செம்மொழி வேறு, செவ்வியல் மொழி வேறு. இரண்டு சொற்களும் வெவ்வேறான பொருள் களைத் தருபவை. The Classical என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய சொல் ஒரு பண்புச் சொல். அதை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திச் சொல்லலாம். அடைமொழியாகப் பயன்படுத்துகிற Classical என்ற சொல்லைச் செவ்வியல் பண்பு என்று மொழி பெயர்த்துக் கொள்ளலாம். இந்தச் செவ்வியல் பண்பு இன்றைக்குக் காலையில் எழுதப்பட்ட ஒரு கவிதைக்குக் கூட இருக்கலாம். டி.எஸ்.எலியட் அந்தப் பொருளில்தான் Classical என்ற சொல்லைப் பயன்படுத்தினார். ஆனால் செம்மொழி என்று சொல்லக்கூடிய வரலாறும் அது சார்ந்த பின்புலங் களும் முற்று முழுதும் வேறானது. செம்மொழி என்று சொல்லக்கூடிய மொழிகளில் இருக்கக் கூடிய ஆக்கங்களைக் குறித்துப் பேச விரும்பு கிறேன். ஆக்கங்கள் என்ற சொல்லை பிரக்ஞையோடு பயன்படுத்துகிறேன். ஆங்கிலத்தில் உள்ள text என்ற சொல்லுக்கு ‘பிரதி’ என்று தமிழில் கூறுகிறோம். அதற்குச் சரியான சொல்லாக ஆக்கங்கள் என்ற சொல்லை மொழிபெயர்ப்பாகச் செய்யலாம். ஆக்கங்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அதில் எல்லாம் வந்துவிடும்.

அண்மைக் காலங்களில் நாம் புரிந்துகொண் டிருக்கிற இந்த நாற்காலி ஒரு பிரதி (text), இந்த ஒலி வாங்கி ஒரு பிரதி, நான் ஒருபிரதி, அந்தத் தண்ணீர் பாட்டில் ஒரு பிரதி என்றுசொல்லக்கூடிய பல்வேறு வகையான புரிதல்கள் அண்மைக்காலங்களில் உருவாகி யுள்ளன. இவற்றையெல்லாம் ஒரு வகையான உரை யாடல் என்று புரிந்துகொண்டிருக்கிறோம். உரை யாடல் என்ற சொல்லுக்கு மாற்றாகச் சொல்லாடல் மற்றும் கருத்தாடல் என்னும் சொற்களும் பயன் படுத்தப்படுகின்றன. என்றாலும், உரையாடலாகத் தான் எல்லாவற்றையும் நாம் மதிப்பிடுகிறோம். ஒவ்வொரு வருக்குமான உரையாடல் என்பது அவரவரைப் பொருத்துத் தனித்தனியாக நிகழக் கூடியது. ஆகவே இந்தப் பொதுச் சொல்லைப் பயன்படுத்தி, பொது நிலையில் இவற்றையெல்லாம் உரையாடலுக்கு உட்படுத்தினால், காலம் காலமாகப் பயன்படுத்தி வரக்கூடிய இலக்கியம் என்ற சொல் அதன் மேல் ஏற்றப்பட்டிருக்கிற பொருண்மை-அதாவது, புனிதம் - புனிதமில்லாதது, நல்ல இலக் கியம் - கெட்ட இலக்கியம்-இப்படியான மதிப் பீடுகள் எல்லாம் பொருளற்றவை. இப்படியான சொல்லாட்சிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுவது நல்லது. நவீன காலத்தில், செம்மொழி இலக்கியத்தின் தாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளப் பல்வேறு வரலாற்றுப் பின்புலங்களையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

நமது செம்மொழியான தமிழில் 41 நூல்கள் செம்மொழி நூல்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிற திராவிட மொழிகளும் செம்மொழி ஆக்கங்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். வரலாற்றுப் பூர்வமாக கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு உரு வாகி வளர்ச்சி பெற்ற மொழிகளையெல்லாம் தமிழோடு இணைத்துச் செம்மொழி என்று கூறுவது ஒருவகை அரசியல். தர்க்கமாக ஏற்றுக்கொள்ள இயலாது. நமக்குக் கிடைத்திருக்கிற அண்மைக்கால அகழாய்வின் படி கி.மு.500இல் உருவான ஒரு மொழிசார்ந்த வரலாறு என்பதை கி.பி.7ஆம் நூற்றாண்டில் உருவான மொழிசார்ந்த வரலாற்றில் இணைப்பது எவ்வகையில் சரியாக இருக்கமுடியும்? இதனைத் தனிப்பட்ட மொழி பற்றிய ஈடுபாடு சார்ந்தோ, மொழி வெறி சார்ந்தோ சொல்லவில்லை. அது ஓர் உண்மை. அது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பது அவசியம். இந்திய அரசியலில், மிக நெடுங்காலமாக சமஸ்கிருத மொழியை மட்டுமே செம்மொழி என்று கூறி வந்தார்கள். அந்த அரசியலுக்கெதிராக சமஸ்கிருத மொழிக்கு இணையானது தமிழ் என்ற இன்னொரு அரசியல் முன்னெடுக்கப்பட்டது. தமிழின் செம் மொழித் தன்மைக்குக் குறிப்பிட்ட பிரிவினரின் அங்கீகாரம் பெறுவது என்பது அண்மையில் நிகழ்ந் துள்ளது. இந்த அங்கீகாரம் இல்லாமலேயே தமிழ் ஒரு செம்மொழி என்பது வரலாற்று உண்மை.

