குறிப்பு: “1940களில் இந்தியா: தளை மீண்ட புதிய இந்தியா (The Nation Unbound: India in the 1940s) என்ற தலைப்பில் மே, 2012 ஷிம்லா இந்திய உயராய்வு நிறுவனத்தில் கருத்தரங்கம் ஒன்று ஒருங்கமைக்கப்பட்டது. முனைவர் கவிதா பஞ்சாபி (ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல் கத்தா) திருமதி வ.கீதா (வரலாற்றியல் அறிஞர், பெண்ணியவாதி) ஆகிய இருவரும் ஒருங்கிணைப் பாளர்களாகச் செயல்பட்டனர். அதற்கெனத் தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதியைத் தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என்.எஸ்.ருக்மணி அம்மாள் சேகரித்து வைத்திருந்த சிதிலமான ஜனசக்தி இதழ்கள், அவற்றிலிருந்து கலை, இலக்கிய, பண் பாட்டுச் செயல்பாடுகள் குறித்த கட்டுரைகளை நோட்டுப் புத்தகங்களில் கையெழுத்துப்படி எடுத்துக் காப்பாற்றிய வீ.அரசு, அவரது மாணவர்கள், கடந்த ஓராண்டாகப் பல்வேறு கூட்டங்களில் சந்திக்க நேரும் போதெல்லாம் நாடகங்களில் நடித்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட தோழர் இரா.நல்லகண்ணு ஆகியோருக்கு நான் செலுத்தும் நன்றி மற்றும் கடமையாக இக்கட்டுரையைக் கருதுகின்றேன்.

1940கள் புதிதாக விடுதலை பெற்ற நாட்டின் கனவுகளையும், சவால்களையும் கண்டது. இலக்கியம், இசைஅரங்கம், திரைப்படம் ஆகிய துறைகளில் சோதனை முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பாசிச எதிர்ப்பு எழுத்தாளர் அமைப்பு, இந்திய மக்கள் நாடக மன்றம் (IPTA) ஆகியவை பண்பாட்டு உலகில் மதசார்பற்ற, சமத்துவம் நிறைந்த சமூகத்திற்காகக் கற்பனைகளை சிருஷ்டித்தன.

தமிழகத்தில் பகுத்தறிவு சார்ந்த, சாதீய எதிர்ப்புக் கருத்துக்கள் உருக்கொண்டன. நாட்டின் திசையெங்கும் புத்தலைகள் பெருகின சூழலில், சவால்களும் இல்லாமல் இல்லை. விடுதலை பெற்ற உடனேயே, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது; வடகிழக்கு மாகாணங்கள் கட்டாயமாக இணைக்கப் பட்டன; காஷ்மீர் மக்களின் குரல் நசுக்கப்பட்டது; நாட்டை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் வரலாற்றுப் பிழைகள் பல நடந்தேறின. ஆனாலும் பல குரல்கள் ஒலித்தன.

19ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இருந்து தமிழ்ப் பிரதேசத்தில் ஆறுமுக நாவலரின் சைவ மறு மலர்ச்சி/ இராமலிங்க வள்ளலாரின் மதச்சார்பற்ற சீர்திருத்தம்; கால்ட்வெல்லின் திராவிட மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கண ஆய்வு; இலண்டன் மதச் சார்பற்ற அமைப்புடன் தொடர்புகொண்டு உருவாக்கப் பட்ட சென்னை இலௌகிக சங்கம்; பனையோலைகளில் இருந்து பதிப்பிக்கப்பட்ட தமிழ்ச் செவ்வியல் பனுவல்கள், அயோத்திதாசரின் பௌத்தச் சார்பு, ஜஸ்டிஸ் கட்சித் தலை மையின் பார்ப்பனரல்லாதார் இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், சோஷலிஸ இயக்கத்தின் இடை யீடுகள், தனித் தமிழ் இயக்கம், தமிழ் இசை இயக்கம், திராவிட இயக்கம் உருவாக்கிய தமிழ் மொழி, இலக்கியம் சார்ந்த அரசியல், மேடை நாடகம், மேடைப் பேச்சு, மேடைப் பாடல்கள், திரைப்படம் ஆகிய வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் ஆகிய பல்வேறு தாக்கங்கள் தொழிற்பட்டுள்ளன.

