பொங்கல் விழாவையொட்டி ஊருக்குச் சென்றிருந்த தருணத்தில் எல்லாரும் சேர்ந்து பரணைச் சுத்தப்படுத்தினோம். பரணிலிருந்து இறக்கப்பட்ட பல பெட்டிகளிடையே ஒரு புத்தக அடுக்கும் இருந்தது. அதைத்தனியாக இழுத்து என்முன்னால் வைத்துவிட்டு “எதெது வேணும், எதெது வேணாமின்னு பாத்து இப்பவே பிரிச்சி வச்சிடுப்பா. வேணாங்கிறத தூக்கி கடயில போட்டுடலாம். எல்லா எடத்துலயும் ஒட்டட படிஞ்சி தூசும் தும்புமா ஒரே அழுக்கா இருக்குது” என்றார் அம்மா. எல்லாமே என்பள்ளிக்கூட, கல்லூரி நாட்களின் நோட்டு புத்தகங்களின் குவியல். ஒவ்வொன்றாகப் புரட்டப் புரட்ட எதையுமே தனிமைப்படுத்தி விலக்கிவைக்க மனம் வரவில்லை. மடிந்துபோன பக்கங்களின் விளிம்புகளைச் சரிப்படுத்தி. தூசுதட்டி மறுபடியும் அடுக்கி சின்னச்சின்ன கட்டுகளாகக் கட்டினேன். “என்னப்பா இது, பிரிச்சி எடுன்னு சொன்னா, கட்டு கட்டறியே..” என்று ஆச்சரியத்தோடு கேட்டபடி என்னைப் பார்த்துச் சிரித்தார் அம்மா. “எல்லாமே வேணும்ன்னுதான் தோணுதும்மா, இருந்துட்டு போவட்டும்” என்று சிரித்தேன். “எல்லாத்தையும் வச்சிக்கறதுக்கு, வேல மெனக்கிட்டு எதுக்காக கலைக்கணும். அப்புறம் எதுக்காக மறுபடியும் அடுக்கணும்? பரண்ல எலி உருட்டற சத்தம் கேக்கும்போதெல்லாம் எதஎத கொதறி வைக்குமோ எதஎத கடிச்சிவைக்குமோன்னு மனசு திக்குதிக்குன்னு அடிச்சிக்குது..”

அந்தக் காலத்து நினைவுகளில் சிறிதுநேரம் ஆழ்ந்திருக்கவேண்டும் என்று விரும்பியதை அவரிடம் நேரிடையாக எடுத்துச் சொல்ல வாய்வரவில்லை. ஒரு புன்சிரிப்போடு, பழைய நோட்டுப்புத்தகத்தில் மூழ்கி விட்டேன். அந்தக் காலத்துக் கையெழுத்தைப் பார்த்ததும் ஆனந்தமும் ஆச்சரியமும் மனத்தில் மோதின. “ஒவ்வொரு எழுத்தும் குண்டுமணியாட்டமா இருக்குது..” என்றபடி தட்டிக்கொடுத்த பானுமதி டீச்சரின் முகம் ஒருகணம் அசைந்து மறைந்தது. “இப்படி மண்டமண்டயா எழுதனா ஒனக்கு நோட்டு வாங்கிக்குடுக்க நான் நோட்டுதான் அடிக்கணும்..” என்று முனகிய அப்பாவின் முகமும் தோன்றி அழிந்தது. எப்போதோ மடித்துவைக்கப் பட்டிருந்த தாளொன்று கீழே விழ. அக்கணமே எல்லா நினைவுகளும் கலைந்தன.

