வாழ்வு நித்தியமானதல்ல. அது சாவில் முடிகிறது. இந்த சாவு நித்தியமானது. தன்னுள் உயிர்த் துடிப்பை கொண்டுள்ள ஒவ்வொன்றும் சாவின் நிழலை தன்னகத்தே கொண்டுள்ளது. இருப்பினும் நாம் பிடிவாதமாக திருமணம் செய்து கொள்ளுகிறோம். குழந்தைகள் பெற்றுக் கொள்கிறோம். சாவு நம்மை பார்த்து புன்னகைக்கும் போது அலறியடித்தபடி ஓட முயற்சிக்கிறோம். ஆனால் சாவின் கருநிற சவச்சேவையானது நம்மில் எப்போதுமே பொதிந்துள்ளதை ஏனோ நாம் மறந்து விடுகிறோம்.

சாவின் விளிம்பில் இருப்பதை போல நான் சாவைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கியுள்ளேன். உண்மையை சொல்லப் போனால் நான் ஏற்கனவே இறந்து விட்டேன். உயிரற்ற பொருட்களாலான உலகம் சூழ்ந்திருக்க, விரும்பாத நேரத்தில் விரும்பாத வேலையை செய்து கொண்டு நானும் செத்துப்போன உலகின் ஒரு பகுதியாக மாறிவிட்டேன். ஆன்மா இறந்துவிட்ட பிறகு இவ்வுடல் மட்டும் எதற்காக வாழ வேண்டும்?

இருண்டிருக்கும் இந்த அதிகாலையில் படுக்கையில் படுத்த வண்ணம் மரண பூதங்கள் என்னை சுற்றி ஓலமிடுவதை காண்கிறேன். நான் தப்பியோட முயற்சிக்கவில்லை. ஒருவேளை நான் கதியற்றவனாக இருக்கலாம். நான் மேலே கூரையை நோக்கி பார்வை செலுத்த துருப்பிடித்த இறக்கைகளுடன் கூடிய ஒரு மின்விசிறியை காண்கிறேன். வெகு நாட்களுக்கு முன்னால் செத்துப்போன அது இன்று பூதம் போல காட்சியளிக்கிறது. அது என்னை வசீகரிக்கிறது. அதில் ஒரு தூக்குக் கயிறை மாட்டு இந்த உடலைத் தக்கவைக்கும் வளர்சிதைமாற்றத்தை நிறுத்தி விட்டாலென்ன? சிறு நார் இழைகளாலான கயிறு என் கழுத்தை இறுக்கும். என் உடலின் எடையினால் கயிறு கீழிறங்கும். துருபிடித்த மின்விசிறி கிறீச்சிட்ட சப்தத்தை எழுப்பும் வண்ணம் என் அங்கங்கள் போராடும். பின்னர் படிப்படியாக அமைதியாகி மின்விசிறியும், கயிறும், உடலும் ஒரு சேர சலனமற்ற நிலையை அடையும்.

சாவு நான் நினைத்ததை போல அவ்வளவு எளிதானது அல்ல போலும். அது பயங்கரமானதாகவும், வேதனை மிகுந்ததாகவும் தோன்றுகிறது. சிரிக்காதீர்கள். நான் ஒன்றும் நீங்கள் நினைப்பது போல் கோழையல்ல. நான் பிறந்ததும் வளர்ந்ததும் சாவின் மணத்தோடுதான். அதனால் சாவு எனக்கு அன்னியமானதல்ல. நானும் அதை பார்த்து பயப்படுவதில்லை. சாவிற்கும் எனக்கும் உள்ள நெருக்கத்தை தெரிந்து கொண்டால் நீஙகள் அதை புரிந்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் சிறுவனாயிருக்கும் போது எனது அம்மா வழி பாட்டி இறந்து விட்டாள். அது பற்றி எனக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்று அம்மா கூறுவாள். ஏனென்றால் நான் அப்போது மிகவும் சிறியவனாக இருந்தேனாம். ஆனால் அது உண்மையல்ல. எனக்கு என் பாட்டியின் சாவு பற்றி நன்றாக ஞாபகம் இருக்கிறது. செத்துப்போன அவளின் உடல் ஒரு இருண்ட அறையில் கிடத்தப்பட்டிருந்தது. மங்கலாக எரிந்துக் கொண்டிருந்த மெழுகுவர்த்திகள் சுவர்களின் மீது இருண்ட நிழல்களை ஏற்படுத்த, மலிவான வாசனைத் திரவியம் துக்கம் நிறைந்த வாசனையை பரப்பிக்கொண்டிருந்தது. அவ்வாசனை சாவின் வாசனையாக எனக்கு பட்டது. அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அவர்களில் சிலர் கைகளில் ஜெபமாலையை வைத்துக் கொண்டு ஏதோ ஜெபத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். நான் மிகவும் நேசிக்கும் மாமியும் அங்கிருந்தாள். அவளும் தன் கையிலுள்ள ஜெபமாலையை உருட்டிய வண்ணம் ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தாள். நான் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. எல்லோரின் பார்வையும் பாட்டியின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் கட்டிலை நோக்கியே இருந்தது. பாட்டியின் உடல் ஒரு வெள்ளைச் சேலையால் போர்த்தப்பட்டிருந்தது. ஒரு வயதான மூதாட்டி கையிலுள்ள ஒரு சிறு விசிறியால் பாட்டியின் உடலை மொய்க்க வரும் ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தாள்.

நான் எரிந்துகொண்டிருக்கும் மெழுகுதிரிகளிலிருந்து உருகி வழியும் மெழுகை சேகரித்து பந்து போல் உருட்டி அந்த மெழுகுப் பந்தைக் கொண்டு அங்கிருந்தவர்களுடன் விளையாட முயற்சித்தேன். அவர்கள் எல்லோரும் என்னுடன் கோபத்தில் இருப்பது போல் தோன்ற நான் என்னை மிகவும் நேசிக்கும் மாமியுடன் விளையாடும் எண்ணத்துடன் மெழுகுப் பந்தை அவள் பக்கம் உருட்டிவிட்டேன். அவள் ஜெபமாலையை உருட்டுவதை நிறுத்திவிட்டு என்னை பார்த்து முறைத்தாள். நான் பின் வாங்கிவிட்டேன். அவ்விடம் எனக்கு மூச்சுத் திணறுவதாகத் தோன்ற என் மெழுகுப் பந்தை எடுத்துக் கொண்டு வெளியே வராண்டாவுக்கு வந்துவிட்டேன். அங்கு என்னுடைய தாத்தா ஒரு மர பெஞ்சின் மேல் உட்கார்ந்திருந்தார்.

அவருடைய முகம் வெளிறிப் போயிருந்தது. கண்கள் சிவந்து காணப்பட்டன. நான் அவரருகில் சென்று அமர்ந்து கொண்டேன். அவரும் கையில் ஒரு ஜெபமாலை வைத்திருந்தார். ஊதா நிறத்திலிருந்த அது மிக அழகாக இருந்தது. நான் அதை என் விரல்களால் ஆசையுடன் தொட்டுப்பார்க்க தாத்தா ஜெபமாலையை என் கையில் கொடுத்தார். பெரியவர்கள் போல் அதன் மணிகளை உருட்ட எனக்கு சந்தோசமாக இருந்தது. புன்னகையுடன் தாத்தாவிடம் ஜெபமாலையை திருப்பிக் கொடுத்தேன். அவர் திருப்பி புன்னகைக்கவில்லை. மாறாக என் கைகளை லேசாகப் பிடித்து அழுத்தினார்.

அப்போது வீட்டினுள்ளிருந்து பெண்கள் கதறி அழும் சத்தம் கேட்க, சில பேர் இறந்து போன என் பாட்டியை ஒரு பெட்டியில் வைத்து மூடி தோளில் சுமந்த வண்ணம் எங்கோ கொண்டு சென்றனர். ஒரு பெரிய கூட்டம் அவர்களை தொடர்ந்து பின்சென்றது. சில பெண்கள் கதறி அழுதபடி அக்கூட்டத்தின் பின்னால் ஓடினர். என் அம்மாவும் அவர்களுடன் ஓட நானும் அழுதபடி அவள் பின்னால் ஓடினேன்.

