book review2“கவிதை மௌனமாக இருக்கிறது; திறனாய்வுதான் பேசுகிறது” என்கிறார் நார்த்ராப் ஃப்ரை என்ற கனேடியத் திறனாய்வாளர் ஆம்; திறனாய்வுதான் கவிதையின் மௌனத்தைக் கலைத்து, அதில் ஒளிந்திருக்கும் உண்மைகளையும் அழகையும் வெளிக்கொணர்கிறது.

கருத்து மற்றும் வடிவ நோக்கில் பலவகையான திறனாய்வுகள் உள்ளன. மொழியியல் இலக்கியத் திறனாய்வு கவிதையின் மொழிக் கூறுகளை, மொழியியல் அடிப்படை அலசி ஆய்கிறது.

சிறந்த மொழியியல் வல்லுநரும் இலக்கிய ஆய்வாளருமான பேரா.செ.வை.சண்முகம் பாரதியின் அற்புதப் படைப்பான குயில்பாட்டை இந்நூலில் மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்துள்ளார்.

நூலின் முதல் அதிகாரம் மொழியியல் திறனாய்வின் கூறுகளை, தொல்காப்பியம், மற்றும் தற்கால மொழியியல் அடிப்படையில் விளக்குகிறது குறிப்பாக விகாரம், கிளவியாக்கம், உள்ளுறை இறைச்சி ஆகியவற்றையும் மீமிசைச் சொல்லாக்கம் கருத்தன் ஆகியவற்றைத் தொல்காப்பியத்தையட்டி விளக்கிவிட்டு, உறழ்ச்சி, கருத்தாடல், தொடரியல் முதலியவற்றை மொழியியல் நோக்கில் விளக்குகிறது.

‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்' என்ற புறப்பாடலில் காலம் இருபகுதிகளிலும் கருத்தாக இருப்பதையும், மொழி மாற்றுதலால் முதல்வாக்கியத்தில் காலம் + செயப்படுபொருளும், இரண்டாம் வாக்கியத்தில் செ.பொ.வும் முன்னிலைப் படுத்தப்படுவதைக் காட்டி அவற்றிற்கான காரணங்களையும் ஆசிரியர் சிறப்பாகக் காட்டுகிறார்.

காலம்தான் மாற்றத்திற்குக் காரணம் எனக் காட்டியுள்ளதை ஆனால் பாடலின் மொத்தவடிவத்தில், காலத்தின் மாற்றத்தால் அற்றை/இற்றை, அவர்கள் வாழ்வில் பெருமாற்றம் ஏற்பட்டதை இணை அமைப்பு, வேறுபாடுமூலம் கவிஞர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், இரண்டாம் பகுதி நீண்டிருப்பதற்கு துன்ப உணர்வு காரணம் என்பதை விட, “வென்று எறி முரசின் வேந்தர்” இடையில் வந்ததுதான் என்பதைக் கவிதை அமைப்பு, காட்டுவதாகவும் கொள்ளலாம்.

மேலும் நேர்மறையும் எதிர்மறையும் நிலை மாற்றத்தை நன்கு காட்டுகின்றன. மொத்தத்தில் அடிப்படைக் கருத்துக்கள் மொழியியல் துணையோடு நன்கு காட்டப்பட்டுள்ளன.

‘மொழித்திறன்’ என்ற அடுத்த அதிகாரத்தில் குயில் பாட்டில், பல்வேறு மொழிக் கூறுகளுக்கான எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன, அவற்றுள் நின், உன், நான், யான், நும் ஆகிய சொற்கள் பாத்திரங்களின் சமூக நிலைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆசிரியர் நன்கு காட்டியுள்ளார்.

மேலும், கதைச் சூழலுக்கேற்பவும் அவை பயன்படுத்தப்பட்டுள்ள கல்யாணம், கண்ணாலமாக வருவதும் சமூக அடிப்படையிலான பயன்பாடே, ‘ஏனடா மூர்ச்சையுற்றாய்’ என்று வரும் நான்கு வினாக்களில் ‘பொருண்மை இயல்’ திரிசொல்லாக அமைந்துள்ளது என ஆசிரியர் கூறுவது, ஒதெல்லோவில் இறுதியாகக் கைக்குட்டைக்கே என்று (It is gone, lost, out. the way) எனப் பல சொற்களைப் பயன்படுத்துவதை நினைவூட்டுகிறது.