தாளை எடுத்துப் பிரித்தேன். 1967ஆம் ஆண்டில் பார்த்த படங்கள் என்ற தலைப்பில் பத்துப் படங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. பிரபாத் டாக்கீஸில் ஐந்து படங்கள். சரவணா டாக்கீஸில் ஐந்து படங்கள். தலைப்பு வரிகள் சிவப்பு நிறத்திலும் படங்களின் பெயர்கள் நீல நிறத்திலும் எழுதப்பட்டிருந்தன. அப்பாவின் தையல் இயந்திரத்தின் மீது எப்போதும் ஓரமாக வைக்கப் பட்டிருந்த பென்சிலால் எழுதப்பட்ட எழுத்துக்கள் அவை. ஒரே பென்சில்தான். ஒரு முனை சிவப்பாகவும் மறுமுனை நீலமாகவும் எழுதும்படி வடிவமைக்கப்பட்ட விசித்திரமான வண்ணப்பென்சில். ஏறத்தாழ சுண்டுவிரல் அளவுக்கு அது சிறுத்துப் போனதும் அப்பா என்னிடம் தந்துவிடுவார். பாடத்தைத் தவிர மற்ற எல்லா சங்கதி களையும் அந்த வண்ணப்பென்சிலால் எழுதுவது அந்தக் காலத்தில் என் பழக்கமாக இருந்தது.  “இந்தாடா எடுத்துப் போ...” என்று ஒரு துண்டு பென்சிலை எடுத்து வைத்து விட்டுச் சொன்ன சொற்கள் நெஞ்சில் ஒலித்தபடி இருந்தன.

வளவனூர் சின்ன கிராமமும் அல்ல. அருகில் இருக்கும் விழுப்புரம் போலவோ அல்லது புதுச்சேரி போலவோ பெரிய நகரமும் அல்ல. நடுத்தர அளவிலான கிராமம். ஏறத்தாழ மூன்றுமைல் நீளமும் மூன்றுமைல் அகலமும் கொண்டதுதான் அதன் அமைப்பு. ஊரின் கிழக்கு விளிம்பில் கீற்று வேயப்பட்ட திரையரங்கத்தின் பெயர்தான் பிரபாத். மேற்கு விளிம்பில் கீற்று வேயப்பட்ட திரையரங்கத்தின் பெயர் சரவணா. வளவனூருக்கு மட்டுமல்ல, அதைச்சுற்றி எல்லாத் திசைகளிலும் பரவியிருந்த பத்துப் பன்னிரண்டு திரையரங்கக்காரர் களுக்கும் ஊர்நடுவே கடைத்தெருக்களின் சந்திப்பில் விளம்பரத்தட்டிகள் உண்டு. திரைப்படங்களின் வண்ணச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட அந்தத் தட்டிகளின் முன்னால் சில நிமிடங்களாவது நிற்காமல் அப்போ தெல்லாம் ஒருநாளும் கழிந்ததில்லை.

பட்டியலின் முதல்படத்தின் பெயரைப் படித்தேன். கலையரசி. அந்தப் படத்தின் கதை நினைவுக்கு வரவில்லை. ஆனால் அதில் பார்த்த பறக்கும் தட்டுகளின் கற்பனை இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அப்போ தெல்லாம் அம்மாதான் என்னைப் படத்துக்கு அழைத்துச் செல்வார். பள்ளிக்கூடம் முடிந்துவந்ததும் வேகவேகமாக எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அம்மாவும் நானும் கிளம்புவோம். இடுப்பில் தங்கையோடு அம்மா நடக்க, அவர் கைவிரலைப் பிடித்தபடி நான் நடந்துசெல்வேன். ஒரு சீட்டுக்கு பதினெட்டு காசு. இரண்டு சீட்டு வாங்கிக் கொண்டு பெண்கள் வரிசையிலேயே அம்மா என்னை அழைத்துச் சென்றுவிடுவார். சண்டைக்காட்சிகளைத் தான் அதிகமாக விரும்பிப் பார்ப்பேன். குறிப்பாக வாள் சண்டை. ஆனால் யாராவது அளவுக்கதிகமாக அடி வாங்கிக் கீழே விழுந்துவிட்டால் மனம் தாங்காது.

