1912ல் நடேசனரால் தொடங்கப்பட்ட திராவிட சங்கம் இன்றைய திராவிட முன்னேற்றக் கழகங்களாகி விட்ட அதன் படிநிலை வளர்ச்சிக் காலத்தில் திராவிட இயக்கம் சாதித்தவைகளை, பெற்ற வெற்றிகளை இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த இயக்கமும் பெற்றதில்லை. அத்தகைய திராவிட இயக்கம் தமிழினத்திற்கும் அதன் பண்பாட்டுக் கலை நிலைக்கும் தீங்கிழைத்துவிட்டதாகப் புனைந்தெழுதியுள்ளார், ம.செந்தமிழன்.
திராவிடம் பேசுவோர் தமிழ் மரபுகள் ஏற்றத் தாழ்வுகள் மிக்கது, பெண்ணடிமைத்தனமானது, தமிழர்கள் மூடநம்பிக்கை உடையவர்கள், தமிழர்களுக்கென்று தனிப்பண்பாடு கிடையாது, சாதி ஒடுக்குமுறை உள்ளது என்று பழி சுமத்துவதாக குறைபட்டுக் கொள்வதோடு இவை போலிக் குற்றச்சாட்டு என்று புலம்புகிறார்.
திராவிடம் பேசுவோர் தமிழர்கள் மேல் இவற்றைக் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. ஆரியக் கலாச்சாரத் தாக்கத்தால் இந்த நிலையடைந்து விட்டீர்களே இவற்றைக் களைந்தெறிந்து விட்டு விழித்தெழுங்கள் என்று தட்டியெழுப்பினர் என்பது தான் உண்மை.
தொல்காப்பியத்தில் பெண்ணடிமை சொல்லப் படவில்லையா? கற்பிற்கு விளக்கம் சொன்ன தொல்காப்பியர்,
கொளர்குரிமரபின் கிழவன், கிழத்தியை கொடைக் குரிமரபினோர் கொடுப்பக் கொள்வதுவே என்றார்.
கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் பெண் என்ன கடைச் சரக்கா? காமக்கிழத்தி, காதற்பரத்தை, சேரிப்பரத்தை என்றெல்லாம் இனம் பிரித்துக் காட்டுகிறாரே தொல்காப்பியர். பெண்களென்ன போகப் பொருளா? ஆணை இப்படியெல்லாம் பாகுபடுத்த வில்லையே தொல்காப்பியர். ஒரு ஆண் குடும்பத்தலைவி இருக்கும் பொது காமக்கிழத்தியாகவே வேறொருத்தியிடம் தொடர்பு கொள்ளலாம்; சேரிப்பரத்தை அவனுடைய குடும்பத்தலைவிக்கு அந்த உரிமையெல்லாமில்லை? தமிழ் மரபில் பெண்ணடிமைத்தனம் இல்லையா?
தமிழ் மரபு ஏற்றத்தாழ்வு இல்லாததா அதையும் அந்தத் தொல்காப்பியரே சொல்லியுள்ளார். “மேலார் மூவர்க்காகிய கரணம் கீழோர்க்காகிய கால முமுண்டே” ஏற்றத் தாழ்வில்லை என்பவர் மேலோர், கீழோர் என்று தொல்காப்பியர் கூற்றுக்கு என்ன விளக்கந்தருவாரோ?
தொல்காப்பியம் அரசுருவாக்கக் காலத்தில் தோன்றிய நூல், ஆரியப் பார்ப்பனர்களே அரசுருவாக்கத்தைச் செய்தனர் என்றால் தொல்காப்பியக் காலம் கி.மு. 700 என்பர். நிலந்தருதிருவின் பாண்டியன் அவையில் அரங்கேறியதாக் கூறுகின்றனர் ஆய்வறிஞர்கள். 2700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கு அரசு என்று ஒன்று இருக்கவில்லையா? தமிழன் அரசமைக்கத் தெரியாதவனா? நாடோடிகளாக அலைந்து திரிந்தானா?
