‘அறிவியல்’ என்பது விஞ்ஞானத்தைக் குறிக்கின்ற ஒற்றைச் சொல் என்னும் கண்ணோட்டம் பொதுவாகவே எல்லோருக்கும் இருக்கின்றது. ஆனால், அந்த அறிவியலுக்குள் நுழைந்து பார்த் தால் அதற்குள்ளே வாழ்வியலும், உலகியலும் எவ்வாறெல்லாம் நிறைந்துள்ளது என்பதை நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

‘அறிவு’ நிறைந்த இயல், அறிவிக்கும் இயலாக இருப்பதால் அறிவியலாக வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய அறிவியல் படித்தவர்களுக்குப் பாடமாகத்தான் அறிமுகமாகி, அது கல்வியாளர்களோடு மட்டும் தொடர்புடையதாகி புழக்கத்தில் இருந்துவருகிறது... என்றாலும் நகரங்களில் வசிப்போர், கிராமங்களில் வசிப்போர் என்று வேறுபாடுகள் ஏதுமின்றி அனைத்து மக்களின் வாழ்க்கையோடும் பெரிதும் தொடர்புடையது அறிவியல் என்றால் அது முற்றிலும் உண்மையே ஆகும்.

ஏர்முனையும், எழுத்தாணி முனையும்:

‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்கிற நமது வள்ளுவப் பெருந்தகையின் குறட்பா வரையறுக்கிற இந்த வரலாறு நம்மால் கருத்தில் கொள்வதற்குரியது. வேளாண்மைத் தொழில் புரியும் உழவர் பெருமக்கள் கிராமங்களில் பிறந்து வாழ்ந்து இந்த அறிவியல் உலகோடு இணைந்தே வருகின்றனர். தங்களின் அனுபவ மொழிகளாகிய பழமொழிகளை வாழ்க்கையின் அடையாளங்களாக அவர்கள் பயன்படுத்தியுள்ளதும்... இப்போதும் கூடப் பயன்படுத்தி வருவதும் அறிந்துகொள்ள வேண்டியதாகும்.

உழவர் தொழுவதற்குரியோர்:

“....உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற் றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என் னும் குறட்பாவின் கருத்தானது உழவுத் தொழிலின் மேன்மையை விளக்கிநிற்கிறது.

‘உழவின் மிகுந்த ஊதியமில்லை’ என்கிற பழ மொழியில் ‘உழவு’ என்னும் சிறப்புச் சொல்லா னது பயிர்த் தொழில் என்பதையே சுட்டுகின்றது.

‘ஏர் நடந்தால் பேர் நடக்கும்’ என்னும் மூத்தோர் கருத்தானது இந்த விவசாயத் தொழி லால் உலக இயக்கம் நடைபெறும் என்பதை உறுதி செய்கிறது.

‘உயிர்த் தொழில் எல்லாம் பயிர்த்தொழில் தன்னால்’ என்பது மற்ற தொழில்களையெல்லாம் விட உழவுத்தொழில் உயர்வான இடத்தைப் பெறுகின்றது என்பதையே வலியுறுத்துகிறது.

“அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண் டிரு” என்கிற கருத்து, வாழ்க்கைத் துன்பத்தில் மூழ்கிவிடாமல் காப்பாற்றுவது உழவு என்பதை உணர்த்துகிறது.

ஏர்க்கலப்பைகொண்டு உழவன் உழவு செய்கிற முறைகளைப் பற்றிக் கூறினால் அது உய்த் துணரத் தக்கவற்றையே எடுத்துக்காட்டுவதாக அமையும்.

வணக்கத்துக்குரிய வழக்கம்:

ஆழமாக உழுதல், அகலமாக உழுதல், அதிர் வாக உழுதல், மேம்போக்காக உழுதல், அடுக்காக உழுதல் என்னும் முறைகளைப் பயன்படுத்தி நமது முன்னோர்கள் உழவினைச் செய்து வந்துள்ளனர்.