படம் பார்ப்பதைவிட, பார்த்த படத்தின் கதையைப் பள்ளியில் மற்ற நண்பர்களுக்கு விவரிப்பதுதான் பேரானந்தம். ஒவ்வொரு காட்சியையும் மீண்டும்மீண்டும் சொற்களால் நிகழ்த்திக் காட்டி, நண்பர்களுடைய பாராட்டுகளில் திளைப்பதற்கு இணையான மகிழ்ச்சி உலகத்திலேயே இல்லை. என் நண்பன் முத்துக்கிருஷ்ணன் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை தாளலயம் மாறாமல் ஒரு எழுத்துகூடப் பிசகாமல் சொல்வதில் மிகப் பெரிய திறமைசாலி. ஒரேஒருமுறை திரையில் கேட்ட பாடலை, அப்படியே அச்சு பிசகாமல் மனத்தில் நிரப்பிக் கொள்வான். பிறகு, எந்தக் கணத்தில் அப்பாடலைப் பாடச் சொன்னாலும் அழகாக ஏற்ற இறக்கங்களுடன் பாடுவான். கதைகளால் நானும் பாடல்களால் அவனும் வகுப்பில் கவனிக்கப்படுகிறவர்களாக இருந்தோம். “படம் படம்னு அலஞ்சி கடசியா பாடத்த கோட்ட உட்டுடாதிங்கடா பசங்களா என்று ராமதாஸ் சார்..” அதட்டிவிட்டுப் போவார்.

இரண்டு திரையரங்குகளுக்கும் இடையே நல்ல போட்டி நிலவியது. பிரபாத் அரங்கில் எம்.ஜி.ஆர். படம் போட்டால், சரவணா அரங்கில் உடனடியாக சிவாஜி படம் போட்டுவிடுவார்கள். ஒரு அரங்கில் புராணப்படம் போட்டால் மற்றொன்றிலும் உடனே புராணப்படம் போட்டுவிடுவார்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைதான் படத்தை மாற்றுவார்கள். வியாழக்கிழமை காலையில் இப்படம் இன்றே கடைசி என்ற அறிவிப்புச் சுவரொட்டியை ஒட்டப்பட்டதைப் பார்த்ததுமே, மறுநாள் எந்தப் படம் போடக்கூடும் என்று எங்களுக் குள்ளேயே பந்தயம் வைத்துக்கொள்வோம். யார் மூலமாவது கசிந்து காதில் பறந்துவந்து விழுகிற தகவலை ஆதாரமாகக் கொண்டு என்னடா பந்தயம் என்று தைரியமாக மோதிக்கொண்டதெல்லாம் பெரிய கதை. சுரொட்டி ஒட்ட வருகிற பையன் எங்கள் பள்ளியின் முன்னால் மாணவனாக இருந்ததால் அவனோடு எல்லாரும் நட்பாகவே இருப்போம். அவன் தான் “ரூமுக்குள்ள விவசாயி வந்து எறங்கியிருக்குதுடா வேட்டைக்காரன் வந்து எறங்கியிருக்குதுடா..” என்று தகவலை ரகசியமாகப் பரப்பிவிடுவான். நாங்கள் அதைப் பள்ளிகூடம் முழுதும் பரப்பிவிடுவோம். ஆனாலும் நாங்கள் பரப்பிய செய்தி உண்மையாக இருக்கவேண்டுமே என்ற பதற்றத்தில் உறக்கமே இருக்காது. மறுநாள் ஏதாவது ஒரு வேலையை சாக்காக வைத்துக்கொண்டு கடைத் தெருவுக்குச் சென்று சுவரொட்டித் தட்டிகளைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட பிறகுதான் நிம்மதியாக இருக்கும்.

திரைப்படத்துக்குச் செல்ல எங்கள் அப்பா பொதுவாக அனுமதிப்பதில்லை. ஏறத்தாழ பத்துப் படங்களைப்பற்றி அவரிடம் நானும் அம்மாவும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால், ஏதாவது ஒரு படத்துக்கு அனுமதி கிடைக்கும். அதுவும் இரண்டாவது ஆட்டத்துக்கு. அப்பா கடையிலிருந்து திரும்பிய பிறகு, அவருக்குச் சாப்பாடெல்லாம் கொடுத்துவிட்டு நானும் அம்மாவும் காத்திருப்போம். அப்பா மெதுவாக ஆணியில் மாட்டிவைத்திருந்த சட்டைப்பையிலிருந்து சில்லறை களை எண்ணிக் கொடுப்பார். நாங்கள் அவசரமாக வெளியேறி வேகவேகமாக நடப்போம். திரையரங்கி லிருந்து ஒலிபரப்பாகும் பாடல்களில் எங்கள் கவனம் பதிந்திருக்கும். வழக்கமான பாடல்கள் நின்று “வினாயகனே” பாடல் ஒலிக்கத் தொடங்கினால் படம் போடப்போகிறார்கள் என்று பொருள். சீட்டு வாங்கி, உள்ளே சென்று வெளிச்சத்திலேயே இடம் கண்டுபிடித்து மணலைக் குவித்து உட்கார்ந்தபிறகுதான் மனம் நிம்மதியடையும்.

