(இந்த கட்டுரையில் கண்ட குறிப்புகள் பாரதி அன்பர் சீனி. விசுவநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள “காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்” தொகுதி 2, 3ல் இருந்து எடுக்கப்பட்டவை)

 மகாகவி பாரதி 125 ஆண்டு நிறைவடைவதை ஒட்டி - அவர் பெயரிலேயே வத்தலக்குண்டிலிருந்து வெளியான ‘பாரதி’ இதழில் ‘பாரதியின் கவிதாசக்தி’ என்கிற பெயரில் வெளியான அபூர்வமான கட்டுரை இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

திரு.ஆர். வாசுதேவ சர்மா அவர்கள், எம்.ஏ.,பி.எல்.,

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்

வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ! _ பாரதி
(சுதந்திர தாகம்)

எனது குருநாதரும், நண்பரும், தமிழ்த் தேவியின் தீரவீரரும், அருட்கவித் திறம் பெற்ற நற்புதல்வருமாகிய இப்பெரியார் விண்ணாடெய்தி (1921-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி) இதுவரை ஒன்பதரை ஆண்டுகள் ஆகப்போகின்றன. இந்நாளில், தமிழகத்தில் தமிழ் மக்கள் கூட்டம் கூடி ‘பாரதி நாள் விரதம்’ மேற்கொள்வர். ஆகவே, யானும் என் நினைவிற்பட்ட இப்பெரியாரைப் பற்றிய குறிப்புகளை வரைந்து அப்பெரியார் ஞாபகத்தைப் போற்றுதல் மேற்கொள்ளுவேனாக.

நான் அதிக நாள் இப்பெரியாரை அறிந்து பழகக் கொடுத்து வைக்கவில்லை. 1908 முதலாகப் புதுவையிலே அஞ்ஞாத வாசம் பூண்டொழுகும், மற்றை மறை முனிவர் “அரவிந்தர் விடுதிக்கு நம் கவியரசு வந்து போவதைக் கண்ணாற் கண்டிருந்தேனாயினும் இப் புலவர் பெருமானை நான் காண நேர்ந்தது, 1918-ம் வருடம் ஏப்ரல் மாதத்திலேதான்.

பாரதி இல்லஞ் சென்றேன்

சென்னையிலே 1917_1918-ன் இடையிலே ‘நாரதன்’ என்றதொரு பத்திரிகையிலே தேசீய வியாசங்களும் பாரதியார் பாக்களும் அடிக்கடி வெளியாவது கண்டு நேரில் அக்காரியாலயஞ் சென்று அங்கு அப்பத்திரிகைத் தலைமை பூண்டு தொண்டு புரிந்த தமிழ்க் காந்தி ஸ்ரீபரலி சு. நெல்லையப்ப பிள்ளையின் நட்புரிமையைக் கொண்டேன்.
பின்பு நான் கல்லூரி மூடி ஏப்ரல் மாதம் வரவே என் சொந்த ஊராகிய புதுவைக்குத் திரும்பும் காலையில் மேற்படி பிள்ளையவர்கள் என்னை ஸ்ரீ பாரதியாரை நேரில் கண்டு பாட்டுகள் எழுதித் தரும்படி சொல்ல வேண்டினர். இதை ஒரு சாக்காகக் கொண்டு என் மனத்துள்ள ஆவல் அலைப்ப மெள்ளப் பாரதியார் இல்லஞ் சென்றேன்.

எனக்கப்பொழுது வயது பத்தொன்பது முடிந்துகொண்டிருந்தது. சுலாசாலையிலே படித்திருந்தேன். இரகசியப் போலீசார் தொந்தரவுகளைப் பற்றிய கதைகள் உண்மையானவையும் பிறவும் பல கேட்டிருந்தேன்.
மனதினுள்ளே தேச பக்தரைத் தரிசித்தல் வேண்டினும், பிற அவல எண்ணங்களாலும் சிந்தைகளாலும் என் எண்ணங்களை அடக்கியே வைத்திருந்தேன். இப்படிப்பட்ட எனது மனக் கலக்கத்தை நீங்களே பாவித்துக் கொள்ளலாம்.

