(மலையாளத்தில் : வைக்கம் முகம்மது பஷீர்)
ஆங்கிலம் வழி தமிழாக்கம் : கூத்தலிங்கம்

அது ஒரு திகைப்பை ஏற்படுத்தும் செய்தியாக இருந்தது. சூடான விவாதத்தின் பேசுபொருளாகவும் அறிவு ஜீவிகள் மற்றும் தத்துவ வாதிகளின் மயிர்சிலிர்க்கச் செய்யும் விவாத மையமாகவும் ‘மூக்கு’ ஆகிவிட்டிருந்தது. பிறகு அது மெல்ல உலகளாவிய போற்றத் தக்க ஒன்றாகவும் ஆகிவிட்டது. அந்த மூக்கின் உண்மை வரலாற்றை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

நமது கதாநாயகன் அவனது வாழ்க்கையின் இருபத்தி நான்காம் வயதிற்குள் நுழையும் தருணத்தில்தான் அப்பேற்பட்ட மூக்கின் வரலாறு தொடங்குகிறது. இருபத்தி நான்காம் அகவைக்கு அப்படி ஏதும் முக்கியத்துவம் இருக்கிறதாவென நான்கூட ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். எவ்வகையில் பார்த்தாலும் ஒரு விஷயம் நிச்சயம். வரிசைக்கிரமமான சரித்திரக் குறிப்பை நீங்கள் கவனமாக உற்று நோக்கி வந்தீர்களேயானால், சாதனைகள் பல புரிந்த வரலாற்றுப் புருஷர்களின் இருபத்தி நான்காம் வயது, ஏதோ ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் பெற்று விளங்குவதாக இருக்கிறது என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். நான் சொல்லும் இந்த வெளிப்படையான உண்மையைக் கேட்டு வரலாற்று மாணவர்கள் என் மேல் கோபம் கொள்ளக்கூடும்.

நமது கதாநாயகன் ஓர் ஏழை சமையல் தொழிலாளி. அவனது புத்திசாலித்தனத்தைப் பற்றி குறிப்பிட்டு ஒன்றும் சொல்வதற்கில்லை. அவனுக்கு எழுதவும் தெரியாது, படிக்கவும் அறிந்திருக்கவில்லை. அவனது ஒரே உலகம் சமையல் கூடம். வெளியே எது நடந்தாலும் அது பற்றி யெல்லாம் கவலைப்படமாட்டான் அவன். அவன் ஏன் கவலைப்பட வேண்டும்? அவனுடைய வழக்கமான தொடர் செயல்பாடுகளாகிய சமைத்தல், மனதார சாப்பிடுதல், தரமான மூக்குப்பொடியை சுரீரென உறிஞ்சி லயித்தல், தூக்கம் போடுதல், விழித்து எழுதல், மறுபடியும் தனது சமைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுதல் இப்படியான கடமைகளுக்குள் ஆட்பட்டுக்கிடக்கிறான்.

மூக்கனுக்குக் கிழமைகளின் பெயரோ, மாதங்களின் பெயரோ தெரியாது. அவனுடைய சம்பளம், அந்தந்த பாக்கித் தொகைகளும் அவனது அம்மாவிடம் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த வயதான பொம்பளை அவனுக்கு மூக்குப் பொடி வாங்கிக் கொடுப்பாள். இப்படியாக அவன் தனது இருபத்தி நான்காம் வயது வரைக்கும் மகிழ்வாகவும் அமைதியாகவும் வாழ்ந்துவந்தான். அதற்குப் பிறகுதான் இருந்தாற்போல் இருந்துவிட்டு அப்படி ஒரு திடீர் நிகழ்வு அவனது வாழ்க்கையில் நடக்கத் தொடங்கியது.

 அது ஒரு சாதாரணமான நிகழ்வில்லை என்றுகூட ஒரு வேளை இருக்கலாம். மூக்கனின் மூக்கு உடனடியாக நீளமாக வளர்ந்துகொண்டே போனது. அவனது வாயையும் கடந்து கொஞ்ச காலத்திற்குள் தாடைக்கும் கீழேகூட போய்விட்டது. மூக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது. ஒரு மாதத்திற்குள் அதன் முனை அவனது தொப்புளுக்குச் சமமாக நீண்டிருந்தது. நீளமான உறைக்குள் வைத்து மூடி மறைத்துவிட அது வேறு ஏதாவதொரு பொருளல்ல. ஆனால், மூக்கனைப் பொறுத்த வரைக்கும் அது ஏதாவது அசௌகரியங்களை உண்டாக்கியதா? கொஞ்சம்கூட இல்லை. மற்ற எந்த மூக்குகளையும் போலவே இதுவும் அதன் வேலைகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தது. மூச்சுவிடுதல், மூக்குப்பொடியை உறிஞ்சுதல், வாசனைகளை மோப்பம் பிடித்தல் போன்ற அதன் எல்லா வேலைகளையும் கச்சிதமாகச் செய்தது.