ஆரியர் இந்தியாவிற்குள் நுழைந்தகாலம் கி.மு. 1500 தலைக்கழகக் காலம். கி.மு. 5500. பாண்டியவேந்தன் காய்சின வழுதி என்பவன் தலைக்கழகத்தை நிறுவினன் என வரலாறு கூறுகிறது. அவனுக்கு எந்த ஆரியப் பார்ப்பான் அரசுருவாக்கிக் கொடுத்தான்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் தமிழின் வேரிலிருந்து பிரிந்தவை என்றால் அதைப் பேசுவோரெல்லாம் பாரசீகத்திலிருந்து வந்தவர்களா? அவர்களும் அந்தத்தமிழைப் பேசிய தமிழன் வேரிலிருந்து பிரிந்தவர்கள் தானே. இவர்கள் அனைவரையுங் குறிக்கவே திராவிடம் என்ற சொல்லை வரலாற்றாளர்கள் கையாண்டார்கள். அச்சொல் கூட வடசொல் என்பர். அது வடசொல்லல்ல வடவாரியர்கள் தமிழம் என்ற சொல்லைத் திரித்துச் சொன்ன தமிழின் திரிசொல்லே.
பண்டைத் தமிழர்கள் இடப்பெயர்களை யவனம், கிரேக்கம், ஈழம், கடாரம், சாவகம், புட்பகம் என்று அம்சாரியை பெய்து வழங்கினர். அந்த வரிசையில் தமிழம் என்ற நிலப்பகுதியை பிறமொழியினரான ஆரியர் ‘ட்ரமிளம், ட்ரவிடம், திராவிடம்” எனத் திரித்து வழங்கினர். 200 ஆண்டுகட்டு முன்வந்த வெள்ளையர் தஞ்சாறூரை டேஞ்சூர் என்றும் திருச்சியை ட்ருச்சி என்றும் ஆக்கிவிட்டுப் போய் விட்டனரே, இந்த விளக்கத்தின் பிறகாவது திராவிடம் இனத்தின் பெயரென்பதையும், மொழி திரிந்து இனந்திரிந்து அதுவே மரபினத்தின் பெயரான தென்பதை அறிந்து கொள்வார் என நம்புகிறேன்.
பெரியாரின் மொழிக் கொள்கையில் எந்தக் குழப்பமுமில்லை. அவர் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர். அறிவியல் வளர்ச்சிக் கேற்றவாறு மொழி வளர்ச்சியடைய வேண்டுமென்று எண்ணியவர். அதற்கேற்ற வகையில் எழுத்துச் சீர்திருத்தம் தந்தவர். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவயத்தினானே என்ற நன்னூலார் வழியைப் பின்பற்றாமல் பழையதையே கட்டியழு வோரைத் திட்டித் திருத்துவதற்காக அவ்வப்போது, சில கடுஞ்சொல்லை வீசியிருக்கிறார். அதைப் பொறுக்கி வைத்துக் கொண்டு வரலாறு பேசுவது வாய்மையாகாது.
கோவிலுள் புகுந்துவிட்ட வடமொழியை வெளியேற்ற எழுந்ததே பக்தியக்கம் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் கோவிலில் தமிழும் பாடினார் என்பது குப்புறவிழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலத்தான்.
வந்தேறிகளான ஆரியர்களுக்கு நிலங்கொடுத்ததே முட்டாள்தனம், ஆரிய மாயையில் பெற்ற அடிமைத் தனம் என்கிறது திராவிட இயக்கம்.
