த சண்டே இந்தியன் என்னும் செய்தி இதழிலில் பரபரப்பான மிகப் பெரிய புதிய செய்தி இன்னும் 20 ஆண்டுகளில் அறிவியல் உதவியுடன் மரணத்தை ஜெயிக்கலாம் என்பதாக கவர் ஸ்டோரி வெளியிட்டுள்ளது. இன்னும் 20 வருடங்கள் வாழக்கூடியவர்கள் என்றென்றும் வாழப்போகும் வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானி ரே கர்ஸ்வேல் தனது சமீபத்திய நூலொன்றில் ஆருடம் சொல்லியுள்ளார். ரே கர்ஸ்வேல் அமெரிக்காவின் முன்னணி கணிப்பொறி விஞ்ஞானியும் எதிர்காலவியலாளரும் ஆவார்.

ரே கர்ஸ்வேல் கூற்றுப்படி, அடுத்த 20 வருடங்களில் நமது உடல்களை மறுநிரல் செய்யும் வழிகளை அறிவியல் கண்டுபிடித்துவிடும். இதன் மூலம் வயோதிகம் அடையும் செயல்வினை தலைகீழாக்கப்பட்டு நேனோ தொழில்நுட்பம் நம்மை என்றென்றும் வாழ வைக்கும். ஏற்கனவே இரத்த செல் அளவே உடைய நேனோ பாட்கள் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் உச்சகட்டமாக ரத்த செல்களை மாற்றம் செய்து உடல் ஆயிரம் மடங்கு திறனுடன் செயல்பட உதவும். இதனால் சராசரியாக 80 வயது வரை வாழக் கூடியவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். ஏனெனில் இந்த தொழில்நுட்பம் செயல்படத் தொடங்கியவுடன் வயோதிகம் அடைவது நிறுத்தப்பட்டு மனிதர்கள் தங்கள் முதிர்இளமை வடிவிலேயே தொடர்ந்து வாழ்வதற்கு வழி வகுக்கும் என்றெல்லாம் எதிர் பார்க்கப்படுகிறது.

அதாவது 80 வருடங்கள் வாழ்வதற்குப் பதிலாக ஒருவர் எட்டு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டே இருப்பார். எனில் அவர் என்ன செய்வார்? வாழ்க்கையில் அவ்வளவு செய்வதற்கு இருக்கிறதா? என்றென்றைக்குமாக இருந்து கொண்டே இருப்பது சலிப்பைத் தராதா?... இவ்வாறு எண்ணற்ற பல கேள்விகளையும் இதன் விளைவாக ஏற்படக்கூடிய நடைமுறைப் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களையும் பற்றி யோசிப்பதற்கு முன் நாம் வாழ்க்கை என்பது பற்றியும் மரணம் என்பது பற்றியும் நமது புரிதல்களை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொள்வோம். மரணத்தை வெல்வது என்றென்றைக்குமாக வாழ்வது என்கிற வி­யங்கள் கேள்விப்படுவதற்கு சுவாரசியமாக இருக்கலாம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் அதிவேக முன்னேற்றங்களால் எதுவும் சாத்தியமாகலாம் என்பதாக இருந்தாலும் எல்லா சாத்தியப்பாடுகளும் மனித இனத்திற்கு நன்மை பயப்பதாகவே அமையும் எனச் சொல்ல முடியாது.

கணிப்பொறி விஞ்ஞானியும், எதிர் காலவியலாளருமான ரே கர்ஸ்வேல் மனித ஜீவியை ஒரு கார் போலக் காண்கின்ற மிகவும் மேலோட்டமான புரிதலையும், பார்வையையும் கொண்டவராகவே தெரிகிறார். அவரது பார்வை மிகவும் எந்திரத்தனமானதும் மிகவும் மட்டுப்பாடானதுமாகும். ஒருமோட்டார் கார் கூட அது தயாரிக்கப்பட்டதிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை மட்டும் 15 அல்லது 20 ஆண்டுகள் வரை மட்டுமே நல்லநிலையில் இயங்கவும் நீடித்திருக்கவும் முடியும். அதற்குள்ளாகவும் கூட அதனுடைய சில பாகங்களை மாற்றிட நேரிடலாம். வேண்டுமானால் அந்த காரை தொடர்ந்து அதன் வெவ்வேறு பாகங்களை, என்ஜின் உட்பட எல்லாவற்றையுமே மாற்றி, அவ்வப்போது புதிய புதிய பாகங்களைப் பொருத்தி பராமரிப்பதன் வழியேநீண்ட நெடுங்காலம் ஆயிரம் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவும் பயன்படுத்திட முடியலாம். ஆனால் அதற்கான பராமரிப்புச் செலவும், நேரமும் சக்தியும் ஏராளமாய்த் தேவைப்படும் அவற்றை நம்மால் சந்திக்க முடிவது என்பது சந்தேகமே.