உண்மையாகவே, இத்தகைய அற்புத நிகழ்வுகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எசகுபிசகான மூக்குகளைப் பற்றிய அரிய சம்பவங்கள் அத்தகைய கூறுகெட்ட மூக்குகளில் இதுவும் ஒன்று என நீங்கள் நினைக்கிறீர்களா? இது அப்படி இல்லையென பந்தயம் கட்ட முடியும். நமது ஏழை கதாநாயகன் அவனது மூக்கின் காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டான். ஏன் இப்படி?

அவன் வேலையை மீண்டும் பெறுவதற்கு எந்த யூனியனும் போராடவில்லை. அவனுக்கு நடந்த மாபெரும் அநீதியை கண்டுகொள்ளாமல் எல்லா அரசியல் கட்சிகளும் முகத்தைத் திருப்பிக்கொண்டன. மூக்கனை ஏன் பணிநீக்கம் பண்ணினார்கள்? மனித நேயவாதிகள் அல்லது மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் யாரும் இது பற்றி கேள்விகள் எழுப்பவில்லை. மூக்கன் தெருவிற்கு தள்ளப்பட்ட போது நம் கலாச்சார காவலர்கள் எங்கே போனார்கள்? பாவம் மூக்கன்!

ஏன் வேலையிலிருந்து நீக்கப்பட்டோம் என்பது மூக்கனுக்கு நன்றாகவே தெரியும். அவனது மூக்கு வளரத் தொடங்கியதும் அவனை வேலைக்கு வைத்திருந்த குடும்பம் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமல்ல. அவனது மூக்கைக் காண்பதற்காக மாபெரும் கூட்டம் அந்த வீட்டின் முன்பாக திரண்டு விடும். புகைப்படக்காரர்கள், பத்திரிகை நிருபர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் படம் எடுப்பவர்கள்... பேரிரைச்சல் கொண்ட மனிதக் கடல் அந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டது. அநேக தடவைகள் அந்த வீட்டில் கொள்ளை போனது. அந்த வீட்டிலிருந்த ஒரு இளம் பெண்ணை கடத்திச் செல்லக்கூட ஒருமுறை முயற்சி நடந்திருக்கிறது.

தனது எளியக் குடிசைக்குள் அவன் இளைத்து வாடிக்கிடந்த போதும், அந்த ஏழை சமையல் தொழிலாளி தன் மூக்கு தனக்கு ஈடிலாப் புகழை ஈட்டித் தரும் என தன்னைத் தானே தேற்றி ஆறுதல்படுத்திக் கொண்டான். அவனது மூக்கைப் பார்ப்பதற்காக தூரப்பகுதி ஊர்களிலிருந்தும், சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தும் மக்கள் தொடர்ச்சியாக வந்தபடியே இருந்தார்கள். அதைப் பார்க்கும்பொழுது ஆச்சர்யமடைந்தார்கள்.

சிலர் அதைத் தொட்டுப் பார்க்கவும் துணிச்சல் கொண்டார்கள். ஆனால் யாரும், எந்த ஒரு மனிதப் பிறவியும் ஆறுதல்படுத்தும்படியான இனிமையான விசயங்களை அவனிடம் பேசவில்லை. ஒரு இசையைப் போல அவனது காதில் ஒலிக்கச் செய்யும் விசாரிப்புகளை எந்த ஒரு மனித ஆத்மாவும் அவனிடம் வைக்கவில்லை. ஏன் இப்படி பலவீனமாக இருக்கிறாய்? மத்தியானம் ஏதாவது சாப்பிட்டாயா?

மூக்குப்பொடி வாங்கக்கூட அவனிடம் பைசா இல்லை. மிருகக் காட்சி சாலையில் பட்டினி கிடக்கும் ஒரு விலங்கைப்போல அவன் எத்தனை காலம்தான் இப்படியே வாழ்வான். அவன் மற்றவர்களைப்போல இல்லாவிட்டாலும் அவனும் ஒரு மனிதன்தானே!- கடைசியில் அவன் அம்மாவை அழைத்து அவளிடம் கட்டாயமாகச் சொல்லி விட்டான், “இனி அடிதான் கிடைக்கும் எனச் சொல்லி அவர்கள் முகத்திற்கு எதிராகக் கதவைச் சாத்து’’.

