தமிழ்வானில் ஒளிர்ந்த தன்னேரில்லாத, தாரகையாகத் தமிழ்ப் பேராளுமையாக எல்லார் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர்தான் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள்.

avvai arul bookஅரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் மேடைகளில் வலம் வந்த சிறப்புக்குரியவர். பல உலகத் தமிழ் மாநாடுகளைத் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலில் சிறப்புடன் நடத்திக் காட்டியவர். 2010இல் கோவைப் பெருநகரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் தலைமையில் நடைபெற்ற செம்மொழித் தமிழ் மாநாட்டைப் பலரும் பாராட்டும் வண்ணம் நிகழ்த்திக் கலைஞரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர். ஒளவையின் உரைநலம் வியந்து உவமைக் கவிஞர் ஒளவை நடராசனைப் 'பாதி அண்ணா' என்று பாராட்டி மகிழ்ந்தார்.

மேடையில் குளிர்தருவென மெல்லிய பூங்காற்றாய் அவர் ஆற்றிய உரைகள் அனைத்தும் பல்லாண்டுகள் தமிழர் செவிகளில் தேனாய்ப் பாய்ந்து மகிழ்வித்துக் காணாமல் போயின. அவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய தமிழின் காலப் பெட்டகங்கள். தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும் ஒளவையின் செவிநுகர்க் கனிநிறை உரைகளும், அவர் அறிஞர் பலர்க்கும் வழங்கிய அணிந்துரைகளும் நூலாக்கம் பெற வேண்டுமே என்று ஏங்கினர். இந்த ஏக்கத்தின் விளைவாக முனைவர் ஒளவை நடராசனாரின் திருமகன் முனைவர் ஒளவை அருள் முயற்சியால் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் கொடையாக அண்மைக் காலமாக ஒளவையின் அணிந்துரைகள், வாழ்த்துரைகள், கட்டுரைகள், உரைவீச்சுகள் அச்சமுகம் கண்டு வருகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் நிகழ்த்தும் பாரதியார் பிறந்த நாள் விழாவின் நிறைவாக ஒளவையின் செந்தமிழ்ப் புதையலாக நூலாக்கம் பெற்று வருகை தந்த சான்றோர்க்கு விலையில்லா விருந்தாக வழங்கப்பட்டது .

ஒளவையின் நெஞ்சில் ஊறிய தமிழ் அணிந்துரைத் தமிழாக மலர்ந்து நூல்களை வாசிக்கும் வாசகர் நெஞ்சில் அரியாசனம் போட்டு அமர்கிறது. அனைத்து அணிந்துரை மலர்களும் படிப்போர் நெஞ்சில் மணக்கின்றன. பொதுவாக ஒளவையின் அணிந்துரைகள், கட்டுரைகள் இவற்றில் அவர் கையாளும் சொற்கள் புதுவண்ணம் காட்டும். சிறந்த சொற்களை இயல்பான நடையில் எழதும் முறையில் கைதேர்ந்தவர். சொற்கல்லைக் கனியாக்கிச் சுவைகூட்டி அமுதமென எழுத்தில் காட்டுவதில் வல்லவர்.

புலமைச் செல்வியர் என்னும் அவரது நூலில் அவரது செம்மாந்த சங்கத் தமிழ் முழக்கத்தை எடுத்துரைக்க அப்பப்பா... எவரால் இயலும் ! அத்தகு சிறப்புடையது அவரது மொழி நடை. சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்கள் பற்றி அவர் ஆய்ந்த திறம் கண்டு தமிழ் உலகமே அவரை உச்சி மீது வைத்துக் கொண்டாடியது. ஒளவை தம் அணிந்துரையில் வழங்கும் ஒவ்வொரு சொல்லும் பொற்றாமரை நாற்றமுடைத்தன்ன ஒளியும் மணமும் ஒருங்கே பெற்று உள்ளத்தை மகிழ வைக்கும். ஒளவை வழங்கும் அணிந்துரைத் தலைப்புகள் அனைத்துமே தங்கத் தோரணங்கள்.

இவரது அணிந்துரையில், இவர் வழங்கும் சொற்களும், தொடர்களும் மேற்கோள்களும், வாழ்த்து மொழிகளும் ஈடு இணையற்றவை. நூலாசிரியரின் நூலாக்க முயற்சியையும், அவரது தகுதிப்பாட்டையும் தவறாமல் குறிப்பிட்டுச் செல்வார். அவரது மொழிநடை மொத்தத்தில் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையைத் தூண்டுவதாகவே அமையக் காணலாம். ஒருவரைப் பாராட்டுவதற்கும் ஒருவற்குத் தனி மனம் வேண்டும்.