கீற்றுக்கொட்டகைகள் ஆண்டுக்கொரு முறை உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டிய அவசியம் அப்போதிருந்தது. கொட்டகையில் திரையரங்கம் மட்டுமே இயங்கும். இப்படி இரண்டு கொட்டகை களிலும் மாறிமாறிப் படம் நடந்துகொண்டிருந்தபோதே, ஊருக்கு நடுவில் கல்கட்டடமொன்று திரையரங்கமாக எழுந்தது. உள்ளே மணலுக்குப் பதிலாக சிமெண்ட் தரை. காற்று, மழை, மின்வெட்டு எதையும் எதிர்கொள்ளும் வசதி அந்த அரங்கத்துக்கு இருந்தது. கால ஓட்டத்தில் சிமெண்ட் தரையில் பெஞ்சுகளும் நாற்காலிகளும் இடம்பெற்றன. அரங்கம் எல்லா வசதிகளையும் கொண்டதாக மாறிய போது, நான் வேலைக்காக ஊரைவிட்டு வெளியேறி விட்டேன்.

படங்களின் பட்டியலைக் கொண்ட தாள் கிளறி விட்ட பழைய நினைவுகள் அடங்க வெகுநேரம் ஆனது. பள்ளிக்கூட நிகழ்ச்சிகளும் நண்பர்கள் முகங்களும் மிதந்தெழுந்து வந்தன. திரைப்படங்களின் பெயர்களை எழுத்தெழுத்தாகச் சொன்னபடி நண்பர்களுடன் விளையாடிய விளையாட்டு, திரைப்பட விளம்பர நோட்டீஸ்களையெல்லாம் அழகாக அடுக்கித் தைத்து ஒரு தொகுப்பாக வைத்துக்கொண்டு, அதை ஒருமுறை புரட்டிப் பார்க்க ஒரு பைசா என்று கட்டணம் வசூல் செய்த தட்சிணாமூர்த்தியின் முகம், திரைப்படப் பாடல் களை மட்டும் எழுதுவதற்காக தனியாகவே ஒரு நோட்டு போட்டு, தனக்குப் பிடித்த ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு நிறத்தில் எழுதி விளையாட்டுநேரத்தில் படிக்கக் கொடுத்து மகிழ்ந்த ராஜவேலுவின் கையெழுத்து, வாரத்துக்கு ஒருமுறை வரும் கதைகேட்டல் வகுப்பில் யாரையாவது பாடச் சொல்லிவிட்டு, ஆழ்ந்த ரசனையின் வெளிப்பாடாக கைதட்டி ஊக்கப்படுத்திய சுப்பரமணியன் சாரின் முகம், அவர் ஆசையோடு திரும்பத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்ட “கா..கா..கா..” பாட்டு என என் சிறுவயது உலகமே எனக்கு மறுபடியும் கிடைத்ததுபோல இருந்தது.

சிற்றுண்டிக்குப் பிறகு “தியேட்டர்ல பொங்கலுக்கு என்ன படம் போட்டிருக்காங்க?” என்று தம்பியிடம் கேட்டேன். ஒவ்வொரு பொங்கல் நாளிலும் காலை, பகல் காட்சிகளுக்கென்று போடப்படும் தெலுங்கு டப்பிங் படமும் இரவுக்காட்சிகளுக்கென்று தனியாகப் போடப் படும் தமிழ்ப்படமும் நினைவில் மோதின. நண்பகல் காட்சிகளாவது அல்லது இரவுக்காட்சியாவது பார்க்க வேண்டும் என்கிற ஆவல் பொங்கியது. “தியேட்டர்லியா?” எனக்கு அருகில் கிடந்த செய்தித்தாளுக்காக கை நீட்டிய படி சிரித்துக் கொண்டே என் பக்கம் பார்த்தான் அவன். “தியேட்டர் இப்ப நடக்கறதில்லண்ணே. அதமூடி ரொம்ப காலம் ஆவுது.”