ஆழமாக உழுதல், என்றால் குறைந்த அளவு பரப்பளவேயுள்ள நிலத்தைக் கொண்டுள்ள விவசாயி அந்த நிலத்தைச் சிரத்தையெடுத்து ஆழமாக உழவு செய்வானேயானால்... அது அவனுக்கு நல்ல பலனைக் கொடுப்பதிலே குறைவைக்காது. அடி மட்டத்தில் உள்ள மண்ணானது மேலே கொண்டு வரப்பட்டு சத்துக்கள் மிகுந்ததாய் விதைக்கும் விதைகளை மிக நன்றாக ஏற்றுக் கொள்வதாய்க் காத்திருக்கும்.

அகல உழுதல் என்பது உரிய நேரத்தில் அதிகப் பரப்பளவுள்ள நிலத்தை உழவு செய்வ தாகும். ஒரு படிக்காடு என்பதும், ஒரு வள்ளக்காடு என்பதும் நிலத்தின் பரப்பளவுக்கு உழவர்கள் குறிக்கும் நில அளவு ஆகும்! ஒரு படி என்பது ஒரு லிட்டர் அளவுள்ள தானியத்தை விதைப்புச் செய்வதற்குரிய நிலப்பரப்பளவு. நான்கு படிக் கொள்ளளவு ஒரு வள்ளம் என்பதாகும். ஆக ஒரு வள்ளம் என்கின்ற நான்கு ஏக்கரை உழவு செய்தல் என்பது இதன் தெளிவாகும்.

ஏற்ற நேரம்:

அதிகாலையிலேயே உழவு செய்யத் தொடங்கி மாலைப் பொழுது விழுந்த பிறகும்; வெளிச்சம் மங்கும் வரையிலும்கூட உழவு செய்து தனது பணியை மிகுந்த அக்கறையோடு அவர்கள் செய்கிற அந்தச் செயல்பாடு நினைவில் நிறுத்தக் கூடியது. பொழுது உச்சி வானத்திலிருக்கும் நண் பகலில் உணவு உட்கொள்வதற்காக ஏர்க்கலப்பை யிலிருந்து காளைகளை அவிழ்த்து அவற்றைத் தாகம் தீரத்தண்ணீர் குடிக்கவைத்து, தின்பதற்குத் தீவனமும் போட்டு மரத்தின் நிழலில் சற்றே ஓய்வெடுக்க உழவன் ஏற்பாடுகள் செய்வான். அதன் பிறகு, தானும் மதிய உணவு உட்கொண்டு சிறிதே ஓய்வெடுத்து பணியைத் தொடங்கி விடுவான். அகல உழுதலில் கூடுதலான ஏர்க்காரர் கள் இருத்தல் வழக்கம்.

இந்த இருவகை உழவு முறைகளில் ஆழ உழுவதன் அவசியத்தை உழவர்கள் மட்டுமின்றிப் பிறரும் உணர்ந்திருந்தனர். அதிர உழவு செய்தல் என்பது நிலம் அதிரும்படியான ஏர்ப் பிடித்தலைக் குறிப்பது ஆகும். மேல் மண் கீழே செல்ல, கீழ் மண் மேலே வர நன்றாகப் புரட்டிப் புரட்டியெடுக்கும் வகையில் இந்த உழவு அதிர அடித்தலை அடை யாளப்படுத்தும். “அதிர அடித்தால் உதிர விளை யும்” என்பதும், ஆழ்ந்த நிலக்கிளறலால் ‘மகசூல்’ அதிகமாகக் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை! நாளோட்டத்தில் ஏருழவு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் ஏர்க்கலப்பை வைத்திருக்கும் உழவனைத் தேடிப் பிடித்து நிலத்தை உழவு செய்யவேண்டிய சூழ்நிலை ‘ஒண்டிப் பண்ணையம்’ செய்யும் விவசாயிக்கு உண்டாகும்! அது சமயம் கூலிக்கு உழவருவோர் ஆழமாக உழவு செய்யாமல் மேம்போக்காக உழவு செய்துவிட்டுச் செல்பவர்களாக இருப்பர். ஒப் புக்கு உழுதல் என்பது இதன் அர்த்தமாகும். இதிலே விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும்.

