டோபியாஸ் உல்ஃப்
தமிழில் : ஜி. குப்புசாமி

ஸெயின்ட் பீட்டர்ஸில் பஸ் எண் 64 நிற்பதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம்; அல்லது ஏமாளிகள் கூட்டம் உங்கள் அபிப்பிராயத்தைப் பொறுத்து. பிக்பாக்கெட்காரர்களுக்கு நல்ல வேட்டை. மேலன் பக்தன் அல்ல, அல்லது அவனது சொந்த அனு மானத்தின்படி ஏமாளியும் அல்ல. அவனுடைய விவாகரத்தான மனைவி ஸ்விஸ்-இத்தாலிய கலவை என்பதால் அந்த மொழியை அவன்சரளமாகப் பேசுவான். ஏஜென்ஸி வேலை காரணமாக ரோமிற்கு அடிக்கடி வருபவன்தான். அன்றைய தினம் வாடிகனுக்கருகில் ஒரு பணி நியமிக்கப் பட்டிருந்ததால், அப்போது திடீரென்று தாக்கிய கோடை மழையில் சிக்கிக்கொண்டு, வாடகைக்கார் எதுவும் கண்ணில்படாமல் இந்த 64ஐப் பிடித்து சென்று கொண்டி ருந்தபோதுதான் ஒரு திருட்டுப்பயலின் கை அவனது பாக்கெட்டிற்குள் நுழைந்தது.

 பஸ் முழுக்க ஈரமாக, வியர்த்துக் கொண்டிருக்கும் பயணிகள் கூட்டம். நிறுத்தங்களிலும், திருப்பங்களிலும் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொண்டும், தடுமாறிச் சாய்ந்து கொண்டும் இருந்த போதுதான் மேலன் தனது இடைப்பகுதியின் பையில் ஒரு அந்நியக் கரத்தை உணர்ந்தான். இரண்டு பைகளுமே காலிதான். பண மடிப்புகளும் பாஸ்போர்ட்டும் அவனது சூட் ஜாக்கெட்டின் உள் மார்புப்பையில் பொத்தானிட்டு பத்திரமாக இருக்கின்றன. இந்தத்தொடுகை கனமாக, முரட்டுத்தனமாக இருந்தது. அவன் திரும்பி, அந்தத் திருடனை முறைத்துப் பார்க்க யத்தனிக்கு முன்பாக அந்தக்கரம் வெளியே வந்து, அவன் பேன்ட்டின் வலது பக்க முன்பைக்குள் நுழைந்தது. இந்த அப்பட்டமான திருட்டு முயற்சி மேலனை திடுக்கிட வைத்தது – கொஞ்சம் கூட நளினம் இல்லாமல், ஏதோ மேலனே சில்லறை எடுக்க நுழைக்கிற மாதிரி.

அந்தப் பாக்கெட்டும் காலியாக இருப்பதை அந்தக்கரம் ஒப்புக்கொள்ள மறுத்து உள்ளேயே தொடர்ந்து துழாவியது. இது இன்னும் எவ்வளவு நேரத்திற்குத் தொடரப் போகிறது என்று மேலனுக்கு வியப்பாக இருந்தது. இத்தகைய லாவகமற்றதொரு வேலையை விலகி நின்று கவனிப்பதில் ஒரு பத்திரமான, கனவுபூர்வமான சுவாரஸ்யம் இருந்தது. கதகதப்பான ஈரக்காற்று. பஸ் நின்று மேலும் பயணிகளை ஏற்றிக்கொள்ள, திருடன் மேலனின் முதுகின் மேல் அழுத்திக் கொண்டிருந்தான். உணவுத்துகட்களை பொந்தில் நிரடும் எலியைப் போல அவன் விரல்கள் நோண்டிக் கொண்டிருந்தன. பஸ் திடுமெனக் கிளம்பியதில் மேலன் பின்னால் சரிய, திருடன் அவனது கால்களையும் சுரண்டினான். இது மேலனை உலுக்கி எழுப்பியது. மூச்சை இழுத்துப் பிடித்து, பலம் சேகரித்துக் கொண்டு அவனது வலது முழங்கையை வலுவாக பின்னோக்கி இடித்தான். முட்டி இடித்த இடம் ஆச்சரியமாக, தலையணை போல மெத்தென்றிருந்தது.

அவன் கழுத்தில் உஷ்ணமான மூச்சுக்காற்று விசிற, அந்தக் கரம் வெளியே இழுக்கப்பட்டது. ஒரு குரூர சந்தோஷத்துடன் திரும்பிய மேலன் பார்த்தது ஒருவன் வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டு சரிந்து, மடிந்து உட்காருவதைத்தான். அவன் சின்னதாக, பூனையைப் போல சப்தமெழுப்பினான். சுற்றிலும் நின்றிருந்த, பெரும்பாலும் ஃபிலிப்பைன்ஸ்காரர்கள் போல தோற்றமளிக்கும் பயணிகள் அவனை கவலையுடன் கவனித்தனர். அவன் குள்ளமாக உருண்டையாக எல்லாம் கருப்பாக அணிந்திருந்தான். கருப்பு தோல் ஜாக்கெட்டின் முதுகில் குறுக்காக சலவை மடிப்பு; தொளதொள கருப்பு கால்சராய், சின்னப் பையனுடையது மாதிரி கூரான கருப்பு ஷீ. குனிந்திருந்த மண்டையில் அடர்த்தியற்ற நீண்ட கருப்பு முடிக்கற்றைகள் துவண்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. மேலனை யாரும் பார்க்கவில்லை; பஸ் அடுத்த நிறுத்தத்திற்கு வேகம் குறைந்தது. அந்த பிக்பாக்கெட் இன்னமும் அதே போல் முனகிக் கொண்டிருந்தான்.

மேலன் குனிந்து அவன் கையைப் பிடித்தான். அவனை எழுப்ப முயற்சித்தாலும் அவனால் எழுந்திருக்க முடியவில்லை. பஸ் நின்றது. போகலாம் வா என்று இத்தாலியனில் மேலன் அவனைக் கூப்பிட்டான். போகலாம் வா. உனக்கு ஒன்றுமில்லை. எழுந்திரு. அந்த பிக்பாக்கெட் தன்னை விலக்கிக்கொண்டு மூச்சுக்காகத் திணறிக் கொண்டிருந்தான். மேலன் ஒரு கையை அவன் முதுகில் பதித்ததும் பஸ்ஸின் கதவு மூடிக்கொண்டது. சரி, என்றான். போகலாம் வா. எழுந்திரு. எழுந்திரு. அந்தப் பிக்பாக்கெட்டின் கைகளை மீண்டும் பிடித்துத் தூக்கி கதவை நோக்கி, பஸ்ஸின் தடுமாற்றங்களுக்கிடையே அவனை நிதானப்படுத்தி அழைத்துச் சென்றான். திடுக்கிட வைக்கிற மாதிரி பஸ் சடக்கென நின்றது. கதவு திறந்தது. அவனை படிகளில் பத்திரமாக இறக்கினான். இப்போதும் தன்னை மடித்துக்கொண்டு மூச்சு திணறிக் கொண்டிருந்தான். குஷ்டரோகிக்கு வழிவிடுகிற மாதிரி பயணிகள் விலகி வழிவிட்டனர்.

மழை நின்றுவிட்டிருந்தாலும் வானம் இன்னமும் கருப்பாக பயமுறுத்திக் கொண்டிருந்தது. மேலன் அந்த பிக்பாக்கெட்டை கடையொன்றின் முகப்புப் பந்தலுக்குக் கீழே அழைத்துச் சென்று அவன் பலனின்றி குமட்டலெடுப் பதை கவனித்தான். அவன் தோளைத் தட்டிக் கொடுத்தான். நடந்து செல்பவர்கள் எதனையும் கவனிக்காமல், பார்வையை நேராகக்குத்தி, தெளிவில்லாத அவமானத்தில் முகம் விறைக்க விரைந்து கொண்டிருப் பதைக் கவனித்தான். இதைப் போன்றேதான் இவனும் வழக்கமாகச் சென்றிருப்பான். கடையின் சன்னல் கண்ணாடியில் மேலனின் தலைக்கு மேலாக பையேட்டாவின் படம் ஒன்று, பக்திமயமான பொம்மைகளுக்கும் ரோஜா மெத்தைகளுக்குமிடையில் கவிந்திருந்தது.

