ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் அமர இலக்கியமான கரமசோவ் சகோதரர்கள் நூல் வெளியீட்டு விழா

“தஸ்தயேவ்ஸ்கியை முதன்முதலாகப் படிக்க அமர்ந்த அந்த இரவு, என் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு.  என் முதல் காதலைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்தது! அதுதான்.  விரிவான பிரக்ஞை பூர்வமான என் முதற் செயல்.  அது என்னிடம் நிகழ்த்திய பாதிப்பு குறிப்பிடத்தக்கது.  உலகின் முகத்தையே அது முற்றாக மாற்றிவிட்டது.  ஓர் ஆழமான, நீண்ட முதலாவது வாசிப்புக்குப் பின், நான் நிமிர்ந்து பார்த்த அந்தத் தருணத்தில், காலமுள் நின்றுவிட்டதென்பது உண்மையா, இல்லையா என்பது எனக்கு எதுவும் சரிவரத் தெரியவில்லை.  அந்த க்ஷணத்தில் உலகம் இறந்துவிட்டிருந்தது என்பது எனக்குத் தெரியும்...

ஒரு மனிதனின் ஆத்மாவிற்குள் முதன்முதலாக என் பார்வை விழுந்தது அப்போதுதான்.  அல்லது, இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், தன் ஆத்மாவை என்னிடம் வெளிப்படுத்திய முதல் மனிதன் தஸ்தயேவ்ஸ்கிதான்... அவனிடம் ஆழமாக மூழ்கிய இந்தத் தருணத்திலிருந்து நான்நிச்சயம் ஒரு வித்தியாசமானவனாக ஆனேன்!  அசைக்க முடியாத படியும், மனநிறைவோடும் இந்நிகழ்வு அமைந்தது.  விழிப்பதும், அன்றாட காரியங்களுமான தினசரி உலகம் என்னைப் பொறுத்தவரை மடிந்துவிட்டது... நான் நெருப்பினுள் வாழ்பவன் ஆனேன்.  என்னைப் பொறுத்தவரை, மனிதனின் சாதாரண துயரங்கள். போட்டி பொறாமைகள், ஆசாபாசங்கள் அனைத்தும் உதவாக்கரை விஷயங்கள், குப்பை கூளங்கள் என்றாகின!”

-இது உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி மில்லரின் கூற்று.  இந்த மேற்கோளை இரண்டு மூன்று முறை படித்தாலே நம் உள்ளம் தனது இயல்பு நிலையை மீறி சிந்திக்கத் தொடங்கிவிடும். 

உலகம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டும் 49 மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தும் தமிழில் இதுவரை இந்நூல் மொழிபெயர்க்கப்படவில்லையே என்று தமிழ் நெஞ்சங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அந்த ஆவலைப் பூர்த்தி செய்கிற நோக்கில் உலகப் பேரிலக்கிய மேதை ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய ‘கரமசோவ் சகோதரர்கள்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. 

கவிஞர் புவியரசுவின் தமிழாக்கத்தில் உருவான இந்த நூலை 11-1-2012 புதன் அன்று மாலை சென்னை, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் என்.சி.பி.எச். தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில், என்சிபிஎச் இயக்குநர் தா.பாண்டியன் முன்னிலையில் திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் வெளியிட, எழுத்தாளர் லதாராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

என்.சி.பி.எச். கோவை மண்டல மேலாளர் அ.கணேசன் வரவேற்புரை நிகழ்த்த, செல்வா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

“முற்போக்கு இலக்கியங்கள், தமிழ் மண்ணின் மூல நூல்களான சங்க இலக்கியத் தொகுப்பு, இதர பழங்கால இலக்கியங்களூடே பரவலான வாசிப்பை ஏற்படுத்த வேண்டிய இலட்சியத்துடன் துவங்கப் பட்ட என்.சி.பி.எச். நிறுவனம் அந்த இலட்சியம் மாறாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறது” என்ற பெருமிதக் கூற்றுடன் தலைவர் ஆர்.நல்லகண்ணு தமது தலைமையுரையைத் துவங்கினார்.  “மெய்யியல், நூல்கள், புத்த சமயம், வேதகால மதங்களைப் பற்றி ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய நூல்களெல்லாம் 2, 3 பதிப்புகள் வெளிவந்துவிட்டன.

