பலூன்

பலூன் பதினான்காம் தெருவில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து தொடங்கி வடதிசையை நோக்கி விரிந்தது. ஒரே இரவில் மக்கள் அயர்ந்து உறங்கிய பொழுது அது நகர பூங்காவரை கூரை வேய்ந்து விட்டது. பொழுது புலர்கையில் நான் அதை அங்கே நிறுத்தினேன். பலூனின் வடதிசை நோக்கிய விளிம்பு ப்ளாசாவின் மேல் பொருத்தப்பட்டிருந்தது. காற்றில் மிக சொகுசாகவும் லேசாகவும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தது பலூன்.

மரங்களின் குறுக்கீட்டால் பலூன் நிறுத்தப்பட்டபோது சிறிது எரிச்சலுற்றேன். நகரத்தின் பகுதிகளின் மேல் அது விரிந்திருக்கையில் காற்று வெளியினூடே அதை உயர்த்தி நிறுத்துமாறு பொறியியல் வல்லுநர்களுக்கு கட்டளையிட்டேன். காலைப்பொழுது முழுவதும் கட்புலனாகாத மிருதுவான வாயு வால்வுகளிலிருந்து வெளியேறி பலூனை மேலுயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தது. நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியின் நாற்பத்தைந்து கட்டங்களின் மேலேயும் கிழக்கு மேற்கில் அப்படியும் இப்படியுமாக நகரின் குறுக்கே அதிகபட்சமாக ஆறு கட்டங்களின் மேலே படர்ந்திருந்தது. இதுதான் அப்போதைய சூழ்நிலை.

குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கூட்டுத்தொகுப்பாக உருவாகும் சந்தர்ப்பங்களின் விளைவுகளுக்கோ அவை வெளியேற்றும் மன அழுத்தத்தைப் பற்றி பேசுவதோ இங்கு அர்த்தமற்றது. அங்கு அசாதாரண சூழ்நிலை ஏதும் இல்லை. பலூன் மட்டுமே வெறுமனே ஆடிக் கொண்டிந்தது. மந்தமான சாம்பலும் பழுப்பு நிறமும் பெரும்பான்மையாகக் கொண்டு மஞ்சள் நிறமும் சேர்ந்து பலூன் பல வர்ணக்கலவைகளின் களமாகத் தெரிந்தது. வேண்டுமென்றே முழுமையற்றதாக விடப்பட்ட தோற்றத்துடன் சாமர்த்தியமாக நிறுவப்பட்டதுடன் பலூனின் மேற்பகுதி கரடுமுரடாகவும் பொலிவற்றதாகவும் காணப்பட்டது. பலூனின் உட்புறத்தில் பல புள்ளிகளில் பாரங்கள் பொருத்தப்பட்டு நேர்த்தியாகக் காட்சியளித்தது.

எதிர்வினைகள் எழுந்தன. சில மனிதர்களுக்கு பலூன் ஆர்வமூட்டுவதாக இருந்தது. பலூனுடைய பிரம்மாண்டத்திற்கும் நகரத்தின் மேல் அதன் திடீர் தோற்றத்திற்கும் வெறும் ஆர்வம்  மட்டுமே போதுமான எதிர்வினையாகக் கொள்ள முடியாது. ஆனாலும் வேறொரு நோக்கில் காண்பவரிடம் கட்டுப்படுத்த  முடியாத மன ஆவேசத்தைத் (இஸ்டீரியா) தூண்டாமலும் சமூகச் சூழல் உருவாக்கும் மனஅழுத்தம் போன்ற மனரீதியான வன்முறைகளை ஏற்படுத்தாமலும்; பலூனின் வரவு அமைதியாகவும் முதிர்ந்த மனநெகிழ்வைத் தருவதாக அமைந்த நிகழ்வாகவே இருந்தது.

பலூனின் “அர்த்தம்” பற்றிய விவாதம் ஆரம்பத்தில் உருவானது. பிறகு அது தானாகவே மறைந்து போயிற்று. ஏனெனில் இக்காலத்தில் நாம் அர்த்தங்களைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கக் கற்றுக் கொண்டுவிட்டோம். அர்த்தங்களைத் தேடுவது மிக அபூர்வமாகவே காணப்படுகிறது. மிக எளிமையான அபாயங்களற்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே அர்த்தம் காண விழைகிறோம். பலூனின் அர்த்தம் முழுமையாக அறியப்பட முடியாததால் அதனைப் பற்றிய விவாதமும் அர்த்தமற்றதே என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

பலூனின் அர்த்தம் ஃ நோக்கம் பற்றிய தேடல்; மனிதர்களின் விசித்திர செய்கைகளுக்கான மேற்கொள்ளபடும் ஆய்வை விட அர்த்தமற்ற தேடலாகும். ஒரு சிலர் சுவர்களின் மேல் விவாதிக்க முடியாத விபரீதமான செயல்களுக்கு தாங்கள் தயாராக இருப்பதை விளம்பரப்படுத்துவதை விட அல்லது தங்களை கூட்டாளிகளாக ஏற்றுக்கொள்ளும்படியான வாசகங்களைக் கிறுக்குவதை விட அபத்தமானது பலூனின் அர்த்தம் மீதான தேடல்.

தையரிசாலிகளான சில குழந்தைகள் பலூன் தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிகளின் விளிம்புகளை சரிசமமாகக் தொட்டுக்கொண்டிருப்பதால் அதன்மீது  எகிறிக்குதித்து விளையாடினர். பலூனுக்கும் கட்டங்களின் உச்சிக்குமான இடைவெளியற்று இரண்டும் உரசிக்கொண்டன. பலூனின் மேற்பரப்பு ஒரு நிலக்காட்சி போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. பள்ளத்தாக்குகள் மற்றும் சிறு குன்றுகள் போன்ற வடிவங்கள் பலூனின் மேல் எழும்பியிருந்தன. சரிவுகளின் உயரே ஏறி இறங்குவதும் ஒன்றின் மீதிலிருந்து இன்னொன்றிற்குத் தாவுவதுமான விளையாட்டுகள் விளையாட ஏதுவாயிருந்தது.

