நாட்டுப்புறம் ஒன்றில் கோனார் குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. பத்து பசுமாடுகளை வைத்துக் கொண்டு பக்கத்து நகரத்து சில வீடுகளுக்கும் ஓர் ஓட்டலுக்கும் பால் கொடுத்து வந்தார் வீட்டுப் பெரியவரான பெரிய கோனார்.

சற்று தண்ணிக் கஷ்டம் கொண்ட கிராமம். ஆகவே, ரொம்ப அவசியமான காரியங்களுக்கு மட்டும் நீரைப் பயன்படுத்தினர். கேணிகள், கிணறுகள் என்று இருந்தாலும், தண்ணீர் பாதாள லோகத்தில், ஆதிசேஷன் என்னும் பாம்பின் தலைமீது இருந்தது. நூறு அடி, நூத்தம்பதடி தாம்புக் கயிறு கொண்டுதான் வாளியில் நீர் சேந்த வேண்டும். குடிக்க உதவாத உப்புத் தண்ணி, குடி தண்ணிக்கு மூணு கிலோமீட்டர் நடந்து போய் ஆத்து ஊரணியிலிருந்து கொண்டுவர வேணும்.

வானம் பார்த்த பூமி மழை பெஞ்சிச்சின்னா, காத்துக்கிட்டு இருந்தது போல, சுத்துப்புற தரிசு நிலம் அத்தனையும் பசேல்னு கண்ணுக்குக் குளிர்ச்சியா புல்லைக் காட்டத் தொடங்கிடும். மத்தபடி ஆங்காங்கே ரெண்டு ஒரு கருவேல மரம், பனை மரங்கள், காக்கா முள் புதரு.

பிற்பகல் மூணு, நாலு மணிக்கு ஊர்ப் பெண்கள் தலையில் சும்மாடு மீது ஒரு குடமும், இடுப்பில் ஒரு குடமுமாக, அந்த மூணு கிலோமீட்டர் போய் ஊரணித் தண்ணி எடுத்து வரக் கிளம்பிடுவாக. அப்படி அவுக போறதும், வாரதுமே ஓர் அழகு.

இப்படித் தண்ணி இல்லாக் காட்டுலே இருக்குறவக, கால் கழுவ தண்ணீரைப் பயன்படுத்தாதது அதிசயம் இல்லை. கால் கழுவறது என்கிற வார்த்தையையே அந்த நாட்டுப்புறத்தார் காதுலே கேட்டது இல்லை. ஒரு செங்கல் கட்டி, சின்னக் கருங்கல்லு கொண்டு துடைத்தெறிந்துவிட்டு வருவது அவர்கள் வழக்கம்.

பெரிய கோனார் மகன் சின்னக் கோனான். வயது பத்து ஆகுது. வெளிக்கு இருக்க வெளியே காலைலே சின்னக் கோனான் போனான்னா, ஊர் வழக்கப்படி, செங்கல் கட்டி, சின்னக் கருங்கல்லு கொண்டு தொடைச்சுப் போட்டுட்டு வரதுன்னு இருந்துக்கிட்டு இருந்தான்.

ஒரு சமயம் அவனுடைய பெரியப்பு (பெரியப்பா) பட்டணத்துலேருந்து வந்தாரு. வந்தவரு மறுநாள் காலைலே சின்னக் கோனானிடம் சொம்புலே தண்ணி எடுத்துக்கடான்னு சொன்னாரு.

‘‘எதுக்குப் பெரியப்பு?”ன்னு சின்னக் கோனான் கேட்டான்.

‘‘எடுத்துக்கடான்னா” என்று குரலை உயர்த்திக் கூறிவிட்டு பெரியப்பு நடந்தாரு.

என்னவோ, ஏதோ, எதுக்கோன்னு நெனைச்சுக்கிட்டு, சின்னக் கோனான் ஒரு செம்புல தண்ணியை எடுத்துக்கிட்டு அவரு பின்னாலே ஓடினான்.

