சொல்லாட்சியும் வரையறையும்

“வட்டார வரலாறு” என்னும் சொல்லாட்சி விவாதத்திற்குரியதாக உள்ளது. ‘உள்ளூர் வரலாறு’ என்றும் சொல்லலாம். ‘தல வரலாறு’ என்றும் கூறலாம் என்கிறார் அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன். சில சமயங் களில் வெவ்வேறான இரண்டு மொழிகளில் நேர் சொல் லாட்சிகள் கிடைப்பதில்லை. மொழிகளுக்கிடையில் மொழியாக்கம் செய்யமுடியாத கூறுகள் உள்ளன என்பதை நிரூபிக்கும் சொல்லாட்சியாகவே வட்டார வரலாறு அமைந்துள்ளது. எடுத்துக் கொள்ளும் கருத் தினத்திற்கேற்ப நம்மொழியில் கலைச் சொல்லாக்கம் செய்வதே நல்லது. இந்நிலையில் ‘Local History’ என்பதற்கு ‘வட்டார வரலாறு’ என்று இக்கட்டுரையில் வரையறுத்துக் கொள்ளலாம்.

வரலாறு எழுதுதல்

bakthavathsala_bharathi‘வரலாறும் வழக்காறும்’ என்னும் தலைப்பிலான தம் நூலில் ஆ.சிவசுப்பிரமணியன் பின்வருமாறு கூறுகிறார். “தமிழர்களாகிய நமக்கு நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. கிறித்துவுக்கு முந்தைய காலத்திலேயே எழுத்து வடிவம் பெற்றுத் திகழ்ந்த மொழி தமிழ்மொழி. ரோம், கிரேக்கம் போன்ற தொன்மை நாகரிக நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த சிறப்பு நமக்குண்டு. ஆயினும், நம் வரலாறானது சமூகம் சார்ந்த வரலாறாக இன்னும் எழுதப்படவில்லை. வரலாறு என்பது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, தன்னிகரில்லாத தலைமக்களை மையமாகக் கொண்டே இன்றுவரை நோக்கப்படுகிறது. இதற்கு ஓர் அடிப்படைக் காரணம், நமக்கு வரலாற்றுப் பாரம்பரியம் இருந்தும், கணக்கற்ற வரலாற்றுச் சான்றுகள் இருந்தும் நமது வரலாற்று வரைவிய.ல் என்பது அய்ரோப்பிய வரலாற்று அறிஞர்களால் உருவாக்கப் பட்டமைதான்” (ஆ.சிவசுப்பிரமணியன் 2010 : 19)

கிரேக்க நாகரிக காலத்திலிருந்தே ‘வரலாறு எழுதுதல்’ தொடங்கிவிட்டது. தமிழகத்தில் நான்கு வகை மன்னர்களும் வரலாறுவழி அறியப் பெற்றுள்ளனர். சீறூர் மன்னர், முதுகுடி மன்னர், குறுநில மன்னர், வேந்தர் ஆகியோர் பாண் மரபினருக்குத் தானங்கள் வழங்கித் தம் பெருமைகளைச் சங்க இலக்கியங்களில் பதிவு செய் துள்ளனர். தமிழ்ச் சூழலில் பண்டை வரலாற்றைக் கூறும் ஆவணங்கள் பலவாக இருந்தன. அவற்றில் புராணங்கள், இலக்கியங்கள், கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள், நாணயங்கள், செப்பேடுகள், சுவடிகள், பானை ஓடுகள் போன்றவை முக்கியமானவை.

இந்தியாவில் ஆங்கில ஏகாதிபத்தியம் 1757இல் தொடங்கி 190 ஆண்டுகளுக்குப் பின் 1947இல் முடிவுக்கு வந்தது. இக்காலகட்டத்தில் இந்திய வரலாறு ஏகாதிபத்திய சார்பு நிலையில் எழுதப் பெற்றது. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புதைபொருட்கள், பிறநாட்டு வணிகர்களின் குறிப்புகள், மதகுருமார்களின் குறிப்புகள், நிர்வாகத்தினரின் கையேடுகள், உள்ளூர்க் குறிப்புகள் போன்றவையும் வரலாற்றுக்கான ஆதாரங்களாக அமைந்தன.

தொடக்கத்தில் நிகழ்வுகளையும் செய்திகளையும் கால வரிசையில் உண்மைத் தன்மை மாறாமல் விளக்குவதே வரலாறு எனப்பட்டது. பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ராங்கே, இங்கிலாந்து வரலாற்றாசிரியர் ஆக்டன், கார்லைல் போன்றோர் இத்தகைய அணுகுமுறையில் வரலாற்றை எழுதினார்கள். ஆங்கிலக் காலனியவாதமானது “இந்தியதேசம்” என்ற பரந்த எல்லையை முதன்முதலாக உருவாக்கியதுடன், அது மாகாணம், பிராந்தியம், வட்டாரம் என்னும் வரிசையில் நுண்ணிய நிலப்பகுதிகள் வரை ஊடுருவித் தன் இருத்தலை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டது.

நிகழ்வுகள் எப்படி நடந்தனவோ அப்படியே விவரிப்பதுதான் வரலாற்று ஆசிரியரின் கடமை எனத் தொடக்கத்தில் கருதினார்கள். அக்காலத்தில் அரசர்களின் படை பலம், படையெடுப்புகள், போர் முறைகள், வெற்றி வாகைகள், குளம் வெட்டுதல், சாலை அமைத்தல், கோயில் கட்டுதல், சமயச் செயல்பாடுகள், ஆட்சிமுறை, தானம் வழங்குதல் போன்றவை வரலாற்றின் முக்கிய உள்ளீடாக இருந்தன. இதனால் பல காலம் வரையில் அரசர் வரலாறே வரலாறு எனப்பட்டது. இத்தகைய வரலாறே கல்வெட்டு களிலும் இலக்கியங்களிலும் பதிவாயின.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டார்கள். இந்தியாவைப் புரிந்துகொள்ளவும் இந்தியர்களின் மனதில் தமது மேலாண்மையை நிறுவவும் தீவிரமாகச் செயல்பட்டார்கள். அதற்குத் திட்டமிட்ட அறிவுநிலை சார்ந்த செயல்களை இந்தியா முழுவதும் மேற் கொண்டார்கள். அவற்றில் முக்கியமான எட்டுச் செயல் திட்டங்கள் வருமாறு:

1.     இந்தியா முழுவதிலும் பயணம் செய்து நேரில் கண்டுணர்ந்தவற்றைப் பதிவு செய்தல்.

2.     இந்து மக்களிடமும் பிற சமுதாயத்தாரிடமும் கிறிஸ்துவத்தைப் பரப்பும் பணியைச் செய்தல்

3.     பூர்வீக மக்கள், வளமான நிலம், தொழில் முதலிய வற்றை மதிப்பாய்வு செய்தல்

4.     கணக்கெடுப்பு முறை (மக்கள் தொகைக் கணக் கெடுப்பு) மாவட்டக் கையேடு தயாரித்தல் போன்றவை

5.     அருங்காட்சியக முறையை உருவாக்குதல்

6.     கண்காணிக்கும் முறையை மேற்கொள்ளுதல்

7.     இந்திய தேசத்துக்கான விரிவான வரலாற்றை எழுதுதல்

8.     கல்விப்புலம் சார்ந்த ஆய்வுமுறைகளை உருவாக்குதல்

இங்கு வரலாறு எழுதுதலை மட்டும் கவனிப்போம். இதனை மூன்று கட்டமாகச் செய்தார்கள். முதற்கட்டமாக 1770களில் மேற்கு வங்கத்தில் ‘விசாரணைகள்’ என்னும் வகையில் நிலத்தீர்வை, வரிகள், வட்டார வரலாறு தொடர்பான விசாரணைகள் நடந்தன. அடுத்த கட்டத்தில் இந்தியப் பண்பாடு, நாகரிகம் தொடர்பான வரலாறு எழுதுதல் மேற்கொள்ளப்பட்டது. அலெக்சாண்டர் டவ், ராபர்ட் ஓர்ம், சார்லஸ் கிராண்ட், மார்க் வில்க்ஸ், ஜேம்ஸ் மில், ஜேம்ஸ் டாட் போன்றவர்கள் இத்தகைய பணியினை மேற்கொண்டார்கள். மூன்றாம் கட்டத்தில் அனைவருக்கு மான எளிய வரலாறுகள் எழுதப்பட்டன. எனவே நம் நாட்டு வரலாறு என்று நாம் கற்றுக் கொண்டிருப்பவை ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு ஆங்கிலேயர்கள் என்ற வென்றவர்களால் எழுதப்பட்ட தோற்றவர்களின் வரலாறு ஆகும்.