மெத்மெத்தென்றிருந்த பலூனின் புசுபுசுத் தன்மை குட்டிக்கரணம் போடுவதற்கும் குப்புற அடித்து விழுவதற்கும் - அதுவே உங்களது விருப்பமானால் - வாகாயிருந்தது. இப்படி பலவிதமான கேளிக்கைகள் பலூனின் மேற்பரப்பை அனுப்பித்தவர்களுக்கு வாய்த்திருந்தன. குறிப்பாக நகரத்தின் தட்டையான கரடுமுரடான நிலத்தன்மைக்கும் பழகிப்போன குழந்தைகளுக்குப் பலூன் கிளர்;ச்சியை வாரி வழங்கியது. ஆனால் இந்த பலூன் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. மேலும் பலூன் ஏற்படுத்திக் கொடுக்கும் கேளிக்கைகளைப் பயன்படுத்திய மனிதர்களின் - குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் - எண்ணிக்கை நாம் நினைப்பது போல அதிகமாக இல்லை, பலூனின் மீது ஒருவித பயமும் நம்பிக்கையின்மையும்  தென்பட்டது. மக்களிடம் பலூனின் மீது விளக்க இயலாத பகைமையுணர்ச்சி கூட காணப்பட்டது. மேலும் நாங்கள் பலுனிற்குள் êலியம் வாயுவைப் பாய்ச்சும் குழாய்களை மறைத்துப் பொருத்தியிருந்தோம். பலூனின் பரப்பளவு மிகப்பெரியதாக இருந்ததால் நகர அதிகாரிகளுக்கு êலியம் குழாய்களைக் கண்டுப்பிடிப்பதில் எரிச்சல் ஏற்பட்டது.

பலூனின் நோக்கமின்மை, அர்த்தமின்மை நிதர்சமனாகத் தெரிய வந்ததால் (அது அங்கே இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் ஸ்தூலமான உண்மையைப் போல) அதிகாரிகளுக்கு எரிச்சல் இன்னும் கூடியது. ஒருவேளை நாங்கள் பலூனின் மேல் பெரிய எழுத்துக்களில் “பரிசோதனைச் சாலைகளால் சான்றிதழ் வழங்கப் பெற்றது” என்றோ “18% மேலும் ஆற்றல் கூடியது” என்றோ எழுதியிருந்தால் இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிருக்காது, ஆனால் அவ்வாறு செய்வதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது.

எல்லாவற்றிற்கும் மேலாக அதிகாரிகள் எக்கச்சக்கமாக, பொறுமையைக் கடைப்பிடித்தனர். பலூனின் மிகப் பிரமாண்டமான முறையற்ற வடிவத்தை அவர்கள் அறிந்திருந்ததாலும் இரவில் இரகசியமாகச் சோதனை செய்து அதை நிறுவியிருந்ததாலும் அவர்களால் பலூனை அகற்றவோ அல்லது அழிக்கவோ இயலவில்லை. இரண்டாவதாக பொதுமக்களுக்கு பலூனின் மீது பெரிய ஈர்ப்பும் இசைவும் ஏற்பட்டது இன்னொரு காரணம்.

ஒருவரது வாழ்நாள் முழுவதுமாக பலூன்களைப் பற்றி சிந்திப்பதற்கு ஒரேயொரு பலூன் மட்டுமே பற்றுக்கோடாக இருப்பது போல பலூனைப் பற்றித் தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் கொண்டிருந்த ஒவ்வொரு அவதானிப்புக்குள்ளும் பல எண்ணங்கள் ஒளிந்து கிடக்கின்றன. ஒருவருக்கு பலூனைப் பற்றிய அவதானிப்பு “அழுக்கு” பற்றிய சிந்தனையாக வடிவெடுத்தது, பின்வரும் வாக்கியத்தில் வருவதுபோல: “இந்த பெரிய பலூன் தெளிவாகவும் அழகாகவும் விளங்கும் பளிச்சென்ற மன்ஹாட்டன் வானத்தை அழுக்குப்படுத்தி விட்டது.” அதாவது இம்மனிதனின் எண்ணப்படி பலூன் வெறும் செப்பிடு வித்தை. முன்பு இங்கு அழகாகக் காணப்பட்ட வானத்தைக் கறைபடுத்துகிறது. பலூன் மேலும் இது மனிதர்களுக்கும் “அவர்களது வானத்திற்கும்” இடையில் ஊடுருவிய ஓர் இடர்ப்பாடு.

உண்மையில் இது ஜனவரி மாதம் - வானம் இருண்டு போய் அழகற்றதாய்க் காட்சியளிக்கிறது. நீங்கள் சுகமாய்ச் சாய்ந்து கொண்டு கண்டு களிக்கச்கூடிய வானம் அல்ல இது. ஒரு வேளை யாரேனும் உங்களைத் துன்புறுத்தி “வானத்தைப் பார்” என்று சொன்னாலன்றி நீங்கள் அதை நோக்கத் தலைப்பட மாட்டார்கள்.  மேலும் பலூனின் அடிப்பகுதியோ காண்பதற்கு களிப்பூட்டும் காட்சி. மென்சாம்பல் நிறமும் பழுப்பு நிறமும் பெரும் பகுதியில் வியாபித்து வால்நட் மற்றும் வெளிறிய மஞ்சள் வர்ணக் கலவையுடன் கூடி காண்பவரைக் கவர்ந்தது. ஆகவே பலூன் வானத்தை “அழுக்குப்” படுத்துவதாகச் சொன்ன மனிதனின் எண்ண ஓட்டத்தில் பலூனின் மீது இன்பகரமான ஈர்ப்பு கலந்து அவன் கண்ட நிஜ காட்சியுடன் முட்டி மோதிக் கொண்டிருந்தது.

இன்னொரு மனிதன் பலூனை எதிர்பாராத வரங்களை வாரி வழங்கும் ஒர் அமைப்பின் முக்கிய பிரதிநிதியாக கருதலாம். திடீரென ஒருவரது எஜமானர் அவரிடம் “இதோ, ஹென்றி, இந்த பண முடிச்சு உனக்கு எனது பரிசு, ஏனெனில் நமது வியபாரம் விருத்தி அடைந்து விட்டது. நீ டுலிப்; மலர்களைக் கையாளும் விதத்தை  நான் பாராட்டுகிறேன். அம்முறையே நமது நிறுவனத்தில் உனது துறை சிறப்புடன் செயல்படக் காரணம்” என்று கூறினால் அவரது சந்தோஷம் எப்படி எதிர்பாராததோ அப்படியே இந்தப் பலூன் ஓர் எதிர்பாராத பரிசு. அம் மனிதனுக்கு பலூன் ஓர் அதிசியமான சாகச அனுபவமாக  வாய்த்திருக்கிறது.

“உப்புதல்” மற்றும் “மிதத்தல்” பற்றிய கோட்பாடுகள் இப்போது புதிய கோணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. கனவுகள் மற்றும் பொறுப்புணர்வு பற்றிய கருத்தாக்கங்கள் உருவாயின. சில மனிதர்கள் விசித்தரமான மாயக் கனவுகளில் சஞ்சரிக்க ஆரம்பித்தனர். பலூனிற்குள் தாங்கள் மறைந்து தங்களையே இழந்து விடுவதாக பகல்கனவுகள் கண்டனர். பலூனையே தாங்கள் விழுங்கி விடுவதாக வேறு சிலர் கனவு கண்டனர். இவர்களின் அந்தரங்க ஆசைகளின் தோற்றுவாய் மனதின் அடியாழத்தில் புதைக்கப்பட்டு அறியப்பட முடியாததாய் இருந்தது. எவரும் வெளிப்படையாகத் தங்களின் கனவுகளை விவாதிக்க விரும்பவில்லை. ஆனாலும் அந்த விசித்திரக் கனவுகள் பற்றி அனைவரும் அறிந்திருந்தனர்.

