சேது சமுத்திரத் திட்டம், இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து மதவெறி அமைப்புகளாலும், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா மற்றும் வட மாநிலத்து இந்துக்களாலும் எதிர்க்கப்பட்டு, அவ்வெதிர்ப்பின் வலிமைக்கு காங்கிரசு கட்சி பயந்துபோனதன் காரணமாக கிடப்பில் போடப்படும் நிலைக்கு வந்துவிட்டது எனலாம்.

சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை பா.ஜ. கட்சி மற்றும் அ.தி.மு.க.விற்கு இருக்கும் எதிர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். இவர்களே முன்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் (தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர்.) இத்திட்டத்திற்கு ஆதரவாக நின்றுள்ளனர். எனவே தற்போதைய எதிர்ப்பு என்பது உள்நோக்கம் கொண்டதே தவிர உண்மையானது அல்ல. இது தமிழக மக்கள் அனைவருக் கும் தெரிந்ததுதான்.

இவ்வெதிர்ப்புக்கான காரணங்களாக, தி.மு.க. + காங்கிரஸ் கூட்டணி, இத்திட்டத்தை நிறைவேற்றிப் புகழ் பெற்றுவிடுவர் என்ற பொறாமை தான் எனச் சிலர் கூறுகின்றனர். மற்றொரு காரணமாக, சிங்கள அரசுக்கு (இலங்கை) ஏற்படும் அந்நியச் செலாவணி இழப்பைத் தடுக்கும் கைக்கூலிகளாக இவர்கள் இருக்கிறார்கள் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.

நமக்கு இந்தக் கூற்றுகளை மறுத்துச் சொல்ல ஏதும் இல்லை. அதே சமயம் எதிர்க்கின்ற பிரபலங்கள் பலரும் பார்ப்பனர்களாக (வாஜ்பாய், வேதாந்தி, இல.கணேசன், எச்.ராஜா, ஜெயலலிதா, சோ, சுப்ரமணிய சுவாமி, மாலன், வாசந்தி போன்றோர்) அல்லது பார்ப்பனிய தாசர்களாக (வைகோ, விஜயகாந்த், சரத்குமார், ரஜினிகாந்த்) இருப்பதன் காரணம்தான் என்ன? என்பதும்,

ஆதரிப்போர் பலரும் திராவிட இயக்கத்தவராகவோ நாத்திகராகவோ அல்லது பொதுவுடைமை இயக்கத்தினராகவோ இருப்பதன் பின்னணி என்ன? என்பதும் சிந்திக்கத்தக்கதாகும்.

இக்கட்டுரை, ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் பிரபலங்கள் பற்றியதல்ல. மாறாக, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி அமைப்புகளின் பின்னால் திரண்ட சாதாரண மக்கள், சாதுக்கள், இந்துக்கள் போன்றோரது உணர்வுக்கு "இராமர் பாலம்" என்று இன்று சொல்லப்படக்கூடிய ஆதம்பாலம் என்ற மணல்திட்டு அமைந்திருக்கக் கூடிய இராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த பார்ப்பனர் + தமிழர்களின் கடந்தகாலப் பங்கு எவ்வாறு காரணமாக விளங்குகிறது என்பது பற்றியதாகும்.

இதனைப் புரிந்து கொள்வதற்கு இராமேசுவரம் தீவு குறித்தும் அங்கு வாழும் மக்களது நிலை குறித்தும் மிகச் சுருக்கமாகவாவது தெரிந்து கொள்வது அவசியம்.

சுற்றிலும் கடலால் சூழப்பட்ட இராமேசுவரம் தீவு 61.08 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. 1989 வரை வெளியுலகத் தொடர்பு என்பது புகைவண்டி மற்றும் நீர்வழிப்படகு, லாஞ்ச் என்று சொல்லப்படும் விசைப்படகு மூலமாகத்தான்.

1989இல் 'இந்திரா காந்தி பாலம்" என்ற தரைப்பாலம் திறக்கப்பட்ட பிறகு பேருந்து மற்றும் இதர வாகனங்களின் போக்குவரத்து துவங்கியது.

இராமேசுவரம் தீவின் ஓரங்களில் 20க்கும் மேற் பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. (அவை பாம்பன், குந்துகால், அக்காமடம், தங்கச்சிமடம், வடகாடு பர்வதம், மாங்காடு, சம்பை, ஓலைக் குடா, பிசாசுமுனை, கரையூர், புதுரோடு, அரியான்குண்டு, தண்ணீர் ஊற்று, தனுஷ் கோடி, மெய்யம்புலி, சுடுகாட்டம்பட்டி, ஏரகாடு, நரிக்குழி, சங்குமால், சேராங்கோட்டை, நாலு பனை, முகுந்தூராயர் சத்திரம் ஆகியவை.) இக்கிராமங்களில் முத்தரையர் (வலையர்) கோனார், கரையாளர், பட்டங்கட்டியர் (கடையர்) பரதவர் போன்றவர்கள் வாழ்கின்றனர். கடையர் (கிறிஸ்தவர்), பரதவர் (கிறிஸ்தவர்) இவர்களில் கடையர் கரை ஓரங்களிலும் பரதவர் ஆழ் கடலிலும் மீன்பிடிக்கும் சாதிகளாவர். மேற் காணும் அனைவரும் உழைக்கும் சாதிகளாவர்.
தீவின் மையத்தில் கோவிலைச் (அகில இந்தியப் புகழ்பெற்ற 'இராமநாதசுவாமி" -ராமன் வழிபட்ட சிவன் கோவில்) சுற்றி முதல்வட்டத்தில் (1ஆவது வார்டு) பார்ப்பனர்கள் சூழ்ந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரப் பார்ப்பனர், தமிழ்ப் பார்ப்பனர் என்ற இருபெரும் பிரிவுகள் உண்டு. இவர்கள் தவிர உடுப்பி பிராமணர், கொங்கனி பார்ப்பனர் போன்றோரும் உள்ளனர். விங்காயத்துக் குடும்பமும் அவர்களுக்கான மடமும் இருக்கின்றன. சரியாகச் சொல்வதானால் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தோருக்கும் இராமேசுவரத்தில் பூசை, காரியங்கள் செய்து வைக்கத் தனித்தனிப் பார்ப்பனர்களும் மடங்களும் உள்ளன.

இவை தவிர 1989க்குப் பிறகு புதிதாக பல டிரஸ்ட்களும், பிற மாநிலத்தவர்களுக்கான லாட்ஜ்களும் பெருகியுள்ளன. அதுபோலவே 1989க்கு முன் ஒரே ஒரு கடையாக இருந்த 'பாம்பே மீல்ஸ்" இன்று பலவாகப் பெருகிவிட்டது.

இவ்வாறு ஹோட்டல் நடத்த வந்த ராஜஸ்தானி மார்வாரிகள் இன்று இடமும் (முக்கிய வீதிகளில்) கடையும் வாங்கி மொத்த வியாபாரிகளாக மாறியது தனிக்கதை. ஒரே ஒரு செய்தி மட்டும், இவர்கள் முதலில் ஹோட்டல் வைத்திருந்த போது இடைநிலைச் சாதியினர் பிற மாநில யாத்ரீகர்களை இவர்களது கடைகளில் சாப்பிட விட்டு கமிசனும் வாங்கி, ஓசியில் சப்பாத்தியும் சாப்பிட்டு வந்தனர். பிறகு இவர்களுக்கு (மார்வாரிகளுக்கு)ப் பாதுகாவலர்களாகவும், இடம் வாங்கிக்கொடுப் பதில் புரோக்கர்களாகவும், இன்று இவர்களது ஹோல்சேல் கடைகளில் யாத்ரீகர்களைக் கொண்டுவிட்டு கமிசன் வாங்குபவர்களாகவும் விளங்குகின்றனர். இந்தக் கமிசன் வாங்குவதில் சாதி பலம், அதிகாரம், அராஜகம் எல்லாமும் உண்டு.

