ஆப்ரகாம் பிரம்பெர்க்
தமிழில்: ஓ. நர்மதா

சென்ற வருட கோடைகாலத்தின் பிற்பகுதியில் ஒரு நாள் வார்ஸாவின் யூத கல்லறைத் தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன். கல்லறைகளில் சில இன்னும் நின்றவாறும், மற்றவை தரையில் கிடந்தும் சீர்கெட்டும், புத்தர்கள் மண்டியும் கிடக்க, அவற்றுக்கிடையே குறுகலான பாதைகள் சுற்றி வளைத்துச் செல்லும் அது இருண்ட இடமாகும். கல்லறைத் தோட்டங்களுக்குள் எனக்கு பேதம் இல்லை. எனினும் இந்த இடத்திற்கு மட்டும் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக மீண்டும், மீண்டும் வந்து சென்றிருக்கிறேன்: போருக்கு முந்தைய போலந்தில் எஞ்சியிருக்கும் எனது குழந்தை பருவத்துடனான சில கடைசி தொடர்புகளில் இது ஒன்று. போருக்கு முன்னால் 1939-ன் வேனிற்பருவ வாக்கில் ஒரே ஒரு முறைதான் யூதர்களின் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றிருக்கிறேன்.

அப்போது எனக்கு பனிரெண்டு வயது. யூதசோசியலிஸ்ட் கூட்டரசுக் குழு தலைவர் ஒருவரின் மாபெரும் இறுதி ஊர்வலத்தின் ஒரு பகுதியாக நானும் என் பெற்றோருடன் சென்றிருந்தேன், துக்கம் கொண்டாடுபவர்களை உள்ளே அனுமதிப்பதற்காக அகலத் திறந்து வைக்கப்பட்டிருந்த கல்லரைத் தோட்டத்தின் வாயிற் கதவை நோக்கி ஊர்வலம் துயரத்துடன் நகர்ந்தது. பெருந்திரளான மக்கள், சோபனின் இறுதி ஊர்வலத்தை இசைக்கும் குழுவினர், காற்றில் படபடக்கும் கறுப்பு, சிகப்பு மற்றும் வெள்ளைக் கொடிகள், கல்லறையில் புதைக்கும் இடத்தருகே நடந்த உரையாடல்கள் அனைத்தும் என்னில் மறக்க முடியாத பதிவை ஏற்படுத்தின. யூத மற்றும் போலந்து நாட்டு (யூதரல்லாதோர்) சோஷலிஸ்டுகள் இருவரும் கூட்டத்தினரிடம் பேருரையாற்றினார்கள்.

 அது கூட்டரசுக் குழு மிகவும் உயர்வாகப் போற்றிய சர்வதேசிய வாதத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது. ஆனால் உள்நாட்டு இளைஞர்கள் (Shoktism) கத்தோலிக்க ஆலயத்தை கடந்து செல்கையில் தொப்பியை கழற்றாமல் செல்லுதல் போன்ற குற்றங்களுக்காக சிடுசிடுத்த முகத்துடன், வசைமொழிகள் கூறி அவமதித்து, உதைப்பதாக மிரட்டுதல் ஆகியவற்றால் கூட்டரசுக் குழுவின் உயர்ந்த நோக்கத்தையே சீரழித்தனர். நான் இளமையிலேயே இலட்சியத்துடன் இருந்தேன். எவ்வளவுதான் கம்யூனிஸ்ட்டுகளும், சோஷலிஸ்ட்களும் ஒருவரை ஒருவர் இகழ்துகொண்டாலும் அவ்விரு கட்சியினரும் புனிதமாகப் போற்றும், “உலகின் உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்”, என்ற கொள்கையை வெறித்தனமாக நம்ப விரும்பினேன். செமிட்டிக் எதிர்ப்பாளர்கள் (யூத இன எதிர்ப்பாளர்கள்) முதலாளித்துவ சமுதாயம் உமிழ்ந்த கழிவுகள்தானே தவிர வேறெதுவுமில்லை என எண்ணுகிறேன். அவர்கள் வெறும் கலகத்தை ஏற்படுத்திவிட்டு முடிவில் காணாமல் போய்விடுவார்கள்.

அணிவகுத்துச் சென்றோரில் ஆயிரக்கணக்கானோர் எரிந்து சாம்பலாகி நீண்ட காலமாகிவிட்டது, கூட்டரசுக் குழுவில் இப்போது எஞ்சியிருப்பது 1943ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கெட்டோ எழுச்சி போரில் மாண்ட பல தலைவர்களின் நினைவுச் சின்னங்கள் மட்டுமே. அவர்களது கல்லறைகளில் பைபிளின் எந்த வாசகங்களும் இல்லை, பதிலாக கற்களில் அவர்களது முகங்கள் செதுக்கப்பட்டு, (மதச்சட்டங்கள் தடை செய்திருக்கும் வழக்கம்) அவர்களது பெயர், பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை யிட்டீஸ் மற்றும் போலந்து மொழிகளில் பொறிக்கப்பட்டிருந்தன. இத்தைகைய நினைவுச் சின்னங்கள்தான் என்னை மீண்டும், மீண்டும் இந்தக் கல்லறைத் தோட்டத்திற்கு ஈர்த்தன. எனவே மீண்டும் ஒரு முறை அந்த கெட்டோ போராளிகளின் இளைமை பொங்கும் முகங்களை ஆவலுடன் உற்றுப் பார்த்தேன். அவர்கள் திரும்ப உயிர் பெற்றுவருவதாகவும், அவர்களது புரட்சிமிக்க அடுக்கு மொழிப் பேச்சு கல்லறை முழுவதும் எதிரொலிப்பது போலவும் கற்பனை செய்து கொண்டேன்.

கடைசியில் நான் கல்லறையை விட்டுத் திரும்பி வாசலை நோக்கி நடந்தேன். அங்கு கல்லறையின் காவலாளி போல்ஸ்லா ஸெனிஸரை சந்தித்தேன். அப்போழுதுதான் அங்கு நடந்த சிறு உரையாடலில் எனக்கு, பல வருடங்களாக நான் அறிந்திருந்த சில விஷயங்கள் புதுமையாக, சுரீலென எனக்குதெளிவாகியன. முப்பதுகளின் நடுவிலிருந்த ஸெனிஸரின் தோற்றம், ஒரு கல்லறைக் காவலாளி எனபதை விட, கோனித்தீவு சலுகை சாவடியில் டிக்கெட் விற்பனை போலிருந்தது. அவனது தொப்பியின் விளிம்பு மூக்கிற்கு மேல் இருந்தது. அவனது ஆடைகள் விவரிக்க இயலாத அளவிற்கு கந்தலாகி சேறு நிறத்திலிருந்தது. அவனது மொழி திணறும் யிட்டீஷ் மொழியிலிருந்து, உறுதியற்ற ஆங்கிலம் மற்றும் ரஷிய, ஜெர்மெனி வார்த்தைகள் கலந்த சரளமான போலந்து மொழிக்கு சுலபமாக தாவியது. அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் சூழ்ந்திருக்க அவனது அலுவலகத்தின் வாசலின் அருகே அவன் நின்றிருப்பதைக் கண்டேன்.

