சமீப கால நவீன தமிழ் இலக்கியத்தில் கவிதை, சிறுகதை என்ற தளங்களில் இயங்கிக்கொண்டு, தனது இலக்கிய ஆளுமையை “இரண்டாம் ஜாமங்களின் கதை” என்ற ஒரு நாவல் மூலம் விரிவுபடுத்தியிருக்கும் சல்மா, பெண் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளையும் (குறிப்பாக குடும்ப அமைப்புகளில்) அதன்பாற் ஏற்படும் மன அழுத்தங்கள், ஏமாற்றங்கள், கழிவிரக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் வக்கிரமான எதிர்வினைகள் என அத்தனையையும் ஒட்டு மொத்தமாய் தன் ஒரு படைப்பில் கூறிச்செல்கிறார்.

இரண்டு விதமான கண்ணோட்டத்தில் மட்டுமே இந்தப் பிரதியை அணுக வேண்டியுள்ளது: இயற்கை வழுவா சித்தரிப்பு என்கிற நடப்பியல் ரீதியிலும், பெண்ணியக் கூறுகளுடனான வாசிப்பு சார்ந்த உளவியல் ரீதியிலும். மத, சமூகக் கட்டுப்பாட்டில் பெண்களின் நிலை 40, 50களில் இருந்த மாதிரியே தான் தொடர்ந்தும் இருக்கிறதா, இந்த நூற்றாண்டில் மாறுதல், வளர்ச்சி காண வழியிருக்கிறதா என்று இந்தப் பிரதியின் உதவியுடன் யோசித்தால், இது ஒரு வரலாற்று நடப்பியல் தன்மை கொண்ட, காலதேச வர்த்தமானங்களை வரையறுத்துக் கொள்ளாத, ஆனாலும், தீர்வு நோக்கி நகராத பிரதியாக உள்ளதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஐந்து, ஆறு குடும்பங்களின் கதை இது. ஒவ்வொரு கதை மாந்தருக்கும் ஒரு கதை சிருஷ்டி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அந்தக் கதை மாந்தரின் உறவுமுறை வகையிலேயே இணைத்து, கதைப் பின்னலை அமைத்துக் கொள்கிறது இந்தப் பிரதி. ஆயினும் பல அத்தியாயங்கள் தனியாக ஒரு சிறுகதை போல இயக்கம் கொண்டும், ஒட்டு மொத்தப் படைப்புடன் தொடர்பற்றும், தொய்வுடன் இருக்கின்றன. (பீவியம்மாளின் , நூரம்மாவின் மாரியாயி கதை) பல வகையான ‘குடும்ப அரசியல்’ கூறுகளை உடைய பிரதி என்பதால் கதாபாத்திரங்களை அவர்களின் தனித்தன்மையுடன் புரிந்து கொள்வது அவசியமாகிறது.

ஒரே விதமான மரபு மீறலுக்கு இரண்டு தலைமுறைகளிலும் ஒரேமாதிரியான தீர்வு காணப்படுகிறது. (“இத்தா காலத்தில்” மரபு மீறல்: கருக்கலைப்பு, மற்றும் மரணம்) இந்தத் தீர்வுகள் மூலம், கள்ளத்தனமாக நிறைவேற்றப்படுகின்றன.

இயற்கை வழுவாச் சித்தரிப்பு என்கின்ற ரியலிஸ சித்தாந்தத்தின் படி இந்தப் பிரதியை அணுகும்போது, சராசரிப் பண்புகளை உடைய சமுதாயத்தின் மத்தியதர மக்களுக்கு அதிய முக்கியத்வம் தந்து,’ ()’ அதாவது மெய்மை என்கின்ற ரீதியிலேயே இருக்கிற கதை, சமூகம், மற்றும் மதம், கதை மாந்தர் என அனைத்தையும் இந்தப்பிரதி பிரதிபலிக்கிறது. படிக்கட்டுப் போல இந்தப் பிரதி மேலேயும் செல்லவில்லை. கீழேயும் போகவில்லை. நாமும் நகரவில்லை. “இன்று” என்பது “இன்றே”. எப்பொழுதுமே இன்றுதான் என்ற இன் கருத்துப்படி, காலதேச வர்த்தமானங்களை அறுதியிட்டுக் குறிப்பிடாத இந்தப்பிரதி அதன் முடிவின் பிறகும் கூட நகர்வதற்கான அறிகுறியை எடுத்து வைக்கவில்லை. ஒரு வரலாற்று “இன்று” நடப்பியல் கூறுகளுடனான பிரதியில் “இன்றாகவே” நிற்கின்றது. சம காலத்தை( இன் சித்தாந்தத்தின்படி) இந்தப் பிரதி பிரதிபலிக்கவில்லை, ஏனெனில், சமகால நடப்பியலின் அடிப்படைக் கூறான ‘பெண் கல்வி’ இதில் முழுமை பெறாமல் போய்விடுகிறது. (விதி விலக்கு- ஓரளவு படிக்க வைக்கப்பட்ட வஹிதா: கொஞ்சம் கெஞ்சிப் பார்த்து தோற்றுப்போகும் ராபியா). கருத்தியலுக்கும், நடப்பியலுக்கும், நகர்வுகளுக்கும், நிகழ்வுகளுக்கும் இடையே எப்போதும் ஒரு நிழல் விழுந்து கொண்டேயிருக்கிறது.

