நீலநிற ஆவணம்

தண்ணீர் பற்றி எண்ணற்ற நூல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. நீர் நெருக்கடிநிலை பற்றி இருபதாவது நூற்றாண்டில் ஒட்டுமொத்தமாக வெளிவந்த அறிக்கைகள், ஆவணங்கள், நூல்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் அறிக்கைகளும் ஆவணங்களும் நூல்களும் இருபத்தியோராவது நூற்றாண்டின் முதல் ஏழு ஆண்டுகளில் வெளிவந்து விட்டன. இதற்குக் காரணம் தண்ணீர் பற்றாக்குறைதான் இன்றைய காலகட்டத்தில் நம்மை எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் சார்ந்த மிகப்பெரும் சவால் என்பது உணரப்பட்டுவிட்டது என்று உலக நீர் நிறுவனம் கூறுகிறது.

நீர் பற்றாக்குறை - நெருக்கடி சம்பந்தமாக எண்ணற்ற நூல்கள் வெளிவந்தாலும் கூட, எல்லாமே சாமானியத் தரப்பு மக்களுக்குப் புரியக்கூடியவை அல்ல. சாமானிய மக்களுக்காக எழுதப்படும் நூல்கள் கூடத் தெளிவான முறையில் எழுதப்படாததால் - நாம் புரிந்துகொண்டு பயன்பெற முடியும் என்று கூறுவதற்கில்லை. நாம் இப்போது விமர்சனத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள நூல் தெளிவான முறையில் எழுதப்பட்டுள்ளது. மிகவும் பயன்தரும் தகவல்கள் இதில் தரப்பட்டுள்ளன. இதைப் படிப்பதன் வாயிலாக நம்மால் நீர் நெருக்கடிப் பிரச்சினையின் கூறுகளையும் பரிமாணங்களையும் புரிந்துகொள்ள இயலும்.

இந்த நூலின் முன்னுரை மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. நூலில் தாம் கூறப்போகும் விஷயங்களை ரத்தினச் சுருக்கமாக ஆசிரியர் முன் வைத்துள்ளார். முதலாவது அத்தியாயம் “எல்லாத் தண்ணீரும் எங்கே போயிற்று” என்கிற தலைப்பைக் கொண்டது: ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தரப்படுகிறது. “போர்கள், மலேரியா, ஹெச்.ஐ.வீ., எய்ட்ஸ் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக இறக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் அசுத்தமான நீரைப் பருகுவதன் காரணமாக இறக்கிறார்கள். உலகளாவிய நீர் நெருக்கடி நிலவரம் உலகில் நிலவும் சமத்துவமற்ற நிலையைச் சம்மட்டி அடி போலச் சுட்டிக் காட்டுகிறது.

உப்பினை அகற்றும் எந்திரங்கள் (டிசாலைநேஷன் ப்ளாண்ட்ஸ்) பற்றிய நிலவரம்:

உலகின் சமுத்திரங்களைச் சுற்றி உப்பகற்றும் எந்திரங்கள் நிறுவப்படும். பெருமளவிலான எந்திரங்கள் அணுசக்தியைக் கொண்டு இயக்கப்படும். சாக்கடைத் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு நுண்தொழில்நுட்பம் (நானோடெக்னாலஜி) பயன்படுத்தப்படும். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தத் தண்ணீரைப் பெரும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும். அத்தனியார் நிறுவனங்கள் நம்மிடம் அத்தண்ணீரை அதிக விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் அடிக்கும். பணக்காரர்கள் உலகில் எஞ்சியுள்ள நல்ல நீர் நிலைகளிலிருந்து வெளிவரும் தண்ணீரையோ மேகங்களிலிருந்து அறுவடை செய்யப்படும் தண்ணீரையோ அருந்துவார்கள். சாமானிய மக்கள் தண்ணீர் கிடைக்காமல் மாண்டு போவார்கள்.