பாட்டியின் இறப்பிற்குப் பின் தாத்தாவும் இறந்து போவார் எனவும் அவரையும் ஒரு பெட்டியில் போட்டு புதைத்துவிடுவார்கள் எனவும் நான் பயந்த வண்ணம் இருந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து எங்கள் வீட்டிற்கு வந்து போன வண்ணம்தான் இருந்தார். ஒரு நாள் எங்கள் வயல்வேலைகளைக் கண்காணிப்பதற்காக அவர் வந்திருந்தார். அப்போது எங்களுக்கு அரையாண்டு விடுமுறை. ஆதலால் நானும் என் நண்பன் விக்டரும் அவருடன் சென்றோம். வேலையை முடித்து வீடு திரும்பும் போது தாத்தா அம்மாவிடம் வர்ற வெள்ளிகெழம ஊர் கோயில் திருவிழா ஆரம்பிக்குது பிள்ளைகள கூட்டிகிட்டு வந்திரு என்றார். அம்மாவும் ஊம் என்று தலையாட்டினாள். நாங்களும் உற்சாகத்துடன் சென்றோம்.

தாத்தா வீட்டை நெருங்க நெருங்க அங்கு விளையாடும் சிறுவர்களின் ஆரவாரம் தெளிவாக கேட்டது. வீட்டு முற்றத்தை அடைந்தவுடன் நானும் அங்கு விளையாடும் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அந்த சந்தோசமான சூழ்நிலையிலும் ஏதோ துக்கம் கவிந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. அங்கிருந்த பெரியவர்களின் முகங்கள் சிறுவர்கள் எங்களால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்றை வெளிப்படுத்தன. ஏதோ மனதை நெருட நான் விளையாடுவதை நிறுத்திவிட்டு வீட்டினுள் சென்று என் தாத்தாவின் அறைக்குச் சென்றேன். அவர் அங்கு இல்லை. அவர் படுத்திருக்கும் மரக்கட்டில் எப்போதும் போல் பளபளத்துக் கொண்டிருந்தது. அவர் படிக்கும் பைபிளும் வழக்கம் போல் ய­ல்பின் கீழ்தட்டில்தான் இருந்தது. ஆனால் அவரைக் காணவில்லை. நான் அடுத்த அறைக்குச் சென்றேன். அங்கு அவர் ஜன்னலை ஒட்டிப் போடப்பட்டிருந்த ஒரு கட்டிலில் படுத்திருந்தார்.

ஜன்னலில் ஒரு மரச்சிலுவை வைக்கப்பட்டிருந்தது. நான் அவரை தாத்தா என்று கூப்பிட்டேன். அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால் சற்று சத்தமாக மீண்டும் கூப்பிட்டேன். மீண்டும் எந்த பதிலும் இல்லை. எனவே எனது வாயை அவரது காதருகில் கொண்டு சென்று தாத்தா என்று சத்தமாக கூப்பிட்டேன். அவர் கண்களைத் திறந்து என்னைப் பார்த்து லேசாக முறுவலித்து விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். அப்போது என்னுடைய மாமி அங்கு வந்து சில மாத்திரைகளை அவருக்கு சாப்பிடக் கொடுத்தாள். பின்பு என்னைப் பார்த்து தாத்தாவ தொந்தரவு பண்ணாத. வெளிய போயி வெளையாடு என்றாள். நான் வேறு வழியில்லாமல் அங்கிருந்து வெளியேறி விளையாடிக் கொண்டிருக்கும் மற்ற சிறுவர்களிடம் மீண்டும் சேர்ந்துக் கொண்டேன்.

நானும் என் உறவுக்கார சிறுவர்களும் மாலை வரை விளையாடினோம். பின்னர் ஊர் தேவாலய கொடியேற்றத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தேவாலாயத்திற்குச் சென்று திருப்பலியில் பங்கு கொண்டோம். திருப்பலி முடிந்து வீடு திரும்பும் போது தாத்தா வீட்டில் பெண்கள் அழுதுக் கொண்டிருந்தனர். ஆண்கள் சில பேர் பரபரப்புடன் அங்கும் இங்கும் போய் கொண்டிருந்தனர். எனது இதயம் பலமாக அடிக்கத் தொடங்கியது. அப்போது ஒரு வாடகைக் கார் திடீரென வந்து வீட்டின் முன் நின்றது. சில ஆண்கள் தாத்தாவை வாடகை காருக்குத் தூக்கி வந்தனர். சில பெண்கள் அழுத வண்ணம் அவர்கள் பின்னால் வந்தனர். என் மாமாவும் இன்னொருவரும் தாத்தாவுடன் பின்னிருக்கையில் அமர்ந்திருக்க முன்னிருக்கையில் என் அம்மா அழுகையுடன் அமர்ந்திருந்தாள்.

நான் அவள் இருந்த பக்கம் ஓடிச்சென்று என்னையும் கூட்டிச் செல்லுமாறு கூறி அழுதவண்ணம் காரின் கதவை பலமாக அடித்தேன். அப்போது என் அப்பா அங்கு வந்து என் கையை பிடித்து இழுத்துக் கூட்டிச் செல்ல அந்த வாடகைக் கார் புறப்பட்டு வேகமாக மருத்துவமனையை நோக்கிச் சென்றது. நானும், அப்பாவும் மற்ற உறவினர்களும் பஸ்ஸில் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவ மனையில் ஒரே கூட்டமாக இருந்தது. வெண்ணிற சீருடை அணிந்திருந்த தாதியர் அங்குமிங்குமாக வேகவேகமாக சென்று கொண்டிருந்தனர். நானும் எனது அப்பாவும் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த அறைக்குச் சென்றோம். தாத்தாவின் மூக்கில் சுவாசத்திற்கான குழாய்கள் செருகப்பட்டிருந்தன. அவர் சமச்சீரற்ற முறையில் சுவாசித்துக் கொண்டிருந்தார்.

திடீரென அவரது உடல் பயங்கரமாக குலுங்கியது. பின் அவர் தன் இருக்கைகளையும் மேலே உயர்த்தி ஏதோ பேச முயற்சித்தார். அவர் கையில் சிலுவையை குடுங்க என்று ஒரு மூதாட்டி பலமாகக் கத்தினார். சற்று நேரத்தில் எங்கிருந்தோ ஒரு கருநிற சிலுவை வந்து சேர்ந்தது. அதை தாத்தா கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். சற்று நேரத்தில் அவரது உடல் குலுங்குவது படிப்படியாகக் குறைந்து மூச்சுடன் நின்றுபோனது. அழுகுரல்கள் மருத்துவமனை முழுவதும் எதிரொலித்தன. அம்மாவும் மிகுந்த துயருடன் அழுதாள். அவள் அழுவதைப் பார்த்த நானும் அவளுடைய சேலையைப் பற்றிக்கொண்டு அழ ஆரம்பித்தேன். அப்போது அங்கே வந்த என் அப்பா என் கையைப் பற்றி கூட்டிக்கொண்டு போய் இன்னும் நீ சின்னப்பிள்ளை இல்ல. தைரியமா இருக்கனும் என்று கையிலிருந்த பீடியை உறிஞ்சியவண்ணம் கூறினார். ஆனாலும் நான் தொடர்ந்து அழுதேன்.

நான் தாத்தாவின் இறுதி சடங்கில் எல்லோருடனும் சேர்ந்து பங்கெடுத்துக் கொண்டேன். இறுதி சடங்கு நடந்த அந்த நேரத்தில் தேவாலயம் திருவிழாக் கோலத்தை இழந்து மரணக்கோலத்துடன் காணப்பட்டது. பீடத்தினருகில் இருந்த ஒரு மெழுகு ஸ்டாண்டில் ஏராளமான மெழுகுதிரிகள் பற்றவைக்கப்பட்டிருந்தன. தேவாலயத்தின் தரையிலும் சுவர்களிலும் நிறைய வெடிப்புகள் இருப்பதும், கூரையிலுள்ள உத்திரங்கள் உளுத்துப் போய் இருப்பதையும் அப்போதுதான் என கண்களுக்குத் தெரியவந்தன. அந்த தேவாலயமானது திருவிழாக் கொண்டாடுவதற்கு அல்ல, இறந்தவர்களை புதைப்பதற்குத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.

தாத்தாவின் சவ ஊர்வலம் குறுகலான, புதர்களும் காட்டு மரங்களும் உள்ள பாதை வழியாக சென்று கல்லறைத் தோட்டத்தை அடைந்தது. பரந்து விரிந்திருந்த கல்லறைத் தோட்டத்தில் பல்வேறு அளவுகளில் ஏராளமான கல்லறைகள் இருந்தன. கல்லறைகளுக்கிடையிலான இடத்தை எல்லாம் புதர்களும் கொடிகளும் அடைத்துக் கொண்டிருந்தன. சில கல்லறைகள் மிகவும் சிதிலமான நிலையில் காணப்பட்டன. காற்றாலும், மழையாலும் சில கல்லறைகளின் சிலுவைகள் உடைந்துபோய் இருந்தன. என்னுடைய தாத்தாவின் கல்லறையானது பாட்டியின் கல்லறையின் அருகிலேயே தோண்டப்பட்டிருந்தது. இறுதி மரியாதை செலுத்தும் விதமாக அங்குள்ளவர்கள் தாத்தாவின் நெற்றியில் சிலுவை இட்டு முத்தம் கொடுத்தனர்.