மக்கள் தொடர்புச் சாதனங்களில் முக்கிய பங்கு வகித்த கிராமபோன் ரெகார்டுகள், குஜிலி புத்தகங்கள் ஆகியவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (ஸ்டீஃபன் ஹியூஸ்; ஆ.இரா.வேங்கடாசலபதி, வீ.அரசு). 1931 இல் வெளியிடப்பட்டுள்ள காங்கிரஸ் சுயராஜ்ஜியப் பாட்டு என்ற குஜிலி நூலின் பின் அட்டை விளம்பரம் பூலோக ரகசியம் என்னும் பதிமோசக் களஞ்சியம் என்னும் புத்தகத்திற்கானது. அது பின்வரும் பாடல்கள் அடங்கிய நூல் எனக் குறிப்பிடுகிறது.

“தெய்வப் பிரார்த்தனை மோசம், ஜவுளிக்கடை மோசம், அரிசி வியாபார மோசம், மூர்மார்க்கெட், காசுக் கடைக்காரர், வட்டிக்குப் பணம் விடுவோர், சன்னியாசிகள், தேவடியாள் உழைப்பில் மோசம், தட்டுவாணி சிறிக்கிகள், மார்வாடி, சாராயக் கடை, பெட்டிச் சாவி போடுவோர், ஈட்டிக்காரர், வீடு குடிக்கூலிக்கு வருவது, ஏலம் போடுவோர் திருப்பதிக்குப் போவதாக உத்தியோகஸ்தர் திவசத்தில் மோசம், ஜாலம் செய்பவர், குடுகுடுப் பைக்கார கிராமத்து நாட்டாண்மைக்காரர், டான்சு ஆடுபவர்கள், பெருமாள் மாட்டுக்காரர், பகல் கூத்தாடிகள், மைபோட்டுத் திருடு பிடிக்கும் மோசம், போலி வைத்திய மோசம், காந்தி மகான் பெயரால் மோசம், குறிமேடை மோசம், சாமி ஆடுபவர் மோசம், ஆலய தர்மகர்த்தாக்கள் மோசம், சில கிராமாதிகாரர்கள் சாதிமதப் போராட்டம், கேட் ஆட்கள் மோசம், சுயராஜ்ய ஜஸ்டிஸ் கட்சியினரின் மோசம், போலிக் கவிராய வித்வ பாவல நாவலப் பண்டிதப் புலவர்கள், மடாதிபதிகள் அடாத மோசம், வெண்பா, விருத்தம், கலித்துறைப் பதிகங்களோடு ஆங் காங்கு ஐதீகப்படங்களுடன் செந்தமிழ் நடையில் வசன காவியமாக எழுதி வெளியிடப்பெற்றது. அநேகர் வேண்டிக் கொண்டபடி துரிதத்தில் முடித்து (2-பாகம்) சொற்பக் காப்பிகளே யிருக்கின்றன. முந்துங்கள் இரண்டு பாகமும் விலை ரூபா 2