உலகின் அனைத்துப் பகுதிகளிலுமே நல்ல தண்ணீரின் இருப்பு குறைந்து வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை 75 விழுக்காடு நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் மாசுபட்டுள்ளது. அந்த நீரைக் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாது. 70 கோடிக்கு மேலான இந்தியர்களுக்கு - கிட்டத்தட்ட நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு ஜனத்தொகையிலான மக்களுக்குப் - போதுமான சுகாதார வசதிகள் கிடையாது. ஆண்டுதோறும் 21 லட்சம் குழந்தைகள் அசுத்தமான நீரைப் பருகுவதன் காரணமாகச் சாகின்றன. நாட்டின் தலைநகராகிய டில்லிக்கு குடிநீர் அளிக்கும் புகழ்வாய்ந்த யமுனாநதி - செத்துவிட்ட நதியாகும். மும்பை, சென்னை, கொல்கொத்தா நகர்களின் கடல்களில் அசுத்தமான துர்நாற்றமடிக்கும் கலங்கிய குழம்பு போன்ற நீர்தான் நிரம்பியுள்ளது. கோடிக் கணக்கான மக்கள் வழிபட்டு நீராடும் கங்கைநதி வெறும் திறந்த சாக்கடையாக உள்ளது.

நிலத்தடிநீர் குறைந்துகொண்டு வருகிறது

நிலத்தடி நீரின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்ததற்குப் பசுமைப் புரட்சிதான் காரணம். பயிர்களுக்கு வெள்ளம் போல் நீர் பாய்ச்ச வேண்டி இருந்ததால் நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டது. பசுமைப் புரட்சி காரணமாக உணவுத் தானியங்களின் உற்பத்தி கூடியது உண்மைதான். ஆனால் இதற்காக தண்ணீர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது கூடவே ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் அபாயகரமான அளவிற்குப் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கா முழுவதும் இப்படி நிகழ்ந்துகொண்டு வருகிறது. ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக ஐம்பது விழுக்காடு தண்ணீர் நிலத்தடியிலிருந்துதான் உறிஞ்சி எடுக்கப் படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இது 65 விழுக்காடு. இவ்வாறு உறிஞ்சப்படும் ஊற்றுகளில் மீண்டும் நீர் சுரப்பதற்கான வாய்ப்பு இல்லை.

நூலாசிரியர், உள்ளடங்கிய தண்ணீர் (வர்ச்சுவல் வாட்டர்) என்கிற சொல்லை நமக்கு அறிமுகப்படுத்து கிறார். உணவுத் தானியங்களை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் நீர் இவ்வகையானதுதான். கிட்டத் தட்ட ஆயிரம் கிலோ தண்ணீரை உள்வாங்கி ஒரு கிலோ நெல் உற்பத்தியாகிறது. இதுபோல் உணவுத் தானியங் களை ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு நாடும் எந்த அளவிற்கு உள்வாங்கிய நீரை ஏற்றுமதி செய்கிறது என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்! தண்ணீர் என்னவோ நேரிடையாக ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.

அரசியல் தலைவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்

நீர் நெருக்கடி என்கிற வால் நட்சத்திரம் தங்களை எதிர் நோக்கியுள்ளது என்பது சாமானிய மக்களுக்குத் தெரியாது. மிகவும் அபூர்வமாகவே சில தேர்தல்களில் தண்ணீர்ப் பிரச்சினை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் நாடுகளில்கூட நிலைமை அப்படித்தான் உள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் பெரும்பாலான நாடுகளில் உலகளாவிய நெருக்கடி எதுவும் கிடையாது என்பதுதான் அரசியல் வாதிகளின் கூற்றாக இருக்கிறது. புஷ் வெள்ளை மாளிகையில் அதிபராக இருந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட 400க்கு மேலான சட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. சுற்றுச் சூழல் ஒரு பிரச்சினையாக உருவெடுத்த காலத்திற்கே அமெரிக்காவை புஷ் இட்டுச் சென்றுவிட்டார்.

பெட்ரோலியம், காடுகள் மற்றும் கனிமப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாவது உலக நாடுகளின் நீர்வளங்களை மாசுபடுத்தி வருகின்றன. சில நாடுகள் எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளன. சில நாடுகள் அவ்வாறாக மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு உடந்தையாகச் செயல்படுகின்றன. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு இப்போதைக் காட்டிலும் மூன்று மடங்குத் தண்ணீர் தேவைப்படும். சைனா, பிரேசில், மலேஷியா நாடுகளிலும் அப்படித்தான். இருப்பினும் இந்நாடுகளின் எந்த அரசியல் தலைவருக்கும் இவ்வாறான முன்னேற்றம் தேவையா அல்லது சாத்தியமா என்பது பற்றிப் பேசுவதற்கான துணிச்சல் இல்லை.