ஆனால் ஒரு மனித ஜீவியானவன் ஒரு மோட்டார் காரைப் போன்றவனல்ல. அவனது பாகங்களை தொடர்ந்து மாற்றிச் சரி செய்து, வியாதிகளிலிருந்து அவனை காப்பாற்றி, வயோதிகமடைவதை தடுத்து நிறுத்தி மரணத்தை வென்று என்றென்றைக்குமாக அவனை வாழ வைத்துவிட முடியாது. அப்படியே முடிந்தாலும் அதனால் யாதொரு பயனும், விசேடமும் விளையப்போவதில்லை. ஏற்கனவே, சராசரியாக 80 வயது வரை வாழக்கூடிய குறுகிய வாழ்க்காலத்தைக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனது வாழ்க்கை அர்த்தமற்றதாக விளங்கிடும் போது எட்டு லட்சம் வருடங்கள் வாழ்வதன் மூலம் அவனது வாழ்க்கை அதிக அர்த்தத்தைப் பெற்றுவிடுமா என்ன? வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் மனிதர்களின் ஆயுளை முடிவின்றி நீட்டிப்பது என்பது சிறிதும் அர்த்தமற்ற செயலாகும்.

மனிதனுக்கு பறக்க வேண்டிய தேவை இருப்பின் அவனுக்கு இறக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவைகளை அவன் செயற்கையாகச் செய்துக் கொள்ளத் தேவையில்லை. இது போலவே மனிதன் நீண்ட நெடிய ஆயுளுடன் தனது உடலுடன் வாழ வேண்டியது அவசியம் எனில் இயற்கையாகவே அவனது உடல் அவ்வகையில் அமைக்கப்ட்டிருக்கும். மனிதனுக்கு தனது உடலை மாற்றியமைக்க வேண்டிய தேவையிருக்காது.

மனித உடலானது எத்தகைய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது, எத்தகைய வாழ்க்கை குறிக்கோளுக்காக உருவாக்கப்பட்டது என்பதன் அடிப்படையில் பார்த்தோமெனில் அது நீண்ட நெடுங்காலத்திற்கு நிலைத்து நீடித்திருக்கும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கவில்லை. மனித உடலானது மிகக் குறுகிய காலத்திற்கு - மிக அதிகபட்சமாக ஒரு நூறு அல்லது நூற்றி இருபது வருடங்களுக்கு மட்டுமே உயிர்வாழும் வகையில் உருவாக்கப் பட்டதாகும். ஏனெனில் இக்குறுகிய வாழ் காலத்திற்குள்ளாகவே ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையின் குறிக்கோளை, இலக்கை அடைந்திட முடியும் என்பதாலேயே தான்.

பொதுவாக, நம் எல்லோருக்குமே நமது வாழ்க்காலம் பற்றிய ஒரு புகார் உள்ளது. அது என்னவெனில், மனித வாழ்காலம் மிகக் குறுகியது என்பதே. ஆனால் மனித வாழ்காலம் என்பது போதுமானது என்பதற்கும் மேல் அதிகமானதாகவே யுள்ளது என்பது தான் உண்மை. இந்த குறுகிய வாழ்காலத்திற்குள் மனிதனால் தனது வாழ்க்கையின் குறிக்கோளை இலக்கை அடையவியலாது என்பதாயிருந்தால் இயற்கையாகவே மனிதனின் ஆயுட்காலம் நெடியதாக அமைக்கப்பட்டிருக்கும். செயற்கையாக ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு நாம் எதுவும் செய்ய வேண்டியிராது. மனித உடலானது பல வளர்ச்சிப் பருவங்களினூடே சென்று நோய் கண்டு, மூப்பு அடைந்து இறுதியில் மரணத்தில் முடிந்து போவது இயற்கையானதாகும். மனித உடலைப் பீடிக்கும் பலவகை நோய்களிலிருந்து உடலைக் காப்பாற்றிடலாம். ஆனால் மரணத்திலிருந்து காப்பாற்றிட இயலாது. ஒரு வேளை மூப்படைவதை சிறிது - 5 அல்லது 10 வருடங்கள் தள்ளிப் போடலாம். ஆனால் மரணத்தை முடிவில்லாமல் தள்ளிப் போட இயலுமா? அது அவசியம் தானா?

மனித உடலானது நீண்ட நெடுங்காலத்திற்கு நீடித்திருப்பதற்காக உருவாக்கப் படவில்லை. ஏனெனில் மனித வாழ்க்கையும், அதன் குறிக்கோள் மற்றும் இலக்கும் நீடித்து உயிர் பிழைத்திருப்பதுடன் சம்பந்தப் பட்டிருக்கவில்லை. பரிணாமத் திட்ட விதிகளின்படி வாழ்க்கை என்பது உயிரோடிருத்தலின் - எவ்வளவு வருடங்கள் உயிரோடிருக்கிறோம் எனும் கால அவகாசத்தை இலக்காகக் கொண்டதல்ல. அப்படி யிருக்குமானால், பரிணாம நிகழ்வானது முதல் உயிரிகளான அமீபா மற்றும் ஆல்கா ஆகியவற்றுடன் முடிந்து போயிருக்கும். ஏனென்றால் இந்த முதல் உயிரிகள் உண்மையில் இறப்பதில்லை. அவை, செல் - பிரிதல் என்பதன் மூலம் ஒன்று இரண்டாகவும், இரண்டு நான்காகவும் இவ்வாறே அவை பல்கிப் பெருகி வாழ்ந்து கொண்டே இருக்கக் கூடிய உயிரிகளாகும்.

