தமிழில்: ஏ.எம். சாலன்
மலையாள மூலம்: இ.பி. ஸ்ரீகுமார்

வெகுமானப்பட்ட கனம் நீதிபதி அவர்களே, வணக்கம். நானொரு கொலைகாரன். எல்தோஸ் என்ற புரட்சியாளனை மரத்தோடு சேர்த்துக் கட்டிவைத்து துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றவன். ஒரு ஓய்வுபெற்ற கான்ஸ்டபிள் என அறிமுகப்படுத்திக் கொண்டுதான் கடிதம் எழுத வேண்டும் என்பது எனக்குத் தெரியும் ! ஆனால், நான் இப்படித்தான் எழுதுவேன், சார்.

இது, என்னுடைய மனச்சாட்சியினுடைய வெளிப்படுத்துதல், அவ்வளவுதான். மூடி வைக்கப்பட்ட இந்த உண்மையைப்பற்றித் தெரிந்தவர்களோ, சாட்சிகளோ இந்த உலகில் என்னைத் தவிர வேறு எவரும் கிடையாது. புரட்சிவாதிகள் என்றால் எங்கள் போலீஸ் இலாகாவின் அகராதிப்படி ராஜத்துரோகிகள் என்று பொருள். இவ்வாறுதான் எங்களுக்குச் சொல்லித் தரப்பட்டிருந்தது.

எங்கு பார்த்தாலும், எல்லா இடங்களிலும் ஒற்றர்களை உருவாக்க முடியும் என்பது போலீசின் கருத்து. அவ்வாறு வேவு பார்த்துக் கிடைத்த சேதியின் அடிப்படையில் வீசிய வலைக்குள் வந்து மாட்டியவன்தான் அந்தப் ‘பிடிகிட்டாப்புள்ளி.’

போலீசினோடு ஏற்பட்ட மோதலின் போது ‘அவன் செத்துப் போனான்’என்று சேதி ஊரெங்கும் பரப்பப்பட்டது. எல்தோஸ் செய்த குற்றம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. சிதறிக்கிடந்த தலித்துகளையும் மலைவாழ் மக்களையும் ஒன்றுதிரட்டி, அவர்களுக்குரிய உரிமைகளை அரசிடம் இருந்து எவ்வாறு போராடிப் பெற வேண்டும் என்பதைப்பற்றி அவர்களுக்குக் கற்றுக்கொடுத்ததுதான் அவன் செய்த குற்றம் !

உண்மையில் எங்களில் பல போலீஸ்காரர்களும் எல்தோஸின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களே ! எல்தோஸ் ஒரு நேர்மையான புரட்சிவாதியாகவே இருந்தான். ஒரு புரட்சிவாதி உண்மையில் ஒரு தியாகியே தன் இளமைப் பருவத்தையும் சுகமான வாழ்க்கையினையும் அந்நியருக்காக (ஆதிவாசி - தலித் மக்களுடைய சுதந்திரத்திற்காக) வேண்டி தியாகம் செய்பவன். சுரண்டலுக்கு எதிராகப் போராடவும், லட்சியத்தை அடைவதற்காக வேண்டி குரூரமான தாக்குதலுக்கு உள்ளாகவும், ஏன்-சாவைக்கூடப் பொருட்படுத்தாமல் தன் லட்சியத்தை அடைவதற்குரிய நெஞ்சுரம் மிக்கவன். இதனால் தான் கட்டிப்போட்ட அந்தச் சிங்கத்தை வெடி வைப்பதற்கு, முன்னால், என்னையறியாமலேயே என் கைகள் "வெடவெட’ வென நடுங்கியவாறு தொழ ஆரம்பித்துவிட்டது.

"சீ, ராஸ்கல். ஒரு கிரிமினலையா கும்பிடுகிறாய்? துப்பாக்கியால் சுடுடா, அவனை..”

மேலதிகாரியின் ஆக்ரோஷத்தைக் கண்டு பயந்துபோன நான், துப்பாக்கியைக் கையில் எடுத்தேன். "நம் பழம்பெரும் பாரத பூமியில் ஒரு புதிய விடியலைக் கொண்டுவரத் திராணியுள்ள, ஆயிரமாயிரம் பாவப்பட்டவர்களுடைய கனவுகளையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் நடைமுறைப்படுத்துவதற்காக வேண்டி துணிந்து முன்வந்த இந்த வீரனையா..?”