இந்த விதமான வெளி மாநில மடங்கள், டிரஸ்ட்கள், மார்வாரிகள் எல்லோரும் தீவில் வளரும் R.S.S,. இந்து முன்னணி, பா.ஜ.க போன்ற அமைப்புகளுக்கு உரமாக விளங்குகின்றனர்.
இவையெல்லாம் கோவிலைச் சுற்றிய முதல் வட்டத்திலே அமைந்துள்ளன. அடுத்த வட்டத்தில் பிள்ளைமார் (வெள்ளாளர்), கோமுட்டிச் செட்டியார், மஞ்சப்புதூர் செட்டியார், அகமுடையார், (முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் - சேர்வை) மறவர், நாடார், இசுலாமியர் வாழ்கின்றனர். அடுத்து சேவைச் சாதியினரான வண்ணார் தெரு, மருத்துவர் (அம்பட்டர்) தெரு என இன்றும் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிப் பகுதிகளில் குழுமி வாழ்கின்றனர். தீவில் விவசாய நிலம் இல்லாத காரணத்தால் விவசாயக் குடிகளான தேவேந்திரர் (பள்ளர்), ஆதிதிராவிடர் (பறையர்) இருவரும் கிடையாது. துப்புரவுப் பணி நிமித்தம் அருந்ததியர் மட்டுமே கணிசமான எண்ணிக்கை யில் தனியே ஊரின் எல்லைகளில் காலனிகளில் வாழ்கின்றனர். 1989க்குப் பிறகு மீன்பிடித்
தொழில் சார்ந்து தேவேந்திரரும் ஆதிதிராவிடரும் குறைந்த எண்ணிக்கையில் குடியேறி உள்ளனர்.

அதுபோல இசுலாமியத் தெருவும் பள்ளியும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ளன. இசுலாமியரில் மரைக்காயர் (மரக்கல ராயர்) என்போர் வசதியான பிரிவினராக உள்ளனர். பிறர் கறிக் கடை, சங்கு குளிப்பது, சுத்தம் செய்வது, புரோட்டாக் கடை எனப் பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றனர். முன்பு இசுலாமியரில் பெரும் வணிகர்கள் இராமநாதபுரம் பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரரான சேதுபதிகளோடு நெருக்கமாக இருந்ததின் காரணமாக இராமநாத சுவாமி கோவில் அறங்காவலர் குழுவில் இருந்ததாகவெல்லாம் செய்திகள் உண்டு.

இன்று இராமநாதசுவாமி கோவில் கருவறைக்குள் சென்று பூசை செய்விக்கும் உரிமை-அதிகாரம் மகாராஷ்டிரப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உள்ளது. தமிழ்ப் பார்ப்பனர்களுக்குக் கிடையாது. (விதிவிலக்காக நேப்பாள மன்னர் குடும்பத்தினர் மட்டும் கருவறைக்குள் செல்லலாம் என்று சொல்லப்படுகிறது.) இந்த மகாராஷ்டிர பிராமணர்கள் சேதுபதிகளால் அழைத்து வரப்பட்டு இவ்வாறு அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள். அதற்கு முன்பு வரை பண்டார சன்னதிகள் என்று சொல்லப்படுகின்ற வீரசைவர்கள்தான் கோவில் (இராமநாத சுவாமி) சிவனுக்குப் பூசை செய்தார்களாம். தற்போது இவர்கள் பூக்கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் மிக நசிந்த சிறுபான்மைச் சாதியினர்.

தமிழ்ப் பார்ப்பனர்கள் மகாராஷ்டிரப் பார்ப்பனர்களுக்கு உதவியாளர்களாகப் பணி செய்கின்றனர். மேலும் உப தெய்வங்களான பிள்ளையார், முருகன், அனுமார் கோவில் பூசாரிகளாக இருக்கின்றனர். மடப்பள்ளிகளில் சமையல்காரர்களாக இருக்கின்றனர்.

மகாராஷ்டிரா பார்ப்பனக் குடும்பங்களுக்குப் பின்னே சூடத்தட்டை தூக்கிக்கொண்டு சுவாமி வீதிவுலாவின்போது செல்பவர்களாகவும், சிவிகை என்று சொல்லப்படக்கூடிய சிறிய பல்லக்கை (கனம் குறைவானது) உலக்கை போன்ற கம்பு கொண்டு தோளில் தூக்கிச் செல்வது போன்ற வேலைகளைச் செய்கின்றனர். மிகக் கனமான பெரிய கேடகங்களை, வாகனங்களை, பல்லக்குகளை ரதவீதிகளில் தோள் கடுக்கத் தூக்கிச் சுமப்பவர்கள் முத்தரையர்களும் அகமுடையாரில் ஒரு பிரிவினரும் (பல்லக்குத் தூக்கிச் சேர்வை) ஆவர்.

சுவாமி, அம்பாள் சன்னதிகளில் குருக்களாக இருக்கும் மகாராட்டியப் பார்ப்பனர்களுக்கு, துணைத்தெய்வங்களின் பூசாரிகளான தமிழ்ப் பார்ப்பனர்களை விட வருமானம் அதிகம். உண்டியலில் விழும் காணிக்கைகள் இந்து அறநிலையத்துறைக்குப் போகும். தட்டில் (தீபாரதனைத் தட்டில்) விழும் காணிக்கை பார்ப்பனருக்குச் சேரும். இவ்வாறு தட்டில் விழும் காணிக்கைகளை உண்டியலில் எடுத்துப் போடுவதற்கு என்றே பாராக்காரர்களை (காவலர்கள்) நியமித்துள்ளது தேவஸ்தான நிர்வாகம். ஆனால் உண்டியலில் எடுத்துப்போடாமல் ஐயரை எடுத்துக் கொள்ளவிட்டு அதில் பங்கு (கமிசன்) வாங்கிக்கொள்வர் பாராக்காரர்கள். பாராக்காரர்களும் முத்தரையர் மற்றும் அகமுடையார், பிள்ளைமார் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வாரிசு அடிப்படையில், பல்லக்குத் தூக்கிகளைப் போலவே தொடர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு அதிக வருமானம் கிடைக்கக்கூடிய குருக்கள் பணிக்குத் தமிழ்ப் பார்ப்பனர் வரமுடியாதவாறு சாதி தடையாக உள்ளது. மகாராட்டிரப் பார்ப்பனரில் சிருங்கேரி சங்கராச்சாரியிடம் தகுதிச்சான்றிதழ் பெற்று வருபவர் மட்டுமே குருக்களாவர். தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு குரு காஞ்சி மடாதிபதிகளான ஜெயந்திர, விஜயேந்திர சரஸ்வதிகளாவர். இவர்களை சங்கராச்சாரிகளாகவோ இவர்களது சங்கர மடத்தை சங்கரமட பீடங்களில் ஒன்றாகவோ மகாராஷ்டிரர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதில்லை.

