நாதின் கார்டிமர் தென்னாப்பிரிக்காவில் ஸ்ப்ரிங்ஸ் என்னுமிடத்தில் 1923ம் ஆண்டு பிறந்தவர். பத்து நாவல்களும் பத்து சிறுகதைத் தொகுதிகளும் வெளியிட்டுள்ளார். PEN அமைப்பின் துணைத்தலைவராக இருந்திருக்கிறார். ஹார்வர்டு, கேம்ப்ரிட்ஜ், பெல்ஜியம், யார்க், கேப்டவுன் பல்கலைக் கழகங்களால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப் பெற்றவர்.

கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். இவர் எழுதிய Late Bourgeois World, Burger’s Daughter, July’s People ஆகிய நாவல்கள் தென்னாப்பிரிக்கா அரசாங்கத்தால் பலவருடங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. 1961 ஆம் ஆண்டுக்குப்பின் இவரின் படைப்புகள் பரவலான கவனம் பெற்றன. 1991-ஆம் ஆண்டு நாதின் கார்டிமருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது

என் உதடுகளை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் நான் பேசுவதில்லை. நீங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். ரயில் குலுங்கும் போது நீங்கள் முன்னால் குனிந்து கேட்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் நான் பேசுவதில்லை. நான் அதைச் செய்து முடித்ததற்கு எனக்குச் சேரவேண்டிய மீதிப் பணத்தை நான் கேட்கலாம். அவர்களை என்னால் கண்டுபிடிக்க முடிந்தால். ஆனால் அவர்களைக் காணவில்லை. அவர்களை எங்கே தேடுவதென்றும் தெரியவில்லை. இன்னும் அவர்கள் இங்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் வேறு தேசத்தில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எப்போதும் இடம் மாறிக் கொண்டே யிருக்கிறார்கள். அப்படித்தான் அவர்கள் என்னைப் போன்ற மனிதர்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.

அரசுகள் கவிழ்க்கப்படும் போது நாங்கள் வீடுகளை விட்டுக் கிளம்புகிறோம். தவறான பக்கத்தில் கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஒருவராக. வேலையில்லை. உணவில்லை. நாங்கள் எல்லைகளைக் கடக்கும்போது நாங்கள் இன்னொரு எல்லைக்கு, இன்னொரு எல்லைக்கென நகர்த்தப்படுகிறோம். உங்களுடைய, கடைசியாகச் சேரவேண்டிய இடம் எது? எங்களுக்குத் தெரியாது. எங்கு நாங்கள் தங்கலாம் என்பதும் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கான ஆவணங்கள் எந்த தேசத்தில் கிடைக்கவில்லையோ அந்த தேசத்தில் நாங்கள் எங்கு அனுப்பப்படுவோம் என்பதும் எங்களுக்குத் தெரியாது.

நான் எப்போதும் பேசுவதில்லை. எங்கோ ஓரிடத்தில் அவர்கள் எங்களைக் கண்டறிகிறார்கள். அவர்கள் என்னைக் கண்டறிந்தார்கள். என்னைக் காப்பாற்றினார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியும். அவர்கள் எனக்கொரு பெயர் தந்தார்கள். எனக்கான ஆவணங்களோடு என்னை இங்கே விட்டார்கள். என் பெயரை நான் புதைத்துவிட்டேன். அந்தப் பெயரை என்னிலிருந்து யாரும் நோண்டி எடுக்க முடியாது. அவர்கள் நான் என்ன செய்ய வேண்டுமென்பதை தெரிவித்தார்கள். அதற்கான பாதிப்பணத்தை உடனுக்குடன் தந்துவிட்டார்கள்.

ஓட்டலில் எனக்கு ஒருஅறை இருந்தது. அந்த ஓட்டலில் மூன்று ரெஸ்டாரெண்டுகள் இருந்தன. எந்த ரெஸ்டாரெண்டில் சாப்பிடலாமென்று முடிவெடுக்க பலர் வாசலிலுள்ள மெனுப்பலகையை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். நான் சாப்பிட்டேன். உடைகளை மாற்றிக்கொண்டேன். பாத்ரூமில் இலவச ஷாம்பு இருந்தது. பணத்துக்குப் பதிலாக மது வைக்கப்பட்டிருந்த நிலவறையின் சாவியுமிருந்தது.