இந்த அரசியல் தலைவர்கள் புதிய தொழில் நுட்பங்கள் வாயிலாகப் பிரச்சினைகளைச் சமாளித்து விடலாம் என்று தனியார் நிறுவனங்கள் கூறும் பொய்களை நம்பி இருக்கிறார்கள். கூடவே குறைந்து வரும் உலகின் நீர்வளங்கள்பற்றி முடிவுகள் எடுக்கும் பொறுப்பினைத் தனியார் துறை மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து விட்டார்கள். இந்த நெருக்கடி அந்த நிறுவனங்களுக்கு அதிகாரம் மற்றும் கொள்ளை லாபத்திற்கான ஒப்பற்ற வாய்ப்பினை நல்கியுள்ளது.

இந்நூலின் இரண்டாவது அத்தியாயம் “தண்ணீரைத் தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள்” ஆகும். உலகின் தென்பகுதி நாடுகள் நீர் வளங்களைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எவ்வாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றன என்று விளக்கப்படுகிறது. உலகின் சந்தைகளில் தாராளமயமாதல் கொள்கை பரவிவந்த காலகட்டத்தில் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் மார்கரெட் தாட்சர் அரசுத் துறைகளின் வசமிருந்த நீர் வினியோகத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றிக் கொடுத்தார். கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இதுதான் சரியான வழி என்கிற நினைப்போடு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டுரீகனும் அவ்வாறே வினியோகத்தைத் தனியார் வசம் ஒப்படைத்தார். 1970களின் இறுதியாண்டுகளில் தாராளமயக் கொள்கைதான் வளரும் நாடுகள் உள்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் சரியான தீர்வாகக் கருதப்பட்டது.

உலகின் அனைத்து நாடுகளிலும் நிறையவே பணிகள் பணம் மற்றும் திட்டமிடுதல் வாயிலாக ஆட்சியாளர் களிடமிருந்து தண்ணீரைத் தனியார் வசம் ஒப்படைப் பதற்கான ஏற்புக் கொள்கை தயாரிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையே வர்த்தகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நிர்வகிப்பதற்காக 1905-ஆம் ஆண்டில் உலக வர்த்தக நிறுவனம் உருவாக்கப்பட்டது. பல்வேறு பொருட்கள் உணவு, காப்புரிமை, அறிவுசார் காப்புரிமைகள், சேவைகள் போன்ற கூறுகள் பற்றி பல்வேறு நாடுகளிடையே ஒப்பந்தங்கள் இதன் வாயிலாக முடிவு செய்யப்பட்டன. ஆனால் உலக வர்த்தக நிறுவனத்தின் அடிப்படை நோக்கம் படிப்படியாக அரசாங்கங்களின் அதிகாரங்களைக் குறைத்து தனியார் நிறுவனங்களுக்கு அந்த அதிகாரங்களை வழங்குவதுதான். இதன் பல்வேறு ஒப்பந்தங்களில் ஒன்று தண்ணீர் பற்றியது - அதாவது தண்ணீரும் வியாபாரத்திற்குரிய ஒரு பொருளாக அங்கீகரிக்கப்பட்டு உலக வர்த்தக நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்குட்பட்டது.

தண்ணீர் பற்றிய புதியதோர் உத்திக்காக 1996-ஆம் ஆண்டு உலக நீர் பங்குதாரர் அமைப்பு (பார்ட்னர்ஷிப்) உருவாக்கப்பட்டது, உலக வங்கி, ஐ.நா. சபை மற்றும் பல பன்னாட்டு வளர்ச்சி அமைப்புகள் இப்பங்குதாரர் அமைப்பிற்கு நிதியுதவி அளித்துள்ளன. இந்த நீர்ப் பங்குதாரர் அமைப்புதான் 2003வது ஆண்டில் அனை வருக்கும் தண்ணீருக்கான நிதி ஒதுக்கீடு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சம், நீர் வழங்குதல் ஏற்பாடுகளைத் தனியார் வாயிலாக அமல் செய்வதற்கு எதிர்ப்பு நிலவும் இடங்களில் கூட தனியார் நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தை வலுப்படுத்து வதற்கு அரசாங்கங்களிடமிருந்து நிதியுதவி பெற்றுத் தருவதுதான்.