“இதோ!” அவன் அவர்களை நோக்கி பேசிக் கொண்டிருந்தான். “இந்த யாமுல்க்குகளை (யூதர்கள் அணிகின்ற தொப்பி)அணிந்து கொள்ளுங்கள், அவற்றை மறக்காமல் திருப்பிக் கொடுத்து விடுங்கள் சில எப்போதும் காணாமல் போய்விடுவதாக தோன்றுகிறது. நாங்கள் இங்கு அஞ்சல் அட்டைகளைக்கூட விற்கிறோம், ஒவ்வொன்றும் இருபது குரோசிகள்தான்”. பல வருடங்களுக்கு முதன் முதலாக நான் ஸெனிஸரைச் சந்தித்த போது அவன் இறந்து போன முன்னாள் கல்லறைக் காவலாளியான தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகவே இந்த காவலாளி வேலையை எடுத்துக் கொண்டதாகக் கூறினான். அப்போழுது அவன் இன்னும் ஒரு பத்து வருடத்திற்குள் நான் வார்ஸôவின் கடைசி யூதனைப் புதைப்பேன். பின்பு இந்தக் கல்லறையை பூட்டிக் கொண்டு இஸ்ரேலுக்குச் சென்று விடுவேன் என்றான்.

அவனுடைய வார்த்தைகள் புலம்பல் தன்மையாக இருந்தது. ஆனால் அவன் கூறியதன் உண்மையான பொருளைப் பற்றி என்னை சிந்திக்க வைத்தது. வார்ஸாவில் எத்தனை யூதர்கள் இருக்கிறார்கள்? அவனைக் கேட்டேன். “ஓ! நிச்சயம் அறுநூறுக்கு மேல் இருக்காது,” அவன் பதிலிறுத் தான். “அறுநூறா? நிச்சயமாக உனக்கு தெரியுமா?,” நான் ஆச்சரியத்துடன் கேட்டேன். அவன் புன்னகைத்தான். ஏன் இவ்வளவு வியப்பு? நல்லது. ஒரு ஆயிரமாவது இருக்கலாம். போலந்தில் எத்தனை யூதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? நிச்சயம் மூவாயிரத்திற்கு மேல் கிடையாது. ஒரு வேளை மூவாயிரத்து ஐநூறு இருக்கலாம். அவ்வளவுதான்.”

அவன் கூறியது எனக்கு ஒருவித மனக்கலக்கத்தை உண்டு பண்ணியது. “அதாவது இன்னும் சில வருடங்களில் நீ சொன்னதைப் போல.....?”

“அதிகபட்சம் நான்கு வருடங்கள்,” என்றான் ஸெனிஸர் உண்மையாகவே. “மீதமிருக்கும் யூதர்கள் அவர்களின் எண்பதுகளில் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமான சாவுகளைப் பார்த்துவிட்டேன். இதிலிருந்து பாவத்திற்காக வருந்தும் வீதம் முன்பை விட அதிகரித்துள்ளது தெரிகிறது. இது இயல்பான நடைமுறை ஆகையால்...”

அறுநூறு, அல்லது ஒரு ஆயிரம்! ஒரு கச்சேரி அரங்கத்தைக் கூட நிரப்ப முடியாது. போலந்து முழுவதிலும் மூவாயிரத்து ஐநூறு - போருக்கு முந்தைய போலந்தின் மூன்றரை மில்லியன் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தில் பத்தில் ஒரு பங்கு. இந்த! புள்ளி விவரம் என்னை அதிர்ச்சி அடைய வைத்திருக்கக் கூடாது. போலந்து யூத ஆதரவாளர் நாடு என்ற மாயை எதையும் நான் மனதில் கொண்டதில்லை. இருந்தும் என்னவோ ஒரு போதும் முழுமையாக அவர்களுடன் இயைந்துபோக முடியவில்லை.

ஏன்? ஓரு வேளை எண்ணிக்கையின் பின்னால் இருக்கும் பயங்கரத்தை நான் சந்திக்க விரும்பாமல் இருந்திருக்கலாம். ஒரு வேளை தவறான எண்ணத்தின் சிதறல்களை நான் விரும்பியிருந்திருக்கலாம். ஏன்? போலந்தில் இன்னும் சில யூதர்கள் மீதமிருக்கிறார்களே. முறையான யூத வாழ்வின் தேய்வுற்ற எச்சங்கள் இன்னும் இங்கே இருக்கின்றனவே!. போலந்து-யூத சமுதாயம், யிட்டடீஷ் திரையரங்கு ஒன்று, யூத வரலாற்றுக் கழகம், மேலும் சென்ற வருடம் வரையில் வார்ஸாவில் செயல்பட்டு வந்த யூத தேவாலயம் கூட. போலந்தில் யூதர்களின் வாழ்வைப் பற்றிய ஓர் அருங்காட்சியகம் நிறுவப் போவதாக ஒரு பேச்சு இருக்கிறது. போலந்தில் புதுப்பிக்கப்பட்ட யூத கலாச்சார செயல்பாடுகளின் அலையை ஏற்படுத்துவதற்கென ஒரு சிறப்பு தூதுவர் குழு மேல்நாட்டு போலந்து தூதரக அலுவலகங்களுக்கு வெளியுறவு அமைச்சரவையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யூதப் பிரதிநிதிகள், மதப்பற்றுடையவர்கள் மற்றும் மதச்சார்பற்றவர்கள் உலகெங்கிலுமிருந்து சில சிறப்பு நிகழ்ச்சிகளில் (யூத நாகரிக வாரம், வார்சா கெட்டோ எழுச்சியின் ஆண்டு நினைவு விழா போன்ற நிகச்சிகளில்) கலந்து கொள்வதற்காகவும் தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த நெடுந்தொலைவிலுள்ள Shetelஐ காண்பதற்காவும், போலந்திற்கு வருகை தருகிறார்கள்.

இப்பொழுது இப்படி உயிர்த்திருக்கும் உணர்வுகள் எல்லாம் பழங்கால நினைவுகளில் மயங்கும் செயல், வரலாற்று ஞாபகங்களை பற்றிக் கொள்தல், ஒரு பொய்த் தோற்றம் அன்றி வேறெதுவுமில்லை என சட்டென்று திரைவிலகினாற் போல் ஒரு சிறு உரையாடல் மூலம் எனக்குத் தெரியவந்தது. போலந்து யூதக் குடியிருப்பு இறந்த காலத்தை சேர்ந்தது - வேறொன்றுமேயில்லை - கண்ணியமான விருப்பங்கள் இல்லை, போலந்து வெளியுறவு தூதர்களுடன், இஸ்ரேல் பிரதிநிதிகளுக்கோ அல்லது மேலை நாட்டு யூத இனத்தவருக்கோ எவ்வித மத சம்பிரதாய சந்திப்புகளும் இல்லை. யூத பள்ளிக்கூடங்களைக் கட்டவோ அல்லது திரும்பவும் அமைக்கப்படக் கூடிய யூத மாணவர் சங்கம் அமைப்பதற்கான முயற்சிகளோ எதுவும் இல்லை.