ஆரியத்தை வெறுக்கும் திராவிடர் பார்ப்பன செயலலிதாவிற்கு வாக்குக் கேட்பதேன்? இந்தக் கேள்வி நல்ல கேள்வி, நியாயமான கேள்வியுங்கூட. பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டு அறிவியக்கமாக வளர்ந்து, களம் பல கண்டு பலிபல கொடுத்த இயக்கம் தன் பெண்டு தன் பிள்ளை வீடு வாசல் இவையுண்டு தானுண்டு என்றலையும் சின்னதோர் கடுகு போலுள்ளங்கொண்டோர் அண்ணாவின் இயக்கத்தைக் குடும்பச் சொத்தாக்கிவிட்டார். அதை மீட்டெடுக்க எந்த ஆயுதத்தையுங் கையிலெடுக்கலாம் என்ற நிலைப்பாடே இது. நிரந்தரமல்ல.
தமிழ் மரபு ஆரியத்தை ஆதரித்தது என கதைகட்டவில்லை திராவிட இயக்கம். ஆரியத்திற்கு அடிமையாகிவிட்டது என சுட்டிக்காட்டி தட்டி எழுப்பியது. கதை கட்டுகிறார்கள் என்று சொல்லிவிட்டு இவரோ ஆரியக் கூறுகள் மிகுந்ததும் உண்டென்கிறார் இது என்ன தர்க்கமோ?
தமிழ் மரபு சாதியம் நிறைந்தது என்று திராவிட இயக்கம் கதை கட்டிவிட்டதாகச் சொல்லிவிட்டு இவரோ வலங்கை, இடங்கை கதையெல்லாம் சொல்கிறார். வண்ணார், நாவிதர், கொல்லர், தச்சர் என்று சாதிப் பட்டியலிடுகின்றார். வண்ணானும் தச்சனுங் கொல்லனு தங்களுக்குள் மணவுறவு கொண்டு வாழ்ந்தனரா?
திராவிடர் என்பதன் உண்மையான பொருள் தென்னாட்டுப் பார்ப்பனர் என்று யாரோ திரித்துவிட்ட கதையை மேற்கோள்காட்டுகிறார். இவர் காட்டும் அந்த ஆதாரத்தில் கூட அவர் சரியாகத்தான் சொல்லியுள்ளார். திராவிடம் என்ற சொல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய நிலப்பகுதிகளைக் குறிக்கிறது என்று தெளிவாகவே கூறியுள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது. தஞ்சாறூரான், மதுரையான், இராமநாத புராத்தான் என்று கூறிக் கொள்வது போல தாம் வாழும் நிலத்தை வைத்துத் தங்களை திராவிடன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இது இனச்சுட்டுப் பெயரல்ல இனச்சுட்டுப்பெயரானால் வடக்கே இருந்த பார்ப்பனர்களும் தங்களை பாஞ்சால திராவிடன், வங்கத் திராவிடன் என்று கூறிக் கொண்டிருப்பார்கள். பக்தி இயக்கத்தில் ஒருவரான திருஞானசம்பந்தரையே திராவிட சிசு என்றுதான் அழைத்தனர்.
திராவிடன்தான் ஆரியன் என்று சொல்லி விட்டு சான்று கேட்டால் தமிழனையா காட்டுவதென்கிறார். தமிழனைத்தான் ஆரியன் திராவிடன் என்று அழைத்தான். பிற்கால வரலாற்றாளர்கள் அதையேக் குறியீடாக்கிவிட்டனர். அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்கே தமிழனைக் காட்டுகிறோம். இதிலென்ன பெரிய குறையைக் கண்டுவிட்டீர்?
