“சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நவீன மைய நூலகக் கட்டடத்துக்கு மாற்றப்படும் என்றும், நூலகம் இருக்கும் கட்டடம் உயர்சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப் படும்” என்றும் நவம்பர், 2-ஆம் நாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

சென்னை அண்ணாசாலையில் தி.மு.க. அரசினால் புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு எதிராக எழுந்த அரசியல் எதிர்ப்பைப் போல, இந்த நூலகக் கட்டட மாற்றத்தில் எதிர்ப்பு எழுந்து விழுந்து விடவில்லை. மாறாக, அறிவுசார் வட்டத்தில் வெறுப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளன. காரணம்?

கோட்டூர்புரத்தில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.172 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகம் தென் ஆசியாவில் இரண்டாவது மிகப் பெரிய நவீன நூலகம். ஒன்பது தளங்களை உடைய இந்நூலகத்தில் ஆவணங்கள், இலக்கியம், தொழில்நுட்பம், குழந்தைகள் இலக்கியம் இதழ்கள் என ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு தளம் ஒதுக்கப்பட்டதோடு, பார்வையற்றோர் படிப்பதற்கான பிரெய்லி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 இலட்சம் நூல்களைக் கொண்ட இந்நூலகத்துக்கு காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நாளொன்றுக்கு சுமார் 1300 வாசகர்கள் வந்து செல்கின்றனர். 1250 வாசகர்கள் அங்கே அமர்ந்து வாசிக்கக்கூடிய அளவுக்குப் பிரம்மாண்டமான நூலகத்தின் வளாகத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்தக்கூடிய அளவுக்கு இடவசதி உண்டு.

இப்படிப்பட்ட நூலகத்தைத் தமிழக அரசு இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

அந்த இடத்தில் மருத்துவனை அமைக்கப் போகிறதாம், அரசு! இது ஏற்புடையது அல்ல! ஏனெனில், இன்றும் தமிழகத் தலைநகரில் இருப்பவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும் பாலான அரசு மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் இல்லாமை, மருத்துவக் கவனிப்பு இன்மை, மருந்துகள் போதாமை எனப் பல பற்றாக்குறைகளுடன்தான் செயல்பட்டு வருகின்றன. அவற்றைச் சீர்திருத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கலாம். புதிய மருத்துவமனைகளை அமைப் பதற்கும் அரசால் புதிய இடத்தைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.

மேலும், நூலகங்கள் கூடப் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில்தான் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள பாதுகாக்கப் படவேண்டிய பழைமையான கையெழுத்துப் பிரதிகள் எங்கே தஞ்சம் புகுவது எனத் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்துப் பாதுகாக்கலாம் என்ற ஆலோசனையும் ‘திட்டம்’, ‘செயல்பாடு’ என்ற நிலையைத் தொட இயலவில்லை.

இந்நிலையில், நூலக இடமாற்ற அறிவிப்பு தமிழகத்தில் புயலைக் கிளப்பி, அதன் தொடர்ச்சி யாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கு விசாரணையில், தமிழக அரசின் ஆணைக்குத் தடைவிதித்த நீதிபதிகள் இது தொடர்பாக 6 வார காலத்தில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளனர்.

இவ்வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, அ.தி.மு.க. அரசின் உள்ளார்ந்த அரசியல் பார்வையும் இங்கே கவனத்துக்குரியது. 2001-2006 காலத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு இப்போது அண்ணா நூலகம் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் புதிய தலைமைச் செயலகம் வளாகம் கட்டுவதற்குத் திட்டமிட்டது. மீண்டும் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த இடத்தில் அண்ணா பெயரில் நூலகம் கட்டப் பட்டது. இப்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நூலகத்தை மாற்றி, மருத்துவமனையாக்க முயல் கிறது. இது தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் தவறான வழிமுறையாகும். தமிழகத்தின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்கும் இந்த ‘நீயா, நானா?’ மரபுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.

‘நீதிமன்றத்தில் மறு விசாரணை, நடைபெற்று தீர்ப்பு வரட்டும்’ என்று காத்திராமல், தமிழக அரசு உடனடியாகத் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த இட மாற்றம் என்பது அரசியல் எல்லையைத் தாண்டி தமிழக அறிவுசார் வட்டத்தின்மீது ஜெயலலிதா அரசு தொடுக்கிற தாக்குதல்!

Pin It