மேலும் உயிரோடு இருப்பதற்கு பெரிய அளவில் மூளையோ, சிந்திக்கும் திறனோ, உணர்வோ (பிரக்ஞையோ) எதுவும் தேவையில்லை. மாறும் சுற்றுச் சூழலுடன் தொடர்ந்து தகவமைந்து மாறிச் செல்ல முடிந்தால் போதும். ஆனால் வாழ்க்கை என்பது நிலைத்து நீடித்து உயிர் பிழைத்திருப்பது என்பதுமல்ல. அதோடு மாறுகின்ற சுற்றுச் சூழலுடன் தகவமைந்து செல்லுதல் என்பதுவுமல்ல. ஆகவே தான் ஒரு செல் ஜீவிகளான ஆல்கா மற்றும் அமீபா ஆகியவற்றுடன் பரிணாமம் முடிந்து விடாமல் அவற்றிலிருந்து இன்னும் மேம்பட்ட ஜீவிகளை ஊர்வன, பறப்பன, பாலூட்டி என பலவகைப்பட்ட ஜீவிகளை உருவாக்கிற்று. இவ்வரிசையில் இறுதியாக உதித்தவனே மனிதன் ஆவான்.

வாழ்க்கை என்பது நீடித்து உயிர் வாழ்வது என்பது அல்ல என்பதாலேயே எந்தவொரு ஜீவியின் உடலும் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே உயிரோடிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதனின் உடலும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆக, வாழ்க்கை என்பது நீண்ட நெடுங்காலம் உயிர்பிழைத்திருப்பது அல்ல என்றால், பின் வாழ்க்கை என்றால் என்ன? எனும் கேள்வி எழுவது தவிர்க்கவியலாது.

வாழ்க்கை என்பது உயிரோடிருப்பதைப் பற்றியதல்ல. அது ஒரு அடிப்படை மாத்திரமே. மாறாக வாழ்க்கை என்பது உண்மையில் உணர்வோடிருப்பது பற்றியதாகும். குறிப்பாக, மனித ஜீவியைப் பொறுத்தவரையில், ஒருவர் எவ்வளவு வருடங்கள் உயிரோடிருக்கிறார் என்பது முக்கியமல்ல. மாறாக ஒருவரது உடல் நோய் கண்டு மூப்படைந்து, மரணத்தில் முடிந்து போவதற்குள் ஒருவர் எவ்வளவு உணர்வுப்பூர்வமாகத் திகழ்கிறார், எத்தகைய உயர்ந்த, முழுமையான உணர்வு நிலையை (பிரக்ஞை நிலையை) எட்டுகிறார் என்பதே முக்கியமாகும்.

ஆம், வாழ்க்கை என்பது உயிரோடிருப்பது பற்றியதல்ல, மாறாக, உணர்வோடிருப்பது பற்றியதாகும். மேலும் உணர்வோடிருப்பது என்பதும் ஒரு தொடக்கம் மட்டுமே. ஏனெனில் உணர்வோடிருப்பது என்பது முழு உணர்வை அடைவதற்காகவே. முழு உணர்வு என்பது தான் முழுமையான வாழ்க்கையும், முழுமையான இருப்பும் ஆகும். அதுவே மனித வாழ்வின் இலக்கு ஆகும். ஆம், வாழ்க்கை என்பது கிடைமட்டத்தில் ஒரே நேர்க்கோட்டில் செல்கின்றதோர் இயக்கம் அல்ல. அது ஒரு உணர்வற்ற நிலையில் அல்லது மிகக் குறைந்ததோர் உணர்வு நிலையில் தொடங்கி படிப்படியாக உணர்வு நிலையில் உயர்ந்தோங்கி இறுதியில் முழு-உணர்வை அடைகின்றதோர் செங்குத்தான சுருள் வடிவ இயக்கமாகும். ஆகவே, நமது உடல் மரிப்பதற்குள் நாம் முழு-உணர்வு, நிலையை அடைந்தாக வேண்டும். முழு-உணர்வை அடைவதொன்றே முக்கியம்.

மனித வாழ்வின் இறுதி இலக்கான முழு - உணர்வை அடைவதற்கும், நீடித்த ஆயுளுடன் - என்றென்றைக்குமாக - இங்கே பூமியில் வாழ்வதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் ஒருவர் (அவரது வயது 20, அல்லது 30 அல்லது 40... என எதுவானாலும் சரி) இப்போதே முழு-உணர்வை அடைய முடியும். இன்று முழு-உணர்வை அடைவதை தவிர்த்துவிட்டு அதை நாளைக்கு அல்லது நாளை மறுநாளுக்கு தள்ளிப் போடுகின்ற உணர்வற்ற போக்கின் விளைவாகவே நாம் நீண்ட நெடுங்காலம் வாழ்வதற்கான வழிவகைகளைத் தேடுபவர்களாகிறோம்.