தேடி வந்திருக்கிறார்

கலவரமுள்ளவனாக, ஒருவித உள்ளெழுச்சியுடனும், அவர் வீட்டு வாயிற் கதவைத் திறந்து (வாயிற் கதவு சாத்தப்பட்டிருந்தபோதிலும் தாழிடப்படவில்லை) உள்ளே ரேழியைக் கடந்து உள் வாயிலையும் தாண்டித் தாழ்வாரத்திற்கு வந்தேன். அங்கே அவர் பெண் குழந்தை சகுந்தலை இருந்தார். அக்குழந்தை, பாரதியார் மேலிருப்பதாகக் கூறிவிட்டு “அப்பா! யாரோ உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள்” என்று கூவினார்.

“யார்? யாராயிருந்தாலும் வரலாமென்று சொல்!” என்று ஒரு பிரதி யுத்தரம் மேலிருந்து வந்தது.

அந்தக் குரலிலே ஒருவித விவரிக்கவொண்ணாத மேன்மையான ஒளியிருந்தது. சக்கரவர்த்தி ஒருவன் எவ்வளவு சுவாதீனத்துடன் எவ்விதம் ஏதாவது கட்டளையிடுவானோ, அவ்வித சுதந்திரம் அதிலே தோன்றிற்று. ஒவ்வொரு பதமும் பூரணமாக, விழுங்கப்படாமல் கம்பீரத்துடன் உச்சரிக்கப்பட்டது. வெங்கலத் தொனி போன்ற சுத்தநாதம். அதிலே ஈசன் கருணை - அன்பு ஊற்று கலந்திருந்தது.

சாயபு போன்றவர்

மிகவும் பீதி கொண்டவனாக நான் மேன்மாடிக்குச் சென்றேன். அங்கே ஒருவர் நின்றுகொண்டிருந்தார். மொட்டைத் தலையிலே சரிகை அங்கவஸ்திரமொன்று வெகு அலட்சியமாகச் சுற்றப்பட்டுப் பின்புறம் வால் தொங்கவிடப்பட்டிருந்த தலைப்பாகை. இருபுறம் மேல் நோக்குமாறு முறுக்கிவிடப்பட்ட ‘கெய்ஸர்’ மீசை.

மழுங்கச் சிரைத்த மோவாய்க் கன்னம். தாம்பூலமிட்டுச் சிவந்த வாய். பால்நிற ‘ஷர்ட்டு’. அதன் மீது கருப்புப் பட்டிலே ஒரு “வாஸ்கட்டு”. முழந்தாளைச் சேரத் தொங்கும்படி மூலைக் கச்சம் வைத்துக் கட்டின வேஷ்டி. வேஷ்டியின் இருபுறமும், பின்சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. என்னால் முழுதும் வருணிக்க முடியவில்லை. சாதாரண சாயபு என்று கொள்ளும்படியான உருவம்.

மாநிறம், கூரிய இரு விழிகள், தம் எதிர் நிற்போரை உள்ளத்தை ஊடுருவி அளந்தறியுஞ் சக்தி வாய்ந்தவை. நேராக இமையாது நின்றதொரு நோக்கம். சந்தோஷமும் களிப்பும் மிஞ்சிய வதனம். அவருடைய சிவந்த உதடும் வெள்ளிய பற்களும் நன்றாகத் தெரிந்தன. குனியாமல் குறுகாமல் நேராக நின்ற ஒய்யாரத் தோற்றம்.

வெகு நாளாக ஆசை

அவர் அன்பு ஊற்றெடுக்கும் வந்தனத்தைக் கண்டும் என்னால் அவரை அறிந்துகொள்ள முடியவில்லை. நான் முன் கண்டிருந்ததற்கு இப்பொழுது வெகுவாக அவர் மாறிவிட்டார்.

“வாருங்கள்!” என்றார் அந்த நூதன மனுஷ்யர்.

“நான் பாரதியாரைப் பார்க்க வந்தேன்!” என்றேன்.

கடகடவென்றொரு சிரிப்பு.