விடுதலைக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் தேசியவாத அணுகுமுறையில் இந்திய வரலாற்றினை அணுக முற்பட்டனர். அடுத்து, இந்திய வரலாற்றியல் ஆய்வுகளில் 1960களின் இறுதியில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது எனலாம். மிகத் தெளிவான மாற்றம் 70களில் தோன்றியது (சம்பகலட்சுமி 1987 : 3). மன்னராட்சி முறைகளையும் அரசியல் வரலாற்றையும் வண்ணனையாக எடுத்துரைப்பதிலிருந்து விலகி டி.டி. கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப் இன்னும் சிலர் புதிய சிந்தனை முறைகளையும் கருத்துருவாக்கங்களையும் ஏற்படுத்தினார்கள். அரசியல் வரலாறு என்பதிலிருந்து விலகி சமூக வரலாற்றையும் பொருளாதார வரலாற்றையும் ஆராயத் தொடங்கினார்கள். இந்நிலையில் இந்திய வரலாறானது ‘காலனியவாத வரலாறு’ எனத் தொடங்கி பின்னர் அது ‘தேசியவாத வரலாறு’ என்பதாக மாறி இரண்டு தனித்த கண் ணோட்டங்களில் வளர்ச்சி பெற்றது.

தென்னிந்திய வரலாற்றியல் இதே கால கட்டத்தில் அமெரிக்க வரலாற்றறிஞர்களின் அணுகுமுறைகள் புதிய வெளிச்சத்தைக் கொண்டுவந்தன. புகழ்பெற்ற அமெரிக்க வரலாற்றாசிரியர் பர்ட்டன் ஸ்டீயின் என்பவரும் அவரது வழிவந்த கென்னத் ஹால், ஜார்ஜ் ஸ்பென்சர், டேவிட் லட்டன் ஆகிய அறிஞர்களும் மேற்கொண்ட ஆய்வுகள் சமூகவியல், மானிடவியல் அணுகுமுறைகளையும் ஏற்றுக் கொண்டவை. அரசியல் வரலாறு என்பதிலிருந்து விலகி சமூக வரலாறு, பொருளாதார வரலாறு ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் தந்தனர். ஊக வரலாற்று அணுகுமுறையிலிருந்து முற்றிலும் விலகி ஆணித்தரமான, அழுத்தமான முடிவுகளை நோக்கி இவர்களுடைய ஆய்வுகள் சென்றன.

அடுத்த அணியாக உருவெடுத்தவர் ஜப்பானிய வரலாற்றாசிரியர் நொபுரு கராஷிமா. இவர் தென்னிந் தியாவில் கிடைக்கக்கூடிய அதிக எண்ணிக்கையிலான கல்வெட்டுத் தரவுகளை மையமிட்டு ஆய்வுகளை மேற் கொண்டார். புள்ளியியல் அணுகுமுறையில் ஒவ்வொரு பகுதியிலும், தனித்தனியான காலகட்டத்தை முன்வைத்து ஆராய முற்பட்டார். நொபுரு கராஷிமா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அணுகுமுறையால் குறிப்பிடத்தக்க நுண்ணாய்வுகள் நிகழ்த்தப்பட்டன.

மேற்கூறிய மாற்றங்களின் ஊடாகத் தென்னிந்திய வரலாற்றியல் ஆய்வுமுறை மாறத் தொடங்கியது. கால வரிசையிலும் வண்ணனை நிலையிலும் அமைந்த பழைய வரலாற்றியல் முறையிலிருந்து விலகிய இப்புதிய வகை ஆய்வுகள் பகுப்பாய்வு சார்ந்து அமைந்தன. சமூக வரலாறு, பொருளாதார வரலாறு ஆகிய புதிய தளத்திற்கு நகர்ந்தன. இந்திய வரலாற்றில் தென்னிந்திய வரலாறு என்பதற்கான முக்கியத்துவம் இல்லாத போக்கும் மாறத் தொடங்கியது. விந்திய மலைக்குத் தெற்கே தீபகற்ப இந்தியா என்ற ஒன்று உள்ளது, அதற்கெனத் தனித்துவமான வரலாறு ஒன்று உண்டு என்று உணரப்படாத போக்கு வடஇந்திய வரலாற்றாசிரியர்களிடம் இருந்தது. இத்தகைய ஒற்றை நிலையிலான பொதுமையாக்கக் கருத்து நிலையில் புதிய போக்கு ஏற்பட்டது. இடம், காலம் சார்ந்து தென்னிந்தியப் பகுதிகளுக்கான தனித்துவங்களைக் காண வேண்டுமென்ற அணுகுமுறை அயலவர்களின் ஆய்வு முடிவுகளால் அவர்களிடம் மெல்ல வலுப்பெற்றது.

1965களிலேயே டி.டி.கோசாம்பி இந்திய வரலாற்றை ஒற்றைத் தளத்தில் வைத்துப் பொதுமைப்படுத்த முடியாது என்றார். வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபாடுகள் காணப்படுகின்றன என்றார். இதனால் வட்டார ரீதியாக ஆராய வேண்டியதை வலியுறுத்தினார்.

வட்டார வரலாறு

‘வட்டார வரலாறு’ என்பது குறிப்பிட்ட புவியியல் பரப்பு சார்ந்த பிராந்தியத்துக்கான வரலாற்றைக் குறிக்கும். இதில் எண்ணற்ற வரலாற்றுக் கூறுகள் அடங்கியுள்ளன. இத்தகைய வரலாறு இடம் பற்றியதாக இருக்கலாம். முக்கியத்துவம் கொண்ட ஆறு, மலை, குளம் பற்றியதாக அமையலாம். அப்பிராந்தியத்தின் சமூகங்களைப் பற்றிய தாக இருக்கலாம். சமூக நாயகர்கள், வரலாற்றில் இடம் பிடித்தவர்கள், விடுதலை வீரர்கள், மதகுருமார்கள் பற்றியதாக அமையலாம். அப்பிராந்தியத்தின் கோயில், விழாக்கள், சாமிகள், வழிபாட்டு மரபுகள், வீர விளை யாட்டுகள், பிற பண்பாட்டு நிகழ்வுகள் பற்றியதாகவும் இருக்கலாம். அப்பிரதேசத்திலிருக்கும் பழம்பெரும் கட்டடங்கள், அரண்மனைகள், கோட்டைகள், தானியக் கிடங்குகள், சுரங்கப் பாதைகள், பெருவழிச் சாலைகள், நினைவுச் சின்னங்கள் பற்றியதாகவும் இருக்கலாம். இவ்வாறாக இன்னும் பிற வகைகளிலும் அமையலாம்.

இத்தகைய வரலாற்றுக்கான செய்திகள் தனித்த ஆவணமாகக் கிடைப்பதில்லை. மக்களிடம் நினைவில் தேங்கியுள்ள செய்திகள், கேள்வியறிவு, கண்ணாரக் கண்ட புலன்வழிக் கூற்றுகள், பல தரப்பினரிடம் பொதுவில் சொல்லப்படும் விவரங்கள் ஆகியவற்றை வாய்மொழி வரலாற்றுக்கான சான்றாதாரமாகக் கொள்ள வேண்டி யுள்ளது. புலன்வழி அறிவே வாய்மொழி வரலாற்றுக்கு ஆதாரமாகும். இது தலைமுறை தலைமுறையாக வருவது; அனைவராலும் பகிர்ந்து கொண்டிருப்பது; சமூகத்தின் கூட்டு ஞாபகத்தில் பேணப்படுவது; இத்தகைய வாய்மொழிப் பண்பு களைக் கொண்டிருக்கக்கூடிய வழக்காறுகள் வட்டார வரலாற்றை எழுதுவதில் பெரும் பங்காற்ற முடியும்.