என் கைகள் நடுங்கின. நிமிடங்கள் கழிந்ததும் மேலதிகாரி அலறினான். எனக்கு இந்த இடத்தில் குறிப்பிட முடியாத அல்லது எழுத இயலாத போலீஸ் மொழியில் நான் முணு முணுத்துக் கொண்டேன். ஆனாலும் நான் ஒரு கீழ் உத்தியோகஸ்தன் அல்லவா? நான், குறி வைக்கத் தொடங்கினேன்.

என்ன ஆச்சரியம் மிகக்கொடியவன் என முத்திரை குத்தப்பட்ட எல்தோஸின் முகம் இப்போது ஒரு குழந்தையின் முகத்தைப்போல் களங்கமற்றுக் காணப்பட்டது. அதுமட்டு மல்ல! என்னுடைய வயதையொத்த அந்த இருபத்தேழு வயது நிரம்பிய எல்தோஸினுடைய முகம், பார்வைக்கு என்னுடைய முகம் போலவே காணப்பட்டது. இது என்னை சஞ்சலத்திற்குள்ளாக்கியது.

நான் நடுங்கினேன்.

பாவம் ஒரு குண்டில் காரியத்தை முடிக்க வேண்டும் என நான் எண்ணினேன். ஆனால் நான் வைத்த முதல் குறி தவறிப்போய் அவன் காலில் பட்டது.

“யூஸ்லெஸ் பெகர்.. இவ்வளவு பக்கத்தில் நின்று சுடச் சொன்ன பிறகும் உன்னால் சுடமுடியவில்லை, இல்லையாடா?..” பக்கத்திலிருந்து எங்கள் அதிகாரி முணுமுணுத்துக் கொண்டிருந்தார். மின்னும் நட்சத்திரங்கள் அணிந்திருந்த வேறு பல அதிகாரிகளும் என் பின்னால் நின்று கொண்டிருந்தார்கள்.

"படபட” வென என் இதயம் அடிக்கவே நான் மீண்டும் அவனுக்கு நேரே குறி வைக்கத் தொடங்கினேன். “எல்தோஸினுடைய உதடுகள் அசைந்தனவா?” அக்கண்களுடைய தீட்சண்யப் பார்வையில் மூழ்கி நான் என்னையே மறந்தேன்.

முன்பே, கைது செய்யப்பட்டு மரத்தினோடு கட்டி வைக்கப்பட்ட எல்தோஸிற்கு, என்னோடு சேர்த்து நான்கு போலீஸ்காரர்கள் காவல் இருந்தோம். மொத்தம் பதினோறு மணிக்கூர் நேரம். அந்த நேரம் முழுவதும் மெல்லிய ஆனால் உறுதியான குரலில் எல்தோஸ் ஏதோ சொன்னான். இதுவரையில் நான் கேட்காத வார்த்தைகளாக இருந்தன அவை என்னுடைய சிந்தனையினையும் விசுவாசத்தையும் கண்ணோட்டத்தையும் அது அடியோடு புரட்டிப் போட்டது என்னுடைய வாழ்க்கையே மாறிப்போனது. புதிய லட்சியங்கள்... கனவுகள்... என, ஒரு புதிய பார்வையினை அவன் எனக்குள் ஏற்படுத்திவிட்டான்! கடைசியில் பதினொரு மணிக்குப் பின்னர், அவன் சொன்னான்:

“உங்களில் ஒருவன் என்னைக் கண்டிப்பாகக் கொல்வான்”

அதைக் கேட்டதும் நாங்கள் திகைப்படைந்தோம். பிறகு, நாங்கள் அதைச் சிரித்தவாறே விட்டுத்தள்ளி விட்டோம். கொல்லவா? அதை எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் கட்டுண்டுகிடந்த எல்தோஸிற்கு அது உறுதியாகத் தெரிந்திருந்தது.