உண்மையில், உயிரோடிருப்பது என்பது வாழ்க்கைக்கான ஒரு அடிப்படை அல்லது அடித்தளம் மாத்திரமே தவிர அதுவே வாழ்க்கையா கிடாது, அதுவே வாழ்க்கையின் இலக்காக அமைந்திட வியலாது. பொதுவாக வாழ்க்கை என்பதை நாம் உயிரோடு இருப்பது என்பதாக குறுக்கி சுருக்கிக் காண்கிறோம். ஆகவே தான் எவ்வளவு அதிக காலம் உயிரோடு இருக்கப் போகிறோம் என்பது நமக்கு மிகவும் முக்கியமாகப்படுகிறது. நாம் எல்லோருமே நூறு வருடங்களுக்கும் முடிந்தால் அதற்கும் மேலாகவும் அல்லது என்றென்றைக்கு மாகவும் உயிரோடு இருக்க விரும்புகிறோம். அதாவது வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரிந்து கொள்ளாமல் எதற்காகவும், எந்த குறிக்கோளுக்காகவும், இலக்கிற்காகவும் அன்றி வெறுமனே நீண்ட காலம் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, உயிரோடிருக்க விரும்புகிறோம். ஆனால் நமது விருப்பத்திற்கு தடையாக உடலின் விதிகள் அமைந்துள்ளன. மனித உடலானது நீண்ட நெடுங்காலத்திற்கு முடிவேயில்லாமல் நீடித்திருப்பதற்காக உருவாக்கப் பட்டிருக்கவில்லை. மாறாக, நமது உடலானது மூப்படைந்து, நோய் கண்டு மரணத்தில் முடிந்து விடுவது என்பது நிச்சயம்.

மனித உடலின் ஆயுட்காலமும், மரணமும் வெறுமனே மரபணுக்களையும் பிற உடலியல் விதிகளையும் மற்றும் சூழ்நிலைமைகளையும் மட்டுமே சார்ந்த நுட்ப ரீதியான பிரச்சனையல்ல அவற்றை அறிவியலின் துணைக்கொண்டு மாற்றி யமைத்திடலாம் என்றெண்ணுவதற்கு மாறாக, அதை ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் தழுவிய பரிணாமத் திட்டத்தின் விதிகளைச் சார்ந்தவையாகும். ஆக, பரிணாமம் பற்றிய விதிகளையும், பரிணாமத் திட்டத்தையும், புரிந்து கொள்ளாமல் முக்கியமாக பரிணாமப் பார்வையில் மனித வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாமல் மனித ஆயுளை நீட்டிப்பது, இறவாமையை எட்ட முயற்சிப்பது என்பது விபரீதமான விளைவுகளையும், தேவையில்லாத பல பிரச்சனைகளையும் தான் கட்டவிழ்த்துவிடும்.

அதாவது கோட்பாட்டு ரீதியாக டி.என்.ஏ அமைப்புகளையும், குரோமோசோமின் அமைப்புகளையும் மாற்றுவதன் மூலம் இறவா நிலையை எட்ட இயலும் என்றாலும் நடைமுறை ரீதியாக அதை செயல்படுத்துவதற்கு முன் பரிணாம இயற்கையானது என்ன காரணத்திற்காக நோக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட வகையில் கணக்கில் டி.என்.ஏக்களையும், குரோமோசோம்களையும் அமைத்துள்ளது? என்ன காரணத்திற்காக பரிணாம இயற்கையானது உயிருள்ள ஜீவிகளையும், மனிதனையும் உருவாக்கிற்று? எந்த இலக்கை அடையவேண்டும் என்பதற்காக மிகக் குறுகிய வாழ்-காலத்தை வழங்கியதோடு இறுதியில் மரணத்தில் முடிந்து போகும்படி அமைத்திட்டது? என்பதற்கான பதில்களையும் கண்டறிந்து, பிறகு இறவாமையை செயல்படுத்துவதில் முனைப்பாக ஈடுபடலாம். ஏனெனில் இயற்கையில், பரிணாமப் படைப்பில் எதுவும் காரண காரியமில்லாமல் இடம் பெறுவதில்லை.