ஒளவைக்கு இம்மனம் இயல்பாகவே இருந்தது என்பதை அவரது அணிந்துரைகள் உள்ளங்கை நெல்லிக்கனியெனக் காட்டுவன. ஒளவை நடராசன் தமிழ் மரபின் தொடர்ச்சி என்பதும் அவரது ஆழ்ந்த தனித்தமிழ்ப் புலமைவிளக்கம் அவரின் அணிந்துரைகள் வழி நாம் கண்டு இன்புறலாம்.

சங்க இலக்கியம், திருக்குறள், பக்தி இலக்கியம், கம்பராமாயணம், உரையாசிரியர்கள், காரைக்கால் அம்மையார், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், சைவ சித்தாந்தம், வைணவ இலக்கியம், வரலாறு, திறனாய்வு, சிற்பக்கலை, ஒப்பிலக்கியம், மொழி பெயர்ப்பு, அகழாய்வு இவ்வாறாகப் பல்துறை அறிஞராக விளங்கியவர் ஒளவை. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியென நூற்களைத் தேடித்தேடி நிதம் நூலறி புலவராக விளங்கிய ஒளவை தான் படித்துக் களித்த கருத்துத் தேனை தன் ஈடு இணையற்ற தனி நடையில் எல்லார்க்கும் வழங்கி மகிழ்ந்த செம்மல்.

இவ்வகையில் அண்மையில் வெளியிடப் பெற்ற ஒளவையின் செந்தமிழ்ப் புதையல் நூலில் காணும் ஒளவையின் அணிந்துரை நயத்தையும், தமிழ் நெஞ்சத்தையும் இனி விரிவாகக் காணலாம். ஒளவையின் செந்தமிழ்ப் புதையல் அருள் தந்த காலக்கொடை. இப்புதையலில் அணிந்துரை 71, பேச்சுரை 4, வாழ்த்துரை 8, கட்டுரை 13, ஆங்கிலக் கட்டுரை 7, நேர்காணல் 6 இடம்பெற்றுள்ளன.

சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் நிலைபெறுவதற்கு உறுதுணையாக விளங்கிய தி.கி. நாராயணசாமி நாயுடு அவர்களைப் பற்றிக் கூறும் ஒளவை பெருங்குடியைச் சார்ந்த செல்வக் கோமான் என்றும் அவருடன் தொடர்பு கொண்டிருந்த தம் தந்தையார் உரைவேந்தரைப் பற்றியும், சிவம் பெருக்கும் தொண்டில் சிறந்து விளங்கும் பேரா.அ.நாகலிங்கத்தின் தமிழ்த் தொண்டையும், திரு.வி.க. பற்றிய அவருடைய ஆய்வுத் திறனையும், சைவ சமய சித்தாந்தத்தில் அவருக்குள்ள ஆழங்கால்பட்ட புலமையையும் தமது அணிந்துரைகளின் வழியாகப் புகழாரம் சூட்டுகிறார்.

 “பல் மருத்துவர் கண்ணப்பனாரின் பல முகங்கள்” வெளியிட்ட வாசுகி கண்ணப்பனைப் பாராட்டும் ஒளவை புகழ்வாய்ந்த அவரின் முன்னோர்களான ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளை, ஜே.எம்.சோமசுந்தரம் பிள்ளை, ஜே.எஸ்.கங்காதரன் ஆகியோரின் பணிகளை நினைவூட்டி, வாசுகி அம்மையாரின் குடும்பப் பெருமை, கல்விச் சிறப்பு இவற்றை விவரமாக வரையும் நயம் ஈடுஇணையற்றது.

மறுமலர்ச்சிக் கவிஞர் மீராவின் சிவகங்கை மன்னர் பற்றிய ‘மன்னரின் நினைவில்’ நூல் பற்றிக் கூறும் ஒளவை மீராவின் கவிதை வரிகள் கலங்கிய நீரில் மலர்ந்த கண்ணீர்த் தாமரைகள் என்றும், கபிலரின் பாரி மகளிரின் இதயத் துடிப்பு போன்றது என்றும் புகழ்ந்துரைக்கிறார்.