""முடிந்தால் ஒரு உதவி செய்வீர்களா?” என்றவன், "என் மீது துப்பாக்கிக் குண்டைப் பாய்ச்சும் முன்னால், சைகை மூலம் அதை எனக்குத் தெரிவிக்க வேண்டும். அதாவது, உரக்க ஒரு கோஷம் போட எனக்கு அனுமதி தரவேண்டும். அப்படித் தருவதாக இருந்தால்...” என்று தொடர்ந்ததை ஒட்டி, உரக்க ஒரு சப்தம் கேட்டது. சற்று நேரம் கடந்ததும் மேலதிகாரிகளுடைய நடவடிக்கைகள் எங்களுக்குச் சந்தேகத்தைக் கிளப்பியது.

“திருடவோ, கொள்ளையடிக்கவோ செய்யாத ஒரு லட்சியப் போராளியான பிரதியை, நீதிமன்றத்தில் கொண்டல்லவா ஆஜராக்க வேண்டும்?” என, நான் எங்களுடைய மேலதிகாரிகளைப் பார்த்துக் கேட்டேன். அதற்கு அவர், சுட்டெரிக்கும் பார்வையோடு கீழ்க்கண்டவாறு சொன்னார்:

“அப்படீன்னா, பரிதாபப்படக்கூடிய நீதான் அவனைக் கொல்ல வேண்டும்” என. ரகசியம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக வேண்டி, அவன் மீது அக்கறை கொண்ட என்னை வைத்தே எல்தோஸினைக் கொல்லத் திட்டமிட்டார்கள். இப்படித்தான் நான் அந்த லட்சியவாதியைக் கொலை செய்வதற்குக் கட்டாயப் படுத்தப்பட்டேன். எனது இரண்டாவது குண்டு அவனுடைய வலது கண்ணில் பாய்ந்தது. அதையொட்டி திடீரென என் முதுகில் ஓங்கி ஒரு குத்து விழுந்தது.

“உனக்கு என்னடா அவனோடு ஒரு ஸாப்ட் கார்னர்? டேர்ட்டி பிச்.. உன்னால் அரசாங்கத்தினுடைய ரெண்டு குண்டுகள் பாழாயிற்றே ! தீவிரவாதியோடு நடந்த மோதலில் ஒரு கான்ஸ்டபிள் சாவு! என, வருந்தித் தீர்க்க வேண்டி வரும்õ ..!

அதிகாரியின் மிரட்டலினுள்ளேயிருந்த பொருள் எனக்குப் புரிந்தது. அவர் குரலிலிருந்த தொனி எனக்குப் பயத்தைக் கொடுத்தது. அடுத்த குண்டு எல்தோஸினுடைய மார்பைத் துளைக்க வில்லையெனில் வேறொரு குண்டு என் நெஞ்சில் வந்து பாய்வதற்குத் தயாராக இருந்தது. அதன் பிறகு நான் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. எனக்கு என் உயிர் முக்கியம் கண்களை மூடிக்கொண்டேன். குண்டு ஒன்றல்ல, இரண்டல்ல தீரும் வரையில்... தலை சுற்றிக்கொண்டு வரவே, அவன் தளர்ந்து கீழே விழுந்தான்.

“புரட்சி ஓங்குக” குண்டடிபட்டு உயிர் வெளியேறும் போது கேட்ட கனத்த குரல், எனக்குக் கனவில் கேட்பது போலிருந்தது.

அந்தச் சம்பவம் அன்றிலிருந்து என் நெஞ்சுக்குள் தீக்குழம்புபோலக் கிடந்து கொதித்துக்கொண்டிருக்கிறது, சார் எனக்கு மன சமாதானம் இல்லை இப்போது. செய்த பாவத்தை எண்ணி நான் வெந்து உருகிக் கொண்டிருக்கிறேன். என்னால் உறங்க முடியவில்லை. டாக்டர்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு வந்த தூக்க மாத்திரைகளுக்குக்கூட என்னைத் தூங்க வைக்க இயலவில்லை. என்னால் பொறுக்க முடியவில்லை. எனவேதான், நான் செய்த குற்றத்தைச் சமூகத்திற்குத் தெரியப்படுத்தினேன். எனக்குத் தண்டனை வழங்குமாறு நானாகவேதான் நீதிமன்றத்தில் போய் முறையிட்டேன். அவர்கள் வழக்கு பதிவு பண்ணினார்கள்.