இந்த உண்மை சார்ந்த அந்த மொழியைப் பேசக்கூடியவர்கள் என்பதனால் நமக்குக் கிடைக்கக் கூடிய பெருமை அல்லது அதில் நாம் பெறவேண்டிய புரிதல் மற்றும் வரலாறு முக்கியமானது. நமது மொழியை அதன் அடுத்த கட்டத்திற்குப் புலமைத்தள உரையாடலாக எப்படி எடுத்துச் செல்வது என்பது தான் இந்தப் புரிதல். செம்மொழி நிறுவனத்தை அதற்குப் பயன்படுத்த வேண்டும். அதன் விளை வாகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிகப்பரவலாக தமிழ்நாடு முழுவதும் செம்மொழி குறித்த உரை யாடல் நடைபெறுகிறது. நவீன காலத்தில் செம் மொழி என்று சொல்லக்கூடியதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கருத்தரங்க நிகழ்வாக நடந்தேறியுள்ளது. நவீன காலத்தில் செம்மொழி என்று சொல்லக்கூடிய பிரதிகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? அல்லது அதை நாம் எப்படி வாசிக்கிறோம்? நம்முடைய மரபு சார்ந்து, வரலாறு சார்ந்து எப்படிப் புரிந்து கொள்ளுகிறோம் என்பது தொடர்பான உரை யாடலாகத்தான் கடந்த மூன்று நாட்களில் நடந்த கருத்தரங்க நிகழ்வுகள் அமைந்தன எனக் கருது கிறேன். செம்மொழி மரபுகள் எவ்வகையில் நமது நவீன இலக்கியப் பிரதிகள் - புனைகதை - கவிதைகள் - கலைகள் ஆகியவற்றின் ஊடான ஊடாட்டாம் எப்படி நிகழ்ந்திருக்கிறது? அல்லது நிகழவில்லை? நிகழ்ந்தது சரியாக நிகழ்ந்திருக்கிறதா? அல்லது தவறாக நிகழ்ந்திருக்கிறதா? என்பது குறித்து உரையாடலாம் எனக் கருதுகிறேன்.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் (திரு முருகாற்றுப்படை - பரிபாடல் நீங்கலாக) திருக் குறள் ஆகிய ஆக்கங்கள் ஒவ்வொரு காலத்திலும் நம் தமிழ்ச் சமூகத்தோடு எவ்வகையில் உறவு கொண் டிருந்தன? இப்போதும் எவ்வகையில் உறவுடையதாக உள்ளது? உயிரோட்டமாக அதை எல்லோரும் எதிர்கொள்கிறார்களா? அல்லது தமிழைப் படிப்ப வர்கள் மட்டும் அதில் உறவு கொள்ளுகிறார்களா? இப்படியான கேள்விகளுக்கு என்னுடைய உரையில் பதில் கூறலாம் என்று கருதுகிறேன்.

இந்தப் பிரதிகளின் பயணங்கள் முக்கியமானவை. இந்தப் பிரதிகளை கி.பி.5-9 என்ற காலப்பகுதியில் ஏன் தொகுத்தார்கள்? பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் இந்தத் தொகுப்புப் பணி நடந்திருக் கிறது. 473 புலவர்களின் பாடல்கள் தொகுக்கப் பட்டாலும் அதில் 26 புலவர்களின் பாடல்கள் தான் 50 விழுக்காட்டிற்கு மேலாக உள்ளன. எஞ்சி யவை ஒன்றிரண்டு பாடல்களாக இருக்கின்றன. தொல்காப்பியம் ஒரு தனி ஆசிரியரால் எழுதப் பட்ட நூல் இல்லை. இதைப் பேராசிரியர்கள் பலரும் பேசியிருக்கிறார்கள். 5ஆம் நூற்றாண்டில் அது ஒரு முழுப் பிரதியாக எழுதப்பட்டுவிட்டது. ஆறாம் நூற்றாண்டில் நமக்குப் பிரபலமாகிற காலத்திற்குச் சற்று முன்னர் ஆசிரியர்களால் மாணவர்களுக்குச் சொல்லப்பட்டது. அப்படிச் சொல்லப்பட்ட மரபில் நிலைபேறு உருவானது. தொல்காப்பியத்தில் உள்ள பல செய்திகள், சங்க இலக்கியப் பிரதிகளென்று பின்னர் கண்டறிந்த வற்றிலும் உள்ளன. அகம், புறம், அவை சார்ந்த கூற்றுக்கள் என்ற இலக்கிய மரபு பல்வேறு கோட் பாடுகளை உருவாக்க உதவுகின்றன. கி.பி.7ஆம் நூற்றாண்டில் தொகுத்தவர்கள் கொண்டிருந்த அந்த மனநிலைமைதான் இந்தப் பிரதிகள் மீதான முதல் எதிர்கொள்ளல் எனலாம். ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாய்மொழி மரபில் பரவிக் கொண்டிருந்த பிரதிகளை இப்படியான பாட்டும் தொகையுமாக ஏன் தொகுக்கவேண்டும்?

