periyar life history 400ஆசிரியர் கி.வீரமணி பல பாகங்களாகத் தொடர்ந்து எழுதிவரும் பெரியார் வாழ்க்கை வரலாற்று நூலின் நான்காவது பாகம் 1951  முதல் 1953 வரையிலான காலகட்டத்தில் பெரியார் வாழ்வில் நிகழ்ந்தவற்றை 250 பக்கங்களுக்கும் மேலாகப் பதிவு செய்வதாக அமைந்துள்ளது. இந்நூலை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.

இத்தொகுப்பில் பெரியார் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு மிக முக்கியமான  நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. பிள்ளையார் சிலை உடைப்புத் தொடங்கியது, மணியம்மையை அவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டது, சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை சட்டப்படி பதிவு செய்தது, குலக்கல்வித் திட்டத்தை மிகக் கடுமையான போராட்டங்களால் எதிர்த்தது, இந்தி எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தது உள்ளிட்ட பெரியாரெனும் பேரியக்க வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ள கால கட்டங்களில் பெரியார் பலநூறு மைல்களுக்கு ஓயாமல் சுற்றுப் பயணம் மேற்கொண்டதும் அந்தக் கூட்டங்களி லெல்லாம் இரண்டு மணி நேரம் முன்று மணி நேரத்துக்குக் குறைவில்லாமல் அவர் உரையாற்றியதும், அவ்எல்லாக் கூட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிநின்று பெரியார் உரையைக் கேட்டது போன்ற அழுத்தமான வரலாற்று உண்மைகளை இந்நூலிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி எனும் ஊரில் முன்னெப்போதும் திராவிடர் கழகக் கூட்டமே நடந்திராத நிலையில் நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே 10000 பேர் ஊர்வலத்தில் கலந்துகொண்டதொரு கூட்டத்தைப் பற்றிய வரலாற்றுத்தகவல் ஓர் உதாரண மாகும். பெரும்பாலான பொதுக்கூட்டங்களில் பெரியார் உரையாற்றுவதற்கு முன்னதாக அவர் மேடைக்கு வரும் வரையில் அணைக்கரை டேப் தங்கராசு அவர்கள் மணிக் கணக்கில் இயக்கப் பாடல்களை இசைத்துப் பாடியுள்ளார்.

சுரண்டல் தடுப்பு மாநாடு, திராவிடநாடு பிரிவினை மாநாடு, ஜாதி ஒழிப்பு மாநாடு, திராவிடர் விவசாயத் தொழிலாளர் கழக மாநாடு, குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு, புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாடு, வகுப்புரிமை மாநாடு, திராவிடப் பெண்கள் மாநாடு, திராவிட விவசாயி மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகள் குறித்த தகவல்களையும் அம்மாநாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கலந்துகொண்டதையும் அதில் மணிக்கணக்காக பெரியார் நிகழ்த்திய எழுச்சி மிக்க உரைகளையும் அவ்வுரைகள் விடுதலையில் எழுதப் பட்டுள்ளதையும் இந்நூல் பதிவு செய்துள்ளது பிரமிக்கத் தக்கதாய் உள்ளது.

இந்தியா விடுதலை பெற்ற நான்காவது ஆண்டில் பெரியார் வெளியிட்ட அறிக்கையன்றில் ஆகஸ்ட் 15ந் தேதியை துக்கநாள் என்று அறிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டார்.

