காமத்தின் நிமித்தம் பெண் ஆணாலும், ஆண் பெண்ணாலும் ஒவ்வொரு தனிநபரும் அனுபவப்படுகிற துயரம், நிராசை, ஏக்கம், கிளர்ச்சி, களிப்பு, மகிழ்ச்சி, பிரிவாற்றாமை போன்றவற்றின் முன் இந்தக் கவிதைகளின் உக்கிரமான தீர்க்க ஆதாரம் சிறுத்துவிட்டாலும், வாசிப்பு சரளம் என்பதை கவிஞன் பயன்படுத்துகிற நுட்பமான மொழிநடையும் புலமையும்தான் தீர்மானிக்கின்றன.

ரொம்பவும் அன்யோன்யமான வர்ணிப்பு விபரம் சௌந்தர்ய லஹரியில் உண்டு.

‘க்கரமையப்புள்ளி சக்தி உன்முகமாம்
கீழே தக்கதோர் இரு முலைகள்
தாவினால் அழகு யோனி
(காரைக்குடி கனவுதாசனின் சுந்தர மந்திரம்).

இந்தக் காமம் என்னும் சிருங்காரத்தை தி.ஜானகிராமன் சங்கீதமாக்கிய ரஸவாதமும் இங்கே நடந்திருக்கிறது. ஜி. நாகராஜனின் ‘பரத்தமை காதல்’ நுட்பமாக இந்த மண்ணில்தான் விரிந்திருக்கிறது. தமிழ் உரைநடை இலக்கியத்தில் கு.ப.ரா., தி.ஜா., கி.ரா., ஜி.நாகராஜன், ஆதவன், சம்பத் போன்ற அற்புதக் கலைஞர்கள் இந்தக் காமம் என்னும் தன்னியல்பை நேருக்கு நேர் காணத் துணிந்தவர்கள்.

கலாப்ரியா எழுதிய ஒரு கவிதை ‘அவள் அழகாயில்லாததால் எனக்குத் தங்கையாகி விட்டாள்’ என்பதாக வரும். இதன் உளவியல்கூடக் காமம்தான். காமத்தின் சந்தர்ப்பவாதத்தை அழகாகச் சொன்ன கவிதை. ‘அந்தக் கறுப்பு வளையல்காரி குனிந்து நிமிர்ந்து பெருக்கிப் போனாள். அறை சுத்தமாச்சு. மனசு குப்பையாச்சு’, என்று இந்நாய் சிறுவேட்கையைப் பற்றித்தான் கல்யாண்ஜி எழுதினார்.

கவித்துவ ஒளியின் தரிசனம் என்பது ஒரு கவிதையை ஆழ்ந்துணரும் போது மற்றொரு கவிஞனின் தீர்க்கமான கவிதையை சட்டென்று நினைவிற்குக் கொண்டுவந்து விடக்கூடியது. அப்படி இத்தொகுப்பில் ஆண் மனம் ‘பல் கொட்டி தடி ஊன்றிய வயோதிகத்திலாவது மீண்டும் சந்திப்போம். அந்நிலையிலும் உன்னை அதற்கு அழைப்பேன்’ என்ற வரிகள், கல்யாண்ஜியின் கவிதையில் பெண்மனம், ‘நான் பழுத்திருக்கும் போது வராமல் உளுத்துப்போனபின் புழுக்கொத்த வரும் மனம் கொத்தி நீ’ என்று விம்முவதை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

இத்தொகுப்பில் நேரடிப் புணர்ச்சி பற்றிய கவிதைகள் இருக்கவே செய்கின்றன. காமத்தின் பவித்ரத்தையும் வன்மையையும் வானவில்லோடும் பனிப்பொழிவோடும் வசந்த காலத்தோடும் ஒப்பிட மறுக்கும் கவிஞர், செங்குத்து மலைச்சரிவின் குவட்டில் பொரிந்த கழுகுக் குஞ்சுக்கு ஒப்பிடுகிறார். இதுதான் என்னுடைய அயோத்தி என்று ‘அவருவந்து ‘வா போயர்றலாம்’னு கூப்புட்டுப் போட்டார்னா, அப்படியே அவருகூடப் போயிருந்தேன்... ஆமா..’ என்று ஒரு சீதை பொட்டில் அறைந்தாற்போலச் சொல்கிறாள். சுடலையில் எரியும் தீ தரும் ஞானம், ஆயுளில் காமத்திற்காகச் செலவிடப்படுவது 152 நாட்களே என்ற புள்ளிவிபரம், எந்த உறவையும் ஓர் நொடிக்குள் உதறும் புணர்ச்சி விழைவு, வீடு பொன்பொருள் இல்லா தம்பதியரின் நிறைவாழ்வு, அடுத்தவனோடு ஓடியவள் மீதான கோபம் மன்னிப்பின் ஊற்றாவது, பூவையை மெய் கலக்கும் மகிழ்வு, சுயமைதுனம், சொப்பன ஸ்கலிதம் என்று காமக் கடும்புனல் புடைத்து நுரைக்கிறது.

