பதிற்றுப்பத்து என்பது பத்துப் பத்து என்னும் பொருளுடையதாகும். இப்பத்துகளில் பத்துச் சேர மன்னர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பத்துப் புலவர்கள் பாடியதாக நூறு பாடல்கள் உள்ளன. சோழ வேந்தர் பற்றியோ பாண்டிய வேந்தர் பற்றியோ தனியாக நூல் எதுவும் தொகுக்கப்படாமல், சேரர்களைப் பற்றி மட்டுமே தொகையாக்கம் நடைபெற்றிருப்பது சிந்திப்பதற்குரிய ஒன்றாகும். அவ்வகையில் பதிற்றுப் பத்து தனிச்சிறப்பு வாய்ந்த நூலாகத் திகழ்கின்றது.

pathitrupathu_400இந்நூலின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்காத நிலையில், இது ஒரு குறை நூலாக உள்ளது. இந்நூலுக்குப் பழமையான உரை ஒன்றுள்ளது. ஆனால், இவ்வுரை பதவுரையைப் போன்று விரிவாகவும் குறிப்புரையைப் போன்று சுருக்கமாகவும் எழுதப் படாமல் இடைப்பட்டதாக உள்ளது. இவ்வுரை யாசிரியர் ஒவ்வொரு பாட்டிற்கும் அமைந்துள்ள பெயருக்கு விளக்கம் தருவதோடு அப்பாட்டின் தூக்கு, வண்ணம், துறை ஆகியவற்றின் கருத்தையும் எடுத்துக்கூறுகின்றார். இத்தகைய அரிய நூலைக் கண்டுபிடித்து முதன் முதலில் அச்சு வடிவில் கொண்டு வந்த பெருமை ‘தமிழ்த் தாத்தா’ என்று போற்றப்பெறும் உ.வே.சாமிநாதையர் அவர்களையே சாரும். அவர் 1904ஆம் ஆண்டில் இந்நூலை வெளி யிட்டார். ஐயரவர்களுடைய பதிப்பில் பழைய உரை யோடு அவருடைய குறிப்புரையும் உள்ளது; பழைய உரையிலுள்ள விளங்காத பகுதிகள் சிலவற்றை விளக்கும் முறையிலும் பதிற்றுப்பத்திலுள்ள பாடல் களுக்கு ஒப்புமையான பகுதிகளைத் தொகுத்துக் கொடுக்கும் முறையிலும் அவர் இக்குறிப்புரையை அமைத்துள்ளார். ஐயரவர்களின் காலத்தில் அவ்வுரை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் வெளியிடப் பட்டது; 1957ஆம் ஆண்டு வரை அவருடைய பதிப்பு மறுபதிப்புகளாக வெளிவந்துள்ளன.

வித்துவான், புலவர் பாடத்திட்டங்களில் பதிற்றுப் பத்தும் ஒரு பாடநூலாகி அமைக்கப்பட்டதால், அதற்கு ஒரு விரிவான உரை எழுத வேண்டிய சூழல் தோன்றியது. அத்தகையதொரு புலமைச் சூழலில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சித்தாந்த கலாநிதி வித்துவான் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் பதிற்றுப்பத்திற்குச் சுமார் 500 பக்கங்களில் விரிவான உரை எழுதித் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக 1950ஆம் ஆண்டில் வெளியிட்டார். செறிவும் புலமைச் சிறப்புமுடைய இவ்வுரை தொடர்ந்து மறு பதிப்புகளாக வந்துகொண்டிருக்கின்றது. இவ்வுரை புலமைச் செறிவுடையது; பாடல்களின் அடிகளைக் கண்ணழித்துப் பதவுரை, பொழிப்புரைகளை எழுதியும் பாடல்களின் இலக்கிய நயத்தை விளக்கியும் ஒத்த பகுதிகளைச் சுட்டிக்காட்டியும் இலக்கணக் குறிப்புகள் தந்தும் பழையவுரையோடு ஒப்பிட்டுக் காட்டியும் புலமைக்கு விருந்தாக இவ்வுரை அமைந்துள்ளது. பதிற்றுப்பத்தை ஒரு வரலாற்றை ஆவணமாகக் கருதுவதற்குத் தேவையான குறிப்புகளும் அவருடைய உரையில் இடம்பெற்றுள்ளன. இவ்வுரையைத் தொடர்ந்து மேலும் பல உரைகள் பதிற்றுப்பத்திற்கு எழுதப்பட்டுள்ளன.