எனக்காக அவர்கள் எல்லாவற்றையும் தயாராக வைத்திருந்தார்கள். மாதக்கணக்கில் அந்த மனிதனை அவர்கள் பின் தொடர்ந்திருந்தார்கள். எந்த நேரத்தில் அந்த மனிதன் எங்கே போகிறான் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அந்த மனிதன் மிகவும் முக்கியமானவனாக இருந்தபோதிலும், அரசாங்க மெய்க்காவலர்களில்லாமல், தன் மனைவியுடன் தனியாக வெளியில் போவான். எதற்காகவென்றால் ஒரு சாதாரண மனிதன் போல நடிக்க அல்லது ஒரு சாதாரண மனிதனாக இருக்க விரும்பியும் இருக்கலாம். அது அவனால் இயலாத காரியமென்பது அவனுக்குப் புரியவில்லையயன்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் எனக்குப் பணம் கொடுத்து அந்தக் காரியத்தைச் செய்யச் சொல்ல அவர்களால் முடிந்தது.

நான் அடையாளமற்றவன். எந்த தேசமும் அதன் ஜனத்தொகைக் கணக்கில் என்னை சேர்த்துக் கொள்வதில்லை. எனக்குத் தரப்பட்ட பெயர் எதிலும் எங்கும் இல்லை. என்ன செய்யப்பட்டதோ அதை வேறு எவரும் செய்யவில்லை.

ஒவ்வொரு வாரமும் உணவருந்தச் செல்லும் அதே ஓட்டலுக்குத்தான் அன்றும் மனைவியுடன் கைகோர்த்துக்கொண்டுச் சென்றான் அந்த மனிதன். உணவருந்திவிட்டு அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று எனக்குச் சொல்லப் பட்டிருந்ததற்கு மாறாக அவர்கள் ஒரு திரையரங்கிற்குச் சென்றார்கள். நான் காத்திருந்தேன். மதுக்கடையில் ஒரு பியரைக் குடித்துவிட்டுத் திரும்ப வந்தேன். சினிமா முடிந்து வெளியே வந்தவர்கள் அவனை அடையாமல் தெரிந்தது போல் நடந்து கொள்ளவில்லை. இந்த தேசத்தில் தலைவர்களை சாமான்யர்களாகப் பாவிப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். ஒரு சாமான்யனைப் போலவே அந்த மனிதன் தன் மனைவியுடன் சுரங்க ரயில்களுக்குப் போகும் பாதை வழியாகச் சென்றான். மனைவியை சற்றே முன்னால் நடக்க விட்டு, அந்த மனிதன் பின்னால் நடந்து சென்றபோது நான் அதை செய்தேன். என்னுடைய குறி தவறாமையைப் பரிசோதித்து அவர்கள் எதற்காகப் பணம் தந்தார்களோ அதைச் செய்தேன். குறி சற்றும் தவறாமல் சரியாக கபாலத்தின் பின்புறம் அவன் கீழே சாய்ந்ததும், உறுதியாக்கிக்கொள்ள அவர்கள் எதற்காகப் பணம் கொடுத்தார்களோ அதை மீண்டுமொருமுறை செய்தேன்.

யார் அந்தச் செயலைச் செய்தார்களென்று சுற்றுமுற்றும் பார்க்குமுன், அவள் மண்டியிட்டு உட்காரும் தவறைச் செய்தாள். தோல் சட்டையும் கருமையான உடைகளுமணிந்து குறுக்குத்தெருவை அடையும் படிகள் வழியே பறந்துக் கொண்டிருந்த ஒரு மனிதனின் பின் பக்கத்தை மட்டுமே பார்த்ததாக மட்டும் அவளால் போலீஸ் விசாரணைக்கும் பத்திரிகைகளுக்கும் பதில் சொல்ல முடிந்தது. இந்த நகரம் செங்குத்தான உயரங்களையும் இருண்ட சரிவுகளையும் கொண்டது. அவள் என் முகத்தைப் பார்க்கவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு (பேப்பர்களில் படிக்கிறேன்) அந்தச் செயலைச் செய்தவனின் முகத்தைப் பார்க்கவில்லையயன்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். சில விநாடிகள் முன்னதாக/வேகமாக அவள் சுற்றுமுற்றும் பார்த்திருந்தால், அவர்கள் என்னைக் கண்டு பிடித்திருப்பார்கள்.