நல்ல நல்ல நிலம் பார்த்து:

ஆழமாக உழவு செய்யும்போதும் அடுக்கிய உழவு சிறந்தது. ஏர்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வரிசைக் கிரமமாகச் சென்று ‘முன்னத்து ஏர் சென்ற வழியில் பின்னத்து ஏர்...’ என்ற முறையில் உழவு செய்வதற்கு அடுக்கு உழவு செயல்முறையில் இருந்துள்ளது.

உழவு தொடர்பான இன்னும் சில செறிவான அனுபவ மொழிகள் இருந்துள்ளன. ‘எருவிலும் வலியது உழவே’ என்பது எரு இடுதலை விடவும் உழவு செய்வது முக்கியமானது என்பதை இது குறிக்கும். ‘வெண்ணெய் போல் உழவு! குன்று போல் விளைவு’ என்பது மண் குழைக்கப்பட்டு வெண்ணெய் போல் பதம் வரும் வரை உழவு செய்தல்வேண்டும் என்னும் தகவலைக் குறிப்ப துடன் இதனால் விளைவு சிறப்படையும் என்பதை யும் உணர்த்தும்.

“அதிகாலையில் எழாதவன் செய்கின்ற வேலை அழுதாலும் தீராது” என்பது அனுபவக் கூற்று. உழவுப் பணிகள் அதிகாலையில் துவங்கப் பெறும். அந்தத் தருணத்தில் துவங்குவதால் சூரிய வெப்பம் கூடுதலாவதற்குள்ளாக பெரும்பாலான வேலைகளைக் களைப்பில்லாமல் செய்துவிட முடியும்! எனவே, சூரியன் கிளம்புவதற்கு முன் பாகவே உழவுப் பணிகள் தொடங்கப்பட வேண்டியதன் மூல அவசியத்தை உணர்த்தும்.

உழவு வேலைகளுக்குத் தேவைப்படும் ஆட்களை நாள் கூலி கொடுத்து ஏற்பாடு செய்து கொள்வது நடைமுறை. அப்படிக் கூலி கொடுப் பதில் தானியம், பணம், உணவு ஆகியவை அப் போது பழக்கத்தில் இருந்துள்ளன. “ஓட்டிய ஏருக்கும், குடித்த கூழுக்கும், சரியாப் போச்சு” என்னும் சொற்றொடர் ஏர்பூட்டி உழுவதற்குக் கூலியாக ‘கூழ்’ எனப்படும் உணவு தரப்பட்டதைக் குறிக்கின்றது. இதிலே வேலைகள் செய்வோருக் குக் களைப்பைப் போக்கி தெம்பைத் தருவதில் கூழ் உணவு பொருத்தமானது என்னும் கருத்தும் இதில் உள்ளடங்கியுள்ளது. வேலைக்குத் தக்க கூலி கொடுக்கப்படவேண்டியது முக்கியம்! கூலி குறைந்தால் அவன் செய்யும் வேலையிலும் குறை வுகள் நேரிடும் என்பதும் நடைமுறையில் அறியப் பட்டிருந்தது.

விதைகள் உறங்குவதில்லை:

விதைப்புச் செய்கிற பருவமானது ஆடிப் பட்டமாக இருத்தல் நலம். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பதும்; ‘ஆடியில் விதைப்பு’, ஆவணி யில் முளைப்பு என்பதும் ‘ஆடி வாழை தேடி நடு’ என்பதும் ‘ஆடி பிள்ளை தேடி நடு’ என்பதும் சிந்தனைக்குரியன. நெல் மட்டுமின்றி காய்கறிகள், வாழை, தென்னைகள் போன்றவற்றிற்கும் ஆடி மாதம் விதைப்புக் காலமாக அமையப்பெற்றது.

நிலம், உழவு, விதைப்பு இவைகளை அடுத்து தண்ணீர் என்பது இன்றியமையாதது. ஒளவை யார் சோழ மன்னனை வாழ்த்தும்போது ‘வரப்பு உயர’ என்ற சொற்களால் சுருங்க வாழ்த்தினாள். வரப்பு உயர்ந்தால் நீர் உயரும், நீர் உயர்ந்தால் நெல் உயரும்! நெல் உயர்ந்தால் ‘குடி’ என்கிற குடிமக்கள் உயர்வர். அவர்கள் உயரும்போது அரசனின் உயர்வு இயல்பாக உயர்ந்துவிடும் என்பதே அந்த அறிவு மூதாட்டியின் அற்புதக் கருத்தாகும்.