ஆச்சரியத்தோடு அவன் முகத்தை ஏறிட்டேன். இருபதாண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட ஊர் இப்போது பெருத்துவிட்டது. அக்கம்பக்கம் இருந்த கிராமங்களும் அப்படியேதான் இருக்கின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூட்டம் இருந்தும் திரையரங்கத்தை மூடவேண்டிய அவசியம் புரியவில்லை. “எதுக்கு மூடனாங்க?”

“தியேட்டர்ல படம் பார்க்க யாரும் இப்ப வரமாட்டறாங்கண்ணே. ஒரு காட்சிக்கு ஒரு அம்பது நூறு பேராவது வரவேணாமா? அப்பதான கொட்டகைக் காரங்களுக்கும் கட்டுபடி ஆவும். முப்பது, இருபதுன்னு வரவர ஆளுங்க கொஞ்சங்கொஞ்சமா கொறஞ்சிட்டாங்க. கடசியா ஒரு படத்துக்குரெண்டே ரெண்டு பேருதான் வந்தாங்க. அவனுங்களும் படத்த பாக்கலை. குடிச்சிட்டு நல்லா போதையில வந்தவனுங்க சௌகரியமா தூங்கிட்டுப் போனானுங்க. அன்னைக்குன்னு பாத்து தற்செயலா ஓனரு தியேட்டருக்கு வந்துட்டாரு. தன் கண்ணாலயே அந்தக் காட்சிய பாத்துட்டு மனசு குமுறிட்டாரு. அன்னையோட கதவ இழுத்து மூடிட்டாங்க.

அந்தச் செய்தி உண்டாக்கிய அதிர்ச்சியில் பேச்சு வராமல் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். “படம் பாக்கணுமின்னா விழுப்புரத்துக்கு போய்வரலாம்ண்ணே..” என்றான். “வேண்டாம்” என்று உடனடியாக மறுத்து விட்டேன். உள்ளூர ஏதோ ஒரு கோபுரம் சரிந்து விழுந்தது போல இருந்தது. உடனடியாக என்னால் வேறொரு உரையாடலைத் தொடங்கமுடியாதபடி, மனம் செயலற்ற நிலையில் உறைந்திருந்தது. “நீ என்னமோ தியேட்டருக்கே ஓனராட்டம் நெலகொலஞ்சி ஒக்காந்துட்ட? அவரே போனாபோவுதுன்னு பூட்டிட்டு போயிட்டாரு..” அம்மா வந்து சொன்னபோதுகூட என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

நல்ல வேளையாக, அந்தச் சமயத்தில் என்னைத் தேடி வந்த நண்பன் பழனியோடு வெளியே கிளம்பிவிட்டேன். காலையில் கண்டெடுத்த திரைப்படப் பட்டியலில் தொடங்கி, தியேட்டரின் மூடுவிழாவரைக்கும் எல்லாச் சங்கதிகளையும் அவனிடம் சுருக்கமாகச் சொன்னேன். பிரபாத், சரவணா காலத்திலிருந்து அவனும் என்னோடு படம் பார்த்து, கதைசொல்லி, பாட்டு பாடி விவாதித்தவன் என்பதால் என்னுடைய தவிப்பை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