இம்மாதிரியான தருணங்களில் - காலுக்கடியில் ஒருவன் துடித்துக் கொண்டிருக்கும் போது - நீங்கள் கைக்கடிகாரத்தைப் பார்ப்பது சரியானதல்லதான். ஆனால் ரோமில் உள்ள எல்லா பொதுவிடக் கடிகாரங்களைக் போலவே அந்தப் பக்கவாட்டுச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய கடிகாரமும் ஓடாமல் நின்றிருந்ததால் மேலனுக்கு வேறு வழியில்லை. நான்கு பத்து. அவன் பத்து நிமிடம் தாமதம். தொத்தோர் ஸில்வெஸ்ட்ரியின் அலுவலகத்திற்கு நடந்து செல்ல குறைந்தது ஐந்து நிமிடங்களாவது பிடிக்கும். முக்கியமான கூட்டம். தொத்தோரின் பரிந்துரை சரியாக பிரதிநிதித்துவப் படுத்தாததை மேலன் ஆராயப்போய் நேற்றைய கூட்டமும் மோசமாகவே முடிந்திருந்தது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் நீர் சுத்திகரிப்பு திட்டங்கள் பலவற்றை நிர்மாணிக்க யோசித்திருந்த அவர்களது திட்டங்களை மேலன் பணிபுரியும் நிறுவனம் மேம்படுத்தி ஆலோசனைகள் வழங்கும். இவர்களது முதற்கட்ட மானிய விண்ணப்பத்தில் காணப்படும் குளறுபடிகள் எதிர் பார்க்கக் கூடியதென்றாலும், மேலனின் நிறுவனம் இந்தத் திட்டத்தை ஆதரிப்பது என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டிருந்தது. இவன் இங்கே வந்திருப்பது தொத்தோர் ஸில்வெஸ்ட்ரியை இவர்களது ஒப்பந்த விதிகளின் வழியாக அழைத்துச் சென்று வியாபாரத்தை படியவைப்பதுதானேயொழிய, அவர்களது திறமைக் குறைவை பட்டியலிட்டுக்காட்டுவதற்கல்ல. ஆனாலும் நேற்றைய தினம் தொத்தோரின் அபத்தங்களை மேலன் விளாசித் தள்ளியிருந்தான். அந்தத் திட்டமே குப்பைக் கூடைக்கு போகத்தக்கதுதான் என்கிற மாதிரியான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டு வந்திருக்கிறான். ஒப்பந்தம் செழிப்பாக அமைவதற்கு அவன் செய்திருந்த அந்தத் தந்திரம் வேறு விதமாகக் கெடுத்துக்கொண்டு ஜெனீவாவில் உள்ள தனது மேலதிகாரிகளை சென்றடைவதற்கு முன் இவனே சென்று சரிப்படுத்தியாக வேண்டும்.

அவன் அந்த பிக்பாக்கெட்டை குனிந்து பார்த்தான். மூச்சிறைப்பும் கேவலும் நின்றுவிட்டிருந்தாலும் இன்னமும் திணறிக்கொண்டிருப்பவனைப் போல காட்டிக் கொண்டிருந்தான். இப்போது பரவாயில்லைதானே, என்றான் மேலன். எழுந்து நிற்கமுடியுமா உன்னால்? எழுந்திரு. அப்படித்தான், என்று அவன் கையைப் பிடித்து நேராக எழுப்பி நிற்க வைத்து, முதன் முதலாக அவனது முகத்தை நேராக வைத்துப் பார்த்தான். வட்டமான கரிய முகத்தில் சின்ன வட்டமாக வாய், பெண்ணைப் போல முழுசான மென்மையான உதடுகள். உப்பலான கன்னத்தில் படிந்திருந்த பளபளப்பையும், பென்சில் கோட்டு மீசையையும், ஈரமான நெற்றியில் கற்றையாக ஒட்டிக் கொண்டிருக்கும் முடிக்கொத்துகளையும் மீறி அவனிடத்தில் ஒரு கௌரவமான தோற்றம் தென்பட்டது; கௌரவம், அனுமதிக்கப்பட்ட கௌரவம். அந்த பிக்பாக்கெட் மூச்சுக்காக போராடிக் கொண்டு மேலனை தனது கரிய விழிகளால் ஏறிட்டுப்பார்த்தான். எப்படி இந்தமாதிரி செய்யலாம், என்று அவை கேட்டன.

ஏனென்றால் என்னிடம் நீ திருட முயற்சித்ததால், என்று மேலன் சொல்லியிருப்பான். ஆனால் அவனது அடி மெத்தென்று அவன் வயிற்றில் இறங்கிய போதும், அவனை செமத்தியாகத் தாக்கியிருக்கிறோம் என்று புரிந்த போதும் அவனுக்குள் எழுந்த சந்தோஷ இச்சை இன்னமும் ஞாபகத்தில் இருந்தது. அது இன்னமும் அவன் சருமத்தில் மெல்லிய குறுகுறுப்பும், எக்களிப்பும், வெறியும் கலந்த சிலிர்ப்போடு மிச்சமிருந்தது. அந்தக் குரூர இச்சை எங்கிருந்து வந்திருக்க முடியுமென்று அவனால் கூற முடியாவிட்டாலும், ஒரு களவை முடியடித்த திருப்தியைத் தாண்டி அதன் வேர்கள் வேறெங்கோ ஆழத்தில் பொதிந்திருக்கின்றன என்பதை அறிந்திருந்தான். கனத்த மழைத்துளிகள் அந்த முகப்பில் விழத்துவங்கின.

எப்படி இருக்கிறாய், என்றான் மேலன், உன்னால் நடக்க முடியுமா?

மேலனின் போலித்தனமான அக்கறையால் அவமானப்பட்ட மாதிரி அவன் திரும்பிக் கொண்டான். கடை சன்னலில் தனது இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு தலையைக் கவிழ்த்தான். அவனது தோள்கள் எழும்பித் தாழ்ந்தன. அந்த கடைக்குள்ளிருந்த ஒரு நரைத் ததலை பெண்மணி அவனை அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போகும்படி கண்ணாடி வழியாக சைகை காட்டினாள். அவன் அவளைப் பொருட்படுத்தாதிருப்பதைக் கண்டு, கண்ணாக் கதவை பலமாகத்தட்டி, மிகையாக கைகளை வீசி விரட்டினாள். அவன் உண்மையிலேயே மிகச்சிறியவனாகத் தோற்றமளித்தான். அடம் பிடிக்கும் பையனை அதட்டுகிற பள்ளி ஆசிரியைப் போல அவளை அவள் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் போயாக வேண்டும், மன்னித்துக்கொள், என்றான் மேலன். வானத்தை அண்ணாந்து பார்த்தான். ஸில்வெஸ்ட்ரியை அழைத்து, வந்து கொண்டேயிருக்கிறேன் என்று சொல்லிட விரும்பினான். அவனது செல்ஃபோன் ஓட்டல் அறையில் இருக்கிறது. பொது தொலைபேசி எதுவும் கண்ணில் படவில்லை. மீண்டும் ஒருமுறை, மன்னித்துக்கொள் என்றான். தெருவில் இறங்கி மழைக்குள் நடந்தான்.

எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பங்களாதேஷிகளில் ஒருவன் சாலை மூலையில் குடைகள் விற்றுக் கொண்டிருந்தான். மேலன் அவனிடம் ஏழு யூரோக்களை எடுத்துக் கொடுக்கும்போது அந்தப் பெண்ணின் கத்தல் கேட்டது. திரும்பிப் பார்த்துவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டே திரும்பிப் பார்த்துவிட்டான். அந்தப் பெண் கத்திக்கொண்டே கடையிலிருந்து வெளியே பாய்ந்து வந்து சுவரில் சாய்ந்து கொண்டிருந்த பிக்பாக்கெட்காரனை இழுத்துத் தள்ளினாள். குத்துச் சண்டையின் கடைசி சுற்றின் கடைசி விநாடிகளில் போல தடுமாறி எழுந்து, மேலும் அடிகளி லிருந்து தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டான். உள்சட்டைப் பைக்குள் பர்ûஸ மேலன் செருகிக்கொண்டு அந்த பங்களாதேஷியிடமிருந்து குடையைப் பெற்றுக் கொண்டான். சிறிது தயங்கிவிட்டு பின்னால் திரும்பினான்.

பிக்பாக்கெட் இப்போது நடைபாதையிலிருந்து இறங்கி மழையில் நின்று கொண்டிருந்தான். வாசல் முகப்பில் அப்பெண் கையைக் கட்டிக்கொண்டு நின்று முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளை மேலன் நெருங்கி, மன்னிக்க வேண்டும் ஸின்யோரா. இவனுக்கு உடல்நலமில்லை. கொஞ்சநேரம் ஓய்வெடுத்தால் சரியாகி விடுவான் என்றான்.

எனக்கு இவர்களைத் தெரியும், என்றாள். இந்த ஆசாமிகளை இங்கே நாங்கள் சேர்ப்பதில்லை.

மழை பிக்பாக்கெட்டின் தலையை வழித்துக்கொண்டு, முகத்தில் இறங்கி, தோல் ஜாக்கெட்டில் சரம்சரமாக ஓடி, ஏற்கனவே நைந்து போயிருந்த கால்சராயை மேலும் சொதசொதப் பாக்கிக் கொண்டு அவனது பளபளா ஷீக்களை சேதப்படுத்திக் கொண்டிருந்தது.

