பொதுவாகவே உரைகளைப் பற்றியும் உரை யாசிரியர்களைப் பற்றியும் நூல்கள் வருவது அருமை. அந்தத் துறையில் கவனத்தைச் செலுத்தி அருமை யானதொரு நூலை ஆக்கித் தந்துள்ளார் முனைவர் இரா.குமரவேலன். பழந்தமிழ் நூல்களுக்கு எழுதப் பட்ட உரைகளை எடுத்துக்கொண்டு அவற்றை நுணுக்கமான ஆய்வுக்கு உட்படுத்திப் பல உண்மை களைக் கண்டுள்ளார் பேராசிரியர்.

அடியார்க்குநல்லார் உரையைப்பற்றி இரண்டு கட்டுரைகள். முதலாவது, சிலம்பிற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரையும் அரும்பதவுரை ஆசிரி யரையும் ஒப்புநோக்கி, ஒவ்வொருவர் உரையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக உள்ளதைத் தெளி வாக்குகிறது. அடியார்க்குநல்லார், எப்படி நூலாசிரியர் குறிப்பாக உணர்த்துவதை உய்த்துணர்ந்து வெளிப் படுத்துகிறார் என்பதைச் சிறப்பாகக் கூறுகிறார்.

நச்சினார்க்கினியர் எழுதிய நெடுநல் வாடை உரை எப்படி ஆழமாக ஆய்ந்து பொருள் விளக்கம் தருகிறது என்று தெரிவிக்கும் இரண்டாவது கட்டுரையில் நெடுநல்வாடை அகமா, புறமா என்று நெடுநாளாய் இருந்துவரும் வாதத்தைச் சுட்டிக்காட்டி, நச்சினார்க்கினியர் அது அகம் என்று கூறுவது பொருந்தாது என உறுதிபடத் தெரிவிக்கிறார் குமரவேலன். நூலும் உரையும் எழுப்பும் பல வினாக்கள் கட்டுரையின் இறுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

தக்கயாக பரணி உரையாசிரியரின் மொழி நடையின் தனித்தன்மை, அவரது சொல்லாராய்ச்சி, பல்துறையறிவு, மொழியறிவு முதலிய அனைத் தையும் சான்று காட்டி நிறுவுகிறார். பரணியின் பகுதியாக அமைந்திருக்கும் திருஞானசம்பந்தர் கதை ஒட்டக்கூத்தரின் படைப்பாக இருக்க முடியாது என்பதைப் பல சான்றுகளும் விளக்கங்களும் தந்து உறுதிப்படுத்துகிறார். பேராசிரியர் அவர்களுக்கு ஒரு வினா: தக்கயாக பரணி என்னும் தலைப்பு வழுவுடையது என்று கூறுகிறீர்களே, இலக்கியம் கண்டதற்குத்தானே இலக்கணம்? கவிச்சக்கரவர்த்தி தந்துள்ள தலைப்புக்கு ஏற்றவாறு இலக்கணத்தில் திருத்தமோ, புறனடையோ காண்பதில் என்ன தவறு?

திருக்குறளின் பல்வேறு பாடபேதங்களையும் தொகுத்துக் கூறி விரிவான ஆய்வு செய்கிறார். உரையாசிரியர்கள் அவற்றை நோக்கும் விதத்தையும் பொருள் கூறும் போக்கையும் விளக்கி, எந்தப் பாடம் ஏற்புடையது என்பதையும் முடிவு செய்கிறார். காமத்துப்பால் பற்றிய கட்டுரை ‘திருக்குறளுக்கு இணையான ஓர் அக இலக்கியம், உலக அளவில் காண முடியாது’ என்று நிறைவடைகிறது. திருக் குறளுக்கு வ.உ.சி. எழுதியுள்ள உரை பல நூற்றாண்டுகள் போற்றிப் பெருமைப்படுத்தப்பட்ட பரிமேலழகரின் உரையில் உள்ள குறைபாடுகளைத் துணிவுடன் சுட்டிக்காட்டி, மற்ற உரைகளையும் தெளிவாக ஆராய்ந்து இதுவரை அறியப்படாத விளக்கங்களைத் தந்து தெளிவான பாதையைக் காட்ட முயலும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என்று பாராட்டுகிறது வ.உ.சி. உரை பற்றிய கட்டுரை.

சொல்வதைத் தெளிவாகவும் துணிவோடும் வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்வது குமர வேலன் அவர்களின் சிறப்பு. எந்தெந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதைத் தெரிவித்து எந்தெந்த இடங்களில் ஆய்வு தேவைப் படுகிறது என்பதையும் ஆங்காங்குக் குறிப்பிட்டுள்ளார். சிந்தனையை ஈர்த்துப் பிணிக்கும் நடை, தொய்வென்பது அறவே இல்லை.

இலக்கிய இலக்கண ஆர்வலர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். தொடங்கினால் கீழே வைக்க மாட்டார்கள்.

நேர்த்தியான கட்டமைப்பு, புதுமையான அட்டை ஆகியவற்றையும் பாராட்டத்தான் வேண்டும்.

***

உரை மாண்புகள்

இரா.குமரவேலன்

வெளியீடு : விழிகள்

Pin It