நான் மதச்சார்பற்ற யிட்டீஷ் பேசும் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டேன். யிட்டீûஸக் கற்பிக்கும் மொழியாகக் கொண்ட பள்ளிக்கே அனுப்பப் பட்டேன். யிட்டீஸ் மொழிதான் நான் வீதிகளில், வீடுகளில், பள்ளியில், திரையரங்குகளில் கேட்டிருக்கிறேன். மேலும் என் நண்பர்கள் நிறைய பேர் அந்த மொழியைதான் பேசினார்கள். ஐரோப்பிய படைப்பாளிகளான டிக்கன்ஸ், கிப்லிங், செல்மாலாகர்லாஃப், நட் ஹாம்ஸன், ஜாக் லண்டன் போன்றவர்களை யிட்டீஸ் மொழிபெயர்ப்பிலேயே படித்திருக்கிறேன். The Call of the wild, மிகவும் கிலியூட்டும் The Sea wolf ஆகியவை யூத பள்ளிக் குழந்தைகளின் நேசத்திற்குரியவை. இப்பொழுது அமெரிக்காவிலுள்ள என்னுடைய நண்பன் ஒருவன், ஜீல்ஸ் வெர்னின் அனைத்துப் படைப்பு களையும் யிட்டீஷில் தனது புத்தக அலமாரியில் சிறந்த கண்காட்சியாக வைத்திருக்கிறான். நான் அவற்றை ஒவ்வொன்றாகப் படித்திருக்கிறேன் (மைக்கேல் ஸ்ட்ரோகேஃபின் Tsarist Russia - என் உலகில் நிலவையும், போர்னியோ காடுகளை விடவும் அல்லது பசிஃபிக் பெருங்கடலின் ஆழத்தை விடவும் அதிக பங்கு வகித்தது என்பதில் ஆச்சரியமில்லை)

ஹென்றிக் செயின்கெய்விக்ஸ், போல்ஸ்லா ப்ரூவ்ஸ், ஸ்டெஃபான் ஸீரோம்ஸ்கி, ஆகிய போலந்து நாட்டு படைப்பாளிகளும் எனது கருத்தைக் கவர்ந்தவர்கள். நாங்கள் நல்ல யிட்டீஷ் மொழியாளர்களாகவும் அதே சமயம் கடமை தவறாத போலந்துக்காரர்களாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டோம். பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகால நாவல்கள் எங்களது நாட்டுப்பற்றை அழியாமல் காப்பாற்றின. (போலந்து இலக்கியத்தின் மீது எனக்கிருந்த கவர்ச்சி நான் 1941இல் அமெரிக்காவுக்கு வந்த பிறகும் தணியவேயில்லை.)

மேற்கு ப்ரான்க்ஸிலிருந்த எங்கள் வீட்டிலிருந்து சுரங்கப்பாதை வழியாக, மன்ஹாட்டன் ஏ அவென்யூவிற்கு தேர்ந்த பெருமைமிக்க போலந்து நாவல்களைக் கொண்ட நியூயார்க் நூலகத்தின் கிளைக்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் செல்வேன்.

யூதத்தன்மை, போலந்துப் பற்று இரண்டிலும் உறுதியுடன் இருக்கும் நானும் என் நண்பர்களும் ஐரோப்பிய நிலைப்பாட்டில் போலந்தின் வளர்ச்சியினை (நிலக்கரி உற்பத்தியில் 5ஆம் இடம்) அலட்சியமாகக் கருதினோம். நாங்கள் தடேயுஸ் கொஸியுஸ்கோவின் துணிகரச் செயலில் அல்லது மேரி ஸ்கோலோ டோவ்ஸ்கா க்யூரி ஒரு போலந்துகாரர் என்பதில் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் போலந்து மாணவர்களின் நட்பிற்காக நான் ஏங்கிய தில்லை என்பது விசித்திரம். பிற இன இளைஞர்கள் எங்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டும்போது தவிர வேறெதற்காகவும் அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. கெட்ட வார்த்தைகள்ஙு அவற்றை சில சமயம் முழுதாக என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை.

ஒரு முறை என் நண்பர்களுடன் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கையில், ஓர் இளைஞர் கூட்டம் நையாண்டியாக ‘ஸ்டரோஸகோன்னி! ஸ்டரோஸகோன்னி’ என்று கத்தியதைக் கேட்டேன். என் தந்தையிடம் அதற்கு என்ன பொருள் என்று கேட்டேன். ‘பழைய ஏற்பாட்டினை பின்பற்றுபவர்கள்’ என்று விளக்கினார். ஆனால் எனக்கு இன்னும் ஒன்று புரியாததாகவே இருந்தது. நாங்கள் யூதர்கள். உண்மைதான். ஆனால் பழைய ஏற்பாட்டினை பின்பற்றுபவர்கள் அல்ல-அது எதுவாக இருந்தாலும். அவர்கள் குறிப்பிடுவது தெருக்களில் காணப்படும் நீண்ட கருப்பு அங்கி அணிந்த ஹேசிடிக் இளைஞர் களைத்தான்.

1930களின் பிற்பகுதியில் போலந்து செமிட்டிக் எதிர்ப்பு வெறியில் மிதந்தது. யூதர்களின் கடைகள் தாக்கப்பட்டன. அவற்றின் முதலாளிகளும் தாக்கப்பட்டனர். பல்கலைகழங்களில் யூத மாணவர்கள் கெட்மடா பெஞ்சுகளில் இடம்பெற கட்டாயப் படுத்தப்பட்டனர். அவர்கள் சமூக விரோதிகளின் கூரான கத்திகளுக்கு இரையாகினர். அரசாங்கமோ தேசத்தை ஒரு ‘யூத ஆதரவான’ நாடாக்குவதற்காக கொள்கைகளை வடிவமைத்து பரிந்துரைத்தது. ஆகையால் இது போன்ற சூழ்நிலையில் எப்படி எங்களால் யூதப்பற்றையும், போலந்துப் பற்றையும் ஒன்றாக சமாளிக்க முடிந்திருக்கும்? இப்படிப்பட்ட இருமுக உணர்ச்சிப் போக்குடைய காலச்சூழலில் ஈடு செய்ய முடியாத மனச்சேதத்திற்கு ஆளாகாமல் நாங்கள் எப்படி வளர்ந்திருப்போம்?

இதன் விளக்கம் எனது வளர்ப்பு முறையில் இருந்த மூன்றாவது ஆக்கக் கூறான ‘சர்வதேச கூட்டமைப்பு’ என்ற பொதுவுடமைவாதம்தான் என்று நினைக்கின்றேன். சோவியத் பாணி பொதுவுடமை அல்ல. அது தவறான வழிகாட்டல். எனக்கு உண்மையான பொதுவுடமைவாதத்தின் புனிதமான நம்பிக்கைகளான, சமத்தவத்தில் வேரூன்றிய கோட்பாடு, தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. இதுதான் மார்க்ஸின் உண்மையான தொண்டர்கள் ஆதரவு அளிப்பது. மேலும் இதுதான் அவர்கள் நம்பிய எதிர்காலம். எங்களுக்கு நிச்சயம் தெரியும்.

ஃப்ரான்ஸில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து விட்டு வார்ஸôவிற்கு திரும்பிய என் தந்தையை ரயிலிலிருந்து இறங்கும் போதே ‘அப்பா’ என்று வரவேற்று எனக்கு இப்பொழுது இன விழிப்புணர்வு உள்ளது என்று கூறினேன். எனக்கு அப்போது எட்டு வயது. அப்பா மென்மையாக புன்னகைத்து விட்டு வெளி நாட்டிலிருந்து திரும்பி வந்த தனக்காக காத்திருந்த அழகிய ஆச்சரியம் என்று தன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு சந்தோஷப்பட்டார்.