விஞ்ஞானம், விஞ்ஞான அறிவு என்பது இயற்கை யிடமிருந்து வேறானதல்ல. இன்றுவரை நாம் சேகரித்துள்ள விஞ்ஞான அறிவனைத்தும் இயற்கையிடமிருந்து அகழ்ந்தாராய்ந்து எடுக்கப்பட்டவையே. இயற்கையை மீறியது, இயற்கையில் இல்லாதது என்கிற வகையில் யாதொரு விஞ்ஞானமும், அறிவும் நம்மிடம் இல்லை. இயற்கையில் பொதிந்திருக்கும் அறிவுடன் ஒப்பிடுகையில் மனிதனுடைய விஞ்ஞான அறிவு போன்றதே. ஆகவே, மனிதனானவன் இயற்கையின் நியதிகளையும், விதிகளையும் மதித்தாக வேண்டும். அவற்றை மாற்ற நினைப்பதற்கு முன் அவற்றை முழுமையாகப் புரிந்து கொள்வது விபரீதமான பல விளைவுகளைத் தவிர்க்கும்.

இயற்கையின் நியதிகளில் மரணமும் ஒன்றாகும். ஆகவே நாம் மரணத்தைப் புரிந்து கொள்வது உடனடி அவசியமாகும். ஏன் உடனடியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றால் மரணத்தைப் புரிந்து கொள்ளாமல் நம்மால் வாழ்க்கையை முறையாகப் புரிந்து கொள்ள முடியாது. வாழவும் முடியாது.

மரணத்தைப் புரிந்து கொள்ளாத வரையிலும் மரணத்தை கணக்கில் கொள்ளாத வரையில் வாழ்க்கையை நாம் வெறும் உண்டு, உறங்கி, இனம் பெருக்கி உயிர் பிழைத்திருக்கும் மிகவும் மேலோட்டமான விவகாரமாக மட்டுமே காண்போம். வாழ்வோம், பொதுவாக மரணத்தை நாம் நம் வாழ்க்கையின் இறுதியில் இடம் பெறுவதாகவும் அது நம் வாழ்க்கையை முடிவிற்குக் கொண்டு வருவதற்காகவே வருவதாகவும் காண்கிறோம். ஆனால் உண்மையில் வாழ்க்கையை நாம் மிகவும் தவறாகவும், தலை கீழாகவும் புரிந்து கொண்டுள்ளதன் விளைவாகவே இவ்வாறு காண்கிறோம். அதாவது, நாம் எண்ணுவது போல, வாழ்க்கை என்பது உண்மையில் உயிரோடிருப்பதும், உடலைச் சார்ந்திருப்பதும் தான் என்பதாக இருக்குமானால் உடல் மூப்படைவதும், மரணமும் பரிணாமப் படைப்புத் திட்டத்தில் இடம் பெற்றிருக்காது.

ஆனால், மூப்பும், மரணமும் உடலின் நியதிகளாக, தவிர்க்கவியலாத விதிகளாக உடலின் ஒவ்வொரு செல்லிலும் பின்னப்பட்டுள்ளதால் வாழ்க்கை என்பது உயிரோடிருத்தல் என்பதை மையமாகவோ அல்லது இலக்காகவோ கொண்டிருக்கவில்லை என்பது தான் உண்மையான உண்மையாகும். இதன் அர்த்தம் வாழ்க்கை என்பது நாம் புரிந்து கொண்டிருக்கும் ஒன்றிலிருந்து முற்றிலும் வேறான நன்றாக உள்ளது என்பதேயாகும். அதாவது வாழ்க்கையை நாம் உயிரோடிருத்தல் என்பதுடன் சுருக்கிவிடமுடியாது.

ஆக, மரணம் என்பது உண்மையில் வாழ்க்கையின் இறுதியில் இடம்பெறும் ஒன்றோ அல்லது வாழ்க்கையை முடிவிற்குக் கொண்டுவரும் ஒன்றோ அல்ல. மாறாக மரணம் என்பது வாழ்க்கையில் இடம் பெறும் ஒன்றாகும். அது வாழ்க்கையை நீங்கள் முழுமையாக வாழ்ந்திடுவதற்கு உங்களுக்கு அளிக்கப்பட்ட கால- அவகாசத்தின் முடிவைக் குறிக்கும் ஒன்றே தவிர அது வாழ்க்கையின் முடிவல்ல.

ஆம், வாழ்க்கை என்பது மரணத்தில் முடிந்து போகின்ற பயணமல்ல. மாறாக அது முழுமையான வாழ்க்கை அல்லது நித்திய வாழ்க்கை என்பதிலேயே தனது முடிவை அடைகிறது. நதியின் முடிவும் முழுமையும் வறண்ட பாலையில் பாய்ந்து மணற்பரப்பினால் உறிஞ்சப்பட்டு காணாமல் போய்விடுவதில் அடங்கியிருக்கவில்லை. மாறாக வற்றாத சமுத்திரத்தில் சங்கமிப்பதிலேயே அடங்கியுள்ளது. ஆகவே, வாழ்க்கையின் முழுமை என்பது ஒரு போதும் மரணத்தில் அடையப்படுவதில்லை. மரணத்தை பொதுவாக இறுதியான போய்ச்சேருமிடம் என்பதாக கூறப்படுவதுண்டு. ஆனால் மரணம் என்பது இறுதியானதுமல்ல, எவ்வகையிலும் அது ஒரு போய்ச் சேருமிடமும் அல்ல. ஆக, வாழ்க்கையின் முழுமை என்பதை ஒவ்வொரு மனித ஜீவியும் தனது உடலின் மரணத்திற்கு முன்னேயே அடையப்படவேண்டிய ஒன்றாகும்.