இவ்விளம்பரம் மூலம் அக்காலச் சமூக விழுமியங்கள் பரவலாகப் பேசப்பட்ட பொருட்கள் குறித்து அறியலாம். இப்பாடல்கள் மரபை முற்போக்கு இயக்கத்தவர்கள் தமதாக்கிக் கொண்டனர். கோவை இராமதாஸ், நாகை சுவாமிநாதன், வெ.நா.திருமூர்த்தி ஆகியோர் தெருப் பாடகர்களாகத் தமது பரப்புரைகளை மேற்கொண்டனர். மிகமிகச் சாதாரணமான சமூகப் பின்னணிகளில் இருந்து வந்த இப்பாடகர்கள் மக்கள் பாடகர்களாக உருப்பெற்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களும் கவிஞராக மட்டுமின்றிப் பாடலாசிரியராகவும் இருந்தது நாம் அறிந்த செய்தி. இதே காலகட்டத்தில் வானொலி ஆற்றிய பங்கு பற்றித் தனித்து ஆராய வேண்டிய தேவை உள்ளது. நாடகக் கலைஞர்கள் மாநில அளவில் 1944, 1945, 1946 ஆண்டுகளில் மாநாடுகள் நடத்தியுள்ளனர். இக்கட்டுரையில் ஜனசக்தி (1943-46) இதழ்கள் மூலம் அறியக்கூடிய பண்பாட்டுச் செயல் பாடுகளைக் குறித்து மட்டுமே விவாதிக்கப்படுகிறது.

சுதீ ப்ரதான் தொகுத்துள்ள மார்ச்சிஸ்ட் பண்பாட்டு இயக்கம் :ஆவணங்கள் 1936-47 மூன்று தொகுதிகள் அருமையான ஆவணமாகத் திகழ்கிறது. ஆனால் அதில் தமிழ்நாடு குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. (ஆந்திரா, கேரளா நிகழ்வுகள் ஓரளவு பதிவாகி உள்ளன).

பிற மாநிலங்கள் போல நேரடியாக இப்டா அமைப்பாகச் செயல்படாதது ஒரு காரணமாக இருக்கலாம். நாடகங்கள் போன்ற முழுநீள நிகழ்வுகளாக இல்லாமல், மேடைப் பாடல்கள், பஜனை நிகழ்வுகள் ஆகியன இடம் பெற்றதால் பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம்.

2.2.1944 தேதியிட்ட ஜனசக்தி (மலர் 2 இதழ் 18) இதழில் பாரதியின் பாப்பாப் பாட்டு மெட்டில் புதுவை தோழர் நாராயணசாமி பாடல் எழுதியுள்ளார்.

“தானியத்தைத் தேக்கி வைத்துத் திருடும்

சதிகார மூடர்களைக் கண்டால்

மானத்தை வாங்கிவிடு தோழா - கள்ள

மார்க்கெட்டை அழித்துவிடு தோழா’

22.12.1943 இதழில் கோவை ராமதாஸ் வங்கப் பஞ்சம் குறித்துப் பாடிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தெருப் பாடகன் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள குறத்திப் பாட்டு (16.2.1944)

“பஞ்சப் பேய்களதனை - இன்றே

பஞ்சாய் பறக்கடிப்போம்

கஞ்சிக் கிலை என்றசொல் - இல்லைஇல்லை

காலம் மாறிவிட்டதே”

எனப்பாடுகிறது. 23.2.1944 இதழில் ஆர்.ஆர். எழுதியுள்ள குடுகுடுப்பைக்காரப் பாடல்,

“நாஜிகள் சேனைகள் - பஞ்சாய் பறக்குது

நானிலம் முற்றும் - கிளர்ச்சி வலுக்குது

ஓங்கும் ஜனங்களின் - ஒப்பற்ற சக்தியால்

ஓடுது பாஸிஸம் - ஐயோன்னு ஓடுது

 குடு குடு குடு குடு”

இரண்டாம் உலகப்போர் குறித்துப் பேசுகிறது. தொடர்ந்து வங்கப் பஞ்சம் குறித்த பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1.3.1944 இதழில்,