சில வாரங்களுக்கு முன்புதான் நான் SKIF (குழந்தைகளின் சோஷலிஸ கூட்டமைப்பு)-இல் சேர்ந்திருந்தேன். அது கூட்டரசுக் குழுவின் குழந்தைகளுக்கான பிரிவு. அதைப்பற்றி என் தந்தையிடம் கூறினேன். அத்துடன் அதில் ஆரம்பிக்கப்போகும் புது வட்டத்திற்கு என் ஆலோசனையின்படி கார்ல் மார்க்ஸ் எனப் பெயரிடப் போவதையும் கூறினேன். உயர் குணம் படைத்த என் தந்தை, புதுமையான எனது ஆலோசனையைப் பற்றி எந்தக் கருத்தும் கூறாமல் ஒதுங்கிக்கொண்டார்.

ஒரு SKIF உறுப்பினராக நான் வாரம் இரண்டு முறை கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஆனால் அதைப்பற்றி ஒன்றும் ஞாபகம் இல்லை. நான் எழுதிய ‘மே தினம்’ என்ற நையாண்டிப் பாடலை கூட்டரசின் தினசரியான ‘மக்கள் செய்திதாளில்’ குழந்தைகளுக்கான பக்கத்தில் பிரசுரிக்கத் தகுதியானது (எந்த விதத்தில் என்று புரியவில்லை) என ஆசிரியர் நினைத்தார். நான் Morning Star என்ற கூட்டரசு இளைஞர் உடற்பயிற்சி கழகத்தில் சேர்ந்திருந்தேன். ஒவ்வொரு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மதிய வேளையில் என் நண்பர்களுடன் சுறுசுறுப்பான உடற் பயிற்சியிலோ, கால்பந்து விளையாட்டிலோ பங்கு கொள்வேன். ஒரு ஞாயிறு காலை நாங்கள் எட்டு பேர் நீலச்சட்டை மற்றும் சிவப்பு டை சகிதம் (எங்கள் எதிரிகளான Red square க்கும் இதே நிற உடைதான். எனினும் எங்களிடையே ஒரு போதும் குழப்பம் வந்ததில்லை) தோளோடு தோளாக வார்ஸாவின் விளையாட்டு அரங்கை நோக்கி நடந்து சென்றோம். அங்கு நூற்றுக்கணக்கான SKIF- ன் உறுப்பினர்களும், கூட்டரசுக் குழுவின் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களும் தங்களது விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி திறமைகளை உற்சாகமிக்க பார்வையாளர்கள் முன் காண்பித்துக் கொண்டிருந்தனர்.

மற்ற ஐரோப்பிய இளைஞர் அமைப்புகளைப் போலவே, SKIF- ம் மாபெரும் வெளிப்புற வகுப்புகளில் ஈடுபாடு காட்டுவதாக இருந்தது. நான் அதன் கோடைக்கால பாசறை வகுப்புகளில் சேருவதற்காக ஏங்கினேன். ஆனால் எனக்கு வயது போதாது என்று விட்டு விட்டார்கள். ஆயினும் நான் எப்படியோ 1938 அல்லது 1939ன் முற்பகுதியில் மிக மோசமான குளிர்வாரத்தில் நடைபெற்ற குளிர்காலப் பாசறை வகுப்பில் கலந்து கொண்டேன். அதில் கலந்துகொண்ட ஏறத்தாழ முப்பது சிறுவர் சிறுமியர்கள் ஏதோ ஒரு கிராமத்தில் ஓர் எளிமையான நாட்டுப்புற மாளிகையில் தங்கவைக்கப்பட்டோம்.

அதிகாலை ஐந்தரை மணிக்கு காதைக் கிழிக்கும் பகிள் வாத்திய இசையின் சப்தத்தில் எழுவதும், எங்கள் படுக்கைகளை சுருட்டி வைத்துவிட்டு, அவசர அவசரமாக உடையணிந்து கொண்டு அருகிலிருந்த காட்டிற்கு பனியை ஊடுருவி ஓடியதும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. சூரியன் தேய்ந்து மறையும் வேளையில், காற்றுப் பனிப்போர்வையாக மாற, நாங்கள் எங்களது தங்குமிடத்திற்கு திரும்பி வந்து, எங்களது உதடுகள் தீய்ந்து போகுமளவிற்கு சூடான கொக்கோவினை அருந்துவோம்.

பிற்காலத்தில் ப்ரான்க்ஸில் மிகவும் புகழ்பெற்ற உடற்பயிற்சியாளனாக விளங்கப் போகிற இம்மானுவேல் பாட்தான் எங்களது குழுத்தலைவன். எங்களது தினசரி செயல்முறை வகுப்பில் ஜிம்னாஸ்டிக் புரட்சி பாடல்கள், பாட் மற்றும் வார்ஸôவிலிருந்து விசேஷமாக அனுப்பப்பட்ட கூட்டரசுக் குழு பேச்சாளர்களின் சொற்பொழிவு ஆகியவை இடம்பெற்றன. குளிர் காலப் பாசறை வகுப்புகள் பத்து நாட்கள் வரை நீடித்தன. சபிக்கப்பட்ட காலை நேரங்களைத் தவிர மற்றபடி நாங்கள் எழுச்சியூட்டப் பெற்று, இலட்சிய உணர்வுகள் புதுப்பிக்கப்பட்டு வீட்டிற்கு திரும்பினோம்.

ஒரு சமய சகிப்புத்தன்மை கொண்ட யிட்டீஸ் பள்ளியின் மாணவன் என்பதாலும் SKIF ஐச் சேர்ந்தவன் என்பதாலும் அநேகமாக எங்கள் ஆசிரியர்களே எழுதி, யிட்டீஸ் பள்ளி மாணவர்களே நடித்த பிரெஞ்சு புரட்சி பற்றிய நாடகமொன்றில் எனக்கு சிறிய வேடமொன்று அளிக்கப்பட்டது. அந்நாடகம் யூதர்கள் சுயமாக நிறுவிய, பல யிட்டிஷ் நாடகங்களை தயாரித்த ‘நௌவோஸ்கி’ அரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. அதில் எனக்கு நினைவிருப்பது, கிழிந்த கால்சட்டையை அணிந்து கொண்டு, கீழ்நிலை பிரெஞ்சு புரட்சியாளனாக ‘ஓ கெய்ரா, கெய்ரா’ என்று பாடிக்கொண்டே சுற்றி சுற்றி ஓடியது மட்டுமே. பிரெஞ்சு மொழி, பாடல்களின் பல்லவகளில் மட்டும் பயன்படுத்தப்படும். மற்றபடி வசனங்கள் எல்லாம் யிட்டீஸ்

மேதின ஆண்டு விழா நிகழ்ச்சிகளை நாங்கள் மிகப்பெரிய அளவில் எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம். கூட்டரசுக் குழுவுடன் இணைந்து இயங்கும் ஒரே யூத அரசியல் குழுவான ‘யூத இன தொழிலாளர் ஆதரவு இயக்கமும்’ சில நிகழ்ச்சிகளை விளம்பரத்திற்காக இணைந்து நடத்தின. சில போலந்து சமூகக் குழுக்களும் இணைந்து இருந்தன. அந்நேரத்தில் கம்யூனிஸ்டுகள் பெரும் ஊர்வலத்தை நடத்த அதிகாரம் இல்லாமல் இருந்தது. அவர்கள் தங்களது கொடியைப் பிடித்துக்கொண்டு அணிவகுத்துச் செல்ல தடை செய்யப்பட்டிருந்தனர். பலர் தாங்கள் ஆதிக்கம் செலுத்திய வியாபார சங்கங்களின் கொடியை ஏந்திக் கொண்டு அணிவகுத்துச் சென்றனர்.