பெரும்பாலும் வட்டார வரலாறு பற்றிய ஆய்வுகளில் தொழில்முறை ஆய்வாளர்கள் இன்னும் தீவிரமாக ஈடுபட வில்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு வட்டாரத்திலும் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் தனித்தனியே செயல் படுகிறார்கள். இவர்கள் தொழில்முறை ஆய்வாளர்களாக இருப்பதில்லை. வேறு பணிகளில் ஈடுபடுபவர்களாக, பள்ளி ஆசிரியர்களாக, அரசு அலுவலர்களாக இருக்கிறார். தமிழ்ச் சூழலில் சுவடிகள் தேடுதல், கல்வெட்டுகளைக் கண்டறிதல், பிற ஆவணங்களைத் தேடுதல், கோயில் வரலாற்றை ஆராய்தல் எனத் தமிழ் ஆர்வலர்கள் இதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழாசிரியர்களும் இத்தகு பணிகளில் பெரிதும் பங்காற்றியுள்ளார்.

வாய்மொழிச் சமூகங்கள் அவற்றின் வரலாறுகளை வழக்காறுகளின் வழியாகவே சேமித்து வைத்துள்ளன. தமிழ்ச் சமூகங்களில் எழுத்து மரபு நீண்ட நெடிய மரபாக இருந்தாலும் வரலாற்றோடு தொடர்புடைய புராணங்கள், கதைப்பாடல்கள், பழமரபுக் கதைகள், நாட்டார் கதைகள், பாடல்கள் வழி தம் வரலாறுகளைப் பதிவு செய்து வைத்துள்ளன. பழம்பெரும் வரலாற்றாசிரியர்கள் மரபுச் செய்திகளுக்கும், கர்ண பரம்பரைக் கதைகளுக்கும் உரிய இடம் கொடுத்துள்ளனர். உலகளாவிய நிலையில் பார்க்கும்போது கூட வரலாறு எழுதுவதில் வாய்மொழி வழக்காறுகளுக்கு இன்றியமையாத இடமிருப்பதைக் காண முடிகிறது.

வாய்மொழி வழக்காறுகளில் கதைப்பாடல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வரலாறு எழுதுவதில் இவற்றிற்கு முக்கியத்துவம் உண்டு. இன்று தமிழகத்தில் வழக்கிலுள்ள பல்வேறு கதைப் பாடல்கள் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு நேரடியாகப் பயன்படுபவை. கட்டபொம்மன் கதைப்பாடல்கள், தேசிங்குராஜன் கதை, பொன்னர் சங்கர் கதை, நந்தன் கதை, இராமப்பையன் அம்மானை, கன்னடியன் போர், இரவிக்குட்டிப் போர், மதுரைவீரன் கதை, நல்லதங்காள் கதை, கான்சாகிபு சண்டை, பாஞ்சாலக்குறிச்சி அழிவு சரித்திரம் போன்றவை மக்களின் வரலாற்றைக் கூறுவன வாகும். இவை அந்தந்த வட்டாரத்தின் வரலாற்றை அறி வதற்கான ஏராளமான சான்றாதாரங்களைக் கொண் டுள்ளன.

இன்னும் சில கதைப்பாடல்கள் சமூகஞ் சார்ந்தவை. அண்ணன்மார் கதை, காராளர் அம்மானை, வெங்கல ராஜன் கதை, வலங்கை மாலை போன்ற கதைப்பாடல்கள் தனிப்பட்ட சாதியாரின் வரலாற்றைக் கூறுபவை.

முத்துப்பட்டன் கதை, காத்தவராயன் கதை போன்ற கதைப்பாடல்கள் தனித்தனியான நாட்டார் வீரர்களை முன்னிலைப்படுத்துபவை. இவையுங்கூட சமூக வரலாற்றை மீட்டெடுப்பதற்கு உதவக்கூடியவையே. சமூகங்களுக் கிடையிலான முரண்பாடுகளை அறிவதற்கும் உதவக் கூடியவை. குமரி மாவட்டத்தில் பழமரபுக் கதையை ‘ஐதீகம்’ என்று அழைக்கிறார்கள். பழங்காலத்தில் ஓர் இடத்தில் நடந்த உண்மை தலைமுறை தலைமுறை யாகச் சொல்லி வருவதையே ஐதீகம் என்கின்றனர் (ஸ்டீபன் 2004 : 179); இதனை நாட்டார் வகைமையாகக் கொள்ளுதல் வேண்டும். ஆய்வாளர்கள் பகுத் தாய்ந்து கூறும் ஆய்வு வகைமைகள் உலகனைத்தும் காண்கின்ற வகைமை சார்ந்ததாகும்.

தமிழகத்தில் உரைநடைக் கதைகளில் (யீசடிளந யேசசயவiஎநள) கூட வரலாற்றுச் செய்திகள் பொதிந்துள்ளன. கதைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் போன்றவற்றைக் கவனிக்கு மளவிற்கு உரைநடைக் கதைகளைக் கவனிப்பதில்லை. மக்களிடம் வழங்கும் கதைகளை ஒட்டியே இன்று ஏராளமான வட்டார நாவல்கள் உருவாக்கப் பெற்றுள்ளன. கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ வாய் மொழியிலுள்ள உரைநடைக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதுதான். நீல.பத்மநாபன் எழுதிய ‘தலைமுறைகள்’ நாவலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். கோபல்ல கிராமம் நாவலானது நாயுடு சாதியார் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்த கதையை விளக்க, தலைமுறைகள் நாவல் பூம்புகாரிலிருந்து குமரி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த ஏழூர்ச் செட்டிமார் கதையை விளக்குகிறது.

புராணங்களும் தலபுராணங்களும்

‘வாய்மொழி மரபு’ பெரும்பாலும் ‘மரபார்ந்த வரலாறு’ என்றே கருதப்படு கின்றது. வரலாற்று ஆய்வுகளுக்குத் தகுந்த சான்றாதாரங்களை வாய்மொழி மரபு கொண்டிருக்கிறது. ரிச்சர்ட் டார்சன் என்பவர் உலகளவில் புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியல் அறிஞரும் வரலாற்றறிஞரும் ஆவார். இரு துறைகளிலும் வல்லுநர்; இருதுறைப் பேராசிரியர். இவர் எழுதிய ‘நாட்டார் வழக்காறுகளும் மரபார்ந்த வரலாறும்’ என்னும் நூலில் வழக்காறுகளுக்கும் வாய்மொழி வரலாறுக்கும் உள்ள தொடர்புகளை மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். அவ்வாறே ஜான் வான்சினா என்னும் அறிஞரும் அவரது ‘வாய்மொழி மரபே வரலாறு’ என்னும் நூலில் ஆப்பிரிக்காவின் காங்கோ பகுதியில் உள்ள மக்களின் வரலாற்றினை வாய்மொழி மரபிலிருந்து மீட்டுருவாக்கிக் காட்டுகிறார்.

வாய்மொழி மரபில் எண்ணற்ற வழக்காறுகள் இருந்தாலும் தொன்மங்கள் அல்லது புராணங்கள் மிக முக்கியமானவையாகும். உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு மானிடவியல் அறிஞர் கிளாட் லெவிஸ்ட்ராஸ் வர லாற்றுக்கும் தொன்மத்துக்கும் உள்ள ஆழமான உறவினை வெளிப்படுத்துகிறார். இவரது அணுகுமுறைப்படி நமது புராணங்களில் வரலாற்றுண்மைகள் பொதிந்து கிடக் கின்றன. தொன்மவியல் ஆய்வு முறைப்படி இவற்றை வெளிக்கொணர முடியும்.