என்னுடைய அப்பா தான் இழுத்துக்கொண்டிருந்த பீடியை தூர போட்டுவிட்டு சிலுவையிட்டு முத்தம் கொடுத்தார். நானும் பவ்யத்துடன் தாத்தாவின் நெற்றியில் சிலுவையிட்டு முத்தம் கொடுக்க சாவிற்கான வாசனைத் திரவியம் என் நாசியில் ஏறி அங்கேயே தங்கிவிட்டது. முத்தம் கொடுத்திருக்கக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. பின்னர் தாத்தாவின் சவப்பெட்டியானது மூடப்பட்டு கல்லறை குழியினுள் இறக்கப்பட்டது. எல்லோரும் மரியாதை நிமித்தமாக ஒரு கைப்பிடி மண்ணைக் கல்லறை குழியினுள் போட்டனர். நானும் ஒரு கைப்பிடி நிறைய மண்ணை போட்டேன். என்னுடைய அம்மாவும் மாமாவும் மீண்டும் அழ ஆரம்பித்தனர். அவர்களை பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. ஆனால் ஏனோ எனக்கு அழுகை வரவில்லை.

கனத்த இதயத்துடன் நாங்கள் எங்கள் ஊர் வந்து சேர்ந்தோம். வாழ்க்கை மிகவும் இறுக்கமாக மாறியது. விடுமுறை முடிந்து பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு இன்னும் சில நாட்கள் இருந்தன. எங்கள் வீட்டில் ஒரே இருண்ட அமைதி நிலவியது. அம்மா எப்போதும் துக்கம் நிறைந்தே காணப்பட்டாள். சரியாகச் சமைக்கவில்லை. கஞ்சி மட்டுமே எங்களுக்கு மூன்று வேளையும். மீன் குழம்பு, காய்கறி எதுவுமில்லை. அந்த இருண்ட அமைதியிலிருந்து வெளியேறும் விதமாக ஆற்றிற்கு சென்று குளிக்கலாமென்று எண்ணினேன். அத்தை மகள் சோபியாவுடன் சென்றால் நன்றாக இருக்கும். ஆனால் அவள் விடுமுறை காலத்தை கழிக்க உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டாள். என்ன செய்வது நண்பன் விக்டருடன்தான் குளிக்க வேண்டுமென்றாகி விட்டது. நல்ல பையனான அவனுடன் குளிக்க செல்வது சந்தோசமான விசயம்தான். ஆனாலும் சோபியாவுடன் குளிக்கப் போவது என்பது எனக்கு எப்போதுமே இனிமையான அனுபவமாகவே இருந்தது.

ஆற்றங்கரையிலுள்ள மணல் திட்டை தாண்டி மரம் செடிகொடிகள் சூழ்ந்திருந்த விக்டரின் ஓட்டு வீடு மர அழிகளால் ஆற்றங்கரையிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தது. விக்டரின் அம்மா கொல்லையில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தாள். நான் இரண்டு நேரம் கூப்பிட்டும் விக்டர் சத்தம் தராததை பார்த்த அவனுடைய அம்மா, ஏய் விக்டர்... இதோ ஜான் வந்திருக்காண்டா?... என்று சத்தமாக கத்த, விக்டர் பின்புற வாசல் வழியாக வெளியே வந்தான். என்னைப் பார்த்ததும் அவன் சந்தோசத்துடன் சிரித்தான். அவனிடம் எப்போதுமே ஒட்டியிருக்கும் சிரிப்பு இருந்தாலும் அவன் நோய்வாய்ப்பட்டவன் போலே தோன்றினான்.

சொல்லப் போனால் அவன் எப்போதுமே அப்படித்தான் இருந்தான். அதனாலேயே நிறைய பையன்கள் அவனுடன் பழகுவதில்லை அல்லது அவர்களின் பெற்றோர் அவனிடம் பழகவிடுவதில்லை. ஆனால் அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல என் அம்மாவுக்கும்தான். நான் குளிக்கலாமா என இரு இதோ டவல எடுத்துட்டு வந்திர்றேன். என்று வீட்டுக்குள் சென்று ஒரு சிகப்பு நிற குற்றாலம் துண்டையும் ஒரு கண்ணாடி பாட்டிலையும் எடுத்துக்கொண்டு வந்தான். மீன் பிடிக்கலாமா? என்றான். நாங்கள் இருவரும் ஒரு கெண்டை மீனையும், பெயர் தெரியாத வேறு இரண்டு மீன்களையும் பிடித்தோம். விக்டர் என்னிடம் மீன்களை எடுத்துச் செல்லுமாறு கூறினான். நான் வேண்டாமென்றேன். ஏனென்றால் தான் துக்கத்திலிருக்கும் போது நான் சந்தோசமாக மீன்களுடன் வீட்டிற்கு செல்வதை அம்மா விரும்பமாட்டாள். இல்ல நீயே மீன வச்சுக்க என்று பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் பெரிய மனிதர் போல் கூறி மீன்களை நான் விக்டரிடமே கொடுத்துவிட்டேன்.

மறுநாளும் வீடடில் அதே சோகநிலைதான். ஆற்றிற்கு குளிக்கப் போனால் கொஞ்ச நேரமாவது சந்தோசமாயிருக்கலாம் என்று ஆற்றுக்கு போனால் ஆற்றின் இரண்டு கரைகளிலும் ஒரே ஜன கூட்டமாக இருந்தது. அந்த கூட்டத்தில் விக்டரும் நின்று கொண்டிருந்தான். நான் விக்டர் நிற்குமிடத்திற்கு வந்து என்ன விசயம்டா? என அவன் எந்த பதிலும் சொல்லாமல் ஆற்றினுள் தூரத்தில் மிதந்து வந்து கொண்டிருக்கும் ஒரு பொருளை நோக்கி கைகாட்டினான். முதலில் அது என்ன என்று பிடிகிடைக்கவிலலை. பின்னர்தான் அது அதிர்ச்சியூட்டும் அளவுக்கு பூதாகரமாக உப்பிப்போன ஒரு மனிதனின் உடல் என்று தெரிந்தது. யாருதான் பொணத்த ஆத்துல இருந்து எடுப்பாங்க? என்று ஒருவர் கேட்க, அருகிலிருந்த இன்னொருவர், போலீஸ்தான் எடுக்கணும் என்றார். பொணத்த எடுத்து என்ன பண்ணுவாங்க? என்று விக்டர் என்னிடம் கேட்டான். நான் ஒரு பெட்டில போட்டு மூடிருவாங்க என்றேன். அதை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரியவர் பெட்டியில்ல.. சவப்பெட்டி என்று என்னைத் திருத்தினார். பயந்து போன சிறுவர்களாகிய நாங்கள் ஆற்றுக்கு சென்று குளிக்கத் துணியவில்லை. நாட்கள் ஒவ்வொன்றாக கடந்தன. எங்கள் பயமும் கொஞ்சம் கொஞ்சமாக போய்விட்டது. மீண்டும் ஆற்றுக்கு சென்று குளிக்க ஆரம்பித்து விட்டோம்.

பள்ளிக்கூடம் திறப்பதற்கு முந்தின தினம் ஒரு குளிரான காலையில் குளிப்பதற்காக ஆற்றங்கரைக்கு சென்று விக்டரை கூப்பிட்டேன். அவன் வீட்டு பின்புற வாசல் வழியாகத்தான் வந்தான். நான் குளிக்கலாமா என அவன் இல்லடா, எனக்கு ஒடம்பு சரியில்ல என்று வருத்தத்துடன் பதிலளித்தான். அவன் முகம் வெளிறிப் போய் மிகவும் பலவீனத்துடன் தோன்றினான். பேசுவதற்கே கடினமாயிருந்தது அவனுக்கு. எனக்கு அவனை பார்ப்பதற்கு பாவமாயிருந்தது. ஆனா கரையில ஒனக்கு தொணையா ஒக்காந்து இருக்கேன் என்றான் விக்டர். நான் இல்ல விக்டர் நீ வீட்டுக்குப் போ ஒடம்புக்கு ஏதாது ஆகிட போவுது என்றேன். அவன் ஒண்ணும் ஆகாதுடா என்று ஆற்றங்கரையிலுள்ள ஒரு மேட்டுப்பகுதியில் அமர்ந்துகொளள நான் ஆற்றினுள் இறங்கி குளிக்க ஆரம்பித்தேன்.