மறுக்கப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட நிலையில் ரொமீலா தாப்பர், பிபன் சந்திரா, இர்பான் அபீப் வரலாற்றாளர் களால் எழுதப்பட்ட வரலாற்று நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம்.  மொழிபெயர்ப்பு நூல்களென்றால், டால்ஸ் டாய் எழுதிய போரும் வாழ்வும், புத்துயிர்ப்பு போன்ற நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  டால்ஸ்டாய், கார்க்கி நூல்களைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்த நிறுவனம் என்.சி.பி.எச்.  ஏற்கெனவே பல மொழிபெயர்ப்பு நூல்கள் வந்திருந்தாலும், இவை போன்ற நூல்களெல்லாம் தமிழகத்துக்கும், இன்றைய சமூகத்துக்கும் மிகவும் தேவையான நூல்கள், உலகப் புகழ்பெற்ற நூல்களைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன்தான் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நூலையும் தமிழில் கொண்டு வந்துள்ளோம்.  அதற்காகப் பெருமைப்படுகிறோம். 

ரஷ்யப் புரட்சிக்கு முந்தைய சமூகத்தின் நூல்களை ‘Mirrors of Society’ என்று லெனின் பாராட்டினார்.  இந்த நூலை மிகச் சிறப்பாக மொழிபெயர்த் திருக்கிற கவிஞர் புவியரசுக்கு எங்கள் நன்றி.  இவருடைய கலீல்ஜிப்ரான் மொழிபெயர்ப்பு மனதைக் கவரக்கூடியது.  இந்நூலுக்கென்று 58 பக்க அளவில் புவியரசு முன்னுரை எழுதியுள்ளார்.  அதையே ஒரு தனிநூலாக வெளியிடலாம்.  கரமசோவ் சகோதரர்கள் நூலின் முன்னுரையைப் படித்தேன்.  மிரட்சியாக உள்ளது.  ‘இயேசுநாதரே, நீர் கறுப்பனாகப் பிறந்தால், மீண்டும் சிலுவையில் அறையப்படுவீர்’ என்றொரு கவிதை உண்டு. 

vizha_1_370இது சிந்திக்கத்தக்கது.  மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாடெமி விருது பெற்ற புவியரசு இந்த நூலை மொழிபெயர்த்தமைக்காக என்.சி.பி.எச். நிறுவனம் சார்பில் நன்றி கூறுகிறேன்.  இது அப்படியே மூலநூலைப் போலவே உள்ளது.  இதோ, இப்போது வெளியிடப் படுவதற்கு முன்பே சில பிரதிகள் விற்றுவிட்டன.  அத்தகைய மகத் தான நூல் ‘கரமசோவ் சகோதரர்கள்’” என்றார். 

விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு என்.சி.பி.எச். நிறுவனம் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.  என்.சி.பி.எச். முதன்மைச் செயன்மையர் சண்முகம்சரவணன் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கும், பாவை பப்ளிகேஷன்ஸ் முதன்மைச் செயன்மையர் டி.ரத்தினசபாபதி தா.பாண்டியன் அவர்களுக்கும், என்.சி.பி.எச். பொது மேலாளர் சண்முகநாதன் மணிவண்ணன் அவர்களுக்கும், முதுநிலை மேலாளர் அ.கந்தசாமி லதாராமகிருஷ்ணன் அவர்களுக்கும், திருச்சி மண்டல மேலாளர் குமார் ந.முத்துமோகன் அவர்களுக்கும், நிர்வாகக் குழு உறுப்பினர் சி.பி.ராணி எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், மேலாளர் ஆவுடையப்பன் புவியரசு அவர்களுக்கும் முறையே நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

எழுத்தாளர் லதாராமகிருஷ்ணன் உரை யாற்றுகையில், “தஸ்தயேவ்ஸ்கி ஒரு இலட்சிய வாதி.  அவருடைய இலக்கியத்தில் ஒரு வரியைக் கூட வீணானது, தேவையற்றது என்று ஒதுக்கி

