ஒரு பிரச்சினையை ஒட்டி, இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாளில் நாம் ஒருவரிடம் திட்டு வாங்கப் போகிறோம் என்றாலே, படபடப்பு தோன்றி, நாள் நெருங்க நெருங்க, பதைபதைப்பு இரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தும். அப்படியிருக்க, ‘குறிப்பிட்ட நாளில் உங்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படப் போகிறது’ என்று ஒரு மனிதனிடம் தெரிவிக்கப் பட்டால் அந்த நெஞ்சம் எப்படித் துடிக்கும்!

கடந்த 1991-இல் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சட்ட சம்பிரதாயங்கள் பலவற்றைக் கடந்து, செப்டம்பர் 9-அன்று மரணதண்டனை முடிவு செய்யப்பட்டு, உள்ளம் குலைந்தனர்-இளைஞர்களாக உள்ளே சென்று நடுத்தர வயதை எட்டிய பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும்.

இந்நிலையில், மரணதண்டனையை அறவே ஒழிக்கவேண்டும் என்று கோரும் அத்தனை உள்ளங் களும் கொதித்தெழுந்தன. அதன் உச்சகட்டமாக உணர்வுமிகுந்து, உள்ளத்தால் துடிதுடித்த செஞ்சகோதரி செங்கொடி காஞ்சிபுரத்தில் தீக்குளித்துத் தன் உயிரையே மாய்த்துக் கொண்டார்.

மரணதண்டனை நீக்கப்பட்ட நாடுகளைவிட, அதை அப்படியே இறுக்கிப் பிடித்துக்கொண் டிருக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் குற்றவாளி யென மெய்ப்பிக்கப்பட்டு, அவருக்குத் தண்டனை கொடுத்தால், அந்தத் தண்டனை காலம்காலமாக நொந்து, உயிரிழக்கிற வரை அவரைப் பாதிக்கும்; அவர் தண்டனையால் இறந்த பிறகு அவரது குடும்பத்தினரைப் பாதிக்கும்.

இத்தகு கூறுகளை அரசின்முன், நீதித்துறையின் முன்வைத்துப் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனையை- கொலைத் தண்டனையை ரத்து செய்யக்கோரிப் பல அமைப்புகள் போராட்டத்தைத் துவங்கின.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூரில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுவில் இப்பிரச்சினையை விவாதித்து செப்டம்பர், 3 -ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்துவதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

அத்துடன் தாம் நடத்தும் போராட்டங்களில் பங்கெடுத்து ஆதரவுகொடுக்கும்படி பிற அமைப்பு களுக்கு வேண்டுகோள் கொடுத்தும், அதேபோன்று பிற அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் தாங்கள் பங்கெடுத்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்த அறப்போராட்டத்தினை உறுதியாக வலிமைப்படுத்தினர்.

மேலும், தோழர் சி. ஏ. பாலனின் விவகாரத்தை முன்னுதாரணம் காட்டி, ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தினர்- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர் களும், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களும். அத்துடன், கண் கலங்கி நிற்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் மீதும் கருணை காட்ட வேண்டியதன் அவசியத்தைத் தகுந்த வாதங்களுடன் பரிந்துரைத்து, தா. பாண்டியன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியனுப்பினார்.

 இவ்விவகாரத்தில் தலையிட்டு, அம்மூவரின் உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை விடுத்தன. அதற்கு இசைந்து தமிழக முதல்வர் “மரண தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்திச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். தொடர்ந்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

இத்தீர்மானத்தை முன்மொழிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் அதற்கு வழி மொழிந்த சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் நன்றி கூறிக் கொள்கிறது.

ஒரு வழியாக சென்னை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் தூக்கில் போட இடைக் காலத்தடை விதித்துள்ளது. இந்தப் பரிசீலனையும், கருணையும் குறிப்பிடத்தக்கவை என்றாலும், நிரந்தரமாகவே மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும். எனவே, அதற்காக நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்திலும், கட்சிப் பாகுபாடு பாராது, உணர்வுள்ள அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் விழைகிறது. ஏனெனில், இம் மரணதண்டனை எதிர்ப்புப் போராட்டம் அடையப்போகும் வெற்றி என்பது இந்திய வரலாற்றில் ஒரு பரிணாம அசைவு!

Pin It