அப்போது வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மழைத் தூரல்கள் விழ ஆரம்பித்தன. விக்டரின் அம்மா மர அழிகளின் உள்ளேயிருந்து ஏ விக்டர் மழடா வீட்டுக்குள்ள வா என்று கத்தினாள். விக்டர் வீட்டுக்கு போக எழும் சமயம் விக்டரின் அம்மா ஆற்றங்கரைக்கு வந்து நான் இன்னும் தண்ணீருனுள் இருப்பதைப் பார்த்து ஜான் கரையேறி வீட்டுக்குப் போ. மழை வர்றது தெரியலியா ஒனக்கு என்று சற்று அதட்டலாக சொன்னாள். நானும் கரையேறி டவலால் உடம்பை துடைத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன். விக்டர் அம்மாவுடன் வீட்டுக்குச் சென்றான். அவன் இருமும் சத்தம் அவன் வீட்டினுள்ளிருந்து கேட்டது.

மறுநாள் பள்ளிக்கூடம் திறந்தது. எல்லோரும் நன்றாக வெளுக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு குதூகலத்துடன் பள்ளிக்கூடம் சென்றோம். எனக்கு இரட்டிப்பு சந்தோசம். ஏனென்றால் என் அத்தை மகள் சோபியா விடுமுறையை உறவினர் வீட்டில் கழித்துவிட்டு திரும்பியிருந்தாள். நான் அவளுடன்தான் பள்ளிக்குச் சென்றேன். அதனால் அன்று விக்டர் பள்ளிக்கூடம் வராததை கூட நான் கவனிக்கவில்லை. பள்ளிக்கூடம் சென்ற பிறகு என்னடா விக்டர் இன்னைக்கு பள்ளிகொடத்துக்கு வரலியாடா? என்று எட்வின் கேட்ட பின்னர்தான் விக்டர் பள்ளிக்கு வரவில்லை என்ற விசயம் எனக்குத் தெரிந்தது. நான் வழியில் அவனை கூப்பிட்டிருக்க வேண்டும். அத்தைப் பெண் இருந்ததால் கூப்பிடத் தோணவில்லை. விக்டர் வகுப்பில் இல்லாமல் இருந்தது ஒரு மாதிரியிருந்தது. அத்தைப் பெண் என் வகுப்பில் இருந்தால். அந்த குறை தெரியாதுதான். ஆனால் அவள் என்னைவிட ஒரு வயது சிறியவள். அதனால் அவள் எனக்கு கீழ் வகுப்பில் படித்தாள்.

முன்தினம் விக்டருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது ஞாபகம் வந்தது. அவனை அழையாமல் வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்கு சென்று உடைகளை மாற்றிக்கொண்டு நேராக விக்டரின் வீட்டுக்குச் சென்றேன். அவன் படுக்கையில் படுத்திருந்தான். நான் வருவதை பார்த்ததும் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தவண்ணம் பலவீனமாக சிரித்தான். நான் அவனிடம் ஏன் பள்ளிகொடத்துக்கு வரல? ஒடம்புக்கு ரொம்ப முடியலியா? என, அப்போது அங்கு வந்த அவனுடைய அம்மா அவனுக்கு காய்ச்சலும், சளியும் இருக்குதுப்பா, என்Vறர். நான் நீ படுத்துக்கோடா என்று அவனுடைய தோளை பித்து அழுத்த அவன் மீண்டும் படுக்கையில் படுத்துக்கொண்டான்.

நோஞ்சானென்றாலும் விக்டர் நன்றாக படிக்கக்கூடியவன். அவனுக்கு பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் பற்றி கேட்காமல் இருப்புக் கொள்ளவில்லை. நானும் கூட நல்லா படிக்கக்கூடியவன்தான். அதனால் நான் அன்று பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்களை பற்றி விக்டரிடம் விவரித்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே திண்ணையில் உட்கார்ந்திருந்த விக்டர் அம்மாவிடம் எங்க ஜான் வந்தானா,? என்று என் அம்மா கேட்பது கேட்டது. விக்டரின் அம்மா ஆமா உள்ளதான் இருக்கதான். தேடுனீங்களா? என அம்மா இல்ல இங்கதா வந்திருப்பான்னு நௌச்சேன். விக்டருக்கு இப்ப எப்படி இருக்கு? இருவரும் உள்ளே வந்தனர். இப்ப கொஞ்சம் காய்ச்சல் விட்டிருக்கு. நாளைக்கு சரியாயிரும்னு டாக்டர் சொல்லியிருக்காரு. என்றால் விக்டரின் அம்மா. அம்மா விக்டரின் நெற்றியில் கைவைத்து பார்த்துவிட்டு ஆமா இப்ப காய்ச்சல் அவ்வளவா இல்ல. என்ற வண்ணம் அவனது கையை பிடித்து அழுத்தினாள். விக்டர் அம்மாவை பார்த்து மெலிதாக சிரித்தான்.

மறுநாள் வானம் முற்றாக வெளுக்காத காலையில் படுக்கையில் கண்களை மூடிபடுத்திருக்க வெளியில் அக்கம் பக்கத்திலுள்ளவர்களின் நடமாடும் சத்தம் வழக்கத்திற்கு அதிகமாக கேட்டது. அவர்கள் தங்களுக்குள் கிசு கிசுத்தபடியே பேசிக்கொண்டனர். தேவாலயத்திலிருந்து எழுந்த சாவு மணி என்னுள் கலக்கத்தை ஏற்படுத்த படுக்கையிலிருந்து எழுந்து அம்மாவிடம் ஏம்மா வெளிய ஒரே சலசலப்பாயிருக்கு? என அவள் என் நெற்றியில் முத்தமிட்டு ஒண்ணுமில்ல படுத்துக்கோ என்னை மீண்டும் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியே சென்றாள். அப்போது ஒரு பெண் யாரு இறந்தது? என்று கேட்க, தெரசா பாட்டி சைமனோட பையன் விக்டரு என பதில் கூற நான் படுக்கையிலிருந்து அலறியடித்துக் கொண்டு எழுந்து அழுத வண்ணம் விக்டரின் வீட்டை நோக்கி ஓடினேன்.

விக்டர் நான் அவனை முந்தைய தினம் பார்த்த அதே கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். என்னைப் பார்த்ததும் விக்டரின் அம்மா, டே விக்டர் ஒன்ன ஜான் பார்க்க வந்திருக்கான்டா? என்று கதற நான் ஓவென்று அழ ஆரம்பித்தேன். நான் சென்ற சற்று நேரத்தில் சிஸ்டர் ரீட்டா தேவாலயப் பாடல் குழுவினருடன் அங்கு வந்தார். அவர்களுடன் சோபியாவும் வந்திருந்தாள். என் அழுகையைப் பார்த்த அவளும் தேவாலயத்தில் பாடலை சேர்ந்திசைப்பது போல் சேர்ந்து அழுதாள். பாடல் குழுவினருடன் வந்திருந்த சிஸ்டர் ரீட்டாவை பர்த்த விக்டரின் அம்மா, என் மோனே சிஸ்டர் ஒன்ன பாக்க வந்திருக்காங்கடா எழுந்திரிடா என்று அழ சிஸ்டர் ரீட்டா அழாதீங்கம்மா. விக்டர் நமக்கு முன்னாடியே மோட்சத்துக்கு போயிட்டான். அதுக்கு நாம சந்தோசம்தான் படணும் என்றார். விக்டரின் அம்மா, எம்புள்ள என்னமா கோவில்ல பாடுவான் இனி அவன் பாடுறத எப்ப கேப்பேன். என்று அரற்ற ஆரம்பித்தார். அதைக் கேட்ட எட்வின் சிரித்துவிட்டான். எனக்கு விக்டர் மோட்சத்துக்கு போவான் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் அவனுடைய அம்மா விக்டர் நன்றாக பாடுவான் என்று பொய் சொன்னதுதான் பிடிக்கவில்லை.

விக்டர் மோட்சத்துக்கு போனது நல்ல விசயம்தான் என்றாலும் அவன் இல்லாத வகுப்பறை துயரத்தை அளிப்பதாகவே இருந்தது. ஆனாலும் காலம் யாருக்காகவும் நில்லாது மாற, பருவநிலைகள் உலகத்தை தொடர்ந்து மாற்றி காண்பித்தன. வசந்தத்தில் இருள் உலகு பச்சையாய் மிளிர உற்சாகம் தலை தூக்கியது. விக்டரின் மரணம் குறித்த துயர நினைவு அவனுடனான எனக்குள்ள உறவின் நினைவுகளாக மாற நானும் மற்றவர்களைப் போல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினேன். இப்போது விக்டரின் இடத்தில் எட்வின் இருந்தான். நாங்கள் இருவரும் தோற்றத்தில் கிட்டதட்ட ஒரே போலத்தான் இருந்தோம். அவன் என்னைவிட சற்று குள்ளம். அவ்வளவுதான். எட்வின் என்னை போலவே இருப்பதால் அம்மாவுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். நாளடைவில் அவன் எங்கள் வீட்டில் ஒருவனாகவே மாறிவிட்டான். பள்ளியிலும் நானும் எட்வினும் எப்போதும் சேர்ந்தே இருந்தோம்.