செம்மொழி இலக்கியத்தைப் புரிந்துகொள்ள மேற்குறித்த கேள்விக்குப் பதில் தேடுவது அவசியம். இந்த நிலை உலகில் உள்ள செம்மொழிகளுக் கெல்லாம் உரியது. சீன மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இம்மரபு உண்டு. சமஸ்கிருதத்திலும் கொஞ்சம் உண்டு. ரிக் வேதத் தொகுப்பை அப்படிப் பார்க்கலாம். அந்தத் தொகுப்பு மரபு சமஸ்கிருத செம்மொழி மரபை உருவாதற்குப் பதிலாக புராணிய இதிகாச மரபு உருவாகி வேறு ஒரு உலகமாக மாறி விட்டது. வாய்மொழி மரபின் தொடர்ச்சியாக, இயற்கை வழிபாடு, இயற்கை சார்ந்த மரபுகளை வளர்த்தெடுத்துச் சொல்லுதல் ஆகிய பண்புகளை தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய வற்றின் அமைப்பிலும் வெளிப்படுத்தும் முறையிலும் காண இயலும். உலக செம்மொழி மரபுகளில் இருக்கக் கூடியவற்றிற்கு இணையான மரபுகளை அவை கொண்டுள்ளன. இந்த மரபுகளால்தான் அன்றைய புலமையாளர்கள் அவற்றைத் தொகுத் திருக்கிறார்கள். அதற்கு ஒரு வடிவம் கொடுத்தனர். இந்த வடிவம் குறித்து 13ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு முடிய உள்ள உரையாசிரி யர்கள் பேசினர். பரிமேலழகரும் காளிங்கரும் பரிதியாரும் நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் மற்றும் பெயரறியப்படாத உரையாசிரியர்களும் சங்க இலக்கியத்திற்கு உரை வகுத்தார்கள்.

அந்த உரை மரபு ஏன் உருவானது? தொகுப்பு மரபு உருவாகி சுமார் ஐந்நூறு ஆண்டுகள் கடந்த பின் ஏன் உரை எழுத வேண்டும்? நச்சினார்க்கினியர் கொண்டு- கூட்டு மரபில் சங்க இலக்கியங்களை வாசிப்பதற்கு முயற்சி எடுத்துக் கொள்வது ஏன்? பரிமேலழகரும் பரிதியாரும் காளிங்கரும் திரு முருகாற்றுப்படைக்கு மட்டும் ஏன் உரையெழுது கிறார்கள்? அது அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறுமுகநாவலருக்கும் வாசிக்கப் பிடித்தது திரு முருகாற்றுப்படைதான். அவரிடம் அவ்வளவு சுவடிகள் இருந்தாலும் கூட 1851 வாக்கில் திரு முருகாற்றுப்படையை மட்டுமே பதிப்பித்தார். அவருடைய சைவ மரபு சங்க இலக்கிய மரபுகளுக்கு எதிரானது. சங்க இலக்கியத்திலிருக்கக்கூடிய பொது மைப் பண்பை சைவம் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்த் தாத்தா பட்டம் நாவலருக்குத்தான் கிடைத் திருக்க வேண்டும். அவர்தான் பதிப்பில் முன்னோடி. நவீன பிரதிகளைப் புரிந்துகொண்டதில் முன்னோடி, ஆனால் அவர் சங்க இலக்கியச் சுவடிகளைத் தன் அலமாரியிலேயே வைத்திருந்தார்; பதிப்பித்து வெளி யிடவில்லை. பிற்காலங்களில்தான் புறநானூற்றைப் பதிப்பிக்கப் போவதாகப் பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியப் பிரதிகளில் மிக அதிகமாகப் பதிப் பிக்கப்பட்ட உரை எழுதப்பட்ட பிரதி திருமுருகாற்றுப் படை. வேறு எந்தப் பிரதிகளையும் விட எல்லாக் காலங்களிலும் அதற்குத்தான் அதிகமான உரை எழுதப்பட்டிருக்கிறது.