ஒருவர் உயிரோடிருக்கும்போதே தனது வாழ்க்கையின் முழுமையை அடைந்திட வேண்டும். அவர் தனது வாழ்க்கையின் இலக்கான முழுமையை அடையத் தவறிவிட்டு, வீணே தமது வாழ் நாட்களைக் கழித்துவிட்டு பிறகு மரணம் வந்துவிட்டதே வாழ்க்கையைப் பறித்து விடப் போகிறதே எனப் புலம்புவதில் பயனில்லை. மேலும் மரணம் என்பது உடலின் மற்றும் உயிரோடிருத்தல் என்பதன் முடிவை குறிப்பது மட்டுமே தவிர அது மனித ஜீவியின் முடிவையோ அல்லது வாழ்க்கையின் முடிவையோ குறிப்பதில்லை. ஏனெனில், மனித ஜீவி என்பவன் பிரதானமாக அவனது உடல் அல்ல. உடல் என்பது வாழ்க்கையின் ஒப்பற்ற இலக்கான முழு-உணர்வை அடைவதற்கான ஒரு கருவி, அல்லது சாதனம் அல்லது ஒரு ஊர்தி போன்றதே.

உடல் என்பது ஒட்டுமொத்த மனித சுயத்தில் கால்பங்கு சுயம் மாத்திரமே. உடலை அடிப்படைச் சுயம் எனலாம். உடலையடுத்து வெளிப்பட்டது மனம் ஆகும். மனத்தை நாம் இடைச் சுயம் எனக் கொள்ளலாம். மனம் என்பது உணர்வு - இருப்பின் தொடக்க நிலை மட்டுமே ஆகும். மனம் எனும் இடைச் சுயத்தையடுத்து வெளிப்படவேண்டிய பரிமாணம் முழு-உணர்வே ஆகும். முழு-உணர்வு தான் மனிதனின் மிகச் சாரமான மையமான, உண்மையான சுயமாகும். முழு உணர்வு என்பதை நாம் ஆன்மா என்றும் அழைக்கலாம். மனிதன் முழு-உணர்வை அடைதலையே தன்னை உணர்தல் எனக் குறிப்பிடுகிறோம். மனிதனின் உடல் என்பது அவனது உயிர்-இருப்பிற்கான அடிப்படை மாத்திரமே ஆகும்.

அதில் உயிர்-இருப்பு என்பது இருப்பின், வாழ்க்கையின் இறுதியான நிலையோ அல்லது முழுமையான நிலையோ அல்ல. மனிதனின் மனம் என்பது அவனது உணர்வு - இருப்பிற்கான அடிப்படையாகும். மனிதனின் மனம் தொடக்கநிலை உணர்வாக, அரை-உணர்வாக இருப்பதால், மனத்தைச் சார்ந்த உணர்வு இருப்பு என்பதும் இறுதியான, முழுமையான இருப்புநிலையல்ல - மனிதன் தனது உணர்வின் முழுமையை, முழு-உணர்வை அடையும்போது மட்டுமே அவனது இருப்பு முழுமை பெறுகிறது. முழு-உணர்வு என்பது தான் முழுமையான, இறுதியான இருப்பு அல்லது வாழ்க்கையாகும்.

மனிதன் முழு-உணர்வை அடைவதற்காக ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திடத் தேவையில்லை. மாறாக, ஒருவர் மனித வாழ்க்கையின் இலக்கான முழு-உணர்வை அடைந்திடுவாரெனில் அவர் வாழ்வையும் மரணத்தையும் ஒருங்கே கடந்து விட்டவராகிறார். அத்தகைய ஒருவருக்கு நீடித்த வாழ்காலம் என்பது அர்த்தமற்றதாகி விடுகிறது. இதற்கு மாறாக இலக்கற்று வெறுமனே உண்டு, உறங்கி, இனம்பெருக்கி உயிர்-பிழைத்திருப்பதை வாழ்க்கையயனக் கொண்டு வாழ்ந்திடும் சாதாரணர்கள் தான் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்திட விரும்புகிறார்கள்.