“நான்தான் பாரதி”

எப்படித் தொடங்குவது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு ஆதரவு இருந்தது.

“நெல்லையப்ப பிள்ளை - உங்கள் சிஷ்யர், என்னை அனுப்பினார்” என்றேன்.

“நெல்லையப்பனா! நல்லது நல்லது வாருங்கள். ஊஞ்சலிலே உட்காருங்கள். உங்களை...!!”

கேள்வி: மறுபடியும் கண்களில் ஒருவித ஒளி உண்டாயிற்று. “தம்பி! உன்னை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போல இருக்கின்றதே”

பதில்: “இருக்கலாம்...”

“கே: “ஒரு நிமிஷம் நில் - எங்கே - கோஷ் வீட்டிலே பார்த்தேனோ?”

ப: “இருக்கலாம்.”

“நீ சாஸ்திரியார் பிள்ளை வாசு அல்லவா? கலைமகளுக்குத் தமிழ் வியாசங்கள் எழுதுகிறாயல்லவா? மகா சந்தோஷம்! உட்கார். உன்னை வெகு நாளாகப் பார்க்க வேண்டுமென்றிருந்தேன் - வா!”

ஒரே ஒரு சமாதானம்

இவ்விதம் எனக்கு இவர் நட்புக் கிடைத்தது. மேற்கண்ட சம்பாஷணையில் ஒருவித சாரமுமில்லையாயினும், தன்னைச் சுற்றி யார் யார் இருக்கிறார்களென்பதையும், யார் யார் என்ன என்ன செய்து வருகிறார்கள் என்பதையும் தினே தினே இலக்கிய உலகத்திலே எது எது நடந்தேறுகின்றதென்பதையும் அவர் விசால திருஷ்டியினாலே அறிந்து வைத்திருந்தார் என்பதைப் பலப்படுத்துமன்றோ? பத்தொன்பது வயதுச் சிறுவனாக இருந்த என்னைப் பற்றிப் புதுவையிலே சிறந்த தேசபக்த சிரோமணியெனவும், காளித்தாயின் வரப் புதல்வர் எனவும், சாரதாபீடம் எனவும் போற்றப்பட்டு வந்த ஒருவர், தெரிந்துகொள்வானேன்? ஆனால் ஒரு சமாதானம் மட்டும் நான் சொல்வேன்.

“காக்கைக் குருவியெங்கள் ஜாதி” என்று அவர் ஜெயபேரிகைப் பாட்டிலே பாடினாரன்றோ? இத்தகைய பேரன்பு பூண்ட பெரியாருக்கு உடன்வாழும் ஒரே ஊரிலே வசிக்கும் மற்றொரு தமிழன், தமிழுழைப்பாளன் மீது பிரியமுண்டாதல் விந்தையோ?

அவருடனேயே

நான் கல்லூரி விட்டுப் புதுவை வந்திருந்த விடுதலை நாட்கள் முழுமையும் இவருடனேயே கழித்தேன். காலையிலெழுந்து காலைக்கடன் முடித்துச் சிற்றுண்டியருந்தியதும், அவர் வீட்டிற்குப் போய்விடுவேன். காலைத் தபாற் செய்திகளைச் சொல்லுவேன். அவர் எழுதச் சொல்லுபவற்றை எழுதுவேன். பத்தரைக்கு வீடு வருவேன். மறுபடி ஸ்நானம் சாப்பாடு முடித்துக்கொண்டு ஒரு மணிச் சுமாருக்குப் பாரதியார் வீடு செல்வேன். ஏதாவது செய்வேன். இரவு ஏழு எட்டு மணி வரை இருந்துவிட்டுத் திரும்புவேன்.

இந்த நேரங்களிலே இவரும் இவர் புத்திரியுமாக எனக்கு இவர் பாடல்களைப் பாடிக் காட்டுவார்கள். அல்லது அவர், தான் புதிதாய் எழுதிய வியாசம் ஒன்றைப் படிப்பார். அல்லது சாயந்தரமானால் மூன்றாம் மாடிக்குப் போவோம். அங்கே ஜமுக்காளத்தை விரித்துப் போட்டு உட்காருவோம்.

