நாளை அதிகாலை விபத்தில் சிக்கி, உறுப்பு களையோ உயிரையோ இழக்கப் போகிறவர் இன்று மாலை ஒய்யாரமாக அமர்ந்து தொலைக்காட்சியில் விபத்துச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

ஆம், மறுநாள் பயண வேளையில் ஏதோ ஓர் ஊரில், ஏதோ ஒரு சாலையில், ஏதோ ஒரு வாகனம் இவர் பயணிக்கும் வாகனத்தின் மீது மோதி, விபத்து நேரலாம். உயிரிழந்தால், கெட்ட நேரம்; உறுப்புகள் ஏதேனும் சேதாரமானால், ‘அப்பா... ஆதாரமான உயிர் பிழைத்ததே!’ என்று எண்ணிக் கொண்டால் பாதிக்கப்பட்டவருக்கு நல்ல நேரம்!

கெட்ட நேரமோ, நல்ல நேரமோ விபத்து நடப்பது என்பது பெரும்பாலும் வாகன ஓட்டுநர் உறங்குகிற நேரமாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான விபத்துகள் நள்ளிரவு 3.00 மணிக்கும் காலை 6.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடக்கின்றன.

இவை தவிர, பட்டப் பகலில் நடக்கிற வாகன விபத்துகள் என்றால் ‘ஓட்டுநரின் கவனக் குறைவு...’, ‘ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழத்தல்...’ என்பன போன்ற காரணங்களுக்கு அப்பால் வாகனங்களின் தகுதியற்ற நிலைகள் விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்துச் சாலைகளுக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு.

கடந்த ஒரு மாத காலத்தில் தமிழகத்தில் நேர்ந்த விபத்துகளில் வாகன மோதல் என்ற காரணத்துடன், வாகனப் பராமரிப்பு இன்மையால் விபத்து என்று அதிகம் பேசப்பட்டது. குறிப்பாக, கல்வி நிலையங்களின் வாகனங்களுக்கு விபத்து, பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு என்று பரவலாகச் செய்திகள் வந்தன.

உடனே, தமிழக அரசின் போக்குவரத்துக் காவல்துறையினரும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினரும் ஆங்காங்கே சாலையில் வாகனங் களைத் ‘திடீர்’ ஆய்வு செய்து, உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக அரசைப் பாராட்டலாம். அதே வேளையில், ஆய்வு நட வடிக்கையால், உடனடி தண்டனை நடவடிக் கையால் தகுந்த பலன் கிடைக்கும் என்றோ, அவை தொடர்ந்து நீடிக்கக் கூடியவை என்றோ ஒரு வரையறைக்குள் உறுதியாக இருத்திப் பார்க்க முடியுமா?

முன்பு கூறியபடி, ஓட்டுநரின் உறக்கத்தினால், கவனக் குறைவினால், கட்டுப்பாடு இழந்ததால் வாகன விபத்து என்பதில், அந்த ஓட்டுநரின் ஒட்டு மொத்தப் பணிச் சூழல் ஆய்வு செய்யப்பட வேண்டியது என்பது ஒருபுறமிருக்க, வாகனங்கள் பராமரிக்கப்படாமையால் ஏற்படுகின்ற விபத்து களைத் தவிர்ப்பதற்கு நிரந்தரமான ஒரு தீர்வுக்கான நெறியை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும்.

வாகனத்தின் ‘நம்பர் பிளேட்’டில் சீராக, அரசு குறிப்பிட்டுள்ள நிறத்தில், அளவில் எண்கள் எழுதப்படாமல் ஐந்து வாகனங்கள் பிடிபட்டால், உடனே ‘நம்பர் பிளேட் இப்படித்தான் எழுதப்பட வேண்டும்’ என்று ஓர் அறிவிப்பு, ஹெல் மெட் அணியாததால் ஏழு விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால், உடனே ‘ஹெல்மெட் அணியா விட்டால் அபராதம்’ என்று ஓர் அறிவிப்பு, ஒன்பது விபத்துகளில் வாகன ஓட்டுநர் செல்போனில் பேசிச் சென்றார் என்று அறியப்பட்டால், உடனே ‘ஆவணப் பறிமுதல்’ என்று ஓர் அறிவிப்பு என்று இந்தக் காட்சிகள் சில நாட்கள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டு, செய்தித்தாள்களில் வாசிக்கப் படுவதோடு சரி, பிறகு அனைத்தும் மறக்கப்படு கின்றன.

விபத்துகளைத் தவிர்ப்பதற்கான தெளிவார்ந்த நடவடிக்கையில் அரசு எந்திரம், அரசு சாரா அமைப்புகள், பொதுமக்கள், வாகனப் பராமரிப் பின்மை என்ற வகையில் நிறுவனங்கள், தனி நபர்கள் என அனைவருக்கும் பொறுப்பு உண்டு.

விபத்து நடந்தவுடன் உறுப்பு இழந்து வாழப் போகிறவர், உயிரை இழக்கப் போகிறவருள் பெரும் பாலோர் அல்லா, ஆதிபராசக்தி, இயேசு, ஈஸ்வரன் என ஏதோவொரு கடவுள் பெயரை உச்சரித்திருப்பர். அப்படியும், நடந்த விபத்து விபத்துதான்! உறுப்புக்கோ, உயிருக்கோ ஏற்பட்ட இழப்பு இழப்புதான்!

நடைமுறையில் விபத்துகளைத் தவிர்ப்பது மானிடன்வசமே உள்ளது.

Pin It