“நகரத்தை நோக்கி மக்கள் போகக்கூடிய பாதையிலே இது ஒரு தவிர்க்கமுடியாத கட்டம்னுதான் இத எடுத்துக் கணும். எந்த கிராமமும் இந்த வேதனையிலிருந்து தப்பிக்கவே முடியாது. “மெதுவாக பழனி பேசத் தொடங்கினான். “முதல்முதல்ல மக்கள் சிமெண்ட். இரும்புக்கம்பி, மரப்பலகைன்னு கட்டுமான சாமானுங் களுக்காக நகரத்துக்கு போனாங்க. அப்பறம் கல்யாணம் காட்சிக்கு துணிமணி எடுக்க, நகநட்டு பாத்திரம் பண்டங்கள் வாங்கறதுக்குன்னு போனாங்க. பிறகு, பெரிய விசேஷம், ஏதோ ஒரு நல்ல நாள், கெட்ட நாளுக்கு தேவைன்னு காய்கறி வாங்கறதுக்காக போனாங்க. டவுன் பஸ் வசதி, வாகனவசதி வந்ததும் அவசியம் இருக்குதோ இல்லயோ சும்மா ஒருதரம் அங்க இங்க சுத்திட்டு பொழுதுபோக்கிட்டு வரலாம்னு போகத் தொடங் கிட்டாங்க. கிராமத்துக்கடைகள், கிராமத்துத் தொழில்கள் நசிஞ்சது போல இந்தக் காலம் கிராமத்துப் பொழுது போக்கு இடமும் நசிகிற காலம்னுதான் இத பாக்கணும்..” சொல்லிக்கொண்டே என் தோள்மீது விழுந்து படிந்த வேப்பம்பூவொன்றைத் தட்டிவிட்டான் பழனி.

“அதுக்கப்புறம் நம்ம கிராமத்த கிராமம்ன்னு சொல்லமுடியாது. துணைநகரம்னோ நகர விரிவாக்கம்னோ தான் சொல்லமுடியும்.  கிராமங்கற முகம் அதோடு அழிஞ்சி போவும்..”நான் பெருமூச்சோடு அவனைப் பார்த்தேன். அவன் மறுபடியும் மெதுவான குரலில் “சமூக வரலாற்றுல அழிவு தவிர்க்கமுடியாத ஒரு கட்டம் இல்லயா?” என்று கேட்டான். ஒருகணம் பேச்சே எழவில்லை. பிறகு, “எல்லாமே எங்கயோ எழுதிவச்சி நடக்கறமாதிரி நடக்குது இல்லயா?. ஒரு பெரிய நாவல்ல இருபதாவது அத்தியாயத்துல நடக்கக் கூடிய ஒரு காட்சிய படிச்சிட்டு கஷ்டப்படறமாதிரி கஷ்டப்படுது மனசு. இதுக்கு முன்னால பத்தொம்பது அத்தியாயத்துல நடந்த சம்பவங்களுடைய பின்விளைவு தான் இந்த இருபதாவது காட்சிங்கறத ஏத்துக்க மாட்டேங்குது. பத்தொம்பது காட்சிகளும் மாறாம இருபதாவது காட்சிமட்டும் எப்படி தனியா மாறும்?” என்றேன்.

சிறிதுநேரத்துக்குப் பிறகு “இந்த மாற்றத்தால நல்லதே நடக்காதுன்னு நெனைக்கறியா?” என்று கேட்டான் பழனி. “என்னால சரியா சொல்லத் தெரியலை பழனி. ஆனா, ஒரு சமூகமா, கூட்டமா, ஒன்னா மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பங்கள ஒன்னொன்னா நம்ம கிராமம் இழந்து கிட்டே வருது. ஒரு பெரிய சிலையுடைய ஒவ்வொரு பாகமும் மெல்ல மெல்ல ஒடஞ்சி உழறமாதிரி. அதுதான் என்னுடைய வருத்தம். “நான் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