இந்தா, என்று மேலன் அவனிடம் குடையைக் கொடுத்தான். மேலனை தனது கரிய விழிகளால் ஒரு அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு தலையை மீண்டும் கவிழ்த்துக் கொண்டான். குடையின் கைப்பிடியால் அவனது தோளை மேலன் லேசாக இடித்தான். இந்தா எடுத்துக்கொள்! என்றான். இறுதியில், விருப்பமில்லா பாவத்துடன் அந்த பிக்பாக்கெட் குடையை வாங்கிக்கொண்டான். மேலனுக்கும், அந்தப் பெண்மணிக்கும் நடுவே குடையை ஒரு பிரயோசனமற்ற கோணத்தில் பிடித்துக்கொண்டு நின்றான். மழை அவனை வழித்துக் கொண்டு விழுந்து கொண்டிருப்பதில் அக்கறையில்லாவதனாகத் தோன்றினான். அவனால் நகரக்கூட முடியவில்லையா என்ன? அந்த சின்யோராவும் அதே நிலையில் அசைவற்று நின்று கொண்டிருக்கிறாள். மேலன் அக்கடையின் முகப்பு நீட்டலுக்கடியில் நகர்ந்து நின்றான். மழையிலிருந்து ஒதுங்க மட்டுமல்ல, இந்த அபத்த மௌன நாடகத்திலிருந்து தப்பிக்கவும்.

அப்போதுதான் டாக்ஸி ஒன்று மண்டையில் விளக்கெரிய மூலை திரும்பி வருவதை கவனித்தான். இதைப் போன்றதொரு மழை நேரத்தில் காலி டாக்ஸியை எதிர்பார்ப்பது அபத்தம். டிரைவர் விளக்கை அணைக்க மறந்து விட்டிருப்பான் என்று தோன்றினாலும் மேலன் மழையில் இறங்கி தேங்கியிருந்த தண்ணீர் சிதற ஓடி, கைதட்டி அழைத்தான். அந்த டாக்ஸி வேகத்தைக் குறைக்காமலேயே கூர்மையான கோணத்தில் ஒடித்துத் திருப்பி அவனுக்கெதிரே நிற்க, தண்ணீர் அவன் ஷீக்களின் மேல் தெறித்தது. கார் கதவைத் திறந்து, தவிர்க்க முடியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தான். அந்த பிக்பாக்கெட் ,குடையை தலைகீழாக தரையில் ஊன்றி, அதில் தாங்கிக் கொண்டு, கழுத்து வானம் நோக்க தலையை கவிழ்த்துக் கொண்டு நின்றிருந்தான். ஸின்யோரா அதே இடத்தில் நின்றிருந்தாள்.

இரு, மேலன் டிரைவரிடம் சொன்னான். திரும்பிச் சென்று பிக்பாக்கெட்டின் சட்டைக் கைப்பகுதியை கொத்தாகப்பிடித்து டாக்ஸிக்கு இழுத்து வந்தான். குடையை வாங்கிக்கொண்டு, உள்ளே ஏறு என்று பின்ஸீட்டில் தள்ளினான். உள்ளே குனிந்து, சரி நீ எங்கே வசிக்கிறாய்? என்றான்.

ஜிப்ஸிகள் கூடாது, என்றான் டிரைவர். தன் உடம்பை பின்னால் சாய்த்துத் திரும்பி பிக்பாக்கெட்டை முறைத்துக் கொண்டிருந்தான்.

ஜிப்ஸியா? இதோ பார், இவனுக்கு உடம்பு சரியில்லை. நான் பணம் தருகிறேன்.

டிரைவர் தலையை ஆட்டி மறுத்தான். ஜிப்ஸிகள் கூடாது. அவன் கனத்த தோள்களும், நீண்ட நீலநிற தாடையும், கழுகு மூக்கும், அடர்ந்த கரிய புருவங் களும் கொண்டிருந்தான். அவனுடைய மொட்டைத்தலை நீலமாக முள்முடி களோடிருந்தது. அவனை முதலில் வெளியே தள்ளு, என்றான். அவனது கோபமும், கண்களின் உணர்ச்சியற்ற வெளுப்பும் மேலனைத் தாக்கின. அவன் பதில் சொல்ல யத்தனிக்கு முன் பிக்பாக்கெட்டின் ஜாக்கெட்டை அந்த டிரைவர் கொத்தாகப் பிடித்தான். உலுக்கினான். இறங்குடா!

முடியாது, என்றான் மேலன். குடையை மடக்கி பிக்பாக்கெட்டின் பக்கத்து சீட்டில் வைத்தான். இவன் வீட்டிற்குப் போக வேண்டும். நானும் கூட வரப்போகிறேன், என்றான்.

டிரைவர் மேலனை நோக்கி தனது சுட்டுவிரலை நீட்டினான். வெளியே போ.

மேலன் டிரைவரின் பெயர் அட்டையை கவனித்தான்; மிக்கேல் கதாரே. துணிந்து புளுகினான். இதோ பார், இது சட்டம். எங்களை அழைத்துச் செல்லாவிட்டால் ஸிக்நர் கதாரே, உன் மேல் நான் புகார் தர வேண்டிவரும். நீ உன் உரிமத்தை இழப்பாய். உண்மையாகவே கூறுகிறேன், நீ நம்பலாம்.

டிரைவர் அந்த வெளிறிய விழிகளை மேலனின் மேல் பதித்தான். வண்டியின் கண்ணாடியை துடைப்பான்கள் கரக்கிட்டுக்கொண்டு துடைத்துக் கொண்டிருந்தன. முன்னால் திரும்பி ஸ்டியரிங் சக்கரத்தின் மேல் தன் கைகளை வைத்தான். அவனது தடித்த விரல்கள் வெளுப்பாக, முடிகளற்று சுண்ணாம்பைப் போலிருந்தன. பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியில் தனது விழிகளை உயர்த்திப் பார்த்தான். மேலனும் அவனும் விறைத்த பார்வைகளை பரிமாறிக் கொண்டனர்.

ஓ.கே. மிஸ்டர் அமெரிக்கன், என்றான். நீயே பணம் கொடு.

டிரைவர் மௌனமாக ஆற்றைக் கடந்து, போக்குவரத்தின் சிடுக்குகளுக்குள் புகுந்து சென்றான். அந்த பிக்பாக்கெட் சரியான முகவரி எதையும் தராமல், தனது உடைந்த இத்தாலியனில் டிரைவரிடம் வியா டிபர்டினாவைத் தாண்டி திவோலியை நோக்கி போகச்சொன்னான்; அங்கிருந்து அவன் வழி சொல்வானாம். பின்பு தனது இருக்கை மூலைக்கு பின்னகர்ந்து கண்களை பாதி மூடிக்கொண்டு சத்தமாக மூச்சிறைக ஆரம்பித்தான். இவன் கொஞ்சம் கூடுதலாகவே நடித்துக் கொண்டிருக்கலாம்; ஆனாலும் மேலன் மிகவும் வலுவானவன்தான். அவனது இடி மிக மூர்க்கமாகவே அவனைத் தாக்கியிருக்கக்கூடும். சொல்ல முடியாது, எனினும் சந்தேகத்தின் பலனை தந்துத்தான் ஆகவேண்டும்.

மழை தூறலாக இளைத்து, ஸல்ஃபர் மஞ்சளில் வெளிச்சம் காற்றில் பரவியது. மேலன் தனது ஈரமான காலுறைகள் கதகதப்பாக மாறுவதை உணர்ந்தான். அவ்வப்போது கண்ணாடியில் அவனை காரோட்டி பார்த்துக் கொண்டு வந்தான். கதாரே. இத்தாலியப் பெயராகத் தெரியவில்லை. கதாரே என்ற பெயருள்ள அல்பேனிய எழுத்தாளரின் பற்றி ஒரு புத்தகத்தை முன்பு மேலன் படித்திருக்கிறான். ஒருவேளை இந்தக் காரோட்டி அல்பேனி யாவைச் சேர்ந்தவனாக இருக்கலாம். அந்தக் காரோட்டி, பிக்பாக்கெட்டைப் பார்த்து ‘ஜிப்சி’ என்று சொன்னது எவ்வளவு நியாயமோ, அதே அளவு நியாயம் இந்த அனுமானத்திலும் இருக்கிறது. இதுதான் அந்த ஸின்யாரோ ‘இந்த ஆசாமிகள்’ என்று சொன்னதற்கும், இவனைப் பார்த்தவுடனேயே கூச்சமும் குறுகுறுப்பும் ஏற்பட்டு, அவனை ஒரு விளிம்பிற்கு கொண்டு வந்து அவனுக்கு சுவாரசியமேற்படுத்திய ஒரு மர்மமான வேறுபாட்டிற் கும் காரணம்.