அடுத்து, ‘பொருண்மையியல் திறன்’ என்ற பகுதியில் குயில் பாட்டில் ஒரு சொல் பலபொருளில் வருவது, மீமிசைச் சொற்கள், உட்சொற்கள் பயன்படுத்துவதைக் காட்டுகிறார்.

குறிப்பாக உட்சொல்லே, மீமிசைச் சொல்லாக மாறும்போது கவிதையில் அர்த்தங்கள் தொடர்ந்து விரிவடைவது காட்டப்படுகிறது. மேலும் கவிதையில் முரண் போன்ற உத்திகள் பயன்படுத்தப்படும்போது பொருள் இடைவெளி (gaps) அமைந்துள்ளது.

வாசகர் பொருளை உய்த்துணர வைக்கவே என்று கூறும்போது வாசகர் மையத் திறனாய்வுக்கு (Ready oriented) வழிவகுக்கிறது.

எடுத்துக்காட்டாக, குயிலின் முதற்பாட்டில் காதல் - சாதல், அருள் / இருள், கூடல் / வாடல், தளம் / கூளம் ஆகிய முரண்களுக்கிடையே உள்ள இடைவெளி, வாசகரின் அர்த்த உருவாக்கத்தைத் தூண்டவே. வாசகர்கள் வெறும் அர்த்தத்தை நுகர்பவர்களில்லை; அர்த்தத்தை உருவாக்குபவர்கள் (Not simply consumers, but creators of meaning).

கவிதையில் அர்த்த உருவாக்கமும், விரிவாக்கமும் முக்கியப் பண்புகளாகும். ஆசிரியர் இந்தப் பகுதியை மேலும் சற்று விரிவாகச் செய்திருக்கலாம்.

அடுத்து அணித்திறன் என்ற அதிகாரத்தில் குயில்பாட்டில் வரும் உவம, உருவக அணிகளை தொல்காப்பியத்தையட்டி விளக்குகிறார் ஆசிரியர். அவ்வப்போது அவற்றின் மெய்ப்பாட்டைக் குறிப்பது பயனுள்ளதாய் உள்ளது.

அடுத்து மெய்ப்பாட்டுத் திறன் என்றே ஒரு அதிகாரம் உள்ளது. முதலில் தொல்காப்பியங்களை நகை முதல் உவகை ஈறாக எட்டு மெய்ப்பாடுகளையும் அவற்றின் காரணிகளையும் ஆசிரியர் பட்டியலிட்டுள்ளார். குயில்பாட்டு முழுதும் வியப்பு (மருட்கை) மேலோங்கியிருப்பதாகக் கூறுவது ஏற்புடையதே; கதை மாந்தர்கள் வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகளைக் காட்டிவிட்டு, ஆசிரியர், கவிஞரின் மெய்ப்பாடுகளை விரிவாகக் கூறுகிறார்.

கவிஞர் ஒரு கதை மாந்தராகவும் கதை சொல்பவராகவும் பல்வேறு மெய்ப்பாடுகளை வெளிப்படுத்தி பாடலை இணைக்கும் சக்தியாகவும் விளங்குவதாக ஆசிரியர் காட்டியுள்ளார். பொதுவாக வடமொழித் திறனாய்வாளர்கள் ரசக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதுபோல் தமிழ்த் திறனாய்வாளர்கள் மெய்ப்பாடுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. குயில்பாட்டை மெய்ப்பாடுகள் நோக்கில் ஆசிரியர் காட்டியிருப்பது புதுமையானதே.