பலூனிற்கு அடியில் நிற்கையில் உங்கள் உணர்வலைகள் எத்தகையதாக இருந்தன என்பது பற்றிய விவாதம் நடந்தது. சிலர் தங்களுக்குப் புகலிடமும் அனுசரணையும் கிடைத்து விட்டதாக உணர்ந்தனர். பலூனின் மீது வெறுப்பு கொண்டவர்கள் ஒருவித இறுக்கத்தையும் அழுத்தத்தையும் உணர்ந்ததாகச் சொன்னார்கள்.

விமர்சனங்களை வௌ;வேறு விதமாக இருந்தன:

“இராட்சஸத்தனமான பொழிவு”

“ஹார்ப் இசைக்கருவி”

‘xxxxxxxx எதிரும் புதிருமான தன்மையுடன் கூடிய இருட்டுப்பகுதிகள்”.

“உள்முகமான மன நெகிழ்வு”

“பெரிய சதுர வடிவ மூலைகள”

“நவீன பலூன் வடிவமைப்பை இதுவரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் சனாதன அறிவுவாதம”

“அசாதாரண சக்தி”

“கதகதப்பான லேசான சொகுசுப் பாதைகள்”

“நீட்சிக்காக ஒருமை சிதைக்கப்பட்டு விட்டதோ?”

“எப்படிப்பட்ட பேராபத்து”

“கடித்து அசைப்போடத்தூண்டுகிறது”.

மக்கள் மிக விசித்திரமான முறையில் பலூனுடன் தொடர்பு கொண்டு நகரத்தில் தத்தம் இடத்தை நிறுவிக் கொண்டனர். “நான் பலூன் கீழ்நோக்கி சரியும் இடத்தில் அமைந்துள்ள 47 ஆவது தெருவையொட்டிய நடைபாதையில் “அலாமே சிலே” உணவகம் அருகே செல்லப் போகிறேன்” என்றோ நாம் ஏன் பலூன் மீது ஏறி நடந்து இதமான காற்று வாங்கி வரக்கூடாது? சிறிது தூரம் ஏறி நடந்து பலூன் நவீன கலைகளின் அருங்காட்சியகம் அருகே வளைகிறதே அதுவரை சென்று திரும்பலாம” என்றோ நகரவாசிகள் பேசிக் கொள்ளத் துவங்கினர்.

பலூனிற்குள்ளே நாம் முக்கியத்துவமற்றது என்று கருதும் பகுதிகளில் திடீரென புதியதாக உட்பகுதிகள் ஊடுருவி ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் லேசான, சொகுசுப் பாதைகளை உருவாக்கின. ஆனால் இவற்றை முக்கியமற்ற ஊடுருவல் நிகழ்வுகள் என்று நினைத்தல் தவறானது.      ஒவ்வொரு ஊடுருவலும் சந்திப்பும் இன்றியமையாததாக இருக்கையில் பலூனிற்கும் கட்டடங்களுக்குமான சந்திப்பு, பலூனிற்கும் மனிதனுக்குமான சந்திப்பு மற்றும் பலூனிற்கும் பலூனிற்குமான சந்திப்பு ஆகியவை ஒன்றையொன்று உடுருவும் தளங்களாகும்.

பலூனின் சிறப்பைச் சிலாகித்துப் பேசப்பட்ட கருத்துக்களின் இறுதி வடிவம் இதுதான்: பலூன் எந்த வரையறைக்கும் அப்பாற்பட்டது அல்லது விவரணைகளால் கட்டுப்படுத்த இயலாதது. சமயங்களில் பலூன் மேல் ஏற்படும் ஒரு புடைப்பு உப்பிக் கொண்டே சென்றோ பலூனின் உட்பகுதிகளில் ஒன்று தானாகவே நீண்டு சென்றோ கிழக்கில் அமைந்திருக்கும் நதிக்கரை வரை பாதை அமைத்து விடும். தலைமைப் பீடத்திலிருந்து வரைபடத்தில் போர்வீரரர்களின் சாரிசரியான நீண்ட அணிவகுப்பைக் கற்பனை செய்து பார்த்தலைப் போன்ற காட்சி அது. பிறகு அப்பகுதி சுயமாகவே பழைய தோற்றம் கொண்டு விடும் அல்லது வேறு பல பரிமாணங்களில் மீண்டும் காட்சி அளிக்கும்.

மறுநாள் காலையில் மறுபடியும் தோற்றங்கள் மாறும் அல்லது பலூனின் வினோதத் தோற்றங்கள் தடயமின்றி மறைந்து விடும், தன்னுடைய வடிவத்தைத் தானே மாற்றிக் கொள்ளும் பலூனின் ஆற்றலால் மக்கள் நிரம்ப மகிழ்வெய்தினர். மேலும் இறுக்கமான சட்டகங்களுக்குள் மட்டுமே வாழும் மனிதர்கள் தாம் விரும்பினாலும் மாற்றங்கள் சுலபமாக வந்தடைவதில்லை. பலூன் தன்னுடைய இருபத்தி இரண்டு நாட்களின் யதேச்சையான இலக்கற்ற இருப்பின் வாயிலாக மனிதர்களுக்குத் தம் சுயத்தினை இடம் மாற்றி வைக்கக் கற்றுக்கொடுத்தது. எங்கள் பாதங்கள் பழகிச் சலித்த செவ்வகச் சாலைகளின் கணிதக் கட்டமைப்பை மீறுவதற்கான அரிய சந்தர்ப்பம் இது.

தற்காலத்தில் மிகச் சிக்கலாகிவிட்ட இயந்திரம்சார் வாழ்வியற் செயற்பாடுகளால் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தை வாழ்வதற்குத் தனிப் பயிற்சி பெறவும் நீண்ட காலத்திற்கு நிலைக்கக்கூடிய உறவுக்களுக்கான தவிப்பும் ஏக்கமும் மனிதர்களிடேயே மிகுந்து விட்டன. இத்தகைய மனஅவசத்தின் காரணமாக தீர்வுகளுக்காகப் போதாமையுடன் மானுடம் போராடும் பொழுது பலூன் ஒரு மூல முன்மாதிரியாகவோ அல்லது வாழ்க்கைக் குறிப்புக்கான நகல் வடிவமாகவோ விளங்குகிறது.