வங்கமெல்லாம் சுத்திப் பார்த்தேன் -

 பஞ்சமோடா பஞ்சம்

வயிறு ஒட்டி வழியில்

 மக்கள் வாழும் கொடுமைப் பஞ்சம்

கஞ்சி கஞ்சி என்று கெஞ்சும் -

 பஞ்சமோடா பஞ்சம்

கொடுத்துக் காக்க யாருமில்லை யடா பஞ்சம்

10.5.1944 இதழில் பீப்பிள்ஸ் வார் (றிமீஷீஜீறீமீs ஷ்ணீக்ஷீ) இதழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட வங்கப் பெண்ணின் கூற்று வெளியிடப்பட்டுள்ளது. பாண்டியில் புதுமை பஜனை கோஷ்டி வீதிவீதியாகப் பஜனை செய்து வங்கப் பஞ்ச நிவாரண நிதி வசூல் செய்ததை 3.5.44 இதழில் கலைப்பித்தன் பதிவு செய்கிறார். ராஜாஜியின் பஜகோவிந்தம் நூலுக்குப் பதிலாக விந்தன் இயற்றிய பசி கோவிந்தம் 1950இல் வெளிவந்தது. பஜனை வடிவத்தை அங்கதமாய்ப் பயன்படுத்திய நெறிமுறை புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது.

தமிழ்நாடு புதுமைக் கலா மண்டலம் நடத்தப் பட்டதைக் கலைப்பித்தன் பதிவு செய்கிறார். ‘கந்தன் காட்டிய வழி’ என்ற தலைப்பிட்ட நாடகத்தில்பல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பங்கேற்றதை அவர் குறிப்பிடுகிறார். தோழர்கள் எம்.ஆர்.வெங்கடராமன், பி.ராமமூர்த்தி, பி.ஸ்ரீனிவாசராவ், கே.பாலதண்டாயுதம், எம்.ஆர்.இராமதாஸ் ஆகியோரின் பெயர்களை அறிய முடிகிறது.

18.2.1944 இதழில் சென்னையில் இந்நாடகம் செயிண்ட் மேரீஸ் ஹாலில் நடத்தப்பட்டதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரங்கத்தில் இருந்த 1300 இருக்கைகளும் நிறைந்தன. மாலை 7-11 வரை நடந்த நாடகத்தைப் பார்க்க வந்த மக்கள்திரும்பிச் செல்ல டிராம்/பஸ் வசதி இல்லாத போதும் கூட்டம் கலையவில்லை.

மாநிலக்கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் சுவாமிநாதன், Òகம்யூனிஸ்டுகளுக்குத் தமிழ்நாட்டுக் கலையில் அக்கறையில்லை என்று எண்ணி வந்தேன். அதைப் பொய்யாக்கி விட்டீர்கள் என்று குறிப்பிட்டதாக இக்கட்டுரை தெரிவிக்கிறது. கே.பாலதண்டாயுதம் 24.5.1944 இதழில் இந்நாடகம் பற்றி எழுதுகையில் தோழர் ருக்மணி அம்மாள் - நடராஜன் தம்பதியர் நடிப்பு குறித்துக் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தில் பட்டினி; எரிக்க விறகில்லை; டிராம் ஏறக் காசு இல்லை ஆகிய அன்றாடச் சிக்கல்களைக் கண்முன் கொண்டுவந்தது நடிப்பு எனப் பாராட்டுகிறார்.

மே 13-14, 1944 இல் நடந்தடிராம்போ மாநாட்டுக் கலைவிழாவில் இரவு உணவைக் கட்டிக் கொண்டு பார்த்த பார்வையாளர் களின் இரசனையையும், ஆதரவையும் அவர் குறிப்பிடு கிறார். 19.1.1944இல் இந்நாடகம் பற்றிய குறிப்பில் கலைப்பித்தன் “கதையே இல்லை. இருந்தாலும் நம்ம வாழ்க்கையை அப்படியே புட்டு புட்டு எடுத்துக் காட்றாங்கடா” என்று தொழிலாளர்கள் உரையாடிச் சென்றதாகக் குறிப்பிடுகிறார்.

கிட்டத்தட்ட 1944 ஆண்டு முழுதும் ஜனசக்தி இதழில் கந்தன் காட்டிய வழி நாடகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாடகம், நாடக உருவாக்கம், மாநிலமெங்கும் நிகழ்த்திய முறை ஆகியவற்றைப் பற்றிய பதிவுகள் இருந்தால் தமிழக அரசியல் அரங்கத்தின் முன்னோடியாகக் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டதை உறுதிப்படுத்த இயலும்.