இவ்வாறாகத் தண்ணீரைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதற்கான முக்கிய காரணம் தனியார் கம்பெனிகள் நீர் வினியோகத்தைச் சரியான முறையில் செய்யவில்லை என்பது நிரூபணமாகி உலகின் பல்வேறு நாடுகளிலும், உலக வங்கியிலும் அக்கொள்கைக்கு எதிர்ப்பு உருவாகியதுதான். நீர் வினியோக நிறுவனங்களில் ஊழல் மலிந்திருந்தது. நீரின் விலை மிகவும் அதிகரித்து கோடிக் கணக்கான மக்களுக்கு நீர் கிடைக்காமல் போனது. நீரின் தரம் மோசமாக இருந்தது. மாசடைதல் பிரச்சினைகள், ஊழியர்களின் வேலை பறிபோனது, ஒப்பந்த மீறல் போன்ற எண்ணற்ற காரணங்களால் தண்ணீரில் தனியார் நிர்வாகம் தோற்றுப் போனது.

மூன்றாவது அத்தியாயம் நீரை வேட்டையாடுபவர்கள் நகர்ந்து செல்கின்றனர் என்பதாகும்.

நீர் வினியோக விஷயத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாகத் தனியார் நிறுவனங்கள் துவண்டுவிட வில்லை. இப்போது அவர்கள் வேறு சில உத்திகளை மேற் கொண்டனர். நீர் சுத்திகரிப்பு, நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுத்தல், காற்று மண்டலத்திலிருந்து நீரை உற்பத்தி செய்தல், தண்ணீர் ஜெனரேட்டர்கள் போன்ற உத்திகளைத் தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டன. தண்ணீரை பாட்டில்களில் அடைப்பது பற்றிய ஒரு மேற்கோள் இதோ:

“1885-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் விட்டல் கிரேண்ட்” கம்பெனிக்கு கனிம நீரை (மினரல் வாட்டர்) கண்டெய்னர்களில் அடைத்து விற்பதற்கான உரிமம் வழங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின் ‘பெர்ரியர் கம்பெனிக்கு’ அவ்வாறான உரிமம் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள் 100 ஆண்டுகளுக்குப் பின்பு அறிமுகப்படுத்தப்பட்டன. 1970களின் ஆரம்ப கட்டத்தில் ஏறக்குறைய 10 கோடி லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் அடைத்து விற்பனை செய்யப்பட்டது. 2006-ஆம் ஆண்டில் இந்நீரின் அளவு 2,000 கோடி லிட்டராக அதிகரித்தது. 320 கோடி லிட்டர் பயன்படுத்தும் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. மெக்சிகோ நாட்டில் 200 கோடி லிட்டரும் சைனா மற்றும் பிரேசில் நாடுகளில் 140 கோடி லிட்டரும் ஜெர்மனியில் 125 கோடி லிட்டரும் விற்பனையாகின்றன.’

ஆகாயத்திலிருந்து விழும் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து, பெட்ரோலைப் போல் நான்கு மடங்கு விலைக்கு அதை விற்பனை செய்கின்றன. இந்தக் கில்லாடிக் கம்பெனிகள் - (இந்த நூல் வெளியான 2007-ஆம் ஆண்டில் சில நாடுகளில் அவ்வாறான நிலை நிலவியது. இந்தியாவிலும் கூட ஒரு லிட்டர் பாலின் விலையைக் காட்டிலும் ஒரு லிட்டர் தண்ணீர் அதிக விலைக்கு சமீப காலம் வரை விற்கப்பட்டதை நினைவுகூர வேண்டும்). செல்வச் சீமான்களுக்காக ஒரு லிட்டர் தண்ணீர் 40 அமெரிக்க டாலர்கள் மற்றும் 75 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் தொழில் அதன் பொற்காலத்தில் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் இப்போது தண்ணீர் தொழில் உள்ளது.

உலகளாவிய தண்ணீர்த் தொழில் எவ்வளவு பெரியது தெரியுமா? அமெரிக்காவின் தண்ணீர் மார்க்கெட் ஆண்டு தோறும் 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் - 40,0000000000 (40,000 கோடி)... இத்துறையில் பொருளீட்டுவதற்கு அளவே இல்லை.

நான்காவது அத்தியாயம் - ‘நீர்ப்போராளிகள் மறு போராட்டம்’ என்கிற தலைப்பினைக் கொண்டது.

