தாகூரின் குடும்பம் 19-ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் தோன்றிய பல்வேறு சீர்திருத்த இயக்கங்களில் தலைமை தாங்கியது. அக்குடும்பத்தில் ஆன்மிக அறிவும், எழுத்தாற்றலும், கலைத்திறனும் பெற்ற பலர் வாழ்ந்தனர். ஆனால் ரவீந்திரநாத தாகூர் அனைவரையும் மிஞ்சி நின்றார். இந்தியா முழுவதும் அவருக்கு ஈடுஇணையற்ற செல்வாக்குப் பெருகியது. அவரின் படைப்பாற்றலை இரண்டு தலைமுறைகள் இன்று வரை கண்டு வந்துள்ளன. அவர் அரசியல் வாதியல்ல. எனினும் கவிதையும், பாட்டுமான தந்த கோபுரத்தில் இருந்தவர். அவர் உணர்ச்சி வசப்பட்டவராகவும், சுதந்திரத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். நாம் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு எந்த வொரு நிலைமையேனும் வளர்ந்து உருவாகும் போதெல்லாம் அவர் அடிக்கடி அதிலிருந்து (தந்த கோபுரத்திலிருந்து) கீழிறங்கி வந்து தீர்க்க தரிசனமான மொழியில் ஆங்கில அரசாங்கத்தையோ அல்லது தமது நாட்டு மக்களையோ எச்சரித்தார். இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் வங்கத்தில் கொதித்தெழுந்த சுதேசி இயக்கத்தில் சிறந்த முறையில் பங்கேற்றார். அமிர்தசரஸ் படுகொலைக்குப் பின்னர், பிரிட்டிஷ் அரசு அவருக்கு வழங்கிய சர் பட்டத்தைத் துறந்தார்.

கல்வித் துறையில் கவனம் செலுத்தி சாந்தி நிகேதன் அமைத்தார். இது இந்தியப் பண்பாட்டு மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. இந்தியச் சிந்தனையாளர்களிடையே, குறிப்பாக புதிதாக எழுந்த தலைமுறையினரிடையே அவருடைய செல் வாக்கு வளர்ந்தோங்கியது. அவர் எழுதிய வங்க மொழி மட்டுமின்றி, இக்கால இந்திய மொழிகள் எல்லாம் அவருடைய செல்வாக்கால் வளம் பெற்றன. பிற இந்தியர்களைவிட, அவர் கிழக்கு மேற்கு சிந்தனைகளிடையே ஈர்ப்புக் கொண்டு இந்திய தேசியத்தின் அடித்தளத்தை விரிவுபடுத்தினார். உலக ஒற்றுமை, கூட்டுறவு ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு செயல்பட்டார். எனவே அவர் இந்தியாவின் தலைசிறந்த சர்வ தேசியவாதி யானார். இந்திய மக்களின் நெஞ்சில் பிறநாட்டுக்கும், பிறநாட்டுச் செய்தியை இந்திய மக்களுக்கும் பரிமாற்றம் செய்தார். சர்வதேசியவாதியானாலும், அவர் கால்கள் இந்திய மண்ணில் வலிமையாக ஊன்றி இருந்தன. அவர் சிந்தனையில் உபநிடத அறிவு நிரம்பி இருந்தது. மனிதன் வயது முதிர முதிர தீவிரவாதத்தைக் கைவிடுவான் என்பதற்கு மாறாக, முதுமை வயதில் நோக்கத்திலும், எண்ணத்திலும் தீவிரவாதியானார். அவர் பலமான தனிமனித வாதி; அப்படிப் பட்டவர் ரஷ்யப் புரட்சியின் சாதனைகளைப் பாராட்டினார். குறிப்பாக கல்வி, பண்பாடு, சுகாதாரம், சமத்துவம் என்ற துறைகளில் அந்நாடு கண்ட முன்னேற்றம் அவரை ஈர்த்தது.

(இந்திய தரிசனம் : பண்டித ஜவஹர்லால் நேரு)

Pin It