சேறு, நெற்றிக்கும் வெற்றிக்கும் திலகம்:

நாற்று நடுகின்ற வேலையானது உழவுத் தொழிலில் முக்கியத்துவம் வாய்ந்தது. நாற்று நடுவதற்குரிய தருணமும் நாற்று நடும் முறைமையும் பழங்காலத்தில் சிறப்புற இருந்தன. ‘அடை மழையில் நாற்று நட்டால் ஆற்றோடு போகும்’ என்கிற பழமொழியானது அதிகமாக மழை பெய் யும் காலத்தில் நாற்று நடும் பணி நடைபெறுதல் இல்லை என்பதையும், ஏற்றதல்ல என்பதையும் எடுத்துரைப்பதாக உள்ளன.

கூடுதலான அளவில் கொத்துக் கொத்தாய் நாற்றுக்களை நட்டால், கூடுதலாக விளைச்சலும் இருக்கும் என்று சிலர் எண்ணுகின்றனர்! அதே தருணத்தில் அளவை மீறிக் கூடுதலாக நடுவதால் விளைச்சலின் மாற்றம் அப்படியொன்றும் பெரிதாக இருக்காது என்பதும் அனுபவசாலி களின் கருத்து. நாற்று நடவை அடுத்து பயிர் களுக்குச் செய்யவேண்டிய பாதுகாப்புகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன. அவை வேலியடைத்தல், உரிய பராமரிப்புச் செய்தல், பூச்சிகளின் தாக்கு தலில் இருந்து காப்பாற்றுதல், நோய்களில் இருந்து காப்பாற்றுதல், களையெடுத்தல், உரமிடுதல் முதலியனவும் சுட்டப்படுகின்றன. “வேலியடைத் தவன் காட்டைப்பார்” என்றும், “நன்கு மேய்த்த வன் மாட்டைப்பார்” என்றும் அன்றைய பழ மொழிகள் குறிப்பிடும்.

ஆடுமாடு முதலிய விலங்குகளால் பயிர் களுக்கு ஏற்படும் பற்பல சேதங்களைத் தடுக்க வேலியமைப்பது மிகவும் முக்கியமானது. இனம், இனத்தைக் காக்கும். வேலி பயிரைக் காக்கும் என்பதும் கருத்தில் ஊன்றிக் கவனத்திற்குரிய தாகிறது.

திருவள்ளுவரின் “செல்லான் கிழவன் இருப் பின் நிலம் புலந்து இல்லாளின் ஊடிவிடும்” என்னும் கருத்தானது பயிர்ப் பராமரிப்பின் முக்கியத்துவத்தை அறிவிக்கும். ‘காணியை நட்டு களத்தில் நில்’ என்னும் அனுபவ மொழி பயிர் களைப் பராமரிக்கும்படி அறிவுறுத்தும். “வரப்பே தலையணை! வாய்க்காலே பஞ்சு மெத்தை” என வருவதும் பயிர்ப் பராமரிப்பின் தன்மையை நன்கு உணர்த்தும்.

களைப்பின்றிக் களையெடு:

பயிர்ப் பராமரிப்பும், பாதுகாப்பும் எத்தகை யன என்பதைச் சாதாரண விவசாயி கூட உணர்ந்தேதான் இருப்பான். அதில் களை யெடுத்தல் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். நெல்லுக்குப் பாய்ச்சிய தண்ணீரானது, புல்லுக் கும் வழிவகை செய்துவிடும்... என்பதற்கேற்ப இயற்கையின் உறுதுணை செயலாற்றிவிடுகிறது. இதிலே நெல்லின் வளர்ச்சியை விடவும், புல்லின் வளர்ச்சியானது பெரிதாகுமெனில் பாதிப்பு, உழவனுக்குத்தான்! இதனால் அவன் கண்காணிப் புடன் இருந்து முளையிலேயே களைகளைக் களைவதில் முனைப்பாய்ச் செயல்படுவான். இதையொட்டியே ‘களையெடுக்காத பயிர் கால் பயிர்’ என்பதும் ‘களையெடுக்காதவன், விளைச் சலையும் எடுக்க மாட்டான்’ என்பதும் குறிக்கப் படலானது.