நான் உன்னைப் பலூனிற்கு அடியில் நீ நார்வேயிலிருந்து திரும்பிய சந்தர்ப்பத்தில் சந்தித்தேன். நீ பலூன் என்னுடையதா என்று கேட்டாய். நான் ஆமாம் என்று பதிலளித்தேன். மேலும் இந்தப் பலூன் நமது இருவரின் தொடர்பும் துண்டிக்கப்பட்டு உனது இருப்பின்மையை நான் அனுபவித்துபோது எழுந்த அவஸ்தையாலும் என்னுடைய இச்சைகளால் நான் அலைகழிக்கப் பட்டதாலும் தன்னிச்சையாகப் பீறிட்ட என் வாழ்க்கைக் குறிப்பின் வெளிப்பாடே ஆகும். ஆனால் இப்போது நீ உனது பெர்கென் பயணத்தைத் தள்ளி வைத்துவிட்டு என்னுடன் வசிக்கப் போகிறாய். இந்த பலூனிற்கு இனிமேல் அர்த்தமில்லை.

பலூனை அப்புறபடுத்துவது மிக எளிதாக இருந்தது. நைந்து தளர்ந்த நீண்ட துணியாக இப்போது காட்சி அளித்த பலூனை டிரக்கில் ஏற்றி மேற்கு வர்ஜீனியாவில் ஒர் இடத்தில் முடக்கி வைத்தேன். பிறிதொரு பொழுதில்; நீயும் நானும் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்திருக்கும் மற்றுமொரு சந்தர்ப்பத்திற்காக பலூன் காத்துக் கொண்டிருக்கிறது.

தேவதூதர்களின் கதை

கடவுளின் மரணம் தேவதூதர்களை விசித்திரமான நிலைக்கு ஆட்படுத்தியது. அடிப்படைக் கேள்வி ஒன்று அவர்களைத் திடிரென அச்சுறுத்தியது. வாசகனால்; அந்த நிலையைக் கற்பனை செய்ய இயலும். தேவதூதர்களின் ப்ரக்ஞையை தன் சக்தியால் சுண்டியிழுத்த அந்தக் கேள்வி எழுந்த வேளையில் அவர்கள் எவ்வாறு காணப்பட்டனர்? அந்தக் கேள்வி இதுதான்: “தேவதூதர்கள் என்றால் என்ன?”. கேள்விகளுக்குப் பழக்கமற்று பயத்திற்கும் பழக்கமற்று கடவுளைப் பிரிந்த தனிமையில் பலமிழந்த தேவதூதர்கள் விரக்தி;யில் ஆழ்ந்தார்கள்.

தேவதூதர்கள் என்;றால் யார் என்ற கேள்விக்கு குறிப்பிடந்தகுந்த வரலாறு உண்டு. ஸ்வெதன்பர்க் ஏராளமான தேவதூதர்களிடம் உரையாடி அவர்கள் அவரிடம் கூறியவற்றைக் கவனமாகப் பதிவு செய்திருக்கிறார். தேவதூதர்கள் காண்பதற்கு மனிதர்கள் போலவே இருப்பார்கள் என்கிறார் ஸ்வெதன்பர்க். “தேவதூதர்கள் மனித வடிவம் படைத்தவர்கள் அல்லது மனித உருவங்களே என்பதை ஆயிரம் தடவைகளாவது நான் கண்டிருக்கிறேன்”. மேலும் “என்னுடைய ஏராளமான ஆண்டுகள் அனுபவத்தின் அடிப்படையில், தேவதூதர்கள் மனித வடிவம் படைத்தவர்களே. அவர்களுக்கு முகங்கள், கண்கள், காதுகள், உடல்கள், கைகள், மற்றும் கால்கள் உண்டு”. என்கிறார் அவர். ஆனால் ஒரு மனிதனால் தேவதூதர்களைத் தனது புறக்கண்களால் பார்க்க இயலாது. அவனது ஆத்துமாவின் விழிகளால் மட்டுமே பார்க்க இயலும்.

ஸ்வெதன்பர்க்கிடம் தேவதூதர்களைப் பற்றிய ஆர்வமூட்டும் தகவல்கள் நிரம்ப உண்டு. அதாவது எந்த தேவதூதனும் இன்னொரு தேவதூதன் பின்னால் நின்று அவன் தலையைப் பார்க்க கூடாது. ஏனெனில் இச்செயல் கடவுளிடமிருந்து வரும் நன்மை மற்றும் உண்மையைப் பாதிக்கும். மேலும் தேவதூதர்கள் எப்போதும் கிழக்கு நோக்கியபடியே இருப்பர். அப்போதுதான் கடவுளை அவர்களின் கண்கள் கதிரவனாகக் கண்டு தரிசிக்க இயலும். மேலும் “தேவதூதர்கள் தத்தமது அறிவுத் திறனுக்கேற்ப ஆடையுடுத்தி இருப்பர். சில கூர்அறிவுத்திறன் படைத்த தேவதூதர்களின் ஆடைகள் அக்கினியின் ஜ்வாலைகள் போலத்திகழும். மற்ற தேவதூதர்;களின் ஆடைகள் ஒளி படைத்ததாய் விளங்கும். சாதாரணத்திறன் கொண்ட தேவதூதர்களின் ஆடைகள் வெண்ணிற ஒளியுடனோ அல்லது ஒளியற்று விளங்கும்;;. அறிவுத்திறன் அற்ற தேவதூதர்களின் ஆடைகள் பல வண்ணங்கள் உடையதாய் இருக்கும். ஆனால் சுவர்க்கத்தின் உட்பகுதியில் வசிக்கும் வரம் படைத்த தேவதூதர்களுக்கு ஆடைகளே கிடையாது”.

இவை எல்லாமும் இனி தேவதூதர்களின் குணங்களாக விளங்க போவதில்லை குஸ்தாவ் டேவிட்சன் தனது பயன்படக்கூடிய தேவதூதர்களின் அகராதி எதும் புத்தகத்தில் தேவதூதர்களைப் பற்றி பல விஷயங்களை ஒருங்கிணைத்துள்ளார். பல தேவதூதர்களின் பெயர்களைப் பின்வருமாறு  கூறுகிறார்: எலுபதேல் தேவதூதன், ப்ரையாக்னே தேவதை, காப் தேவதூதன்; ‘திபாஸ் தேவதூதன் (இவன் செயல் நுணுக்கத்திற்கான தேவதை மர்மர் தேவதூதன் (வீழ்ச்சியடைந்த தேவதை), மக்ட்ரோ தேவதை, ஒர் தேவதூதன் ராஷ்தேவதூதன், சண்டால்போன் தேவதூதன் (இவன் ஐநூறு வருடங்கள் பாதயாத்திரை செய்த தொலைவை விட நீளமானவன்), ஸ்மாட் தேவதூதன். டேவிட்சன் பல விதமான தேவதூதர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சுவர்க்கத்தின் சிம்மாசனத்தை பாதுகாக்கும் தேவதைகள், பலத்த குரலில் கூவுதல் மற்றும் கத்துதலுக்கான தேவதைகள். இவர்கள் துதி பாடக் கூடியவர்கள். ஏவல் பணி செய்பவர்கள், மத்தியஸ்தம் செய்பவர்கள், பாதுகாவல் புரிபவர்கள், எச்சரிக்கை செய்யும் தேவதூதர்கள் எனப் பல பிரிவுகள் உள்ளன். டேவிட்சனின் அகராதி மிகப் பெரிது. அவர் சுமார் ஆயிரத்து நூறு பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