விட முடியாது.  எந்த  இடத்திலும் ஆசிரியரின் முன்னிறுத்தல் கிடையாது.  உண்மையான, பெரிய எழுத்தாளர்களின் நூல்களைப் படிக்கும்போது, நாம் நம்மை மறந்து நூலின் உள்ளே போய் விடுகிறோம்.  கதாபாத்திரங்கள் நம்மை அப்படி அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.  தஸ்தயேவ்ஸ்கி வாழ்க்கையில் யாரையும், எதையும் ஏளனம் செய்வதில்லை.  எந்த நன்மை, தீமையிலும் அதன் அடித்தளத்தைப் பகுத்தறிகிறார்.  சக மனிதனை ஏளனம் செய்வது என்பது தஸ்தயேவ்ஸ்கியிடம் எப்போதும் கிடையாது.  தஸ்தயேவ்ஸ்கி என்றால் எல்லாம் அன்புதான்! எந்த ஒரு பாவச் செயலுக்கும் சம்பந்தப்பட்டவர் மட்டுமே பொறுப்பல்ல என்பதுதான் தஸ்தயேவ்ஸ்கி முன்வைக்கும் வாதம். 

வாழ்க்கையைப் பற்றிய வெவ்வேறு கோணங்களை ‘கரமசோவ் சகோதரர்கள்’ நூலின் மூலமும் தஸ்தயேவ்ஸ்கி  நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.  மொழிபெயர்ப்புக்கு என்று ஸ்டைல் இருக்கலாம்.  கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பு, மூலநூல் போல உள்ளது.  புதிதாகப் படிப்பது போல் உள்ளது.  இந்த நூலைப் படிக்கையில் மொழிபெயர்ப் பாளரிடம் உள்ள மூல ஆசிரியரின் மீதான அபிமானம் தெரிகிறது.  பதிப்பகங்கள் எழுத்தாளர் களுக்குக் குறைந்தபட்ச மரியாதையையாவது கொடுக்க வேண்டும்.  அந்தப் பண்பாட்டைப் புதுப் பதிப்பாளர்கள் என்.சி.பி.எச்.சிடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

உலக மெய்யியலில் நன்கு தேர்ச்சி பெற்றவருமான ரஷ்யாவில் தங்கி மெய்யியல் கற்றவருமான முனைவர் ந.முத்துமோகன் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நூலை மெய்யியல் நோக்கில் கூர்ந்து நோக்கி, அந்த அடிப்படையிலே கருத்துரைத்தார்.  “தஸ்தயேவ்ஸ்கி எழுதிய முக்கிய மான நூல்கள் தமிழில் வெளிவந்துவிட்டன.  கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பில் கரமசோவ் சகோதரர்கள் நூல் வெளிவந்திருப்பதன் மூலம் பழைய பஞ்சாயத்து ஒன்று முடிவுக்கு வந்து விட்டதாகத் தெரிகிறது. 

‘தஸ்தயேவ்ஸ்கி நூல்களைத் தமிழுக்குத் தர விரும்பாதவர்கள் கம்யூனிஸ்ட்கள்’ என்றெல்லாம் வானம்பாடி இயக்கம் குற்றம் சாட்டியது.  இப்போது என்.சி.பி.எச். வெளியிடும் இந்த நூலை வானம்பாடிக் கவிஞர் தான் மொழிபெயர்த்துள்ளார்.  தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்தைப் படித்தால், வேறு எழுத்தைப் படிக்க முடியாது.  அவ்வளவு தாக்கமும் தகவலும் கொண்டது அவருடைய எழுத்து.  ‘ஹெகலைப் படிக்காதீர்கள்; படித்தால் வெளியே வரமாட்டீர்கள்’ என்று அமெரிக்க அறிஞர் ஒருவர் கூறினார்.  ஹெகலைப் போன்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் தஸ்தயேவ்ஸ்கி.  உளவியல், அறவியல், கலாசாரம் என்றெல்லாம் பார்த்த பிறகு, அரசியல், பொருளாதாரப் பார்வை குறைந்துவிடும் என்று கூடக் கருதலாம். 