புராணம் என்பது “பழமை சான்ற வரலாறு” என்னும் பொருள் பெறும். மணிமேகலையில் முதன்முதலாகப் ‘புராணம்’ என்ற சொல் வருகிறது. புராணம் என்பது ‘பழங் கதையின் வழி வருவது’ என்றும், ‘வழிவழி வரும் மரபு வரலாறு’ என்றும் கூறுவது வழக்கம். மணிமேகலையில் சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதையில் ‘காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான்’ (மணி. 27 : 98-99) என்று வருகிறது. புராணங் களில் 18 புராணங்கள் மகாபுராணங்கள் எனப்படும். இவற்றிற்குத் துணையாய் அமைந்தவை 18 உபபுராணங்கள். மிகவும் பிற்காலத்தில் தோன்றியவை அதிபுராணங்கள் இவையும் பதினெட்டுதான். கி.பி.-7-ஆம் நூற்றாண்டளவில் குப்தர்கள் காலத்தில்தான் வடமொழிப் புராணங்கள் செம்மையும் ஒழுங்கும் பெற்றன என்று வரலாற்றாசிரி யர்கள் கருதுகின்றனர் (மாதவன் 1995: 15)

நான்கு வேதங்களுக்கு அடுத்து ஐந்தாவது வேதமாகக் கருதப்படுவது புராணங்களாகும். புராதனமாக இருந்து வருவதே புராணம் என்பர். புராணம் செவிவழியாக அறியப் பெற்ற வரலாறு. வேதகாலந்தொட்டு மக்களிடம் வழங்கப் பெற்ற கதைகளே புராணங்கள். இந்திய நாகரிகத்தின் கருவூலம் புராணங்கள் எனலாம். இந்தியாவை தரிசனம் செய்யவும், அதன் சமயக் கோட்பாடுகளை அறிந்து கொள்ளவும் புராணங்கள் உதவுகின்றன. இடம், காலம், சமூகம், சமயம், பண்பாடு பற்றிய வரலாறு இவற்றில் பொதிந்து கிடக்கின்றன.

புராணங்கள் புனிதமானவை, கவனத்திற்கெட்டாத காலப் பழமை கொண்டவை. இத்தகைய புராணங்களின் பின்னாளைய நீட்சியாக உருவானவைதான் ‘தல புராணங்கள்’. இவையும் புனிதமானவை. ஆனால் நினைவுக்குட்பட்ட காலப் பழமை கொண்டவை. சிறு வரலாற்றைக் கொண்டவை. தமிழகத்தில் உள்ளூர் வரலாற்றை ஆராய்வதற்குப் பெரிதும் உதவுபவை தல புராணங்கள் ஆகும். சைவ, வைணவ எழுச்சிக்காக ஆழ்வார்களும், நாயன்மார்களும் எழுதிய பக்தி இலக்கியங்கள் சமய உணர்வை வளர்க்க முனைந்தாலும் அவற்றினூடாக உள்ளூர் வரலாறுங்கூடப் பதிவு செய்யப் பெற்றன.

தலபுராணங்கள் சொல்லும் வரலாறுகளில் புனைவுகள் இருப்பினும் அவற்றில் உண்மையில்லை என ஒதுக்கிவிட முடியாது. ஆங்காங்கு வழங்கிய வாய்மொழி வரலாறுகள் பதிகங்கள் வாயிலாகப் பதிவு செய்யப்பட்டன. உள்ளூர் வரலாறு, நகர வரலாறு, நாட்டு வரலாறு எனப் பலவற்றை அறிய இவை உதவுகின்றன. டேவிட் சுல்மன் எழுதியுள்ள ‘தமிழ்க் கோயிற் புராணங்கள்’ என்ற நூலில் தமிழ் மக்களின் ஊர், சமூகம், சமயம் ஆகிய மூன்றோடும் தலபுராணங்கள் எவ்வாறு உறவு பெற்றுப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை விளக்கு கிறார். கிருஷ்ணசாமி 581 புராணங்கள் உள்ளன என்கிறார். ஆனால் கமில் சுவெலபில் 2000 தமிழ்ப் புராணங்கள் உள்ளன என்கிறார்.

தலபுராணங்கள் யாவும் கோயில் எழுந்த ஊர்களின் பண்டைய பெருமையை அறிய உதவும் வரலாற்றாவண மாக உள்ளன. முன்பு பெரு நகரங்களாக இருந்த இடங்கள் இன்று சிற்றூர்களாக மாறிவிட்டதை அறிவதற்குத் தலபுராணங்களே பெரிதும் சான்றாக உள்ளன. எடுத்துக் காட்டாக, ‘பழையாறை’ என்பது ஒரு காலத்தில் பெரிய நகரமாகவும், சோழர்களின் தலைநகரமாகவும் இருந்தது. இந்நகரம் பாண்டியனால் அழிக்கப்பட்ட பின்னர், இன்று அதன் பகுதிகள் ‘பட்டீச்சுரம்’ என்றும் ‘சத்திமுற்றம்’ என்றும் தனித்தனி சிற்றூர்களாக உள்ளன. அன்றைய பழையாறை இன்று இல்லை.

அவ்வாறே, சோழர்களின் தலைநகராய் இருந்த உறையூர் இன்று சிறிய ஊராகக் குறைந்து நிற்கிறது. அன்று திருச்சிராப்பள்ளி நகர் இல்லை. காலத்தால் உறையூர் நகரம் சிறிய ஊராகவும், திருச்சி பெருநகரமாகவும் மாறிய நிலையை அறிய முடிகிறது. மேலும், பேரூர் என்பது ஒரு பெரிய நகரம் என்பது அதன் பெயரிலேயே விளங்குகிறது. ஆனால், அது இன்று ஒரு சிற்றூராக மாறிவிட்டது. அதனருகில் புதிய சிற்றூராக விளங்கிய கோயமுத்தூர் இன்று பெருநகரமாக விளங்குவதைக் காண்கிறோம். அன்று பேரூர்களாக விளங்கிய பழையாறு, உறையூர், பேரூர் ஆகிய நகரங்களின் பழம் பெரும் சிறப்புகளை விளக்கும் வரலாற்று நூல்களாக இத்தல புராணங்கள் விளங்குகின்றன (மாதவன் 1995 : 167-68).

தமிழில் கிடைக்கும் தலபுராணங்களில் மிகுதியான எண்ணிக்கையில் கிடைப்பன சோழநாட்டுத் தல புராணங்கள் ஆகும். கிடைக்கக்கூடிய 142 தலபுராணங் களில் பெரும்பான்மையவை சிவத்தலங்களுக்குரியவை. தமிழ்த் தலபுராணங்களில் மிகப் பழமையானது திருவிளை யாடற்புராணம் ஆகும். இது பாண்டி நாட்டுக்குரியது. இறைவன் 64 திருவிளையாடல்களையும் புரிந்த ஒரே நாடு இப்பாண்டி நாடே.

தமிழ்த் தலபுராணங்களில் மிகுதியான பாடல் எண்ணிக்கை உடைய மிகப் பெரிய புராணம் திருநெல் வேலித் தலபுராணமாகும். 120 படலங்களையும் 6892 பாடல்களையும் கொண்டது (மாதவன் 1995 : 221). மிகச் சிறிய புராணம் திருமூலநகரப் புராணம் 9 சருக்கங்களும் 120 பாடல்களும் கொண்டது.

ஒவ்வொரு நாடும் தேசமும் பல வட்டாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வட்டாரங்களில் உள்ள இடங்கள், ஊர்கள் ஆகியவற்றின் இயற்பெயர்கள் தனிச் சிறப்புடையவை. இந்த வட்டாரங்களில் வாழும் குடிகளின் இனங்களின் சிறப்புப் பெயர்களும்கூட தனிச் சிறப் புடையவை. இவை அந்த வட்டாரத்தின் வரலாறோடு தொடர்புடையவை. ஆகவே தலபுராணங்களோடு ஊர்ப் பெயர்களும்கூட வட்டார வரலாற்றுக்கு உதவுபவையாக உள்ளன.

குடும்ப வரலாறு

வட்டார வரலாற்றை உருவாக்குவதிலும் மீட்டெடுப் பதிலும் ‘குடும்ப வரலாறு’ ஒரு பகுதியாக அமைகிறது. ஒரு வட்டாரத்தின் சமூக அரசியலில் பெரிதும் பங்கு பெற்ற நாயகர்களின் குடும்ப வரலாறு,

அந்த நாயகரின் கால்வழியில் வருகின்ற வம்சாவளியினர், அவர்களின் குலப்பிரிவுகள் போன்றவை இதில் முக்கியத் துவம் பெறுகின்றன. இவ்வாறான வரலாற்று நாயகர்களின் குடும்ப வரலாற்றைத் தேடுவதில் எழுத்து ஆவணங்கள் இருந்தால் அவை உதவக்கூடும். வாய்மொழித் தரவுகளே பெரிதும் உதவ முடியும்.