உண்மையில், நீண்ட நெடுங்காலத்திற்கு - ஆயிரமாயிரம் ஆண்டுகள் அல்லது இலட்சக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்திடுவதன் மூலமாக மனிதனின் உணர்வு எவ்வகையிலும், வளர்ந்திடவோ, பரிணமித்திடவோ, மலர்ந்திடவோ செய்யாது. ஆக நீண்ட நெடுங்காலம் உயிர் வாழ்வதன் வழியே ஒரு போதும் மனிதன் முழு-உணர்வை அடைய வியலாது. முழு-உணர்வை அடைய வேண்டுமெனில் ஒருவர் தனது உயிர்-இருப்பை கடந்து உணர்வு - இருப்பிற்குள் பிரவேசிக்க வேண்டும். தனது உணர்வு இருப்பிற்கு அவர் தன்னை முழுமையாகத் திறப்பாரெனில், விழிப்பாரெனில், உடனே ஒரு நொடியில் அவர் முழு-உணர்வை எட்டிவிடுவார். பிறகு அவர் தனது உடலின் மரணத்தையும், தனது உயிர் இருப்பின் முடிவையும், குறித்து அஞ்சுவதோ, கவலைப்படுவதோ இல்லை. ஏனெனில் முழு-உணர்வு என்பது கால-வெளி, உலகம், உடல், மனம், என அனைத்தையும் கடந்து விளங்கும் பரிமாணம் ஆகும். இத்தகைய முழு-உணர்வு நிலையையே ஆன்மீகவாதிகள் - நித்தியத்துவம் முக்தி, மோட்சம், வீடுபேறு, ஞானமடைதல் தேவனின் ராஜ்ஜியம், மரணமிலாப் பெருவாழ்வு என பல்வேறு சொற்களைக் கொண்டு குறிப்பிடுகிறார்கள்.

ஆம், இறவாநிலை, மரணமிலாப் பெருவாழ்வு என்கிற நிலை உண்மையில் உள்ளது. ஆனால் அதற்கும் நீண்ட நெடுங்காலம் உயிர்-வாழ்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இறவாநிலை என்பது இப்போதிருக்கும் நிலையிலேயே ஒரு தவளை தவளையாக ஒரு மனிதன் மனிதனாக என்றென்றைக்குமாக தொடர்வதல்ல. மாறாக இருக்கும் நிலையின் மலர்ச்சியே இறவா நிலை என்பதாகும். இறவா நிலை என்பது உணர்வு ரீதியான மெய்ம்மையாகும். ஆம், முழு-உணர்வே அது.

இறவாநிலை அல்லது மரணமின்மையை அடைவது என்பது உடலின் மரணத்தை தள்ளிப் போடுவதோ, அல்லது விஞ்ஞானி ரே கர்ஸ்வேலின் கூற்றுப்படி விஞ்ஞானத்தின் உதவியால் முற்றிலுமாகத் தவிர்ப்பதோ அல்ல. மாறாக உடலையும், உடலை மையமாக கொண்ட உயிர் - இருப்பையும், அதன் முடிவையும், மரணத்தையும் கடந்து செல்வதன் வழியே மட்டுமே அடைய முடியும். மரணத்தைக் கடந்து செல்லுதல் என்பது மரணத்தைச் சந்திப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். மரணத்தைத் தவிர்ப்பதன் மூலமாக அல்ல. ஏனெனில், மரணத்தை ஒருபோதும் மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ, விஞ்ஞானத்தாலோ தவிர்த்திடவோ, வீழ்த்திடவோ முடியாது.

மரணம் என்பது முடிவிற்கு வருதல் என்பதைக் குறிக்கிறது. எவையயவையயல்லாம் முடிவிற்கு வரவேண்டுமோ அவையாவும் முடிவைத் தழுவியே ஆகவேண்டும். ஆம், உடலியல் பூர்வமானதும் பொருளியல் பூர்வமானதும், மனோவியல் பூர்வமானதும், இவ்வனைத்தும் முடிவிற்கு வந்தே ஆக வேண்டும். ஏனென்றால் இவையயதும் நாம் அல்ல. எவரெல்லாம் தாம் இந்த உடல் அல்ல, தாம் ஒரு உணர்வுதான் என்பதை உணர்ந்திருக்கிறாரோ அவரெல்லாம் ஏற்கனவே மரணத்தை வென்று விட்டவராவர். பிறகு உடலின் மரணம் சம்பவிக்கும் வரை அவர் தமது உடலின் வாழ்க்கையை, அதாவது தமது உயிர்-இருப்பை இரசித்து, அனுபவித்து, வாழ்ந்திடுவார். மரணத்தின் போது தனது உணர்வை இழக்காமல் முழு-உணர்வுடன் (நனவுடன்) இருப்பதன் வழியே அவர் மிக எளிதாக உணர்வு இருப்பின் பரிமாணத்துடன் இணைந்து விடுகிறார்.

மூப்பும், மரணமும் உடலின் நியதிகளாக, தவிர்க்கவியலாத விதிகளாக உடலின் ஒவ்வொரு செல்லிலும் பின்னப்பட்டுள்ளது. ஆகவே நமது உடலானது மரணத்தில் முடிந்து போவது என்பது உறுதி. அதில் தவிர்க்கவியலாத இந்த உடலின் மரணத்தை தவிர்க்க முயற்சிக்கும் பயனற்ற வீண் வேலையைத் தவிர்த்து உடலானது மரிப்பதற்குள் வாழ் நாட்கள் வீணாகாமல் வாழ்க்கையை தீவிரமாகவும், முழுமையாகவும், நனவுப் பூர்வமாகவும் வாழ்ந்திடுவது ஒன்றுதான் மரணத்தை வெல்வதற்கான சரியான எளிதான வழியாகும்.

