நமக்கு இன்றைய தேவை அறிவுத் துறையையும் மக்கள் சமூகத்தையும் இணைக்கக்கூடிய செயற் பாட்டாளர்களே என்பார் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி. நம் அறிஞர்கள் பலர் சமூகத் தொடர் பின்றியும், ஏன் சில வேளைகளில் எதிராகவும், இருப்பதை அறிந்தால் இதன் அவசியத்தை உணரலாம். மக்களிடமிருந்து கற்றும் பெற்றும் கண்டடைந்த உண்மைகளை மக்களுக்கே கையளிப்பது நல் அறிவு வசப்பட்டால் சாத்தியமாகும். அரிதின் முயன்று தான் கண்ட வரலாற்றியல் முடிவுகளை தமிழ் மக்கள் வரலாற்று மீட்டெடுப்பாக முன்வைத்த பேராசிரியர் ந. அதியமான், தமிழ்நாட்டின் கடலியல் ஆய்வு முன்னோடி ஆவார்.
26.06.1963ல் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விவசாயப் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் பொறியியல் பட்டயம் பயின்றவர். பின்னர் ‘Diving’ எனும் நீர்மூழ்கும் நுட்பம் கற்றார். கோவா கடலாய்வு மையத்தில் பணிக்குச் சேர்ந்தார். ‘நான் ‘boy service’ பதினெட்டு வயதாகும் முன்பே பணிக்குச் சேர்ந்தவன்’ என அடிக்கடிச் சொல்வார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியத்தின் அழைப்பின் பேரில் நீர் அகழாய்வு மையத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
அதியமான் அறிவைச் சேகரிக்கும் துடிப்பு மிக்கவர். நாளும் புதியது கற்கும் ஆர்வம் இயல்பி லேயே அவரிடம் இருந்தது. தமிழ் இலக்கியம், வரலாறு, தொல்லியல், நாணயவியல், சுவடிகள், கல்வெட்டு... எல்லாம் அவரே முயன்று கற்றுத் தேர்ந்தவை மட்டுமல்ல மொழிகளைக் கற்பதிலும் பேரார்வம் கொண்டவர். ஆங்கிலத்தில் மிக இயல்பாகப் பேசவும், எழுதவும் தேர்ந்தவர். அவரின் கட்டுரைகள், நூல்கள் பல ஆங்கிலத்திலேயே வந்தன. ஓரளவு இந்தி மொழிப் பயிற்சியும் உண்டு. தெலுங்கு, மலையாளம், மராட்டி போன்ற இந்திய மொழிகள் அறிவார். ஆய்வுத் தேவைகளுக்காக கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு மொழிகளையும் ஓரளவு கற்றதாகக் கூறுவார். இந்த பன்மொழிப் புழக்கமும். பல்துறைப் பயிற்சியும் அவரின் கல்விப்புல ஆய்வுகளின் ஆழ, அகலங்களை விசாலப்படுத்திற்று எனலாம்.
தமிழ் மக்களின், மொழியின் தொன்மைமிகு வரலாற்றுத் தடங்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் ஏற்புறுதி பெறும் காலமிது. அகழாய்வு களும், தொல்பொருள் சான்றுகளும் இதுவரை தொன்மமாகப் பார்க்கப்பட்ட கருதுகோள்களை ‘உண்மை வரலாறாக’ மாற்றிக் காட்டியிருக்கிறது. தமிழ்க் கடலியல்சார் ஆய்வுகளுக்கும் இதில் பெரும் பங்களிப்பு உண்டு. கடலோடிகளாகத் திகழ்ந்த ஆதித்தமிழர்களின் கடல் பயணங்கள், கடல் பயண வழிகள், வணிகத் தலங்கள், வணிகப் பொருள்கள், வணிகமுறைகள் குறித்த வரலாற்று, பண்பாட்டுக் கூறுகளை அதியமான் தன் ஆய்வுகளின் வழியே நிறுவிக் காட்டினார். மட்டுமல்ல அவற்றை இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாக உணர்த்தவும் செய்தது அவரது ஆகச் சிறந்தப் பங்களிப்பு எனலாம்.