ஒருநாள் வரலாறு பாடம் நடத்தும் சிஸ்டர் யஹலன் எங்கள் எல்லோரையும் பள்ளித் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கறிப்பலா மரங்களின் நிழலில் உட்கார்ந்து படிக்கச் சொல்ல நாங்கள் அகன்ற கறிப்பலா இலைகளை தரையில் விரித்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டு படிக்க ஆரம்பித்தோம். அல்லது படிப்பது போல் நடிக்க ஆரம்பித்தோம். எட்வின் படிக்கவில்லை. நானும் படிக்கவில்லைதான். ஆனால் அவன் எப்போதுமே படிப்பதில்லை. அவன் ஒரு நோட்டில் கலர் பேனாக்களால் படங்களை வரைந்து கொண்டிருந்தான். அவன் வரைந்த படம் ஒன்றினை எனக்கு காண்பித்தான். அது பெரிய மீசையை வைத்திருக்கும் ஒரு கிழவனின் கேலிச் சித்திரம். நான் அழகா இருக்குது. என்றேன்.

அவன் உற்சாகமாகிவிட்டான். மீண்டும் வேகமாக ஒரு படத்தை வரைந்து எனக்கு காண்பித்து இது எப்படியிருக்கு? என்றான். அது ஒரு கருப்பு நிற சவப்பெட்டியின் சித்திரம். அப்படம் எனக்கு விக்டரின் மரணத்தை ஞாபகப்டுத்துவதாக இருந்தது. நல்லாயில்ல. இந்த மாதிரி வரையாதே. என்றேன். அவன் முகம் வாடிப் போனது. என்னை திருப்திபடுத்துவதற்காக மீண்டும் அவன் எதையோ வரைய ஆரம்பித்தான். அந்த சமயத்தில் மஞ்சள் வெயிலினூடாகவே மழை லேசாக தூறல் போட சிஸ்டர் எல்லோரையும் வகுப்பறைக்குப் போகச் சொன்னார். நாங்கள் அனைவரும் கூச்சலிட்டவாறே வகுப்பறைக்குள் நுழைந்தோம்.

வகுப்பறையினுள் நாங்கள் இட்ட கூச்சலையும் தாண்டி எங்கள் வகுப்பறையை ஒட்டியிருக்கும் தெருவிலிருந்து பெண்களின் அழுகுரல் கேட்டது. நாங்கள் தெருவின் பக்கம் திறந்திருக்கும் ஜன்னல் வழியாக என்ன நடக்கிறது என்று வெளியில் எட்டிப் பார்த்தோம். அங்கு மாட்டு வண்டிக்காரன் ஆவ்ரானின் தங்கையும், அம்மாவும் நெஞ்சிலடித்து கதறியழுத வண்ணமே ஒரு ஆம்புலன்ஸ் வண்டியின் பின்னால் ஓடினர். என்ன விசயம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது சிஸ்டர் யஹலன் தெரு பக்கமிருக்கும் கதவை திறந்து கொண்டு வெளியே போய் அங்கு கூடி நின்றவர்களிடம் என்ன நடந்ததென்று விசாரித்தார். பின்னர் வகுப்பறைக்குள் வந்த அவர் எல்லோரும் அமைதியாயிருங்க. ஒரு துக்கமான விசயம். வண்டியோட்டும் போது வண்டியிலிருந்து கீழே விழுந்து வண்டிச் சக்கரம் ஏறி அப்ரகாம்னு ஒருத்தர் இறந்திட்டார் என நான் அருகிலிருந்து எட்வினிடம் டேய் ஆவ்ராண்டா சிஸ்டர் அவனோட பேர அப்ரகாம்னு தப்பா சொல்றாங்க பாரு என்றேன்.

அதற்கு எட்வின் சிஸ்டர் வேற ஊருகாரங்கடா. அதனால்தான் அவங்களுக்கு பேரு சரியா தெரியலை என்றான். சிஸ்டர் யஹலன் தொடர்ந்து எல்லோரும் எழுந்து கண்ண மூடி அவரோடு ஆன்மா மோட்சத்தை அடையறதுக்கு கடவுள் கிட்ட வேண்டுங்க என்றார். எல்லோரும் எழுந்து நின்று கண்களை மூடிக்கொண்டு ஜெபம் செய்தனர். அல்லது சிஸ்டருக்குப் பயந்து அப்படி நடித்தனர். எட்வின் கூட கண்களை மூடி ஏதோ முணுமுணுத்தான். தேவாலயத்தில் பீடச் சிறுவனாக இருக்கிறானல்லவா அவன் தன்னை பக்திமான் என்று காட்டிக் கொள்கிறானாம். நான் ஜெபம் செய்யவில்லை. ஏனென்றால் எனக்குத் தெரியும் ஆவ்ரான் நிச்சயமாக நரகத்துக்குத்தான் போவான் என்று. சிறுவர்கள் ஏதாவது தப்பு செய்தால் பெற்றோர் ஆவ்ரானிடம் அவர்களை பிடித்துக்கொண்டு போக சொல்ல அவன் அவர்களை தூக்கிக் கொண்டு செல்வதற்கு ஒரு பெரிய கோணிப்பையோடு வந்துவிடுவான். அப்படிப்பட்டவன் எப்படி நரகத்திற்கு போகாமல் மோட்சத்திற்குப் போக முடியும்?

எனக்கு கொடூரமான ஆவ்ரான் செத்த பிறகு எப்படியிருப்பான் என்று பார்க்க தோன்றியது. பள்ளிக்கூடம் முடிந்ததும் அவனை பார்ப்பதற்காக அவனுடைய வீட்டிற்கு சென்றேன். கூடவே துணைக்கு சோபியாவையும் கூப்பிட்டேன். அவள் ஒரு பயந்தாங்கொள்ளி. வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். ஆவ்ரான் ஒரு அகன்ற பெஞ்சின் மீதிருந்த சவப்பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்தான். அவனுடைய முகம் அவன் உயிரோடு இருக்கும் போது இருந்ததை விட அதிகமாக இருண்டு போய் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. கெட்டவனான அவன் இறப்பிலும் ஏதாவது செய்துவிடுவானோ என்ற பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. வெளியே ஓடி வந்துவிட்டேன்.

எனக்குப் பிடிக்காவிட்டாலும் தேவாலயத்தின் பாடல்குழு உறுப்பினர் என்ற முறையில் ஆவ்ரானின் இறுதியடக்க திருப்பலியில் பங்கெடுக்க வேண்டியதாயிற்று. சோபியா வரவேயில்லை. நான் ஹார்மோனியம் மாஸ்டர் பல் ஜஸ்டினுக்குப் பாடல் நோட்டு புத்தகத்தைச் சரித்துப் பிடித்தவண்ணம் பாடல் குழுவினர் எல்லோருடனும் சேர்ந்து இறந்தோருக்கான பாடலை பாடினேன். பாடல் மிகவும் உருக்கமாக இருந்தது. பாடலோடு சேர்ந்து ஹார்மோனியமும் உருக்கமாய் இசைத்தது. அந்த இசை என்னை மிகவும் ஆட்கொள்ள நான் ஒரு விரலால் ஹார்மோனியத்தின் கட்டை ஒன்றை அழுத்தினேன்.

அது எழுப்பும் இசை எனக்கு ஆனந்தமாயிருக்க மீண்டும் அதே கட்டையை அழுத்தேன். என்னாலும் கூட ஹார்மோனியத்தை இசைக்கமுடியும் என்று தோன்றியது. சந்தோசத்தில் நான் அந்த கட்டையை அப்படியே அழுத்தி பிடித்து வைக்க, அந்த கட்டை தொடர்ந்து பாடலுக்கு எதிரான சுரத்தில் சப்தம் எழுப்ப ஹார்மோனியம் மாஸ்டர் தன்னுடைய மோதிரம் அணிந்த விரலால் என்னுடைய தலையில் பலமாக கொட்டினார். அது தலையில் சம்மட்டிக்கொண்டு அடித்தது போல் வலித்தது. இவனெல்லாம் சாகமாட்டான? என்று மனதிற்குள் அவரைச் சபித்தேன் அவரும் இறந்து போனார்.