மகாத்மா காந்தியின் படுகொலை சம்பவம் என்ற ஒன்றை மட்டும் காலக் குறியீடாக வைக்கும் இந்தப் பிரதி “நேற்றைய” நடப்பியலை” இன்றைக்கு” ஒரு இயற்கை வழுவாத சித்தரிப்பாகத் தருகிறது. ஆகவே, இதே அடிப்படையில் தான் உலக நடப்பு சார்ந்த, குறிப்பிட்ட சமூகம் () சார்ந்த உண்மை பதிப்பாக இந்தப் பிரதியை அணுகவேண்டியுள்ளது.

ஓரளவுக்கு மாறிக் கொண்டு வரும் சமுதாய-மத-தனி நபர் ஒழுக்கம் சார்ந்த கருத்துக்களை வேறு ஒரு கற்பனை சார்ந்த இயங்குதளத்திலும், தனி நபர் மனப் பிறழ்வுகள், அதனடிப்படையிலான வக்கிரங்கள் புலம்பல்கள் என்கின்ற விவரணை உத்தியின் மூலமாக மட்டுமே கதையாகச் சொல்லப்படுகின்றன. அதனால், இந்தத் தன்மையிலான கதை நிகழ்வுகளை இரண்டு மனோ பாவத்தில் காண வேண்டியுள்ளது: ஒன்று: ஒரு கலாச்சார அதிர்வுடனும், இப்படியெல்லாம் நடக்கக் கூடுமோ என்கின்ற சுவாரசியமான பதைப்புடனும், இரண்டு: இவையெல்லாம், நாம் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய அல்ல என்கின்ற தர்க்க மனதுடன், சுவாரசியமான ‘அக்கால’ நிகழ்வுகள் என்ற தீர்வுகள் பற்றிய சர்ச்சையில்லாத மனோ பாவத்துடன். எனினும், இந்தப் பிரதியின் நடப்பியல் கூறுகள் என்றைக்கும் பொதுவான உண்மைகளான மனிதம், மனித வாழ்க்கை, ஆண்டவன், மற்றும் மரணம் என்கின்றவற்றின் ஆதரவிலேயே, பிடிப்பிலேயே செயல்படுகின்றன.

அடுத்து, யதார்த்தவகை புனைகதை என்றாலே மொழி, மொழிநடை, கதைமாந்தரின் உரையாடல்கள் என்பவை முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன. இத்தகைய படைப்புகளில் யதார்த்த வகை எழுத்துக்களே பயன்படுத்த வேண்டியுள்ளது. நேரடியாகப் பொருள்தரும் ஒரு அர்த்த அடிப்படையில்தான் மொழி பயன்படுத்தப்படுகிறது. யதார்த்த வகை சொல்லாடல்கள், கதை மாந்தர்களின் சமூகம், மதம், ஒழுக்க முறைகள், சடங்குகள், பண்டிகை, விழாக்கள், சம்பிரதாயங்கள், அன்றாட நிகழ்வுகள், திருமணம், சாவு என்ற அனைத்தையும் சார்ந்து வரும் மொழியையே இந்தப் பிரதி பேசுகிறது. கவிஞராகவும் இருக்கும் நூலாசிரியர் தனது கவிதை நடையை வலிந்து இதில் புகுத்தவில்லை.மேலும், அத்தகைய நடை ஊடுருவல்களுக்கு பெரும்பாலும் இதன் நிகழ்வுகளோ, கதை மாந்தர்களோ இடம் தரவில்லை. சொல்லும் விஷயம், கதாபாத்திரம் இவற்றோடு ஒன்றி விடுகிறது மொழி.