அடுத்து ராமேசுவரம் கோவில் நந்தவனங்களையும் பசுப்பட்டிகளையும் பராமரிப்பதும் முத்தரையர்கள்தான். இவ்வாறு கோவிலை ஒட்டி கணிசமான எண்ணிக்கையில் நேரடிப் பணியாளர்களும் மறைமுகப் பணியாளர்களாக ஆயிரக்கணக்கானவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மறைமுகப் பணியாளர்களிலும் முதலில் பார்ப்பனர்கள் வருகிறார்கள். வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து வந்து தம் முன்னோர்களுக்கு இறுதிச் சடங்குகளை (திவசம்) செய்யவிரும்புபவர்களுக்கு அதைச் செய்விப்பதன் மூலம் தினசரி பலநூறு பார்ப்பனர்கள் ஆயிரக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் கைதேர்ந்த பண்டா ஒருவர் தனக்குக் கீழே பல பார்ப்பன(மகாராஷ்டிர)ர்களை வைத்து யாத்ரீகர்களுக்கு சடங்குகளைச் செய்வித்து லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். இச்சடங்கில் தலைக்கணக்கிற்காகக் கலந்துகொள்ளும் பார்ப்பனருக்கு சடங்கொன்றிற்கு ரூ.200உம், வேட்டி, துண்டு, சாப்பாடு எனவும் கிடைக்குமாம். ஒரேநாளில் 2 சடங்குகள் கூட நடைபெறும். அடுத்து இதுபோன்ற யாத்திரீகர்களை அழைத்துவந்து இவர்களிடம் விடும் யாத்திரைப் பணியாளர் (இடைநிலை, ஆதிக்க சாதியினர்) பண்டாவிடம் கமிசன் வாங்குவர். அடுத்து, தங்கும் லாட்ஜ், உண்ணும் உணவகம், பிறகு பொருட்கள் வாங்கும் கடைகள் என எல்லா இடங்களிலும் கமிசன் வாங்கிவிடுவர்.

இந்த யாத்திரைப் பணியாளர் என்போர் சுமார் 500 பேர் நிரந்தரமாக இருக்கின்றனர். இவர்களுக்கென்று ("அகில இந்திய யாத்திரைப் பணியாளர் சங்கம்" எனப்) பதிவு செய்யப்பட்ட சங்கம் இருக்கிறது. இவர்களில் 18 உட்பிரிவுகள் உண்டு. வடநாட்டு (இந்துஸ்தானி) யாத்திரீகர்களுக்கு வழிகாட்டி, பார்பபனர் உதவியோடு பூசை செய்து வைப்போர், ஆலய வழிகாட்டிகள் - இப்படி பிரிவுகள். இவர்களில் கீழ்மட்டத்தில் இருப்போர் வருகின்ற யாத்ரீகர்களுக்கு 22 கிணறுகளில் (தீர்த்தம்) இருந்து தண்ணீர் இறைத்து ஊற்றும் (உழைப்பாளிகள்) பிரிவு.

இராமேசுவரம் கோவிலுக்குள் பல்வேறு இடங்களில் குளங்களும் கிணறுகளும் இருக்கின்றன. இவற்றையே 22 தீர்த்தங்கள், இவற்றில் குளித் தால் புண்ணியம் என்று இந்தியா முழுதும் இருந்து வரும் பிற மாநில மற்றும் தமிழ்நாட்டு மக்கள் நம்பி, அன்றாடம் குளித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு தேவஸ்தானத்திற்கு கட்டணம் (டிக்கட்) செலுத்த வேண்டும். இதில் யாத்திரைப் பணியாளருக்குப் பங்குண்டு. இறைத்து ஊற்றுகின்றவருக்கு, உணவகங்களில் 'டிப்ஸ் (சர்வருக்கு) கொடுப்பது மாதிரி கொடுக்கவேண்டும். சர்வர் யாரும் அதிகாரமாகக் கேட்பதில்லை. இவர்கள் அதிகாரமாகவும் கேட்பர்.

இவ்வாறுள்ள இந்த யாத்திரைப் பணியாளர் சங்கத்திலும் சேர்வை, பிள்ளைமார், முத்தரையர் போன்ற சாதியினர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் எப்போதும் சேர்வைதான். இச்சாதியினர் கட்டுப்பாட்டிலேயே இச்சங்கம் இயங்குகிறது. ஒருகாலத்தில் முத்தரையரைச் சேர்க்க மறுத்ததும் உண்டு. இச்சங்கத்தில் சேர்வதற்குத் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சேவைச் சாதியினரான அம்பட்டர், வண்ணார் போன்றோருக்கு அனுமதி இல்லை.

உறுப்பினர்களுக்கு டோக்கன் (மெம்பர் கார்டு) உண்டு. வாரிசுப்படிதான் வரமுடியும். வாரிசு இல்லாதோர் அல்லது பிற காரணங்களால் (கடன் தொல்லை, வட்டித்தொல்லை) இந்த டோக்கனைப் பிறருக்கு (பல லட்ச ரூபாய்க்கு) விற்று விட்டுச் செல்வர். அவ்வாறு வாங்குபவர் யாத்திரைப் பணியாளர் சங்கத்தினருக்கு ஏற்புடையவராக இருக்க வேண்டும். எல்லோரும் வாங்கிவிட முடியாது. குறிப்பாக ஆதிக்கச் சாதி சேர்வைகளைப் பகைத்துக்கொண்டு யாரும் சங்கத்தில் இருக்க முடியாது.

இச்சங்கத்தினரும் பார்ப்பனரும் கூட்டாகச் செயற்பட்டே சம்பாதிக்கின்றனர். இக்கூட்டு கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் நிலவுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து வந்த இந்துக்களுக்கு அவரவர் மொழியில் பார்ப்பனரும் இவர்களும் சொன்ன கதைகள் மிக முக்கியமானவை. அக்கதையில் ஒன்று ''இராமேசுவரத்தில் உள்ள சிவனை வழிபட்ட பின்புதான் இராமன் அவன் தம்பி லட்சமணனுடன் வானரங்கள் உதவியோடு இங்கிருந்து பாலம் கட்டி இலங்கை சென்று சீதையை மீட்டுவந்தான்" என்பதாகும். பார்க்கச் சாதாரணமாகக் காணப்படும் படிக்காத யாத்திரைப் பணியாளர்கள் பல மொழிப் பேச்சாளர்களாவர். நேப்பாளி, ஒரியா, பொங்காளி என எல்லா மொழிகளும் பேசுவர். இவ்வாறு பேசிப் பேசியே இவர்கள் இந்தியா முழுதும் உள்ளவர்களுக்குப் பரப்பிய கதைகளும் குருட்டு நம்பிக்கைகளும் அதிகம். எழுத்து, புத்தகங்கள் மூலம் பரவிய கதைகள் குறைவாகத்தான் இருக்கும்.