13-16ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறு மொழிச் சூழல் கலந்த அரச உருவாக்கம் நடைபெற்றது. தெலுங்கு மொழி முக்கியமான மொழி. அரபு மொழியும் நமக்கு வந்துவிட்டது. கொஞ்ச காலம் கழித்து மராட்டிய மொழியும் வந்துவிட்டது. பல்வேறு பண்பாடுகளை ஒருங்கிணைக்கக்கூடிய சூழலில், நமது மரபு சார்ந்த பண்பாட்டைப் படிக்கக் கூடிய உரையாசிரியர்கள் உரை எழுதினார்கள். அதில் அடியார்க்கு நல்லார், இளம்பூரணர், நச்சினார்க் கினியர் ஆகியவர்களின் உரைகள் முக்கியமானவை. அந்த நூற்றாண்டுகளில்தான் திருக்குறளுக்குப் பத்து பேர் உரை எழுதியிருக்கிறார்கள். திருக்குறளுக்கு ஏன் அவ்வளவு பேர் உரை எழுதவேண்டும்? திருக் குறளைப்பற்றி எழுதப்பட்ட திருவள்ளுவமாலை முக்கியமான நூல். திருக்குறளை அந்தக் காலத்தில் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதற்கான பதிவு தான் திருவள்ளுவமாலை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அச்சுமரபு பதிப்பு வரலாறாக மாறுகிறது. தொகுப்பாளன் எதிர் கொண்ட முறையிலிருந்து, உரையாசிரியர்கள் எதிர்கொண்ட முறையிலிருந்து எவ்வகையில் வேறுபட்டுத் தொகுப்பாளர்களால் செம்மொழி ஆக்கங்கள் எதிர்கொள்ளப்பட்டன என்ற உரை யாடல் அவசியமாகும்.

பதிப்பாசிரியர்கள்தான் செம்மொழி மரபை உலகத்திற்குக் கொண்டுவந்தார்கள். சி.வை.தாமோ தரம் பிள்ளையின் 1887 ஆம் ஆண்டு கலித்தொகைப் பதிப்பு முதல் 1923 இறுதியாகப் பதிப்பிக்கப்பட்ட அகநானூறு வரை சுமார் 35 ஆண்டுகளில் சங்கப் பிரதிகள் அச்சுக்கு வந்தன. உ.வே.சா. தொடர்ச்சி யாக ஐந்து நூல்களை - 1889இல் பத்துப்பாட்டையும், 1894இல் புறநானூற்றையும், 1903இல் பதிற்றுப் பத்தையும், 1918இல் பரிபாடலையும், 1938இல் குறுந்தொகையையும் பதிப்பித்தார். இவற்றை யெல்லாம் சேர்த்து 1940களில் பேராசிரியர் வையா புரிப்பிள்ளை பதிப்பித்தார். அகராதிக் கலைஞன் என்ற முறையில் சங்க இலக்கிய ஆசிரியர்களை அகரவரிசைப்படுத்தி உருவாக்கிய பதிப்பு அது. சங்க இலக்கியம் என்ற சொல்லாட்சியை அந்த நூலுக்குப் பெயராகவும் கொடுத்தார். அதற்கு முன்னர் சங்க இலக்கியம் என்ற சொல்லாட்சி பெரும்பான்மையாக வழக்கில் இல்லை. வையாபுரிப் பிள்ளை காலத்திலிருந்துதான் சங்க இலக்கியம் என்ற சொல்லாட்சி அச்சிடப்பட்ட வடிவத்தில் வருகிறது. அப்படி வந்த அந்தப் பதிப்பு மரபில் இன்றைய நவீன காலம் தொடர்பான பல்வேறு தன்மைகள் முன்னிறுத்தப்படுகின்றன. இந்தக் கருத்தரங்கின் பொருண்மைகள் என்பதும் அவை தான்.

நவீன காலமென்பதை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை சொல்லலாம். இக்காலத்தில் புதிய புறநானூற்றுத் தமிழன் வந்தான். புறநானூற்றுத் தமிழன் தப்பா? சரியா? அது வேறு கேள்வி. ஆனால் வந்தான். அவன் எப்படி வந்தான், அப்படி உருவாகி வந்த அந்தப் புறநானூற்றுத் தமிழனை இந்தச் சமூகம் எப்படி எதிர்கொண்டது என்ற வரலாறு வேறு. அந்தத் தமிழன் வந்ததற்கும் இந்தச் செம்மொழி ஆக்கங்கள் அச்சிடப்பட்டதற்கும், அவை வாசிக்கப்பட்டதற்கு மான வரலாறு நீண்ட நெடியது. அந்த வரலாற்றி லிருந்துதான் தமிழ் - இசை இயக்க வரலாற்றை நீங்கள் கண்டு கொள்ள முடியும்; தனித்தமிழ் இயக்க வரலாற்றைக் கண்டுகொள்ள முடியும். இந்தக் காலங்களில் பிரித்தானியர்கள், இந்த மரபை நாம் புரிந்துகொள்ளுவதற்கு வேறு பல வாயில்களைத் திறந்துவிட்டார்கள். தொல்லியல் துறையின் மூலமாக நமக்கு அவர்கள் திறந்துவிட்ட வாயில்கள் மிக அதிகம். பழம்பொருள்களைப் பற்றிய நவீன காலப் புரிதல்களுக்கு அவர்கள் வழிகண்டார்கள். குறிப்பாக, மொழியைப்பற்றிய அவர்களுடைய விரிவான ஆய்வுகள் அவ்வகையில் அமைந்தவை.