ஹார்மோனியம் மாஸ்டர் மீது எனக்கு பயங்கரக் கோபம் இருந்தது உண்மைதான். ஆனால் நான் உண்மையில் அவர் சாகவேண்டும் என்று நினைக்கவேயில்லை. அதனால் எனது சாபத்தால் அவர் இறந்து போது எனக்கு பெரும் துயரத்தை கொடுத்தது. அவருடைய வீட்டு முற்றததில் வைக்கப்பட்டிருந்த அவருடையபிணத்தை பார்த்ததும் என்னால் தாங்கிக்கெள்ள முடியவில்லை. கதறியழுது விட்டேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஊரே அழுதது. ஆனால் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு வந்த குருவானவர் மட்டும் அழவேயில்லை. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடையகண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. அங்கு மட்டுமல்ல எந்த சாவிலுமே அவர் அழுததாகவோ, சோகமாக இருந்ததாகவோ எனக்கு ஞாபகமில்லை. அவர் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காகவே நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் ஊரிலுள்ள எல்லோரையும் அடக்கம் செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார் என்றும் தோன்றியது.

ஒரு நாள் அந்த குருவானவரும் இறந்து போனார். அவருடைய உடல் தேவாலயத்தின் முன்னாலுள்ள மைதானததில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. சொல்லி வைத்தாற் போல் ஊர்மக்கள் யாரும் அவருக்காக கண்ணீர் விடவில்லை. இரக்கமற்றவருக்காக மக்கள் கண்ணீர் சிந்தத் தயாரில்லை போலும். அவருடைய சாவை கொண்டாடுவது போல் அவருக்கான இறுதித் திருப்பலியானது மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டது.

ஊர் மக்களை அடக்கம் செய்யும் பணியில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக மறைமாவட்ட தலைமை உடனே ஒரு குருவானவரை எங்கள் ஊருக்கு நியமித்தது. குருவானவரின் முதல் பலிகடா யாராக இருக்கும் என்று பயந்திருந்த எனக்கு என்னுடைய பெரியப்பாதான் அந்த முதல் பலிகடா என்பது அதிர்ச்சியாக இருந்தது. இறுதிச் சடங்கு ஜெபத்திற்காக வந்திருந்த புதிய குருவானவர் யாருக்கும் புரியாத லத்தீன் மொழியில் இறந்தோருக்கான பாடலை எந்த உணர்ச்சிகளுமற்று பாட அவருடன் பீடச் சிறுவனாக வந்திருந்த எட்வின் தூபப் பேழையை மிகவும் சிலாகிப்புடன் ஊஞ்சலாட்டிக் கொண்டிருந்தான். குருவானவருடன் சேர்ந்து அவனுக்கும் உணர்ச்சிகள் அற்றுவிட்டது போலும்.

பெரியப்பா உயிரோடு இருக்கும்வரையில் சதா சிகரெட் புகைத்துக் கொண்டு புகையை மூக்கு வழியாக வெளியிடுவார். தன்னால் கண்கள் வழியாக கூட புகையை வெளியிட முடியும் என்று அவர் எங்களிடம் கூறுவதுண்டு. ஆனால் அதை அவர் ஒருமுறை கூடச் செய்து காட்டவில்லை. இப்போது அவரின் மூக்குத் துவாரங்கள் பஞ்சினால் அடைக்கப்பட்டிருக்க லேசாக திறந்திருக்கும் கண்கள் வழியாக புகைவருவது போன்ற ஒரு தோற்றத்தை அவர் உடலை சுற்றி ஏற்றப்பட்டிருக்கும் சாம்பிராணித் திரிகளிலிருந்து வெளிப்படும் புகை ஏற்படுத்தியது. ஆனால் அந்த புகையில் சிகரெட் வாசனையில்லை. சாம்பிராணியின் துக்க வாசனையே இருந்தது. எனக்கு அழுகையாக வந்தது. ஆனால் சோபியா வளர்ந்த பெண் போல் என் கைகளை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு என்னைத் தேற்றினாள்.

காலம் எப்போதும் போல் தொடர் இயக்கத்திலிருந்தது. காலத்தில் நாங்களும் மாறியிருந்தோம். வளர்ந்திருந்தோம். மேற்படிப்புக்காக முயற்சி செய்தோம். படிப்பில் பொதுவாக என்னிலிருந்து பின் தங்கியிருந்த எட்வினுக்கு முதலிலேயே மேற்படிப்பிற்கு இடம் கிடைக்க அவன் வெளியூர் சென்றுவிட்டான். அது எனக்கு சற்று பொறாமையாகக் கூட இருந்தது. நான் தொடர்ந்து மேற்படிப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஒரு வழியாக எனக்கும் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. அத்தை மகளிடமிருந்து தூரமாக போய் படிப்பது எனக்கு கடினமாக இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை. அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் நன்றாக படித்து நல்ல வேலையில் சேர்ந்தாக வேண்டும் என்ற நிலை எனக்கு.

கல்லூரியில் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. அம்மா நான் தங்கியிருந்த விடுதிக்கு தொலைபேசியில் அழைத்து என்னை உடனே பார்க்க வேண்டுமென்றாள். சேர்ந்த உடனேயே விடுப்பு எடுப்பது சரியில்ல என்று அவளிடம் எவ்வளவு சொல்லியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை உடனே பார்த்தாக வேண்டும் என்று கூறி அழ ஆரம்பித்துவிட்டாள். வேறு வழியில்லாமல் நான் உடனே கிளம்ப வேண்டியதாயிற்று. அவரசமாக கிளம்பியதால் சோபியாவுக்கு கூட இரண்டு ஜோடி வளையல்களைத் தவிர வேறு எதுவும் வாங்க முடியவில்லை.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அம்மா அழுதவண்ணம் எட்வின் அவன் தங்கியிருந்த விடுதியின் அருகில் மின் கம்பி அறுந்துவிழுந்து இறந்துவிட்டதாக சொன்னாள். கையிலிருந்த கைப்பையை தூக்கி வீசியதுதான் எனக்கு ஞாபகம். எட்வினின் வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தேனென்று எனக்கே தெரியவில்லை. நான் அவன் வீட்டை அடைந்த போது அவனுடைய உடல் இன்னும் வீடு வந்து சேரவேயில்லை. பிணப் பரிசோதனைக்காக அவனுடைய உடல் அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டார்க்ள். எட்வினுடைய உடல் ஆம்புலன்ஸில் வீட்டிற்கு வந்து சேருவதற்கு முன்பாக அவனுடைய அம்மா மூர்ச்சையாகி விழுந்துவிட்டாள். அவனுடைய தங்கை தரையில் உருண்டு அழுது கொண்டிருந்தாள். அவனுடைய அப்பா வீட்டுச் சுவரில் கல்லாக சாய்ந்திருந்தார்.

ஆம்புலன்ஸ் நின்றதும் எட்வின் இறங்கி நடந்துதான் வீட்டுக்கு வருவான் எனும் இனம் புரியா அல்லது அசட்டு நம்பிக்கை எனக்குள்ளிருந்தது. ஆனால் அவன் சவபெட்டியினுள் வைக்கப்பட்டுதான் கொண்டு வரப்பட்டிருந்தான். அவனுடைய உடலை நான் நன்றாக உற்றுப் பார்த்தேன். என் மனம் துக்கம் மகிழ்ச்சி எதுவுமற்றதாக மரத்து போய்விட்டது. உணரச்சி எனக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் என்னுள் எழ மீண்டும் அவனை உற்றுப் பார்த்தேன். அவன் சாம்பலாக அல்ல தலையாலானவனாகவே இருந்தான். என்னை பார்த்து அவன் தன்னுடன்அழைப்பது போலிருந்தது. எனக்கு அவனுடன் போகக் கூடாதென்று இல்லை. ஆனால் நான் போகமுடியாது. அத்தை மகள் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். நான் அவளுக்காக வாழ்ந்தாக வேண்டும் என்று அவனிடம் மெளனமாக கூறினேன். அவன் அதை ஏற்றுக்கொண்டது போல் கண்களை மூடியிருந்தான்.

நான் கண்களைத் திறந்தாலும் மூடினாலும் எட்வினின் நினைவு திரும்பத் திரும்ப வந்து துன்பத்தை கொடுக்க, அதிலிருந்து விடுபடும் எண்ணத்துடன் அத்தை மகள் சோபியாவை சந்திக்க அவள் வீட்டிற்கு சென்றேன். அவளையும் எட்வினின் இறப்பு பாதித்திருந்தது. நாங்கள் இருவரும் சற்று நேரம் மெளனமாக இருந்தோம். பின் மெளன துயரத்திலிருந்து வலிந்து வெளியேறி நான் அத்தை மகளுக்காக வாங்கி வைத்திருந்த இரண்டு ஜோடி வளையல்களையும் அவளிடம் கொடுத்தேன். அவள் அவற்றை அழகாயிருக்கு என்ற வண்ணம் வாங்கிக் கைகளில் போட்டுக் கொண்டாள். உண்மையிலேயே அவள் கைகளில் அந்த வளையல்கள் அழகாக இருந்தன. ரொம்ப அழகாயிருக்கு. என்ற அவள் கைகளைப் பார்த்த வண்ணம் கூறினேன்.