அடையாளம் தெரியாத ஒருவன் நானாகியிருப்பேன். கருத்த தொப்பியில் என் பின்னந்தலையை அவள் எப்போதும் யோசிக்கிறாள். (உண்மையில் அது கருப்பு தொப்பியல்ல, விலையுர்ந்த, கட்டங்கள் நிறைந்த பழுப்பு, பச்சை நிறத் தொப்பி அது.) எனக்குத் தரப்பட்ட பணத்தில் நான் அதை வாங்கினேன். பிறகு அதற்குள் ஒரு கல்லை வைத்து கால்வாயில் தூக்கியயறிந்து விட்டேன்? தொப்பிக்கும் என் தோல்சட்டைக் காலருக்கும் இடையில் என் கழுத்தை அவள் பார்த்திருக்கக்கூடும். (தோல்சட்டையை என்னால் கால்வாயில் தூக்கியயறிய முடியவில்லை. அதற்கு வேறு நிறத்தை மாற்றிவிட்டேன்.) படிகளுக்கு மேலிருந்த விளக்கு வெளிச்சத்தில் பளபளத்த என் தோல்சட்டையை அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் அலறியபோது படுவேகமாக நான் ஓடிமறைந்தேன்.

போலீல் ஒரு போதை மருந்து கடத்துபவனைக் கைது செய்தது. அவள் நினைவில் எந்த முகமுமில்லை. அதனால் அவன்தான் கொலைகாரனா இல்லையா என்பதை அவளால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர்களையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளவர்களையும் போலீஸ் எதிரே நிறுத்திய போதும் அதே கதைதான். முகம் தெரியவில்லை. அதனால், நான் பயப்படத் தேவையில்லை. எந்நேரமும் நான் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆவணங்கள் இல்லையயன்பதால், நான் விசாரிக்கப்படலாம் என்பதால் பசியுடன் இருக்க நேருமென்பதால் நான் பயந்து கொண்டேயிருந்தேன். ஆனால் இப்பொழுது நான் எதற்கும் பயப்படத் தேவையில்லை. நான் இப்பொழுதும் எதற்கும் பயப்படத் தேவையில்லை. நான் பேசுவதில்லை.

என்ன எழுதப்படுகிறது என்பதையறிய நான் செய்தித்தாள்களைத் தேடுகிறேன். படிக்கிறேன். விசாரணைகள் முடிவதில்லை. போலீஸ், மக்கள் இந்த தேசம் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறது. எல்லாவிதமான சாத்தியக் கூறுகளைப் பற்றி, இப்போது சுரங்க ரயிலில் படிப்பதுபோலவே சில சமயங்களில் படிக்கிறேன். இந்த தேசத்தின் பகையின் காரணமாக ஈரான் நாட்டு சதிதிட்டம். தன் இனவாத அரசாங்கமொன்றுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்ததற்காக தென்னாப்பிரிக்காவின் பழிவாங்கல் நடவடிக்கை என்ற செய்திகளைப் பார்க்கிறேன். யார் செய்தார்களென்று என்னால் சொல்லமுடியும். எதற்காகச் செய்தார்களென்று என்னால் சொல்லமுடியாது. அவர்கள் எனக்குப் பாதிப்பணம் தந்தபோது ஒரு கணப்போதில் தந்தபோது அவர்கள் எனக்குச் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. எதற்காக நான் கேட்கவேண்டும்? எந்த அரசாங்கம் என்னை வேலைக்கு எடுத்துக்கொள்ளும்? அவர்கள் மட்டுமே எனக்கு வேலையும் பணமும் தந்தார்கள்.

அவர்கள் உத்தரவாதம் தந்ததில் பாதிதான் எனக்குக் கிடைத்தது. அடுத்த மாதம் ஐந்து வருடங்கள் முடியுந் தறுவாயில் என்னிடம் பெரிய தொகை எதுவும் மீதமில்லை. என் அறைக்கான வாடகையைத் தர எனக்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறதென சந்தேகப் படாமலிருக்க அவ்வப்போது ஏதேதோ சிறுவேலைகளைச் செய்கிறேன். குதிரைப் பந்தய மைதானத்தில் ஓரிருமுறை, நைட் கிளப்புகளிலும் வேலை செய்தேன். தொழிலாளர் துறை அரசு அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத வேலைகளைச் செய்தேன். அவர்கள் வாக்குறுதி யளித்தபடியே எல்லாப் பணமும் எனக்குக் கிடைத்திருந்தால் என்ன செய்வதாய் நான் நினைத்திருந்தேன்? எங்கேனும் தப்பித்துச் செல்லவா? அவர்களைப் போலவே நானும் வேறு தேசத்துக்குத் தப்பித்துச் செல்ல நினைக்கும்போது, அவர்கள் தந்த ஆவணங்களையும், பொய்யான பெயரையும் என் முகத்தையும் எடுத்துச் செல்லும் பொழுது நான் பேசுவதில்லை.