அங்குச் சற்றுத் தூரத்திலே,
“தென்னை மரக்கிளை மீதில் - அங்கோர்
செவ்வாய்ப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி - அது
“ஜிவ்”வென்று விண்ணிடை யூசலிட்டேகும்
வன்னப் பருந்தோ ரிரண்டு - மெல்ல
வட்டமிட்டுப் பின்னெடுந் தொலை போகும்
பின்னர்த் தெருவிலோர் சேவல் - அதன்
பேச்சினிலே “சக்தி வேல்” என்று கூறவும்”
இன்னமுஞ் சிறிது நேரஞ் சென்றாலோ,
“நண்ணி வருமணி யோசையும் பின்னங்கு
நாய்கள் குரைப்பதுவும்
எண்ணுமுன்னே யன்னக் காவடிப்பிச்சை யென்
றேங்கிடுவான் குரலும்
வீதிக்கதவை யடைப்பதுங் கீழ்த்திசை
விம்மிடு சங்கொலியும்
வாதுகள் பேசிடு மாந்தர் குரலு
மதலையழுங் குரலும்.”

அனுபவித்தவரே அறிவார்

மண்ணுலகத்துப் பல்வகை நல் ஓசைகளைக் காற்றெனும் வானவன் கொண்டுவரவும், சந்திரிகை விண்ணகத்தே நிலவு பொழிவான் தோன்றவும், மிதமிஞ்சிய களிப்பெருக்கில் ஆழ்ந்தவராகத், தம் பாக்களில் ஒன்றைப் பாடிக் காட்டுவார். மேலே எடுத்துக்காட்டிய இருபாக்கள், எவ்வளவு இயற்கைக்கு ஒத்திருந்தன என்பதைப் புதுவையில் இவர் வாசஸ்தானமாக இருந்த ஈசுவரன் தர்ம ராஜாகோவில் வீதியிலே இவர் வீட்டு மூன்றாம் மாடியிலே உட்கார்ந்து அனுபவித்தவர் மட்டுமே உண்மையில் அறிய முடியும்.

இவர் பாட்டுகளைப் பற்றிப் பேசப் புகுகையில், மற்றொரு விஷயம் என் நினைவிற்கு வருகிறது. இவர் காவியச் சுவை யாவற்றையும் மூவகைச் சுவைகளுள்ளே அடக்கினார். அவை பக்திரசம், வீரரசம், சிங்காரரசம் என்பனவாம். இவை மூன்றுமே இவர் கையாண்டவை. உற்று நோக்குவார்க்கு எல்லாவித ரசங்களும் இம்மூன்றினுள் அடங்கியிருப்பது புலனாகும். பயனாக ரசமும், பீபத்ஸமும் இவர் அறிந்தவரல்ல, ஒப்புக்கொண்டவரல்ல. காளி தேவியின் திருக்கோலமும், செவ்வொளி வானவன் சீர்த்தியும், கண்ணன் கருணையும், புத்தபிரான் சாந்தியும் இவரது இடையறாப் பக்திக் கனலையே ஊதின. அவற்றைக் கண்டு இவர் தூயவுள்ளம், வேறு விகாரம் அடையவில்லை. மீண்டும் மீண்டும் இவர் உள்ளம்,

“சக்தி யென்று நேர மெல்லாம்
தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி”
நிற்பதையே நாடிற்று.

நம் புலவர் பெருமான், நவரசத்தையும் கைக்கொள்ளாது, மூவகைச் சுவைகளையே ஆண்டார் என முன் கூறினேன். என்றாலும் அநேகம் வடமொழிச் சுவை ஆராய்ச்சியாளர், தம் ஆராய்ச்சியின் முடிவில் ஒரேயரு சுவையையே பெரிதெனக் கொண்டது போல், நம் புலவரும் ‘பக்தி ரசம்’ ஒன்றையே பெரிதெனக் கொண்டார் போலும்!

பாட்டிசைப்பு

அந்திப் பொழுது

இதுவரை காதற் புகழ்ச்சியைச் சிங்காரச் சுவையிலே கலந்து புகழ்ந்தார். பின் என்ன செய்தார்? அவரே பாடட்டும் இச்செய்தியை.