சில சமயங்களில் குடும்ப வரலாறு என்பது ஒரு தனி மனிதரின் சுயசரிதையாக மாறி நிற்பதையும் காணமுடியும். வரலாற்று நாயகராக விளங்கிய அவருடைய சொந்த சுயசரிதையே கூட அவரது குடும்ப வரலாறாக மாறக்கூடும். மற்றவர்கள் எழுதும் வரைவியலும் (biடிபசயயீhல) குடும்ப வரலாறாகவே கருதப்பெறும். இடம்பெயர்ந்த குடும்பங்கள், குழுக்கள் ஆகியவற்றின் வரலாறு, ஒரு இராணுவ வீரரின் வரலாறு போன்ற வகைகளில் அமையும் விவரிப்புகளும் குடும்ப வரலாறாகவே அமையும். கடிதப் போக்குவரத்து, நாட்குறிப்பு, நிழற்படங்கள், நண்பர்களின் கருத்துகள், அரசுப் பதிவுகள் பிற பதிவுகள் எனப் பல்வேறு வகையான தரவுகள் குடும்ப வரலாற்றுக்கு உதவுபவையாக உள்ளன. ஈழத்தில் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் பெற்றோர் நினை வாகப் பிள்ளைகள் ஒரு சிறு நூலை எழுதி வெளியிடுவது பரவலான வழக்கமாக உள்ளது. 2009 நவம்பரில் நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்றிருந்தபோது இவ் வாறான சில நூல்களை அப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்னிடம் கொடுத்தனர். இன்றுங்கூட வாய்மொழி நினைவுகளே இத்தகைய குடும்ப வரலாற்றை எழுத உதவுகின்றன.

தானாபதிப்பிள்ளை வரலாறு (2005) இப்போது வே.மாணிக்கம் அவர்களால் எழுதப் பெற்றுள்ளது. கட்டபொம்மனின் வலதுகரமாகச் செயல்பட்டவர் தானாபதிப்பிள்ளை. பாளைய ஆட்சி முறையில், வட்டார அளவிலான சமூக உறவுகளில் சாதிகள் / குழுக்கள் மற்ற குழுவினரை முன்வைத்தே தங்களை வரையறுத்துக் கொண்டுள்ளனர். இதனை அறிவதற்குத் தானாபதிப் பிள்ளை வரலாறு ஒரு பயில் களமாக அமைவதைக் காண முடிகிறது.

இனவரலாறு

தமிழகத்தில் ஐந்திணைகளின் தொடர்ச்சியை வரலாறு நெடுக காண முடிகிறது. தமிழகம் ஒரு சிறிய பகுதியாயினும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய புவியியல் கூறுகள் தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் இடம்பெற்றுள்ளன. மலைகளிலும் காடுகளிலும் பல்லாண்டுக் காலம் தனித்தொதுங்கி வாழக்கூடிய முதுகுடிகள், பழங்குடிகள், பழமைச் சமூகங்கள் ஆகியவற்றின் வரலாற்றை ஆராய்வதற்கென மானிடவியலில் உருவாக்கப் பெற்றுள்ள ஒரு தனித்துவமான முறையே ‘இனவரலாறு’ ஆகும். மிகத் தொன்மையான பூர்வ சமூகங்களின் இனவரலாறு எழுதப்பட்டதில்லை. இத்தகு சமூகங்களின் வரலாறுகள் பல்வேறு வடிவங்களில் அவர்களுடைய வாய்மொழி வழக்காறுகளில் மட்டுமே புதைந்து கிடக்கின்றன. ஆனைமலைக் காடர், நீலகிரித் தொதுவர், கோத்தர் போன்ற பல்வேறு தொல்குடிகளின் பூர்வ வரலாறு இன்னும் மாயமாகவே, புதிராகவே உள்ளது.

தொன்மங்கள், பழமரபுக் கதைகள், கதைப் பாடல்கள், நாட்டார் கதைகள் / பாடல்கள், புலப் பெயர்வுக் கதைகள், நாட்டார் புராணங்கள், சொல வடைகள், புதிர்கள், வம்சாவழி வரலாறு, நிகழ்த்துக் கலை வடிவங்கள், வழிபாட்டு மரபுகள், வெளிப்பாட்டு மரபுகள், சடங்குகள் போன்ற எண்ணற்ற வழக்காறுகளில் இத்தொல்குடிகளின் வரலாறு புதைந்து கிடக்கின்றது.

ஒரு வட்டாரத்தின் வரலாற்றை முழுமைப்படுத்திக் காண வேண்டுமானால், அந்த வட்டாரத்தில் வாழக்கூடிய முதுகுடிகள், பழங்குடிகள் ஆகியோரைத் தவிர்த்து ஆராய்ந்துவிட முடியாது. ஏனெனில் தமிழ்ச் சமூகத்தின் மிக நீண்ட அறுபடாத தொடர்ச்சியுடைய மரபில் தொல் குடிகளின் மரபு சாதியச் சமூகம் வரைக்குமான தொடர்ச்சியுடன் நீளுவதைக் காணமுடிகிறது. இன்று சைவத்தின் ஆதிமூலராய் விளங்கும் சிவபெருமான் பழங்குடி மக்களிடம் நாச்சியப்பனாகவும், மலையப் பனாகவும் இருப்பதைக் காண்கிறோம். பழங்குடிகளின் சிவனே இந்திய தேசத்தின் பெருஞ் சமயங்களில் சிவ பெருமானாய்ப் பரிணமித்து இருக்கிறார். இவ்வாறு தொல்குடிகளின் பல்வேறு மரபுகள், நமது பெரும் பண்பாட்டின் எண்ணற்ற தளங்களில் ஊடுருவி கால ஓட்டத்தில் விரிவுபட்டிருப்பதைக் காணமுடிகிறது.

இந்திய தேசத்தின் “பெருமரபு” எனக்கூடிய கூட்டு மரபில் எண்ணற்ற தொல்குடிகளின் “தனிமரபுகள்” வியாபித்திருக்கின்றன (பக்த வத்சல பாரதி 2007 : 21 - 35). ஆதலின், வட்டார ஆய்வுகளில் கூட்டு மரபுக்கும் தனி மரபுகளுக்கும் இடையேயான அறுபடாத தொடர்ச்சியினை ஆராய்வது அவசியமான தாகும். இதில் தொல்குடிகளின் பூர்வ இனவரலாறு முக்கியத்துவம் பெறுகிறது.

சமூக வரலாறு

வரலாறு நெடுக பொருள் உற்பத்தியின் ஊடாகச் சமூகங்கள் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளன. இந்தப் போராட்டத்தின் ஊடாகவே சமூகங்களின் வரலாறு கட்டமைக்கப்படுகிறது என்று மார்ச்சியவாதிகள் தீர்க்கமாக உணர்த்தினார்கள். கூடவே சமூக வரலாற்றின் முக்கியத்துவத்தையும் உணர்த்தினார்கள். வரலாறு எழுதுதல் என்பது வரலாற்றை அறிவதற்கன்று. சமூகத்தை மாற்றியமைக்க வரலாறு எழுதப்பட வேண்டும் என்றார்கள். மார்க்சியத்தில் இக்கருத்தியல் வலுவாக உருவானது. ஆளுவோர் ஆளப்படுவோர் என்ற வர்க்க முரண்பாட்டில் வெகுசன மக்களாகிய ஆளப்படுவோரின் பார்வையில் வரலாறு எழுதும்முறை வலியுறுத்தப்பட்டது. மன்னர்களின் வரலாற்றை நாட்டின் வரலாறாக விவரிக்கும் ‘மேலிருந்து நோக்குதல்’ என்னும் நிலையைப் புறந்தள்ளி விட்டு உழைக்கும் மக்களின் வரலாற்றை முன்னிலைப் படுத்தி ஆராய்வது “மக்கள் வரலாறு” ஆகும். இது ‘அடித்தளத்திலிருந்து எழுதுதல்’ ஆகும்.

இதனை மானிடவியல் அறிஞரும், வரலாற்றறிஞரு மாகிய பெர்னார்டு கான் பின்வருமாறு வரையறுக்கிறார். ரிச்சர்ட் டார்சன் போன்றே இவரும் இருதுறைப் பேராசிரியர். இவர் சொல்கிறார்: Proctological history is the study of the masses, the inarticulate, the deprived, the dispossesssed, the exploited, those groups and categories in the society seen by earlier and more elitist historians, not as protagonistic but as passive, and therefore not a proper historical focus...................... The historians who study from the bottom up have demonstrated the possibility of a more complex and rounded history (cohn 1994 : 39)

‘விளிம்புநிலை மக்கள்’ அல்லது ‘அடித்தள மக்கள்’ எனக்கூடிய சமூக - பொருளாதார நிலையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்கள் குறித்த மாற்று விவாதங்கள் 1970களின் பிற்பகுதியில் தீவிரம் பெற்று 1980களில் அதற்கான தனித்த, முறையான வடிவத்தைப் பெற்றன. ரணஜித் குகா தலைமையில் 1982லிருந்து வெளியான ‘விளிம்புநிலை ஆய்வுகள்’ வட்டார வரலாற்றையும், மாற்று வரலாற்றையும் மையமிட்டு எழுதப் பெற்றவை யாகும்.