இவ்விடத்தில் பார்ப்பனர்களுக்கும் இடைநிலைச் சாதியினருக்கும் உள்ள கூட்டு, வருமானத்தில் பங்கு போன்றவை அரசியல் கூட்டாகவும் மாறிப்போயுள்ளதைப் பற்றியும் கூறத்தான் வேண்டும். வடநாட்டினர் தங்கள் இறந்த முன்னோருக்குச் செய்யவேண்டிய கடன்களை தங்கமாகவும், வெள்ளியாகவும் பசு மாடாக (கோதானமாக)வும், துணிமணியாகவும், பணமாகவும் பார்ப்பனர்களுக்கு அள்ளிக் கொடுக் கின்றனர். இதில் பூசை தவிர ஆலயத்தைச் சுற்றிக் காட்டியது, சாப்பிட உணவகங்களுக்கு, தங்கும் லாட்ஜுகளுக்கு அழைத்துச் சென்றது, தீர்த்த மாடியது, பூஜைகளுக்கான சாமான்கள் வாங்கிச் செல்வது என்ற அனைத்து வேலைகளையும் (எடுபிடி) செய்ததற்காகப் பார்ப்பனர் சூத்திரர் களுக்குப் (யா.பணி) பங்கு கொடுத்துவிடுவர். இந்த இருவரது கூட்டுதான் வருமானத்தின் வழி. இந்து மதப் பண்பாடு, இராமநாதசுவாமி கோவில் ஆகிய இரண்டும்தான் வருமானத்தின் அடிப் படை. எனவே இராமேசுவரம் தீவில் கோவிலைச் சுற்றியுள்ள இடைநிலைத்சாதி (சேர்வைகள் உள்ளிட்ட ஆதிக்கச் சாதி) யினருக்குக் கோவிலும் பார்ப்பனர்களும் இரு கண்கள். பார்ப்பனர்களுக்கோ இடை நிலைச்சாதியினர் காவல் அரண். இவர்களை மீறி பார்ப்பனரை யாரும் தொட்டுவிட முடியாது. இராமேசுவரத்தில் ஒருமுறை (1980 வாக்கில்) திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டிற்குப் பார்ப்பனரும் யாத்திரைப் பணியாளரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். யாத்திரைப் பணியாளர் சங்கத் தலைவர் (சேர்வை) தன் பரிவாரங்களுடன் சென்று மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரத்திற்காகச் செய்து வைத்திருந்த 'தேர்" போன்றவற்றை உடைத்துப் போட்டனர். காவல் துறை பாதுகாப்போடே மாநாடு நடத்தப்பட்டது.

இன்றைக்கும் இதுதான் நிலைமை. இராமேசுவரம் நகரத்தில் தி.க. வளர முடியாத நிலை. கம்யூனிஸ்ட் கட்சிகள் (சி.பி.ஐ, சி.பி.எம், ஏன் நக்ஸல்பாரி கட்சி கூட) இருக்க முடியும். பார்ப்பனர்களும் உறுப்பி னர்களாக, பொறுப்பாளர்களாக இருப்பர். ஆனால் தி.க வளர முடியாது. தி.மு.க.வே பலவீனமாகத் தான் இருக்கிறது. தி.மு.க.வை விட அ.தி.மு.க. பலமாக இருக்கும். அ.தி.மு.கவுக்குப் பார்ப்பனர் ஆதரவு உண்டு. தி.மு.க தலைமைப் பொறுப்பு தீவில் ஏதாவது ஒரு மைனாரிட்டி சாதியைச் சார்ந்தவரிடம் இருக்கிறது. அ.தி.மு.க.விற்கு முக்குலத்தோர் தலைமை. பா.ஜ. கட்சிக்குப் பார்ப்பனர் தலைமை. தீவைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் கணிசமான எண்ணிக்கையிலும் (1ஆவது வார்டில் வெற்றிபெறுவது எப்போதும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்.) பொருளாதார ரீதியில் பலமானவர்களாகவும் இருக்கின்றனர். ஊரின் அதிகாரம் முக்குலத்தோரிடம் (1989 வரை சேர்வைகளிடமும் தற்போது சேர்வை + தேவர் கூட்டு அதிகாரம்) இருந்தாலும் அது பார்ப்பனர் நலனுக்கு விரோதமாகப் போகாது. இதுதான் இராமேசுவரம் நகரின் நிலமை. இந்த ஊருக்கு வரும் யாத்திரீகர்களிடம்தான் கோவிலைச் சுற்றி வாழும் (மத) நம்பிக்கைகளையும், தங்களது வாயையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழுபவர்கள் 'சேதுபந்தன்" என்ற ராமர்பாலக் கதையை கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லி வருகின்றனர்.

இக்கதைக்கு வலு சேர்க்கும் மற்றொரு பிரிவினரைப் பற்றியும் கூறவேண்டும். அவர்கள் ராமேஸ்வரம் கோவிலைச் சார்ந்து தம் பொருளா தாரத்தை வளர்த்துக்கொள்ளும் வணிகர்கள்.
இராமநாத சுவாமி கோவில் மேற்கு கோபுர வாயில் பிரகாரத்தினுள் 40 கடைகள் 100 ஆண்டுகளுக் கும் மேலாக இருந்து வருகின்றன. (இதில் 14 கடைகள் இசுலாமியருடையவை. இதனை ஆர்.எஸ்.எஸ். கும்பல் எதிர்த்து வருகிறது.) இது தவிர கோவில் ரதவீதிகளில் நூற்றுக்கணக்கான பெரிய+சிறிய கடைகள் இருக்கின்றன. இவ்வாறு கடைவைத்து நடத்த வசதியில்லாத ஏழைகள் தங்கள் கைகளில் சுமந்தே (நந்தா திரைப்படத்தில் சூர்யாவின் தாய் செய்வதுபோல) கடல் பாசி மாலைகள், சுவாமி படங்களை விற்றுப் பிழைக் கின்றனர்.

இக்கடைகளில் கடலில் இருந்து கிடைக்கும் சங்குப் பொருட்கள், பாசிப்பவளங்கள், அழகு சாதனப் பொருட்கள் எனப் பலவும் விற்கப்படுகின்றன. (இந்து மத நம்பிக்கை சார்ந்த சங்கு, வலம்புரிச் சங்கு குறித்து பிரிதொரு சமயம் பார்க்கலாம்.) எல்லாக் கடைகளிலும் தவறாமல் விற்கப்படும் ஒன்று இராமேசுவரம் கோவில் சாமி படங்கள், ஸ்தல புராண பட ஆல்பம் போன்றவை. (தற்போது அச்சிடப்பட்ட படங்களுக்கு மாற்றாக இ,ஈ வந்துவிட்டது.) இப்படங்களில் ஒன்று, ராமர் பாலம் கட்டி இலங்கை சென்று சீதையை மீட்க மேற்கொண்ட நடவடிக்கையை விளக்கும் படம். இதில் இலங்கையை நோக்கி ராமர் கையை நீட்டிக் கொண்டிருக்க, லட்சுமணன் அருகே நிற்க, வானரப் படைகள் கற்களைச் சுமந்து பாலம் அமைக்க, வானரப்படைகளின் தலைவன் அனுமன் மேற்பார்வை பார்ப்பதுபோல அச்சிடப்பட்டிருக்கும். படத்தில் அணில் ஒன்றும் இருக்கும். இப்படம் பற்றிய தர்க்க ரீதியான கேள்விகளை நாம் இங்கு கேட்கப்போவதில்லை.

நமது கவனமெல்லாம் இப்படம் இதுவரை சுமார் 100 ஆண்டுகளில் எத்தனை கோடி அச்சிடப்பட்டு வடநாட்டவர் வாங்கிச் சென்று தத்தமது வீடுகளில் மாட்டி வைத்திருப்பர் என்பது பற்றியதே.