தன்னார்வமிக்க முகங்களுடன் ஆண்களும், பெண்களும், திரளான சிவப்புக் கொடிகளும், ‘வாழ்க! அனைத்து உழைப்பாளிகளின் நட்பு’. ‘ஒழிக, முதலாளித்துவம்’ என்ற வாசகங்களை வலியுறுத்தும் பேனர்களும் காண்பதற்கு ஊக்கமளிப்பவையாக இருந்தன. இந்த ஊர்வலத்துடன் கூட்டரசுக் குழுவின் பாதுகாப்பு குடிபடைகளான பிரம்பு சுழற்றும் அணியும் இணைந்துக்கொண்டது. யூத ஆதரவாளர் சமூகக் குழுவும், தங்களது பாதுகாப்பு பிரிவுடன் போலந்து சமூகக் குழுவைப்போல இணைந்துக் கொண்டது. ஆங்காங்கே போலிஸ் படைகளும் இருந்தன. ஆனால் எதிலும் தடையில்லை. ஏறத்தாழ எல்லா நிகழ்ச்சிகளும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தேறின.

வழக்கமாக என் அம்மாவுடன்தான் நான் ஊர்வத்திற்குச் செல்வேன். அவளது தாய்ப் பாசம், கட்சி பற்றைவிட அதிகமாக இருக்கும். ஆனால் நானோ எப்போதும் என் தந்தை அணிவகுத்து செல்வதைக் காண ஆர்வமுடன் இருப்பேன். ஒரு முறை, இன்றும் வார்ஸாவில் இருக்கும் போலந்து தேசிய திரையரங்கின் முன் நடந்து கொண்டிருந்த அணி வகுப்பின் போது, என் தாயின் கையை உதறிக் கொண்டு ஓடி குடிபடைகளின் வரிசையை விலக்கிக் கொண்டு நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். ஒரு படைவீரன் என்னைத் தடுத்துப் பார்வையாளர்களின் பக்கம் தள்ளி, ‘இனி இப்படிச் செய்யாதே’! என்று கடுமையாக எச்சரித்தான்.

இந்தச் சமயங்களில் என் தந்தை வார்ஸாவிற்கு அருகிலிருக்கும் மெய்ட்செஸ்ஸின்-மீடிம் சானட்டோரியத்திற்கு கண்காணிப்பு இயக்குநராக இருந்தார். ஒரு SKIF உறுப்பினராக என்னை வளர்க்கவும், எங்கள் குடும்ப வாழ்க்கையிலும் இந்நாட்கள் முக்கிய பங்கு வகித்தன. 1920ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட சானட்டோரியம் இரு செயல்பாடுகளை நிறைவேற்றி வந்தது. ஒரு சுகாதார மையமாக அதில் மருத்துவர்களும், தாதிகளும் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் சுவாச நோயால் அவதியுற்ற நூறு முதல் இருநூறு ஏழை யூதக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அக்குழந்தைகளுக்கு தேவையாய் இருந்ததெல்லாம் நல்ல உணவு, சுத்தமான காற்று, நிறைய ஓய்வு மற்றும் அடிப்படை மருத்துவ கவனிப்பு ஆகியவை. என் தாய் ஒரு மருத்துவ தாதி. பெற்றோர் களை நேர்காணல் செய்வதுதான் அவளது வேலை. ஒவ்வொரு நாளும் சலிப்பூட்டும் உரையாடல்களைக் கேட்டு கேட்டு சோர்வுடன் வீடு திரும்பும் அவள், இரவு உணவின்போது துன்பமும் கசப்பும் நிறைந்த வெறுப்பேற்றும் கதைகளைக் கூறுவாள்.

அதே நேரம் மிக முக்கியமான வகையில் சானட்டோரியம்தான் சோஷலிஸக் கனவின் கருத்து வடிவமாக திகழ்ந்தது. சானட்டோரியம் கூட்டரசுக் குழுவின் பெருமைமிக்க, மெய்யான குழந்தைகள் குடியரசின் படைப்பாகும். இதையே கூட்டரசுக் குழு எதிர்கால சோஷலிஸ மாநிலத்தின் மாதிரியாகவும் கருதியது. அதன் கோழி பண்ணைகளையும், இன்குபேட்டர்களையும் பராமரிப்பதையும், உயிரினங்களின் (தாவரங்கள், மீன், வானிலை ஆராய்ச்சி கருவிகள்) கிடங்குகளை கவனிப்பது, தூய்மையை சோதனையிடுவது, தினசரி செய்திகளை தயாரித்து காலை உணவின்போது படிப்பது போன்ற சில வேலைகளையும் குழந்தைகளே செய்தனர்.

‘சானட்டோரியன்’ என அக்குழந்தைகள் அழைக்கப்பட்டனர். அவர்கள் சமயப்பிரிவுகள் சார்ந்த மன்றங்களில் பங்கேற்றனர். மேலும் குழந்தைகளின் மன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறு சிறு ஒழுங்கு சார்ந்த சட்ட மீறுதல் வழக்குகளிற்கு தீர்ப்பளித்து அவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் அளிக்கப்பட்டிருந்தனர். 1935ஆம் ஆண்டில் போலந்தின் தலை சிறந்த இயக்குநர் அலெக்ஸôண்டர் ஃபோர்டு, மிர்குமேன் ஆன் (இதோ நாங்கள் வருகிறோம்) என்ற திரைப்படத்தை சானட்டோரியத்தை மையமாக வைத்து இயக்கினார். இப்படம், போலந்து அரசுக்கு எதிரானது. கம்யூனிஸ படம் என்று போலந்து அதிகாரக் குழுவினரால் தடை செய்யப்பட்டது. இது அபத்தம். ஆனால் சரியான அரசியல்வாதிகள் எப்போதுமே ஜனநாயக பொதுவுடைமைவாதத்திற்கும், கம்யூனிஸத்திற்கும் இடையே உள்ள மெல்லிய வித்தியாசத்தை தமக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள். அந்த திரைப்படம் ஃப்ரான்ஸில் நடைபெற்ற குறும்பட விழாவில் முதல் பரிசு வென்றதோடல்லாமல் அந்நிய தேசங்களில் மாபெரும் பாராட்டினையும் பெற்றது. நான் அதில் மூச்சை நிறுத்தக்கூடிய இரண்டு காட்சிகளின் தோன்றுவேன்.

கோடை காலங்களில் என் தந்தை ஒரு பண்ணை வீட்டின் அறையை வாடகைக்கு எடுத்து என்னை சானட்டோரியத்தின் மைதானத்தில் விளையாட அனுமதியளிப்பார். மற்ற குழந்தைகள் அவர்களது தினசரி திட்டமிட்ட வாழ்க்கையை பின்பற்றுகையில் எனக்கு மட்டும் அளிக்கப் பட்ட இந்த தனிச் சலுகையில் மகிழ்ச்சி அடைந்த அதே நேரம் குற்ற உணர்வும் எழுந்தது / நான் எந்த விளையாட்டையும், விழாவையும் தவற விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதிலும் குறிப்பாக ஜீலை 14இல் (வழக்கமாக) நடைபெறும் பாஸ்ட்டில்லியை கைப்பற்றி அழித்ததை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு ஞாபகம் வருகிறது.