“பழைய வரலாற்றுத் தடத்திலிருந்து விடுபட்டு ‘மாற்று வரலாறு’ ஒன்றை உருவாக்கும் காலகட்டத்தில் நாம் உள்ளோம். ‘புதிய வரலாறு’, ‘சாமானியர் வரலாறு’, ‘அடித்தள மக்கள் வரலாறு’, ‘விளிம்பு நிலையினர் வரலாறு’ என்ற வரலாற்றுப் பள்ளிகள் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ளன” (ஆ.சிவசுப்பிரமணியன் 2010 : 20)

தமிழ்ச் சமூகத்தின் நீண்ட வரலாற்றில் அடித்தள மக்கள் இன, மொழி, சமூக, சமய, இசை என்பன போன்ற பல்வேறு தளங்களில் அந்நியப்பட்டு உள்ளனர். பலர் முதுகுடிகளாக மலைகளிலும் காடுகளிலும் வாழ்கின்றனர். பலர் நாடோடிகளாக அலைந்து வாழ்கின்றனர். பலர் அடித்தளச் சாதியாராக சாதி அடுக்கில் ஒடுக்கப் பட்டுள்ளனர்.

விளிம்புக்கு விளிம்பாக, அதிவிளிம்புச் சமூகத்தாராக ஒடுக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவருமே வரலாற்றின் கால ஓட்டத்தில் தங்களின் சமூகப் பெறுமானத்தையும், இருத்தலையும் இழந்து நிற்கின்றனர். இவர்களுக்கான வரலாறு இதுவரை எழுதப் பெறவில்லை. இதனை இனங்கண்டு, மீட்டுருவாக்கம் செய்து, தங்கள் சுயத்தை நினைவு கொள்வதும், மறுநிர்ணயம் செய்வதும் நீண்ட, நெடிய அறுபடாத வரலாற்றைக் கொண்ட தமிழ்ச் சூழலில் தேவையான ஒன்றாகும். இதனை ‘அழிவுமீட்பு இன வரலாற்று வரைவியல்’ என்று மானிடவியலர்கள் வகைப்படுத்துகின்றனர்.

அழிவு மீட்பு இனவரலாறு உள்ளிட்ட மக்கள் வரலாறு யாவும் வட்டார வரைவியலின் கீழ் அமையும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய வரலாறு அறிவுரீதியான வரவேற்புக்குரியது. ஏனெனில் அடித்தள மக்களுடைய இன்றைய தாழ்வின் ரணத்திற்கு நேற்றைய உயர்வு மருந்தாக அமையலாம் அல்லது நாளைய எழுச்சிக்கு ஊக்கமாக மாறலாம். இந்நிலையில் இத்தகைய ‘இனமீட்பு’ வரலாறுகள் தமிழ்ச் சமூகத்தின் நீண்ட வரலாற்றின் ஏற்ற இறக்கங்களைச் சமன் செய்வதற்கும், சமகாலச் சமூக மேம்பாட்டிற்கும் உதவக்கூடியவையாக அமையும்.

இன்று தேவேந்திர குல வேளாளர்கள் சீர் மரபினர் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு புதிய அடை யாளத்துடன் வாழ விரும்புகின்றனர். அதனால் அட்டவணைச் சாதியிலிருந்து தங்களை நீக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

வரலாறு எழுதுவதில் அடித்தளப் பார்வை அவசிய மானது. ராஜராஜன் பெரிய கோயிலைக் கட்டினார் என்பதே வரலாறு. ஆயிரக்கணக்கான உழைப்பாளிகள் அல்லவா கட்டினார்கள்! மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கித் தந்தார் என்கிறோம். இலட்சோப லட்சம் மக்கள் அல்லவா விடுதலைப் போரில் ஈடுபட்டனர். கல்லணை கட்டியது யார்? மூவேந்தர்களின் வெற்றிகளுக்குப் பின்னால் இலட்சக்கணக்கான வீரர்கள்தானே போரிட்டனர். இவ்வாறு எல்லா நிகழ்வுகளுக்கும் கேள்வி கேளுங்கள். அப்போது தெரியும் அது மன்னர் வரலாறா? மக்கள் வரலாறா? என்பது. அடித்தள வரலாற்றுக்கும், மாற்று வரலாற்றுக்கும் இத்தகைய கேள்விகளே அடித்தளமாகும்.

வரலாறு எழுதும் முறைபற்றி இந்தியாவின் புகழ்பூத்த வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் எழுதிய ‘வரலாறும் வக்கிரங்களும்’ என்னும் ஆய்வு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றியலுக்கு எத்தகைய முறையியலை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற ஒரு பெரிய விவாதம் நடைபெற்றபோது தாப்பர் எழுதிய மிக முக்கியமான கட்டுரையாகும் இது.

வட்டார வரலாற்றில் வரலாறும் வழக்காறுகளும் இணைத்து ஆராயப்படுவது தவிர்க்க முடியாததாகும். இதனை 1908இல் ஜார்ஜ் கோம் எழுதிய ‘வரலாற்று அறிவியல் போன்றது நாட்டார் வழக் காற்றியல்’ நூலில் மிக விரிவாக ஐரோப்பிய, அமெரிக்க தேசங்களை முன்வைத்து நிறுவியுள்ளார். பின்னிஷ் சிந்தனைப் பள்ளியில் இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. இதையொட்டியே பரவல் கோட்பாடும், வரலாற்று நிலவியல் முறையும் உருவாக்கப் பட்டன. இக்கோட்பாட்டைப் பயன்படுத்தி ஆறு. இராமநாதன் நிட்டூரி கதையின் 25 வடிவங்களையும், சின்னண்ணன் - சின்னச்சாமி கதை, கதைப்பாடலின் 25 வடிவங்களையும் எடுத்துக்கொண்டு அவற்றின் வட்டார ரீதியிலான பரவலை ஆராய்ந்தார்.

நாட்டார் வழக்காற்றியல் அறிஞருக்கு வரலாற்று அணுகுமுறை தேவைப்படுவதும், வரலாற்றறிஞருக்கு நாட்டார் வழக்காற்றியல் அணுகுமுறை தேவைப்படுவதும் மிகவும் தவிர்க்க முடியாதது. ஏனெனில் வரலாறு எப்போதும் நிகழ்காலத்தில் வந்து முடிய வேண்டும். கடந்த காலமும் நிகழ்காலமும் பொருள் பொதிந்த வகையில் விளக்கம் பெறுதலே வரலாற்றாய்வின் மிக முக்கியமான நோக்கமாகும். வரலாற்றாசிரியன் எவ்வாறு வெற்றி பெறுகிறான் என்பதைப் பின்வரும் கருத்துக்கள் வழி அறிய முடியும்.

1.     “The functions of historian is neither to love the past nor to emancipate himself from it but to master and understand it as the key the understanding of the present” (Carr 1973 : 26).

2.     “Great history is written when the historian’s vision of the past is illuminated by an insight into the problems of the present” (Carr 1973 : 37).

3.     “The past which the historian studies is not a dead past, but a past which in some sense is still living in the present” (Collingwood, The Idea of History; quoted in Carr 1973 : 20).

மேற்கூறிய கருத்தை நோக்கும்போது வரலாறு என்பது நடந்து முடிந்துவிட்ட கதையல்ல. இன்று வாழும் மரபோடு, அது எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு விளக்கம் தந்தாக வேண்டியுள்ளது. இதற்கு வரலாறும் நாட்டார் வழக்காற்றியலும் அல்லது வரலாறும் மானிட வியலும் சார்ந்த கண்ணோட்டங்கள், அணுகுமுறைகள் தேவையாகின்றன.