‘களையெடுக்காதவனைக் கபோதி’ என்று கோபமாகக் குறிப்பிடுவதும் இந்தப் பணியின் முக்கியத்துவத்தையே உணர்த்துவதாக உள்ளது. இப்படி, களையெடுப்பின் அவசியமும், சலிப்பு, களைப்பில்லாமல் அது செய்யப்பட வேண்டிய தன் முறைமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“விளையும் பயிர் முளையிலே தெரியும்” என் பது முன்கூட்டியே அறிந்துகொள்ளும் நுட்பம் கொண்டவர்களாக நம் முன்னோர்கள் இருந் துள்ளதைக் கூறுகின்றது. பயிர் விளைச்சலோடு மக்களின் நம்பிக்கைகளும் கலந்தே விளைந்து வந்துள்ளன.

‘சிறுசுகள் நட்டது வீடு வந்து சேராது’ என்பது அனுபவமின்றிச் செய்த செயலால் பய னுண்டாகாது என்பதை உரைக்கிறது. மேலும் பயிர் விளைச்சலில் பாவ புண்ணியங்களையும், கைராசிகளையும், முகராசிகளையும், செயல்பாடு களையும், நேர நிமித்தங்களையும் முன்வைத்து அதற்கேற்ப எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந் தனர் என்பதும் விளங்கப் பெறுகிறது.

“முழு நிலா வெளிச்சம் பௌர்ணமி நாளில் இந்தப் பூமியைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் போது உழவுப் பணியைத் துவங்குதல் ஏற்புடைய தல்ல” என்னும் நம்பிக்கை அறிவியல் பார்வையில் உருவானதா? என்பது சிந்தனைக்குரியது. கலை யின் பார்வையில் பார்த்தால் நிலாமகள் இந்தப் பூமியைக் குளிர்ச்சிப்படுத்திய பிற்பாடு இதர பணியைச் செய்வதே உகந்தது எனத்தோன்றும்.

அறுவடைக்காலம்:

உழுது விதைத்து, விளைந்த பயிரில் முற்றிய கதிர்களை உரிய காலத்தில் அறுவடை செய்வது உழவனின் உரிமை! வியர்வை சிந்திய அவனது உழைப்பினால் இந்த நிலை எட்டியது. உழுகின்ற காலத்தில் ஒரு செயலையும் செய்யாமல், அறு வடைக் காலத்தில் மட்டும் அரிவாளைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு சென்றால் பல னில்லை. உழைத்தவர்களுக்கே பலனுண்டு என் னும் உண்மையை உறுதிசெய்யவேண்டும்.

உழுகின்ற நாளில் ஊர் சுற்றிவிட்டு, அறு வடை நாளில் அரிவாள் செய்துகொண்டு வந்தான் என்றும் அறுவடைத் திருநாள் அடிக்கடி வராது என்றும் சொல்லியிருப்பது கண்டுணர்ந்து சொன்னதேயாகும்.

அறுவடை செய்து முடித்து தானியங்களைக் களத்தில் தாம்பு பூட்டி ஓட்டிப் பிரித்தெடுத்த பிறகு காற்றின் துணையோடு அதைத் தூற்றிச் சுத்தம் செய்வது, ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்னும் அனுபவ மொழியைத் தருவதாயி ருந்தது.

தங்கமணிகளைப் போன்ற தானிய மணி களைக் களத்தில் மூட்டைகளில் கொட்டி, பத்திர மாகக் கட்டி வண்டிகளில் ஏற்றும் பணி நடக்கும். அதற்கும் முன்னதாக அந்தக் களத்தில் வைத்தே படிக் கூலியாகப் பாடுபட்ட அனைவருக்கும் தானியத்தைக் கூடை கூடையாக வழங்குகிற முக்கியகாரியம் நிகழும். அறுவடை தொடங்கிய திலிருந்து அதில் ஈடுபட்டுள்ள எல்லோரையும் கவனத்தில் வைத்து வரிசையாக அழைத்து உழைத்த தரத்திற்கேற்ப கொடுக்கும் கூலியானது குறைவின்றித் தானியமாகவே தரப்படும்.