ஊருக்கு வெளியே வந்ததும், அவன்கிட்டே இருந்து செம்பை வாங்கிக்கிட்டு, நீ இப்படி இரு. நான் அப்படி அப்பாலே போறேன்னு சொல்லிட்டு நடந்தாரு. எதுக்கு செம்புத் தண்ணியை எடுத்துக்கிட்டுப் போறாரு, அதை என்ன செய்வாருன்னு சின்னக் கோனானுக்குத் தெரியல்லே. இருந்தாலும், போற பெரியப்புவைப் பார்த்துக்கிட்டே இங்கிட்டு அவன் வழிச்சுக்கிட்டு, உட்கார்ந்தான்.

பெரியப்பு சற்றுத் தொலைவுலே போய், செம்பை எதிரே வச்சிட்டு, இடம் பார்த்து உட்கார்ந்தாரு. கண் இமைக்காமல் அவரைப் பார்த்துக்கிட்டே சின்னக் கோனான் வெளிக்கு இருந்தான்.

பெரியப்பு எழுந்திரிச்சாரு. குனிஞ்சு செம்பை எடுத்து உட்கார்ந்து கழுவிக்கிட்டாரு. சின்னக் கோனானுக்கு ஒரே ஆச்சரியம்! இப்படி ஒண்ணு உண்டான்னு அதிசயித்துப் போயி, தானும் அப்படி கழுவிக்க வேணும்னு தீர்மானம் பண்ணிக்கிட்டான்.

வந்த காரியம் முடிஞ்சிச்சுன்னு அன்னிக்கு ராத்திரியே பெரியப்பு பஸ் ஏறிப் பட்டணம் போயிட்டாரு.

மறுநாள் காலைலே படுக்கையை விட்டு அவன் எழுந்திரிச்சதும், ஞாபகமா செம்புலே தண்ணியை எடுத்துக்கிட்டுப் போனான். போயி, இடம் பார்த்து தண்ணியை வச்சிட்டு, சற்றுத் தள்ளிப் போய் வழக்கம் போல உட்கார்ந்தான். அப்ப பக்கத்து கருவேல மரத்துல ஒரு காக்கா வந்து உட்கார்ந்திச்சு. தன் காரியத்துலே இவன் கருத்தா இருக்கறப்ப. அந்தக் காக்கா ஜிவ்வுனு பறந்து வந்து செம்பு மேலே உட்கார்ந்தது. உடனே, செம்பு ஆடிப் போயி, கவுந்திடுச்சு. அத்தனை தண்ணியும் தரையிலே கொட்டிப்போச்சு. கொட்டின சுவடு தெரிய, நிலம் தண்ணிய வாங்கிக்கிடுச்சு.

ஆகா, ஏமாந்திட்டோமேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு, வழக்கம் போலத் தொடச்சிப் போட்டுட்டு, வெறும் செம்பை எடுத்துக்கிட்டு சின்னக் கோனான் வீடு திரும்பினான்.

அடுத்த நாள் காலைலே மறக்காமல் செம்புலே தண்ணி எடுத்துக்கிட்டுக் கிளம்பினான். போய் இவன் செம்போடு நிக்கவும், முந்தின நாள் வந்த அதே காக்கா, எங்கிட்டு இருந்தோ பறந்து வந்து கருவேல மரத்துல உட்கார்ந்தது.
பார்த்தான் சின்னக் கோனான். காக்காகிட்டச் சொன்னான். நேத்துத்தான் ஏமாந்திட்டேன். இன்னிக்கும் ஏமாறுவேன்னு நினைச்சியான்னு சொல்லிட்டு, வேட்டியைத் தூக்கிட்டு உட்கார்ந்து கழுவிக்கிட்டான். செம்பை வச்சிட்டு, அப்புறம் வெளிக்குப் போய்விட்டு, வழக்கம் போல ஒரு செங்கல் கட்டியை எடுத்துத் தொடச்சிப் போட்டுவிட்டு வந்தான்.

குறிப்பு: பிராமண வழக்கு மொழி நடையில் இந்த நாட்டுப்புறக் கதை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pin It