தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தேழில்

அலைபேசி விளையாட்டில்

வேகம் கூட்டப்பட்ட பாம்பு

இரையை விழுங்க விரைவதைப் போல்

அந்த நள்ளிரவில் சீறிச் செல்கிறேன்

கனரக வாகனத்தில்

என் குழந்தையின் வருடலாய்

சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று

கண்ணாடியில் படியும் பனியயன

களைத்த கண்கள் மீது கவிழும் இமைகளை

நான் திறக்க தூக்கம் அடைக்க

தொடங்கியது துவந்தயுத்தம் அதற்குமெனக்கும்

தனிமையைத் தவிர்க்க ஒலிக்கவிட்ட குறுந்தகடும்

விறைத்து நகரும் கருத்த தேளின்

உருவம் பொறித்த சிறு பாக்கெட்டும்

என் ஆயுதங்கள்

ஒரு சிட்டிகை தூளை உள்ளங்கையில் அள்ளி வைத்து

கசக்கி உருட்டி திரட்டிய சிறு உருண்டையை

கீழ் உதட்டிற்கும் பற்களுக்குமிடையில் வைக்க

ஊறும் எச்சிலை உமிழ்ந்தபடி

பயணத்தைத் தொடர்கிறேன்

போதைச்சாறு கடவாயோரம் வழிந்தகணம்

கறுத்த நதியயன நீளும் தார்ச்சாலையின் குறுக்கே

ஒரு படகென கடந்தவனின் அலறல்

சடன் பிரேக்கிட

கிரீச்சிடும் டயரின் ஒலியாய் எதிரொலிக்க

தெறிக்கும் ரத்தத்தில்

தேய்பிறையின் சிதைந்த நிலா சிவந்த நொடியில்

சாலையோர மிகுந்த பெருமரங்களுக்கு பதிலியாக

சாலை நடுவே இருக்கும் அரளிச்செடிகள்

தம் அசைவை நிறுத்தின

என் வாகனத்தின் கீழே தார்ச்சாலை நழுவியபோது

மீண்டும் அசைய ஆரம்பித்தன

- சக்தி அருளானந்தம்

 

Pin It