ஆனால் இந்தக் காரோட்டியும், அந்த சீமாட்டியும் எப்படி இவன் ஒரு ஜிப்ஸிதான் என்று உடனே தெரிந்துகொண்டனர்? இவன் ஒன்றும் கையில் வயலின் வைத்துக்கொண்டு காதில் வளையம் மாட்டிக் கொண்டிருக்கவில்லை. மேலனுக்கு ஜிப்ஸிப் பெண்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவர்களது கைக்குட்டையை, பளிச்சென்ற நீண்ட பாவாடையையும், நடைபாதையில் திடும் திடுமென எம்பி, எம்பி நடக்கிற நடையையும் வைத்து சொல்லிவிடலாம். இவன் பார்வைக்கு, இந்த பிக்பாக்கெட் ஒரு போர்ச்சுகீஸôகவோ, அல்லது இந்தியனாகவோ, இல்லா விட்டால் நேப்பிள்ஸைச் சேர்ந்த கருப்பர்களில் ஒருத்தனாகவோ இருக்கலாமென்று தோன்றியது. ஆனால் அந்த சீமாட்டியும் காரோட்டியும் பார்த்தவுடனேயே கண்டுபிடித்துவிட்டனர் - பண்டைய உலகின் உள்ளுணர்வால், இரத்தத்தில் இருக்கிற எச்சரிக்கை மணியால். ஆனால் இதெல்லாம் மேலனுக்கு, அவனது மூதாதையர்கள் அயர்லாந்திலிருந்தும், போலந்திலிருந்தும், ரஷியாவிலிருந்தும் கொண்டு வந்திருந்ததில் மிகச்சிறிய சீண்டலை மட்டுமே உண்டாக்கியிருந்தது.

இத்தகைய பிச்சைக்கார அபிப்பிராயங்களிலிருந்து பொதுவாக அவன் விலகியே இருந்தாலும் - தோளின் மேல் உப்பு, வாசற்கட்டையில் கட்டித் தொங்கும் வெள்ளைப் பூண்டு, வேட்டையாடிய கரும்பறவைகள், சிதறிய மது, ஸ்தம்பித்த கண்கள் - சிலமுறை அவனுக்கே வியப்பாக இருக்கும். இந்த அமெரிக்க வாழ்க்கையில் கொஞ்சகாலம் வாழ்ந்துவிட்டு வெளி வந்தாலே, ரத்தமெல்லாம் குழம்பி, பின் நீர்த்துப்போய், சில அடிப்படை ஆதார குணங்களும், அல்லது சுயமும் இப்புராதன இச்சைகளில் சுருங்கி வழியிலேயே உதிர்ந்துவிடுமோ என்று தோன்றும்.

பிக்பாக்கெட்காரனின் ஈரமான தோல் ஜாக்கெட்டிலிருந்து லேசான மூத்திரவாடை வீசியது. மேலன் கண்ணாடியை சில அங்குலங்கள் கீழிறக்கியதும் புத்தம் புதுக்காற்று முகத்தைத் தாக்கியது. பரவசத்தில் கண்களை மூடி அனுபவித்தான். கண்களைத் திறந்ததும் கண்ணாடியில் காரோட்டி தன்னை கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

நீ அல்பேனியாவைச் சேர்ந்தவனா? மேலன் கேட்டான்.

அந்தக் காரோட்டி மீட்டரைத் தட்டிக்காட்டினான். பதினெட்டு யூரோக்கள் ஆகிவிட்டிருக்கிறதாம். இன்னமும் அவர்கள் வியா டிபர்டினாவை அடையவில்லை. ரொக்கமாகத்தான் வேண்டும் மிஸ்டர் அமெரிக்கன். மாயாஜால அமெரிக்க கிரெடிட் கார்டுகளெல்லாம் கூடாது.

இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது? தன் மார்பை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டுவந்த பிக்பாக்கெட்காரனிடம் மேலன் கேட்டான். அவன் பதிலளிக்காமல் எதிரே வெறித்தான். கதாரே, அல்பேனியனாகத்தான் இருக்க வேண்டும். மேலன் படித்த அந்தப் புத்தகத்தில், தனது சகோதரனைக் கொன்ற எதிரிகளின் குழுவைச் சேர்ந்த ஒருவனை அந்தப் பையன் கொன்றுவிடுகிறான். அவர்கள் இவனைக் கொல்வதற்கு காத்திருக்கின்றனர். இரத்த வெறிகொண்ட இந்தப் பழிவாங்கும் படலத்தின் ஆதாரமான காரணம் யாருக்குமே நினைவில் இல்லாமல், ஒருவரையொருவர் மாற்றி மாற்றி கொன்று கொண்டும், கொல்வதற்காகவே வாழ்ந்து கொண்டும் வருகின்றனர். இது ஒரு கடமையாக, கெரளவமாக, பெண்களைக் கவரும் தியாகமாக மாறிவிடுகிறது. வாழ்க்கையை அர்த்த மற்றதாக்கி மரணங்களே இலட்சியமாக நிறுத்தப்படுகின்றன. ஆனால் மேலனுக்கு ஞாபகத்தில் இப்போதும் இருப்பது அந்தப் பையனின் மலர்ச்சியான விழிப்புணர்வும், எப்போதும் தான் கொல்லப்படலாம் என்ற நிதர்சனம் ஆழமாக வேரூன்றி, அதில் அவன் சலனமின்றி பிரகாசத்தை மட்டுமே எதிர்நோக்கும் அவனது மனப்பாங்கும்தான்.

முகத்தில் வெயிலைப் பரவவிட்டு, சுற்றுமுள்ள சுகந்தங்களை ஆழமாக இழுத்து சுவாசித்து, சுற்றிலும் வெள்ளிய கற்பாறைகள் சூழ்ந்திருந்த போதும் தனியனாக எப் போதும் உணராமல், அரவமற்ற சாலைகளில் அலைந்துகொண்டிருந்த அவனது அனாவசியப்போக்கு மேலனால் மறக்க முடியாதிருந்தது. அவனைத் தொடர்ந்தே வந்துகொண்டிருந்த மரணம் அவன் மீதேறிச் சென்ற பிறகு, தனது இடத்தை மற்றுமொரு கொலைகாரச் சிறுவனுக்கு விட்டு வைத்துச்செல்கிறான்.

மேலன் அந்தப்புத்தகத்தை ரசித்துப் படித்தான் - ஆனால் குற்றவுணர்வோடு. இந்தப் பிற்போக்கான வன்முறைக் கலாச்சாரத்தின் மீது இயல்பாக எழுந்த கவர்ச்சியை அவன் அடக்கிக்கொண்டான். முழங்கை தூரத்திலேயே மரணம் காத்திருப்பதில் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும், அழகும் கிடைக்கிறது என்று சொல்லப்படுவதை அவனால் ஏற்க முடியவில்லை. பெரும்பான்மையோர் தாக்குதலைவிட பத்திரத்தையும், மரணத்தைப்பற்றிய நளினமான தகவல்களைவிட - அப்படி ஏதேனும் இருக்கிறதா? - பாதுகாப்பான நிழலையும், மேசையின் மேல் நல்ல உணவையுமே தேர்ந்தெடுப்பர் என்று அவனுக்குத் தோன்றியது. இவையெல்லாம் மதவாத, அழகியல் நோய்க்கூறுகள் மண்டிய ஒரு கதை என்றுதான் மேலனும் நம்பிக் கொண்டிருந்தான், அவையெல்லாமே அவனுக்கும் ஏற்படத் துவங்கும்வரை.

அவனது மகளுக்கு பதினோராவது பிறந்தநாள் கழிந்த சில நாட்களிலேயே தலைவலி தொடர்ந்து வரத்தொடங்கி, பிறகு மூளையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவள் அதன் பிறகு குணமடைந்து, கடந்த மூன்று வருடங்களாக சோதித்து வருவதில் அபயாமில்லை என்று தெரிந்து வந்தாலும், லூஸியின் அந்த கதிரியக்க, கீமோதெரபி சிசிச்சைகளின் நீண்ட தினங்களில் மேலனும் அவன் மனைவியும் அவளை இழந்துவிடப் போகிறோம் என்றே உறுதியாக நினைத்திருந்தனர். சியாராவுக்கு கசப்புணர்வு கூடிக்கொண்டே வந்தது. அந்த சித்ரவதை தினங்களில் எதுவும் சாப்பிடாமல், எதுவும் பேசாமல், வீட்டின் விருந்தினர் அறையிலேயே தன்னை குறுக்கிக் கொண்டு, அங்கேயே தூங்கிக்கொண்டு, தான் பிறந்திருக்கவே கூடாது என்றெல்லாம் சுயவெறுப்பில் அரற்றிக்கொண்டு, தன்னைத்தானே வெறியோடு துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.