சேரியென்பது சேர்ந்து வாழுமிடம். புறத்தே உள்ள குடியிருப்பு என்பது எல்லாம் தெரிந்ததே. அதில் அந்தந்த சாதியினர் மட்டும் தான் வாழ்ந்தனர் என்ற அவசர முடிவை தவிர்க்கவே சிலப்பதிகாரத்தைக் காட்டினாராம். அந்தந்த சாதியினர் மட்டும் சேர்ந்து வாழ்ந்ததால் தான் அதற்கு சேரி என்று பெயர் வந்தது. பறையர்கள் வாழும் சேரி பறச்சேரி, பார்ப்பனர்கள் வாழும் சேரி பார்ப்பனச்சேரி பறச்சேரியில் பார்ப்பனர் குடியிருந்ததாகச் சொல்லவில்லையே. கைப்புண்ணுக்குக் கண்ணாடியா வேண்டும். இன்றும் தமிழ்நாட்டு ஊர்ப்புறங்களில் உள்ள சேரிகளில் மேல் சாதியென்று சொல்லிக் கொள்கிற யாராவது ஒருவராவது குடியிருப்பதாகக் காட்ட முடியுமா? மேல் சாதி வேண்டாம். பறச்சேரியில் பள்ளர் குடியிருப்பதாகச் சொல்ல முடியுமா? 21ஆம் நூற்றாண்டிலேயே இதுதானே விதி. இதில் திராவிட இயக்கம் பொய்களைப் பரப்பவில்லை. அவர்களைத் தலைநிமிரச் செய்தது. தோளில் துண்டு போட முடியாது, காலில் செருப்பணிய முடியாது. எழுபது வயது கிழவனை ஏழு வயது சிறுவன் ‘ஏய் முனியா’ என்று பேர் சொல்லிக் கூப்பிடுவான். எழுபது வயதுக் கிழவனும் ஏன் சாமி என்று வந்து நிற்பான். இதையெல்லாம் மாற்றியமைத்தது திராவிட இயக்கம். அவர்களைத் தலை நிமிர வைத்தது மட்டுமல்ல மேட்டுக்குடி இளைஞர்களையும் பகுத்தறிவு பெறச் செய்து அவர்களின் தோளில் கைபோட்டுத் தோழனாகப் பழக வைத்தது திராவிட இயக்கம். சிலப்பதிகாரமே புறஞ்சேரி என்று தானே சொல்கிறது. தனியான ஊர் என்று சொல்லவில்லையே இதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் இதை மேற்கோள் காட்டுவோரின் அறிவை அளக்க அந்த மேற்கோளே போதும்.
உடையார் குடிக்கல்வெட்டை மேற்கோள் காட்டும் இவர் அந்தக் கல்வெட்டுச் செய்தியை முழுதும் படிக்கவில்லை போலும். உடையார் குடிக்கல்வெட்டுச் செய்தி இதோ. “சுந்தரச்சோழன்(957-983) இராசராசனின் தந்தையாவான். இராசராசன் சிறுவனாக இருந்த போது அவனின் அண்ணனும் மாவீரனுமாகத் திகழ்ந்தவனுமாகிய ஆதித்த கரிகாலனுக்கு சோழப் பேரரசில் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்றது. பாண்டியர்களுடன் நடந்த போரில் ஆதித்த கரிகாலன் மாபெரும் வெற்றியைப் பெற்றான். அதனால் பாண்டியனின் முடித்தலை கொண்டவன் என்ற விருதையும் பெற்றான். ஆதித்த கரிகாலனை கி.பி. 965இல் அரசப் பதவியிருந்த பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் கொன்றுவிட்டனர். கொலையாளிகள் யாரெனத் தெரிந்தும் சுந்தரச்சோழனால் அவர்களைத் தண்டிக்க முடியவில்லை. விசாரணைக்குக் கூட ஆணையிட முடியவில்லை. துயரத்தில் நொந்து மடிந்தான். அதன்பின் ஆட்சிக்கு வந்த உத்தமச்சோழன் அவர்களை தண்டிக்க ஆணையிட முடியவில்லை. ஏன்? கொலையாளிகள் அனைவரும் பார்ப்பனர்கள். அவர்கள் வாழ்ந்தது ஒரு பிரம்மதேயத்தில். பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கும்போதே குடிநீக்கியும், கோல்நீக்கியும் தான் தானம் வழங்குவது வழக்கம். குடிநீக்குதல் என்றால் மன்னனின் ஆளுகைக்குட்பட்டக் குடிமக்களிலிருந்து அவர்களை நீக்கிவிடுவது. கோல் நீக்குதல் என்றால் மன்னனின் ஆட்சியதிகாரத்தை அப்பகுதியிலிருந்து நீக்கிக் கொள்வது. மன்னனின் ஆளுகைக்குட்படாத மக்களை - மன்னனின் ஆளுகை எல்லைக்கப்பால் உள்ள மக்களை மன்னன் தண்டிக்க முடியாது. ஆதித்த கரிகாலனைக் கொன்ற பார்ப்பனர்கள் சோழப்பேரரசின் உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள். அவர்கள் மேற்கண்ட பிரம்மதேயமான அவர்களின் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர்.