இவ்வுரைகள் அனைத்தும் புலமை நோக்கில் எழுதப்பட்டுள்ளன. சேரர்களின் குடிப்பெருமையையும் வெற்றித் திறனையும் கொடைச் சிறப்பையும் அவை விதந்து ஓதுகின்றன. ஆனால், பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ள பாணர், பாடினி, விறலி, கூத்தர், பொருநர், கோடியர், வயிரியர் போன்ற கலைஞர்களின் பங்களிப்பை விளக்கி அவ்வுரைகள் கூறவில்லை. புறத்திணைப் பாடல்களில் பெரும்பாலானவை போர்த்துறைகள் போர்க்களங்களுக்குச் சென்று, அவர்களோடு நெருங்கி உறவாடி,அவர்கள் வெற்றி பெற்றிடுமாறு களவேள்வி போன்ற போர்ச் சடங்குகளை நிகழ்த்தியும் அவர்கள் வீழ்ந்துபட்டபோது அவருடைய வீரச்சிறப்புகளை எடுத்துக் கூறி வருந்தியும் வெற்றிபெற்ற மன்னர் களிடமிருந்து போர்க்களத்திலேயே பரிசில்களைப் பெற்றும், பாணன், விறலி போன்ற கலைஞர்களைப் பரிசில் பெறும் பொருட்டு வெற்றி பெற்ற மன்னரிடம் அனுப்பியும் ஓரிடத்தில் நிலையான வாழ்க்கையை மேற்கொள்ளாமல் தத்தம் குடும்பத்தோடு தம் கலைத் தொழில்களுக்கு வேண்டிய இசைக் கருவிகளையும் வாச்சியங்களையும் காவடியாகக் கட்டிக்கொண்டு ஊர் ஊராக எடுத்துச் செல்லும், ஊடகங்களாக அவர்கள் செயல்பட்டதனைப் பதிற்றுப்பத்துப் பாடல் அண்மைக் காலம் வரை எழுதப்பட்டு வெளியிடப் பட்டுள்ள பதிற்றுப்பத்து உரைகள் மட்டுமே பார்த்து உள்ளன. தமிழில் செய்யுளுக்கும் பாவுக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. ஆனால் பாட்டு என்பது தொலைவில் இருப்பாரும் கேட்டு மகிழ்ந்து ‘இது என்ன பா’ என்று அடையாளம் காணக்கூடிய வகையில் இசை யோடு அமையும் எனத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார். பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாட்டிற்குமுரிய வண்ணம் (சந்தம்) தூக்கு (தாளக்கட்டு) ஆகியவை அப்பாட்டின் இறுதியில் கொடுக்கப்பட்டிருந்தாலும், பதிற்றுப் பத்திற்கு உரை எழுதியவர்கள் அவற்றில் போதிய கவனம் செலுத்தி விளக்கவில்லை. கலைஞர்களின் கலைப்பின்னணி உரைகளில் வெளிப்படுத்தப்பட வில்லை.

இக்குறையைப் போக்கும் முகமாகப் பேராசிரியர் முனைவர் கரு.அழ.குணசேகரன் அவர்களின் உரை அமைந்துள்ளது. இவ்வுரையாசிரியர் புதுவைப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறையில் இருபது ஆண்டுக்காலம் பணியாற்றியதன் விளைவாக நாடகம், நாடக அரங்கு, ஒலிஒளி அமைப்பு, இசை, கூத்து வாத்தியங்கள் போன்ற கலைத் தொடர்பான தரவுகளில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த காரணத்தாலும் அவரே ஒரு நிகழ்த்து கலைஞராக (ஞநசகடிசஅiபே ஹசவளைவ) புகழ் பெற்றுத் திகழ்ந்ததாலும் இவ்அருமையான புத்துரைகள் கலையியல் வழியே எழுதப்படுதல் வேண்டும் என்னும் ஓர் உந்துதலையும் கொடுக்கும் வகையில் இவ்வுரை அமைந்துள்ளது. பேராசிரியர் குணசேகரன் பதிற்றுப் பத்தை ஒரு செய்யுள் இலக்கியமாகப் பார்க்காமல் அதனைப் பழந்தமிழ் மக்களின் சமூகவியல் கலையியல் மேம்பாட்டினை விளக்கும் ஓர் ஆவணமாகக் கொண்டு அதற்கேற்பத் தன் உரையை எழுதியுள்ளார். தற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் கலை இலக்கியச் சமூகப் பாண் பாட்டின் செல்நெறிகளின் அடிப்படையில் எழுதப் பட்டுள்ள இப்புத்துரை முன்முயற்சியாகும்.

பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாட்டுக்கும் முன்னரே பெயர் சூட்டப்பட்டுள்ளது. நம் உரையாசிரியர் தம் நோக்கில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு புதிய பெயரை (தலைப்பை) பொருத்தமாகச் சூட்டியுள்ளார். இப்பெயர்கள் நம் உரையாசிரியர் கலைஞர் மட்டுமல்லர்; நல்ல சுவைஞருமாவார்’ என்பதனை நிறுவும் வண்ணம் அழகாக இப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பதிற்றுப் பத்தின் 52ஆம் பாடல் ‘சிறுசெங்குவளை’ என்று பழைய உரையில் பெயரிடப்பட்டுள்ளது. நம் உரை யாசிரியர் இப்பாடலின் திரண்ட கருத்தை உள் வாங்கிக் கொண்டு, பாடலுக்கு ‘ஆடுமகள் - அரசன் - அரசி ஊடல் கலை’ என்று புதிய பெயர் சூட்டியுள்ளார். போரில் வெற்றிபெற்ற மன்னன் மகிழ்ச்சியோடு வெற்றியை விழாவாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றான்; பாண்டில் விளக்கொளியில் இரவில் துணங்கைக் கூத்து நடந்துகொண்டிருக்கின்றது. மன்னனும் மக்களோடு மக்களாக இயற்கை அரங்கில் அமர்ந்து ஆட்டத்தைக் கண்டுகளித்துக் கொண்டு இருக்கிறான். ஆட்டம் உச்சகட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது பார்வையாளர்களில் ஒருவனாக அமர்ந்து ஆட்டத்தைச் சுவைத்துக் கொண்டு இருந்த மன்னனும் சட்டென எழுந்து துணங்கை பாடும் பெண்களின் தலைவிக்குத் துணைக்கை கொடுத்துத் தன்னை மறந்து ஆடத் தொடங்கிவிடுகின்றான். மன்னனைப் போன்றே கூத்தைச் சுவைத்துக் கொண்டு இருந்த அரசி அக்காட்சியைக் கண்டு ஊடல் கொள் கிறாள். சுற்றிச்சுற்றி ஆடிக்கொண்டிருக்கும்போதே அரசியின் ஊடற்குறிப்பை உணர்ந்த மன்னன் ஆடிக் கொண்டு அவள் இருக்குமிடம் வரும்போது (வேட்ட மான அரங்கு) தன்னோடு துணங்கை ஆடிய ஆட்டக் காரி தன் தலையில் சூடியிருந்த சிறிய செங்குவளை மலரை எடுத்துத் தன் தலைவியிடம் கொடுத்துப் பார்வையால் அவளிடம் மன்னிப்புக் கேட்கிறான். ஆனால், அரசியோ சமாதானம் அடையவில்லை. ‘நீ எமக்கு யாரையோ?” என்று பார்வையால் சொல்லிக் கொண்டு அவள் அரங்கிலிருந்து வெளியேறுகின்றாள். மூலத்தில் இப்பாடலின் பொருளைக் காட்சிப் படுத்தும் முறையில் இப்புத்துரை அமைந்துள்ளது.