ஏனென்றால், படிக்காத, கல்வியறிவு குன்றிய, உத்திர பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயணம் செய்து வரும் ஏழை விவசாயிகள் (மாசி மகாசிவராத்திரிக்கு) கங்கையிலிருந்து கொண்டுவரும் தண்ணீரை (தீர்த்தம்) இராமநாத சுவாமிக்கு அபிசேகம் செய்துவிட்டு இங்கிருந்து 'கோடி" தீர்த்தம் வாங்கிக்கொண்டு செல்வர். இப்பயணத்தில் வழியிலேயே இறந்து விடும் முதியோரும் உண்டு. (ராமேஸ்வரம் தீவில் இப்படிப் பலர் எரிக்கப்பட்டுள்ளனர்.) அவர்களது வாழ்நாள் லட்சியம் இராமேஸ்வரம் வருவது. ஆண்டுதோறும் வருபவர்களும் உண்டு. இவ்வாறு வருபவர்கள் இராமேசுவரத்தில் கிடைக்கும் சங்கு, சோளி, விபூதி, குங்குமம், குங்குலியம், கல்(!) மண்(!) என அனைத்தையும் மதிப்பு மிக்கதாகக் கருதி வாங்கிச் செல்வர். எந்தப் பொருளையும் வாங்காதவர்கள் (மேற்கு வங்க) வங்காளிகள் மட்டும்தான். தீர்த்தமும் ஆட மாட்டார்கள். வங்காளப் பார்ப்பனர் உட்பட தீவுக்கு வரும் அனைவரும் மீன் சாப்பிடுவார்கள். கோவிலைச் சுற்றியுள்ள வியாபாரிகள் சொல்லும் பொருட்களின் விலையை கால்வாசியாகக் குறைத்துக் கேட்பர். (எல்லோரும் வங்காளி களைத் திட்டுவர்.) அவ்வாறு வாங்கிச் செல்லும் பொருட்களில் ஒன்று நாம் மேலே குறிப்பிட்ட சேதுபந்தன் (ராமர் பாலம்) படம். விற்ற எம் தமிழர்களைப் பொறுத்தவரை காசு தரும் 'சரக்கு". வாங்கிய வடநாட்டவருக்கு?

அடுத்து, கல்லையும் மண்ணையும் வாங்கிச் செல்வதாகக் குறிப்பிட்டேன். அதுவும் உண்மை தான். குறிப்பாக 'கல்"லைப் பற்றிக் கூறவேண்டும்.
தற்போது, கடந்த பத்துப் பதினைந்து ஆண்டு களாக இராமேஸ்வரத்தில் ஒரு மடத்தில் தண்ணீர் தொட்டியில் மிதக்கும் கல்லைக்காட்டி 'ராமர் பால"க்கல் என்று கூறி காணிக்கை பெறுகின்றனர். இது தினசரி பல ஆயிரம் ரூபாய் வரை குவிகின்றது.

முன்பு எங்களது சிறு வயதில் இதுபோன்ற சுண்ணாம்புக் கற்களை (பார்க்கப் பெரியதாக இருக்கும். கையில் எடுத்தால் மிக லேசாக இருக்கும்) சேகரித்து, அடுப்பில் இட்டு சுட்டு, இடித்து, வீடுகளில் கோலப் பொடியாகப் பயன்படுத்துவார்கள்.

இக்கற்களில் காற்றறைகள் மிகுந்திருப்பதால் தண்ணீரில் மிதக்கும் தன்மை உடையதாகும். இக்கற்களைக் காட்டித்தான் தற்போது பணம் பறிக்கின்றனர். சிறுசிறு கற்களை யாத்ரீகர்கள் வாங்கியும் செல்கின்றனர்.

இவ்வாறு இராமேசுவரம் தீவின் கல், மண், தண்ணீர் எல்லாம் புனிதமானவையாக வட நாட்டவரால் கருதப்படுமாறு கதை கற்பிக்கப் பட்டு வந்திருக்கிறது.

இராமேசுவரத்தவர் எந்தப் பொருளையும் விசேசமானது என்று கூறி விற்று விடும் வல்லமை படைத்தவர்கள். இதற்கு ஒருசில உதாரணங்கள் கூறலாம்.

முன்பு களிமண் உருண்டைகள் (விருமண்டக் கட்டி), நாமக்கட்டி போன்றவை அதிக அளவில் விற்றன. இந்தக் களிமண் உருண்டைக் கட்டி களை மருந்துப் பொருட்களாக கருதி வாங்கிச் சென்றனர். நெற்றியில் நாமம் இடுவதற்கான கட்டிகளும் பல வீடுகளில் தயாரிக்கப்பட்டன.

'கனவாய்" என்று ஒரு மீன் வகை உண்டு. அதன் உடலில் ஒரு ஓடு இருக்கும். இதனைக் கழுவி சுத்தம் செய்து 'காணுக்கதவாய்", 'பிச்சுக்கதவாய்" என்று சிறுவர் சிறுமிகள் வடநாட்டு ஏழைகளிடம் விற்பர்.

இக்கனவாய் ஓட்டை உரசி காதுவலிக்கு மருந் தாக ஊற்றலாம் என்று கூறித்தான் விற்கப்பட்டன. (காது என்னத்துக்கு ஆவது? இப்படி விற்ற சிறுவர் கூட்டத்தில் நானும் உண்டு.) இவ்வாறு, தங்களது வாழ்நாள் உழைப்பையெல்லாம் இராமேசுவரத் தில் கொண்டுவந்து கோவில் உண்டியலிலும் கல்லிலும் மண்ணிலும் கொட்டிவிட்டுச் செல்லும் ஏழைகள் நிறைய.

தங்களது தொழில் நிறுவனங்களில் உள்ள உழைப்பாளர்களையெல்லாம் சுரண்டி, அவர்கள் கேட்கும் ஐந்துரூபாய், பத்துரூபாய் கூலி உயர்வையெல்லாம் எதிர்த்து, அவர்களது வயிற் றில் அடிக்கும் குசராத்திகள், மார்வாரி சேட்டுக்கள், கோவை, சென்னை, மும்பை போன்ற பெருநகரங் களில் தொழில் செய்யும் பணியாக்கள் போன்றோர் இராமேசுவரம் வந்து பல பத்துநாட்கள் தங்கி, ராம லீலா, கிருஷ்ண லீலா கதாகாலட்சேபங்கள் நடத்தியும், பார்ப்பனர்களுக்கும் கோவிலுக்கும் பல லட்சங்களை தட்சிணையாகச் செலுத்தியும் வியாபாரிகளது வார்த்தைகளை நம்பி 'வலம்புரிச் சங்கு" போன்றவற்றைப் பல லட்சங்கள் கொடுத்து வாங்கியும் செல்வதும் உண்டு.

இவ்வாறு வந்துபோனவர்கள்தான் இன்று வட நாட்டில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாக, அழைப்புக்கு செவி மடுக்கும் திரளினராக இருக்கின்றனர். இந்தத் திரட்சிக்கு இராமேசுவரம் தீவு (கோவிலைச் சுற்றி வாழும்) மக்கள் ஏதோ ஒரு விதத்தில் காரணமாகிவிட்டனர்.