 இந்நூல் வெளிவந்து 130, 140 ஆண்டுகள் கழித்தும்கூடப் படிக்கத்தக்கதாக, பயனுள்ளதாகவே உள்ளது.  அந்த அளவுக்கு வலுவான பொறி அது! மேற்கு ஐரோப்பாவி லிருந்து நிகிலிஸம் - அதாவது, விரக்தி, மறுப்புத் தத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பத்தை அடிப் படையாகக் கொண்ட மேற்கு ஐரோப்பாவின் தத்துவம் ரஷ்யாவில் நுழையும்போது, நுழை வாயிலில் நின்று தடுத்தவர் தஸ்தயேவ்ஸ்கி.  பழைய பண்பாட்டுக்கு ஆதரவாக மேற்கு ஐரோப்பியத் தத்துவத்தை எதிர்த்து நின்றார் தஸ்தயேவ்ஸ்கி.  சோஷலிஸக் குழுவில் இருந்து மரணதண்டனை பெற்று, இறுதி நேரத்தில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.  தஸ்தயேவ்ஸ்கி பழைய சமூகத்திற்கு ஆதரவாக இருந்தார்.  அரசியல், பொருளாதாரம், பண்பாட்டுப் பரிமாணத்தை மீறி, அறவியல் ரீதியான தகுதியை மெய்ப்பிக்க வேண்டும் என்று சவாலாகக் கள மிறங்கினார்.  கார்ல் மார்க்ஸ் 1814இல் பிறந்து 1881இல் மறைந்தார்.  இருவரும் ஏறத்தாழ ஒரே காலப் பகுதியில் வாழ்ந்தவர்கள்.  கார்ல் மார்க்ஸ் புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் தங்கினார்.  அவருடைய ‘மூலதனம்’ வளர்ச்சியடைந்தது. 

அதே காலத்தில் தஸ்தயேவ்ஸ்கி விவசாய, பல்தேசியக்குவியல் சமுதாயத்தில் தோன்றியவர்.  மார்க்ஸ் முதலாளித்துவ சமூகத்தில் இருந்து கொண்டே முதலாளித்துவ சமூகத்தை எதிர்த்தார்.  ரஷ்யாவில் பழைமையான கிறித்தவம் (Orthodox Christianity) மேலோங்கியிருந்தது.  நீதி, அன்பு, அறம் ஆகியவற்றையெல்லாம் அரசியலுடன் சேர்க்கக் கூடாது என்பது தஸ்தயேவ்ஸ்கியின் கோட்பாடு.  டால்ஸ்டாய் கிறித்தவ தேவாலயத்தில் உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டார்.  தஸ்தயேவ்ஸ்கி உறுப்பினராக இருந்தார்.  அவர் எழுதிய குற்றமும் தண்டனையும், அசடன் அல்லது மூடன், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய மூன்று நாவல்களுமே கொலையை, வன் முறையைப் பற்றியவையே.  கரமசோவ் சகோதரர்கள் நூலில் தந்தை கரமசோவ் கொலை செய்யப்படுவார்.  இந்தியாவில் தாய்க்கு முதலிடம் கொடுத்து, தாய்நாடு என்பது போல, ரஷ்யா தந்தையர் நாடு என்று அழைக்கப்படுவதே மரபு.  தஸ்தயேவ்ஸ்கி ஏன் தம் எழுத்துகளில் கொலையை மையப் படுத்துகிறார் என்றொரு விவாதமும் உண்டு.  இது உணர்ச்சி சார்ந்த இயங்கியல்.  மார்க்ஸ், ஹெகல் இருவரும் கையாண்ட இயங்கியல் அறிவின் இயங்கியல் (Dialectics of Reason); தஸ்தயேவ்ஸ்கி கையாண்டது உணர்ச்சிகளின் இயங்கியல் (Dialectics of Passion).  ஹெகல் குறிப்பிட்டது Mediation. 