விசாரணையும் நீண்ட நடவடிக்கைகளும் முறையாக நடந்தன. துடிக்கத்துடிக்க ஒரு உயிரைக் கொன்ற கொலையாளிக்கு எதிரே ஒரு விசாரணை தேவையா?... நம்மை அழும்படி விட்டுவிட்டுப் போன சங்கீதத்திற்கு எதிராக... வேதனையை ஏற்படுத்திவிட்டுச் சென்ற எழுத்துகளுக்கு எதிராக...

இவற்றுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கிறது?

மனசுக்குள்ளிருக்கும் சிநேகம், பக்தி, கனவு என இவை எதற்குமே ஆதாரம் கிடையாது, சார். கீழ்க்கோர்ட்டிலுள்ள சட்டப்புத்தகங்களின்படி, "குற்றமற்றவன்” என அறிவித்து சும்மாவிட்ட ஒரு ஆளுக்கு "நான் குற்றவாளி” எனக் காட்டி, மேல் கோர்ட்டில் அப்பீல் ஹர்ஜி கொடுப்பதற்கு நம் சட்டத்தில் இடம் இல்லை. இது அநீதியல்லவா, சார்?

ஒரு கேள்வி மிக நியாயமானதே.

இருபத்து ஏழு வருடங்களாக இந்தக் கொலையைப் பற்றி வெளியே சொல்லாமல் ஏன் மூடி மறைத்து வைத்திருந்தாய்?

"பயமாக இருந்தது சார், எனக்கு. நான் உடனே இதை வெளியே சொல்லியிருந்தால் அப்போதே என்னுடைய வேலை பறியோயிருக்கும். என்னுடைய வருமானத்தை நம்பி, அன்று என் வீட்டில் ஐந்தாறு ஜீவன்கள் இருந்தன. மட்டுமல்ல வேலையிலிருந்துகொண்டு அன்றைக்கு நீதி மன்றத்திற்குச் செல்லவும் முடியாது. அதையும் மீறி நான் நடந்திருந்தால், அங்கிருந்த அந்த நான்கு உயர் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து என்னைக் கொலை பண்ணுவது உறுதி.

-என்னைக் குற்றவாளி என அறிவிக்கும் வரையில் நான் காத்திருந்தேன். பொது மக்களின் உயிரையும் உடைமைகளையும் போலீஸ் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்பதல்லவா சட்டம் அதற்காக வேண்டி மக்களிடமிருந்து வசூல் பண்ணிய பணத்தின் மூலம் வாங்கிய ஆயுதங்களையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி மக்களை அழிப்பதை விட கொடிய குற்றம் இவ்வுலகில் வேறு உண்டா? எதிர்க்கவியலாத ஒரு கீழ் உத்தியோகஸ்தனைத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொடிய கொலை பாதகத்தினைச் செய்யத் தூண்டிய இந்தச் செயல் பொறுக்கக்கூடியதா, சார்?

அவர்கள் மொத்தம் நான்கு பேர் இருந்தார்கள். கொன்ற பாவத்திற்காக, ஒன்றாம் பிரதியாக நான் தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயார். ஆனால் ஒன்று- எனக்குப் பிறகு சிறையதிகாரிகளாக இருந்து சுகிக்கக்கூடிய அந்த நான்கு பேரையும் இந்தக் கேஸில் உட்படுத்தியாக வேண்டும். பச்சாதாபத்தின் பேரில் சிந்தும் ஒரு துளி கண்ணீரையாவது நியாயாதிபன்மார் உட்கார்ந்திருக்கும் பீடத்தின் முன்னால் சிந்த வேண்டும்.

உங்களுக்குத்தான் தெரியுமே, நான் செய்த குற்றத்தை அரசு தரப்பு வக்கீலினால் நிரூபிக்க முடியவில்லை என்பதால், நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்துவிட்டது என. அவற்றுக்கான ஆதாரம் இல்லையாம்!