படியளக்கும் கைகள்:

அறுப்புக்கூலி, அடிப்புக்கூலி, சுமைக்கூலி, களத்தில் தாம்போட்டிய கூலி என்று ஒன்று விடாமல் அதிலே ஈடுபட்டவர்கள் தத்தமது பணி களை நினைவு கூர்ந்து தானியங்களைக் கூடை களிலும், கோணிச் சாக்குகளிலும் பெற்றுக் கொள் வர்! முகங்களில் களைப்பு நீங்கி மனங்களில் திருப்தி முகாமிடும் தருணமாக அது அமையும்.

இதனைத் தொடர்ந்து மண்பானை வனைந்து தரும் குயவர்கள் துணிகளைத் துவைத்துத்தரும் சலவைத் தொழிலாளர்கள், முடிவெட்டுவோர், ‘தட்டுவான், கொட்டுவான்’ எனப்படும் பறையடிப் போர், கொழு, வண்டிப்பட்டா, அரிவாள், கொடு வாள், கொத்து, மண்வெட்டி போன்றவற்றைத் தயாரித்துத் தரும் பட்டறைப் பணியாளர், கலப்பை, வண்டிப்படல், நுகம் உள்ளிட்ட மர வேலைகள் செய்து தரும் தச்சுத் தொழிலாளர் என்று இந்த உழவனுக்குத் துணை நின்று தங்களின் கடமைகளைச் செவ்வனே ஆற்றும் சக தொழி லாளர்களுக்குத் தானியங்கள் திருப்தியாகப் போடப்படும்.

இதனையடுத்து உடல் ஊனமுற்று வேலை எதுவும் செய்யவியலாமல் திண்ணைகளில் முடங் கிக் கிடப்போரும் தானியங்கள் களத்திலிருக்கும் நாளைத் தெரிந்துகொண்டு தட்டுத்தடுமாறி ஆள் துணையோடு வந்து சேர்ந்திருப்பர். அவர்களை யும் அழைத்து, முகங்கோணாமல் “இந்த வரு சத்துக் கொடுப்பினை இது” என்று கூறித் தானி யங்களைக் கொடுத்து அனுப்புவது முடிவுறும்.

வீடு நோக்கிச் செல்லும் வண்டிகள்:

களத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தானிய மூட்டைகளை எண்ணி, ஒரு வண்டிக்கு இவ்வளவு சுமை என ஏற்றி இட்டேரித் தடத்தில் மண் பாதை யில் அவற்றை வரிசையாக அனுப்புவார்கள்.

ஏர்க் கலப்பையைச் சுமந்தவாறு இன்றைக்கு உழவு செய்யப் போகிறோம் என்று காடுகளை நோக்கிப் புறப்பட்ட காளைகள் இப்போது தானிய மூட்டைகளைக் கிராமத்திலுள்ள வீடு களை நோக்கிச் சுமந்து செல்லும் நினைவுகளை மனங்களில் தேக்கி நடந்துசெல்லும் அந்த நெகிழ்ச்சியான உணர்வு அவைகளின் கண்களி லும், முகங்களிலும் காணக் கிடைப்பதாயிருக்கும்.

தாங்கள் சாகுபடி செய்வதற்குரிய நிலத்தைத் தேர்வு செய்வதிலே நம் முன்னோர்கள் எத்தகு கூர்மையான அறிவைப் பெற்றிருந்தனர் என்பதைப் பழமொழிகளே நன்கு படம்பிடித்துக் காட்டு வதாய் உள்ளன.

ஆற்றை அடுத்திருக்கும் நிலம் அவ்வளவாக ஏற்றதல்ல. ஏனெனில், ஆற்றிலே வெள்ளப் பெருக்கு உண்டாகும் தருணத்தில் பாதிப்பு ஏற் படும். ஆற்றை அடுத்த வயலும், அரசனை அடுத்த குடியும், கோயிலை அடுத்த வீடும்... செழுமை பெறாது என்பதைக் குறிப்பிட்டு அவைகள் அமை கின்றன. அது போன்றே ஊரின் எல்லையில் உள்ள நிலமும் பயன்படாது என்னும் கருத்தை “ஊரோரத்தில் கொல்லை! உழவனுக்குக் கொடுக் கும் தொல்லை” என்னும் பழமொழி அடை யாளப்படுத்துகிறது.