என் தாயி தங்காயி கவிதையில் படைப்பாளியின் விசுவரூபம் காண முடிகிறது. ‘என் முகச் சாயலில் இறந்த என் தந்தையின் ஆசை முகத்தைக் கண்டவள் போல கண்வடிய நிற்பாள் என் தாயி தங்காயி’ என்று பரத்தையை உன்னதமாய்ப் போற்றும் கவிதை. ஒரு இஸ்லாமியக் கவி பாடினாள் ‘தேவடியாள் என் தாயாக வேண்டும். நான் தேவடியாள் வீட்டு நாயாக வேண்டும்’ என்று என் தாயி தங்காயி எழுதிய கை பொதுத் தொலைபேசியகப் பெண்ணை மலினப்படுத்தி எழுதியிருக்கக் கூடாது.

மனித சிந்தனையின் நவீன பகுதியின் மஹா கவிஞன் என்று சுட்டிக்காட்டப்படும் ஜேம்ஸ் ஜாய்ஸ் தன்னுடைய ‘எ பெய்ன் புல் கேஸ்’ என்ற சிறுகதையில் நூறு வருடங்களுக்கு முன்னரே ‘ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வெறும் சிநேகிதம் மட்டும் என்பது இயல்பில்லாதது. ஏனெனில் உடல் உறவு என்பது அங்கு தவிர்க்க முடியாத விஷயம்’ என்று எழுதினார்.

மகுடேஸ்வரன், ‘காதல்’ பற்றிப் பொதுப்புத்தியில் நிலவுகிற மதிப்பீடுகள் வந்துவிடாமல் நிராகரித்து ஒதுக்குகிறார். ‘ஒருத்திக்கொருவன் வாழ்க்கையில் காதலுக்கு வாய்க்கும் வடிவழகை ஏய்க்காமல் என்றும் பிழை’ என்று எழுதியுள்ளார். இந்த நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள பிரகிருதிக்கு ‘காதல்’ என்ற உணர்ச்சியைப் புரிந்துகொள்ள என்ன சிரமமோ. அது ஏதோ மனக்கோளாறுதான். ந.பிச்சமூர்த்தி சொல்கிறார், ‘கேட்பதல்ல காதல், தருவதுதான்’ என்று. இந்த நுண்ணியல் நுட்பத்தை உணர்ந்துகொள்ள முடியாதவர்களுக்கு காதல் நேர்மையான உணர்ச்சிதானா என்ற சந்தேகம் வரத்தானே செய்யும்.

க்ளியோபாட்ரா தன் வாழ்வில் ஜூலியல் சீசருடனும் ஆண்டனியோடும் தான் கொண்ட பாலுறவின் வித்தியாசத்தைப் பற்றி மிக நேர்த்தியாக ஆண்டனி அண்ட் க்ளியோபாட்ரா நாடகத்தில் வெளிப்படுத்துவாள். ஜூலியஸ் சீசர் இவள் மீது செய்தது பாலியல் வன்முறை. சீசர் இவளுடன் உடலுறவு கொண்டபோது அவள் வயதுக்கு வராதவள். மனமும் பால்மனம் அப்போது. க்ளியோபாட்ரா காதலுக்கோ காமத்துக்கோ பக்குவமில்லாத பச்சிளம் சிறுமி. ஷேக்ஸ்பியர் இதனை என்ன அழகாக விரசமில்லாமல் சொல்கிறார். நேபாளத்திலிருந்து மும்பை சென்று கொண்டிருக்கின்றன மேலும் சில பெண் குழந்தைகள், குழந்தைகளுக்கு விவாகம் செய்துவைத்த மரபாளர்கள், ஆர்மீனியச் சிறுமி ஒருத்தியை கிழடுக்குப் பரிசளித்த இந்தியப் பெருங்கண்டத்தின் அன்றைய தலைவன் என்று பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றிய பதிவுகளையும் கூட உள்ளடக்கியுள்ளது காமக் கடும்புனல்.

அருவருப்பையும் ஆபாசத்தையும் உதறிவிட்டு இக்கவிதைகளைக் காண்பவர்களுக்கு பிரமிக்க வைக்கும் பரிமாணங்கள் கிடைக்கும்.

காமக் கடும்புனல் (கவிதைகள்)
மகுடேஸ்வரன்
வெளியீடு: யுனைடெட் ரைட்டர்ஸ்
130/2 அவ்வை சண்முகம் சாலை
சென்னை-86.
விலை ரூ. 100.

Pin It