எடுத்துரைப்பியலில் பாரதி நிகழ்வுகளை இணைத்துக் கூறும் பாங்கினை ஆசிரியர் விளக்குகிற நிகழ்வுகளின் இடம், காலம் வெளியிடுவதைக் காட்டிவிட்டு, அவைகள் காலம் சார்ந்த தொடர்பு ஒழுங்காலும், காரணகாரியத் தொடர்பு ஒழுங்காலும் இணைக்கப்படுவதாகக் காட்டுகிறார்.

பெரும்பகுதி காலம் சார்ந்தும், பின்பகுதி காரணம் சார்ந்தும் அமைந்து, முடிவு காலம் சார்ந்தே அமைவதாக ஆசிரியர் கூறுகிறார்.

குயில் பாட்டு ஒரு கதைப் பாட்டு. ஆனால் அது ஒரு கனவுக் கவிதையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘பட்டப் பகலில் பாவலர்க்குத் தெரியும் நெட்டைக் கனவு’ என்று பாரதியே கூறுகிறார். இது ஃப்ராய்டின் கவிதை பற்றிய கருத்து. நனவுலகில் இடம், காலம் ஆகியன தெளிவாகக் கூறப்பட்டு, பிறகு முக்கிய நிகழ்ச்சிகள் கனவுக் காட்சிகளாக, நாடக பாணியில் காட்டப்பட்டு, நான்காம் நாளில் குயில் பூர்வ ஜென்மக் கதையை முனிவர் கூறியதாகக் கூறும்போது சிக்கல் அவிழ்கிறது.

குயில் பெண்ணாகத் தோன்றி கவிஞர் அதை முத்தமிடும் உச்ச கட்டத்தில் கனவு கலைந்து நனவுலகுக்குக் கவிஞரும் நாமும் திரும்புகிறோம். நம்பமுடியாத அதிசய நிகழ்வுகள் கனவில் வருவதும், அவற்றின் உச்சகட்டத்தில் கனவு கலைவதும் இயல்பே. கனவு கலைந்தபின் கவிஞர் தனது பழைய சூழலை விவரிக்கிறார்.

நனவுலகிலிருந்து கனவுலகுக்குச் சென்று மறுபடியும் நனவுலகுக்கே திரும்புவது கோல்ட்ரிஜ், கீத்ஸ் போன்றோரின் விந்தையுடைய (Romantic Poetry) கவிதையின் தன்மையாகும்.

கவிஞரே கதை சொல்லியாகவும், கதை நாயகராகவும் மாறிமாறி வருவதால் அவர் கதை மாந்தருக்கும் வாசகர்களுக்குமிடையே பாலமாக அமைகிறார்.

அடுத்து குயில் பாட்டின் யாப்புத் திறனை விரிவாகவே ஆய்வு செய்கிறார். குயில் பாட்டில் பயன்படுத்தப்படும் யாப்புக் கூறுகளை எடுத்துக்காட்டுகிறார். ஆனால் அவை எப்படிக் கருத்தோட்டத்திற்கேற்ப மாற்றம் அடைந்துள்ளன என்பதை மேலும் காட்டியிருக்கலாம்.

இறுதியாக ‘வேதாந்தம்’ என்ற தலைப்பில், குயில்பாட்டின் அடிக்கருத்து குறித்து ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள வாசிப்புக்களைக் குறிப்பிட்டு ஆசிரியர் விளக்குகிறார். சிவமணி காதலை மையப் பொருளாகக் கொண்டு, அது பாட்டில் ஆன்மிகக் காதல், ஆண்-பெண் காதல் ஆகியவைகளாக உள்ளதாகக் கூறுகிறார்.

விமலானந்தம் அகத்திணைக் காதலாகவும் அத்வைதமாகவும், கா.மீனாட்சிசுந்தரம் கவிதைக் காதலாகவும், தெய்வீகக் காதலாகவும் காட்டுவதையும் ஆசிரியர் காட்டுகிறார்.

ஆசிரியர் பல்வேறு ஆய்வுகளை விரிவாக விளக்கிவிட்டு வேதாந்த விளக்கம் குறித்து தெளிவான முடிவு தரவில்லை. ஆனால் திணை நோக்கில் காதல் சூழ்நிலையில் விளக்கியிருப்பது சிறப்பாக உள்ளது.