இத்தவற்றில் பார்ப்பனருக்கும் இடைநிலைச் சாதியினருக்கும் பங்குண்டே தவிர உழைக்கும் தாழ்த்தப்பட்ட - மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக் குப் பங்கு இல்லை. தீவு மக்களை இவ்வாறு இருக்கவிட்ட வகையில் தமிழக அரசிற்கும் இது வரை ஆண்டவர்களுக்கும் பங்குண்டு எனலாம்.

இராமநாதபுரம் மாவட்டம் என்பது பின்தங்கிய வறட்சி மாவட்டம். வானம் பார்த்த பூமி. இம்மாவட்டத்தில் தொழிற்சாலையோ, தொழில் பேட்டையோ எதுவும் இல்லை. பண்டைய தமிழ் இலக்கியங்களின் நிலவியல்படி 'நெய்தல் திரிந்து பாலையானது" என்ற வகைப்பாட்டில் அடங்கும் பகுதியாகும் இது. நெய்தலுக்கே உரிய, தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆழ்கடலோடி மீனும், சங்கும், முத்தும் கொண்டுவரும் கடும் உழைப் பாளர்களும், பாலைக்குரிய உழைப்பில் ஈடு படாத, பிறர் உழைப்பை, உழைப்பின் பயனை (வழிப்பறி) அபகரிக்கும் கள்வர்களும்
வரலாற்று ரீதியாக ஒருங்கே வாழ்ந்துவந்த மாவட்டம் இது.

இந்தப் போக்கு பெரிய அளவில் மாறுபடாமல் இன்றும் தொடரும் பகுதி இது. இறால் ஏற்றுமதியையும் அதனால் வரும் அந்நியச் செலாவணியையும் மையங்கொண்டு லாப நோக்குடன் விசைப்படகு மீனவர் இறால் பிடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து கொல்லிமடி, (மடி=வலை) இரட்டை மடி போன்றவற்றைப் பயன்படுத்தியதன் காரணமாக இயற்கைவளம் கெட்டு மீன் உற்பத்தி குறைந்து போனதாலும், ஈழ விடுதலைப் போரின் காரணமாக இலங்கை, இந்தியக் கடற்கடையினரால் தாக்கப்படுவதனாலும், மீன்பிடிப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத ஆதிக்கச் சாதியினர் விசைப்படகு உரிமையாள ராகவும், மீன் வியாபாரிகளாகவும், மீனவர் சங்கத் தலைவர்களாகவும், வட்டிக்குக் கடன் கொடுத்துச் சுரண்டுபவர்களாகவும் கடற்கரையில் நுழைந்த தாலும் இன்று மீன்பிடித் தொழில் கடும் நசிவுக் குள்ளாகிவிட்டது.

இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் மீனவர்களது மேம்பாட்டிற்காக உருப்படியாக எதையும் செய்யவில்லை. ஆக, உழைப்பாளர் (மீனவர்) நிலை இப்படிப் போனதால் தீவு இன்று பாலை நிலத்திற்குரிய 'வழிப்பறி"யை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறது. வழிப்பறியின் வழிமுறை மட்டும் கால மாறுபாட்டுக்கு ஏற்ப மாறியிருக்கிறது. தீவிற்குள் நுழையும் யாத்ரீகர்கள் எவரும், பார்ப்பனர் முதல் இடைநிலைச் சாதியினர் வரையிலான கோவிலை (ராமனை) மூலதனமாகக் கொண்டோருக்கு காணிக்கை/தட்சணை கொடுக்காமல் தப்பமுடியாது.
இன்று சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்படுவதற்கான மறைமுகக் காரணமாக விளங்கிய இக்கூட்டணி (பார்ப்பனர் + இடை நிலைச்சாதி)யினர் நாளை தமிழக அரசு இக் கோவில் தொடர்பான முற்போக்கான, நவீன மாறுதலைச் செய்தால்கூட அதையும் நேரிடை யாக எதிர்ப்பவர்களாக நிற்பர்.

ஏன், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் அறிவிப்பைக்கூட இராமேசுவரத்தில் இராமநாதசுவாமி கோவிலில் நடை முறைப்படுத்த முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஆட்சியாளர்களுக்கும்கூட சரியான கண்ணோட்டம் இல்லையோ என்றே தோன்றுகிறது. சேது சமுத்திரத்திட்டம் வந்தால் தென்மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும், மாவட்டம் வளம் பெறும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஏற்கனவே தீவைப் பொறுத்தவரை கோவிலைச் சார்ந்திருப்போர் வளமாகத்தான் இருக்கின்றனர். மீனவர்கள்தான் நலிவடைந்து போயிருக்கின்றனர். சேது சமுத்திரத் திட்டத்தை ஒட்டி கிடைக்கக்கூடிய டெண்டர், கண்ட்ராக்ட், அல்லது இன்னும் பிறவற்றை பணபலம் படைத்த நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களே அனுபவிக்கவும் தங்கள் பொருளாதாரத்தை மேலும் வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

சேதுசமுத்திரத்திட்டத்தால் ஏதேனும் பாதிப்பு வருமானால் அது இவர்களைப் பாதிக்காது. ஆனால் மீனவத் தொழிலாளிகளுக்கு, சிறிய மீனவர்களுக்கு என்ன விதமான பாதிப்பு வரும் என்று இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. தீவு மீனவர்கள் அச்சத்தின் காரணமாகவே இன்று எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களது அச்சத்தில் நியாயம் இல்லாமலும் இல்லை. உதாரணமாக ஒவ்வொரு மீனவக் கிராமத்திலும் 'சேதுக்கால்வாய்-மாற்றுத் தொழிற்பயிற்சித் திட்டம்" என்ற பெயரில் மீனவர்களுக்கு இலவசமாக பல்வேறு (மீன்பிடித் தொழிலோடு தொடர்பில்லாத) தொழிற்பயிற்சிகளை அளிக்கத் துவங்கி யுள்ளார்கள். இவை உணர்த்துவது என்ன? நாளை ஒருவேளை மீன்பிடித் தொழிலிலிருந்து வெளியேற்றப் படலாம். (நந்திகிராம் போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஒட்டியும் இது போல் பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக அறிகிறோம்.)

ஏற்கனவே இராமேசுவரம் தீவு பேரூராட்சி (நகரம்-கோயிலும் கோயில் சார்ந்த சுற்றுப்புறமும்) எல்லைக்கு வெளியே உள்ள மீனவக் கிராமங்களது வீடுகளுக்கு நிலையான பட்டா வழங்கப்படவில்லை. அரசு புறம்போக்கு என்றே வைத்துக்கொண்டு வருகின்றனர். வந்தேறிப் பார்ப்பனர்களுக்கு, ஆதிக்க இடைநிலைச் சாதியினருக்கு எல்லாம் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மண்ணின் மைந்தர்களான, தீவின் பூர்வ குடி மக்களான மீனவர்களுக்கு (கடையர், வலையர், கரையர், பரதவர்), ஆண்டாண்டு காலமாக உழைத்து இந்திய அரசுக்கு அந்நியச் செலாவணியை அள்ளித்தந்த மக்களுக்கு புறம்போக்குக் குடியிருப்பும் நிலையற்ற வாழ்வும். திருடர்களுக்கும், சுரண்டல்வாதிகளுக்கும், கந்துவட்டிக்காரர்களுக்கும், எத்தர்களுக்கும் உத்திரவாதமான சுகவாழ்வு. இதுதான் இன்றைய நிலமை. இன்று உள்ள அறிகுறிகள் சேதுசமுத்திரத் திட்டம் மீனவர் வாழ்வில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு கோவில் சார்ந்த பின்தங்கிய, பிற்போக்குப் பழமைவாத பொருளாதார விஷச் சூழலின் மீது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், வருங்கால இளைஞர்களையும் இதற்குள்ளாகவே உழலவிட்டு பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனியத்திற்கும் அடியாட்களாகவே தொடரும் படிச் செய்துவிடுமோ என்று கவலைப்படவேண்டி உள்ளது.