ஆம், ஒவ்வொரு நாளும் முடியும் போது நமது உடலானது மரணத்தை நெருங்கிச் செல்கிறது. ஆக உடலின் வாழ்-காலம் முடிவதற்குள் நாம் நமது உணர்வில் வளர்ந்து, உயர்ந்து உணர்வின் உச்சத்தை அடைந்திட வேண்டும். அந்த உச்சத்தில் (உணர்வின் முழுமையில்) நமக்கு மரணம் என்பதில்லை. முழு-உணர்வுக்குக் குறைவான யாதொரு நிலையும் மரணத்திற்குச் சமமானதேயாகும்.

ஒரு வகையில, ஒவ்வொரு நாளும் நாம் நமது உடலின் மரணத்தை நினைவு கூர்வது உதவிகரமாக இருக்கும். நாம் வங்கியில் ஒரு பெரும் தொகையை கடனாக வாங்கியுள்ளோம். அத்தொகையை பத்து அல்லது இருபது வருடங்களுக்குள் திரும்பச் செலுத்திவிடவேண்டும் எனும் போது நாம் அந்தக் காலக்கெடுவை நினைவிற் கொள்வது அவசியம் என்பதைப் போலவே நமது உடலின் மரணத்தை நினைவிற் கொள்வது அவசியமாகும். மேலும் நமது உடல் எப்போது மரித்துப் போகும் என்பதை நம்மால் துல்லியமாக கணக்கிட முடியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு சராசரி கணக்குத்தான். அதற்காக, நாம் அச்சத்தில் நாளை எண்ணிக் கொண்டிருக்கத் தேவையில்லை. வெறுமனே மரணத்தை நினைவு கூர்தல் ஒன்றே போதும் அது நமது உணர்வை கூர்மையாக வைத்திருக்க உதவும்.

உடல் அழிந்திடக் கூடியது எனும் அறிவு மட்டுமே போதுமானது. அது உங்களை சரியான திசையில் வழி நடத்திடக் கூடும் அது குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை அது அப்படித்தான் - அது முற்றிலும் இயற்கையானது. அப்படியே நீங்கள் அஞ்சினாலும் அதிலும் தவறில்லை. ஏனெனில் மரணம் குறித்த அச்சம் நீங்கள் உடனடியாக, அவசரமாக செயல்படுவதற்கான ஆற்றலையும், நோக்கத்தையும் தரும். அச்சம் எனும் உணர்ச்சி ஆற்றலின் ஒரு வகையேயாகும். அதை நிங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உரிய காலக் கெடுவிற்குள் உங்கள் கடன் தொகையை வட்டியும் முதலுமாக திரும்பச் செலுத்திட வேண்டும். ஆனால் அதற்காக அந்த இறுதித் தேதிக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. அந்தக் கடைக் கெடுநாள் வரட்டும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்க முடியாது. இப்போதே நீங்கள் பணத்தை சம்பாதித்து சேமித்து வைத்து கெடு தேதிக்கு முன்னேயே வங்கியில் செலுத்திட முடியும்.

ஆம், வங்கியில் கடன் தொகையை கெடு தேதிக்கு முன்னேயே செலுத்துவது போல நாமும், மரணம் வருவதற்கு முன்னேயே வாழ்க்கையை வாழ்ந்து முடித்திடலாம். ஆம் வாழ்க்கையின் இலக்கான முழு-உணர்வை அடைவது ஒன்றே முக்கியமானது. வெறுமனே உயிர் பிழைத்திருப்பதல்ல. ஆம், வெறுமனே உயிர் பிழைத்திருந்தலும் வாழ்தலும் ஒன்றல்ல. இந்த உண்மையை புரிந்து கொண்டால் போதும் நாம் என்றென்றும் வாழ்வோம். உடலிலும், உடலின் மரணத்திற்கப்பாலும் வாழ்வோம். ஏனெனில் நாம் என்பது நமது உடல் அல்ல. இந்த உடல் அழிந்து போகலாம். இந்த உலகம், பிரபஞ்சம் முழுவதும் அழிந்து போகலாம். ஆனால் தூய முழு-உணர்வாகிய மனித ஜீவி ஒரு போதும் அழிவதேயில்லை.

வங்கியில் கடனாக வாங்கிய பணத்தை நாம் வட்டியும் முதலுமாகச் செலுத்திடவேண்டும். இயற்கையிடமிருந்து நாம் பெற்ற வாழ்க்கைக்காக முழு உணர்வாய் நாம் மாறிட வேண்டும் இதுவே நாம் இயற்கைக்கு செலுத்தும் நன்றியாகும்.

ஆனால், மரணம் நம்மை நோக்கி கேட்கும் கேள்வி இதுதான்.

 நீங்கள் உங்கள் வாழ்க்கையை முழுமையாக, தீவிரமாக, உணர்வுடன் வாழ்கிறீர்களா?

 

Pin It