எல்லீஸ் தொடங்கிய மொழியைப் பற்றிக் கணிப்பு என்பது 1812 இல் ஆறு, ஏழு மொழி என்று சொன்ன அந்த மரபு, 1905இல் பிரித்தானியர்கள் உருவாக்கிய இந்திய மொழிகளைப் பற்றிக் கணக்கெடுப்பில் (Indian language survey) பல்வேறு மொழிகளைப் பற்றிய புரிதலுக்கு வழிகண்டது. 1930களில் எமனோ மற்றும் பர்னோ என்ற இருவர் காடு மேடு களெல்லாம் அலைந்து திராவிட மொழி என்ற கருத்தாக்கத்தை உறுதிப்படுத்தினர். 1968இல் 24 மொழிகள் அடங்கிய மொழிக்கூட்டத்திற்கு Dravidian Etymological Dictionary என்ற அகராதியை உருவாக் கினர். இச்செயல், வரலாற்றில் முக்கியமான நிகழ் வாகும்.

1984இல் அது 37 மொழிகள் என்று அறியப் பட்டது. அகராதியின் இரண்டாம் பதிப்பில் அவை சேர்ந்தன. 1853இல் செங்கல்பட்டு கோடரியை இராபர்ட் புரூஸ்ட் கண்டறிந்தார். தொல்பழங் காலம் சார்ந்த கல் பயன்படுத்துதல் என்பதை இராபர்ட் புரூஸ்ட் நமக்கு அறிமுகப்படுத்தினார். பிராமி எழுத்துக்களை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாசித்ததன் மூலமாக நமக்கு இருந்த தொல் எழுத்து என்பதைப்பற்றிய புரிதலைப் பெற முடிகிறது. அந்தத் தொல் எழுத்து நமது எழுத்தில் எப்படி இருந்தது? அது பிராமியாக எப்படி உருவானது? அந்தப் பிராமி வடிவம் எப்படி வட்டெழுத்தாக வந்தது? வட்டெழுத்து எப்படி வடிவம் பெற்றது? இவ்வகையான தொல்லெழுத்தியல் மரபிற்கும் செம்மொழி ஆக்கங்கள் என்று சொல்லு வதற்கும் என்ன உறவு? செம்மொழி ஆக்கங்களில் பேசக்கூடிய பல்வேறு சொற்கள், பெயர்கள் பிராமி எழுத்துக்களில் எவ்விதம் இடம்பெற்றுள்ளன? பிராமி எழுத்துக்களைக் கொண்ட பானை ஓடுகள் கிடைத்த இடங்களுக்கும், தமிழ்ச்சமூகத்தின் எழுத்தறி விற்கும், அவை வாசிக்கப்பட்ட செம்மொழி இலக் கியத்திற்கும் உள்ள உறவுகள் எத்தகையவை? சங்க இலக்கியங்களில் ஏறக்குறைய நாற்பது பெண் கவிஞர்கள் இருப்பதற்கான குறிப்புகள் கிடைத் திருக்கின்றன. அதன்பிறகு ஏழாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரை தமிழில் பெண் கவிஞர்களின் இருப்பு எத்தகையது? இந்த மரபுகளை எல்லாம் செம்மொழிப் பிரதிகளின் ஊடாக அறியக்கூடிய வாய்ப்பை, ஒரு தொல்லியல் துறை சார்ந்து, ஒரு மொழியியல் துறை சார்ந்து புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு என்பது இந்த இலக்கியப் பிரதிகள் கிடைத்ததனால்தான் உருவானது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவை அச்சுக்கு வரவில்லை என்று சொன்னால் எவ்வளவோ சுவடிகள் அழிந்துபோனதைப் போல இந்தப் பாட்டும் தொகையும் சிலப்பதிகாரமும் திருக்குறளும் தொல்காப்பியமும் அழிந்துபோயிருந்தால், நமது மொழி சமஸ்கிருத மொழியாகத்தான் இருந்திருக்கும். சமஸ்கிருத மொழியிலிருந்து வளர்ந்தவர்கள் என்ற அடையாளம் நமக்குக் கிடைத்திருக்கும். இன்றைக்குக் கூட வெகுசன மரபில் தெலுங்கர்களும் மலையாளி களும் கன்னடர்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது முன் னோடி மொழியாக சமஸ்கிருத மொழியைத்தான் இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொழியில் தமிழை விட அதிகமாக சமஸ்கிருத மொழிக் கலப்பும் பண்பாட்டுக் கலப்பும் வந்ததனால் அவர்கள் அப்படி நினைக்கிறார்கள். நம்பூதிரியார் நினைப்பதிலிருந்து அங்கிருக்கும் ஈழவர் நினைப்பது வேறு. ஈழவர் தனதுமொழி தமிழோடு இணைந்தது என்று நினைப்பார். நம்பூதிரி தனதுமொழி சமஸ் கிருதத்தோடு இணைந்தது என்று நினைப்பார். இந்த மொழி வரலாறு; சங்க ஆக்கங்கள் சமகாலத்தில் புரிந்துகொள்ளப்பட்டதனால்தான் நமக்கு உருவானது; பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் இந்த ஆக்கங்களை உலகம் தழுவிய பிரதிகளாக வடி வமைத்துத் தந்ததன் மூலம் அவை சீன, ஜப்பானிய மொழிமரபுகளில் இருக்கக்கூடிய பண்புகளைக் கொண்டிருக்கின்றன என்பதைப் புரியவைத்ததன் மூலம் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அதை மிகப் பெரிய மேடைப் பொருளாகக் கட்டமைத்துக் கொண்டார்கள்.