என் குழந்தைப் பருவம் புதிர் நிறைந்ததாக இருந்தது, அரை நூற்றாண்டு கடந்த பின்பு இப்போது தோன்றுகிறது. போருக்கு முந்தைய ஏழ்மையான ஓரளவிற்கு பின்தங்கிய போலந்தில், ஏராளமானோர், யூதர்கள்தான் ஏசுநாதரைக் கொன்றவர்கள், யூதர்கள் மற்ற இனக் குழந்தைகளின் இரத்தத்தினை ‘Passover’ திருநாளில் மேட்ஸோ ரொட்டி சுடுவதற்கு பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் நம்பிய நாட்டில்தான் - சோஷலிஸத்தின் விடுதலை கொள்கைக்கும், சர்வ தேசியவாதத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் தங்களையே போலந்தின் பெரும்பான்மையினரோடு தம்மையே சமர்ப்பணம் செய்த ஆயிரக்கணக்கான யூத இளைஞர்கள் வாழ்ந்தார்கள்.

நாங்கள் நாட்டின் வரலாற்றுக்கும், கலாச்சாரத்திற்கும் ஆழ்ந்த மரியாதையும், அழியாத அதன் நாட்டுப்புறத்தின் மீது தீவிரப்பற்றும் கொண்டிருந்தோம். யூதர்கள் போலந்தில் வாழ்வதற்கு உரிமை உள்ளது என்ற நம்பிக்கையையும், அவர்களது சொந்த மொழியான யிட்டீஸிலேயே தங்களது ஸ்தாபனங்களை நடத்திக் கொள்ள உரிமையுள்ளது என்னும் நம்பிக்கையையும் இணைப்பதே எங்களது கொள்கையாக இருந்தது. இந்தக் கோட்பாடு ஒரு வினோதக் கலவைதான். எனினும் அது பலன் கொடுத்தது.

என்னுடைய பெற்றோர் இருவருமே அசல் தேசத் தொண்டர்கள். அவர்கள் வழமையான குடும்ப வாழ்க்கையை உடைத்தெறிந்து, மதச்சார்பற்றவர் களாகவும், சோஷலிஸ்டுகளாகவும் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டார்கள். அவர்களது மதிப்பீடுகள் பகுத்தறிவுச் சிந்தனைகளில் ஊன்றியிருந்தது. அவர்களது நம்பிக்கைகளிலிருந்து நான் பெற்ற பாதுகாப்பு உணர்வுதான் அந்நாட்களில் எனைக் குழப்பிய மற்றக் கொள்கைகளின் தூண்டுதல்களை ஒதுக்கித் தள்ள வழிவகுத்தது.

போல்ஸ்லா ஸெனிஸருடன் எனது சிறிய உரையாடல்களுக்குப் பிறகு, என் ஹோட்டலுக்கு செல்வதற்கான பஸ்ஸில் ஏறினேன். ஸெனிஸரின் வார்த்தைகளுக்கு நான் காட்டிய திகைப்பு ஒரு வேளை, அவன் வேண்டு மென்றே தன்னை இயல்பாகவும், எளிமையாகவும் காட்டிக் கொண்டதற்கு நான் கொடுத்த பரிசாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. ஏறக்குறைய பதினைந்து வருடங்களாக நான் போலந்து யூதர்கள், போலந்து யூத உறவுகள் மற்றும் யூத எதிர்ப்பு பற்றி எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிறேன். வார்ஸாவில், ‘ஏறத்தாழ மூவாயிரம் யூதர்கள்’ என்றும் நாட்டில் ஒட்டுமொத்தமாக ‘ஏழு அல்லது எட்டாயிரம்’ என்றும் நான் கணக்கெடுத்திருந்தேன். இங்கு நான் ஒன்று குறிப்பிட வேண்டும். இந்த கணக்கெடுப்பில் ‘அறிவிக்கப்படாத யூதர்கள்’ அதாவது தாங்கள் யூத வழிவந்தவர்கள் என்று மறுக்காதவர்கள் ஆனால் அதில் அதிக கவனம் செலுத்தாதவர்கள் (தங்களை யூத எதிரிகள் என வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்வதற்காக போலந்து செமிட்டிக் எதிர்ப்பை கைவிட்டவர்கள்) சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

வழக்கமாக எனது சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும், ‘யூத ஆதரவாளர்கள்’ என்னும் சொல்லை பயன்படுத்தும் போதுகூட யூதரில்லா செமிட்டிக் எதிர்ப்பு என்று அடிக்கடி குறிப்பிடுவேன். இரண்டு விஷயங்களும் ஒன்றொடொன்று கலக்காமல் நான் தடுத்து விடுவேன். ஆம். போலந்து முழுதும் ஏறக்குறைய யூதர்களற்ற நாடு ஆனால் மிச்சமிருந்த ஏழு அல்லது எட்டாயிரம் பேர் ஒரு அவலமான சிறுபான்மை சமூகத்தை உருவாக்கி யிருந்தாலும் அது நடை முறையில் இருக்கும் சமூகமேயாகும். யிட்டீஷ் திரையரங்கம் ஒன்று வார்ஸாவில் உள்ளது. ஆனால் அதில் நடிக்கும் நடிகர்கள் போலந்துகாரர்கள். யிட்டிஷ் பேசத்தெரியாதவர்கள். பார்வையாளர்களுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒலி நாடாக்களை தந்துவிடுவார்கள். யிட்டீஷ் செய்தி தாள் வாரத்திற்கு மூன்று முறை வரும். அதை போலந்தில் இருப்பவர்களை விடவும் போலந்திற்கு வெளியே இருப்பவர்கள்தான் அதிகம் படிக்கிறார்கள்.

அடுத்து யூத வரலாற்று கழகம். போலந்தின் வேறு இனத்தவர்களே அதில் வேலை செய்கின்றனர். இத்துடன் யூத சமயத் தலைவர் சோவை சமீபத்தில்தான் வார்ஸா யூதர்களுக்கு வழங்கப்பட்டது. இருபது வருடங்களில் முதல் முறையாக வார்ஸா யூதர்கள் சமீபத்தில் யூதப் பள்ளிக்கூடத்தை நிறுவினர். அதில் கூட போலந்து கற்பிக்கும் மொழியாக இருந்தது. (அந்தப் பள்ளி துவங்கி இரண்டு வருடம்தான் ஆகிறது. அதில் தங்கள் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளச் சொல்லி போலந்துப் பெற்றோர்கள் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இது முடிவின் துவக்கமா? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

போலந்து இன்னமும், ஒடுக்கப்பட்ட யூத சமூகத்தினருக்கு புகலிடமாக விளங்குகிறது என்பதெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பு பொருத்த மானதாக இருந்திருக்கும் என்பது என் யூகம். இப்போது ஸெனிஸரின் இரக்கமற்ற வார்த்தைகளைக் கேட்கும்போது அது தெளிவாகிறது. கல்லறைத் தோட்டத்திலிருந்து திரும்பிவந்து எனது ஹோட்டல் அறையில் அமர்ந்து ஆழ்ந்து சிந்திக்கும்போது முதலில் எனக்கு எரிச்சல் வந்தது. நானும் இந்த மண்ணிலேயே பதிந்துகொள்ளாமல் போனதாலும், புனைந்துரைக்கப்படும் இந்த கற்பனைக் கதைகளில் பங்கெடுக்காமல் போனதாலும் எனக்கு கோபம் வந்தது. அப்படியிருந்தால் நான் சரியாக அறிந்து கொண்டிருக்க முடியுமல்லவா? நிச்சயமாக.