மேலன் அதுபோலில்லை. அவனது மகளின் சுகவீன காலத்தில் வாழ்க்கை என்பது அதனளவில் தனக்கும் அவளுக்கும் கூட அற்புதமாகவே இருக்கிறதென்று ஸ்திரமாக அவனுக்கு உறைத்து வந்திருக்கிறது. இது சந்தோஷத்தையோ, நம்பிக்கையையோ அளிப்பதற்கு பதிலாக ஒருவித பொறுமையுணர்வை அவனிடம் உருவாக்கியிருந்தது. சியாராவின் விரக்திக்கு இதுதான் சரியான மாற்று பதிலாக அவன் வைத்திருந்தான். ஆனால் இதனை அவள் புரிந்து கொண்டு, அதற்காக வருந்தவும் செய்கிறாள் என்பதையும் அவன் அறிந்திருந்தான். லூஸிக்கு உடல் நலம் கெட்டுப்போன பிறகு அவன் மட்டும் தனது நிதானத்தை இழக்காதிருந்ததும், தன்னுடைய வேலையை முனைப்புடன் கவனிப்பதும், அவன் குரல், அவனது தொடுகை, மேலும் அவனிடம் புதிதாகத் தோன்றியிருந்த சாப்பாட்டு மோகம் - இதனால் முதல் முறையாக அவனுக்கு தொப்பையே விழுந்துவிட்டது- இவையனைத்துமே அவளுக்கு அவன் மீது கோபத்தை உண்டாக்கி, மேலும் மேலும் விலகிப்போக வைத்துக் கொண்டிருந்தது.

ஒரு ஜனவரி பிற்பகலில், மருத்துவமனையையொட்டியிருந்த அந்த ஏரியின் கரையோரமாக நடந்து செல்கையில், கரிய அலைகள் வரிவரியாக விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த போதுதான் சியாரா தன்னை நேசிப்பதை நிறுத்திவிட்டாள் என்று அவனுக்குப் புரிந்தது. மறுபடியும் அவளுக்கு தன் மீது அன்பு திரும்புமா? அவனுக்குத் தோன்றவில்லை. காலமும் அவன் கணிப்பை உறுதி செய்தது. லூஸி நலமடைந்து திரும்பியதும் சியாரா அவனுடன் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்து பார்த்தாள்; ஆனால் அது அவளால் இயலவில்லை. அவளது அசௌகரியத்திற்கு, தான் அவளை மோசமாக நடத்திய அவமானவுணர்வுதான் காரணமென்று அவனுக்குப் புரிந்தது. ஆனால் இதனை சியாரா உணரமாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். புத்திசாலிதான்; நிரம்பப் படித்து, ஜெனீவா பல்கலைக்கழகத்தில் அரியவகை கைப்பிரதிகளை பாதுகாக்கும் பணியில் இருக்கும் அவளுக்கு சுயபரிசோதனை என்பது கைவராத ஒன்றாகவே இருந்தது.

முக்கியமாக தன் சொந்த உணர்வுகளை அலசிப்பார்ப்பது. இன்றைய நடைமுறை பயன்பாட்டிற்கு ஒத்துவருகிற எதனையும் அவள் கேள்வி கேட்காமல் மதிப்பாள். அவ்வளவுதான். அவளது இந்த குணத்தை, தனது வீட்டில் நிச்சயம் செய்த மணமகனைத் துறந்துவிட்டு விடாப்பிடியாக தன்னை மணக்க அவள் போராடி ஜெயித்த போது அவன் சிலாகித்து மகிழ்ந்திருந்தான். ஆனால் இப்போது அதே குணம் இன்றைய அவநம்பிக் கைக்கெல்லாம் காரணமாகியிருந்தது.

மேலனும் சியாராவும் பிரிந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அவளும் லூஸியும் அந்த குடியிருப்பில் இருந்துகொண்டனர். அவனுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்டூடியோ இருந்தது. அவனும் லூஸியும் விரும்பிய போதெல்லாம் ஒருவரையொருவர் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று திட்டம். நடை முறையில் சியாராவின் பற்றற்ற நடத்தையால் அங்கே செல்வதே வேதனை தருகிற விஷயமாக மாறி, அவன் வருகை புரிவதே குறைந்து போக, லூஸி மட்டும் வந்து பார்ப்பதற்காக அவன் காத்திருக்க வேண்டியதாயிற்று. இவன் எதிர்பார்த்த அளவிற்கு அவள் அடிக்கடியும் வருகை புரிவதில்லை. அவளையும் குறைசொல்ல முடியாது. பள்ளி இருக்கிறது, சிநேகிதிகள், பையன்கள், அவர்களது இசைக்குழு - இப்படியெல்லாம் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றுதானே அவனும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான்!

தனது நிறுவனத்தின் திட்ட மதிப்பீட்டாளராக பணிபுரிவதில் மேலனுக்கு வீட்டிற்காக நேரம் ஒதுக்க மிகவும் போராட வேண்டியிருந்தது. ஆனால் சமீபகாலமாக அந்தளவிற்கு வேலையில்லை. கடந்த இரு மாதங்களில் ஜெனீவாவில் வெறும் ஒன்பது நாட்கள் மட்டுமே செலவழித்திருக்கிறான், ஜிம்பாப்வேவிற்கும், உகாண்டாவிற்கும் போய்வந்ததற்கு மத்தியிலும். இந்த நாடுகளில் அவன் தங்கியதெல்லாம் மிகவும் விலையுயர்ந்த ஓட்டல்களில். பழுதடைந்த குளிர்சாதனங்கள், காலியான நீச்சல் குளங்கள், மணற்பைகள் அடுக்கி வைக்கப்பட்ட, இயந்திரத் துப்பாக்கியணிந்து காவலர்கள் நிற்கும் நுழைவாயில்கள், ஒட்டுக் கேட்கப்படும் தொலை பேசிகள். உள்ளூர் திட்ட மேலாளர்கள், வட்டார அரசு அலுவலர்களை வைத்துக் கொண்டு தமது விண்ணப்ப கோரிக்கைகளை அவனிடம் ஒப்பித்து களைப்படைய வைத்துக் கொண்டிருந்தனர். தமது புத்தம்புதிய லேன்ட் க்ரூஸர் கார்களில் அவனை வெட்டவெளிகளுக்கு அழைத்துச் சென்று அங்கே உருவாகப் போகும் மகத்தான திட்டங்களைப் பற்றி பிரசங்கம் செய்தனர். அதன் பிறகு நீண்ட தொண தொணப்புகளுக்கிடையே விருந்து. சிலவேளைகளில் பழங்குடியினரின் கேளிக்கை நிகழ்ச்சிகள்.

உண்மையில் எதுவும் மாறிவிடப்போவதில்லை. இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தே தீரவேண்டிய கட்டாயத்திலும், ஏற்கனவே பரிந்துரை செய்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியிலும் இருக்கும் அடுத்த மதிப்பீட்டாளர் வருகை புரிகிற போதும் அவன் பார்த்த அரைப்பட்டினி மனிதர்கள் அப்போது இருந்த அதே இடத்தில், வேகமாக விரையும் கார்களின் கருப்புக் கண்ணாடிகளில் கடந்து, கரைந்து போகப் போகின்றனர். இவர்களைப் போன்ற கணக்கற்றோர் அதே ஸ்திதியில்தான் ஸ்திரமாக இருக்கப் போகின்றனர் என்பதால் கேலிக்குரியவர்களாகிவிடப் போவதில்லை. கேலிக்குரியவர்கள் இந்த திட்ட மேலாளர்கள்தான். பென்ஸன் அண்டு ஹெட்ஜெஸ் சிகரெட்டுகள், கார்ஷெர் லைட்டர்கள், ரோலக்ஸ் தங்க கைக்கடிகாரங்கள், ஆர்மனி கொலோன், வழுக்கிக்கொண்டு உள்ளே இறங்கும் ஐரோப்பிய மதுவகைகளோடு மேலனை கவனத்தோடும், தீர்மானமில்லாத பெருமிதத்தோடும் உபசரித்து அவர்கள் இவனைப் போன்ற விருந்தினர்களைத்தான் கேலிக்குரியவர்களாக்கி விடுகின்றனர்.

பெரிய பந்தாவோடு ஆய்வு நடத்தி, அனைவரையும் அலட்சியமாக ஒதுக்கி, அநாவசியத்திற்கு அவர்களை கவலைக்குள்ளாக்கிவிட்டு, தங்களை வல்லுநர்கள் போல தோரணை செய்து கொண்டு, அபத்தமான ஆலோசனைகளை உதிர்த்துக்கொண்டு, அதையும் அவர்கள் கவனமாகக் கேட்பதை ரசித்துக்கொண்டு, யதார்த்தத்தை சகித்துக் கொள்ளாமல் வெறும் ஏமாற்றல்களினால் மட்டுமே அவர்களைத் திருப்தியடையச் செய்து, தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய வேலைக்காகத் தான் மேலன் நெஸ்லே, வில் தான் பார்த்துவந்த நல்லதொரு வேலையை விட்டுவிட்டு, பணம் சம்பாதிப்பதையும், புகழ்பெறுவதையும் இந்தளவிற்கு எளிய முறையாக்கி வைத்திருக்கும் ஓர் உலகத்திற்கு வந்து, தான் அடைந்து வரும் வெற்றிகளினாலேயே சங்கடமடைந்து கொண்டிருக்கிறான்.