“ஆதலினாலவன் கையைப் பற்றி அற்புதமென்றிரு கண்ணிடையற்றி. வேதனையின்றியிருந்தேன் - அவள் வீணைக் குரலிலோர் பாட்டிசைத்திட்டாள்.”

முற்கூறிய பெற்றிகளுடையது காதல் பெண்மை என்று கவி ஓர்ந்தமையின் காதலின் பெருமையை எண்ணியளவிட்டு வியந்தவராய், மெய் மறந்து இருந்து இது விந்தை! இது விந்தை!! என வாய்விட்டுக் கூறினார். பின்னர்ப் பன்முறையும் அவ்வழகியாள் மலர்க் கரத்தைப் பற்றி ஈர்த்து, நறுமணங் கொண்டதொரு ரோஜாவினைக் கண்ணிலொற்றிக் கொள்வது போலக் கண்களிலே வைத்தொற்றிப் பரவசம் எய்தினர். மனத்தே இன்ப அலை தெறிப்ப, மெய் புளகிதமெய்த வீற்றிருக்கும் இவர் உள்ளத்திலே துன்புறுத்துங் கவலை, பயம் முதலியன எங்ஙனம் தோன்றும்? ஆகவே “வேதனையின்றியிருந்தார்.”

“சுவையிணைப்பு” என்றதொரு துவாராவாக நாம் இதனைச் சிறிது பரிசீலிப்போம். சிங்காரத்திலே கவி ஆரம்பித்தார். அது பின் அற்புதத்திலே கொண்டு விட்டது. அந்த அற்புதப் பொருளை அன்புடன் அணைத்தார். சாந்த ரசம் உடனே உதயமாயிற்று.

ஆனால் நம் கவிஞர் பெருமானின் கல்பனா சக்தியிலே சாந்தி நிலையோடு நின்றுவிடவில்லை. ரசபரிணாமம் இதனிலும் மேம்பட்டதொரு நிலையும் சுவையும் உள்ளதன்றோ? அதனை யெய்திய பின்னன்றோ இவருக்குச் சலியா நிலை ஏற்படும்; அது யாது?

“வேதனையின்றியிருந்தேன்; - அவள் வீணைக் குரலிலோர் பாட்டிசைத்திட்டாள்” என்பதுவேயாம்.

சாந்திரசம் மேலிட்டவராய் இன்பமுற்று இறுமாந்திருந்த இப்புலவருக்குப் பக்கத்திருந்த அழகுத் தெய்வதம் ஒரு புதிய உண்மையைப் புலப்படுத்தியது. பக்தியே மிகப் பெரியது. இதுகாறும் காதலினாலுயிர் வளரும், வீறு கொள்ளும் எனப் பிதற்றியயாவும் பக்தியாலெய்தும் பெருமைகளாம். ஆனால் காதலின் பயனாக ஒரோவிடங்களிலிவை தோன்றுவது என்னெனில், காதலும் தெய்வீக சக்திவாய்ந்ததொரு உணர்ச்சி ஆகலின். ஆனால் உணர்ச்சிகளிலே மிக மிகக் கடைப்பட்டது, விலங்கிடையேயும் நிகழவல்லதொன்றை மானுடம் வாய்த்திருப்பதாகும். “நீ இன்பநுகர் வேட்கையைத் தவிர்த்து, ஞானாபரணம் பூண்டு காதலுக்குப் பதிலாகப் பக்தியைக் கைக்கொண்டு, விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியை மெய்யாலும் மனத்தாலும் வாயாலும் துதி கூறிப் போற்றிய பக்தியின் மிக்க பயனில்லை” என அவள் கூறினள். பக்திரசம் சிறந்ததற்கு வேறு அத்தாட்சி வேண்டுமோ?

காதற் கோயில்

கோலமிட்டு விளக்கினை யேற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்
ஞான முற்றும் பராசக்தி தோற்றம்
ஞான மென்றே விளக்கினை யேற்றி
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்
காத லென்பதோர் கோயிலின் கண்ணே!

Pin It