சனார்த்தனம் திராவிட இயக்கத்தின் முன்னோடியாக மாணவப் பருவக் காலந்தொட்டுப் பணியாற்றியதையும், 1965, 1970 களில் பல ஈழ மாணவர்கட்குக் கல்வி பயில உதவி புரிந்ததையும் ஒளவை நெகிழ்ந்து பாராட்டுகிறார். சனார்த்தனம் பேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றது, டாக்டர் மு.வ. அவர்களிடம் கொண்டிருந்த கேண்மை ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார். ஆசிரியர் மணியனின் ஆஸ்திரேலியப் பயண இலக்கியத்தைப் பலவாறாகப் பாராட்டிப் பயன் தருபவை அவரது எழுத்துகள்; கண்ணை மூடினால் காட்சிகள் காட்டுபவை, இலக்கியத்துக்கு அழகு சேர்ப்பவை, உலகப்பந்தின் விளிம்புகளிலே உலாவி வந்த எழுத்தாளர் மணியன் என்று பாராட்டுகிறது ஒளவையின் மொழிநடை.

சத்தியவேல் முருகனைக் கொண்டாடும் நம் ஒளவை செந்தமிழ் வேள்விச் சதுரரின் மணிவிழா, தமிழ் விழா, பவளமாய், முத்தமிழின் முத்தாய்ப் புகழ் ஒளியுடன் நிகழ வாழ்த்தி மகிழ்கிறார். (பக் 70) பேரறிஞர் அண்ணாவைச் சீரிய சிந்தனையாளர், அரசியலில், இலக்கியத்தில் பல சாதனைகளைச் சாதித்து வரலாறு படைத்த மனிதநேய மாண்பாளர் என்றும், எம்.ஜி.ஆர் பற்றிக் குறிப்பிடும் அண்ணா, அவரை நாம் நம் கட்சியிலே ஒரு பட்டுப்புடவையிலே புட்டா போடுவதைப் போலச் சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருப்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

வேனிற்செல்வனின் ‘புறநானூற்றுப் புதையல்’ ஒரு களஞ்சியம் என்றும், கலைஞர் புறநானூற்றுப் போர் வரிகளைப் போற்றாத நாளில்லை என்றும் மகுடம் சூட்டுகிறார் ஒளவை. டாக்டர் கலைஞரின் ஆட்சித்திறனைப் பல சான்றுகளுடன் தாம் உடனிருந்து பார்த்துத் திகைத்து மருண்ட நிகழ்வுகளைச் சுவைபட ஒளவை பகிரும் திறம் தனிச்சிறப்பானது. கலைஞரின் நினைவாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், சிந்தனையாற்றல் என்று பலவாறாகத் தம் அனுபவத்தை எழுத்தில் காட்டியுள்ளார்.

திருவரங்கத்தின் சிறப்பைக் காட்டும் இளங்கோவடிகளின் வரிகளைச் சுட்டித் திருவரங்கத் திருப்பதியில் ஆழ்வார்கள் பாடித் திளைத்த திறத்தை நறுமணம் கமழும் மலராக அரிய கட்டுரைகளின் வழியாகக் காட்டுவது ஆழ்வார்கள் விழா மலர் என்று பாராட்டுகிறார். திருச்சி மலைக்கோட்டையின் திறம் பற்றி முனைவர் சிவசாமியின் நூலுக்குத் தாம் வழங்கிய பாராட்டுரையில் ஆய்வுப் பெட்டகம், தமிழரின் கலைத் தேர்ச்சி காட்டும் ஆவணம் என்று சிறப்பிக்கிறார். ‘மயிலையின் மாண்பு’ நூலை வெளியிட்டுள்ள சித்தாந்தச்சுடர் சிவாலயம் ஜெ.மோகன் அவர்களைப் போற்றி மகிழ்கிறார் ஒளவை.

மதுரை தியாகராசர் கல்லூரியில் தாம் பணியாற்றிய காலந்தொட்டுக் கவிக்கோ அப்துல் ரகுமானை அறிந்தவர் ஒளவை. கவிஞர் அப்துல்ரகுமானை நினைக்குந்தோறும் மாமன்னன் இராசராசனைப் பற்றிப் பாடிய அவரின் கீழ்வரும் வைர வரிகள் தான் என்றும் தம் நினைவுக்கு வரும் என்பார்.

