மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் அறிவிப்புகளையும் தாண்டி, மார்ச் மாதம் முழுவதும் இலங்கைத் தமிழர் உரிமைப் பிரச்சினை நம் மண்ணில் படுதீவிரமாக ஊடாடியது.

ராஜபக்சேவை இனஅழிப்புப் போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ‘மார்ச் - 6’ அன்று தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதத்தை நடத்தியது.

தொடர்ந்து, அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் சார்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இலங்கைத் தமிழினப் படுகொலையை விசாரிக்க ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்கும் செயலில் இந்திய அரசு அவ்வப்போது பல குழப்பமான முகங்களைக் காட்டி வந்தது. அதனைக் கண்டித்துத்தான் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது. அதில் இளைஞர்களும், மாணவர்களுமாக ஏராளமானோர் கலந்துகொண்டு, வலிவுடன் உணர்வை வெளிப்படுத்தினர்.

ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் போர்க் குற்ற விசாரணை நாளான மார்ச், 27 நெருங்க நெருங்க, இந்திய அரசு ராஜபக்சேவுக்கு - அதாவது, தமிழின அழிப்புக்கு ஆதரவு அளிக்கப் போவதாகவே நாடு முழுவதும் அய்ய அலை பரவியது.

இலங்கைத் தமிழர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்களின் தீவிர கோரிக்கை நடவடிக்கைகளின் விளைவாக, இந்தியா, ஜெனிவாவில் அமெரிக்கா எழுப்பிய தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தது. தமிழகத்துத் தேர்தலில் குறுக்கு வழி பிடித்து வாக்காளர்களை இருளில் சந்தித்துப் பொருள் கொடுத்து வாக்கு கேட்கும் சில கட்சிக் காரர்களைப் போல, ராஜபக்சே அரசு ஜெனிவா தீர்மானத்தில் அனுகூலம் பெற என்னென்னவோ வித்தைகளையெல்லாம் காட்டியும், முடிவு ராஜபக்சே அரசுக்கு எதிராகவே - அதாவது, அநியாயத்துக்கு எதிராகவே முடிந்தது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் ‘அமெரிக்கா என்னும் ஓநாய் மீது நம்பிக்கை கொள்ளலாகாது’ என்று சில குரல்கள் ஒலிக்க, ‘தோன்றியுள்ள நல் வாய்ப்பை முன்னெடுத்துச் செல்வோம்’என்றும் சில இயக்கங்கள் ஆக்கபூர்வமாக முன்னேறின.

இதற்கிடையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தனியார் தொலைக்காட்சி யொன்றுக்கு அளித்த நேர்காணலில், இலங்கைத் தமிழர்களின் நிலைமைபற்றிப் பேசினார். அதில், தான் சீனாவுக்குச் சென்று அங்குள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் உரையாடுகையில் இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினை தொடர்பாகப் பேசியதாகவும், அப்போது அந்தச் சீனக் கம்யூனிஸ்ட்கள், இலங்கைத் தீவு என்பதை இந்தியாவின் ஓர் அங்கமாகவே பார்ப்பதாகவும், எனவே, இந்தியா என்ன சொல்கிறதோ அதையே தங்கள் நாடு (சீனா) நம்புவதாகவும் குறிப்பிட்டதாகக் கூறினார். இந் நிலையில், நமக்கு - தமிழர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாகத் தெரியும் இலங்கைத் தமிழர் உரிமைப் பிரச்சினை உலக நாடுகளின் பார்வையில் மிகவும் சிறிய சிக்கலாகவே தெரியும் என்றும் அந்த நேர்காணலில் தா.பாண்டியன் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் பாட்னாவில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது அகில இந்திய மாநாட்டிலும் தா.பாண்டியன் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றை எடுத்துரைத்து, “தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் உலகமெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கைகள் மீது மத்திய அரசு எடுத்த வரவேற்கத்தக்க நிலை பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை அரசு தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதோடல்லாமல் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் சரியான ஓர் அரசியல் தீர்வினையும் இலங்கை அரசு உருவாக்க வேண்டும் என்று மாநாட்டில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், அரசியல் சாரா இயக்கங்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள், உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் முனைந்து, இலங்கைத் தமிழர்கள் உரிமை பெற்று, இனி மேலாவது ஒவ்வொரு பகலும் இரவும் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும். இதைத் தேசிய அடையாளமாக மட்டுமல்ல; மானுட அடையாள மாகவும் கருதலாம்.

Pin It