"ஒரு வர்க்க சமூகத்தில் அரசு என்பது ஆளும் வர்க்கக் கருவி" என்பது மார்க்சியம் கற்றுத்தரும் பாலபாடம். எனவே அரசு கொண்டுவரும் ஒரு திட்டம் ஆளும் வர்க்கத்தின் நலனுக்கானதாகவே அமையும். ஆனால் அரசும் ஆளுவோரும் இதனை மக்களிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. வேறுமாதிரியாக, மக்களுக்கு இத்திட்டத்தால் இன்னின்ன பயன்கள் கிட்டும் என்றே கூறுவர். (எ.டு. நந்திகிராம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.) ஆனால் இந்தியச் சமூகம் வர்க்கச் சமூகமாக மட்டுமில்லாமல் சாதியச் சமூகமாகவும் இருக்கிறது. பார்ப்பனரல்லாதார் ஆர்வத்தோடு கொண்டுவரும் திட்டத்தைப் பார்ப்பன(க்கட்சி யின)ர் எதிர்க்கும்போது நமக்கு ஏன் என்ற கேள்வி வந்துவிடுகிறது.

ஐரோப்பாவில் முதலாளியத்தின் வளர்ச்சிக் கட்டத்தில் (தொழிற்புரட்சிக் காலத்தில்) இது போல் சிறு விவசாயிகளும், கைவினைஞர்களும், சிறுதொழில்களும் அழிவுக்குள்ளாகி உருவான பாட்டாளிவர்க்கம் புதிதாக உருவான தொழிற் சாலைக்கான தொழிலாளர்களாக நகர்ப்புறத்தில் குவிந்தனர்.

இங்கு பாரம்பரிய (சாதி வாரியான) கைவினைத் தொழில்கள் நசிந்து அழிந்து போயின. ஆனால் புதிதாக தொழிற்சாலைகள், உற்பத்தி சார்ந்த தொழில்துறையில் மூலதனம் இடுவது இன்றி சேவைத்துறை வளர்க்கப்படும் (உலகமயச்) சூழலில் சாதாரண, சிறு மீன்பிடியின மக்கள் வேலையிழந்தும் அதேசமயம் ஆலைப் பாட்டாளி வர்க்கமாக மாற முடியாமலும் தெருவில் நிற்கும் நிலை வரலாம் என்றே தோன்றுகிறது.

சேதுசமுத்திரத் திட்டத்தைத் தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும், ''தென் மாவட்டத் தமிழர்கள் கடலோரத் துறை முகங்களில் டீக்கடை வைத்தாவது பிழைத்துக் கொள்வர்" என்றும் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

சாதாரணத் தமிழர் எப்போதும் டீக்கடை வைத்துத் தான் பிழைக்கவேண்டும். (அதற்குக்கூட இந்த நாட்டில் சாதிப் பின்புலம் வேண்டும்.) ஆனால் சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்த்து இன்று தடை பெற்றுள்ள பார்ப்பனச் சக்திகள், மக்கள் நலன்- குறிப்பாக மீனவர் நலன் பாதிக்கப் படும் என்ற கவலையினாலோ, அல்லது ஐயத்தினாலோ அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் கேடு வருமோ என்ற அக்கறையாலோ தடை கோரவில்லை.

மாறாக, இல்லாத ராமனின் பெயரால், இயற்கையான மணல் திட்டை 'பாலம்" என்று கூறி மக்களிடம் ஆண்டாண்டு காலமாகத் தங்கள் நலனுக்காகப் பரப்பி வந்த மூடத்தனத்தையே மூலதனமாக்கித் தடை பெற்று விட்டனர்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, இராமநாதபுரம் மாவட்டத்தின் வேலைவாய்ப்பு பெருக்கம் என்று சேதுசமுத்திரத் திட்ட ஆதரவாளர்களிடம் நாம் (மீனவர் நலன் மீது அக்கறை கொண்டோர்) விவாதிக்க, வாதாட நியாயம் இருக்கிறது. ஆனால் மக்களைச் சாதியாகவும், மதமாகவும் பிரித்து பழமைப் பற்றிலேயே மூழ்கடித்துக் கொண்டிருக்கும் மதவெறியர்களுடன் உறவாட எவ்விதக் காரணமும் இல்லை.

யதார்த்த நிலவரப்படி தாம் பாதிக்கப்படுவோமோ (ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்) என்ற அச்சத்தில் உள்ள உழைக்கும் மீனவ மக்கள், அவர்கள் சார்பாகப் பேசுபவர்கள்- மதவாதிகள்
ஆகியோரது மேடையில் ஏறும் நிலை இருக்கிறது. இது ஆபத்தானது.

கடந்த கால இந்தியச் சமூக வரலாறாக, பிரிட்டிஷ் (ஏகாதிபத்திய) முதலாளியம் தன் நலனுக்காகக் கொண்டு வந்த இரயில்வே, சாலைப் போக்கு வரத்து, இராணுவம், தொழில்துறை போன்றவை தான் (இந்தியாவின்) தமிழகத்தின் நீண்டகாலமாக தேங்கிப்போய்க் கிடந்த, இறுகிக் கட்டி தட்டிப் போய்க்கிடந்த சாதியச் சமூகத்தில் சிறிதளவாவது தளர்வையும், பார்ப்பனியத்திற்கு எதிரான விழிப்புணர்வையும் கொண்டுவந்தன.

முதலில் எதிர்த்த பார்ப்பனியச் சக்திகள் தங்களை விட வளமையானவர்களால் கொண்டுவரப்பட்ட மாறுதலைப் பிறகு ஏற்று, அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு வளர்த்துக் கொள்ளவும் செய்தனர்.

அதே நிலைதான் இன்றும். சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் பார்ப்பனிய சக்திகள் நாளை அதனால் கிடைக்கும் நலன்களைப் பெறுவதில் முன்னணியில் நிற்பர். தீவைப் பொறுத்தவரை பார்ப்பன-ஆதிக்க சாதியினர் (பொருளாதாரத்தை கையில் வைத்திருப்போர்) கழுகாகக் காத்திருக்கின்றனர். 'சீச்சீ, 'இராமர் பாலத்தை" உடைத்து வந்த திட்டம், தங்களது கடவுளையே மீறிவந்த திட்டம், அதன் மூலம் வரும் எந்தப் பயனும் எங்களுக்கு வேண்டாம்" என்று ஒதுங்கிப் போகமாட்டார்கள்.