வாளெடுத்துப் போர் தொடுத்தல் இவனுக்கு வாடிக்கை

வீரக்களத்தில் ரத்த ஈரக் குளத்தில் ஆடிவருவது இவனுக்கு வேடிக்கை

பாடிக் கை நீட்டி வந்தால் தருவதற்கு இருப்பதோ இரண்டல்ல கோடிக்கை

அகம் நீ ! புறம் நீ ! ஆருயிரும் நீ ! எங்கள்

முகம் நீ ! முகவரி நீ ! முடியாத புகழும் நீ !

திடுமென மறைந்த தமிழ்வாணனின் பல்துறைச் சிறப்புகளைக் கூறி அவரின் பிள்ளைகள் லேனா, ரவி இருவரும் வாழ்வில் துணிந்து முயன்று முன்னேறியுள்ள திறத்தை மனமாரப் பாராட்டுகிறார். அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி தனி மனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி என மூன்றாக வரிசைப்படுத்தி உலக சமுதாய சேவா சங்கத்தை உருவாக்கிய முறையைப் போற்றுகிறார். கல்வியாளர் பணிக்கரைப் பாராட்டிய ஒளவை கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், தமிழோடு இணைந்து பிறந்த இனிய செல்வங்களாகும் என்று பெருமிதப்படுகிறார்.

“இருவேறு இயல்பினர் இணைவதும் உண்டு” என்ற தலைப்பில் புலமை மாமலை டாக்டர் மா.அண்ணாதுரையின் திருமந்திரம் பற்றிய நூலின் சீர்மையைப் பலபடப் பாராட்டுகிறார் ஒளவை. ஏழிசை ஆய்வுத்திலகம் தாம்பரம் ஏகாம்பரம் திருப்புகழ் இசைப்பாடல்களில் காணும் இசை நுணுக்கங்களை விவரிக்கும் திறத்தை மெச்சிப் பாராட்டுகிறார்.

எம்.ஏ.எம். இராமசாமி அவர்களின் பல்திறப் பணிகளாக இசை, தமிழ், இலக்கியம், அரசியல், தொழில், கல்வி, விளையாட்டு, கலை என அமைவதை எண்ணி ஒளவை எம்.ஏ.எம்.மைக் கொண்டாடி மகிழ்கிறார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தான் பதவியேற்ற நாளன்றே எம்.ஏ.எம். அவரின் செயலாளரை அனுப்பித் தனக்கு மாலையிட்டுச் சிறப்புச் செய்த நிகழ்வை எண்ணி நெகிழ்கிறார்.

வானியல் அறிவு வாய்க்கப் பெற்ற பேரா.பலராமனைத் தமிழுலகுக்கு வாய்த்த நிதியம் என்று ஒளவை பாராட்டுகிறார். வி.ஜி.பி. சந்தோசம் அவர்களின் பயண நூல் தரும் செய்திகளைப் பட்டியலிட்டுப் புகழ்கிறார் ஒளவை.

சுப்பையா பிள்ளையின் பதிப்புப் பணியைப் பாராட்டிச் “செந்தமிழ்ச் செல்வி” திங்களிதழை அவர் வெளியிடும் திறம் கண்டு வியந்து பேசுகிறார். பழைய இலக்கியம், சங்க இலக்கியம், டாக்டர் மு.வ.திருக்குறள் உரை இவற்றைப் பரவலாகப் பதிப்பித்த தமிழ்ச் செம்மல் அல்லவா சுப்பையா பிள்ளை என்று பெருமிதப்படுகிறார்.

தஞ்சை பெரிய கோயில் சோழர் கலைப்பணிக்கு ஒரு மணிமுடி. கலை உலகுக்கு ஒரு பேரிமயம் போன்றது. திருமுறைகளைத் தேடி எடுத்து வழங்கச் செய்த தனிப்பெரும் புகழும் பிற்காலச் சோழர்குல வரலாற்று நாயகன் இராசராசனுக்கு வாய்த்தது. சோழர் காலக் கல்வெட்டுகள் அழியாப் புகழ் பெற்றவை என்று ஒளவை பிற்காலச் சோழர் ஆட்சியையும் அவர்தம் மாட்சியையும் ஆவணப்படுத்துகிறார்.

அறநெறிச்செல்வர் முதுபெரும் பொறியாளர் சி.எஸ். குப்புராசர் அவர்களின் சைவப்பணி, தமிழ்ப்பணி, சன்மார்க்கப்பணி இவற்றை விரிவாகப் பதிவு செய்கிறார். சொல்லிக் குறையாத சரித்திரம் என்று டாக்டர் உ.வே.சா. அவர்களின் “என் சரித்திரம்” நூலை ஒளவை குறிப்பிடுகிறார். ஒப்பற்ற இந்நூலைச் சென்ற நூற்றாண்டில் தொடராக வெளிவரச் செய்த ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் தமிழ் மக்களின் நன்றிக்கும் போற்றுதலுக்கும் என்றென்றும் உரியவர் என்று புகழேணியில் வைத்துக் கொண்டாடுகிறார்.