தேவதூதர்களாக இருப்பவர்களின் ப்ரக்ஞையை பற்றி மிக அழகாக யோசெப் லேயோன் 1957இல் பிரசுரிக்கப்பட்ட தேவதைகளின் உளவியல் எனப்படும். தனது கட்டுரையில் விவரிக்கிறார். “ஓவ்வொரு தேவதூதனும்,,” லேயோன் கூறுகிறார் “தன்னைப் பற்றியும் பிறதேவதூதர்களைப் பற்றியும் சகல விஷயங்களையும் அறிந்திருந்தான். “எந்த தேவதூதனுக்கும் கேள்வி என்பதே கிடையாது. ஏனெனில் கேள்வி என்பது அறியாதிருந்தல் என்ற சூழலிலிருந்தே பிறக்கிறது. தேவதூதனுக்கு எதைக் கண்டும் ஆச்சரியம் ஏற்படுவதில்லை. எந்த விஷயமும் அவனுக்கு வியப்பை விளைவிக்காது. அவனுக்கு ஆச்சரியம் என்பதே இல்லை. அறியப்படக் கூடிய அனைத்தையும் அவன் அறிந்திருப்பதால் அறிவுலகம் அவனுக்கு மிக யாதார்த்தமானது நெருக்கமானது. அறியப்பட வேண்டியவை அவனுக்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதாகவும் வரிசையாகப் பட்டியலிடப்பட்டதாகவும் அவனது பிடிக்குள் இருக்கும்”.

ஆனால் இனி மேற்கண்டவை தேவதூதர்களுக்கு உதவாது. தேவதூதர்களைப் பற்றி எழுத ஆர்வங்கொள்ளும் ஒருவர் இறுதியில் மனிதர்களைப் பற்றித்தான் எழுத நேரிடுகிறது. இரண்டும் ஒன்றைப் போல் ஒன்று தோற்றம் கொள்கின்றன. ஆக வாசகன் இறுதியில் லேயோன் தேவதைகளைப் பற்றி எழுதவில்லை நிஜத்தில் மனப்பிளவு கொண்ட மனிதர்களைப் பற்றியே எழுதுகிறார் என்று உணர்கிறார்ன். தேவதைகளை முன்னுறுத்தி லேயோன் மனிதர்களைப் பற்றித்தான் சிந்திக்கிறார்.

லேயோன் தவிர பிறர் தேவதைகளைப் பற்றி எழுதினாலும் அது மேற்கண்டவாறு தான் தோற்றமளிக்கிறது. தேவதூதர்களுக்குப் பிரபஞ்சத்தோடு இப்பொழுது எப்படித் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது என்ற சிந்தனை எழுந்தது. அவர்கள் க்வெட்சால் பறவைகளைப் போலத் தோற்றம் கொண்டவர்களா? அல்லது மனிதர்களைப் போன்றவர்களா? அல்லது இசையைப் போன்றவர்களா? இவ்வாறு ஒப்பீடுகள் புழங்கத் தொடங்கின.

செயல்களின் அடிப்படையில் தம்மை வரையறைக்குட்படுத்திக் கொள்ள சில முயற்சிகளை தேவதூதர்கள் மேற்கொண்டனர். ஒரு தேவதை எதைச் செய்கிறதோ அச்செயலின் விளக்கமாக அது விளங்கும். ஆகவே புதிது புதிதான பாத்திரங்கள் உருவாக்கி புதிய சாத்தியப்பாடுகளை உருவாக்க அவர்கள் முயன்றனர். முன்னொருகாலத்தில் இறைதுதிக்கும் வாழ்த்துகளுக்குமே பழகிப்போன தேவதூதர்கள் இனி முடிவற்ற காலத்திற்கு துக்கம் அனுஷ்டிப்பதை மேற்கொள்ளலாம் என ஒரு தேவதூதன் கருத்து தெரிவித்தான். ஆனால் அமைதியாயிருந்து துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். முன்பு போல இடைவிடாது துதிப்பாடல்களை மட்டுமே பாடத் தெரிந்த தேவதூதர்களின் அகராதியில் அமைதிக்கு இடம் கிடையாது.

சொர்க்கத்தில் உள்ள குழப்பமான சூழலை அனைவருக்கும் அறிவிக்க வேண்டுமென இன்னொரு கருத்து கூறப்பட்டது. குழப்பத்திற்கான ஐந்து காரணங்களைத் தேடினர். முதன்மையானது கடவுளின் மறைவு. மற்ற நான்கு காரணங்களைச் சுலபமாகக் கண்டறிந்து விடலாம். சொர்க்கத்தின் குழப்பங்களை வரையறை செய்வதையும் விளக்குவதையும் தேவதூதர்கள் இடைவிடாது பலயுகங்களாகச் செய்ய வேண்டி வரும். ஆனால் தேவதூதர்களுக்கு அச்செயலில் விருப்பமில்லை. தேவதூதர்களின் மிக முக்கியமானதும் முற்போக்கானதுமான அடுத்த கருத்து என்னவெனில் சுயநிராகரிப்பு. அவர்கள் இருத்தலிலிருந்து தம்மை விடுவித்து கொள்வார்கள். இச்செயலால் அவர்களுக்கு கிடைக்கும் மாண்பு ஆன்மிக தளத்தில் அகங்காரமாகக் கொள்ளப்படும் என்பதால் சுயநிராகரிப்பு என்ற கருத்தை அவர்கள் நிராகரித்தனர். மேலும் பல நுணுக்கமான சிக்கலான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. எதுவும் அனைவரையும் ஈர்க்கவில்லை.