“நம்ம சின்ன வயசுல, இந்தக் கோயில் திடல்ல எத்தன எத்தன நிகழ்ச்சிகள் நடந்திருக்குது. கலை நிகழ்ச்சிகள். பாட்டுக்கச்சேரிகள். அரசியல் பொதுக்கூட்டங்கள். ஆன்மிகச்சொற்பொழிவுகள், நாடகங்கள், தெருக்கூத்து, பொம்மலாட்டம். இலக்கியக்கூட்டங்கள்னு மாசத்துல ரெண்டுமூணு தொடர்ந்து நடந்துட்டே இருக்கும். ஞாபகமிருக்குதா? அதெல்லாம் ஒருவகையில ஒரு சமூகம் ஒரு பொதுஇடத்துல ஒன்னா கூடிநின்னு ஒரு விஷயத்த தெரிஞ்சிக்கறதுக்கும் ஒரு கலையை அனுபவிக்கறதுக்கு மான ஒரு வாய்ப்பு. ஆனா எதுவுமே நெலச்சி நிக்கலை. ஒன்னொன்னா கொறஞ்சிகிட்டே வந்து, ஒரு முப்பது வருஷ காலத்துல எதுவுமே இல்லைங்கற நெலைமைக்கு வந்திடுச்சி. ஒன்னு கொறயும்போது, இருக்கற மத்தத பாத்து மனச ஆறுதல் படுத்திகிட்டோம்.”

தொடர்ந்து பேச முடியவில்லை. ஏரிக்கரையின் நிழலோரமாகவே நடந்துகொண்டிருந்தோம்.  எங்களைப் பார்த்த கலவரத்தில் ஒரு ஓணான் வேகவேகமா புதருக்குள் ஓடி ஒளிந்தது. கீழே விழுந்துகிடந்த ஒரு சுள்ளியைக் குனிந்து கையில் எடுத்து உருட்டினான் பழனி.  “அந்த ஆறுதல்கூட ரொம்ப நாளு நெலைக்கலையே. ஆறேழு வருஷத்துக்கு முன்னால ஒரு தெருக்கூத்து இங்க நடந்தது. அதுதான் கடசி தெருக்கூத்து பாத்துக்கோ. ராத்திரி பன்னெண்டு மணிக்குத்தான் தொடங்கனாங்க. ரொம்ப ஆசஆசயா வேடிக்க பாக்கறதுக்காக நின்னேன். கெட்டிக் காரன் வந்து நின்னு வந்தனம்வந்தனம்னு ஆடறான். பாக்கறதுக்கும் கைதட்டி சிரிக்கறதுக்கும் பத்து பேருகூட இல்லை தெரியுமா? வந்தவங்கள்ள நாலுபேரு பாய்ல நல்லா நீட்டி படுத்துத் தூங்கறாங்க. கோயில் வாசல்ல. ரெண்டு பேரு நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்து ஒரே சண்ட. மூச்சுக்கு முந்நூறு கெட்ட வார்த்தைங்க. எனக்கு ரொம்ப அவமானமா போயிடுச்சி. கலையை மதிக்கத் தெரியாத கூட்டம் கலையை எப்படி வளர்த்தெடுக்கும்?” சோர்வோடு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தோம். சருகுகளிடையே இரண்டு மைனாக்கள் தத்தித்தத்தி விளையாடிக் கொண்டிருந்தன.

“அதுதான் என் வருத்தம் பழனி. ஒரு கலையினுடைய உண்மையான மதிப்பு என்னன்னு தெரியாமயே அதப் புறக்கணிக்கற அளவுக்கு நம்ம மனசு தடிச்சிபோயிடுச்சி. ஒரு கலை ஒரு எடத்துல நம்ம எல்லாரயும் ஒன்னா கூடி உக்காரவைக்குது. சாதி, மத பேதம் எல்லாத்தயும் கொஞ்ச நேரம் தொடச்சி வச்சிட்டு சேர்ந்திருக்க வைக்குது. அது ஒருவகையில இணைப்புக்கயிறு போல. நம்ம படிப்பு, நமக்கு வந்திருக்கக்கூடிய வசதி. வாய்ப்பு எல்லாம் சேந்து அந்த இணைப்பினுடைய ஆழத்தயோ மதிப்பயோ புரிஞ்சிக்கமுடியாம தடுக்குது. இலக்கியம்தானே, புத்தகம் வாங்கி படிச்சிகிடலாம்ன்னு நெனச்சிட்டோம். அரசியல் செய்திதானே. ரேடியோவுல கேட்டுக்கிடலாம் இல்ல பத்திரிகையில பாத்துக்கிடலாம்ன்னு நெனச்சிட்டோம். அதுபோலவே சினிமாதானே, சி.டி. போட்டு ஊட்டுல உக்காந்துகினே பாத்துக்கிடலாம்னோ  கேபிள் டிவிகாரன் போடும்போது பாத்துக்கிடலாம்ன்னோ தோணிப் போயிடுச்சி. சமூகமா சேர்ந்திருக்கறதுங்கற அம்சம் தொலஞ்சி போகுதேங்கற வருத்தமோ கவலயோ இல்லாம போயிடுச்சி. எல்லாத்தயும் அறைக்குள்ளயே உக்காந்து அனுபவிக்கலாம்ங்கற ஆபத்தான எண்ணம் ஒவ்வொருத் தவங்க மனசுலயும் வந்திட்டுது. ரொம்ப காலத்துக்கு முன்னாலயே நகரங்கள்ள ஆழமா படிஞ்சிபோன அந்த எண்ணம் கொஞ்சம்கொஞ்சமா கிராமத்துக்குள்ளயும் தொத்துநோயா பரவிடுச்சி.”