"நான்தான் கொலை செய்தேன்” என, ஒருவர் உள் உறுத்துதலின் பேரில் முழுமனதோட ஒப்புக்கொள்வதை விட வேறு என்ன சார் ஆதாரம் வேண்டும்? இது ஒன்று போதாதா? மரணம் என்னைத் துரத்திக்கொண்டே வருகிறது. எந்த நிமிடம் வேண்டுமானாலும் ஒரு வாடகைக் கொலையாளி மூலம் என் உயிர் போகலாம்! ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் தப்பிக்கலாமே தவிர ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என நம் சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டிலுள்ள குற்றவாளிகள் முன்கூட்டியே தப்பித்துச் செல்வதற்குரிய முன்கூர் ஜாமியம் அல்லவா, இது இதற்குரிய உதாரணமாக வேண்டுமானால் என்னை எடுத்துக் கொள்ளலாம். இந்த மாதிரியான சல்லடைக் கண்கள் உள்ள நம் சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு எல்லா குற்றவாளிகளும் தப்பிச் சென்ற பிறகு, அப்புறம் யாரைத் தண்டிக்க இயலும்?

உங்களுக்குத் தெரியுமா? எங்க அப்பா தற்கொலை செய்து இறந்து போனார். எனக்கு ஆறு வயசாக இருக்கும் போது அப்பா பட்டாளத்தில் போய்ச் சேர்ந்தார். பணத்திருட்டு, அதன் கணக்குகளைத் திருத்தி மாற்றுதல் - போன்ற குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன. எனக்கு முழு நம்பிக்கை உண்டு, என்னுடைய அப்பா ஒருபோதும் அவ்வாறு செய்திருக்க மாட்டார் என.

ஒருநாள் உடம்புக்கு முடியாமல் அப்பா தூங்காமலிருந்த வேளையில் - தூக்கம் வராமல் அங்கும் இங்குமாகப் புரண்டு கொண்டு கிடந்த என்னை அவரோடு சேர்த்து வைத்துகொண்டு, தலையையும் முகத்தையும் தடவிக் கொண்டிருந்தார். அப்புறம் என் கன்னத்தில் முத்த மிட்டார்.

“நான் தப்பு செய்யல மக்கா. ஆனால் சூழ்நிலை எனக்கு எதிராக இருக்கிறது. இருந்தாலும் ஆட்கள் இதை நம்பு வார்கள் என எனக்குத் தோன்ற வில்லை.”

என்னுடைய மார்பின் மீது இரண்டு துளி கண்ணீர் வந்து விழுந்தது. அன்றுதான் முதன் முதலாக என் நெஞ்சு விம்மிற்று.

ஆனால், நான் செய்த பாவத்தை நான் முதன்முதலாக என் மனைவியிடம் தான் தெரிவித்தேன். அவள் என்னைக் குற்றப்படுத்திப் பேசவில்லை. அதற்குப் பதில் ஜெபம் பண்ணினாள். பின்னர், அந்த ஜெபம் நிறுத்தப்படவே இல்லை. காலை படுக்கையிலிருந்து எழுந்தது முதல் இரவு தூங்குவது வரையிலும் அந்த ஜெபம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவளுடைய இதழிலிருந்து ஜெபத்தைத் தவிர நான் எந்தப் பேச்சையும் கேட்டது கிடையாது.

அவள் நமக்கு எதிராகப் பேசாத தெய்வம் போன்றவள் என்பதால் நான் இதை அவளிடம் தெரிவித்தேன். எல்தோஸ் தலைமறைவாக இருந்த வேளையில் ஒரு பெண்ணோடு அவனுக்குக் காதல் ஏற்பட்டிருந்தது. இது வேறு யாருக்கும் தெரியாது. எல்தோஸ் இறக்கும் போது அவள் கர்ப்பிணியாக இருந்தாள். அப்பெண்ணின் காதலனைக் கொன்று - அவளையும் அவளுடைய குழந்தையினையும் அனாதையாக்கிய நபர் யார் என்பதைப் பத்திரிகைகள் வாயிலாகத் தெரிந்துகொண்டு திடீரென ஒரு நாள் அவள் என்னைத் தேடி வந்தாள்.

“நான் உங்களைக் காண வேண்டும் என ரொம்ப நாளா காத்துக்கிட்டிருந்தேன்,” என அவள் சொன்னாள். எனக்கு அப்பெண்ணின் முகத்தை நேருக்கு நேர் சந்திக்க இயலாததினால் நான் தலை குனிந்தேன். அவள் ஒன்றும் பேசாமல் என் முன்னாலேயே நின்று கொண்டிருந்தாள். என் மீது குற்றம் சுமத்தவில்லை; கோபப்படவும் இல்லை. ஆனால் ரொம்ப நேரமாக அவள் மௌனமாக இருந்தது எனக்கு என்னவோ போலிருந்தது. மௌனம் என்ற அம்புகள் என்னைத் துளைத்துக் கொண்டிருந்தன. அதனால் பாதிக்கப்பட்ட என் மனசு துடித்தது. அவளைச் சமாதானப்படுத்த எனக்கு நா எழவில்லை.