ஆயினும், “ஜனநாயகப் பண்பு” அமையப் பெற்றிருக்கும் பிரதி என்று நோக்கினாலும், நடப்பியலின் இலக்கியக் கூறு என்று பார்த்தாலும், முகம் சுளிக்க வைக்கும் மொழியாடல்கள், () உரையாடல்கள், கொச்சை மொழிப்பிரயோகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வட்டார வழக்குகளை பிரயோகப்படுத்துவதில் உள்ள தனித்துவம் பிரதிக்கு உரம் போன்று அமைய வேண்டுமேயன்றி, அதனுடைய பொதுத்தன்மை கெடுவது போல இருக்குமேயானால் அது துரதிர்ஷ்டமே. வட்டார வழக்கோ, கதை மாந்தர்களின் பாத்திரத் தன்மையை உணர்த்தும்படியான (கொச்சை) மொழிநடையோ ஓரளவிற்கு கதை, நிகழ்வு என்பவற்றிற்கு அப்பாலும் கலைத்தன்மை பெற்றுவிடுதான தன்மையிலேயே ஒரு பிரதியின் இலக்கியத் தன்மை நிச்சயிக்கப்படுகிறது.

ஆனால் ஒரு சில கதாபாத்திரங்கள் தோன்றுவதற்காகவே பிரதியின் பல பக்கங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. அதாவது, அரிசி இடிப்பது, மாவு சலிப்பது, சாவு வீட்டில் கூடுவது (குறிப்பாக ஆயிஷம்மாளின் சாவுக்குக் கூடுவது), புடவை நகை பார்க்க வருவது என்று இந்தக் கதாபாத்திரங்கள் வலுக்கட்டாயமாக கதைச் சூழலுக்குள் திணிக்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. ஆக, இந்தப்பக்கங்களை உருவியருந்தாலோ, சில கதை மாந்தர்களை நீக்கியிருந்தாலோ கூட கதையோட்டத்திற்கும் கதைப் பின்னலுக்கும் சிறிதளவு கூட குந்தகம் ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.

‘பட்டப்பகல்’ அல்லது ‘இரண்டாம் ஜாமம்’ என்ற இரு குறிப்பிட்ட காலங்களே அதிகம் பேசப்படுகின்ற இந்தப் பிரதி அவற்றின் வெப்பத்தை, தனிமையை, இறுக்கத்தை, வெறுமையை அழகாய்ச் சொல்லியும் செல்கிறது.

ஆயிஷம்மாவின் மரணம் பற்றிய அத்தியாயத்தில்(26) தென்படும் மரணம் பற்றிய வரிகள் இந்தப்பிரதியிலேயே சிறப்பாக அமைந்திருப்பவை. அதே போல, மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் பிர்தவஸ்ஸின் சிந்தனைகளின் விவரணை (பக்கம் 166) என கவித்துவம் வாய்ந்த வரிகளைக் காணமுடிகிறது.

தர்காவுக்கு செல்லக் கூடாது பெண்கள் என்கின்ற சம்பிரதாயத்தை மீறும் றைமாவும் மற்றவரும் நேர்த்திக் கடன் செய்ய ஆண்களுக்குத் தெரியாமல் செல்வதும்; திருட்டுத் தனமாய் நோன்புகாலத்தில் சினிமாவுக்குப் போகமுடிந்த ராபியாவால் தொழுவதற்கு செல்ல முடியாமல், துணிச்சலின்றி இருக்க முடிவதும், நல்லமுரண் மேலும், பழைய மதிப்பீடுகளை சுட்டிக் காட்டும் பிரதி புதிய பண்பாட்டு மதிப்பீடுகளால் அவற்றை எதிர் கொள்ளவில்லை.(பாத்திமா-முருகன் உறவு, பிர்தவ்ஸ்-சிவா உறவு, மற்றும் பூடகமாகவே சொல்லப்பட்டிருக்கும் றைமா செய்த “பிழை” நூரம்மாவுக்கான தண்டனை, பேய் பிடித்திருப்பதாகச் சொல்லப்படும், கர்ப்பம் தரிக்காத மும்தாஜ்).