உலகின் அனைத்து நாடுகளிலும் நீர் வினியோகத்தைத் தனியார் கம்பெனிகள் ஏற்று நடத்துவதற்கு எதிர்ப்புத் தோன்றியுள்ளது. கூடவே தண்ணீர் நியாய இயக்கமும் அந்நாடுகளில் உருவாகி வருகிறது. லத்தின் அமெரிக்க நாடுகளாகிய நிக்காராகுவா, வெனிசுவேலா, பொலீவியா, அர்ஜெண்டினா, சிலி ஆகிய நாடுகளிலும், ஆசியா கண்டத்தில் இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்ட்ரேலியா நாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா - மேலும் சில ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, கனடா, சில ஐரோப்பிய நாடுகளிலும் தண்ணீர் நியாய இயக்கம் வளர்ந்து வருகிறது.

பன்னாட்டுத் தண்ணீர், நியாய இயக்கம் பல்வேறு நாடுகளில் தனியார் வசமுள்ள தண்ணீர்க் கம்பெனிகளுக் கெதிராகவும், பொறுப்பற்ற முறையில் ஆட்சி நடத்தும் (தண்ணீர் விஷயத்தில்) பல்வேறு அரசாங்கங்களுக்கு எதிராகவும் போராட்டங்களை நிகழ்த்தி நீர் வளங்களை அரசாங்கங்களே மேற்கொண்டு மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றன. தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் கம்பெனிகளுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் எதிர்ப்பு தோன்றி வருகிறது.

கடைசி அத்தியாயம் “தண்ணீரின் எதிர்காலம்” என்கிற தலைப்பினைக் கொண்டுள்ளது.

நூலாசிரியர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தகவலை முன்வைக்கிறார். “தண்ணீர் சம்பந்தப்பட்ட மூன்று நெருக்கடிகள் 1. நல்ல தண்ணீரின் இருப்பு மற்றும் வினியோகம் குறைந்து வருதல், 2. நீர் வினியோகத்தில் சமத்துவமின்மை, 3. தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் - பூமியில் நிலவும் மிகப்பெரிய அபாயங்களாகும். பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாடு காரணமாக அதிகரித்து வரும் வெப்ப நிலையையும் இணைத்துப் பார்க்கும் போது தண்ணீர் நெருக்கடி - வாழ்வா - சாவா - என்கிற கட்டத்திற்கு நம்மை இட்டுச் சென்றுள்ளது.

இது பற்றிய முக்கிய முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். நாம் எல்லோரும் இணைந்து நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் தண்ணீருக்காக உலகெங்கிலும் போராட்டங்களையும் போர்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறான போராட்டங்களும் போர்களும் நாடுகளுக்கிடையேயும், ஏழை பணக்காரர் களுக்கிடையேயும் பொது - மற்றும் தனியார் நிறுவனங் களுக்கிடையேயும், கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்போர்களுக்கிடையேயும், அத்தியாவசியத் தேவை களுக்காகப் பாடுபடும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கிடையேயும் இப்போராட்டங்கள் நிகழக்கூடும். உலகெங்கிலுமே ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு மாநிலங்களுக்கிடையேயும் (உதாரணம் அமெரிக்கா மற்றும் இந்தியா) - பல்வேறு நாடுகளுக்கிடையேயும் இப்போதே போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் அகதிகள்:                                            

தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக உலகெங்கிலும் மக்களுக்குப் புலம் பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அகதிகளை இரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் சில பகுதிகள், சைனா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் காணலாம். இப்போது கிராமங்கள்தான் காலியாகி வருகின்றன. எதிர்காலத்தில் பெரு நகரங்களையே மாற்றி அமைக்கும் சூழல் ஏற்படும். ஏமன் நாட்டின் தலைநகரமாகிய சானா, பாகிஸ்தான் நாட்டின் பலுச்சிஸ்தானில் அமைந்துள்ள கவெட்டா நகரங்களில் ஏற்கனவே அவ்வாறு ஆகிவிட்டது. சைனா நாட்டில் உள்மங்கோலியா, நிங்க்ஸியா மற்றும் கான்சு மாநிலங்களில் பாலைவன அகதிகள் உருவாகி வருவதை அந்நாட்டு விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் நாலாயிரம் கிராமங்கள் நீர்த்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்தும் மக்கள் வெளியேறக்கூடும். பாலைவனப் பகுதியின் பெருக்கம் மற்றும் தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக இரான் நாட்டில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகி வருகின்றன. நைஜீரியா நாட்டில் ஆண்டுதோறும் 3500 சதுர கிலோ மீட்டர் அளவிலான நிலப்பகுதி பாலைவனமாக மாறிவருகிறது. பாலைவனமாதல்தான் அந்நாட்டின் தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஏனைய நாடுகளைப் போலவே நைஜீரியாவிலும் விவசாயிகள் வளர்ந்து வரும் பெரும் நகரங்களின் எல்லைப் பகுதிகளில் குடியேறி சேரிகளை உருவாக்கி வருகிறார்கள். இது அங்கு நிலவும் தண்ணீர் நெருக்கடியை இன்னமும் மோசமாக்கியுள்ளது. ‘நீல நிற ஆவணம்’ என்கிற வார்த்தையின் பொருள் இதே கடைசி அத்தியாயத்தில் விளக்கப்பட்டு, தண்ணீரின் எதிர்காலத்திற்கான மாற்று ஏற்பாடாகவும் முன் வைக்கப்படுகிறது.

“மனித சமுதாயத்திற்கு இந்தப் போராட்டங்களையும் போர்களையும் தவிர்ப்பதற்கான வாய்ப்பு ஒன்று இன்னமும் உள்ளது. நாம் உலகளவிலான ஒரு தண்ணீர் ஆவணத்துடன் (நீலநிற ஆவணம்) இதைத் தொடங்கலாம். இந்த நீலநிற ஆவணம் மூன்று கூறுகளைக் கொண்டிருக்கும். முதலாவது தண்ணீரைப் பாதுகாத்து சேமிக்கும் ஆவணம். உலக நாடுகள் மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தண்ணீர் மீது உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டு நீரைப் பாதுகாத்து சேமித்து வழங்க வேண்டும்.

இரண்டாவது நீர்வளம் நிரம்பிய உலகின் வடபகுதி நாடுகளுக்கும் நீர்வளம் குன்றிய தென்பகுதி நாடுகளுக்கு மிடையே தண்ணீர் நியாயம் பற்றிய ஆவணம் - அனைத்து நாடுகளும் இணைந்து எல்லா மக்களுக்கும் நியாயமான முறையில் நீர் கிடைப்பதற்கு ஆவன செய்தல், மூன்றாவது எல்லா அரசாங்கங்களுக்கிடையேயும் தண்ணீர் ஜனநாயக ஆவணம் இதன் முக்கிய அம்சம் உலகின் அனைத்து மக்களுக்குமே தண்ணீர் ஒரு அடிப்படை உரிமை என்பதாகும். ஆகவே அரசாங்கங்கள் பொதுத்துறை வாயிலாகத் தண்ணீர் வழங்குவது மட்டுமின்றி, மக்களுக்குத் தண்ணீர் மீதுள்ள உரிமையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பல மாநிலங்களுக்கு இடையே நிகழும் போராட்டங்களுக்கு அமைதியான வழியில் தீர்வு காணப்பட வேண்டும்.

இந்த நூலிலிருந்தே எடுக்கப்பட்டுள்ள ஒரு மேற் கோளுடன் இதை முடிக்கிறேன். “நாம் இந்தப் பூமியில் உயிர் வாழவேண்டும் எனில் தண்ணீர் மக்களுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டும், திறமையாகவும் நீடிக்கக்கூடிய விதத்திலும் நீர் மேலாண்மை அமையவேண்டும். அவ்வாறு நிகழ்வதற்கு முன் உலகமயமாதல் காரணமாகத் தோன்றியுள்ள சில சந்தை அடிப்படையிலான கோட்பாடுகள் களைந்தெறியப் படவேண்டும். இப்போது நிலவும் போட்டி மனோபாவம், எல்லையற்ற வளர்ச்சி தண்ணீர் சம்பந்தப்பட்ட தனியார் உரிமைகள் களைந்தெறியப்பட்டு கூட்டுறவு, நீடித்த தன்மை மற்றும் பொது நிர்வாகம் ஆகிய பண்புகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

தமிழில்: எம்.ஆர்.ராஜகோபாலன்

Pin It