"இனியும், இப்படி அடிக்கடி மௌனமாக வந்து நிற்பேன் என்பதாக, அவள் நிற்பதை வைத்து நான் அர்த்தப்படுத்திக் கொண்டேன். இந்தக் கடிதம் நான் நீண்ட நேரமாக உட்கார்ந்து எழுதியது. இதை நான் எழுத உட்காரும் போது என் மகள் வயிற்றுப் பேத்தி "தாத்தா” எனக் கூப்பிட்டவாறு ஓடி வருவாள். என் பேத்தியின் சப்தம் நான் பயன்படுத்திய முதல் துப்பாக்கிக் குண்டின் ஓசையை நினைவு படுத்தும். பிறந்த சற்று நாட்களுக்குள் போலியோ நோயினால் பீடிக்கப்பட்டு இடுப்புப் பகுதிக்குக் கீழே உடம்பு தளர்ந்து போனது என் பேத்திக்கு. என் காலையேதான் அது அடிக்கடி பூனைக்குட்டி மாதிரி சுற்றிச் சுற்றி வரும். மகன் வயிற்றுப் பேத்திக்கு இப்போது வயது நான்கு. கண்பார்வை தெரியாது. என்னுடைய சப்தம் வெளியே கேட்கவில்லை என்றால், "தாத்தா.. தாத்தா...” எனக் கூப்பிட்டவாறு தட்டுத்தடுமாறி நடந்துகொண்டு அழும் அவளுடைய குரல், எல்தோஸினுடைய கண்ணைத் துளைத்த இரண்டாவது துப்பாக்கிக் குண்டினை எனக்கு நினைவுபடுத்தும்.

சார், குற்றவாளியாகிய நான் தண்டனையை அனுபவிக்காததின் காரணத்தால் என் பேரக்குட்டிகள் அதற்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனியும் தீரவில்லை, சார். எல்தோஸின் உடம்பில் நான் பாய்ச்சிய குண்டிற்கான தண்டனை இன்னும் பாக்கி இருக்கிறது. ஒரு ஆண் பிள்ளைக்கு ஆசைப்பட்டு, இரண்டாவது கர்ப்பம் தரித்திருக்கிறாள். என்னுடைய குடும்பத்தில் ஒருபோதும் ஆண்பிள்ளை பிறக்கப் போவதில்லை என்பது எனக்கு மட்டும்தானே தெரியும் அப்படியே பிறந்தாலும்கூட அது செத்த பிள்ளையாகத்தான் இருக்கும்.

நான் செய்த தவறுக்காக அந்தப் புரட்சிவாதிக்குப் பதிலுக்குப் பதில் வழங்க என்னுடைய பேரக் குட்டிகளுக்குரிய கண்ணும், காலும், இதயமும் ஈடாகுமானால் - நான் அவைகளை யெல்லாம் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன்.

என் மகன் வினயனுக்கு நேற்று கடுமையான மார்பு வலி ஏற்பட்டது. அவன், இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறான். மீண்டும் என் மகன் தண்டிக்கப்படுகிறான். இனியொரு துயரத்தைக் காணும் சக்தி எனக்கு இல்லை.

இங்கே, இந்தக் கொலைகாரப் பாவியைப் பலரும் குற்றப்படுத்திப் பேசுவது கிடையாது. ஒரு குற்றவாளியைப் பார்ப்பது போல் என்னை யாரும் பார்ப்பது கிடையாது எனக்குத் தண்டனை கிடைக்காமல் இருப்பதற்காக வேண்டியும், சட்டத்தினால் பாதுகாக்க வேண்டியும் சமூக அக்கரையுள்ள சிலர், அணி திரள்கிறார்கள். குற்றம் செய்த எனக்குத் தண்டனை வேண்டும், சார், கொஞ்சம் நிரபராதிகளைக் காப்பதற்கு அபராதிகளைத் திறந்துகாட்டி, சமூகத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதற்கு... மனச்சாட்சி குத்தாமல் நிம்மதியாகத் தூங்குவதற்கு...