பேரா.மார்க்கண்டனின் “செவ்வியல் இலக்கிய உரை மரபு – ஒளவை. சு.துரைசாமிப் பிள்ளை” ஆய்வு நூலைப் பலவாறு ஒளவை பாராட்டுகிறார். ஒளவையின் தந்தையாகிய உரைவேந்தரின் நுண்மாண் நுழைபுலத் திறத்தை ஆராய்ந்து, சங்க இலக்கியத்திற்கு உரைகாரர் பலராயினும் உரைவேந்தரின் உரைநயம் எங்ஙனம் வேறுபட்டது, ஆய்வுலகில் தனித்தன்மை வாய்ந்தது என்று சான்றுகள் நிறுவிய பேரா.மார்க்கண்டனின் ஆய்வுத் திறத்தைக் கண்டு ஆய்வுத் திலகமென அடைமொழியிட்டுப் பாராட்டுகிறார்.

“அபிராமி அந்தாதி” நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் ஆங்கிலப் புலமையைப் போற்றிப் பாராட்டுகிறார். அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் பெரும் புலவர் த.இராமலிங்கத்தின் “தமிழ்ச் சுவையும், அருட்சுவையும்” நூலுக்கு ஒளவை நல்கிய அணிந்துரையில் அறுபதாண்டுப் புலமையில் விளைந்த கதிர்கள் என்று பாராட்டுகிறார்.

‘தமிழிசை மரபு’ என்னும் நூலில் ஆண்டுதோறும் தமிழிசைச் சங்கத்தில் நடைபெறும் பண்ணாராய்ச்சி மாநாடுகளைச் சிறப்பித்துக் குறிப்பிடுகிறார். நூலாசிரியர் பேரா.சிவபாலனைத் தமிழ் நெஞ்சமும், இசைப் புலமையும் இணைந்த இயலாசிரியர் என்று கூறிச் சிறப்பிக்கிறார். “வள்ளலார் காவியம்” படைத்துள்ள திருப்புகழ் மதிவண்ணனைத் “திருப்புகழ்ச் சதுரர்” என்று விருது கொடுத்து மகிழ்கிறார்.

பேரா. ந.சுப்பிரமணியன் வரலாற்றுத் துறையில் புகழ்பெற்ற பெரும் பேராசிரியர். அவரது நூலில் தமிழ் மக்களின் வரலாற்றில் சமுதாய நிலை பற்றி விரிவாக எழுதியுள்ளார். அவரின் நூல் தமிழரின் மொழி உணர்வு, இனமானத்தைத் தட்டியெழுப்பும் தன்மையது. இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்த சிந்தனையாளர் சோமசுந்தரத்தை ஒளவை வெகுவாகப் புகழ்கிறார். இப்புதையலில் நம் ஒளவையின் திருமண அழைப்பிதழ் இடம் பெற்றிருப்பது (ப.199) சிறப்பு.

தொல்காப்பியம் அகத்திணைகள் ஏழு என்றும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்ற ஏழு திணைகளும் அவற்றுக்கு இணையான புறத்திணைகள் என்றும் காட்டியது. இத்தொடர்பு குறித்துத் தொல்காப்பியர் விரிவாகக் குறித்தார் இல்லை. உரையாசிரியர்கள் பலரும் தம் மனத்திற்கேற்பப் பலவாறாக விளக்கம் கண்டனர். அவை முழுதும் பொருந்துவனவாக இல்லை என்பார் ஒளவை. சங்ககால மக்களின் பெயரிடு மரபு குறித்த தருமபுரிப் பேரா. கோவிந்தனின் ஆய்வுப் புலமையைப் பெரிதும் பாராட்டுகிறார் ஒளவை. பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்து எழுந்த விவாதத்துக்கு ஒரத்தநாடு, செட்டிநாடு பெயர்கள் வழக்கில் உள்ளதைக் காட்டிய திறத்தை வியந்து போற்றுகிறார்.