பேரா.மு.வ. விருந்து, செல்வம் என்ற பெயர்களில் எல்லாச் சங்க இலக்கிய நூல்களுக்கும் விளக்கவுரை எழுதினார். ஒவ்வொரு மேடையிலும் திராவிட இயக்கத்தவர்கள் புறநானூற்றுப் பாடல்களையும் பாரதிதாசன் பாடல்களையும் இணைத்து இணைத்துப் பேசினார்கள். இவ்வகையில் இந்தப் பின்புலத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் செம்மொழி ஆக்கங் களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது முக்கியம். இதில் தனிநாயகம் அடிகளவர்களுக்கும், வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உண்டு. இவர்கள் இந்த மரபைத் திராவிட மொழி சார்ந்த பண்பாடாகக் கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். அதை உலகம் தழுவிய அளவில் உருவாக்கிய பெருமை அடிகளார் அவர் களுக்குத்தான் உண்டு. அவர்களுடைய உலகத்தமிழ் ஆய்வு மன்றம் (ITR) உருவாக்கம் தமிழ் அடை யாளத்தைப் பற்றிய தன்மையை நமக்குத் தந்தது.

சமஸ்கிருத அடையாளம்தான் நமது அடை யாளம் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பிரித்தானியர்கள் தென்னாட்டு வரலாற்றை எழுத அதிக ஆர்வம் காட்டவில்லை. Tamil India என்ற சொல்லாட்சியை முதல் முதலில் தனிநாயகம் அடிகளார்தான் பயன்படுத்துகின்றார். பின்னர் ந.வீ.கந்தையா பிள்ளை புத்தகம் எழுதினார். இதைத் தான் பின்னர் ம.பொ.சி. பேசினார். இவர் பேசியதி லிருந்துதான் தெ.பொ.மீ.யும், இரா.பி.சேதுப்பிள்ளையும் ந.சஞ்சீவியும் உருவானார்கள். இவர்கள் சிலப்பதி காரத்திற்கு இணையான தமிழ்ப்பிரதி எதுவுமே இல்லை என்று சொல்லுவார்கள். தனிநாயகம் அடிகளார் உருவாக்கிய வரலாற்றில் வ.ஐ.சுப்பிர மணியனார் உருவாக்கிய நிறுவனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்னொரு புறம் யாழ்ப்பாண மரபு சார்ந்து தமிழியலைப்பற்றிய நிகழ்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். யாழ்ப்பாணத் தமிழர்கள் சைவ மரபிலிருந்து ரொம்ப காலம் விடுபடவில்லை. இன்றைக்கும் விடுபட்டு விட்டார்களாவென்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நவீன கல்வி முறைக்கு ஆளான சிவத்தம்பியும், கைலாசபதியும் இதில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள.

இவர்களுக்குக் கிடைத்த பர்கிங்காம் பல்கலைக் கழகக் கல்வியும் கிரேக்க இலக்கியத்தின் பேராசிரி யராக இருந்த ஜார்ஜ் தாம்சன் அவர்களுக்கு ஆசிரி யராகக் கிடைத்ததும் அவர்களைச் செம்மொழி ஆக்கங்களை உலக மரபிற்கு எப்படிக் கொண்டு போவது என்பதில் செயல்பட வைத்தன. வீரயுகம் என்ற உலகம் தழுவிய செம்மொழிஇலக்கிய ஆக்க மரபைத் தமிழ் இலக்கிய ஆக்க மரபாக அவர் உருவாக்கிய Heroic Poetry முக்கியமான புரிதல் ஆகும்.