நானும் கூட இப்புனைவுருவாக்கப் பயிற்சியில் சிக்கிக் கொண்டும் பங்கேற்றிருக்கவில்லையா? மற்றும் இன்னும் எனக்குச் சரிவரத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையா? தெரிந்திருக்க வேண்டும். 1958-இல் போருக்குப் பிறகு முதல்முறையாக போலந்திற்கு வருகையில், நான் மெய்ட்செஸ்ஸின் சானட்டோரியத்தை காணச் சென்றேன். அந்தக் கட்டிடம் இன்னும் அப்படியே இருந்தது. எனினும் அந்த இடத்தின் வரலாற்றை அறியாத, அதன் தற்போதைய குடியிருப்பாளர்களான கல்வித் துறை அலுலவர்களைக் கண்டு நான் பெரும் ஏமாற்றமடைந்தேன். முப்பத்தியோரு வருடங்கள் கழித்து 1989இல், விக்டர் குல்ரெஸ்கி என்ற முன்னாள் Solidarity தலைவரும், ஆசிரியருமானவர் எடுத்த கணக்கெடுப்பினைப் படித்தேன், அதன்படி 1942இல் Aktion க்கு பிறகு, வார்சாவிலிருந்தும் அதன் அருகிலுள்ள நகரங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான யூதர்கள் வெளியேற்றப்பட்டதனால், வார்ஸா கெட்டோவில் 1940இல் நாலரை இலட்சமாக இருந்த யூத மக்கள் தொகையில் வெறும் 40,000 பேரைத் தவிர மற்றவர்கள் ட்ரெப்லின்காவில் இருக்கும் விஷவாயுக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீடிம் சானட்டோரியத்தின் குழந்தைகளும் பணியாளர்களும் எவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டனர் என்பதை குல்ரெஸ்கி அனல் பறக்கும் வார்த்தை களால் விவரித்துள்ளார். முன்னேறி வந்து கொண்டிருந்த ஜெர்மானிய படைகளிடமிருந்து தப்பிக்க, என் பெற்றோருடன் நானும் இன்னும் சிலரும் சானட்டோரியத்தை விட்டு 1939, செப்டம்பர் ஆறாம் தேதியன்று குதிரை வண்டிகளில், ஆயிரக்கணக்கான போலந்து மக்களைப் போலவே கிழக்கு நோக்கி பயணமானோம். சானட்டோரியத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் இறுதி முடிவைப் பற்றிய செய்தி அமெரிக்காவில் இருந்த எங்களுக்கு 1942ஆம் ஆண்டின் கோடையில் கிடைத்தது. அவர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்கள் உட்பட சுற்றி வளைக்கப்பட்டு ட்ரெப்லின்காவிற்கு அனுப்பப்பட்டனர்.

முப்பது வருடங்களாக சானட்டோரியத்தை ஒழித்துக் கட்டியதைப் பற்றிய குல்ரெஸ்கியின் நெகிழ்வான வர்ணனைகளை படித்ததனால், நான் மெய்ட்ஸெஸினுக்குத் திரும்பவும் செல்வதென முடிவு செய்தேன். நான், புத்த துறவியான மார்க் எடென்மன்னுடன் சென்றேன். அவர் போலந்தில் இருந்த கெட்டோ எழுச்சியின் தலைவர். முன்னாள் சானட்டோரியஸ்ட் அவரும் சானட்டோரியத்தில் மீதம் விடுபட்டுள்ளதை பார்க்க விரும்பினார்.

நாங்கள் இருவரும் மெய்ட்ஸெஸினுக்கு விரைந்தோம். ஆனால் எங்களிருவருக்கும் நன்றாக நினைவிலிருந்த கட்டிடங்களின் சுவடு கூட காணவில்லை. எங்கள் விசாரிப்பிலிருந்து எதையும் அறியமுடியவில்லை. உள்ளூர் வாசிகள் இளைஞர்களோ, வயதானவர்களோ, எதுவும் சொல்ல முடியவில்லை. ஓர் இடத்தில், மார்க், ‘இங்குதான் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இங்குதான் ட்ரெயின் நிற்கும்’ என்று எழுச்சியுடன் கூறினார். ‘பத்து நிமிடங்கள் இங்கிருந்து தோப்பு வழியாக நடந்தால், பிறகு புல்திடல் வரும். அங்கிருந்து நூறு மீட்டர் தொலைவில் சானாட்டோரியம் இருக்கும்’ என்றார் தண்டவாளம் எப்போதோ போய்விட்டிருந்தது, புல் திடல் அழிந்துவிட்டது. அப்புறம் அந்தச் சிறிய தோப்பு சந்தேகமில்லாமல் பெருங்காடாக மாறியிருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து விக்டர் குல்ரெஸ்கியே என்னை காரில் மெய்ட்ஸெஸினுக்கு அழைத்துச் சென்றார். அவர் சில வருடங்களுக்கு முன்புதான் அங்கு இருந்தார். அப்போது அங்கிருந்த கட்டிடங்களின் புகைப் படங்கள் சிலவற்றை எடுத்திருந்தார். ஒரு மணி நேரப் பயணத்திற்கு பிறகு நாங்கள் நிறுத்தினோம். ‘இங்குதான்!’ குல்ரெஸ்கி அறிவித்தார். கவனிக்கவும்ஙு அவர் கூறிய இடம் ஏதுமற்ற வெற்றிடம். அங்கே எதுவுமில்லை. பழைய கட்டிடத்தின் எந்த சுவடும் மிஞ்சியிருக்கவில்லை. குல்ரெஸ்கி அவ்விடத்தை அடையாளம் கண்டு கொண்டது அங்கிருந்த லில்லி பூக்கள் பூத்திருந்த 1930ஆம் வருடத்தை சேர்ந்த சிறிய குளத்தை வைத்ததான். எக்காரணத்திற்காகவோ அதிகாரிகள், அவர்கள் யாராயிருப்பினும், அந்த இடத்தின் வசதி வாய்ப்புகளை அழித்து தரை மட்டமாக்கியிருந்தது தெளிவாகத் தெரிந்தது.

அங்கு ‘ஒன்றுமேயில்லை’ என்று சொல்வது அவ்வளவு சரியானதன்று. அருகில், சிறிய மணல் குன்றின் மீது “இங்கு, இந்த இடத்தில் 1942-45இல் போலந்து குழந்தைகள் இல்லம் உள்நாட்டு இராணுவத்தால் பேணப்பட்டது.” என்று பொறிக்கப்பட்ட நினைவுக்கல் ஒன்று இருந்தது. இது மட்டும்தான்! மற்றபடி உள்நாட்டு இராணுவம் இதைக் கைப்பற்றுவதற்கு முன் அங்கிருந்த கட்டிடங்களை அழித்ததையோ, மீடிம் சானட்டோரியத்தில் குடியிருந்த நூற்றுக்கணக்கான யூதக் குழந்தைகள் அனைவரும் ட்ரெப்லின்காவின் வாயு அறைகளுக்கு அனுப்பப்பட்ட உண்மைகளைக் குறித்த விபரங்களோ ஏதுமில்லை. போலந்துனுடனான எனது கடைசித் தொடர்பும் ஒரு நல்ல விஷயத்திற்காகப் பயன்பட்டுள்ளது என்று உணர்ந்தேன். எனினும் இந்த நிலைமையை உணர்ந்து கொள்வதற்கு பதில் நான் இன்னமும் ‘நம்பிக்கொண்டிருக்கும்’ வேடிக்கையை தொடர்ந்தேன். சிதிலமடைந்திருந்த உள்நாட்டு இராணுவ கல்வெட்டு, போலந்தில் மிஞ்சியிருக்கும் நிஜயூத வாழ்க்கை பற்றி அறிய நினைக்கும் எனது முயற்சியை தணித்திருக்க வேண்டும். ஆனால் தணிக்கவில்லை. இன்னும் கற்பனையிலேயே இருந்தேன்.