இதனை, நமது சூழலிலிருந்து அறிவோம். கட்ட பொம்மன் வரலாற்றில் இரண்டு பரிணாமங்கள் இருப்பதை வாய்மொழி வரலாற்றியல் ஆய்வு மூலம் ஆ.சிவசுப்பிரமணியன் (2003 : 11-15) விளக்கியுள்ளார். “கிழக்கிந்தியக் கம்பெனியார் நம்மை ஆளத் தொடங்கிய போது அவர்கள் ஆட்சியை எதிர்த்துப் பாளையக்காரர்கள் போரிட்டனர். இவர்களுள் ஒருவர் வீரபாண்டிய கட்ட பொம்மன். போரில் தோற்றுப்போய் புதுக்கோட்டையில் அடைக்கலம் புகுந்திருந்த இவரைக் கைது செய்து கயத்தாறில் தூக்கிலிட்ட பின்னர் இவர் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குமுரிய வீரராகி இன்று வரை மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். ஆயினும் இவர் போராடிய காலத்தில் இவரது கட்டுப்பாட்டிலுள்ள படை வீரர்களைத் தவிர சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் இப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணத்தைக் கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்கள் எவையும் நமக்குக் குறிப்பிடவில்லை. ஆனால் நட்டாத்தி, குறும்பூர் பகுதிகளில் வாழும் நாடார் சாதியினரிடமும் ஆழ்வார் திருநகரி பிராமணர், கோனார் சாதியினரிடமும் வழங்கும் வாய்மொழிக் கதைகள், வழக்கமான குறுநில மன்னர்களின் நடைமுறைகளிலிருந்து கட்டபொம்மன் மாறுபடவில்லை என்பதை உணர்த்துகின்றன. இதனால் கட்டபொம்மனுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளுக்குமிடையே நிகழ்ந்த சண்டையை ஜமீன்தார் களுக்கிடையில் அவ்வப்போது நிகழும் மோதலாகக் கருதினார்கள். விடுதலைப் போராட்டமாக அவர்கள் கருதவில்லை.” இத்தகைய வாய்மொழித் தரவுகளே மாற்று வரலாற்றை இனங்காட்டுகின்றன. வாய்மொழி வழக்காறு களின் ஒவ்வொரு வகையும் ஏதோவொரு வரலாற்றைக் காட்டுவதாக உள்ளது. இதனை எண்ணற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

கட்டபொம்மனைப் போன்றே கள்ளர் சமூகத்திற் கென்றும் இரண்டு வரலாறுண்டு. பாரம்பரியமாக ஊர்க்காவல் செய்துவந்த கள்ளர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காவல்துறையின் நலன் காக்கப்படுவதற்கு அவர்கள் குற்றச் சாதியாராக முத்திரை குத்தப்பட்டார்கள். மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போலக் கள்ளர் சமூகத்திற்குக் குற்றவாளிப் பழங்குடிச் சட்டம் 1871இல் போடப்பட்டது. காலனிகளின் ஊக்கத்தால் கள்ளர்களுக்கு எதிரான இயக்கத்தில் இடையர்களும் மாற்றவர்களும் பங்கேற்றார்கள் (ஆனந் பாண்டியன் 2009). திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் உசிலம் பட்டியைச் சேர்ந்தவர் அம்மையப்ப கோன். இவர் கள்ளர்களுக்கு எதிரான இயக்கத்தில் தலைமையேற்று தீவிரமாகப் பங்கேற்றவர். இவர் இடையர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் கள்ளருக்கு எதிராக நடத்திய இயக்கத்தின் போது அரசியல் நிலை வேறுபட்டதாக இருந்தது. ஆனால் இன்றைய சமூக, அரசியல் அசை வியக்கத்தில் புதிய பரிணாமங்கள் உருவாகியுள்ளன. எதிர்முனைகளில் செயல்பட்ட இருவேறு சமூகங்களின் வழக்காறுகளை ஆராய்ந்து, அதனை ஒரு நிகழ்கால வட்டார வரலாறாக இணைத்து இனங்காண்பதற்குக் கடந்த காலந்தொட்டு இன்று வரையிலான வாய்மொழி வழக்காறுகளே உதவ முடியும்.

கடந்த காலத்தில் ‘கள்ளர் கொடுமை’களை அனுபவித்த மற்ற சாதியாரின் கூற்று ஒரு வகையானதாக உள்ளது. ஆனால் முக்குலத்தோர் கூற்று வேறாக உள்ளது. கள்ளர்கள் மேற்கொண்ட பழைய ‘ஊர்க்காவல்’ முறையை பிரிட்டிஷ் காவல்படை பறித்துக் கொண்டது. இன்றைய நிலையில், அதுவும் அரசியல் தளத்தில் ‘அயலவர்’ கூற்று ‘தம்’ குரலாக மீண்டெழுந்துள்ளது. “வெற்றி கொண்டு வா என்றால் வெட்டிக் கொண்டு வருவாய்” என்று டாக்டர் சேதுராமன் பெருமிதத்துடன் பேசியது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் குரல். இது முக்குலத்தோரின் அரசியல் தளம் சார்ந்த குரலாகும். இன்று அரசியல் தளத்தில் முழங்கப்படும் இத்தகைய குரல்கள் சமூகத் தளத்தில் எவ்வாறுள்ளன என்பதுபற்றிய சமூக வரலாறு நம்மிடமில்லை. வரலாறு சமூகத்தின் பார்வையில் எழுதப்பட வேண்டும். எந்தச் சமூகத்தின் பார்வையில்? இதுவே சமூக முரண்பாடுகளின் அரசியலாகச் செயல் படுகிறது. ஜான் பாண்டியன் எவ்வாறு தலைவராக உருவானார் என்பது பற்றிய நிகழ்கால வட்டார வரலாறும் வரலாற்றியலின் பங்களிப்பாக உருவாக வேண்டும். இவை போன்று இன்னும் எத்தனையோ சமகால நிகழ்வுகளின் அசைவியக்கங்களை வட்டார வரலாற்றியல் நோக்கோடு அணுகப்பட வேண்டும். கடந்தகால சமூக உறவுகளி லிருந்து சமகாலத்திற்கும், சமகாலத்திலிருந்து வருங்காலத் திற்குமான சமூக வரலாறு எழுதப்பட வேண்டும். இதற்கு வட்டார வழக்காறுகள் உதவும். நாட்டார் வழக்காற்றியல் துறையின் அணுகுமுறைகள் உதவும்.

பின்னுரை : நுண் வரலாறு எழுதுதல்

வட்டார வரலாறு எழுதுவதில் பல்வேறு அணுகு முறைகள், கருத்தாக்கங்கள், ஆய்வுமுறைகள் இருப்பதை இப்போது நம்மால் உணர முடிகிறது. இந்நிலையில் ‘Local History’ என்ற கருத்தினம் ஒரு ‘புவிபரப்பு’ அல்லது ‘வட்டாரம்’ சார்ந்தது மட்டுமன்று என்பதை தெளிவாகவே உணரமுடிகிறது. குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்தும், அங்குள்ள புவியியல் கூறுகள் சார்ந்தும், கட்டடங்கள், கோயில்கள் சார்ந்தும், அவற்றின் வம்சாவளியினர், கால் வழியினர் சார்ந்தும், தனித்தொதுங்கிய பூர்வகுடிகள் சார்ந்தும், இன்னும் பல்வேறு நிலைகள் சார்ந்தும் அவற்றின் வரலாறுகளை உருவாக்க வேண்டியுள்ளது. இவையனைத்தும் ஒரு முழுமையின் பகுதிகளாக விளங்கு கின்றன. உறுப்புகள் சேர்ந்து உடலை உருவாக்குவது போல் இப்பகுதிகள் யாவும் ஒருங்கிணைந்தே வட்டார வரலாற்றை உருவாக்க முடியும். இந்நிலையில் ஒவ்வொரு பகுதியின் வரலாறும் ‘நுண் வரலாறு’ என்பதாகவே அறியப்பட வேண்டும். ‘நிலம்’ அல்லது ‘வட்டாரம்’ சார்ந்து மட்டும் வரலாறு அமைய முடியாது. மற்ற கூறுகள் யாவும் ‘நிலம்’ சாராதவை. ஆகவே நிலம் சாராத கூறுகளை முன் வைக்கும் வரலாறு, நிலம் சார்ந்து அடையாளப்படுத்த முடியுமா? அதனாலேயே வட்டார வரலாற்றை ‘நுண் வரலாறு’ என்று அடையாளப்படுத்தலாமா? என்ற வினா எழுகிறது.