இரண்டு நேரெதிர் முரண்பாடுகளுக்கு அடுத்து மூன்றாவதாக சரி செய்யும் காரணி - அதாவது, சமரசம் செய்வது.  இங்கே, தஸ்தயேவ்ஸ்கியின் உணர்ச்சிகளின் இயங்கியலில் சமரசம் கிடையாது.  இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட கீழை நாடுகளில் அறிவின் வர்க்கங்களின் இயங்கியலைவிட உணர்ச்சி இயங்கியலே மேலோங்கியுள்ளது.  இந்தியாவில், சாதி, மதம், மாநிலம், ஆண்/பெண் எனப் பல முரண்பாடுகள்.  அதனால்தான் இந்தியா போன்ற கீழை நாடுகளில் தஸ்தயேவ்ஸ்கியின் நூல்கள் விரும்பி வாசிக்கப்படுகின்றன.  உணர்ச்சி மோதல்கள் நேருக்கு நேர் சந்திக்கின்றன.  ஜாரின் (Tzar) உருவமாகக் கொண்டுதான் தந்தைக் கொலை பார்க்கப்படுகிறது.  தஸ்தயேவ்ஸ்கியின் இலக்கியத்தில் சமரசமில்லாத உணர்ச்சிகளின் மோதலை நிரம்பக் காணலாம்.  இவர் எந்தக் கட்சிக்காரர் என்று முடிவு செய்ய முடியாது.  கரமசோவ் சகோதரர்கள் அவரது குடும்பத்துக் கதையே.  அந்தக் கதையின் மூலம் ‘இதுதான் ரஷ்யா!’ என்று தீர்ப்பு சொல்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.  அவரைப் பொருத்த அளவில், நவீன காலத்தில் எல்லாக் குற்றங்களும் நூறு மடங்கு அதிகரித்துவிட்டன. 

ரஷ்யாவுக்குள் மேற்கு ஐரோப்பிய வன்முறை நுழைகிறதே என்று தஸ்தயேவ்ஸ்கி வருந்தினார்.  இந்தியாவில் சாதி சார்ந்த அமைப்புகளினால் ஏற்படும் வன்முறை உள்ளேயே தோன்றுவது, மேலைக் கலாசாரத்தால் வன்முறை வெளியிலிருந்து வருவது என இரண்டு வகையான வன்முறைகள் தோற்றம் பெற்று வளர்ந்து வருகின்றன.  சமூக நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி இவற்றையெல்லாம் தாண்டி, இங்கே கலாசார நெருக்கடியும், உளவியல் நெருக்கடியும் உருவெடுத்து வருகின்றன.  ஆக, மார்க்ஸ் வர்க்க இயங்கியலை வளர்த்தெடுத்தார்; தஸ்தயேவ்ஸ்கி உணர்ச்சி இயங்கியலை வளர்த் தெடுத்தார்” என்றார்.

அடுத்து, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கமாக உரையாற்றினார்.  அவர் தமது உரையில், “நான் தஸ்தயேவ்ஸ்கியின் நூல்களைப் பாடத்தைப் படிப்பது போலப் படித்தேன்.  எனக்கு ரஷ்ய நூல்களை அறிமுகப்படுத்தியது என்.சி.பி.எச். நிறுவனமே.  தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் இருவரும் மிகப் பெரிய ஆளுமைகள்.  டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’, தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ இரண்டும் பெரிய இதிகாசங்கள்.  இவற்றைப் படித்தால் போதாது; படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.  இந்தக் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நூலை எந்த இடத்திலும் படிக்கலாம்.  ஒரு சில வரிகளைப் படித்தாலே, சிந்திக்கத் துவங்கி விடுவீர்கள்.  உலகில் செவ்வியல் நூல் வரிசை என்றாலே, இந்த இரண்டும் இடம் பெற்றுவிடும்.  ‘கரமசோவ் சகோதரர்கள்’ தமிழில் வரவேண்டும் என்பது நெடுநாளைய கனவு.  அந்தக் கனவை இப்போது புவியரசு நனவாக்கியுள்ளார்.  அவர் மொழிபெயர்த்திருப்பது பெரிய கொடை!

அந்த நூலில் கவித்துவம் குறையவில்லை.  தஸ்தயேவ்ஸ்கியின் நூல்களை மொழிபெயர்க்க வேண்டுமென்றால், அதற்கு மொழிபெயர்ப் பாளரிடம் மெய்த் தேடல் இருக்க வேண்டும்.  ஓஷோ, கலீல்ஜிப்ரான் நூல்களையெல்லாம் கற்று, மொழிபெயர்த்து அதனால் அடைந்த மெய்த்தேடலினால், புவியரசு இந்த மொழி பெயர்ப்பில் தகுந்த சொற்களைக் கையாண்டிருக் கிறார்.  இந்தக் கதையில் நிஜமான மனிதர்கள் பாத்திரங்களாகப் பிரவேசித்திருக்கிறார்கள்.  அவர் எழுதியவை எல்லாம் கொலையைப் பற்றிய நாவல்களே, தஸ்தயேவ்ஸ்கியின் அப்பா பெரும் முரடர்; தன்னுடைய மனைவியை அவர் நேசிக்க வில்லை.  ஒரு கட்டத்தில் அவரது மனைவி அவருக்குக் கடிதம் எழுதுகிறார் : ‘இத்தனை பிள்ளைகளைப் பெற்றும்கூட என்னை நீங்கள் நேசிக்கவில்லையே’ என்று.  தஸ்தயேவ்ஸ்கியின் அப்பா கொலை செய்யப் படுகிறார். 