அவனது வயதான அம்மா தந்திரமாகப் பேசி, ஆர்வமுடன் பார்க்க வந்த கூட்டத்தினரைக் கலைத்துவிட்டு முன் கதவைச் சாத்தினாள். அதன் பிற்பாடு தான் மூக்கனின் வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பம் உண்டானது. வயதான தாயின் முகம் அதிர்ஷ்டத்தால் மலர்ந்தது; அவளது மகன் புகழ்பெறத் தொடங்கினான். மூக்கனது மூக்கை பலதடவை தரிசித்தும் ஆர்வம் மட்டுப்படாத ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் பணம் கொடுத்து பார்க்கலாயினர். கழுதைத்தன்மை மிக்க இத்தகைய முட்டாள் மக்களிடம் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இது ஒரு மிகப்பெரிய மோசடி என அறிவு ஜீவிகளும் தத்துவப் புடுங்கிகளும் தங்களது குரல்களை உரத்து ஒலித்தனர். ஆனால் அவர்களது எதிர்ப்புக் குரல்கள் செவிடன் காதில் ஓதிய வேதமாகப் போனது.

அரசாங்கம் மூக்கனுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசாங்கம் இந்த குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் மவுனமாக இருந்ததால் கொதிப்படைந்த அறிவைக்கொண்டு ஜீவிப்பவர்கள் (Intellectuals) மற்றும் சில கடைந்தெடுத்த தத்துவவாதிகள் (philosophist) இவர்களெல்லாம் நாசகார சக்திகளுடன் ரகசியமாக கை கோர்த்து பலவகை நிழல் மறைவுச் சதிவேலைகளில் ஈடுபட்டனர்.

மூக்கனுக்கு அவனது மூக்கி னால் வருமானம் பெருத்தது. இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு நாளைக்கு ஒரு கவளம் சோறுக்கூட கிடைக்காமல் பட்டினி கிடந்த அந்த ஏழைச் சமையல் தொழிலாளி, ஆறு வருடத்திற்குள் மில்லியனர் ஆகி விட்டான்.

மூக்கன் மூன்று திரைப் படங்களில் நடித்தான். மனித நீர்மூழ்கிக்கப்பல் என்ற அவன் நடித்ததொரு படம் பலகோடி ரூபாய் செலவில் நவீன வண்ணத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நாட்டின் அனைத்து மக்களும் பார்த்து கழித்தனர். ஆறு மகாகவிகள் மூக்கனைக் குறித்து காப்பியங்கள் எழுதி வடித்தனர். ஒரு டஜன் சுய சரிதைகள் மூக்கனைப்பற்றி எழுதப்பட்டு, அவை புகழையும் பணத்தையும் ஈட்டித் தந்தன எழுத்தாளர் சமூகத்தார்க்கு.

மூக்கனின் மாளிகைத் திறந்தே இருந்தது. யாராக இருந்தாலும் அங்கே போய்ப்பசிக்கு உணவுக் கேட்கலாம்... ஒரு சிட்டிகை மூக்குப் பொடியும்கூட. மூக்கன் இரண்டு அந்தரங்க காரியதரிசினிகளையும் வைத்திருந்தான். இரண்டு பேரும் அழகானவர்கள். மேலும் அதிகம் படித்தவர்கள். இரண்டு பேரும் மூக்கனை விரும்பியதோடு அவனை வணங்கத்தக்கவனாகவும் மனதில் ரகசியமாக எண்ணம் கொண்டிருப்பவர்கள்.

சில அழகான இளநங்கைகள் வழிப்பறிக் கொள்ளையர்கள் அல்லது கொலையாளிகளைக் கூட நம்பி அவர்களைக் காதலிக்கிறார்கள் என்பதை இங்கேக் குறிப்பிடலாம். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினீர்கள் என்றால் இரண்டு பெண்கள் ஒரே ஆணைக் காதலிக்குமிடத்து சிக்கல் தோன்றுவதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். மூக்கனின் வாழ்க்கையிலும்கூட நடந்தது. அவனது இரண்டு காரியதரிசினி நங்கைகளைப் போலவே மக்களும் தங்களது இதயப்பூர்வமான அன்பினையும், மரியாதையினையும் மூக்கனுக்கு அளித்தார்கள்.