சமூகக் கற்பிதங்கள் பெண்ணிற்கு தாழ்வு மனப் பான்மையையும் ஆணுக்கு உயர்வு மனப்பான்மையையும் தருகிறது. இந்தத் தாழ்வு மனப்பான்மை கற்பிதங்களால் பெண்ணின் சுய இருப்புணர்வு, பண்பாட்டுத் தளத்தில், மதக்கட்டுப் பாட்டில் அழுத்தப்படுகிறது. ஆக, அழுத்தப்பட்டுவிடும் அவளின் ஆளுமை மேலும் வளர்ச்சி பெறாதவாறு தடை செய்யப்படுவதை ஆழ்மனம் பதிவு செய்த கொள்கிறது. நனவு மனம், நனவிலி மனம் இவற்றிற்கிடையேயான உறவினைக் கொண்டு ஆளுமையும் பண்பும் தீர்மானிக்கப்படுகின்றன. நனவிலியுடன் தொடர்பு படுத்தப்படும் ‘பெண்மை’ பெண்ணின் பாலியல் உறவைக் குறிப்பிடுகிறது. நனவிலியானது பண்பாட்டின் மூலம் புறஉலக குறிப்புகளையும், அறிகுறிகளையும், நடத்தைகளையும் பதிவு செய்து கொள்கிறது. இதனால் நனவிலியில் பதிந்துள்ள மறுக்கப்பட்ட மற்றும் நசுக்கப்பட்ட எண்ணங்கள், அனுபவங்கள், பண்பாட்டு விழுமியங்கள் என்பவை பெண்ணின் ஆளுமையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சிறுவயதில் ‘விரல் சூப்பும்’ பெண் என்று சொல்லப்படும் பிர்தவ்ஸ் இன்பமற்ற எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் (அதாவது இன்பம் துய்ப்பதை வளர்த்துக் கொள்ளும்) மனோபாவம் கொண்ட ‘இத்’() மற்றும் நனவிலி மனங்களுக்கிடையேயான ஐ மூளையில் நன்றாகவே பதிந்து வைத்துக் கொள்ளும் பெண்ணாய் இருக்கிறாள். இந்த மனோபாவம் எல்லாவிதமான ஆழ்மனச் செய்திகளையும் அதன் வாயிலாக மற்ற செயல்களையும் ஆளுமை கொள்கிறது. உடனடித் தீர்வுகளை இந்த நனவிலி மனமே தீர்மானிக்கிறது. அதை நனவு மனம் செயல்படுத்தும் போது ஏற்படும் செயல்முடிந்த பின் (அல்லது முன்னோ) குற்ற உணர்வாகவோ (அல்லது வெற்றிப் பெருமிதத்தையோ)அல்லது ஒரு படபடபாக மன நிலையையோ ஏற்படுத்துகிறது. நனவிலி மனம் தீர்வாகச் சொல்லும் விஷயங்கள் சமுதாய ஒழுக்க முறை விதிகளுக்க முரணாக இருக்கும் பட்சத்தில், தனி நபரின் மனதை ஆளும் ‘நான்’ () அதாவது இன்பமற்றவற்றை சகித்துக் கொள்ள பழக்கப்படுத்தும் வழியை ஏற்படுத்தித் தரும் நனவு மனம்) மறுக்கப்பட்ட கோட்பாடுகளை மீறி புற உலகுக்கும் நடக்கும் கலகத்தின் வெளிப்பாட்டில் தனி நபரின் உணர்ச்சியின் இழுப்பு விசையால் உடல் கோளாறு மற்றும் சித்தக் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய உளவியல் ரீதியிலான போராட்டங்கள், அதன் விளைவாக நடந்துவிடும் நிகழ்வுகள் புறஉலகிற்கு தெரிய வரும்போது, நனவு மனம் திடுக்குற்று குற்ற உணர்வு தெறிக்க இருந்தாலும், ஆழ்மனம் புதைத்து வைத்திருக்கும் அத்தனை ஆளுமைகளும் சில புதிரான உண்மைகளாக வக்கிரமான செயல்பாட்டில சிதறடிக்கப்படும். சில சமயம் இவற்றை ஒரு ஒழுங்கு முறையுடன் வேண்டுமென்றே நனவு மனம் செய்யும். பிர்தவ்ஸ் வஹிதாவிடம், “என்னோட யோக்யதையை பாத்தியில்ல?” அத வெளிய சொல்றதுக்கு முன்னால ஒங்கம்மாவோ யோக்யத என்னாங்கறத உங்க சச்சா கிட்ட கேட்டுக்கோ” என்று பொரிந்து தள்ளும் வார்த்தைகள். மறுபடியும் இதே மனம் தான் இப்படிப் பேசியதற்காக குற்ற உணர்வுடன் மரணம் சம்பவிக்கும் வரை தவிப்பதும் மற்றொரு கதாபாத்திரம் சையது-வஹிதாவின் மாமனார்.