vizha_370அதனால், தஸ்தயேவ்ஸ்கிக்கு வலிப்பு வந்து விடுகிறது.  ‘துயரத்தை என் மனம் தாங்கிக் கொள்கிறது; உடலால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை’ என்று குறிப்பிடுகிறார் தஸ்தயேவ்ஸ்கி.  கொலை என்பது மனநிலை சார்ந்ததா, தற் செயலானதா என்று பல நுட்பங்களைப் பேசு கிறார்.  கொலைக்குக் காரணம் என்ன என்று ஆராய்கிறார்.  ‘மனிதன் ஏன் யாரையும் நேசிப்ப தில்லை?’ என்று வினவுகிறார்.  எந்தக் குற்றத்தி லும் எமக்குப் பங்கு உண்டு என்பான் துறவி.  தஸ்தயேவ்ஸ்கி தம் அண்ணனையே தனது வழியாட்டியாகக் கொண்டார்.  ‘கோதுமைத் தானியம் அழியும் போது, புது நாற்று மலர்கிறது,’ என்றொரு கூற்று யோவானில் உண்டு.  மற்றவர் நலனுக்காக யார் துயருறுகிறாரோ அவரே உயர்ந்தவர்; முன்பணம் கொடுத்த பதிப்பாளர்கள் தஸ்தயேவ்ஸ்கியைத் துரத்தினர்.  எனவே அந்த நிர்ப்பந்தத்தினால்தான் தஸ்தயேவ்ஸ்கி நூல்களை எழுதினார்.  அவர் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டியவற்றுள் ஒன்று ‘குழந்தைகளை நேசிக்காவிட்டால் வாழ்வில் எந்தப் பயனும் இல்லை’ என்பது.  பீஷ்மரைப் போலக் குழந்தை மனமும், முதிர்ந்த ஞானமும் கொண்டவர் ஜொசீமா.  நரகம் என்பது அடுத்த வரை நேசிக்காத நிலை; சொர்க்கம் என்பது அடுத்த வரை நேசிப்பது! ஜொசீமா அல்யோஷாவை நேசிக் கிறார்; அதே வேளையில் அவளைச் சந்தேகிக் கிறார். 

இந்நூலில் வரும் எல்லாப் பிரதான கதா பாத்திரங்களும் அவருடைய குடும்ப உறுப்பினர் களே! குடும்பத்தில் இல்லாத கதாபாத்திரம் யுவான் மட்டும்தான்.  எதையும் விட்டுக் கொடுத்து துறவி யாகத் திகழ்பவர்;  அல்யோஷா; எதற்கும் போராடி மிடுக்காக வலம் வருபவர் திமீத்ரி.  இடையில் யுவான்.  எல்லா நபர்களிலும் தஸ்தயேவ்ஸ்கி இருக்கிறார்.  தாம் யாராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியது.  பெண்கள், குழந்தைகள் தாம்.  புகழ்பெற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் ‘எனக்கு முன்னோடி தஸ்தயேவ்ஸ்கி என்று குறிப்பிட்டுள்ளார்; வேறு எந்த விஞ்ஞானியையும் தனக்கு முன்னோடி என்று கூறவில்லை.  தஸ்தயேவ்ஸ்கியின் இலக்கியத்தில் நிறைய கேள்விகளையும், முடிவில்லாத உரையாடல் களையும் காண முடியும்.  ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு 4, 5 பக்க அளவுக்குப் பதில்களைக் கொடுப்பார்.  இந்த உலகத்துக்கு மதம் இல்லாத கிறித்து வேண்டும் என்பதுதான் தஸ்தயேவ்ஸ்கியின் விருப்பம்.  உலகில் எல்லா மனிதர்களுக்குமே ஆசை உண்டு.  சாத்தானுக்குக் கூட ஓர் ஆசை உண்டு. 