உலகப் பெருமைவாய்ந்த மூக்கு, நீண்ட மற்றும் எழில் மிகுந்த தொப்புளுக்கும் கீழே வரை வளர்ந்திருக்கும் அது, மகிமையின் அடையாளம் இல்லையெனில், பிறகு வேறு என்ன அது? அகில உலகத்திலும் அவ்வப் போது நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து மூக்கன் அறிக்கைகள் விட்டு பத்திரிகையாளர்களை குதூகலப்படுத்தினான்:

மணிக்கு 10,000 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து செல்லும் புதிய ஜெட் விமானத்தைப் பற்றிய அறிமுகக் கூட்டத்தில் திருவாளர் மூக்கன் கூறியதாவது, மருத்துவர் ‘பராசி’ பாரஸ் இறந்த நோயாளி ஒருவனை மறுபடியும் பிழைக்கவைத்த தனது வெற்றிகரமான செயலைப் பத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்தார். மூக்கன் இது குறித்து அலட்சியமானதொரு புன்னகையை வெளிப்படுத்தி இருக்கிறார். இது அறிவுக்கு அப்பாற்பட்ட மூக்கனது சிந்தனையின் வெளிப்பாடாக இருக்கிறது.’’

உலகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனே மக்கள் ஒருவரையருவர் கேட்டுக் கொண்டனர்: ‘அதைப் பற்றி மூக்கன் என்ன சொல்லி இருக்கிறார்?’ மூக்கன் அது குறித்து ஒன்றும் சொல்லியிராவிட்டால்... ‘ச்சே! அது மதிப்பு வாய்ந்த செயலே இல்லை. அதைப்பற்றிப் பேச நமக் கென்ன வேண்டிக் கிடக்கிறது?’’

காலப்போக்கில் மூக்கனது சிந்தனைகள் வேறுவேறு துறைகளைப்பற்றி விரிந்துசென்றன. பிரபஞ்சத்தோற்றம், குப்பைகள் அகற்றுதல், சர்ரியலிச ஓவியங்கள், புதினங்கள் பற்றிய விமர்சனம், டாய்லெட் சோப், மரணத்திற்குப் பிறகான மனித வாழ்வு, பாதாள சாக்கடைத் திட்டங்கள், உலக மக்களுக்கு அறிவுரைகள் மற்றும் உலகப் போக்குகள் குறித்த எச்சரிக்கைகள். சூரியனுக்குக் கீழே மூக்கனால் விவாதிக்கப்படாத எந்த சங்கதிகளும் இல்லை என்ற அளவுக்குப் போய் விட்டது.

அந்தச் சமயத்தில், மூக்கனைத் தக்க சமயத்தில் உபயோகத்துக் கொள்வதற்கான தொடர் சூழ்ச்சிகள் நடைபெற்றன. நீங்கள் வரலாறு முழுவதையும் புரட்டிப் புரட்டிப் படித்தீர்களானால், அதில் ‘தக்கச் சமயத்தில் உபயோகித்துக் கொள்ளல்’ என்பதைத் தவிர வேறொன்றையும் காண மாட்டீர்கள். உண்மையாகவே மனித சமூக வரலாறு என்பது தக்கசமயத்தில் உபயோகித்து கொள்ளலின் வரலாறே ஆகும்.

தக்க சமயத்தில் உபயோகித்துக்கொள்ளல் என்பதன் பொருள் என்ன?

நான் அதை உங்களுக்கு விளக்கிச் சொல்கிறேன். நீங்கள் சில தென்னங்கன்றுகளை நிலத்தில் நட்டு, நாள் தோறும் தண்ணீர் ஊற்றி வருவீர் கள். வருஷங்கள் கடந்து போகின்றன. அந்தக் கன்றுகள் உயரமான தென்னையாக வளர்ந்து குலை குலையாக தேங்காய்கள் காய்க்கத் தொடங்கும். உங்கள் பக்கத்து வீட்டுக்காரனான, ஒரு நாளும் நேர்மையான உழைப்பறியா சோம்பேறி, ஒரு நாள் காலையில் தொரட்டிக் கொண்டோ அல்லது அலக்கு கொண்டோ உங்கள தேங்காய்கனை திருடிக் கொண்டிருப்பான். இதுதான் தக்க சமயத்தில் உபயோகித்துக் கொள்ளல்.