செம்மொழிமரபு, சிவத்தம்பியால் வேறு ஒரு பரிமாணத்தில் விரிவாக எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டு மரபுகளில் அவர் அதை எடுத்துச் சென்றார். அரங்கம் என்பது மனிதர்களின் தொடர்பாடல். தமிழர்கள் அரங்கத்தோடுதான் வாழ்ந்தார்கள். சடங்காக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் பேச்சாக இருந்தாலும் ஆட்ட பாட்டமென்பது அரங்கமரபுதான். இந்த மரபு ஒரு கிரேக்க மரபில் இருப்பதைப் போலவே நம் பாணர் மரபு எவ்வெவ் வகைகளில் எல்லாம் இருக்கிறதென்ற புரிதலைச் சிவத்தம்பி உருவாக்கித் தந்தார். தொல் தமிழ்ச் சமூகத்தின் இயங்கியலைச் சங்க இலக்கியத்தின் ஊடாக, உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளுக்குச் சிவத்தம்பி எழுதிய கட்டுரைகள் வெளிப்படுத்தின. திணைமரபு எப்படி சமூக உருவாக்கத்தில் முக்கிய மாக இருக்கிறதென்பதை அவருடைய திணை பற்றிய கட்டுரை வெளிப்படுத்தியது. இன்னொரு கட்டுரையில், அரசு உருவாக்கத்தைச் சங்க ஆக்கங் களின் வழியாக நமக்கு அறிமுகப்படுத்தினார்.

இதைப் படித்த வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் ‘தென்னாட்டு வரலாறென்பது வேறானது; அது ரிக் வேதத்திலிருந்தும், இராமாயணத்திலிருந்தும், வட நாட்டில் கட்டப்படுகிற வரலாற்றில் இருந்தும் வேறானது’ என்ற புரிதலை இன்றைக்குப் பெற்றிருக் கிறார்கள். கோசாம்பி அவர்களும் இர்பான் ஹபீப் அவர்களும் தென்னாட்டைப் பற்றி எழுதுகிற போது இந்த மரபைப் பதிவு செய்கிறார்கள். இதனை விரிவாக எழுதியவர் பேராசிரியர் சிவத்தம்பி. சங்க இலக்கிய ஆக்கங்கள் என்பவை, சம காலத்தில் எப்படி எப்படி யெல்லாம் ஊடாட்டம் நிகழ்த்தியுள்ளன? இந்த ஊடாட்டங்களின் ஊடாக நமது வரலாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நமது மொழி உலக மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது; நமது மொழிக்கான மரபுகள் அறியப்பட்டிருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் தமிழில் உருவாகக்கூடிய புனைவுகள் என்பதிலும் இதனுடைய செல்வாக்கு சிறப்பாக வந்திருக்கிறது.

இந்தப் புனைவுகள் என்ற வார்த்தையை Modern Literature என்ற வார்த்தைக்கு இணையாகக் கருதவேண்டும். புனைவுகள், கவிதைகள் என்றுதான் தனித்தனியாகப் பயன்படுத்த வேண்டும். அதை இலக்கியம் என்ற சொல்லாட்சியாகப் பயன் படுத்துவது பொருள் தெளிவைத் தருவதாக இல்லை. அரங்கம் கலைக்குள் வருமா? இலக்கியத்திற்குள் வருமா? என்பது சிக்கலாக உள்ளது. அரங்கத்திற்கும் இலக்கியத்திற்கும் தொடர்பு அவ்வளவாக இல்லை. அரங்கம் ஒரு கலைவடிவம். அதற்குள் புனைவு இருக்கலாம். அது சார்ந்த தன்மைகள் இருக்கலாம். அதைத் தமிழ் இலக்கியத்திற்குள் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

செம்மொழி ஆக்கங்களில் இருக்கக்கூடிய அரங்கம் என்ன? செம்மொழி ஆக்கங்களில் இருக்கக் கூடிய புனைவு என்ன? செம்மொழி ஆக்கங்களில் இருக்கக்கூடிய கவிதை என்ன? இந்தக் கவிதை நவீன கவிதையோடு எப்படி உறவாடுகிறது? இந்தப் புனைவு நவீன புனைவுகளோடு எப்படி உறவாடுகிறது? செம்மொழி ஆக்கங்களில் இருக்கக்கூடிய அரங்கம் நவீன ஆக்கங்களில் இருக்கக்கூடிய அரங்கங்களோடு எப்படி உறவாடுகிறது? சங்க ஆக்கங்கள் எனப்படு பவை அடிப்படையில் சமயச்சார்பில்லாதவை; வாய் மொழிப் பாரம்பரிய மரபைக் கொண்டவை. அந்த மாதிரியான சமயச்சார்பற்ற மரபு நமது இந்த நூற்றாண்டுப் புனைவுகளுக்கு உண்டு. இந்த மரபு தான் நமது அண்மைக்காலப் புனைவுகளில் மிக முக்கியமான நிகழ்வு.