ஒரு நாள் ஆலயத்துக்குச் சென்று மெழுகு வர்த்தி ஏற்ற வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.  மனிதனுக்குள் இருளும் உண்டு; ஒளியும் உண்டு.  சூதாடி நாவலை ஃபியோடர் தஸ்தயேவ்ஸ்கி எழுதத் தொடங்கியதும் வழக்கமான நெருக்கடியில் தான்.  அதை 30 நாட்களில் முடிக்க வேண்டும்.  அப்போதுதான், அவரது வாசகியான அன்னா, ‘நான் உங்களுக்கு ஸ்டெனோகிராஃபராகப் பணி யாற்ற விரும்புகிறேன்’ என்று அவரை அணுகு கிறார்.  பின்னர் அன்னாவின் பண்பில் தோய்ந்த தஸ்தயேவ்ஸ்கி அன்னாவைக் காதலிக்கத் துவங்கு கிறார்.  அப்போது அந்தக் காதலைத் தெரிவிக்கப் படாதபாடு படுகிறார்.  சூதாடி நாவலை எழுதிய போது, சூதாட்டக் களத்துக்குச் சென்று அங்கே தங்கிவிட்டார் தஸ்தயேவ்ஸ்கி.  அவர் காலம் முழுவதும் எதிர்பார்த்ததெல்லாம், அன்பை மட்டும் தான்.  அவர் ஏங்கியதெல்லாம் அன்புக்காக மட்டும் தான்.  அவர் இலக்கியத்தை உருவாக்கிய கிறித்து.  கொண்டாடுவோம் தஸ்தயேவ்ஸ்கியின் இந்த நூலை!” என்றார்.

அடுத்துப் பேசிய திரைப்பட இயக்குநர் இன்றைய தமிழக அரசியல், சமூக நிலவர முன்னேற்றத்தில் என்.சி.பி.எச். ஓர் அடையாள மாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுவிட்டு, பின்னர் ஆர்.நல்லகண்ணு, எளிமையின் இலக்கணமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.  பின்னர், “ஜீவாவை ஒருமுறை காமராஜர் கூப்பிட்டு அனுப்பியபோது, அவரால் உடனே புறப்பட்டுச் செல்ல இயல வில்லை.  காரணம் தம்மிடமிருந்தே ஒரே வேட்டியைத் துவைத்துக் காயப்போட்டிருந்தார்.  ஆனால் இன்று நான் அப்படியில்லை.  ஏராளமான அளவில் ஆடைகளை அணிகிறேன்.  ‘தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் வருவதுபோல என் மனைவி பாண்டி பஜார் சென்று சட்டை எடுத்துக் கொடுத்து என்மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்து கிறார். 

1949இல் பீட்டர்ஸ்பர்க்கில் 27 இளைஞர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு வரிசையில் நிற்கிறார்கள்.  5 நிமிடங்களில் தண்டனை நிறை வேறப் போகிறது.  தண்டனையைப் பார்க்கவும், இறந்த பிறகு ஜெபித்துக் கொள்ளவும் மக்கள் கூட்டம் திரண்டு நிற்கிறது.  தோட்டா தயாராகிறது.  இன்று பேரறிவாளன், சாந்தன், முருகனைத் தூக்கில் போடத் தூக்குக் கயிற்றுக்குப் பெயின்ட் அடிப்பது போலத்தான் அன்று அந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.  திடீரென்று தண்டனை குறைக்கப்பட்டுவிட்டதாகத் தகவல் வந்தது.  சைபீரியாவுக்குக் கடத்தப்பட்டார்கள்.  இவ்வாறு நூலிழையில் தப்பினார் புரட்சிகர சோஷலிஸ்டான ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி.  புதிய அனுபவத்தைப் பெறுகிறார்; புதிய மனித உணர்வுகளைப் பெறு கிறார்; தன்னை நாவலாசிரியராக உருவாக்கிக் கொள்கிறார்.  அவருக்கு ஏற்பட்ட போராட்டச் சூழல்தான் இப்படிப்பட்ட இலக்கியத்தை உருவாக்க அடித்தளமாக இருந்தது” என்று பேசிய மணி வண்ணன் இன்றைய அரசியல் சூழலையும் நகைச்சுவையுடன் சாடினார்.