மன்னர்களின் திருவோலக்கத்தில் பாணர்கள் பாடி ஆடி மன்னனை வாழ்த்துதல் என்பது ஒரு வகையான சடங்கினை நிறைவேற்றும் நிகழ்வாக அமைந்துள்ளது என்று உரையாசிரியர் பதிவு செய்து இருப்பது (ப.9) பொருத்தமானதாகும். சங்கப் பாடல்கள் பல சடங்கு தொடர்பான பாடல்கள் என்பதனை அவற்றை ஊன்றிப் பயில்வார் உணர்வர்.

14ஆம் பாடலுக்கு உரை வரையும்போது “சில சமூகங்கள் மன்னரைச் சார்ந்தும், மன்னருக்காகவே வாழ்ந்தும் வீழ்ந்தும் படுகின்ற இனங்களாக நாடோடித் தன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன. ஆனால், இந்த இனங்கள் குறித்து எண்ணிச் செயல்படும் மனநிலையில் மன்னன் இல்லை” என்று அவர் எடுத்துக்காட்டி யிருப்பது சங்ககாலச் சமுதாயம் பற்றிய ஒரு துல்லியமான மதிப்பீடாகத் திகழ்கின்றது.

பதிற்றுப்பத்தின் 15ஆம் பாடலுக்குப் பழைய உரை “செந்துறைப் பாடாண்பாட்டு” என்று துறைக் குறிப்புத் தருகின்றது. ஆனால், இதன் பொருத்த மின்மையை ஆராய்ந்து, இப்பாட்டுக்கு “ஊர்ப்புறச் செருகிடை நிலை” என்னும் புதிய துறையை நம் உரையாசிரியர் வகுத்துக் காட்டுகின்றார். பகைவரை வீழ்த்தும் நோக்கோடு படையெடுத்துச் செல்லும் போர் நடவடிக்கை “வஞ்சித் திணை” என வகைப் படுத்தப்பட்டுள்ளது. போர்மேற் செல்லும் அரசன் பகைவன் நாட்டின் எல்லையை ஒட்டியே ஓர் ஊர்ப் புறத்தில் பாசறை அமைத்துத் தங்குவான். படை பாசறையில் கிடக்கின்றது. எனவே, இப்பாடலுக்கு “ஊர்ப்புறச் செருகிடை நிலை” என்னும் துறை வகுக்கலாம் என்று உரையாசிரியர் பதிவு செய்து இருப்பது அவருடைய ஆய்வுப் புலமைக்கு அரணாக அமைகின்றது.

நம் உரையாசிரியர் பதிற்றுப்பத்தில் பாடல்கள் சிலவற்றில் பதிவாகியுள்ள சிந்தனைகளைச் சமண சமயக் கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கி யுள்ளார். மூன்றாம் பத்தில் இடம்பெற்றுள்ள 21, 22ஆம் பாடல்கள் சமண சமயச் சிந்தனைகளை முன்னெடுத்து வைப்பவை என்று அவர் விளக்கு கின்றார். மூன்றாம் பத்தைப் பாடிய புலவரின் பெயர் பாலைக் கௌதமனார் எனப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. “சொல்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று ஐந்துடன் போற்றி” எனத் தொடங்கும் இப் பாடலுக்கு (2வது பாடல்)1 உரையாசிரியர் “ஐந்திணைத் துணை” என்று புதிய பெயர் சூட்டியுள்ளார். மதுரையைச் சுற்றிலும் கிடைத்துள்ள சமணர் தொடர்பான தமிழ் - பிராமிக் கல்வெட்டுகள், திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம் போன்ற சமண சமய நூல்களின் கருத்துகளின் அடிப்படையில் இப்பாடலை அவர் ஆராய்ந்து இப்பாடல் சமண சமய நெறிகளைக் குறிப்பாக, அவர்களின் விருந்தோம்பல் பண்பினை விளக்குவதாகக் காட்டுகின்றார். பாடலில் இடம் பெற்றுள்ள “அடுநெய் ஆவுதி” என்னும் தொடர் பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரின் சமயச் சார்பினால் பாட்டில் இடைச்செருகலாகத் திணிக்கப்பட்டு இருக்கலாம் என்று உரையாசிரியர் கருதுவது (ப.55) மேலும் ஆராயத்தக்க ஒரு புதிய செய்தியாகும். மூன்றாம் பத்தில் புகழப் பெற்றுள்ள பல்யானைச் செல்குழு குட்டுவன் “சமண நெறியினை உள்வாங்கி ஆட்சி செய்பவனாக விளங்குகின்றான்” என்று புலவனால் முன் நிறுத்தப்படுவதால், சமண அறத்திற்கு முரணாகப் போர் செய்தல் என்பது எப்போதோ நடந்த ஒரு வரலாறாகவே புலவனால் பதிவு செய்யப் பட்டுள்ளது (ப.64)” என்று உரையாசிரியர் கூறி யிருப்பதும் அவருடைய மறுவாசிப்பிற்குக் கிடைத்த வெற்றி என்று கூறலாம்.