நம்மிடையே இப்பொழுது உள்ள வாசிப்புப் பழக்கம் இந்தப் புனைவுகளின் உருவாக்கத்தில் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன. வாசிப்புத் தன்மை சார்ந்த இந்த நிலை, செம்மொழி ஆக்க உருவாக்கத்தை எப்படி எதிர்கொள்ளும்? எப்படி உள்வாங்கும்? ஜெயமோகனுடைய ‘காடு’ நாவலில் எப்படி உள்வாங்கப்பட்டுள்ளது? ‘ஆழிசூழ் உலகிலே’ ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும் ஜோடி குரூஸ் சங்க இலக்கிய வரிகளை மேற்கோள் போட்டு எழுதிச் செல்கிறார் ஏன்? ‘கொற்றவை’யை, சிலப்பதிகாரத்தை அடிப்படையாக வைத்து ஏன் பேசுகிறார்கள்? சிலப்பதிகாரம் சார்ந்து உருவான அரங்கப் பிரதிகள் என்பவை இந்திய அளவில் மிகப் பல. அந்தப் பிரதிகள் பல வடிவங்களைக் கொண்டவை. கண்ணகி கதை பல்வேறு வடிவங்களைக் கொண்டது. கவிஞர் இன்குலாப்பின் ஒளவை நாடகம் முக்கியமான நிகழ்வு என்று கூறமுடியும். கவிஞர் இன்குலாப் அவர்களை மிகப்பெரிய புரட்சிக் கவிஞராகப் புரிந்துகொண்ட சமூகம், அவருடைய ஒளவை நாடகத்திற்குப் பிறகு முக்கிய நாடகக்காரராகப் புரிந்துகொண்டிருக்கிறது. அதற்கு முன்னர் இருந்த ஒளவை இப்பொழுது இல்லை.

12ஆம் நூற்றாண்டி லிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை உலக நீதியையும், ஆத்தி சூடியையும் கொன்றை வேந்தனையும் எழுதிக் குவிக்கிற யாழ்ப்பாணத்துச் சைவ வெள்ளாள ஒளவையாகப் புரிந்துகொள்ளப்பட்டாள். அதற்குப் பிறகு 17-18 ஆம் நூற்றாண்டுகளில் திருவிளையாடல் புராணத்தின் சுட்ட பழம், சுடாத பழம் ஒளவை யாராக உள்ளாள். இதைப் பின்னர் திரைப்படத் துறையின் பராசக்தி என்ற தி.மு.க. சார்பாளர்கள் உருவாக்கிய திரைப்படத்தை எதிர்கொள்வதற்காக, ஒளவையார் என்ற திரைப்படத்தை எஸ்.எஸ்.வாசன் உருவாக்கினார். இந்த எல்லாவிதமான பிற்போக்கு மரபுகளையும் இன்குலாப் தோலுரித்தார். சங்க காலத்து ஒளவை என்ற இளம்பெண்ணை நம் சமூகத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினார். அவள் பேசிய, அவள் கள் குடித்த, அவள் ஆடிய, அவள் பாடினியாக வாழ்ந்த, வாழ்க்கையை மறுஉருவாக்கம் செய்தார். இது சங்க ஆக்கங்களைச் சமகாலம் எப்படி எதிர்கொண்டது? வாசித்தது? புரிந்தது? என்பதற்கு முக்கியமான எடுத்துக்காட்டு ஆகும்.

இன்குலாப்பின் குறிஞ்சிப்பாட்டு நாடகம், சுற்றுச்சூழல் அழிவை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரதி ஆகும். வடகிழக்கு மாநிலங் களில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு எதிரான உருவகமாக அந்த நாடகத்தை வாசிக்க முடியும். குறிஞ்சி மலைப் பகுதியில் வாழ்ந்த குறுநில மன்னர் களுக்கும் சமவெளியில் இருந்த பெருநில மன்னர் களுக்குமான போரின் விளைவால் காடு அழிவதை, கிளிகள் தங்களுக்கான உணவு இல்லாமையால் தவிப்பதைச் சுற்றுச்சூழலியல் பார்வையில் வெளிப் படுத்தியுள்ளார். நவீன காலம் என்பது எப்படிப் புதிய புதிய தன்மைகளைச் செம்மொழி ஆக்கங் களின் ஊடாக உள்வாங்குகின்றது? என்பதைப் புரிந்துகொள்ள முடியும். செம்மொழி ஆக்கப் பிரதிகளை சமகாலம் எப்படி எதிர்கொள்ளுகிறது என்பதுதான் முக்கியம். இவ்வாறு பல வடிவங்களில் செம்மொழி ஆக்கப் பிரதிகள், சமகாலத்தில் எதிர் கொண்டதை விவாதிக்க இயலும். இந்த வகையான வாசிப்பு தமிழ்ச் சமூகத்தின் வரலாறாக, தமிழ்ச் சமூகத்தின் புனைவுகளாக, தமிழ்ச்சமூகத்தின் அரங்க மாக, தமிழ் மக்களின் பல்வேறு வகைப்பட்ட மரபு களாக, சமகாலத்தில் எப்படிப் புரிந்துகொள்வது என்பதை மேல் குறித்த உரையாடல்கள் மூலம் அறியமுடியும்.

(குறிப்பு : செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனமும் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையும் இணைந்து நடத்திய “செம்மொழி ஆக்கங் களும் நவீன காலமும்” என்னும் கருத்தரங்கில் நிகழ்த்திய நிறைவுரையின் எழுத்து வடிவம்)

Pin It