கோவாவில் இயங்கும் தேசிய கடலாய்வு நிறுவனத்தோடு இணைந்து பூம்புகார், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கடலியல், தொல்லியல் ஆய்வு களை மேற்கொண்டார். புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ராஜவேலு. செல்வக்குமார் ஆகியோருடன் இணைந்து பல ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளார். தாண்டிக்குடி. மயிலாடும்பாறை, மந்திரிப்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்த கடல்சார் தொல்லியல் ஆய்வு களில் இவரின் பங்கு பெரிது. சங்க இலக்கியங்களை நுட்பமாகக் கற்றார். இதன் விளைவாக இலக்கியச் சான்றுகளை வரலாற்று ஆய்வுகளில் தேடிக் கண்டார். அரிய பொருள்கள் சிலவற்றை இவர் அடையாளப்படுத்தினார். இதனூடாக சங்ககால வரலாற்றுக்கு அரண் சேர்த்தார். கிழக்குக் கடற்கரை ஆய்வுகளில் ஈடுபட்டு இவர் கண்டுபிடித்த ‘நங்கூரங்கள்’ பழந்தமிழர் கடல் பயண வழித் தடத்தையும், வரலாற்றையும் மெய்ப்பித்தன.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவர், புலத்தலைவர், ஆட்சிக்குழு உறுப்பினர் போன்ற பல பதவிகளில் சிறப்புறப் பணியாற்றினார். தமிழ்க் கலை, civilization இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். பல தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்கு களை முன்னின்று நடத்தியுள்ளார். ஆய்வுத் துறையில் இளைஞர்களை ஊக்குவித்தார். நிகமம், தமிழகக் கடல்சார் வரலாறு, நாவாய் போன்ற நூல்கள் யாவும் மூத்த, இளம் ஆய்வாளர்களின் தொகுப்புக்களே. பா.ஜெயக்குமார், ஆ.துளசேந்திரன், பவானி போன்ற துறைப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து இவற்றைச் செயற்படுத்தினார்.
தம் துறை சார்ந்த அறிஞர்களைப் பொன்னே போல் போற்றுவார். அறிஞர் ஒய்.சுப்பராயலு அவர்களைத் தன் ஞானத்தந்தையாக மதித்தார்.
செ.ராசு, ஐராவதம், சாந்தலிங்கம் உள்ளிட்ட இந்திய அறிஞர்களோடும், உலக அறிஞர் பலரோடும் நல்லுறவைப் பேணினார்.
தமிழ்ப்பண்பாட்டு உணர்வு உந்துதலை வெளிப் படுத்துவார். தன்னை இடதுசாரி, மார்க்சியக் கருத்தியல் சார்புடையவராக அடையாளப்படுத்திக் கொள்வதில் மகிழ்வார். நாவாவின் ஆராய்ச்சி, உங்கள் நூலகம், சமூக விஞ்ஞானம் ஆகியவற்றில் தொடர்ந்து எழுதினார். தோழர்கள் சி.மகேந்திரன், ஆர்.நல்லகண்ணு, சண்முகம் சரவணன் ஆகியோர் மீது பேரன்புமிக்கவர். 'தாமரை' வளர்ச்சிக்கு உதவினார். கழிந்த சில மாதங்களாக துறைமுகப் பட்டிணங்கள் குறித்து மாதம்தோறும் 'தாமரை’ இதழில் எழுதினார். அய்யா பழ. நெடுமாறன் அவர்களோடும் நெருக்கமாக இருந்தார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்தும் சிறந்த நூல்களுக்கு விருது வழங்கும் திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் புரவலராக இணைந்தார். சிறந்த ஆய்வு நூலுக்குப் பரிசு வழங்கினார். யார் பெயரில் பரிசு வழங்குவது என வருகிறபோது என் தந்தையார் சிறந்தவர். என்றாலும் அவர் பெயர் வேண்டாம். நான் நாளும் மதித்துப் போற்றும் நம் அறிஞர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பெயரில் விருது தரலாம் என்றார். அவரிடமும் இதனை வலியுறுத்தினார். ஆன்றவிந்த கொள்கைச் சான்றோராகிய தோழர்
ஆ.சிவசுப்பிரமணியன் கறாராக தன் பெயரில் வேண்டாம் என மறுத்துவிட்டார். பின்னர் அவ்விருதினை தான் மதிக்கும் மூதறிஞர் வ.அய். சுப்பிர மணியம் பெயரில் அதியமான் வழங்கி வந்தார்.