நான் ஒரு புகழ்பெற்ற தேவதூதனை தொலைக்காட்சியில் தரிசித்தேன் அவனுடைய ஆடைகள் ஓளியலைகளாக மின்னின. அவன் தேவதூதர்கள் சில வகைகளில் மனிதர்கள் போன்றவர்கள் தாம் என ஒப்புக்கொண்டான். தேவதூதர்கள் சில காலம் ஓருவரையொருவர் துதிபாடிக் கொண்டிருப்பதாக (இவ்வுலகில் நாம் செய்வது போல) கூறினான். ஆனால் அதுவும் நீடிக்கவில்லை. அவர்கள் தமது இருப்பிற்;காக வேறு ஒரு புதிய கோட்பாட்டைத் தேடிக்கொண்டிருப்பதாக அவன் கூறினான்.

புத்திரர்களுக்கான கையேடு

1.     பித்துப்பிடித்த தந்தைகள்

2.     ஆசான்களான தந்தைகள்

3.     குதிரையின் மீது தந்தைகள்

4.     தாவுகின்ற தந்தைகள்

5.     தந்தைகளை அணுக சிறந்த முறை

6.     வள்

7.     தந்தைகளின் பெயர்கள்

8.     தந்தைகளின் குரல் மாதிரி குரல் அ, ஆ, இ

9.     படமெடுக்கும் தந்தைகள்

10.    ஹராம் அல்லது சவுல்

11.    தந்தைகளின் நிறங்கள்

12.    புத்திரர்களை மடியில் வைத்து விளையாடும் தந்தைகள்

13.    வீழ்ந்து கொண்டிருக்கும் தந்தைகள்

14.    தொலைந்து போன தந்தைகள்

15.    தந்தைகளை மீட்டல்

16.    யாமோஸ்

17.    பொறுப்புணர்வு

18.    தந்தைகளின் மரணம்

19.    தந்தைகளைக் கொல்லுதல் எனப்படும் மோசமான கருத்து

பித்துப்பிடித்த தந்தைகள்

பித்து பிடித்த தந்தைகள் இருமருங்கும் மரங்கள் அடர்ந்த அகலமான தெருக்களில் அப்படியும் இப்படியுமாக கத்திக் கொண்டே அலைவர், அவர்களை விட்டு விலகுங்கள் அல்லது தழுவிக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் உள்மன எண்ணங்களைச் சொல்லுங்கள் - எதுவும் உதவாது, அவர்கள் செவிட்டுக் காதுகளை உடையவர்கள், அவர்களுடைய உடையில் தகரடப்பாக்கள் தைக்கப்பட்டு உமிழ்நீர் நன்கு கொதிக்க வைத்து சிகப்பாக காட்சி அளிக்கும் மீனைப் போலத் தெரிந்தால் அவர்களது மூளையின் இடப்பக்கம் பாதிப்படைந்திருக்கிறது,  ஒரு வேளை அவர்கள் நாயைப்போல குரைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் பிறருடன் வாழ்ந்ததால் பாதிப்படைந்து விட்டார்கள் என அர்த்தம், நீங்கள் அவர்கள் அருகில் சென்று உங்கள் இடக்கையை நாக்கு இடுக்கில் வைத்து அழுத்துங்கள், பிறகு மன்னிப்பு கோருங்கள், அவர்கள் குரைப்பதை நிறுத்தி விட்டால் உங்களுக்கு அடங்கி விட்டார்கள் என்று அர்த்தமில்லை, மிக மோசமான கீழ்த்தரமான விசயங்களைக் கற்பனை செய்கிறார்கள் என்று பொருள்.

சிறிது நேரம் அவர்களை சந்தோசமாக இருக்க விட்டு உங்கள் வலது கரத்தால் அவர்களின் பின்னந்தலையில் பலமான அடி கொடுங்கள், மீண்டும் மன்னிப்பு கோருங்கள், உங்கள் வார்த்தைகள் அவர்களுக்குப் போய்ச் சேராது (ஏனெனில் அவர்களது மூளை குழம்பிக் கிடைக்கிறது) ஆனால் உங்கள் மன்னிப்பை உச்சரிக்கும் போது உங்கள் உடர்ன் பாவனையின் வாயிலாக உலகின் பொது மொழியான துக்கத்தை அவர்கள் அறிந்து கொள்வார்கள், உங்கள் பாக்கெட்டில் மிச்சம் மீதி இருக்கும் மாமிசத்தின் துண்டுகளை அவர்களுக்கு ஊட்டிவிடுங்கள், முதர்ல் மாமிசத்தை அவர்கள் கண்கள் முன் காண்பியுங்கள், மாமிசம் தங்களுக்குத்தான் என அவர்கள் அறிந்த பின் வாய்முன் நீட்டுங்கள், பெரும்பாலும் தங்கள் வாயைத் திறப்பார்கள், இல்லை எனில் குரைக்கும் போது மாமிசத்தை வீசி எறியவும், அந்த துண்டு அவர்களின் மேல் உதட்டை மட்டும் உரசிச் சென்றால் கழுத்தில் மேலும் ஒரு அடி போடுங்கள், அந்த அடி அவர்களை வாயை நன்கு திறந்து விழுங்கச் செய்யும், நான் சொல்வது போல எதுவும் நடக்கப் போவதில்லை, அப்படிப்பட்ட சூழர்ல் பித்து பிடித்த தந்தைகளின் உளறல்களைக் கேட்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

தந்தைகளை அணுக சிறந்த முறை

ஒரு தந்தையை அவர் பின்புறத்திர்ருந்து அணுகுவதே சிறந்த முறை, ஒரு வேளை அவர் தனது ஈட்டியை அல்லது கல்லை உங்களை நோக்கி எறியத் துணிகிறார் எனும்போது தப்பித்துவிடலாம், அவர் தன் உடலை வளைத்து ஈட்டியுடன் கூடிய கரத்தைப் பின்னுக்கிழுத்து நன்கு குறிப்பார்த்து உங்கள் மேல் எறியும் முன்னர் நீங்கள் வேறு நாட்டிற்கே போக அவசாகம் கிடைக்கும்.