செய்த குற்றம் நிரூபிக்கப்படாமல் போனால், அந்தப் பிரதியைக் குற்றமற்றவன் என சும்மா விட்டு விடுவார்கள். அந்த இடத்தில் குற்றம் உண்மை யிலேயே அப்படியேதான் இருக்கிறது, இல்லையா, சார்? ஆனால், மீண்டும் அதைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதல்லவா நீதியின் கடமை; இல்லையா, சார்?

இவைகளைப் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும்கூட, சட்ட ரீதியாக ஒரு பிரச்சனையைச் சந்திக்கும்படி வந்தால்தான் நம்மால் சத்தியத்தை அங்கீகரிக்க முடியும். அதனால் எதிர்பார்ப்பு இல்லாமலேயே, உங்களுடைய பதிலுக்காக வேண்டி இன்னும் கொஞ்ச நாள் வரையில் நான் காத்திருப்பேன்.

ஒரு வேளை, எனக்கு நீதி கிடைக்க வில்லையெனில், நான் செய்த குற்றத்திற்காக என்னுடைய மனச்சாட்சியே எனக்குத் தண்டனை வழங்கிவிடும்.

டவுனிலிருந்து கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கும் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் எனக்கு மூன்று சென்ட் மனை கிடக்கிறது. என் மகளுக்கு வீடு கட்டுவதற்காக வேண்டி நான் என் சம்பாத்தியம் முழுவதையும் சேர்த்து வைத்து, வாங்கியது. அந்த இடத்தில் நான் ஓரறை கொண்ட ஒரு ஜெயிலை உருவாக்குவேன். எனக்கு நானே, சுயம் ஆயுள் தண்டனையை வழங்கி, நான் அதனுள்ளேயே அடைபட்டுக் கிடப்பேன். உங்களைத் தொந்திரவு பண்ணியதற்காக என்னை மன்னிக்கவும்.

அன்புடன்
எ.எஸ். இரவீந்திரன்


(இவ்வாறு நான் கதை எழுதி முடித்த பிறகு எ.எஸ். ரவீந்திரன் என்ற அந்தக் கதாபாத்திரத்தை நிஜமாகக் காண நேர்ந்தது. நான் அக்கதையை அவர் வாசிப்பதற்காக வேண்டி எடுத்துக் கொடுத்தபோது - கீழே காணும் விதத்தில் முடிவு மாற்றப்பட்டிருந்தது - கதாசிரியரின் குறிப்பு)

இவைகள் அனைத்தும் உங்களுக்குத் தெரிந்தாலும் கூட, ஃபார்முலா சரியாக ஒத்து வந்தால்தானே உங்களால் சத்தியத்தை அங்கீகரிக்க முடியும்? ஆனால் எனக்கு அதில் ஒன்றும் நம்பிக்கை இல்லை. உங்களுடைய தீர்மானத்தை எண்ணிக் காத்திருப்பதில் இனி அர்த்தம் இல்லை. 27ஆம் வயதில் கொல்லப்பட்ட எல்தோஸிற்கு, அவன் செய்து கொண்டிருந்த சமூகப்பணியை ஒரு ஆயுள் முழுவதும் செய்வதற்குரிய சந்தர்ப்பம் கொடுத்திருந்தால் நம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்வளவு நன்மை கிடைத்திருக்கக் கூடும். அந்த இழப்பில் ஒரு அம்சத்தையாவது இனியுள்ள நாட்களில் என்னால் சாதிக்க இயலுமா என பரீட்சிக்க வேண்டும். எல்தோஸ் பூர்த்தி செய்யாமல் போன கடமைகளின் ஒரு அம்சத்தையாவது எனக்கு நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் அந்த லட்சியவாதியைக் கொன்ற பாவம் என்னைவிட்டுப் போகும். அதனால் எல்லாவற்றையும் விட்டு விட்டு நான் ரயிலேறி ஆந்திராவிற்குப் போகிறேன்.

அன்புடன்
எ.எஸ். ரவீந்திரன்

Pin It