குயிலை ஜீவாத்மாவாகக் கொள்வதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது. குரங்கை ஆணவமாகவும், மானை ஆசையாகவும் கொள்வதைவிட குரங்கை மனமாகவும், மானை உடலாகவும் கொண்டு குயிலை ஆத்மாவின் பண்பட்ட நிலையாகவும் கொள்ளலாம்.

இப்படிச் செய்யும்போது குயிலை மாய சக்தியாக மட்டுமின்றி, கற்பனா சக்தியாகவும் கொள்ள இடமுள்ளது. குயில் மாயக்குயில் என்றே குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டு நிலை விளக்கங்களையும் இணைக்க முடியும்.

வேதாந்த விளக்கத்தை முதல் நிலைக் கருப்பொருளாகவும் கற்பனை, தமிழாளர் ஆக்கத்தை இரண்டாம் நிலைக் கருப்பொருளாகவும் கொள்ளலாம். ஐம்புலன்களோடு வேடர்கள் தொடர்புபடுத்தப்படுகின்றனர்.

சேர இளவரசன் கவிஞனாக வருவதால் இந்த இரண்டு நிலைகளின் தொடர்பைக் காட்டுகிறது. நான்கு நாள் விழிப்புநிலை, கனவு, ஆழ்நிலைத் தூக்கம், துரிய நிலைகளின் குறியீடுகளாகக் கொள்ளலாம்.

துரிய நிலைதான் மற்ற மூன்று நிலைகளின் அடித்தளம், ஆனால் துரிய நிலைதான் தூய பிரக்ஞை, அது விழிப்புமில்லை தூக்கமுமில்லை.

ஆனால் குயில்பாட்டு போன்ற அற்புதக் கவிதையை எந்த ஒரு தனி அர்த்தத் தளத்திலும் நிலை நிறுத்த முடியாது. அர்த்தப் பன்மைதான், கவிதையின் அடிநாதம். தெய்வீகக் காதல் / மானுடக் காதல், ஜீவாத்மா / பரமாத்மா, கனவு / நனவு போன்ற முரண்பாடுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதைத்தான் கவிதை காட்டுகிறது.

இதை கட்டுடைத்தல் (deconstruction) திறனாய்வு மூலம் காட்ட முயலலாம்.

ஆசிரியர் சார்பு நூல் பற்றி சிவமணி கூறுகிறார். ஆனால், குயில்பாட்டில் கீத்ஸின் வானம்பாடிப் பாடலும், என்டிமியான் என்ற பாடலும் இழையோடுவதை மறுக்க முடியாது. குயில்பாட்டின் கடைசி வரிகள் கற்பனையின் சூழ்ச்சியைக் குறிப்பிடுகிறது. கீத்ஸூம் Fancy cannot cheat so well. As she is famed to do deceiving elf என்று வானம்பாடிப் பாடலை முடிக்கிறார்.

தூங்குகிறேனா விழித்திருக்கிறேனா? என்ற ஐயம்தான் அதில் கடைசி வரி. இது குறித்து ‘பொதிகைத் தென்றலும் மேலைக்காற்றும்’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.

ஆனால், பாரதியில் வேதாந்தம் ஒரு மூலநிலைக் (Archetype) காதலாகக் காட்டப்பட்டுள்ளது. ஆத்மாவின் உண்மை நிலை காதல். அது கற்பனையோடும் இணைக்கப்படுகிறது.

ஆனால் எல்லாத்திறனாய்வுகளும் கவிதையை நோக்கி இட்டுச் செல்லும் வழிகள் தாம்; மொழியியல் திறனாய்வும் அப்படி ஒரு வழியே. குயில் பாட்டின் முழுமையையும் அது காட்டாவிட்டாலும் அதன் மொழித்திறனை முழுமையாகக் காட்டும் ஒரு முழுமையான ஆய்வு பேராசிரியர் சண்முகனாரின் நூல் என்பதில் ஐயமில்லை.

குயில்பாட்டுத் திறன்
செ.வை.சண்முகம்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
ரூ.120/-

- கா.செல்லப்பன்