மூக்கனைத் தக்கசமயத்தில் உபயோகித்துக்கொள்ளல்! இந்த யோசனை ஒரேசமயத்தில் பல பேருக்கு உண்டானது. அரசாங்கம் முதன் முயற்சியாக மூக்கனை தக்க சமயத்தில் உபயோகித்துக் கொண்டது. அரசாங்கம் முன்னெப்போதும் எடுத்திராத மிகவும் தந்திரமான திட்டம் அது. அவனுக்கு ‘நீண்ட மூக்குடைய தளபதி’ என்னும் பட்டம் அளித்து தங்க மெடலும் தந்தது. சிறப்பு வாய்ந்ததொரு விழாவில் அந்த மெடலை ஜனாதிபதி வழங்கினார். மூக்கனின் கைகளை குலுக்குவதற்குப் பதிலாக ஜனாதிபதி அவனது மூக்கைப் பிடித்துக் குலுக்கினார். அந்த விழா செய்திப்படமாக எடுக்கப்பட்டு தொலைக்காட்சியிலும், இப்பரந்த நாட்டின் முழுவதும் இருக்கும் திரை அரங்குகளிலும் காட்டப்பட்டது.

அரசியல் போக்கில் மாபெரும் மாற்றங்களை அது ஏற்படுத்தியது.

‘தோழர் மூக்கன் வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த மக்கள் போராட்டங்களுக்கத் தலைமை ஏற்று நடத்தவேண்டும்!’ தோழர் மூக்கன்?!

பாவம் மூக்கன்! அவனை அநியாயமாக அரசியலுக்குள் இழுத்தார்கள். ஆனால், மூக்கன் எந்தக் கட்சியில் சேருவது? அநேகக் கட்சிகள் இங்கே, எல்லோரும் விரும்பும் கட்சியாக மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் இருந்தது. அதே நேரத்தில், மூக்கன் தனது ஆதரவை மக்கள் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு காட்டவில்லை.

மூக்கன் தனக்குள் பேசிக் கொண்டான்: “என்னைக் கட்சியில் சேர்க்கப்போகிறார்களாம். ச்சே! ஒரே சங்கடமாப் போச்சே!’’

அவனுடைய அழகான அந்தரங்கச் செயலாளினி ஒருத்தி இந்த வாய்ப்பை கைப்பற்ற முயற்சி செய்தாள்: “தோழர் மூக்கன் அவர்களே, நீங்கள் என்னை நேசிப்பது உண்மை எனில், நான் இருக்கும் கட்சியில் நீங்கள் சேர வேண்டும்.’’

மூக்கன் மவுனமாக இருந்தான்.

“நாம் ஏதாவதொரு அரசியல் கட்சியில் சேரத்தான் வேண்டுமா?’’ அவன் இன்னொரு காரியதரிசினி நங்கையிடம் கேட்டான். அவள் மூக்கனின் மனதில் உள்ளது இன்னதென அறிந்து கொண்டாள். “ஆமாம், அதிலென்ன!?...’’ அவள் தோள்களைக் குலுக்கியபடி பதிலுரைத்தாள்.

ஆனால், மக்கள் மறு மலர்ச்சி இயக்கத்தின் (இடது) ஒரு பிரிவினர் மூக்கனைக் கலந்து பேசி சமாதானம் செய்து அவனைத் தங்கள் இயக்கத்தின் ‘ஆள்’ என அறிக்கை வெளியிட்டனர்.

“காம்ரேட் மூக்கன் ஜிந்தா பாத்! மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் ஜிந்தாபாத்!’’ கோஷங்கள் எதிரொலித்து அதிர்ந்தன. இது, இன்னொரு மக்கள் மறுமலர்ச்சி இயக்கத் தவர் (வலது)களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் மூக்கனின் அந்தரங்கச் செயலாளினி ஒருத்தியை கைக்குள் போட்டுக் கொண்டு, அவனது நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் அவளைக் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு அறிக்கைகள் தரச்செய்தனர்:

“மூக்கனைப் பற்றிய ஒரு பயங்கர உண்மையை உங்களிடம் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். அவர் தனது கீழ்மையான ஏமாற்று வேலையால் மக்களை நம்பவைத்தது மட்டுமல்லாமல் ஓர் அரசியல் இயக்கத்தையும் தந்திரமாக ஏமாற்றிவிட்டார். மிகவும் தாமதமாக நான் இதை வெளிப்படுத்துவதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்; அதாவது மூக்கனுடைய மூக்கைப் பற்றிய உண்மையை; அது வெறும் ரப்பர் துண்டுதான்!’’.