எனவே, இன்று பழைய மூடத்தனத்திற்கு எதிராக உறுதியோடு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் (அது யாருடைய நலனுக் காகத் துவக்கப்பட்டாலும் சரி) என்று கூறும் தி.மு.க அரசு, இந்தச் சமூகத்தை அப்படியே வைத்துக்கொள்ள நினைக்கும் பார்ப்பனியச் சக்திகள் இத்திட்டத்தின் மூலம் பலனை அனுபவித்து விடாதவாறு கண்காணிப்பாக இருப்போம் என்பதற்கான உறுதியளிக்க வேண்டும். இது ஒரு நல்வாய்ப்பு. ஆனால், ஒரு புதிய விஞ்ஞானத்தின்- புதிய கடல் வழித்தடத்தின் குறுக்கே ராமனை, இந்து மதக் குறியீட்டை, திராவிடர்களின் தலைகுனிவுக்கான மூலக்கருவை, 'தமிழர்களின் எதிரி"யைக் கொண்டு வந்து படுக்க வைத்துவிட்டார்கள் மதவெறியர்கள்.

மதச் சார்பற்ற ஆட்சியாளராக/ஆட்சியாக இருக்கிறோம் என்பதை உலகுக்குக் காட்ட நல்வாய்ப்பு. குறுக்கே படுத்திருக்கும் மணல் திட்டை- மூட நம்பிக்கையை - கீறிக் கிழித்துப் பிளந்து முன்னேறிச் செல்ல வேண்டும். சமரசத் திற்கோ (மாற்று வழி), பேச்சவார்த்தைக்கோ இதில் இடமில்லை.

ஆனால் மத்திய அரசின் உறுதியின்மையைப் பார்க்கும்போது, அன்றைய பிரிட்டிஷ் முதலாளி யமும் சரி இன்றைய பன்னாட்டு முதலாளியமும் சரி பழமையை, நிலமானியத்தை, பார்ப்பனியத்தை முற்றிலும் ஒழித்து தம்மை வளர்த்துக் கொள்ளாமல் அதனுடன் சமரசம் செய்துகொண்டு கூட்டுச்சேர்ந்து வளர்வதையே தங்கள் வழிமுறை யாக கொண்டுள்ளனர் என்றே தோன்றுகிறது.

இதுதான் இன்றைய இந்தியாவின்- தமிழகத்தின் பிரச்சினை. உலக முதலாளியத்தின் சுரண்டலுக்கான அடித்தளமாக பார்ப்பனியம் விளங்குகிறது. எளிய மக்கள் இச்சுரண்டலை எதிர்த்து ஒரு பலமான தொழிலாளிவர்க்கமாகத் திரண்டு எழ முடியாமல் பார்ப்பனியச் சாதி முறை தடுத்துக் கொண்டிருக்கிறது. ஒது குறைந்தபட்ச திரட்சிக்குக்கூட வழியில்லாதவாறு பிளவுகள்/சாதிப் பிரிவுகள், மேலும் பிளவுகள்/உட்சாதிப் பிரிவுகள் என்று தொடர்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் எந்த அரசும் பார்ப்பனியம் பலவீனப் படும்படியாகத் திட்டமிட்டு உற்பத்தித் துறையில் மாறுதலை ஏற்படுத்தவில்லை. கடந்த ஆண்டு திருப்பதி கோயில் வருமானம் 1943 கோடியாம். இராமேசுவரம் கோயில் வருமானம் அந்த அளவிற்கு இருக்காது. ஆனால் பார்ப்பனர் + வியாபாரிகள் + இடைநிலைச் சாதி யாத்திரைப் பணியாளர் + சுற்றியுள்ள மடங்கள், லாட்ஜுகள் என அனைவருக்கும் கிடைத்த வருமானம் கனிசமானதாகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு மாநில அரசும் இதுபோன்ற கோவில்களையும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானங்களையும் அவற்றைப் பெருக்கும் வழிமுறை களையும் திட்ட மிடுகின்றது. ஏனென்றால் 1943 கோடி என்பது சாதாரணத் தொகையல்ல. ஆனால் கோவிலும், அதில் குவியும் மக்களும் அதனால் ஏற்படும் சமூக விளைவுகளும், கோவிலின் சூழலும் பொருளாதாரமும், அதை நம்பி வாழும் மக்களும், அவர்கள் மேற்கொள்ளும் அரசியல் நிலைப்பாடும் என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். "மதச்சார்பற்ற" அரசு என்பதற்கு மாறாக-மதம், கடவுள் நம்பிக்கை என்பது தனிமனிதர் களது சொந்த விருப்பம் என்பதற்கு மாறாக- இவற்றைக் கட்டிக் காக்கும் அரசாக- மேலும் வளர்த்துச் செல்லும் அரசாகச் செயற் பட்டதன் விளைவு இன்று அரசின் 'உற்பத்தித் துறை" சார்ந்த ஒரு திட்டத்தின் மீது மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை குறுக்கிட்டுத் தடுத்து நிறுத்தவும், ஆதிக்கம் செய்யவும் கூடிய நிலை வந்தவிட்டது.
(மதுபானக்கடை நடத்தி அதில் பெறும் வருமானமும் கோவில் மூலம் வரும் வருமானமும் ஒன்றுதான். இரண்டு போதைகளும் மக்களைச் சீரழிக்கும் என்பதை ஆட்சியாளர் சிந்திக்கவில்லை.)

சாதிய ஆதிக்கவாதிகளின் பிடியில் உள்ள கோவில் உள்ளிட்ட, சாதியத்தைக் கட்டிக் காக்கும் அனைத்து பிற்போக்கு நிறுவனங்களையும் அரசு கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், மாற்றியமைக்கவும் வேண்டும்.

அதேபோல் இதுபோன்ற பிற்போக்கு நிறுவனங்களைச் சார்ந்து வாழும் பிரிவினரை விடுவித்து விஞ்ஞானப் பூர்வமான தொழிற்துறை வாய்ப்புகளை ஏற்படுத்தி, அதில் உழைத்துப் பிழைக்குமாறு செய்யவேண்டும். இவர்களது வாழ்வின் ஆதாரமாக கோவில் நிலவும் வரை வெறும் அறிவுப் பிரச்சாரத்தின் மூலம் நாம் எதையும் சாதித்துவிட முடியாது. வயிற்றையும் மனசை (மூளையை)யும் முரணாக நிறுத்த வேண்டாம். உடனடியாக இதைச் செய்தால் இன்னும் ஒரு தலைமுறையில் புதிதாகக் கொண்டுவரப்படும் எந்த ஒரு தொழில்துறைத் திட்டத்திற்கும் கடவுளும் மதமும் பார்ப்பனியமும் தடையாக குறுக்கே வரமுடியாது. மாறாக அத்திட்டத்தின் மூலம் பலன்பெறும் அல்லது பாதிக்கப்படும் மக்கள் அறிவியல் பூர்வமாக விவாதிக்கவும் அல்லது போராடவும் முடியும்.

சேதுக் கால்வாய் குறித்து இவ்வாறான மக்கள் நலன் குறித்த விவாதமோ, போராட்டமோ பெரிய அளவில் நடைபெறவில்லை. அந்த இடத்தை ராமனும் மதவாதிகளும் பறித்துக்கொண்டு விட்டனர். அடுத்த முறை மக்கள் இவர்களிடம் இருந்து இழந்த உரிமையை மீட்டுக் கொள்ளுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை "பகுத்தறிவாளர் - கலைஞர்" மேற்கொள்வாரா?

Pin It