“அம்மா” என்ற இந்நாவல் சுதந்திரப் போராட்டக் காலத்தைப் பின்னணியாகக் கொண்டு புனையப் பட்டிருக்கிறது. நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களைப் பற்றி அறிந்திருந்திருப்போம். அவர்களைப்பற்றி, அவர்களின் குடும்பங்களில் தினம் தினம் நடந்த துயரச் சம்பவங்களைப்பற்றி அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் அனை வரையும் உணரச் செய்திருக்கிறார், இந்தி எழுத்தாளர் கமலேஸ்வர்.

இந்நாவலின் பெயருக்கு ஏற்றதொரு பெண்ணாக சாந்தாவை வடிவமைத்திருக்கிறார் ஆசிரியர். நல்ல பாரம்பரியமிக்க குடும்பத்துப் பெண்ணாகவும் பெண்குலத்திற்குப் பெருமை சேர்ப்பவளாகவும் கதைநாயகி சாந்தா காட்டப்பட்டிருக்கிறார்

இக்கதையின் மற்றொரு முக்கிய அங்கமானவன் சாந்தாவின் மைத்துனன் நவீன்; நாட்டு விடுதலைக்காகப் போராடும் புரட்சிப்படையின் தலைவன்.

மேலும், சாந்தாவின் கணவன் ப்ரவின் தலைமை யாசிரியர், மாமியார் சரஸ்வதி மாமனார், குந்தன் லால். நாத்தி மஞ்சு, மகள் முன்னி, மகன் முன்னா, சாந்தாவின் பால்ய சிநேகிதன் சலிம் ஆகியோர் கதையின் முக்கிய கதைமார்ந்தர்கள்.

பொறுமையில் பூமாதேவியாக, அரவணைப் பதில் தாயாக, ஆலோசனை கூறுவதில் மந்திரியாக - இப்படி பெண்ணிற்கே உண்டான சிறப்பம்சங்களாக நாம் என்னென்ன கூறுகிறோமோ, அவை அனைத் திற்கும் மொத்த உருவாகத் திகழ்பவள் சாந்தா.

மணம்முடிந்து புக்ககம் செல்லும் சாந்தா, தன் மைத்துனன் ஒரு புரட்சியாளன் என்று அறிந்தும் சிறிதும் பயம் கொள்ளாமல் தன் நாட்டின் மானத்தைக் காக்கும் ஒரு சிறந்த காவலனான மைத்துனனை எண்ணி மகிழ்வுறுகிறாள்: அத்தோடாமல் அவனின் ஒவ் வொரு முயற்சிக்கும் தூண்டுகோலாகவும் அக் குடும்பத்துக்கு ஒரு துணையாகவும் தன்னை அர்ப் பணிக்கிறாள்.

இதற்கிடையில் காலனின் கோரத்தாண்டவம் அவளின் மாங்கல்யத்தைப் பறித்த நிலையில், கணவனின் மரணத்திற்கு அவள்தான் காரணமென்று மாமியார் தூற்ற, அதனை இல்லையென நிரூபிக்க சதி என்னும் உடன்கட்டை சடங்கை ஏற்க, அப்போது தன் மாமனார் மூலம் காப்பாற்றப்பட்டு பின் மாமியாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி, பின்பு காலத்தின் சுழற்சியில் தன் பால்ய சிநேகிதன் சலீம் வரவால் அவர்களின் பூர்வீகச் சொத்தைத் திரும்பப் பெற்று, தன்னைத் தூற்றியவர்களின் வாரிசுகளுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கிறாள். இதற்கிடையில் அவள் அனு பவிக்கும் கொடுமைகளும் துன்பங்களும் சொல்லி அடங்கா.

amma_450நவீன் இத்தாய் நாட்டிற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துவிட, தன் குடும்பத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற சிறு ஏக்கம் அவன் நெஞ்சை வருத்திக் கொண்டு இருந்தது. அச்சுமை அண்ணி சாந்தாவால் நீங்கியது. அத்தகைய மனித தெய்வத்தின் மாங்கல்யம் அவனால் பறிக்கப்பட்டது என ஆங்கிலேயர் போலியான ஒரு பிம்பத்தை உருவாக்கிட அது தவறானது என்று கண்டுணர்கிறான் நவீன். அவன் தன் அண்ணியைச் சந்தித்து உரையாடும் ஒவ்வொரு தருணமும் மிகவும் நெகிழ்ச்சியானது. இறுதியில் காவலில் அகப்பட்டுக் கொண்ட நவீன் ஆங்கிலேயரின் கையால் குண்டடிப்பட்டு சாவதைவிட தாய்நாட்டிற்காகப் பலர் முன்னிலையில் தூக்கில் தொங்குவதே மேலானது என்று முடிவெடுக்கிறான். ‘என் உயிர் என் தாய் நாட்டின் மண்ணிற்காகவே!’ என்று போராடும் நவீன் குணத்தின் மூலம் நம் விடுதலை வீரர்களின் வீரத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் கமலேஸ்வர்.

