில் சகஊழியர்களும், பொது இடங்களில் இளைஞர்களும் எனப் பெண் களை வயது வேறுபாடின்றிப் பாலியல் வல்லுறவு செய்வதும், பிறகு அவர்களைக் கொலை செய்வதும் வழக்கமான செய்திகளாகிவிட்டன.

தில்லியில் டிசம்பர் 16, 2012 அன்றிரவு, 23 வயதுடைய மருத்துவ மாணவியும், அவளது நண்பரும் தனியார் பேருந்தில் பயணித்தனர்.  அப் பொழுது பேருந்து ஓட்டுநரின் நண்பர்கள் ஆறு பேர் மது அருந்திவிட்டு, அவளது நண்பரை அடித்து மயக்கமடையச் செய்து, அப்பெண்ணைக் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்தனர்.  இறுதியில் இருவரையும் பேருந்திலிருந்து தூக்கி எறிந்து விட்டுச் சென்றனர்.  இந்நிகழ்வால் இளைஞர்-இளைஞிகள் கோபமுற்று மூன்று நாட்கள் (டிசம்பர் 22-24) போராட்டம் நடத்தினர்.  நாட்டின் முக்கிய ஆளுமைகளும் ஊடகங்களும் பாலியல் வல்லுறவு பிரச்சினைக்குத் தீனி போட்டனர்.

ஒரு பெண், தன் கற்பை பலவந்தமாகச் சூறை யாட ஓர் ஆண் நினைக்கும்போது என்ன செய்ய வேண்டுமென மகாத்மா காந்தியிடம் கேட்ட போது, “அவனைத் தடுத்து நிறுத்த தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்து, கையில் கிடைத்த எல்லா ஆயுதங்களையும் உபயோகித்து, தன் கற்பைப் பாதுகாக்க வேண்டும்.  எதுவுமே கிடைக்காவிட்டால் தனது கூரிய நகத்தினையும், பற்களையும் உபயோகித்து அவனைத் தாக்க வேண்டும்.  அதுவும் பயனளிக்காவிடில், தன் உயிரை மாய்த்துக் கொள்ளலாம்” என்றார்.  இதன்படி அவ்வீரமங்கையும் காமவெறியர்களிட மிருந்து தப்ப முயன்றார்.  ஆனால் முடியவில்லை.  அவர்கள் அப்பெண்ணின் சிறுகுடலை இரும்புக் கம்பியால் கிழித்ததால் பதினாறு நாட்களுக்குப் பின் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர்பிரிந்தது.  ஆனால், இத்தகைய பிரச்சினைகளுக்குப் பிறகும், எந்த ஓர் அரசும் தொலைநோக்குப் பார்வையில் செயல்படவில்லை. இளைஞர்-இளைஞிகளும் உணர்வுபூர்வமான முடிவுகளை எடுக்கவில்லை.

1953-இல் இந்தியாவில் முதன்முதலாகப் பெண்கள் கற்பழிப்பு தொடர்பான குற்றங்களைக் கணக்கெடுக்க தேசிய குற்றப்பட்டியல் மையம் தொடங்கப்பட்டது.  இது தேசிய காவல்துறையின் ஒரு அங்கமாகும்.  இது தனது முதல் அறிக்கையை 1971இல் வெளியிட்டது.  இவ்வறிக்கையின்படி 1971இல் 2, 043 கற்பழிப்புக் குற்றங்கள் பதிவு செய்த தாகக் குறிப்பிடுகிறது.  2011இல் 24, 206 கற்பழிப்பு பற்றிய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மேலும், ஒவ்வொரு இருபத்திரண்டு நிமிடங்களுக்குள் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றாள்.  இத்தகைய நிகழ்வுகளில் 94.2 விழுக்காடு அந்தப் பெண்ணுக்குப் பரிச்சயமானவர்களாலேயே நிகழ்கிற தெனத் தேசிய குற்றப்பதிவுத் துறை குறிப்பிடுகிறது.  மொத்த பாலியல் வல்லுறவுகளில் பெற்றோர்களாலும், நெருங்கிய உறவினர்களாலும் நிகழ்ந்தவை 1.2 விழுக்காடு, அக்கம்பக்கத்தினரால் நிகழ்ந்தவை 34.7 விழுக்காடு.  உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நிகழ்ந்தவை 6.9 விழுக்காடு.  எனவே, இப்புள்ளி விவரங்களின்படி பெண்கள் யாராக இருந்தாலும் எச்சரிக்கையுடனே பழக வேண்டும்.

தொல்காப்பியத்தில் எண்வகை மணமுறை களில் ஏழு மணமுறை ஆரிய மரபுகளாகும்.  இவற்றில் இராக்கதமும் பைசாசமும் பாலியல் வல்லுறவைக் குறிக்கின்றன.  சங்க இலக்கியமான அகநானூற்றில் குறிப்பிடப்படும் பாலியல் வல்லுறவும் அதற்கான தண்டனையும் தலைவி முன்பு நிகழ்ந்ததை எடுத்தியம்பு வதாக அமைகிறது.  ஆகவே, இத்தகைய இழி செயல் தமிழர் மரபன்று.  மணிமேகலையில் இடம் பெறும் சுதமதியைப் பாலியல் வல்லுறவு செய்த மாருதவேகன் பற்றிய கருத்தும் மிகைப்படுத்திக் கூறியதாக இருக்கலாம்.  ஆகவே, தமிழ்ச் சமூகம் என்பது பண்பட்ட மனிதர்களாகவும், காமத்தை இலைமறை காயாகத் துய்த்தவர்களாகவும் வாழ்ந் தனர் என்பதற்கு ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்னும் சங்கப்பாடல் சான்றாகும்.  ஆனால், இன்றைய சூழலில் ‘நாகரிகம்’ என்ற பெயரில் பெண்கள் தங்கள் உள்ளுறுப்புகளை வெளியில் தெரியுமாறு ஆடையுடுத்துவதும், ஆண்கள் ‘பர்மிடாஸ்’ என்ற பெயரில் ஆண்குறி நீள்வது தெரிவதுபோல உடுத்துவதும் இழிநிலையாகும்.  எனவே, கல்வி நிறுவனங்களிலும், பொது இடங் களிலும் பாலியல் வக்ரங்களைத் தூண்டாதவாறு ஆடையுடுத்த வலியுறுத்த வேண்டும்.

பெரும்பாலும் ஆண்கள் மதுபானங்களை அருந்திவிட்டுப் பாலியல் வல்லுறவில் ஈடுபடு கின்றனர்.  ஆகவே, அரசு இலாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.  பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்ட பெண்களின் நிழல்படத்தையோ அல்லது அவர் களின் பெயரையோ வெளியில் தெரியாதவாறு அரசும் ஊடகங்களும் மனிதநேயத்தைக் கடைப் பிடிக்க வேண்டும்.

பாலியல் வல்லுறவில் ஈடுபடும் ஆண்களுக்கு மரணதண்டனை விதிப்பதாலோ அல்லது அவர் களின் ஆணுறுப்பைக் காயடிப்பதாலோ முழுத் தீர்வாகிவிடாது.  அது மேலும் பாலியல் வல்லுறவு செய்த பெண்ணைக் கொலை செய்யவே தூண்டும்.  பாலியல் வல்லுறவை முற்றிலுமாக அகற்ற சமூகம், சட்டம், காவல்துறை, நீதித்துறை ஆகிய அனைத் திலும் மாற்றங்களைக் கொண்டு வந்து, அவர் களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மனரீதியான மாற்றத்தைக் கொண்டுவருவதாக இருக்க வேண்டும்.

Pin It