“பார்ப்பனன் கொடிய குற்றங்களைச் செய்தாலும் கொலையே செய்தாலும் அவனைத் துன்புறுத்தாமல் அவன் பொருளை அவனிடம் கொடுத்து அயலூருக்கு அனுப்பிவிட வேண்டும்” - மனுதருமம் 8 -380.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 985இல் பட்டத்திற்கு வந்த இராசராசன் முன்றாண்டுகளுக்குப் பிறகு 988இல் அந்தக் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவ்றூர்ச் சபையோருக்கு ஓலையனுப்பினான். அப்போதும் அவர்களைத் தண்டிக்கும்படி ஓலையில் எழுதவில்லை. அவர்களின் சொத்துகளை விற்று கருறூறூத்தில் கட்டிவிடும்படித்தான் எழுதினான். ஊர்ச்சபையோரும் அக்கொலையாளிகளில் ஒருவனும் முக்கியக் குற்றவாளியின் தம்பியுமான மலையனூரான், அவன் மகன் அவன் தாய் ஆகியோரின் சொத்தை விற்று, விற்ற தொகை 112 கழஞ்சுப் பொன்னையும் கருறூலத்தில் கட்டிவிட்டனர். (உடையார் குடிக்கல்வெட்டு, பதிப்பாசிரியர் நீலகண்ட சாத்திரி)
மண்ணின் மைந்தனை, பேரரசனின் மகனை வந்தேறிப் பார்ப்பனர்கள் கொலை செய்துவிட்டு இந்த மண்ணிலேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் என்றால், அது மனுதரும ஆட்சியல்லாமல் பார்ப்பனர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆட்சியாகுமா? திராவிட இயக்கத்தார் பொய்யான குற்றச்சாட்டைக் கூறுவதாகச் சொல்லும் மேற்கண்ட வரலாற்றை மறுக்க முடியுமா?
“தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் இவையிரண்டும் பிறவினைச் சொற்கள். எங்களை தாழ்த்தி விட்டார்கள். எங்களைப் பின் தள்ளிவிட்டார்கள். நாங்கள் வந்தேறிப் பார்ப்பனர்களால் தாழ்த்தப்பட்டுவிட்டோம், பிற்படுத்தப்பட்டுவிட்டோம். யார் யார் அப்படிச் செய்யப்பட்டவர்கள் என்று பட்டியலிட்டு நாங்கள் முன்னேறுவதற்கு, பழைய நிலைக்கு வருவதற்கு அரசு நடவடிக்கை யெடுக்க வேண்டும் என்பதற்கே மேற்கண்ட சொல்லாட்சியைப் பெய்தனர். இவற்றையெல்லாம் புரிந்து கொள்வதற்கு மொழியிலக்கண அறிவு வேண்டும். தாழ்த்தப்பட்டோர் என்ற சொல்லே கொடூரமாகத் தெரியுமிவருக்குத் தாழ்ந்து கிடந்தோரின் நிலையை எண்ணிப் பார்க்க முடியவில்லைபோலும். அவர்கள் அப்படிப் பட்டியல் போட்டுத் தமிழர்களைக் கைதூக்கிவிடவில்லையென்றால் கட்டுரையாளர் எங்காவது பண்ணையில் கிடைமாடு மேய்த்து வயிறு கழுவிக் கொண்டிருப்பார்.