கவிஞர் தமிழொளி (1924-1965) பற்றித் தனித்துப் பேச வேண்டிய தேவை உண்டு. 1949இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் பணியாற்றியவர் அவர். (வீ.அரசு, மாற்று., 2008) கரந்தைப் பாவலர் பாலசுந்தரனார் தமிழொளி பற்றிய அவரது நினைவலைகளில், தமிழொளி திண்டுக்கல் சக்தி நாடக சபாவிற்குத் தனது நாடகத்தை அனுப்பியுள்ளதாகக் கூறியதைக் குறிப்பிடுகிறார்.

அக்குழு அவரது பனுவலை ஏற்று மேடை யேற்றித் தமிழொளிக்கு முதல்நாள் வசூல் தொகை ரூ700 பணம் அனுப்பியதாகக் கூறுகிறார். சிற்பியின் கனவு என்பது அந்நாடகம். அதன்பின் வீராயி என்ற காவியத்தை எழுதினார். தமிழொளி ஒப்பந்தக் கூலியாக இலங்கைக்குச் சென்ற தலித், தேயிலைத் தோட்டப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்ட காவியநாடகம் இது (1947). கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபின் முன்னணி இதழில் பணியாற்றினார் தமிழொளி, கட்சி தலைமறைவாக இயங்கிய காலத்தில் ஸ்டாலின் குறித்த நாடகமொன்றை எழுதி, மேடையேற்ற முயற்சி செய்ததாகவும் அறிகிறோம். பின்னர் அது குறுநூலாக வெளியிடப் பட்டது.

வெ.நா.திருமூர்த்தியின் பாடல்கள் ஓரளவு தொகுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஜனசக்தியில் அவரது பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1960கள் வரை தமிழக அரசியலில் நிகழ்ந்தவற்றை ஆவணப் படுத்திய பாடகராகத் திருமூர்த்தி திகழ்கிறார்.

கடந்த சிலஆண்டுகளாகப் பண்பாட்டுத் தளத்தில் 1940களில் செயல்பட்டவர்கள் குறித்த பதிவுகள் பல்வேறு மொழிகளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஷெளகத் ஆஸ்மி உருது மொழியில் கைஃபியும் நானும் என்ற தன் வரலாற்று நூலில் 1940களின் முற்போக்குக் கலை இலக்கிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.

பிரபல திரைப்படக் கலைஞரான ஷபானா ஆஸ்மியின் தாயாரும், முற்போக்குக் கவிஞர் கைஃபி ஆஸ்மியின் துணைவியும், இப்டா மற்றும் ப்ரித்வி குழுக்களில் பணியாற்றிய கலைஞருமான ஷெளகத்தின் இந்நூல் அரசியல் சார்ந்த கலை இலக்கிய வெளிப்பாடுகளின் நுண்ணிய பகுதிகளைப் பதிவு செய்துள்ளது.

ஹபீப் தன்வீர் இப்டாவின் பிற்பகுதியில் இணைந்தாலும், அதன் தாக்கத்தை உருது மொழியில் எழுதிய தன் வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு மகமூத் ஃபரூக்கீ மூலம் நமக்குக் கிடைக்கிறது. இந்திய முற்போக்குக் கலை வரலாற்றை ஆய்வு செய்ய விரும்புவோருக்கு இவை அரிய பொக்கிஷங்கள்.

அவ்வாய்வில் தமிழக கலைச் செயல்பாடுகள் பதிவாக வேண்டுமெனில், அத்துறை குறித்த ஆய்வை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒரு அரங்கக் கலைஞர் என்ற வகையில் அதன் தேவையை நான் உணர்கிறேன். முற்போக்குக் கலைச் செயல் பாட்டுக்கான முழுச் சொத்தை நாம் தேடிப் பெற வேண்டும்.

Pin It