வாவ்! உலகத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் இந்தச் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டன. நீண்ட மூக்கு அதிசயம் குட்டு வெளிப்பட்டது. தந்திரக்காரனின் புத்திசாலித்தனமான பொய் வேலை, ஒரு அரசியல் கட்சியும் ஏமாற்றுக்காரனுக்கு ஆதரவு, மக்களை ஏமாற்றி நம்ப வைத்த பிரம்மாண்டமான வஞ்சகத் திட்டம், உண்மையான மூக்கு, அது ஓரங்குலத்தைக் காட்டிலும் மிகவும் சிறுசு.

இத்தகைய செய்திகள் அதிகார மையங்களுக்கு அதிர்ச்சி அலைகளுடன பரவிச் செல்வதென்பது இயல்பானது. தொடர் தொலைபேசி அழைப்புகளாலும், தந்திகளாலும் மற்றும் கடிதங்களாலும் திக்கு முக்காடிப் போனார் ஜனாதிபதி.

“தளபதி ரப்பர் மூக்கன் ஒழிக! அவனது இயக்கம் வீழ்க! இன்குலாப் ஜிந்தாபாத்!’’

மக்கள் மறுமலர்ச்சி இயக்க (மூக்கன் எதிர்ப்பு அணி) தொண்டர்களின் கோஷம் நாடெங்கும் ஒலித்தது. உடனே மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் (மூக்கன் ஆதரவு அணி) நடவடிக்கையில் இறங்கி செயல்படத் தொடங்கினர். அவர்கள் மூக்கனுடைய இன்னொரு காரியதரிசிப் பெண்ணை வைத்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி தரச்செய்தனர்.

“தோழர்கள் மற்றும் நண்பர்களே, என்னுடன் காரியதரிசினியாக வேலை செய்துவந்த ஓரு சக ஊழியை ஒருத்தி தன்னைத் தானே விளம்பரப்படுத்தி கொள்ளும் திட்டத்தில், சோடிக்கப்பட்ட பொய் ஒன்றை அறிக்கையாக அவிழ்த்துவிட்டுள்ளாள். அது கெட்ட நோக்கத்துடன் பரப்பப்படும் ஒரு பிரச்சார மேயன்றி வேறொன்றுமில்லை. மூக்கன் அவளை வெறுத்து ஒதுக்கியதாலும், அவளது சுயநலப் பேச்சுகளை உதாசீனப்படுத்தியதாலும் அவர் மீது அவள் பொறாமை கொண்டு இருக்கிறாள். மூக்கனுடைய பெரும் பணம் மற்றும் புகழ் இவைகளினால் மட்டும் ஆசைப்பட்டு அவள் அவருடைய அந்தரங்கச் செயலாளினியாக இருந்தாள் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் அவளது சகோதரன் ஒருவன் உறுப்பினராக இருக்கும் அரசியல் இயக்கத்திற்கு மூக்கனைப் பயன்படுத்த நினைத்தாள். அந்தக் கட்சியினர் கொஞ்சமும் வெட்கமில்லாமல் தங்களை ‘மக்கள் மறுமலர்ச்சி இயக்கம்’ என அழைத்துக் கொள்கிறார்கள். அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்கும் ஊழல்வாதிகள் மற்றும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் என்ற உண்மையை இந்தத் தருணத்திலே உங்களிடம் கூறிக்கொள்ள இதை ஒரு வாய்ப்பாகக் கொள்கிறேன். தோழர் மூக்கன் அவர்களுடைய மிகவும் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உரிய செயலாளராகக் கடமை ஆற்றிவரும் நான் சொல்கிறேன், அவருடைய நீண்ட மூக்கு உண்மையானது. எனது தூய்மையான இதயத்தைப்போல. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும்கூட தோழர் மூக்கனின் பின்னால் திரண்டு நிற்கும் மக்கள் கூட்டத்தை நான் வணங்குகிறேன். காம்ரேட் மூக்கன் ஜிந்தாபாத்! மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் ஜிந்தா பாத்! இன்குலாப் ஜிந்தாபாத்!’’

இதையெல்லாம் கேட்டு மக்கள் என்னதான் செய்வார்கள்? நாடு முழுவதிலும் மாபெரும் குழப்பம். மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் (மூக்கன் எதிர்ப்பு அணி) அரசாங்கத்தை எதிர்த்து சரமாரியான குற்றச்சாட்டுகளைப் பொழிந்ததால் எங்கும் பெரும் கொந்தளிப்புகள் எழுந்தன.