நான்காம் பத்தில் இடம்பெற்றுள்ள பேய் மகளிர் (35) பற்றிய குறிப்பையும் 36ஆம் பாடலில் இடம்பெற்றுள்ள ‘கூளியர்’ ஆட்டத்தையும் விளக்கும் போது, இன்றும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடை பெற்று வருகின்ற ஆடு, கோழி, மாடு, பன்றி போன்ற உயிரினங்களைப் பலிகொடுத்து அவற்றின் குருதியைப் பருகிப் பூசை செய்யும் பூசாரிகளின் சடங்கியல் வழிபாடுகளோடு அவர் கூற இணைத்துக்காட்டி, “பேய் மகளிர் என்போர் உண்மையில் மகளிரே” என்றும் “உணர்ச்சி வெறியால் உந்தப்பட்டு இரத்தம் சிந்திய பிணங்களோடு உறவாடிய பாணர் மகளிர் தொல்குடிச் சமூகத்தில் விளங்கி உள்ளார்” என்றும் கணித்துக் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு புத்தாக்கமே ஆகும். கிரேக்க நாட்டிலும் இத்தகைய சடங்குகள் நிகழ்ந்திருப்பதையும் எடுத்துக்காட்டி உரையாசிரியர் தம் கருத்தை நிறுவுகின்றார்.

ஐந்தாம் பத்திலுள்ள பாடல்களில் இடம்பெறும் விறலியர் பற்றி விளக்கும் உரையாசிரியர் இந்நூலில் ஆங்காங்கு இடம்பெற்றுள்ள பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை போன்ற ஆற்றுப்படைப் பாடல்கள், உண்மையில் ஆடல்பாடல்களோடு கலைஞர்களால் மன்னர்களின் நாளோலக்கங்களிலும் ஊரின் மன்று களிலும் உள்ள திறந்தவெளி அரங்குகளிலும் ஆடிப் பாடப்பட்டு வாய்மொழியாக வழங்கிவந்து, பிற் காலத்தில் எழுத்துருப்பெற்றன என்று எடுத்துரைத் திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும். தொகை நூல் பாடல்கள் வாய்மொழிப் பாடல்கள் அல்ல என்று தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் தமிழறிஞர்களின் இடையில் முனைவர் கரு.அழ.குணசேகரன் உண்மையை நிறுவ முயன்றுள்ளது பாராட்டிற்குரியதாகும்.

பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் சில சேரமன்னனின் புகழைப் பாடும்போது மிகைப் படுத்திப் பாடுகின்றன என்பதனையும் உரையாசிரியர் (ப.188) எடுத்துக்காட்டியிருப்பது அவரது நடுவு நிலை மைக்கும் கூர்த்த பார்வைக்கும் சான்றாக அமைகின்றது. ‘சங்க காலம் ஒரு பொற்காலம்’ என்னும் கனவைப் பொய்ப்பிக்கும் வண்ணம் சங்ககால மன்னர்கள் பகைவர்கள் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்நாடுகளின் நீர்நிலை ஆதாரங்களையும் வயல் களையும் அழித்து ஊர்களைக் கொள்ளையிட்டு அவற்றைத் தீக்கிரையாக்கி வெற்றி கொண்ட வரலாற்றுத் தடயங்களையும் உரையாசிரியர் ஆங்காங்கே சுட்டிக் காட்டுகின்றார் (பக். 189-190, 200).