விடாப்பிடியாக தொடர்ந்து வரும் செமிட்டிக் எதிர்ப்பும் இந்தக் கற்பனைக்கு பங்களித்தது. பல போலந்துகாரர்கள் கூறுவதுபோல செமிட்டிக் எதிர்ப்பு ‘வரையறுக்கப்பட்ட குறிக்கோளையுடையது’ ‘தனித்துவமானது’ என்றெல்லாம் நம்பி என்னை நானே தாலாட்டிக் கொள்ளவில்லை. முன்னாள் அதிபர் லே வலேசா ‘ஆஷ்விட்ஸ் விடுதலை’ பற்றி அதில் பாதிக்கப்பட்டவர்கள் தொண்ணூறு விழுக்காடுக்கு மேல் யூதர்கள் என்ற உண்மையை மறைத்து- நீண்ட நினைவு உரையாற்றினார். தனது மதகுருவும், பாவமன்னிப்பு வழங்குபவருமான Solidarity பாதிரி ஹென்றி ஜான்கோயெஸ்கி-ஒரு பொது விளக்கத்திலும், தொலைக் காட்சியிலும் ‘போல்ஷ்விக்’ பயங்கரத்திற்கு யூதர்கள்தான் வித்திட்டார்கள் என்றும் அவர்களே இரண்டாம் உலகப் போருக்குக் காரணம் என்று பேசியதை கண்டிக்க லே மறுத்துவிட்டார். அவர் தொடர்ந்து பாதிரியார் ஜான்கோயெஸ்கிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். வாட்டிகனே இதில் தலையிட்டு பாதிரியாரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ‘அவர் விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்’ (யாரால்?) எனக் கூறி, இனி அவர் பாதிரியாருக்குரிய கடமைகளை மட்டும் செய்தால் போதும் என்றது.

இதே நேரத்தில் ஆயுதம் தாங்கிய படையின் மதகுரு பிஷப் லெஸ்செக் க்ளோட்ஸ் என்ற மற்றொரு பாதிரியார் üபோலந்தில் உள்ள பத்திரிகைகள் யாவும் போலந்து மொழியின் (யூதமொழி என்று படிக்கவும்) ஆதிக்கத்தின் கீழுள்ளது; இரண்டு செய்திதாள்கள் மட்டுமே உண்மையாக நம்பத்தகுந்த போலந்து செய்திதாள்கள். ஒன்று கத்தோலிக்கச் செய்தி மற்றது ஆயுத படையின் செய்தி என்று அறிவிப்பு செய்தார். மேலும் ஆர்ச்பிஷப் ததேயுஸ் கோக்லோவ்ஸ்கி அறிக்கைவிடும் கண்டிப்பான அரசியல்வாதிக்கு மதச்சடங்குகளில் இடமில்லை. அந்த விதத்தில் தான் பாதிரியார் ஜான்சோயெஸ்கியின் வார்த்தைகளால் புண்பட்டிருப்பதாக அறிவித்தார்.

Solidarity தொண்டர்கள், யூதர்களும், அவர்களது ஆதரவாளர்களும் வாயுற் கூடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும், என்று கொடிதூக்கிக் கொண்டு ஊர்வலம் சென்று கோஷமிட்டபோது (1995 குளிர்கால கூட்டத்தில் செய்தது போல்) பல்லாயிர யூதர்களும், போலந்து மக்களும் நடுங்கினர். இது போன்ற நிகழ்ச்சிகளினால் தூண்டப்படும் சீற்றம், வெறுப்புணர்ச்சியை மட்டுமல்லாமல், போலந்தில் மீதமிருக்கும் யூதர்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அவர்களது நோக்கத்தையும் யூகிக்க வழிவகுத்தது. எனவே ஜான்கோயெஸ்கியை கண்டிக்க லே வலேசாவை (இஸ்ரேல் சேர்மன் ஷேவாக் வீஸ், அமெரிக்கன் யூத கமிட்டியின் மாரெக் யெடெல்மன் மற்றும் பலரால்) வலியுறுத்தியது. ஏதோ இந்த கண்டனம் வலேசாவின் சொந்தக் கருத்தையோ, ஒட்டுமொத்த செமிட்டிக் எதிர்ப்பாளர்களின் கருத்தையோ அல்லது யூதர்களின் கருத்தையோ மாற்றி விடுவதைப் போல.

இது போன்ற நிகழ்ச்சிகள் உண்மையில் மிகக் குறைந்த நுண்ணிய எண்ணிக்கையில் இருக்கும் போலந்து யூதர்களின் வாழ்க்கையிலும், வேலையிலும் மற்ற இன மக்களுடன் உள்ள அவர்களது உறவிலும் மிக அரிதாகவே தாக்கம் ஏற்படுத்தியது. மற்றபடி அவர்கள் யூதப்படுகொலையின் அறிகுறியை அடையாளம் காணத் தங்கள் ஜன்னலிலிருந்து கூட எட்டிப் பார்க்க, தங்கள் பூட்சை அசைத்ததில்லை.

அந்த நாட்கள் எல்லாம் போய்விட்டன. இன்று போலந்தில், போலந்து - யூத உறவு இல்லை. ஏனெனில் உண்மையில் இன்று போலந்திய யூதர்களே இல்லை. கொதிப்பு, கோபம், அக்கறை இவை அனைத்துமே ஓர் எளிய அறவுணர்வு சார்ந்த, போலந்தின் அரசியல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங் களாகிவிட்டன.

எனக்கு ஏற்கனவே இதைப் பற்றிய விழிப்பு இருந்தது என்றாலும், இப்போது, கல்லறைத் தோட்டத்தைப் பார்த்த பிறகு ஸெனிஸரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு இருக்கும் தீவிரம், இதற்கு முன் இருந்ததில்லை. இந்த உண்மைகளை முழுதும் உணர்ந்த பிறகு, ஒரு காலத்தில் மேதின அணிவகுப்பாளர்கள் போட்ட கோஷத்தின் சப்தமும், ஆர்பரிப்புகளும் காற்றில் கலந்திருந்த சதுக்கத்தினை நான் எனது ஹோட்டல் அறையின் ஜன்னலிலிருந்து பார்த்து கொண்டே, இத்தனை காலமும் என்னை ஆட்கொண்டிருந்த மாயையை இனி உதிர்க்க வேண்டும் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

ஒருவேளை திரும்பவும் கல்லறைத் தோட்டத்திற்கு என்றாவது நான் வருவேன். ஆனால் அது நிச்சயம் போல்ஸ்லா ஸெனிஸர் அதன் கனத்த வாசற்கதவுகளை பூட்டிவிட்டு சென்றபிறகுதான். நான் வெளியே நின்று கொண்டு வேலியின் வழியே உள்ளே பார்த்து, நினைத்துக் கொண்டிருப்பேன்.

ஆபிரஹாம் பிரம்பெர்க் : ரஷியாவைப் பற்றியும், கிழக்கு ஐரோப்பாவைப் பற்றியும் அதிகமாக எழுதியிருப்பவர். தற்போது வாஷிங்டனில் வசிக்கிறார்.

Pin It