ஏதோ பாதிக்கப்பட்ட பெண் போல தோன்றும் வஹிதா, மண வாழ்வை ஓதுக்கித்தள்ள நினைக்கும் வஹிதா, ‘மறு உற்பத்தி’ என்பது அங்கீகரிக்கப்பட்ட உறவு தொடர்பான குடும்ப அமைப்பில் பெண் மீதான ஆண் அதிகாரத்தினால் உருவாகிறது என்று கூறும் பெண்ணியலாளர்கள் கூற்றிற்கு ஏற்ப, கர்ப்ப முற்றதற்காக மகிழ்ச்சி கொள்வதற்கு பதிலாக “இனிமேல் அவள் நினைத்தமாதிரி எதுவும் நடக்கப் போவதில்லை. அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டியதை நினைத்து நடுக்கமுற்றவள் ஓவெனக் கதறிக்கதறி அழ ஆரம்பித்தாள்”என்கின்ற வெறுப்பு நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

இன்பத்தை மையமாகக் கொண்ட நாட்டங்கள் மற்றும் சமூக-பண்பாட்டுத் தடைகளினால் தடைபடும் உணர்வுகள், நிறைவேறாதபடி, நனவிலியில் சேர்ந்து போக விடுவதை பண்பாட்டு மனம் செய்கிறது. இங்குதான் ஆண்-பெண் வேறுபாடு தோன்றுகிறது. பெண்ணின் நனவு மனம் சமூக-பண்பாட்டு விழுமியங்ளை ஏற்று நடக்கும் படியாகப் பழக்கப்படுத்தப்படுகிறது. பெண்மை என்ற பண்பாட்டு பின்னணியில் உருவான பின் புலங்கள் பெண்களின் -உள-பாலியல்-தன்மையில் பெரும்பாலும் ஆண்மை சார்ந்த கருத்துருவங்களை ஏற்பதாக அமைந்துவிடுவதால் பெண்களின் ஆளுமை மாற்றம் பெறுகிறது. பரிதாபத்திற்குரிய பிர்தவ்ஸ் இந்தப் பிரதியின் முக்கிய கதாபாத்திரமாகத் தெரிகிறாள் (கட்டுரையாளரின் பார்வையில்), இவளை அடியொற்றி, அதே ‘அழகுணர்ச்சி’, ‘ரசனை’ மனம், ‘வாழும் ஆசை’ (பிடித்தவருடன் சேர்ந்து வாழும்) கொண்ட அடுத்த தலைமுறையின் ராபியா தோற்றமளிக்கிறாள்.

வர்ஜினியா வுல்ப் முன்வைத்திருக்கும் கருத்துக்களை மேற்கோளிட்டுக் காட்டவேண்டிய அவசியம் இருப்பதாகத் தோன்றுகிறது. “...பேனா எடுத்து தாளில் எழுதும் போது, நமக்கு என்று சொந்தமான மனம் ஒன்று இல்லாமலும், மனித உறவுகள், ஒழுக்கம், பாலியல் பற்றிய நமது உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்தாமலும், ஒரு புத்தகத்தைக் கூட நாம் விமர்சிக்க முடியாது என்பதை நான் கண்டறிந்தேன்.”

“...மனிதத் திறமையை வெளிக் கொணரும் எல்லாக் கலைகளிலும், எல்லாத் தொழில்களிலும் அவளை (பெண்ணை) அவளே (பெண்ணே) வெளிப்படுத்திக் கொள்ளும் வரையில் யாரும் ‘அவளாகவே இருப்பது’ என்றால் என்ன என்பதை அறிய முடியாது என்று நான் நம்புகிறேன்.”

இரண்டாம் ஜாமங்களின் கதை
நாவல் சல்மா.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ: 350/-

Pin It