கசப்பிலும் விரக்தியிலுமாக தோயத் தொடங்கிய உரையாடலின் திசையை மாற்றநினைத்ததுபோல பழனி அருகிலிருந்த இடத்தைச் சுட்டிக்காட்டி “இங்க பர்மா ஷெல் கம்பெனிகாரங்களுக்காக ஒரு டீசல் டேங்க் இருந்ததே ஞாபகமிருக்குதா?” என்று கேட்டான். “சுத்தியும் ஆறேழு வேப்பமரங்களுக்கு நடுவுல அந்த இடமே குளுகுளுன்னு இருக்குமே. ஆறு மாசம் முன்னால அத இடிச்சிட்டாங்க.”

வெயில் உறைத்த அந்த வெட்டவெளிக்கு நடுவில் கூரையும் சுற்றுமதில்களும் கொண்ட அந்த இடம் மெல்லமெல்ல நிழல்போல் உருவாகி நின்றது. ஒரு காலத்தில் நாங்கள் பொழுது சாய்கிறவரை உல்லாசமாக விளையாடிய இடம். தேர்வுக்காலங்களில் உட்கார்ந்து படித்த இடம். பார்த்த படங்களின் கதைகளைப் பகிர்ந்துகொண்ட இடம். வானத்தையும் புதர்களையுமே எங்களுடைய பார்வையாளர்களாக நினைத்துப் பாடிப் பழகிய இடம். குயில்களின் இனிமை மிகுந்த குரலை அருகிலிருந்து சுவைத்த இடம். அது இப்போது இல்லை என்பதையே ஏற்க மனம் மறுத்தது. சட்டென்று அக்கணத்தில் என் எண்ணத்தின் இன்னொரு கோணம் உருவாகிவருதை உணர்ந்தேன். அதன் இருப்பையோ இல்லாமையையோ பொருட்படுத்தாதபடி இந்த உலகம் இயங்கியபடியல்லவா இருக்கிறது. எதுவும் உறைந்து போகவில்லையே “இனிமே நம்ம மனசுலமட்டும்தான் அதுக்கு இடம்.”

பண்பாட்டின் அடையாளமா ஏதோ ஒன்னு நமக்கு நடுவுல தொடர்ந்து நடந்துகிட்டே வருது. நமக்கு அதனுடைய சாரம் தெரியமாட்டுது. அதன் மேல் தோற்றம் தான் புரியுது. உடடினயா நம்ம மூள அந்த மேல்தோற்றத்த வேறொரு ஊடகத்துவழியா உருவாக்கி உண்மைய அழிச்சிடுது. எல்லா உண்மைக்கும் மனசுலதான் இடம் குடுக்கணும் போல...” அவன் வேடிக்கையாகச் சிரித்தான். ஒரு பெருங்கூட்டத்தையே சிரிக்கவும் கைத்தட்டவும் கலங்கவும்வைத்த அந்தநாள் திரைப்படக் காட்சிகளையும் திரையரங்கத்தையும் அந்தச் சிரிப்புக்குப் பின்னால் பார்த்தேன்.

Pin It