தொல்லியல் கழகத்தின் பொறுப்பில் இருந்து அதனை முன்னெடுத்தார். 'ஆவணம்' இதழ் தொடர்ந்து வர உதவினார். மாணவர்க்கும், ஆய்வாளர்க்கும் பல உதவிகளைச் செய்து வந்தார். அவரிடம் நல்ல நூலகம் உண்டு. ஆறு மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர் பிரபஞ்சன் என்னைத் தொடர்பு கொண்டு, கோவலன், கண்ணகி - புகார் குறித்து எழுதத் திட்டம். ஓர் நூல் வேண்டும் கிடைக்குமா? என்றார். சி. கோவிந்த ராசனார் எழுதி, மதுரைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட “கண்ணகியார் அடிச்சுவட்டில் புகார் முதல் வஞ்சிவரை” எனும் நூல்தான் அது. நான் பேராசிரியர் அதியமானிடம் கேட்டேன். இருக்கிறது என்றார். செராக்ஸ் எடுத்து அனுப்பலாம் என்றேன். வேண்டாம் பிரபஞ்சன் ஓர் அற்புதப் படைப்பாளி. அவர் கேட்கிறார். நூலை அனுப்பு தம்பி. பிறகு நாம் பார்த்துக் கொள்ளலாம் என்றார். இதுதான் அதியமான்.
குறைவான வயதில் பல உச்சங்களைத் தொட்டவர் அதியமான். துளியும் கர்வம் கிடையாது. எளிமை, இனிமை அவர் சுபாவம். அழகாக உடுத்துவார். சிரித்த முகமும், குழைவானப் பேச்சும், குதூகலமும் அவரோடு எப்போதும் இருந்தன. நண்பர்கள், துறை வல்லுநர்கள் ராஜவேலு, செல்வகுமார், நூல்கள், பயணங்கள், ஆய்வுகள்... என அவர் வாழ்வை அமைத்துக் கொண்டார். ஆய்வியல் அறம், ஞானச் செருக்கு, உடல் உயரம் போலவே மேலோங்கியப் பார்வை... இதுதான் பேராசிரியர் அதியமான். அன்பும் பாசப்பிணைப்பும் கொண்ட வாழ்க்கைத் துணைவி கல்பனா, தன் கணவர் ஆற்றல் உணர்ந்து இறுதிவரை அவரைக் கொண்டாடினார், பேராசிரியரும் துணைவியாரின் சுதந்திரத்தை மதித்தார். தொடர்ந்து அவர் உயர் கல்வியைத் தொடர ஊக்குவித்தார். இரண்டு மகள்கள். காயத்ரி, சுகி நந்தினி.
மரணத்திற்கான வயதில்லை. ஞான அண்ணனை, நாங்கள் இழந்தோம். தமிழ் அறிவுலகம் கடல்சார் வரலாற்று அறிஞனை இழந்துவிட்டது. தமிழின வரலாற்று மீட்டெடுப்பில், சீறிப்பாயும் கடல் அலை போல ஓர் பேரலையாக பேராசிரியர் ந.அதியமான் நின்று நிலைப்பார்.