கபிலரின் பெயரால் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் குறித்து உரையாசிரியர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கபிலர் அந்தணர் மரபில் தோன்றிய புலவர்; பாரியின் உற்ற நண்பர்; அவன் மறைவுக்குப் பிறகு அவர் சேர மன்னனான செல்வக்கோ வாழியாதனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்றார் என்பதனைப் புறநானூறும் பதிவு செய்துள்ளது. கபிலர் அந்தணராக இருப்பினும், பாணர்களின் மரபை அடியொற்றியே பாடிச் செல்கின்றார். ஆயினும் கபிலர் பாடிய பாடல்களில் பாணர்கள் குறித்த விரிவான, விளக்கமான பதிவுகள் இல்லை. வேதநெறி மேலோங்கிச் செல்வாக்குப் பெறத் தொடங்கியதும் வேதம் வல்லார்களின் பாடல்களின் மூலம் தாங்கள் புனிதப்படுத்தப்படுவதாகத் தமிழ் மன்னர்கள் கருதத் தொடங்கினர். அத்தகு சூழலில் பாணர்களின் வாய் மொழி மரபுப் பாடல்கள் தேவையற்றுப் போயின என்று உரையாசிரியர் பதிவு செய்திருப்பது (ப.215) ஒரு நுட்பமான பார்வையாகும். பதிற்றுப்பத்திலும் புறநானூற்றிலும் உள்ள அந்தணர்கள் எவ்வளவு செல்வாக்குடன் பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்தனர் என்பதனைத் தெளிவாக்குகின்றன.

அரிசில் கிழார் பெயரால் பதிவு செய்யப்பட்டுள்ள எட்டாம் பத்திலுள்ள பாடல்களில் சில, வைதிக மரபை ஏற்றுப் பதிவு செய்துள்ளன. ஊழிக்கால வெள்ளம் பற்றிய சிந்தனை வைதிகச் சார்புடையது (பாடல் 72) என்று உரையாசிரியர் கருதுகின்றார். ஆழிப் பேரலையை (சுனாமி) மிக அண்மைக்காலத்தில் சந்தித்த தமிழகம் ஊழி வெள்ளம் பற்றிய சிந்தனையைக் கொண்டிருந்ததாகவும் கருத இடமுண்டு. அதனை ஆரியர் தமிழகத்தில் நாட்டுப்புறங்களில் மகளிர் வாயால் ஒலி எழுப்பிப் (குலவை போட்டு) பாடி ஆடும் ஆட்டங்கள் பழந்தமிழ்நாட்டில் விறலியர் ஆடிய குரவைக் கூத்தின் எச்சமாகும் என்று உரை யாசிரியர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது. சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் வர்க்க முரண்பாடு இருந்ததாக உரையாசிரியர் எடுத்துக்காட்டியிருப்பது (ப.260) மேலும் ஆராயப்பட வேண்டிய ஓர் அரிய புதிய சிந்தனையாகும். அதே போன்று இன்றும் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இறந்தோர் பிணத்தைச் சுற்றி நின்றுகொண்டு வீரத்தை, விருந்தோம்பும் பண்பை, உற்றார் உறவினர்களுக்கு ஆதரவாக அவர் வாழ்ந்த வாழ்க்கையை நினைவு கூர்ந்து இயல்பாகப் பொங்கி எழும் மாரடிப்புப் பாடல்கள் போர்க்களத்தில் இறந்து பட்ட வீரர்களின் நினைவைப் போன்று விறலியர் ஆடிய துணங்கைக் கூத்தின் தற்கால வடிவம் என்று அவர் சுட்டிக்காட்டியிருப்பதும் புதிய சிந்தனையாகும்.