மூக்கனுக்கு ‘நீண்ட மூக்குடைய தளபதி’ என்னும் பட்டம் வழங்கப்பட்டு அத்துடன் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க மெடல் பரிசளிக்கப் பட்டது ஏன் என்பது இப்பொழுது வெட்டவெளிச்சமாகத் தெரிந்து விட்டது ஒரு சில ஏமாளிகளைத் தவிர. இந்த விஷயத்தில் மக்களை ஒட்டு மொத்தமாக ஏமாற்றியதில் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் நேரடிப் பங்கு இருக்கிறது. இது மாபெரும் சதித்திட்டம் என்பதில் சந்தேகமே இல்லை.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும், பிரதமரும் கூட. மொத்த மந்திரிசபையும் ராஜினாமா செய்வதுதான் இன்றைய சூழ்நிலைக்கு உகந்ததாகும். ரப்பர் மூக்கு வஞ்சகன் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவனை உள்ளே தள்ள வேண்டும். ஜனாதிபதி கொதிப்படைந்தார். பிரதமரின் மனநிலையும் அதுவாகத்தான் இருந்தது. மூக்கனது மாளிகை நோக்கி கவசம் அணிந்த பீரங்கி வண்டிகள் உருண்டு சென்றன. மூக்கன் கைது செய்யப்பட்டான்.

அதன் பிற்பாடு பல நாட்களுக்கு மூக்கனைப் பற்றிய எந்தச் செய்திகளும் வெளிவரவில்லை. மக்கள் மூக்கனையும் மற்றும் அவனது மூக்கையும் மெல்ல மறக்கத் தொடங்கினார். நாடு அமைதி கொண்டது. மூக்கன் அனைவருடைய நினைவுகளிலிருந்தும் மறையத் தொடங்கிய வேளையில் ஜனாதிபதி ஒரு புதுக் குண்டைப் போட்டார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அதிகார பூர்வமான அறிவிப்பு:

மார்ச் 9ஆம் தேதி அன்று ‘நீண்ட மூக்குடைய தளபதி’ திருவாளர் மூக்கன் பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார். ரப்பரால் கட்டமைக்கப்பட்ட போலியான மூக்கைப் பொருத்தி, அதை உண்மையானது என்று அனைவரையும் நம்பச் செய்து, மக்களிடம் கண்காட்சி நடத்தி அவர்களிடமிருந்து பணம் வசூலித்த குற்றத்திற்காக மூக்கன் தற்பொழுது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வழக்கை எதிர் நோக்கியுள்ளார்.

நாற்பத்தெட்டு நாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் வருகை புரிந்து மூக்கனின் மூக்கு உண்மையானதுதானா அல்லது செயற்கையானதா எனப் பரிசோதிக்க உள்ளனர். உலக நாடுகளின் அனைத்துப் பத்திரிகையாளர்களும் மற்றும் வானொலி, தொலைக்காட்சி செய்தியாளர்களும் இதில் கலந்து கொண்டு நேரடி தகவல்களைத் தர இருக்கிறார்கள். மக்கள் அமைதியாக இருக்கும்படிகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆனால் மக்கள் கழுதைக் கூட்டங்களாக மாறினார்கள். அவர்கள் அமைதியாக இருக்கவில்லை. அவர்கள் தலைநகரத்தில் மந்தை மந்தையாகக் கூடிக் கொண்டு உணவு விடுதிகளைச் சூறையாடினார்கள், பத்திரிகை அலுவலகங்களைத் தாக்கினார்கள், திரைப்பட அரங்குகளுக்குத் தீ வைத்தார்கள், மதுபானக் கடைகளுக்குள் புகுந்து திருடினார்கள், அரசு அலுவலகங்களையும், காவல் நிலையங்களையும் அடித்து நொறுக்கினார்கள். ஏராளமான இனக்கலவரங்கள் வேறு. மூக்கனது மூக்கின் காரணமான கலவரப் போக்கின் சாக்கில் ஏராளமான ஆண்களும் பெண்களும் உயிர்த்தியாகம் செய்தார்கள்.

மார்ச் 9. ஜனாதிபதி மாளிகை இருக்கும் பகுதியின் மைதானங்கள் மற்றும் சாலைகளெங்கும் மக்கள் நூற்றுக் கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கூடிவிட்டார்கள். கடிகாரம் சரியாகப் பதினொன்று அடிக்கையில் மாளிகையைச் சுற்றி வைக்கப்பட்ட ஒலிப்பெருக்கிகள் அறிவிப்பை முழங்கியது: மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அமைதிகாக்கவும்! பரிசோதனைத் தொடங்கிவிட்டது.