வியா டிபர்டினா வந்துவிட்டது. காரோட்டி, மீட்டரைத் தட்டினான். நாற்பத்தியொரு யூரோக்கள் - எதுவும் பேசாமல் கண்ணாடியில் மேலனை உணர்ச்சியற்று முறைத்தான். கிடைக்கிற சந்திலெல்லாம் ஊளையிட்டுக் கொண்டு சீறிப்புகுந்து செல்லும் இரு சக்கர வாகனங்களைத் தவிர போக்குவரத்து நிதானமாகவே ஊர்ந்து கொண்டிருந்தது. பெட்ரோல் நிலையங்களும், ஆடையவிழ்ப்பு ‘மால்’களும், தள்ளுபடி மரச்சாமான்கள் கடை களும், கார் விற்பனைக் கடைகளும், படபடக்கும் கொடிக்கம்பங்களுமாக வரிசையிட்டு வந்தன. பிளாஸ்டிக் பைகளும், சகல விதமான குப்பைகளும் சாலையில் இறைந்திருந்தன. அவ்வப்போது கண்ணில்படும் ரோமானியச் சுவரும், தூரத்து வயல்களில் கால்வாய் பாலங்களின் வளைவுகளும் தென்படாவிட்டால் மேலனுக்கு ஓஹியோவில் இருப்பதாகவே தோன்றியிருக்கும்.

பிக்பாக்கெட் முன்னால் குனிந்து காரோட்டியிடம் ஏதோ கமறினான்.

எங்கே? என்றான் காரோட்டி.

பிக்பாக்கெட் சாலையின் மறுபுறத்திலிருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டை சுட்டிக்காட்டினான். காரோட்டி வண்டியை சாலையின் இடது பக்கத்திற்கு ஒடித்து, அந்தப் பக்கப் போக்குவரத்தில் இடைவெளி வரக்காத்திருந்தான். ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கமாக வண்டித்தொடர்கள். அவனிடமிருந்து எந்த வார்த்தையும் எழாவிட்டாலும், தாடையில் தசைநார்கள் முறுக்கிக் கொள்வதை மேலன் கவனித்தான். ஏதாவதொரு வாய்ப்பிற்காக அவன் காத்திருப்பது தெரிந்தது. இரு, என்றான். அதே நேரத்தில் லாரி ஒன்று அவனுக்காக வேகம் குறைய, கிடைத்த இடைவெளியில் மின்னலாக செருகிக் கொண்டு, வண்டியை வளைத்து நிறுத்துமிடத்திற்கு கொண்டு வந்தான். அந்த அங்காடியையொட்டிச் செல்லும் ஒரு கரடுமுரடான சந்தை பிக்பாக்கெட் சுட்டிக்காட்டினான். வண்டி குதித்து குதித்து அதற்குள் நுழைந்தது. இருபுறங்களிலும் உலோகத்துண்டுகள், உடைசல்கள் சேகரிக்கும் கடைகள். வேலியிட்ட மைதானம் ஒன்று அச்சந்தின் முடிவில் ஆரம்பித்தது. உள்ளே துருப்பிடித்துக் கொண்டிருக்கும் சகலவித மெஷின்களும், கேபிள் சுற்றும் மிகப்பெரிய மரச்சக்கரங்களும் சிதறியிருந்தன. அந்த பாதைக்கு உகந்ததல்லாத வேகத்தில் அவன் ஓட்டிச் சென்றான். பள்ளங்களில் குதித்து குதித்து வண்டி ஏறக்குறைய மிதந்தது.

இன்னும், என்றான் பிக்பாக்கெட். இன்னும் கொஞ்சதூரம்.

மைதானத்திற்குள் வந்திருந்த அந்தப்பாதை ஒரு சேற்றுப் பரப்பிற்கு வந்து முடிந்தது. தூரத்தில் பல சிறிய டிரெய்லர்களும், வண்டிகளும் முழுமையடையாத குடியிருப்பு ஒன்றின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. கண்ணாடிகளற்ற சன்னல்கள், தடுப்பில்லாத பால்கனிகள், கான்கிரீட் சுவர்களில் வரிவரியாய் மழை நீர் கறைகள். மழையைப் பொருட்படுத்தாது இரண்டு பையன்கள் பந்தை உதைத்துக் கொண்டிருக்க, இரண்டு ஓட்டைக் கார்களின் மீது ஒரு கும்பல் கொண்டு உட்கார்ந்து ஆராவரித்துக் கொண்டிருந்தது. இவர்களுடைய வண்டியைப் பார்த்ததும் கீழே குதித்து இரைச்சலாக ஓடி வந்தனர்.

உடைந்த உலோக பீப்பாய்களும், டயர்களும், பளீரென்ற வர்ணங்களில் பிளாஸ்டிக் கழிவுகளும், பேப்பர் கூளங்களும் குவிந்திருந்ததற்கு மத்தியில் நெளிந்து நெளிந்து இவர்கள் கார் சென்றது. அட்டைப் பெட்டி ஒன்றிற்குள் தலையை நுழைத்து எதையோ நக்கிக்கொண்டிருந்த ஓர் அழுக்கு குதிரைக்குட்டி இவர்கள் வண்டி நெருங்கியதும் விலகி வழி விட்டு, தன் பின்னங்கால்களை காற்றில் வெற்றாக உதைத்தது. ஒரு பையன் காரின் பானட் மேல் தாவி ஏறினான்.

அபாயகரமாகத் தொற்றிக் கொண்டு காரோட்டியின் முன்னால் கண்ணாடியில் தன் சேறுபடிந்த முகத்தை ஒட்டிக்கொண்டு சிரித்தான். வலுவான வெள்ளை வெளேர் பற்கள். காரோட்டி உணர்ச்சியற்று நேராக வெறித்துக் கொண்டிருந்தான்.

பிக்பாக்கெட்டும் அந்தப் பையனை கண்டுகொள்ளவில்லை. படகுக்காரின் பின்னிருக்கையில் எதையும் கண்டுகொள்ளாது பந்தாவாக அமர்ந்திருக்கும் ஒரு கனவான் தன்மை அவனிடம் தெரிந்தது. அக்குடியிருப்பின் ஒரு கட்டி டத்தைக் காட்டி அந்தப் பக்கம் என்று தளர்ந்த பாவனையில் சைகை காட்டினான். வண்டி வேகம் குறைந்து நிற்க, அந்தப் பையன் வழுக்கி இறங்கி வெற்றி வீரன் போல முஷ்டியை உயர்த்திக் காட்டினான். அவனுடைய சகாக்கள் பெரிதாக சிரித்துக்கொண்டே ஓடிவந்து அவன் இடுப்பில் குத்தினர்.

வண்டியிலிருந்து பிக்பாக்கெட் இறங்கியதும், அவர்களில் ஒருவன் சத்தமாகக் கூப்பிட்டான், மிரி! மற்றவர்களும் சேர்ந்துகொண்டனர் - மிரி மிரி - ஆனால் எதுவும் அவன் காதில் விழுந்ததாகத்தெரியவில்லை. மேலனும் கீழே இறங்கினான். கடைசியாக அவனிடம் ஏதாவது சொல்லலாம் என்று முன் வந்தான். அவன் திரும்பி சில தப்படிகள் சென்று, பின்சென்று, தலையை துக்கம் அனுஷ்டிப்பவன் போல குனிந்து கொண்டான். காரோட்டியிடம் மேலன், கொஞ்ச நேரம் காத்திரு, என்று கூறிவிட்டு பிட்பாக்கெட்டின் முழங்கையைப் பிடித்தான்.

இல்லை, இப்போதே பணத்தைக் கொடுத்துவிடு. நாற்பத்தியெட்டு யூரோக்கள்.

காத்திரு. மீட்டர் ஓடிக்கொண்டிருக்கட்டும். பணம் தருகிறேன்

அந்த நுழைவாயில் பிளாஸ்டிக் ஷீட்டால் திரையிடப்பட்டிருந்தது. அதை பிக்பாக்கெட் விலக்கினான். மேலன் உள்ளே பாதி நுழைந்து அவனை உள்ளே துருத்தினான். அது ஒரு கான்கிரீட் பொந்து. கூரையிலிருந்து தொங்கும் கெரஸின் விளக்கொளியில் உடைந்த ஓடுகள் மின்னின. ஸ்டவ் அடுப்பின் மேல் வைக்கப்பட்டிருந்த உலோகப்பாத்திரத்தில் ஒரு வயதான ஜிப்ஸிப்பெண் கிளறிக் கொண்டிருந்தாள். இவர்கள் உள்ளே நுழைந்ததும் அடுப்பைவிட்டு விலகி, பக்கத்திலிருந்த திண்ணையை துணியால் துடைத்துக் கொண்டே நிமிர்ந்து அவர்களை நோக்கினாள். அவளது கரிய முகத்தில் உழுத மாதிரி ஆழமான சுருக்கங்கள். பளிச்சிடும் சிறிய கண் களுக்கடியில் குளுப்பையாக தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு தோள்பட்டை மட்டும் மற்றதைவிட உயர்ந்திருந்தது - குலுக்கிக் கொள்ளும்போது பாதியில் நின்றதைப்போல.ஆழமான ஒரு குரலில் அவள் ஏதோ சொன்னது மேலனுக்கு விளங்கவில்லை. பிக்பாக்கெட் பரிதாபமாக முனகிக்கொண்டே ஒருபுறமாக சரிய முற்பட்டான். அந்தக் கிழவி துணியை தொட்டிக்குள் எறிந்துவிட்டு, தன் உடையில் கைகளைத் துடைத்துக் கொண்டு, அந்த முன்னறையிலிருந்து தள்ளிருந்த இருட்டான கூடத்திற்கு அவர்களை போர்வைத்திரையிட்ட வாசல்வழியாக செலுத்தினாள். அந்தப் போர்வையை அவள் தூக்கிப் பிடித்துக் கொண்டதும் மேலன் அந்த பிக்பாக்கெட்டின் முழங்கையை விடுவித்தான்.