நான் யாருடனும் பேசுவதில்லை. ஒரு பெண்ணிடம் கூட. நான் வேலை செய்த இடங்களில் கூட போதை மருந்தை கடத்த, திருடப்பட்ட பொருட்களைக் கடத்த எனக்கு வாய்ப்புகள் வந்தன. மக்கள் எப்படியோ நான் இந்த வேலைகளைச் செய்துவந்தவன் என்பதை மோப்பம் பிடித்து விடுகிறார்கள். ஆனால், நான் அதை இந்த நகரத்தில் செய்யத் தயாராயில்லை. இந்த நகரம் என் முகத்தைப் பார்த்ததில்லை. சுரங்க ரயிலடியருகே படிக்கட்டுகளைத் தாண்டிக் குதித்து ஓடியவனின் முதுகுப் பக்கத்தைத்தான் பார்த்திருக்கிறது.

நீ எந்த இடத்தில் அந்தச் செயலைச் செய்தாயோ, அந்த இடத்துக்குத் திரும்ப வருவாய் என்று சொல்வார்கள். எனக்குத் தெரியும். நான் அந்த இடத்தினருகே செல்வதில்லை. அந்த சுரங்க ரயில்வே ஸ்டேஷனை கடந்து நான் செல்வதில்லை. அந்தப் படிக்கட்டுகளுக்கும் நான் செல்வதில்லை. அவள் அலறியபோது நான் மறைந்து போனேன். நான் நிரந்தரமாய் மறைந்துபோனேன்.

அந்த மனிதனை இடுகாட்டில் புதைக்கப் போவதில்லையயன்று நான் படித்தபோது என்னால் நம்ப முடியவில்லை. சுரங்க ரயில்வே ஸ்டே­னின் அருகிலிருந்த தேவாலயத்தின் வாசலிலிருந்த தோட்டத்தில் அந்த மனிதன் புதைக்கப்பட்டான். சில வயதான மரங்கள் மழை நீரை சரளைக் கற்கள் மீது சொட்டிக் கொண்டிருக்கும் மிகச் சாதாரணமான இடம் அது. பெயர் பொறிக்கப்பட்ட ஒரு கல்லும், தாழ்வான இரும்புக் கிராதியும் மட்டுமே இருந்தன. மதிய உணவு நேரத்தில், ஷாப்பிங்கின்போது, சப்வேயிலிருந்து திரையரங்கிலிருந்து மக்கள் அந்த மனிதன் இருந்த இடத்துக்கு வந்தார்கள். மலரஞ்சலி செலுத்தினார்கள்.

நான் அங்கு சென்றிருந்தேன். பார்த்தேன். நான் அந்த இடத்தைத் தவிர்ப்பதில்லை. எனக்கு அது எல்லா இடங்களைப் போல ஒரு இடம். மற்றவர்களைத் தொடர்ந்து நெரிசலில் நான் செல்லும் ஒவ்வொரு முறையும் வாலிபர்களும் யுவதிகளும் அழுவதைப் பார்க்கிறேன். சில சமயங்களில் மலர்களையும், நிறையத் தாள்களில் எழுதிய கவிதைகளையும் அங்கே வைக்கிறார்கள். (அவர்களின் மொழியை என்னால் நன்றாகப் படிக்க முடியவில்லை)

விசாரிப்புகள் நிகழ்கின்றன. முதுகுக்குரியவனின் முகம் தெரியவரும் வரையில் விசாரிப்புகள் முடிவுறாது. ஆனால் அது நடக்கவே நடக்காது. இப்பொழுது மற்றவர்கள் செய்வதை நானும் செய்கிறேன். முற்றிலும் பத்திரமாக இருக்க அதுதான் வழி. இன்று ஈரமான முட்களும் கசங்கிய இலைகளும் நிறைந்த சிவப்பு ரோஜாக் கொத்தை வாங்கி, இரும்புக் கம்பிகளுக்குப் பின்னாலிருந்து அந்த மனிதனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்லின் முன் சமர்ப்பித்தேன். என்னுடைய பெயர் அந்த மனிதனுடன் புதைக்கப்பட்டு விட்டது.

தமிழாக்கம்: லாவண்யா

 

Pin It