திருவருட்பிரகாச வள்ளற்பெருமான் திருவாய் மலர்ந்தருளிய தேமதுரப் பாக்களின் தொகுப்பு திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை என்று ஒளவை சுட்டிக் காட்டுகிறார். திருவையாறு தமிழ்க் கல்லூரி முதல்வர் எச். வேங்கடராமன் அவர்களின் புலமை நலத்தையும், அவரின் திருமகள் புலவர் தி.வே.விஜயலட்சுமியின் தமிழ்த் தொண்டையும் மிகவும் பாராட்டிச் செல்கிறார்.

இயற்பெயர் வேணுகோபாலன் என்று கொண்ட பேரா. நாகநந்தியின் பாரதி பற்றிய தொடர் உரைகளின் நயத்தைப் பெரிதும் பாராட்டும் ஒளவை அவருடைய சீர்திருத்தச் சிந்தனையின் புதுமைப் பொலிவையும் போற்றுகிறார். வாழ்த்துரை வரிசையில் வைத்து கவிக்கோ, நீதியரசர் சொக்கலிங்கம், முனைவர் மா.கி. இரமணன், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரைக் கொண்டாடுகிறார். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலை விவரிக்கும் தன்மையே தனி.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தமிழ்த் தொண்டு ஈடுஇணையற்றது. தொல்காப்பியத்தை நுணுக்கமாகக் கற்றுணர்ந்தவர் சிதம்பரனார். சைவசித்தாந்த மாபாடியம் என்னும் சிவஞானபோதம் நூலுக்கு நயமாக உரை நல்கிய அவரின் அறிவுத்திறம் ஆகியவற்றையெல்லாம் ஒளவை ஆவணப்படுத்தி மகிழ்கிறார். தொல்காப்பியர் காட்டும் பண்பாட்டு நெறிகளை ஒளவை விவரிக்கும் முறை நோக்கத்தக்கது.

ஒளவை தம் மனங்கவர்ந்த தனிச்செயலாளர் பொன்னேரி பிரதாப்பின் பிறந்தநாளையொட்டி வரைந்துள்ள சொல்லோவியம் தனிக்கட்டுரையாகப் பொன்னாரம் பெற்றுப் பொலிகிறது.

வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பெடு ஆகியவை வரலாற்றில் பெறும் இடம், வரகுணப்பாண்டியன் திருப்பணியின் மாட்சி பற்றிப் பட்டினத்தடிகள் “பெரிய அன்பின் வரகுணத்தேவர்” என்று பாராட்டிய திறத்தையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

கம்பன்கழகத் தலைவர் நயவுரை நம்பி டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் பதிப்பித்துள்ள “கம்பன் கலைக்களஞ்சியம்” நூலில் ஒளவை தம் “காதல் உள்ளம்” கட்டுரையில் விரிவாகக் கம்பனின் கவிநயத்தைக் காட்டும் திறம் வியப்புக்குரியது. எங்ஙனம் வான்மீகியிடமிருந்து வேறுபட்டுக் கம்பநாடன் தமிழ் நிலத்துக்கே உரிய பண்பு நலன்களைக் கம்ப காவியத்தில் காட்டிச் செல்லும் பாங்கினைக் கூறும் ஒளவை நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார். இந்நூலின் பிற்சேர்க்கையாக ஒளவையின் நேர்காணல்கள், ஆங்கிலப் புலமை காட்டும் இலக்கியக் கட்டுரைகள் அணி சேர்க்கின்றன.

இவ்வாறாக, ஒளவையின் செந்தமிழ்ப் புதையல் தொகுதி பல மலர்கள் நிறைந்த கதம்பமாக நறுமலர்க் கொத்தாக மணக்கிறது. இத்தகைய சிறப்புக்குரிய நூலைத் தொகுக்க ஒளவை அருளுக்குத் துணை நின்ற தேனீ நிகர்த்த ஆற்றல் மறவர், தொண்டின் சிகரம், ஒளவையின் தனிச் செயலாளர் பொன்னேரி பிரதாப் பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 நிறைவாகச் சிந்தனைச் செம்மல் ஒளவையின் கருத்துக் கருவூலங்களைத் தொகுக்கும் பணியில் முனைவர் ஒளவை அருள் தொடர்ந்து ஈடுபட்டுத் தமிழன்னைக்கு மேலும் மேலும் பல மகுடங்கள் சூட்டி புகழ் பெற்றுப் பொலிக!

நூல் : ஒளவையின் செந்தமிழ்ப்புதையல்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் .,

பக்கம் : 424; விலை : ரூ. 410

- இரா.மோகனசுந்தரம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.