அவள் புன்னகையுடன் உள்ளறைக்குச் சென்று மடித்து வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்து வந்தாள். ஒனக்கு அனுப்புறதுக்குனு இந்த கடிதத்த எழுதி வச்சிருந்தேன். என்ற வண்ணம் அந்த கடிதத்தை என் கையில் கொடுத்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ நீதான் நேர்ல வந்துட்டியே அப்புறம் எதுக்கு கடிதம் என்று என் கைகளிலிருந்து கடிதத்தைத் திருப்பி பிடுங்கிவிட்டாள். நான் அவளை சந்தோசம் கலந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் அர்த்த புஷ்டியுடன் என்னை பார்த்து ஒன்னோட காலேஜ்ல நல்ல அழகான பொண்ணுக எல்லாம் இருப்பாங்களே என்று கேட்டாள். அதைக் கேட்ட நான் அடுத்து நீ என்ன கேக்கப்பொறன்னு தெரியும். என்னோட உலகத்தில் உன்னை தவிர வேறு எந்தப் பெண்ணும் கிடையாது என்ற உறுதியாகக் கூறினேன். ஏனாம்? ஏன்னா நான் உன்னை முழுமனசோட காதலிக்கிறேன் என்றேன்.

அவள் காதல் புன்னகை பூத்த கண்களால் என்னைப் பார்த்தாள். நான், நீ என்ன காதலிக்கிறீயா? என அவள் பதில் சொல்லாமல் வேகமாக வந்து என் உதடுகள் மேல் அவள் உதடுகளைப் பதித்து அழுத்தமாக முத்தம் கொடுத்தாள். சுற்றியுள்ள உலகமெல்லாம் மங்கி நாங்கள் மட்டும் எங்கள் காதலுடன் எஞ்சியிருந்தோம். நேரம் சென்று அத்தையும், மாமாவும் வீட்டிற்குள் நுழையும் சத்தம் கேட்டு நாங்கள் எங்களிடமிருந்து எங்களை விடுவித்துக் கொண்டு மீண்டும் உலகினுள் வந்தோம்.

இந்த பிரபஞ்சத்தில் எதுவும் எதற்காகவும் நின்றுபோவதில்லை. நாம் இருந்தாலும் அது இயங்கும். இல்லாவிட்டாலும் இயங்கும். உள்ளத்தினுள் எட்வின் இறந்த துயரிருந்தாலும் படிப்பைத் தொடருவதற்காக நான் மீண்டும் வெளியூருக்குப் பயணம் புறப்பட்டேன். அம்மாவுக்கும் சோபியாவிற்கும் நான் படிப்பதற்காக வெளியூர் செல்வது கொஞ்சமும் பிடிக்கவில்லையயன்றாலும் எனக்கு வேறு வழியிருக்கவில்லை. ஆனால் கல்லூரியில எனக்கு சதா சோபியாவின் நினைவாகவே இருந்தது. பேசாமல் படிப்பை நிறுத்திவிட்டு போய்விடலாமா என்று கூட சில நேரங்களில் தோன்றுவதுண்டு. எப்போது பரீட்சை முடியும், கோடை விடுமுறை வரும் என்று ஏக்கத்துடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன்.

விடுமுறை வந்ததும் தாமதம் சோபியாவிற்கு அழகான வெள்ளைநிறத்தில் தையல் வேலைபாடுகளுடன் கூடிய நீள் பாவாடையும் ப்ளெவுசும், அம்மாவிற்கு, இரண்டு சேலைகளும் வாங்கிகொண்டு அன்று இரவே வீட்டுக்குப் புறப்பட்டேன். வீட்டிற்கு வந்த நான் காலையிலேயே எழுந்து குளித்து சோபியாவை பார்க்க செல்வதற்கு தயாரானேன். காலையில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அம்மா, சோபியாவிற்கு ஒடம்பு சரியில்லாம கொஞ்ச நாள் ஆஸ்பத்திரில இருந்தாள். மூணு நாளைக்கு முன்னாடிதான் ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்குப் போக அனுமதிச்சாங்க. என்று கூறினாள். எனக்கு கோபாமாக வந்தது. ஏன் இத எல்லாம் எங்கிட்ட சொல்லல என்று ஆத்திரத்துடன் அம்மாவை பார்த்து கத்தினேன். அம்மா ஒனக்கு பரீட்சை நேரம். தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவியேன்னுதான் சொல்லல என இத விட எல்லாம் பரீட்சையா முக்கியம். என்று கோபத்துடன் எழுந்து கையை கழுவிக்கொண்டு உடனே சோபியாவின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

பார்ப்பதற்கு சோபியா மிகவும் இளைத்துப்போய் பலவீனமாக காணப்பட்டாள். அதைப் பார்த்ததும் என் உள்ளம் நொறுங்கிப் போனது. ஆனால் அவளோ என்னைப் பார்த்ததும் ஏன் ஜான் இப்படி இருக்கே? ஒழுங்கா சாப்பிட மாட்டியா? என்று அப்பாவித்தனமாக காதல் கனிந்த வார்த்தைகளில் கேட்டாள். நான், ஏன்? நான் நல்லத்தான் இருக்கேன். நீதான் ரொம்ப பலவீனமாயிருக்க. இப்ப ஒடம்புக்கு எப்படியிருக்கு? என்று கேட்க அவள் எனக்கு ஒண்ணுமேயில்ல. நான் நல்லாத்தான் இருக்கேன் என்றாள். நான் அவளுக்காக வாங்கி வந்த உடைகளை அவளிடம் கொடுத்து எப்படி இருக்குதுன்னு பாரு? என்றேன் அவள் அதை வாங்கி பிரித்து பார்த்துவிடடு ரொம்ப நல்லாயிருக்கு. இப்ப போட்டு காட்டவா என்று கேட்டாள். நான் ஆம் என்று தலையாட்ட அவள் போய் நான் வாங்கி வந்த பாவாடையையும் ப்ளெவுசையும் அணிந்து கொண்டு வந்தாள்.

அந்த ஆடையில் அவள் அவ்வளவு அழகாகத் தெரிந்தாள். தேவதை மாதிரி இருக்கே என்றேன். அவள் வெட்கம் கலந்த பார்வையுடன் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். பின்னர் அருகில் வந்து உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் நான் அவளை கூர்ந்து கவனித்தேன். அவள் மிகவும் களைப்புடனும், பலவீனத்துடனும் காணப்பட்டாள். என் கண்கள் குளமாகிவிட்டன. நான் மிகவும் பிரயத்தனப்பட்டு என்னுடைய அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சித்தேன். அதைப் புரிந்துக்கொண்ட அவள் என் கைகளை பிடித்துக்கொண்டு எனக்கு ஒண்ணுமில்ல நான் நல்லாயிருக்கேன் என்றாள். அதற்குமேலும் அங்கு இருந்தால் கதறி அழுதுவிடுவேனென்று தோன்ற அவளிடம் விடைபெற்றுக்கொண்டு நான் வெளியேறினேன். வெளியில் வரவும் மாமா வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. அவர் என்னைப் பார்த்து நீ எப்ப வந்தே,? என்று கேட்டார். காலையிலேயே அவர் மது அருந்துவிட்டு வந்திருந்தார். எனக்கு அவர் மேலே கோபம் கோபமாக வந்தது. அதனால் அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மெதுவாக என் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

மறுநாள் காலையில் எழுந்து வீட்டு மாடிக்குச் செல்ல, சூரியன் தூரே கிழக்கிலுள்ள மலைகளின் பின்னாலிருந்து எழுந்து தன்னுடைய மஞ்சள் கதிர்களை வெளியயங்கும் பரப்பியது. கொக்குகள் ஆகாயத்தில் கூட்டமாகப் பறந்து செல்ல மரங்கொத்தி பறவைகள் தங்கள் பணியை காலையிலேயே ஆரம்பித்திருந்தன. காலைத் தென்றலில் மா மற்றும் பலா மர இலைகள் லேசாக அசைந்துக் கொண்டிருந்தன. மனிதனும் இயந்திரங்களும் ஒரே போல் இயங்கும் நகரத்தில் எவ்வளவு கூட்டமும், கூச்சலும் இருந்தாலும் நான் தனிமையிலே இருந்தேன். இங்கே நான் தனியனாக இருந்தாலும் உயிருள்ள உலகத்தின் ஒரு பகுதியாக இருப்பது போல் உணரமுடிந்தது. அப்போது என்னுடைய குதூகலமான மனநிலையை குலைக்கும் வண்ணம் அம்மா கீழிருந்து கத்தி கூப்பிடுவது கேட்க, நான் அவசரமாக கீழிறங்கி சென்றேன்.