இங்கு, நுண் வரலாறு என்பது ஒரு குறிப்பிட்ட சிறிய விடயத்தை முன்வைத்து மேற்கொள்ளப்படும் மிக நுட்பமான, ஆழமான வரலாற்றுத் தேடுதலாகும். இத்தகைய தேடுதலானது ஒரு தனித்த நிகழ்வு பற்றியதாக இருக்கலாம், ஒரு கிராமத்தில் வாழும் குறிப்பிட்ட சமூகத் தாரைப் பற்றியதாக இருக்கலாம் அல்லது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தனிமனிதரைப் பற்றியதாக இருக்கலாம். ஆகவே, ‘வட்டார வரலாறு’ என்பதற்குப் பதிலாக ‘நுண் வரலாறு’ என்பதாக அறியப்படலாம்.

இத்தகைய நுண்வரலாறு எழுதுதல் என்பது 1970களில் இத்தாலியில் தோன்றிய ஒரு வகையாகும். ‘Microstoria’ எனப்பட்ட இத்தகு சிறிய அலகைப் பற்றிய மிக நுட்பமான, ஆழமான தேடுதல் என்பது அப்போது சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு பற்றியதாக அமைந்தது. 1980, 90களில் பிரான்சில் Annals School, ஜெர்மனியில் Alltagsgeschichte (வரலாற்று மானிடவியல்) ஆகிய சிந்தனைக் குழுவினரைச் சார்ந்து இம்முறை வளர்த்தெடுக்கப்பட்டது.

ஆதலின், ‘வட்டார வரலாறு’ என்பதை ‘நுண் வரலாறு’ என்றும்கூடச் சுட்டுவது பொருத்தமானதாக அமையக்கூடும்.

துணைநூல்கள்

சிவசுப்பிரமணியன், ஆ. 2002. அடித்தள மக்கள் வரலாறு. சென்னை : மக்கள் வெளியீடு.

-----------------------. 2003. “மாற்று வரலாற்றைத் தேடி”. வல்லினம் இதழ் 4-5 : 11-15.

-----------------------. 2001. கிறித்தவமும் சாதியும். நாகர்கோவில் : காலச்சுவடு.

-----------------------. 2008. வரலாறும் வழக்காறும். நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம்.

தாப்பர், ரொமிலா. 1972. “வரலாறும் வக்கிரங்களும்”. ஆராய்ச்சி மலர் 2 இதழ் 3.

பக்தவத்சல பாரதி. 2003. “விளிம்புநிலை ஆய்வுகளின் வரலாறு”. வல்லினம் இதழ் 4-5 : 4-10.

-----------------------. 2007. தமிழகப் பழங்குடிகள். புத்தாநத்தம் : அடையாளம்.

பிலவேந்திரன், ச.(பதி.). 2004. சனங்களும் வரலாறும் : சொல் மரபின் மடக்குகளில் உறையும் வரலாறுகள். புதுச்சேரி : வல்லினம்.

மாதவன், இரா. 1995. தமிழில் தலபுராணங்கள். தஞ்சாவூர் : பாவை வெளியீட்டகம்.

ஸ்டீபன், ஞா. 2004. “வாய்மொழிக் கதைகளும் சமுதாய வரலாறும்”. ச.பிலவேந்திரன் (பதி.), 2004, நூலிலுள்ள கட்டுரை.

Axtell, J. 1979. “Ethnohistory: An Historian’s Viewpoint”. Ethnohistory 26(1) : 3-4.

Baum, W.K. 1974. Oral History in the United States, in Oral History. 15-29.

Blackburn, Stuart H. & A.K.Ramanujan, (eds.) 1986. Another Harmony : New Essays on the Folklore of India. Berkley : University of California Press.

Bornat, J. (ed.) 1994. Reminiscence Reviewed : Perspectives, Evaluations, Achievements, Buckingham : Open University Press.

Bynum, David Y. 1973. “Oral Evidence and the Historian”, in Dorson (1973)

Carr, E.H., 1973 (1961, 1964), What is History? New York (Pelican Edition)

Caunce, S.Oral History and the Local Historian, London : Longman, 1994.

Champakalaxmi, R. 1987. “Historiography of South India : New Directions” Preisdential Address, South Indian History Congress, 7th Session, Madras.

Claus, Peter J. & Korom, Frank, 1991. Folkloristics and Indian Folklore, Udupi.

Cohn, Bernard S. 1994 (1987). An Anthropologist among the Historians And Other Essays. New Delhi : Oxford University Press.

Daaku, Kwame Y. 1973. “History in the Oral Traditions of the Akam”, in Dorson 1973.

--------------------. 1992. “The Nexus between Oral and Written Traditions” Anundam. Vol.I.

Datta, Birendranath. 2002. Folklore and Historiography. Chennai : National Folklore Support Centre.

DeMallie, Raymond J. 1993. “These Have No Ears” : Narrative and the Ethnohistorical Method”. Ethnohistory 40 : 515 - 538.

DeLee, N., Oral History and British Soldiers’ Experience of Battle in the Second World War, in Addison, P & Calder, A (eds.) Time To Kill : The Soldier’s Experience of War in the West, 1939 - 1945 : 359 - 368, London : Pimlico, 1997.

Dorson, Richard M., (ed) 1972. Folklore and Folklife : An Introduction, Chicago : University of Chicago Press.

---------------------, (ed.) 1973. Folklore and Traditional History, The Hague & Paris, Mouton.

--------------------, 1973a, “Traditional History of the Scottish Highlanders”, in Dorson 1973.

--------------------, 1978. Folklore in the Modern World, The Hague & Paris.

Dundes, Alan, (ed.). 1965. The Study of Folklore, New York : Prentice - Hall.

Evans, G.E. 1987. Spoken History, London : Faber,

Evans, G.E. 1993. The Crooked Scythe : An Anthology of Oral History, London Faber.

Fenton, W.N. 1966. “Field Work, Museum Studies, and Ethnohistorical Research”. Ethnohistory 13 ½ : 75.

Finberg, HPR; Skipp, VHT. 1967. Local History : Objective and Pursuit. David & Charles.

Gomme, George Lawrence. 1908. Folklore as an Historical Science, Detroit : Singing Tree Press.

Harkin, Michael. 2010. “Ethnohistory’s Ethnohistory : Creating a Discipline from the Ground Up”. Social Science History 34 : 113 - 128.

Levi - Strauss, Claude. 1980 (1979). Myths and Meaning, New York : Schocken Books.

Lummis, Trevor. 1992. “Oral History”, in Richard Bauman 1992.

Lurie, N. 1961. “Ethnohistory : An Ethnological point of View. Ethonohistory 8 : 83.

MacHenry, R., (ed.) 1993. The New Encyclopaedia Britannica (Macropaedia).

Marziali, Carl (2001 - 10 - 26) “Mr. Boder Vanishes”. “this American Life”. Retrived from

Michael E.Harkin, “Ethnohistory’s Ethnohistory, “Social Science History, Summer 2010, Vol.34#2 pp 113-128. National Curriculum - level descriptions.

Pandian, Anand. 2009. Crooked Stalks : Cultivating Virtue in South India. Delhi : Oxford University Press.

Peter Burkk, 2003. History as Social Memory - Varieties of Cultural History. Polity Press.

Russell, Bertrand. 1957. Understanding History and Other Essays, New York : Philosophical Library.

Schieffelin, E. and D.Gewertz (1985), History and Ethonohistory in Papua New Guinea, 3.

SDFML, 1984 (1972). Standard Dictionary of Folklore Mythology and legend, Ed. M.Leach, San Fransisco : Harper & Row.

Sills, David L., (ed.) 1972. International Encylopaedia of Social Sciences.

Simmons, W.S. 1988. “Culture Theory in Contemporary Ethohistory”. Ethnohistory 35 (1) : 10.

Thapar, Romila, 1994 (1973) The Past and Broadcasting, Govt.of India.

Thompson, P.R.1988. The Voice of the Past. Oral History, Oxford University Press.

Thomson, A., Anzac, 1990. Memories : Putting Popular Memory Theory into Practice in Australia, In Oral History.

Vansina, Jan. 1973. Oral Tradition : A Study in Historical Methodology.

Chicago : AIdine Publication Company. Harmondsworth.

-------------------. 1985. Oral Tradition as History, sMadison, Wis : University of Wisconsin Press.

Pin It