சரி உன் வீட்டிற்கு வந்தாகிவிட்டது, என்றான். பிக்பாக்கெட் எதுவும் பேசாமல் குனிந்து உள்ளே சென்றான். அந்தக் கிழவி போர்வையை தொடர்ந்து தூக்கிப்பிடித்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்து உள்ளே செல்லுமாறு தலையை அசைத்தாள்.

இல்லை, இருக்கட்டும், என்றான்.

அவந்தி, என்றாள் பொறுமையின்றி, அவள் தங்கப்பற்கள் பளீரிட்டன.

மேலன் உள்ளே சென்றான்.

இந்த சங்கடத்தை உவப்புடன் ஏற்றுக்கொள்ளும் தனது தற்போதைய இணக்கத்தை நினைத்து மேலன் வியந்தான். ஏன்? எதை எதிர்பார்க்கிறான் அவன்? வாசலைத் தாண்டுகையில் அவன் வயிற்றிற்குள் முடிச்சிட்டுக் கொண்டது. நிச்சயம் இந்த அறையை அவன் எதிர்பார்க்கவில்லை. அடங்கிய வெளிச்சத்தில், மூலையில் அமைக்கப்பட்டிருக்கும் சுத்தமான படுக்கை, பளபளவென்ற மஞ்சள் நிற சோஃபா, அதற்கு பொருத்தமான நாற்காலி, செயற்கையான பனைமரம் ஒன்று. இம்மாதிரி ஓர் அறையையோ, அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டு அழகான குழந்தைகளையோ எதிர்பார்க்கவில்லை. அச்சிறுமிக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம்; பையன் கொஞ்சம் பெரியவன். இருவருமே ஒல்லியாக, பெரிய கரிய விழிகளுடன் அழகாக இருந்தனர். பிக்பாக்கெட்டின் இரு பக்கத்திலும் நின்றிருந்தனர். அந்தப்பெண் அவனது கையை அணைத்துக் கொண்டு அவன் மேல் சாய்ந்து கொண்டாள். அந்தக் கிழவி மேலனைக் கடந்துபோகும் போது அவர்கள் பின்னகர்ந்து கொண்டனர்.

அவள் பிக்பாக்கெட்டின் தோல் ஜாக்கெட்டை முரட்டுத்தனமாக உலுக்கிக் கழற்றினாள். அந்த மேற்சட்டையை எடுத்தவுடன் அவன் மேலும் சிறியவனாக, குள்ளமாகத் தெரிந்தான். முணுமுணுத்துக் கொண்டே அவனை படுக்கைக்கருகே நெட்டித் தள்ளிக் கொண்டு, அந்தச் சிறுமியிடம் ஏதோ கூற அவள் அவனை படுக்கையில் கிடத்துவதற்கு கைத்தாங்கலாக உதவினாள். பிறகு மண்டியிட்டு அவனது சிறிய காலணிகளைக் கழற்றினாள். அந்தக் கிழவி இடுப்பில் ஒரு கையை ஊன்றிக் கொண்டு கவனித்தாள். பின் மேலனை நோக்கித் திரும்பினாள். உட்காருங்கள்ஙு என்றாள். அவன் எதுவும் பதிலளிக்குமுன் அந்த மஞ்சள் நிற நாற்காலியை சுட்டிக்காட்டினாள். அவள் பேச்சிற்கு கீழ்படிந்து அவன் அமரும் வரை காத்திருந்து, இருங்கள்! என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.

பிக்பாக்கெட் மல்லாந்து படுத்திருந்தான். ஆழமாக மூச்சுவிட்டான். அந்தப் பெண் படுக்கையின் கால்மாட்டிலிருந்து மேலனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பையன் அறைக் கோடியிலிருந்த பெரிய சன்னலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு அவனை கவனித்துக் கொண்டிருந்தான். அந்த சன்னல் பிளாஸ்டிக் தாளில் மூடப்பட்டு அதன் வழியாக முத்தைப் போல் சாம்பல் வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணிற்கு மெல்லிய, நீளமாக எலும்பு துருத்திக் கொண்டிருக்கும் கைகள். கரடி குல்லாய் சேர்ந்த டி-சர்ட் அணிந்திருந்தாள். மேலன் அவளைப் பார்த்து புன்னகைத்தான். உன் அப்பாவா? பிக்பாக்கெட்டை தலையால் சுட்டிக்காட்டிக் கேட்டான்.

பதில் இல்லை. ஆனால் மேலனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.

மாமா?

அந்தப் பெண் கூட இருந்தப் பையனைத் திரும்பிப் பார்த்து பெரிய மனுஷத்தனமாக வாய்விட்டு சிரித்தாள். டி-சர்டின் காலரை உயர்த்தி தன் வாயின் மீது முகத்திரை போல அமைத்துக் கொண்டு தலையைக் குனிந்து அவனை கீழ்பார்வை பார்த்தாள்.

கிழவி வெளியே எங்கிருந்தோ கூப்பிடுவது கேட்டது. அப்பெண் விழிகளை தயக்கத்துடன் தாழ்த்திக் கொண்டு, கைகளை இடுப்பிற்கு குறுக்காக கோர்த்துக்கொண்டு சிறிய தளுக்கான நடையில் பாதங்கள் பிணைக்கப்பட்ட ஜப்பானிய நாட்டியக்காரி மாதிரி அறையைக் கடந்து சென்றாள். அப்பையன் தொடர்ந்து முறைத்துக் கொண்டிருந்தான். மேலன் எழுந்து சென்றுவிட யோசித்தான். ஆனால் அந்த நாற்காலி மெத்தென்று ஆழமாக இருந்தது. தனது யத்தனிப்பை சேகரித்துக் கொண்டு எழுவதற்குள் அப்பெண் கையில் ஒரு தட்டில் பிரிக்கப்பட்ட சாக்லெட்டுகளும், ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கோகா-கோலாவுடன் திரும்ப வந்து அவனெதிரே நின்றாள். மேலன் தலையை ஆட்டி வேண்டாமென்று மறுத்தான். அந்தப் பெண் தொடர்ந்து நீட்டியபடி அவன் கண்களுக்குள் பார்த்தாள். அவள் தலையை அசைத்து நிர்ப்பந்தித்தது மறுக்க இயலாதிருந்தது. அவன் கோக்கை எடுத்துக் கொண்டான். அது வெதுவெதுப்பாக இருந்தாலும் வாயில் நுரையாக நிரம்பியது. அவனும் தலையை அசைத்து, ரசிக்கிற மாதிரி பாவித்து தலையைப்பின்னால் சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள். தரையில் பாட்டிலை வைத்தான்.

பிக்பாக்கெட் முனகிகொண்டே சுவர் பக்கம் புரண்டான். அவன் குரல் ஏதோ விவாதத்தில் போல உயர்ந்து பின் தேய்ந்தது. அவள் அவனைத் திரும்பிப்பார்த்துவிட்டு அந்தப் பையனைப் பார்க்க, அவன் மேலனின் நாற்காலிக்குப் பக்கத்திற்கு நழுவி வந்து நின்றான். மேலனின் கால் முட்டியின் மீது அந்தப் பெண் திரும்பிச்சாய்ந்து நின்று கொண்டு சீரான இடைவெளியில் பந்தினால் தட்டுகிற மாதிரி விட்டு விட்டு இடித்துக் கொண்டிருந்தாள். சட்டென்று தோன்றியவனாக அந்தப் பெண்ணின் இடுப்பைப் பிடித்து இழுத்து தன் மடிமேல் தூக்கி உட்காரவைத்துக் கொண்டான். தனியாக நின்றுகொண்டு கவனிக்கும் அந்தப் பையனைத் திரும்பிப் பார்த்தான். அவனையும் வாங்கி மடியில் சேர்த்து உட்கார்த்திக் கொண்டான். இது மிக இயல்பானதாகவே இருந்தது அவனுக்கு. அவர்களுக்கும் அப்படியே இருந்திருக்க வேண்டும்.