அடுத்து, மொழிபெயர்ப்பாளருக்கான சன் மானத் தொகை ரூ.75,000/-க்கான காசோலையை ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன் இருவரும் புவியரசுவிடம் வழங்கினர்.  எழுத்தாளர் ஜீவபாரதி புவியரசுவிற்கு சால்வை அணிவித்தார்.

கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் குறித்துப் பேசிய தா.பாண்டியன், 2012 வரை இதனை விஞ்சிய புதினமே இல்லை என்று சுட்டிக் காட்டினார்.  “மொழிபெயர்ப்பு நூலை அச்சிட்டு விற்பனை செய்துகொண்டிருந்தாலும், மொழி பெயர்ப்பாளருக்கு வாயாலேயே நன்றி கூறுவது தான் பதிப்பகத்தார்களின் பழக்கம்!” எனச் ‘சுருக்’கெனக் கூறி, ‘அந்த நடைமுறையை மாற்றியது என்.சி.பி.எச். நிறுவனம்தான்’ என்று கூறினார்.  இந்தச் சன்மான சாதனை தொடரும் என்றும் வாக்குறுதியளித்தார்.  மேலும், தம் உரையில், “கரமசோவ் சகோதரர்கள் நூலின் முன்னுரையை அவசியம் படியுங்கள்.  மொழி பெயர்ப்பைப்பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் குழப்புகிறவர்களே அதிகம்.  மூலமே மாறிவிடும்.  படித்திருத்தாலும் மறந்துவிடும்.  இந்த நூலைப் படிக்கிற யாரும் அந்த விமரிசனத்தைச் சொல்ல மாட்டார்கள்.  தஸ்தயேவ்ஸ்கி தமிழனாகப் பிறந்திருந்தால் எப்படி எழுதியிருப்பாரோ அப்படி மொழிபெயர்த்திருக்கிறார் புவியரசு.  நூலாசிரியரின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு தம் பணியைச் செய்திருக்கிறார் புவியரசு.  அவர் இந்நூலின் முன்னுரையில் பல கருத்துக்களை எழுதியுள்ளார்.  அவசியம் படியுங்கள்” என்றார்.

விழாவில் ஏற்புரை நிகழ்த்திய கவிஞர் புவியரசு, இந்த நூலை மொழிபெயர்க்க வேண்டும் என்ற தூண்டுதலுக்குக் காரணம் ஓஷோ என்று குறிப்பிட்டார்.  “இவ்வளவு பெரிய இலக்கியத்தை எப்போது மொழிபெயர்த்து முடிப்பது, யார்  வெளியிடுவார்கள்? என்று அஞ்சினேன்.  அந்த அச்சத்தைப் போக்கியது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.  பயங்கரத்தைப் பார்த்து சுரணையில்லாமல் இருப்பதுதான் உலகத்திலே பெரிய பயங்கரம்! இந்த நூல், வாசகருக்கு மானுடப் பார்வையைக் கொடுக்கிறது.  இது விழிப்புணர்வு தரும் ஞான நூல்.  இதுவரை ஆங்கிலத்தில் 49 மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன.  உலகெங்கும் இந்நூலின் மொழி பெயர்ப்பு தொடர்கிறது.  நிறைய சிந்தனையைத் தோற்றுவிக்கும் இந்த நூல்.  நூல் வெளியிடும் பதிப்பாளர்கள் ஆசிரியரைப் பார்த்து, ‘என்ன கொடுப்பீங்க?’ என்று அச்சுக்கான, காகிதத்துக்கான பணத்தைக் கேட்டுப் பெறுவார்கள்.  அதற்கு மாறாக, என்.சி.பி.எச். நிறுவனம் என்னுடைய நூல்களுக்குக் காண்ட்ராக்ட் போட்டுள்ளது.  எனக்கு இது புது அனுபவம்.  இந்த நூலுக்காகக் கிடைக்கும் அத்தனை புகழும் என்சிபிஎச் நிறுவனத்தையே சாரும்!” என்றார்.

என்.சி.பி.எச். மதுரை மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி நன்றிகூற விழா நிறைவுற்றது.

Pin It