உரையாசிரியர் பதிற்றுப்பத்தின் பாடல்களின் இறுதியில் குறிக்கப்பட்ட தூக்கு, வண்ணங்கள் குறித்துச் சிந்தித்துச் சில புதிய கருத்துகளை முன் வைத்து உள்ளார். “தூக்கு” தாளத்தைக் குறிப்பதாகும். தாள வகைகளே சந்த வகைகளைத் தீர்மானிக்க வல்லமை பெற்று விளங்கும். தூக்கு என்பது தாளத்தை இசை யாசிரியர் பாடும்போது எண்ணிக் கணக்குச் செய்யும் பொருட்டு மாத்திரை அளவுகளைக் கைகளால் அசைத்துப் பாடுவது இயல்பு. மேலும் தூக்கு என்பது நான்கு ஐந்து அடிகளாக அமைவதைக் குறிப்பதாகும்... மன்னன் முன்னிலையில் பாடப்பட்ட இப்பாடல்கள் தாளக்காரர்களும் ஆட்டக்காரர்களும் ஒருங்கிணைந்து துணை செய்ய நிகழ்த்தப்பட்ட நிகழ்த்துகலை வடிவத்தில் வெளிப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட பாடல் களாக அமைந்திருக்க வேண்டுமென்று உய்த்துணர முடிகின்றது (பக். 306-307) என்கின்றார். இப்பகுதியும் பதிற்றுப்பத்துப் பற்றிய புதிய வெளிச்சத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றது.

பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பதின்மரைப் பற்றிப் பத்துப்புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு என்னும் மரபுவழிச் சிந்தனையில் நின்று உரையெழுதும் இவ்அறிஞர் மரபுவழிச் சிந்தனை களாக முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாமல் அவற்றை ஆங்காங்கே குறிப்பாகத் தொட்டுக்காட்டிக்கொண்டு செல்கின்றார். ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு புலவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பினும், அப்பாடல் களின் நடையில் சொல்லாட்சியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறந்த வேறுபாடுகள் இல்லை என்பதனைப் பதிற்றுப்பத்தினை நுணுக்கமாகப் பயில்வோர் உணர்வர். மேலும் எல்லாப் பாடல்களும் ஒரு பெருவேந்தனைப் பாடியனவாகவும் அமைய வில்லை. பெரும்பாலான பாடல்களின் இனக்குழுச் சமுதாயத் தலைவர்களின் பெருமையைப் பறைசாற்று வனவாகி அமைந்துள்ளன. இவற்றை உரையாசிரியர் சுட்டிக் காட்டியிருப்பது போற்றத்தக்கதாக உள்ளது.

புறநானூற்றுல் இடம்பெற்றுள்ள சேரமன்னர் களில் சிலர் பதிற்றுப்பத்தில் இடம்பெறவில்லை. குமட்டூர்க் கண்ணனார் (இரண்டாம் பத்து) பாலைக் கௌதமனார் (மூன்றாம் பத்து) காப்பியாற்றுக் காப்பியனார் (நான்காம் பத்து) காக்கை பாடினியார் நச்செள்ளையார் (ஆறாம் பத்து) ஆகிய பதிற்றுப் பத்துப் புலவர்கள் சிறப்பித்துப் பாடிய சேர மன்னர் களைப் பற்றிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெறாமையும் வியப்பளிக்கின்றது.

சங்க இலக்கியம் ஓர் ஆழ்கடல்; அதனுள் மூழ்கி மூழ்கிப் புதிய சிந்தனைகள், கருத்தாக்கங்கள், முரண்கள் சிலவற்றைத் தன் பதிற்றுப்பத்தின் புத்துரை மூலம் பேராசிரியர் முனைவர் கரு.அழ. குணசேகரன் எடுத்துக் காட்டியுள்ளார். இதனையொத்த ஆய்வுகள் தொடர்ந்து வரும்போதுதான் செம்மொழித் தமிழின் உள்ளார்ந்த தன்மையை உலகம் அறிந்து அவற்றைப் போற்ற இயலும். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பண்டைத் தமிழிலக்கியங்களைக் கற்றும் கற்பித்தும் வந்த யான் இவ்வுரையினைப் படித்துப் பேரின்பம் எய்தினேன்; பெருமிதம் கொண்டேன். உரையாசிரியர் தொடர்ந்து இதுபோன்ற நூல்களை ஆக்கிக் கொடுத்து நம்மை மகிழ்விப்பார் என்று நம்புகின்றேன்.

பதிற்றுப் பத்து

மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்

உரையாசிரியர் : முனைவர் கரு.அழ.குணசேகரன்

வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

விலை : ரூ.170/-

Pin It