சாந்தாவின் மாமனாரான குந்தன்லால் தன் மருமகளை மகளாக நடத்துகிறார். அவளைத் தன் அண்ணியிடம் ஆசிர்வாதம் வாங்கச் சொல்ல அதற்கு அவர் மனைவி விரோதத்தின் காரணமாக வேண்டாம் என்று கூற, உறவின் விரிவிற்கு அழகான ஒரு விளக்கத்தைக் கூறுகிறார். “தண்ணீரைக் கம்பால அடிச்சா கொஞ்ச நேரத்துக்கு மட்டுமே கம்போட அடையாளம் தெரியும். ஆனா அடுத்த நிமிஷமே ஒண்ணா சேர்ந்து பழைய நிலைமைக்கே மாறிடும்” அது போலத் தான் உறவுகளும். எவ்வளவு நிதர்சன மான உண்மை! தன் மருமகளை உடன் கட்டையில் இருந்து தடுக்கும் போது பெண் குலமே இப்படி ஒரு ஆணிற்கு தலை வணங்க வேண்டும், என்று கூறத் தக்க வகையில் பெண்களின் உணர்ச்சி, ஆதங்கம், உரிமை, விடுதலை என அனைத்தையும் குந்தன்லால் வெளிப்படுத்துகிறார்.

இக்கதையின் அடுத்த முக்கியமான பங்கு பால்ய சிநேகிதன் சலீம். இவனின் வரவால்தான் சாந்தாவின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுகிறது. இளமைப் பருவத்தில் சாந்தாவின்பால் காதல் வசப்பட்டிருந்தது. எப்போது அவள் கழுத்தில் மங்கலநாண் ஏறியதோ அப்போதே அவள் மாற்றா னின் மனைவி என்ற எல்லைக்கு வந்துவிட்டான். இருப்பினும், அவளின் துயரநிலையைக் கண்டு எவ்வித எதிர்பார்ப்புமும் இன்றித் தூய்மையான உள்ளன்போடு அவரின் முன்னேற்றத்திற்காகத் துணை நிற்கிறான்.

மேலும் இப்படியாக ஒவ்வொரு கதைமாந்தரின் காட்சிகளை வைத்து நம்மை விடுதலைப் போராட்ட காலத்திற்கே ஆசிரியர் அழைத்துச் சென்று விட்டார். அக்காலகட்டத்தில் நாட்டிற்காக ஆண்மகன் வெளியில் போராடப் போனால் அவ்வீட்டில் பெண்ணிற்கு எத்தகைய துணிச்சல் வேண்டும். நவீனைத் துரத்தி காவல்துறையினர் ஒவ்வொரு முறை வரும்போதும் சாந்தா எவ்வளவு சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும் நடந்துகொண்டாள் என்பதை வைத்தே சாந்தாவின் நாட்டுப் பற்றையும், அதற்காக அவள் கையாளுகிற தந்திரங்களையும் ஆசிரியர், நமக்குப் புலப்படுத்தியிருக்கிறார். சாந்தா, வாசகர் களின் வணக்கத்துக்குரியவராகத் தோற்றமளிக் கிறாள்.

இந்த அற்புதமான கதையை அதன் சுவையும் தன்மையும் சற்றும் சிதைவு ஏற்படாமல் நம் மொழியில் அளித்திருக்கிறார் ராஜேஸ்வரி கோதண்டம். நியூ செஞ்சுரி நிறுவனம் இந்நூலை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மிகவும் தரமாக வெளியிட்டுள்ளது.

அம்மா

கமலேஸ்வர்

ராஜேஸ்வரி கோதண்டம்

வெளியீடு: என்.சி.பி.எச்.

விலை: ரூ.125.00

Pin It