‘ஆகஸ்ட் 15ஆம் தேதியானது நாட்டு மக்களுக்கு ஒரு மாபெரும் துக்கநாளாகும். ஆகஸ்ட் ‘சுதந்திரம்' என்பது நாட்டுக்குப் பல கேடுகளையும் நாசங் களையும் விளைவித்து இருப்பதோடு பெரு வாரியான மக்களைப் பசி, பட்டினியால் வதைத்துவிட்டதுடன் 100க்கு 90 சதவீதம் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், நேர்மை இல்லாமல் செய்துவிட்டது. இது மாற்றமடைந்து நாடும் மக்களும் செம்மையுற வேண்டுமானால் இன்றைய ஆட்சியில் காங்கிரசும் ஒழிந்தாக வேண்டும். ஆதலால் பொதுமக்கள் - சர்க்காரும், காங்கிரசும் கொண்டாடும் சுதந்திரவிழாவில் கலந்துகொள்ளக்கூடாது என்பதுடன் இன்றைய ஆட்சி ஒழிப்புக்கும் ஏற்ற நாளாக இந்த 15ஆம் தேதியைக் கொண்டாடவேண்டுமென்றும் வேண்டிக் கொள்கிறேன்.'

இதையடுத்து 1952ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் 17-09-1951ல் திருச்சியில் காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டும் என்று முதல்முறையாகப் பேசத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசை வீழ்த்தவேண்டு மென்ற நோக்கில் தமிழகம் முழுவதும் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்தார். ஒரேநாளில் இரண்டு மூன்று ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில்கூட கலந்து கொண்டு காங்கிரஸ் எதிர்ப்புக் கோஷத்தை வலுவாக முன்வைத்து உரையாற்றி வந்தார் பெரியார் அவர்கள். இரண்டு நாட்களில் 16 ஊர்களில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். 06-1-1952 அன்று தண்டையார்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்திலிருந்து புறப்பட்ட காங்கிரஸ் எதிர்ப்பு ஊர்வலத்தில் கடுமையான வெயிலில் கையிலே தடியூன்றி மக்கள்தம் உணர்ச்சியை ஆர்வத்தைக்கண்டு மகிழ்ந்து 3 மைல்களுக்கு மேல் ஊர்வலத்தில் பெரியார் நடந்தே வந்தார் என்பதை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.  இந்த ஊர்வலம் ஏழு மைல் தூரத்துக்கு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.

24-1-1952ல் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சோசலிசத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்துவதைப் பற்றி பெரியார் பேசியுள்ளார்.

‘முதலாளித்துவ உற்பத்திகள் யாவும் தொழிலாளர் களுக்கும் சர்க்காருக்கும் சொந்தமான தேசிய உடைமைகளாயிருக்கவேண்டும்.

நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படவேண்டும், நிலங்கள் யாவும் உழவர்களின் உடைமைகளாக வேண்டும்.

அடக்குமுறைச் சட்டங்கள் யாவும் நீக்கப்பட வேண்டும்.

இலவச ஆரம்பக் கட்டாயக் கல்விமுறை வகுக்கப் படவேண்டும், ஹிந்தி ஒழிக்கப்படவேண்டும்.

ஜாதியும் மதமும் வீட்டுக்கு வெளியே சட்ட விரோதமானவைகளாக ஆக்கப்படவேண்டும்.

தென்னாட்டு மில் நூல் வடநாட்டுக்குச் செல்லவே கூடாது.'

இன்றைக்கும் அரசியல் களத்தில் புழங்கிவரும் ஒரு சொல்லை பெரியார்  உருவாக்கிப் பயன்படுத்தியதைப் பற்றி ஆசிரியர் கி.வீரமணி இப்படிப் பதிவு செய்துள்ளார்.

"தந்தை பெரியார் ‘கொல்லைப்புற வழி' என்று இராஜாஜி நியமனத்தை வர்ணித்தது வரலாற்றில் இன்றும் நிலைத்திருக்கிறது. ஆச்சாரியார் மய்ய அரசு, மந்திரி பதவி போன்ற எல்லாப் பதவிகளையும் தேர்தல் களத்தில் போட்டி யிடாமல் பெற்றவர். அந்த ராஜாஜியின் வழிக்குப் பெரியார் இட்ட ‘கொல்லைப்புற வழிÕ என்பது பொருத்தமான பெயராகும்."

ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மறைந்தபோது பெரியார் வெளியிட்ட இரங்கல் அறிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்க வொன்றாகும்.

"நான் ஸ்டாலினை ‘கடைசிப் பெரியார்' என்று ஏன் சொல்கிறேன் என்றால், இன்று மதத்துறையில் பெரியார் யாருமில்லை, அரசியல் துறையில் பெரியார் யாருமில்லை. பொருள் துறையில் பெரியார் யாருமில்லை. கல்வித்துறையில் பெரியார் யாருமில்லை. அறிவுத்துறையில் பெரியார் யாருமில்லை. கொள்கைத்துறைப் பெரியாரும் யாருமில்லை.

ஸ்டாலின் கொள்கைத் துறையில் பெரியாராக இருந்தவர். மற்றத்துறை பெரியார்கள் முடிவெய்தியதின் பயனாய் அத்துறையில் ஒன்றும் மோசமாய் போய் விடவில்லை. அவர்களது கொள்கைகளால் மக்கள் ஏமாந்து வந்தது நின்றுபோய்விட்டது என்றுதான் சொல்லலாம்.

ஆனால் ஸ்டாலின் முடிவு மக்கள் விளக்கம் பெற்றுப் பயனடைந்து வந்த-வருகிற கொள் கைகள் வலுக்குறையக் கூடுமென்று பயன்படுத்திக் கொண்டு வருகிறவர்கள். இனி பயப்படக்கூடிய கவலைப்படக் கூடியதாய் ஏற்பட்டது.

ஸ்டாலின் முடிவானது உலக ஏழை பாட்டாளி மக்களின் ஒரே ரட்சகர் முடிவு எய்தினார் என்பதேயாகும்.

இதுபோன்ற நஷ்டம் உலகிற்கு ஏற்பட்டதில்லை. நஷ்டம் நஷ்டம் ஏழை பாட்டாளி மக்களுக்கு மாபெரும் நஷ்டம்"

பெரியார் அவர்கள் 27-5-1953 அன்று திருச்சியில் பிள்ளையார் சிலையை உடைக்கும் நிகழ்ச்சியையடுத்து ஆயிரக்கணக்கான பிள்ளையார் உருவபொம்மைகள் நாடெங்கும் உடைக்கப்பட்டன. அதையடுத்து தமிழகத்தில் சில இடங்களில் பெரியார் படம் எரிக்கப்பட்டது. இது குறித்து பெரியார் தெரிவித்த கருத்துகள் பொது வாழ்வில் அவர் கொண்டிருந்த அழுத்தமான பற்றுதலையும் பொறுப்புணர்வையும் கடமையே கண்ணாயிருந்த தன்மையையும் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.

"என் படத்தை கொளுத்தியதனாலேயே நான் செத்தா போய்விடுவேன்? கொளுத்தட்டுமே, இன்னும் வேண்டுமானால் அந்தக் காரியத்துக்கு அதாவது என் படத்தைக் கொளுத்துகிற காரியத்திற்கு நானே பணம் தருகிறேன்.

நானே மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்தி விடுகிறேன், ‘இந்தாருங்கள் அவர்கள் என் படத்தைக் கொளுத்துகிறார்கள். அங்கு போய் யாரும் கலவரம் செய்யாதீர்கள். நானே 50 ரூபாய் என் படத்தைக் கொளுத்துவதற்காகக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் கொளுத்திவிட்டுப் போகட்டும், சும்மா இருங்கள்Õ என்பதாகச் சொல்லிவிடுகிறேன். வேண்டுமானால் நன்றாய் தாராளமாய் என் படத்தைக் கொளுத்தட்டும். எனக்கு அதைப்பற்றிக் கொஞ்சம்கூட கவலை இல்லை."