தந்தைகளின் குரல்

தந்தைமார்களுக்கு வகைவகையான குரல்கள் உண்டு, ஒவ்வொரு குரலுக்கும் ப்ரத்தியேகமான பயமுறுத்தும் குணம் உண்டு, படச் சுருள் எரிவது போன்ற ஒர்யுடைய குரல். பளிங்கைச் சுரங்கத்தில் வெட்டி எடுக்கும் போது கிறீச்சென ஒ-ப்பது போன்ற குரல். கிளிப்களை இரவில் அசைக்கும் ஓசை. சுண்ணாம்புக் கால்வாயில் கொதிக்கின்ற சுண்ணாம்பின் ஒர் போன்ற குரல் அல்லது வெளவால் பாடும் போது எழும் குரல் போன்ற பலவகையான குரல்களை உடையவர்கள் தந்தைமார்கள், ஒரு தந்தையின் குரல் உங்கள் கண்ணாடிகளைச் சிதறடிக்கும் வன்மை உடையது, சிடுசிடுப்பான குரல் உடைய தந்தைகள் நிரம்ப உண்டு, தந்தைமார்கள் தங்களது பாத்திரத்திற்குரிய அடையாள அட்டையை அணியாத போது அவர்கள் பெரும்பான்மையாக விவசாயிகள். இரும்புத்தொழில் புரிவோர். பந்தய கார் ஒட்டுநர்கள். குத்துச் சண்டைக்காரர்கள் அல்லது விற்பனைப் பிரதிநிதிகளாக இருக்கலாம், பெரும்பான்மையோர் விற்பனைப் பிரதிநிதிகளே, நிறைய தந்தைகளுக்குத் தந்தையாக வேண்டுமென்ற அவா இருந்ததில்லை, எதிர்பாரத விபத்தின் காரணமாக அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக தந்தைகளாக்கப்பட்டிருப்பார்கள், வேறு யாருடைய தந்திரமான திட்டத்தினாலோ யாருடைய கவனக்குறைவிலோ அவர்கள் தந்தைகளாயினர், இப்படிப்பட்ட தந்தைகள் (தாங்கள் அறியாமலே தந்தைகளானவர்கள்) மிகவும்

கவனமான. மென்மையான மற்றும் சிறந்த தந்தைகளாக விளங்குவர், ஒருவர் பன்னிரண்டோ அல்லது இருபத்தி ஏழு முறைகளோ தந்தையாக்கப்பட்டிருந்தால் நகைப்புக்குரிய பார்வைதான் அவர்களுக்குத் தேவை, தம்மைத் தாமே வெறுக்காத தந்தைகள் இவர்கள், நிறைய தந்தைகள் பல வகையில் குற்றமற்றவர்களே, இப்படிப்பட்டவர்கள் மக்கள் தம் தீரா நோய்கள் நீங்கத் தொட்டு வணங்கக் கூடிய புனிதச் சின்னம் போன்றவர்கள், புனிதப் புத்தகம் போலப் படிக்கப்பட்ட வேண்டியவர்கள், தந்தைகளிலேயே தனியாக முரண்படும் குணம் மிக்கவர்களாக இருப்பதால் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு எண்ணிக்கையில் அதிகப்படுத்தப்பட வேண்டியவர்கள் இவர்கள், ஒரு தந்தையின் குரல் மிகப் பயங்கரமான பிடிவாதமுடைய ஆதிக்கக்குரலாக ஒர்க்கிறது.

தொலைந்து போன தந்தையைக் கண்டடைதல்

தொலைந்து போன தந்தையைக் கண்டடைதர்ல் உள்ள முதன்மையான சிக்கல் என்னவெனில் அவர் நிரந்தரமாகத் தொலைந்து போய் விடுவார் என்பது தான், அடிக்கடி அவர் வீட்டிர்ருந்து வெளியேறி காணாமல் போய் விடுவார், ஒரு வேளை அடிக்கடி அவர் வீட்டில் காணப்பட்டாலும் தொலைந்து போய் விட்டவராகவே காணப்படுவார், மேல் மாடியின் அறையினுள்ளே தன்னைப் பூட்டிக் கொண்டோ வேலை செய்யுமிடத்திலோ இயற்கை அழகை இரசிப்பதிலோ அல்லது தனது இரகசிய வாழ்க்கையை கற்பனை செய்து கொண்டிருப்பதிலோ அவர் காணாமற் போய்விடக் கூடும், ஒரு மாலை வேளையில் தனது தங்க கைப்பிடி கொண்ட கைத்தடியுடன் மாறு வேடத்தில் அவர் கிளம்பி விடலாம், உணவு மேஜையின் மேல் தன்னுடைய முகவரியை ஒரு சீட்டில் எழுதி வைத்துவிட்டு போர் துவங்கி விட்டால் தன்னைக் கண்டறிவதற்கான முகவரி அது என்பதாக எழுதி விட்டுச் சென்று விடுவார், போர்க்களம் தந்தைகள் தற்கார்கமாகவோ நிரந்தரமாகவோ தொலைந்து போகும் இடம் என்பது அனைவரும் அறிந்த விசயம்தான், தூர தேசங்களை அல்லது கண்டங்களை நோக்கிய பயணங்களிலோ பல்வேறு வகையான பயணங்களிலோ (உள்ளத்தின் ஆழத்தை நோக்கிய பயணம்) தந்தைகள் அடிக்கடித் தொலைந்து போவார்கள்.

அவ்வாறு காணாமற் போன தந்தைகளைத் தேட முக்கியமான ஐந்து இடங்கள் நேபால். ரூபர்ட்ஸ் லாண்ட். எல்ப்ரஸ் சிகரம். பாரீஸ் மற்றும் அகோராஎனப்படும் பண்டைய கிரேக்கச் சந்தைகள், தந்தைகள் பெரும்பாலும் ஐந்து வகையான காடுகளுக்குள் புகுந்து காணாமற் போய்விடுவர், அவை ஊசி இலைக்காடுகள். பசுமையான நீண்ட இலைகள் நிறைந்திருக்கும் காடுகள். ஆண்டிற்கு ஒருமுறை இலையுதிரக் கூடிய காடுகள். ஊசி இலை மரங்களும் பரந்த இலைகள் கூடிய மரங்களும் இணைந்த காடுகள் மற்றும் ஆர்க்டிக் துருவத்திலுள்ள குட்டைச் செடிகளும் மூர்கைகளும் நிறைந்த உறைந்து போன காடுகளிலும் அவர்கள் மறைந்து போய்விடுவர், தொலைந்து போகையில் அவர்கள் அணிந்திருக்கும் ஐந்து வகையான ஆடைகள் கீழ்வருமாறு : இடைக் கச்சையோடு கூடிய நீண்ட அங்கிகள். புஷ்கோட்டுகள். தோலாலான மேலங்கிகள். சாம்பல் நிறத் தொப்பி மற்றும் சாதாரண அலுவலக உடைகள் அணிந்தோ அவர்கள் காணமாற் போகக்கூடும்.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் செய்தித் தாளில் நீங்கள் ஒரு அறிவிப்பை கொடுக்கலாம், பாரீஸ் நகரில் பிப்ரவரி 24 ஆம் தேதியில் பரந்த இலைகளை விரும்பும் தந்தை காணாமற் போய்விட்டார், 6’ 2” அடி உயரமுடையவர்.  நீலந்த மேலங்கியுடன் ஒருவேளை ஆயுதங்களுடன் பயமூட்டக்கூடிய வராகவோ கிழ ஹிக்கரி என்று அழைத்தால் பதில் சொல்லக் கூடியவராகக் காணப்பட்டால் தொடர்பு கொள்ளவும், பரிசு உண்டு, இந்த பயனற்ற வேலையை முடித்தவுடன் உண்மையிலேயே முக்கியமான ஒன்றைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும், நீங்கள் உண்மையாகவே இந்த தொலைந்து போன தந்தையைக் கண்டு அடைய விரும்புகிறீர்களா? ஒரு வேளை நீங்கள் அவரைக் கண்டு பிடித்தவுடன் உங்களிடம் அவர் தான் தொலைந்து போவதற்கு முன் இருந்த அதே தோரணையுடன் பேசினால் என்ன செய்வீர்கள்? உங்கள் தாயை முன்பு போல ஆணிகளால் உடல் குத்திச் சித்திரவதை செய்தால் என்ன செய்வீர்கள்? ஈட்டி எறிதலை நினைவு கூருங்கள்.