நீர்ப்பாசன வசதி குறைவின்றி இருக்கும் ஆற்றுப் பாசன நிலங்கள், கிணற்றுப்பாசன நிலங்கள், ஏரி குளங்களை அடுத்துள்ள பாசன நிலங்கள் ஆகியவை நன்செய் நிலங்களாக செழுமையினைப் பெற்றவை. இவை நஞ்சை நிலம் என்பதும், தஞ்சைக் கரவளி முழுவதும் இந்த வகையானவை என்பதும் அறியப்பட்டுள்ளது. மழையை நம்பியும், மேற்சொன்ன வகையில் அல்லாமல் அமைந்தவைகளையும் ‘புன்செய் நிலங்கள்’ என்னும் பெயரில் குறிப்பர். ‘புஞ்சை பூமி’ எனப் புஞ்சை புளியம்பட்டி போன்றவற்றை உதாரணங்களாக இதிலே சுட்டலாம். இப்போது சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவமழைக் காலங்கள் மாறி, அந்த நிலப் பகுதியின் வேளாண்மைத் தொழில்களிலும் மாற்றங்கள் உண்டாகிவிட்டன.

வானம் பார்த்த பூமி:

வானத்து மழையை மட்டுமே நம்பி செய்யப் படும் விவசாயத்தை ‘மானாவாரி விவசாயம்’ என அழைப்பது முறைமை! வானத்தை மானம் என்று குறிப்பதும் கொங்கு மண்டலத்தில் உண்டு. மானத்தை, அது தரும் மழையைக் கொண்டு செய்யப்படும் வேளாண்மைத் தொழிலினை நெடுங்காலமாக ‘மானாவாரி’ என்று பதிவு செய்திருப்பது கவனத்திற்குரியது.

அப்படிப்பட்ட மானாவாரி நிலங்களில் பெய்யும் மழைத் தண்ணீர், அதுவும் மலைச் சரிவான அடிவாரப் பகுதிகளில் கூடுதல் பலன் தரக் கூடியது. இதனை மதகடி நன்செய்யும், மலையடி புன்செய்யும் மகிழ்ச்சிக்குரிய வளமைப் பகுதிகளாக வழங்கப்பட்டு வந்துள்ளன.

“மானாவாரி நிலங்களில் உழைத்து உரமேறிய கைகளைக் கொண்ட கொங்குச் சீமைப் பாட் டாளிகள், தரிசாகக் கிடக்கிற முள்ளும் கல்லு மாய்ப் புதர் மண்டிக்கிடக்கிற பகுதிகளைக்கூட விளைச்சல் செய்யும் நிலங்களாக ஆக்கிவிடுவார் கள்” என்று கர்மவீரர் காமராஜர் அவர்கள் குறிப் பிட்டுச் சொன்னது மெய்யான வார்த்தைகளாகும்.

‘மேட்டாங்காடு’ எனப்படும் வளம் குறைந்த அந்த நிலத்தை நம்பி தனது அரிய உழைப்பைக் கொட்டும் விவசாயி, ஏமாற்றத்துக்கு ஆளாகித் தவிப்பதையும் அனுபவ மொழிகள் காட்டுவ துண்டு.

“மேட்டாங்காட்டை உழுதவனும் கெட் டான். மேனாமினுக்கியைக் கட்டுனவனும் கெட் டான்...” என்னும் கோபமும், எச்சரிக்கையும் கலந்த அந்த அனுபவமானது இத்தகைய நிலைமையைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.

உழவுத் தொழிலே காலங்காலமாகத் தங் களின் பூர்வீகத் தொழில் என்பதில் தெளிவும், அறி வும் கொண்டிருந்த குடியானவர்கள் வாழ்க்கையில் செழுமையையும், திருப்தியையும் அடையாத போதிலும்... நம்பிக்கையை மட்டும் இழக்காதவர் களாக, உழைக்கச் சளைக்காதவர்களாக விளங்கி வந்துள்ளது இந்தச் சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டிய படிப்பினை ஆகும்.

Pin It