குலக்கல்வித் திட்டத்தை அறிவித்த ராஜ கோபாலாச்சாரியாரை எதிர்ப்பதற்காக 13-11-1953 அன்று ஆச்சாரியார் கல்வி எதிர்ப்புப்படை என்று அறிவித்து கடுமையான போராட்டங்களை நடத்தி வந்தார் பெரியார். இந்நிலையில் 20-12-1953ல் சென்னை கடற்கரையில் நபிகள் நாயகம் விழா நடைபெற்றது. இதில் பெரியாரும் ராஜாஜி என்ற இருதுருவங்களும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகக் கலந்து கொண்டனர். பெரியார் தன் பொதுவாழ்வில் கொள்கை முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவரை நட்பு பாராட்டுவதில் தனித்த புகழுடன் விளங்கியதற்கு இந்நிகழ்ச்சியரு சான்றாகும்.

இந்நிகழ்வில் பெரியார் ‘மக்களில் ஒருவருக் கொருவர் அபிப்ராய பேதமுடையவர்களாக இருப்பது என்பது அதிசயமல்ல, ஆனால் என்ன இப்படிப்பட்ட கருத்து வேறுபாடு இருந்தாலும் மனிதன், மனிதத் தன்மையோடு நடந்துகொள்ளவேண்டும் என்பதுதான் முக்கியம்Õ என்று பேசினார்.

குலக்கல்வித்திட்ட எதிர்ப்புக்காக பெரியார் தமிழக மெங்கும் ஓயாது பிரச்சாரம் மேற்கொண்டார். பெரியார் மேற்கொண்ட கடுமையான போராட்டங்களின் தொடர்ச்சியாக ஈரோடு மாநாட்டில் ‘அக்கிரகாரத்துக்கு தீ வைப்பதற்குத் தயாராக பெட்ரோலும் தீப்பெட்டியும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள், நான் தேதி குறிப்பிடுகிறேன்Õ என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கல்வி ஆலோசகர் தன் பதவியிலிருந்து விலகினார். அப்போது ‘புதிய மந்திரி சபை வந்து விரட்டி அடிப்பதற்கு முன்பே மரியாதையாகத் தாங்களாகவே விலகிக்கொள்வதுதான் பெருந்தன்மை. பிடரியில் கைபோட்டுத் தள்ளுகிறவரையில் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது தன்மானமுள்ள செய்கையல்ல‘ என்று குடியரசு தலையங்கம் எழுதியது.

இந்நிலையில் 8-4-1954 அன்று சி.இராஜகோபாலாச் சாரியார் மந்திரிசபை ராஜினாமா செய்தது.

பெரியார் எனும் மாபெரும் ஆளுமையை ஒவ்வொருநாள் நிகழ்வாகத் தொடர்ந்து நாள் நேரம் தேதி இடம் போன்ற தகவல்களுடன் கவனமாகக் குறிப்பிட்டு தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு மிகச்சிறந்த முன்னோடி நூலாகத் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை. விடுதலை மற்றும் குடியரசு நாளிதழ்களில் வெளிவந்தவை உட்பட பெரியார்  மற்றும் இயக்க நிகழ்வுகளின் அரிய புகைப் படங்கள் இணைக்கப்பட்டுள்ளமை இந்நூல் ஒரு காலப் பெட்டகம் என்பதை உணர்த்துகிறது. பெரியாரை அறிந்துகொள்வதோடு அவரைப் புரிந்துகொள்ளவும் வகைசெய்யும் இந்நூல் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் இருக்கவேண்டிய பொக்கிஷமாகத் திகழ்கிறது. இவ்வரலாற்று நூலை மேலதிக அக்கறையோடு தொகுத்தளித்துள்ள ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பாராட்டுவது வெறும் புகழ்ச்சிக்காக அல்லவென்பதை இந்நூலை வாசிப்பவர்களால் உணரமுடியும்.

பெரியார் வாழ்க்கை வரலாறு

கி.வீரமணி

வெளியீடு:திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை,

வேப்பேரி, சென்னை - 600 007

விலை:ரூ.250/-

Pin It