மறுபடியும் உங்களை நோக்கி அவர் சுமார் ஏழுமணி அளவில் கல்லையோ ஈட்டியையோ எறிய மாட்டார் என்பது என்ன நிச்சயம்? நாம் தீர்மானிக்க வேண்டிய விசயம் இது தான், நீங்கள் எப்படி வாழ வேண்டுமென விரும்புகீறீர்கள்? ஆமாம். அவர் நடுக்கத்துடன் தனது ஒயின் கோப்பையின் பிடியைத் திருகுவார், இந்த நூற்றாண்டின் இறுதியில் அவர் இவ்வாறு செய்வதை நீங்கள் விரும்புகிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை, அவர் போர்னியோவுக்குச் சென்று இவ்வாறன பாவனைகளைச் செய்யட்டும், அங்கே அது புதிதாக காணப்படலாம், கண்ணாடியை நோக்கி ஒயின் கோப்பையை அங்கே அவர் வீசத் துணியமாட்டார், பெரிய சத்தத்துடன் விரிகின்ற குடை போன்று எவரேனும் பேசும் போது அங்கே ஏப்பம் விடுதல் மேலும் உங்களைக் காய்ந்த தோல்பட்டையாலோ பெல்ட்டாலோ அடிப்பது ஆகியவை இனி நீடிக்காது, உணவு அறையில் பிரதானமாகப் போடப்பட்டிருக்கும் கார்யான நாற்கார்யை இலட்சியம் செய்யாதீர்கள், நன்றி சொல்லுங்கள்.

தந்தைகளை மீட்டல்

எப்படிப்பட்ட பேராபத்துகளிலிருந்தும் உங்கள் தந்தையை நீங்கள் மீட்ட உடன் ஒரு கணம் “நீங்கள் தான் தந்தை” அவரல்ல உங்கள் தந்தை என்று உணர்வீர்கள், ஒரேயொரு கணம் தான், இந்த ஒரேயொரு கணத்தில் மட்டும் தான் உங்களால் இப்படி உணர முடியும்

யாமோஸ்

சவுத்வார்க்கில் பெரிய பழத்தோட்டங்களுக்குச் சொந்தக்காரரான யாமோஸ் எனும் பெயர் உடைய ஒரு தந்தையை எனக்குத் தெரியும், யாமோஸ் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள மனிதனாக அறியப்பட்டவர், அவருக்கு எப்பேர்ப்பட்ட பணமுடை ஏற்பட்டாலும் தனது பிள்ளைகளை எக்காரணம் கொண்டும் உண்ணமாட்டார், ஆனாலும் ஒருவர் பின் ஒருவராக அவரது குழந்தைகள் திடீரெனக் காணாமல் போயினர்

தந்தைகளின் மரணம்

ஒரு தந்தை மரணமடையும் போது அவருடைய தந்தைமை ஆதி தந்தையானவரிடம் சென்றடைக்கிறது, அனைத்து இறந்த தந்தைகளின் கூட்டுப் தொகுப்பே இவர், தந்தைமை ஆதி-தந்தைக்கே உரியது மற்றும் அது உங்களுக்கு மறுக்கப்பட்டது, ஆகையால் இவ்வாறான ஒன்றிணைதல் நடக்கிறது, தந்தையை இழந்த பின் நீங்கள் அவரை நினைவு கூரக்கூடும், தந்தையின் இருப்பைவிட அவர் நினைவுகள் அதிக சக்தி வாய்ந்தவை, உள்மனதில் உங்களைக் கட்டுப்படுத்துகின்ற மீண்டும் மீண்டும் வாதம் செய்கின்ற ஆமாம் மற்றும் கூடாது என்று இருமைத்தன்மையுடன் கூடிய ஒலிகள் ஆமாம் கூடாது ஆமாம் கூடாது ஆமாம் கூடாது ஆமாம் கூடாது என இடைவிடாது ஒர்க்கும் உங்களது ஒவ்வொரு உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கங்களை உற்று நோக்கும் இருப்பாக தந்தையின் நினைவு விளங்கும், எந்த புள்ளியில் நீங்கள் நீங்களாக மாறுவீர்கள்? நிச்சயமாக இல்லை, உங்களின் இன்னொரு பகுதியில் உங்கள் தந்தையாகவே இருப்பீர்கள்

தந்தையைக் கொல்லுதல்

தந்தையைக் கொல்லுதல் என்பது மிகவும் மோசமான கருத்து, முதர்ல் அது சட்டத்திற்கும் பழக்கத்திற்கும் புறம்பானது, மேலும் இச்செயல் தந்தை உங்கள் மேல் சுமத்தும் குற்றங்கள் யாவும் உண்மையானவை என நிரூபித்து விடுகிறது, நீங்கள் மிகவும் கீழ்த்தரமான நபர், தந்தையக் கொன்றவர், உலகத்தால் இகழப்படும் இப்படிப்பட்ட எண்ணம் உங்களைக் கொதிப்படைய செய்தாலும் இச்செயலை நீங்கள் செய்யகூடாது, அது தேவையற்றது, நீங்கள் தந்தையைக் கொல்வது தேவையற்ற செயல், அவரை காலமே கொன்றுவிடும், அது உறுதியான எதிர்கால நிகழ்வு, உங்களுக்கு வேறு பல வேலைகள் உள்ளன, புத்திரர்களாகிய உங்கள் கடமை என்னவெனில் இக்கையேட்டில் இடம்பெறும் ஒவ்வொரு தீய பாவனையையும் உங்கள் பங்குக்கு திரும்ப மேற்கொள்வதுதான் , நீங்கள் உங்கள் தந்தையாக மாற வேண்டும், தந்தைமையை / தந்தைத்தன்மையை வெல்ல முடியாமல் போனாலும் அதை இத்தலைமுறையால் தகர்த்து கீழிறக்க முடியும், நமது கூட்டுமுயற்சியால் இச்செயல் கைகூடும், கொண்டாடுங்கள்.

தமிழில் : கே.கணேஷ்ராம்

 

Pin It