“வரலாறெனும் கடவுளின் தேர்ச் சக்கரங்கள் தோற்றவர்ப் பிணங்களின் மீதுதான் ஏறிச் செல் கின்றன” என்பது எங்கெல்ஸின் கூற்று. இக்கூற்று எந்த நாட்டின் வரலாறெழுதியலுக்குப் பொருந்து கிறதோ, இல்லையோ இந்திய வரலாறெழுதியலுக்கு முற்றிலும் பொருத்தமான கூற்று. ஏனென்றால் நவீன காலத்தில் நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் நேரடி ஆதிக்கம் ஒழிந்து விட்டாலும், இன்றும் நமது வரலாறு குறித்து ஏகாதிபத்தியவாதிகள், அவர்களது அடிவருடிகள் உருவாக்கிய கருத்துப் படிமங்களே நம் சிந்தனையில் நிறைந்துள்ளன. சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் போராடிய, போராடும் நம் மக்களின் பிணங்கள் மீதுதான் அவர்கள் வரலாற்றுச் சக்கரத்தை ஓட்டிச் செல்கின்றனர்.

romila_267தற்காலத்தில் நமது இளைஞர்கள் வரலாறு என்னும் படிப்புத் துறையை அவ்வளவாக விரும்பு வதில்லை. அதே வேளையில் வரலாறு குறித்து எண்ணற்ற பொய்மையான கருத்துகளில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இது ஒருபுறம் என்றால், மறுபுறம் தீவிர சமூக அக்கறை கொண்ட இளைஞர்களிடம் கூட ‘இந்தியச் சமூகம் மாறாத் தன்மை கொண்டது’, ‘இந்தியச் சமூகம் முன்னேற்றம் அடையாமல் இருப் பதற்கு அதன் சாதிய சமூக அமைப்பு மட்டுமே காரணம்’ போன்ற கருத்துப்படிமங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய கருத்துப் படிமங்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது ரொமிலா தாப்பரின் ‘வரலாறும் வக்கிரங்களும்’ (The Past and Prejudice) என்ற நூல்.

டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, சுபேசன் சர்க்கார், ராகுல்ஜி, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்ற தலைசிறந்த ஆய்வாளர்களின் நூல்களை மறுபதிப்புகளாகவும், புதிய வெளியீடுகளாகவும் வெளியிட்டு வரும் என்.சி.பி.எச்., அந்த வகையில் இந்திய வரலாறெழுதியலில் தோன்றிய வக்கிரமான கண்ணோட்டங்களின் தோற்றுவாயையும், சாரத் தையும், அவற்றின் போலித்தன்மையையும் விளக்கும் ‘வரலாறும் வக்கிரங்களும்’ நூலையும் மறுபதிப்பு செய்துள்ளது. இந்நூல் எழுபதுகளில் இந்திய வரலாறெழுதியல் குறித்து எழுந்த சர்ச்சையில் ரொமிலா தாப்பரின் பங்களிப்பாகும். வானொலிச் சொற்பொழிவாக ஆற்றப்பட்ட உரையைத் தாப்பரிட மிருந்து தி.ஜா.ர. மூலம் பெற்று நா.வானமாமலை ‘ஆராய்ச்சி’ இதழில் முதன்முதலாகத் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். பின்னர்தான் NBT ஆங்கிலத்தில் வெளியிட்டது. இப்படி அக்காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகின் ஆர்வத்தை ஈர்த்தது தாப்பரின் இந்நூல்.

இந்திய வரலாறெழுதியலின் வரலாறு என்பது நவீன கால இந்தியச் சமூக வரலாற்றில் ஒரு பகுதி யாகும். அண்மைக்காலச் சமூகத்தில் தோன்றிய முரண்பாடுகளும், போராட்டங்களும் இந்தியாவின் பழைய வரலாறு குறித்த ஆராய்ச்சியிலும் பிரதி பலித்தன. இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவன அலுவலர்களும், கிறித்துவ மதப்பரப்புரையாளர்களும் தங்களின் நடைமுறைத் தேவையின் பொருட்டு இந்தியா பற்றிய வரலாற்று ஆராய்ச்சியைத் தொடங்கி வைத்தார்கள்.

இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றிய வணிக நிறுவன அலுவலர்களுக்கு இந்தியாவில் வரிவசூல் செய்யவும், குற்றவியல், உரிமையியல் தகராறுகளைத் தீர்க்கவும் இந்தியச் சட்டமுறை, சமூக வழமை குறித்து அறிந்துகொள்வது உடனடித் தேவையாகிறது. இதற்காக மனுஸ்மிருதி முதலான நூல்களைக் கற்றுக்கொள்ள வடமொழியைப் பயின்றனர். கிறித்துவ மதப்பரப்புரையாளர்கள் மதத்தைப் பரப்ப, இந்தியச் சமூகத்தின் வழிபாட்டு மரபுகள் குறித்துக் கற்றுக்கொள்வது தேவையாகியது. இத் தேவைகளின் பொருட்டு வடமொழியை மட்டு மல்லாமல் வட்டார மொழிகளையும் கற்றனர்.

வடமொழிக்கும், கிரேக்க மொழிக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டு வியந்து நிறுவன அலுவலர் களும், மதப்பரப்புரையாளர்களும் முதலில் இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம் பற்றிய கருத்தாக்கத்தைத் தோற்றுவித்தனர். பின்னர் வடமொழியின் அமைப் பிலிருந்து வேறுபட்ட சுதேசிய மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சியின் விளைவாகத் திராவிட மொழிக் குடும்பம் குறித்த கருத்தாக்கத்தையும் தோற்றுவித்தனர். இக்கருத்தாக்கங்கள் வழியே தான் ஆரிய - திராவிட இனவாத வரலாற்றுக் கொள்கையை வெளியிட்டனர்.