மருத்துவ நிபுணர்கள் ‘நீண்ட மூக்குடைய தளபதி’யின் மூக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் ஒன்றோடு ஒன்றாக நெருக்கித்திருகினார்கள். ஜனாதிபதி மாளிகைக்கு வெளிப்புறத்தில் கூட்டம் கூட்டமான மக்கள் திரள் தணிந்த சுவாசத்துடன் காத்துக் கிடந்தார்கள்!

மருத்துவ நிபுணர்களில் ஒருவர் மூக்கனுடைய மூக்குத் துவாரங்களை அடைத்தார். அவன் மூச்சுவிட சிரமப்பட்டு வாயைத் திறந்துகொண்டான். மற்றொரு மருத்துவ நிபுணர் அவனது நீண்ட மூக்கின் நுனியில் ஒரு ஊசியால் குத்தினார். அவ்வளவுதான்... அதிசயத் திலும் அதிசயம்! விவாதித்திற்கும் புகழுக்கும் உரிய அந்த மூக்கின் நுனியில் ஒரு துளி ரத்தம் துளிர்த்து நின்றது!

அது ரத்தமும் சதையும் கொண்ட உண்மையான மூக்கு. மருத்துவ நிபுணர்களின் ஏகமனதாக தீர்ப்பு. மூக்கனுடைய நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உரிய காரியதரிசி நங்கை காவலர்களின் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு, மருத்துவ நிபுணர்களின் ஊடே புகுந்து மூக்கனின் அருகே ஓடிப்போய் அவனது உண்மையென நிரூபிக்கப்பட்ட நீண்ட மூக்கின் நுனியில் மிகுந்த ஆசையுடன் முத்தமிட்டாள்.

“காம்ரேட் மூக்கன் ஜிந்தாபாத்! மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் ஜிந்தாபாத்! தோழர் மூக்கனின் உண்மை மூக்கு எழுச்சி அடைக!’’ கோஷங்கள் ஜனாதிபதி மாளிகையின் சுவர்களை அதிரச் செய்தன.

கோஷங்கள் மெல்ல அடங்கியதும், ஜனாதிபதி அடுத்துவொரு விவேகமான செயலைச் செய்ய இருக்கும் திட்டத்துடன் வெளியே வந்து மக்கள் முன் தோன்றினார். மூக்கனுக்கு மூக்கஸ்ரீ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு மேலும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார் எனவும் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியானது. “மூக்கஸ்ரீ மூக்கன், எம்.பி.!”

ஒரு பிரசித்திப் பெற்ற பல்கலைக் கழகம் மூக்கனுக்கு M.L.tt., பட்டம் வழங்கி கௌரவிக்க, மற்றொரு பழம்பெருமை மிக்க பல்கலைக் கழகம் அவனுக்கு D.Litt., பட்டம் வழங்கி அப்பல்கலைக்கழகம் தன்னைக் கௌரவித்துக்கொண்டது.

மூக்கஸ்ரீ மூக்கன், Master of Literature!
மூக்கஸ்ரீ மூக்கன், Doctor of Literature!

ஆனால், மக்கள் மறு மலர்ச்சி இயக்கம் (மூக்கன் எதிர்ப்பு அணி) அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக ஒரு கூட் டமைப்பு முன்னணியை உருவாக்கியது. மருத்துவ நிபுணர்களின் தீர்ப்பால் எரிச்சல் அடைந்து அவர்கள் உரத்த குரலெடுத்து கத்தினார்கள்:

“ஜனாதிபதியே பதவி விலகுக! பிரதமரே பதவி விலகுக! மூக்கன் ஒழிக! அவனது ரப்பர் மூக்கு ஒழிக! மக்களிடம் மாபெரும் பொய்மையைப் பரப்ப ஒத்துழைப்பு நல்கியவர்கள் ஒழிக!’’ மக்கள் மறுமலர்ச்சி இயக்கத்தின் போக்கு மட்டுப்பட்டு அடங்கவில்லை.

அறிவுஜீவிகள் மற்றும் தத்துவ வாதிகள் இத்தனை கூச்சல்களையும் குழப்பங்களையும் உண்டாக்க என்னதான் இருந்தன? உலகம் அங்கீகரித்த மூக்கை அவர்களும் உண்மையென ஒத்துக்கொள்ள வேண்டி இருந்தது. அவர்களை துரத்தி அடித்து வெளியேற்றுங்கள்.

Pin It