அம்மா என்னிடம் சோபியாவுக்கு திடீர்னு ரொம்ப அதிகமாருச்சாம். ஒங்கிட்ட ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு கார் பிடிச்சிட்டு வர சொல்லி பக்கத்து வீட்டு பையனை அனுப்பியிருக்காங்க. நீ வேகமாக போயி கார் பிடிச்சிட்டு வந்திரு. நான் நேரா வீட்டுக்குப் போய் எப்படியிருக்குதுன்று பார்க்கிறேன் என்றாள். நான் பைத்தியம் பிடித்தவன் போல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக வாடகைக் கார்கள் நிற்கும் வெள்ளிச்சந்தை சந்திப்புக்குச் சென்றேன். அங்கு ஒரே ஒரு கார் மட்டும்தான் நின்று கொண்டிருந்தது. அந்த கார் டிரைவர் வெற்றிலை மென்றுகொண்டு நிதானமாக காரை ஸ்டார்ட் செய்ய அது ஸ்டார்ட் ஆகாமல் போக நான் வண்டியை பின்னாலிருந்து தள்ளினேன். ஒரு வழியாக கார் ஸ்டார்ட் ஆகி புறப்பட்டு சென்றது. நான் காரைச் சைக்கிளில் பின் தொடர்ந்தேன்.

நான் அத்தையின் வீட்டை அடைந்த போது வாடகை கார் புறப்படாமல் வீட்டு முன்னாலேயே நின்றுகொண்டிருந்தது. ஊர் மக்கள் ஒவ்வொருவராக அத்தையின் வீட்டு முற்றத்தில் குழும ஆரம்பித்தனர். என்னநடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. வீட்டினுள்ளிருந்து அழுகைச் சத்தம் பலமாக கேட்டது. நான் வீட்டிற்கு அருகில் போகத் துணியவில்லை. என் புலனறிவை எல்லாம் நிறுத்திவிட்டு வெளியுலகின் துயரம் என்னைத் தாக்காதவாறு பார்த்துக்கொள்ள எத்தனித்தேன் முடியவில்லை. முன்தினம் நான் சோபியாவை பார்த்த கணங்களோடு காலத்தின் இயக்கத்தை நிறுத்தி அந்த சந்தோசத்தோடு காலத்தில் என் நினைவை முடித்துக்கெள்ளவும் முயற்சித்தேன். முடியவே இல்லை. என்னையறியாமல் வீடு என்னருகில் நகர்ந்து வர வெளியிலிருந்த வண்ணமே சோபியாவின் முகத்தைப் பார்த்தேன்.

அவளது முகம் தேவதையைப் போல பிரகாசமாக இருந்தது. அவள் நான் வாங்கிக்கொடுத்திருந்த வெள்ளைநிற ஆடைகளையே அணிந்திருந்தாள். தேவதையேதான் அவள். தேவதைகளுக்கு மரணம் உண்டா? இல்லை. இல்லவே இல்லை. உண்மையில் ஏதோவொரு நாடகம்தான் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது என்பதை உணர்ந்தேன். அங்கு குழுமியிருந்தவர்கள் எல்லோரும் அந்த நாடகத்தைப் பார்ப்பதற்கே வந்திருந்தார்கள். வீட்டையும் வீட்டு முற்றத்தையும் மட்டுமல்ல கல்லறைத் தோட்டத்தையே நாடக மேடையாக மாற்றியிருந்தார்கள். ஒரு நாடகத்தை கல்லறை தோட்டம் வரைக்கும் ஏன் கொண்டு செல்லவேண்டும்? என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

கல்லறை தோட்டத்தில் நின்ற பலமாக சிரித்தேன். அவர்கள் நாடகத்தை அதோடு முடித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை அவர்கள். அத்தை மகள் இருந்த பெட்டியை சவக்குழியில் இறக்குவதற்காக கயிறை பெட்டியின் அடிப்பகுதி வழியாக இட்டான் ஒருவன். என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. என் உடல் பலத்தையயல்லாம் ஒன்று திரட்டி அவன் முகத்தில் ஒரு குத்துவிட்டேன். அவன் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வந்தது. நான் விடவில்லை. மீண்டும் மீண்டும் அவனை முகத்தில் குத்துவிட்டேன். அவன் வலியால் கத்தினான். நான் விடவேயில்லை. அப்போது இரண்டு மூன்று பேர் என் கைகளை பிடித்து ஏதோ பாதாள உலகத்திற்கு இழுத்துச் செல்வதைப் போல் இழுக்க என் கண்கள் இருண்டு தலைச் சுற்றியது. என் அம்மா எங்கோ தூரத்திலிருந்து அழுவது கேட்டது.

பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. அதிர்ச்சிலதான் மயக்கமாயிருக்கன். கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிரும் என்று நர்சாக இருக்கும் மார்க்கரெட் அக்கா பேசுவது ஏதோ உலகத்திலிருந்து கேட்டது. கண்கள் விழிக்க கல்லறையின் அருகிலுள்ள ஒரு வீட்டின் வராண்டாவில் நான் படுத்திருக்க என்னைச் சுற்றி உறிவினர்கள் சிலபேரும் அம்மாவும் இருப்பது தெரிந்தது. அழுது அழுது அம்மாவின் முகம் வீங்கிப் போயிருந்தது. கடவுள் கொடுத்த பிள்ளைய அவரே எடுத்துகிட்டா நம்ம என்னப்பா பண்ண முடியும் என்று என்னுடைய அம்மா கூறினாள். நான் எதுவும் பேசவில்லை. மெளனமாக அழுதேன்.

அதிக நேரம் திண்ணையில் என்னால் இருக்க முடியவில்லை. மீண்டும் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றேன். சோபியாவின் உடல் அடக்கப்பட்டு கல்லறை மூடப்பட்டிருந்தது. கல்லறைத் தோட்டத்தில் கூடியிருந்தவர்கள் வேக வேகமாக கலைந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்கள் எல்லோரும் விரைந்து சென்று வாழப்போகிறவர்கள் போல தோன்றினார்கள். வாழ்க்கை மீது அவர்களுக்கு அவ்வளவு மோகம். ஒருவேளை வாழ்க்கையை நித்தியமாக தக்கவைத்திருக்க முடியும் எனும் அசட்டு நம்பிக்கை அவர்களுக்குள் இருக்கிறது போலும்.

எல்லோரும் கல்லறைத் தோட்டத்தை விட்டு போனபிறகும் நான் அங்கேயே நின்றிருந்தேன். மாலையிருட்டுடன் மழையிருட்டும் திரண்டு வர கல்லறை தோட்டமே குத்திருட்டாகியிருந்தது. அப்போதும் அங்கேயே நின்றிருந்தேன். நான் என் அத்தை மகளிடமிருந்து விடை பெற விரும்பவில்லை. எனக்கு அவளிடம் நிறையப் பேசவேண்டும் போலிருந்தது.

நானும் சாவும் முதலில் வழிபோக்கர்கள் போலத்தான் சந்தித்துக்கொண்டோம். நாளாகி பழகப் பழக சாவு எனக்கு மிகவும் நெருக்கமான நண்பனாகி விட்டது. இப்போது அது என்னுள்ளே புகுந்து இரண்டறக் கலக்க உடலெங்கும் சாவின் வாடை வீச என் குரல் சாவின் குரலாகவே மாறிவிட்டது. ஆத்ம மரணத்தின் நீட்சிதான் உடலின் மரணம். ஆத்மா ஏற்கனவே செத்துப்போக படுக்கையில் படுத்தவண்ணம் உடலின் மரணத்தைப் பற்றி தொடர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இனிமேலும் நான் சாவைப் பார்த்து பயப்படும் கோழையன்றெண்ணி நீங்கள் யாரும் சிரிக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் கூறியவற்றைக் கேட்ட உங்களால் எனக்கும் சாவிற்குமுள்ள நெருக்கம் பற்றி கண்டிப்பாக புரிந்துகொள்ள முடியும்தான். இதோ படுக்கையில் படுத்திருக்கும் என்னைச் சுற்றி மீண்டும் மரணத்தின் பூதங்கள் ஓலமிடுகின்றன. தேவாலயத்திலிருந்து மீண்டும்சாவு மணியின் ஓசை கேட்கிறது. ஆனால் அது எனக்காக அடிக்கப்பட்ட சாவு மணியல்ல என்றே நினைக்கிறேன். ஏனென்றால் நான் இன்னும் மின்விசிறியில் கயிறைக் கூட மாட்டவில்லை.

 

Pin It