ஆரிய இனவாத வரலாறெழுது கொள்கையின் படி இந்திய வரலாறு என்பது அறிவிலும், பண் பாட்டிலும் ஆங்கிலேயர்களின் பூர்வீக சகோதரர் களான ஆரியர்கள், அநாகரிக பூர்வக்குடிகளான திராவிடர்களை வென்றடக்கி, நாகரிகமயப்படுத்தி யதிலிருந்து தொடங்குகிறது; ஆரியர்கள்தான் உயர்வான இந்தியப் பண்பாட்டையும், இந்து மதத்தையும் உருவாக்கினார்கள். அவர்கள் சாதி முறையின் மூலம் தங்களின் இனத்தூய்மையைப் பேணிக் கொண்டனர். பிராமணர்கள் உள்ளிட்ட முதல் மூன்று வருணத்தார் ஆரியர்கள், கீழ்ச்சாதிகள், பழங்குடிகள் முதலானோர் திராவிடர்கள் என்று பட்டியலிடப்பட்டனர். இக்கருத்துகளைப் பழமை வாத இந்திய தேசியவாதிகள் இறுகப் பற்றிக் கொண்டனர். இந்து மதமும், அதன் வருணக் கோட்பாடு ஆகியவற்றின் புத்துயிர்ப்பில்தான் இந்தியாவிற்குக் கதிமோட்சம் உள்ளது என்னு மளவிற்கு இனவாதம் அவர்களைப் பிடித்தாட்டியது.

இதே வேளையில் சாதிய முறையையும், இந்து மதத்தையும் எதிர்த்த பூலே, அயோத்திதாசர், பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகள் இக்கொள்கையைத் தலைகீழாக்கினார்கள். ஆரியர்கள் அந்நியர்கள்; அவர் களேதான் இந்தியச் சமூக முறைகளின் தீமைகள் அனைத்திற்கும் பொறுப்பு. ஆகவே பிராமணர் களையும், இந்து மதத்தையும் ஒழித்தால்தான் சமூக மாற்றம் ஏற்படும் என்று வாதாடினார்கள். இவ்வாறு ஏகாதிபத்தியவாதிகள் அவர்கள் நன்மைக்காக உருவாக்கிய கொள்கைகள் தேசியவாதிகள், சீர்திருத்த வாதிகள் கொள்கைகளையும், செயல்களையும் உருவாக்குமளவுக்குச் செல்வாக்கு செலுத்தியது. இன்றும்கூட இக்கருத்துப் படிமங்களைக் கைவிட்டு வரலாற்றை அறிவியல்பூர்வமாகக் கற்றுக் கொள்வது நமக்கு வெகுசிரமமாய் இருக்கிறது.

இனவாத வரலாற்றுக் கொள்கையை மறுக்கும் ரொமிலாதாப்பர் சான்றுகளின் வழி தூய்மையான இனமொன்று இருக்க முடியாது என்பதற்கும், மொழிகளுக்கும், இனத்திற்கும் உறவு சிக்கலானது என்பதையும், இனப்போராட்டங்களல்ல வரலாற்றை உருவாக்குவது, மக்களின் பொருளாதார உற்பத்தி முறைகள்தான் வரலாற்றை உருவாக்குகிறது என்ப தையும் சிறப்பாக விளக்கியுள்ளார். இனவாத வரலாற்றுக் கொள்கை நம் சமூக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஏகாதிபத்தியத்தையும், அவர்களது அடிவருடிகளையும் கண்டுகொள்வதற்கு தடையேற்படுத்துகிறது என்று காட்டியுள்ளார்.

இனவாத வரலாற்றுக் கொள்கையைப் போன்றே, ‘மாறாத இந்தியச் சமூகம்’, ‘இந்தியப் பண்பாடு ஆன்மிக வயப்பட்டது’, ‘கீழ்த்திசை ஏதேச்சாதிகாரம்’ போன்ற வரலாறெழுதியல் கொள்கைகளின் தோற்று வாய்களையும், அவற்றின் உருமாற்றத்தையும் ‘வரலாறும் வக்கிரங்களும்’ என்ற நூலின் முதல் கட்டுரையில் விளக்குகிறார். அடுத்த இரண்டு கட்டுரைகளில் மானிடவியல், தொல்லியல் ஆய்வு களின் ஊடே இந்தியச் சமூக வளர்ச்சி குறித்துப் புதிய ஆய்வுகளின் திசை வழியே கோடிட்டுக் காட்டுகின்றார்.

இந்திய வரலாறெழுதியலின் வரலாற்றைக் கற்றுக்கொள்வதின் ஊடேதான், மக்களுக்குத் தேவையான அறிவியல் பூர்வ வரலாற்றாய்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வகையில் இந்நூல் வெளிவந்த பின் ‘Early India’ உள்ளிட்ட பல நூல்களை ஆங்கிலத்தில் தாப்பர் வெளியிட்டு உள்ளார். அவற்றையும், இந்திய மார்க்சிய வரலாற்றாய் வாளர்களின் நூல்களையும் கற்றுக்கொள்ள இந்நூல் உத்வேகமளிக்கும். இந்நூல் இந்திய வரலாற்றைக் கற்றுக் கொள்வதற்கு ஒரு தொடக்க நூலும், கையேடுமாகும்.

வரலாறும் வக்கிரங்களும்

ஆசிரியர் : ரொமிலா தாப்பர்

தமிழில் : நா.வானமாமலை

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.35.00

Pin It