மெல்லியதாக, நூல்மாதிரி கிடக்கும் இவர்கள் அவன் மடியில் சௌகரியமாக தம்மை அமைத்துக்கொண்டு அவன் மார்பின் மீது தலைகளை சாய்த்துக் கொண்டனர். மேலிருந்து பார்க்க இருவருமே ஒன்றாகத் தெரிந்தனர். இனிமையாக ஒரு மண்வாசனை அவர்கள் கேசத்திலிருந்து எழும்பியது. பிக்பாக்கெட் மீண்டும் புரண்டான். அவனிடமிருந்து குறட்டை ஒலி கிளம்பியது. அந்தப் பையன் கிசுகிசுப்பாக, மிரி! என்றான். தொடர்ந்து மிரி மிரி மிரி என்று கள்ளக் குரலில் ஜெபித்தான். அவனைப் போலவே மூக்கால் குறட்டை சத்தம்போல பண்ணிக்கொண்டு அவ்வப்போது கமறியும் காட்டினான். அந்தப் பெண்ணின் உடல் குலுங்கியது. கைகளை வாயின் மேல் பொத்திக்கொண்டு, பிரிந்த விரல்களுடாக அடக்க முடியாமல் சிரித்தாள்.

மேலன் தலையை பின்னால் சாய்த்துக்கொண்டான். களைப்பாக இருந்தான். அந்த நாற்காலி சௌகரியமாக இருந்தது. அந்தக் குழந்தைகள் கதகதப்பாக, பரிச்சயவுணர்வோடு அவன் மீது பொதிந்திருந்தனர். கண்களை மூடிக்கொண்டான். அந்தப் பையனும் பெண்ணும் அசைவற்றிருந்தனர். அவர்கள் மூச்சுவிடுவதை மேலன் உணர்ந்தான். மேலோட்டமான இளம் சுவாசிப்பு. இரண்டும் விநோதமாக ஒன்று போலவே பொருந்தியிருந்தது. இவர்கள் இருவரும் இரட்டையரோ என்று ஓர் எண்ணம் தோன்றியது. இரட்டையர்களின் அல்லது இரட்டைப்பிறப்பின் மர்மத்தை யோசிக்க யோசிக்க, அவன் முதலில் பார்த்த, கூடவே வளர்ந்த இரட்டையர்களின் ஞாபகம் இவ்வளவு வருடங்கள் கழித்து முதன் முதலாக வந்தது. ஜெர்ரி-டெர்ரி. அல்லது ஜெர்ரி-லேரியா? எண்ண இழை அத்துடன் அறுந்து அலைய, அவன் மிதந்துகொண்டே, பிக்பாக்கெட்டின் குறட்டை தன்னு டையதாகவே மாறி ஏறக்குறைய அவனுக்கே கேட்க, தனக்குள்ளேயே புதைந்து போனான். இது எவ்வளவு நேரம் நீடித்தது என்று அவனுக்கே பிறகு வியப்பாக இருந்தது. அதிக நேரமிருக்காது என்றேதான் ஊகித்தான். அந்தக் குழந்தைகள் அவன் மீதிருந்து கீழே இறங்குவதையுணர்ந்து மனசேயில்லாமல் கண்களைத் திறந்தான். மணிக்கணக்காக தூங்கி எழுந்ததைப் போல புத்துணர்ச்சியுடன் உணர்ந்தான்.

அந்தக் கிழவி நாற்காலிக்கெதிரே நின்றிருந்தாள். வெளியே ஒருவன் உங்களைக் கூப்பிடுகிறான், என்றாள். வியா டிபர்டினாவிற்கு அவர்கள் திரும்பி வந்தபோது, ரோமின் மையப் பகுதியிலிருந்தும், மேலனின் ஓட்டலிலிருந்தும் அது கணிசமான தூரமாக இருந்த போதிலும் எண்பது யூரோக்கள் மட்டுமே ஆகியிருந்தது. மேலன் மார்பில் கையை வைத்து அழுத்திப்பார்த்தான். காரோட்டி கண்ணாடியில் இவன் செய்கையைப் பார்த்து விழிகளை உயர்த்தினான். மேலன், மழை துடைத்த கண்ணாடிக்கு வெளியே எதையும் வெளிக்காட்டாமல் பார்த்தான். கணங்கள் கடந்தன. மேலன் மிகையாக கொட்டாவி விட்டுக் கொண்டே, சோம்பல் முறித்துக் கொள்கிற சாக்கில் நீட்டியும் குறுக்கியும் பார்த்துக் கொண்டே சோதித்துக் கொண்டான். அவனது பணப்பை போய்விட்டி ருப்பது உறுதியாகியது.

எனக்கு ஒரு பிரச்சனை.

காரோட்டியின் பார்வை சாலைக்கும் கண்ணாடிக்குமாக தாவியது.

எனது பர்ஸைத் தவறவிட்டுவிட்டேன்1

என்னது?

என் பணப்பை காணோம்!

உங்களிடம் பணமில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

என்னிடமா? அப்படியில்லை. ஓட்டலில் வாங்கித்தர முடியமென்று நினைக்கிறேன். அவர்கள் எனது பில்லிலிருந்து முன் பணமாகத் தந்தால்.

காரோட்டி முன்னால் குனிந்து மழைக்குள் எதையோ தேடினான். திரும்புவதற்கான விளக்கைப் போட்டான். இன்று எனக்குக் கிடைக்கிறதோ என்னேவா, நாளை நிச்சயம் கிடைக்கும். காலையிலேயே! ஜெனீவாவைக் கூப்பிட்டுப் பேச வேண்டும். அவ்வளவு தான். மேலனுக்கே தான் பேசுவது மோசடிக்காரனின் குழறலாகப்பட்டது. எப்படியும் உனக்குரிய பணத்தை நான் தந்துவிடுவேன், என்றான்.

உனக்குத் தெரியும், என்றான் காரோட்டி,

என்ன? என்ன சொன்னாய்?

பதில் இல்லை. காரோட்டி சாலையின் ஓரத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினான். அவனது தீர்மானித்த நடத்தையிலும், மௌனத்திலும், கழுத்துப் புடைப்பிலும் ஏதோ பயங்கரம் கலந்திருந்தது. கைகளை ஸ்டீயரிங் மேல்வைத்து நேராகப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். மிஸ்டர் அமெரிக்கன், என்றான். பற்களுக்கிடையில் ஏதோ சத்தமெழுப்பினான். கார்கள் கடந்து சென்றன. கூரையில் மழை மேளமடித்தது. மேலன் ஏதாவது சொல்ல விரும்பினான். பயமாக இருந்தது. எந்த வார்த்தையை வெளியிட்டாலும் காரோட்டியின் கோபம்வெடித்துச் சிதறிவிடுமோ என்ற பயம். எப்படியோ தான் பேசுகிற உரிமையை இழந்து விட்டதாக உணர்ந்தான். வெளியே போ, என்றான் காரோட்டி.

உனக்குப் பணத்தைத் தந்துவிடுவேன் ஸின்யோர் கதாரே.

காரிலிருந்து தன்னை பிரித்தெடுத்துக் கொண்டு கதவை மூடுவதற்குள் அவனது கால்சராய்கள் ஈரமாகி காலோடு ஒட்டிக் கொண்டன. காரோட்டி சீறிக்கொண்டு கிளம்பியதும்தான் குடை ஞாபகம் வந்தது. மேல் கோட்டை அவிழ்த்து தலைக்கு மேலாகப் பிடித்துக் கொண்டான். சாலையோரம் கொஞ்ச தூரம் நடந்தான். காற்று மழையோடு முகத்தில் அறைந்ததும் திரும்பி நடந்தான்.

எதனால் அந்தக் காரோட்டி அப்படிச் சொன்னான்? உனக்குத் தெரியும்? என்ன தெரியும்? எதனால் என்னை சிக்க வைத்து நிராயுதபாணியாக்குகிற வார்த்தைகளை பதில் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்? மேலனுக்குத் தெரிந்தது என்ன என்பது காரோட்டிக்குத் தெரிந்திருக்காது. ஆனால் மேலனுக்குத் தெரிந்தது என்னவென்பது மேலனுக்குத் தெரியும். காரோட்டியின் குற்றச்சாட்டால்தான் அதுவே மேலனுக்கு உறைத்தது. ஆனால் அந்த அறையில் அது நிகழ்ந்த போது - தூக்கத்திலல்ல - அந்தக் கரம் மார்பின் குறுக்காக, சட்டைக்கும் ஜாக்கெட்டிற்கும் நடுவே நுழைந்து, திருட்டுத்தனமான தடவலில் பர்ûஸத் தேடியெடுத்துக் கொண்டு சடுதியில் வெளியேறியதும், அதன் பிறகு ஏதோ பவுண்ட் கணக்காக இருந்தது போனதைப் போல கனமிழந்து உணர்ந்ததும் ... வினோதம்!

தொலைவில் இடி நறநறவென்று முறிந்தது. வீசும் மழை அவன் சட்டையை முதுகில் பிளாஸ்திரி போட்டதைப் போல ஒட்டவைத்து எதிரே வரும் வண்டிகளின் முகப்பு விளக்குகளைப் பிரதிபலித்தது. ஏதோ யோசனையில் கட்டைவிரலை உயர்த்தி கையை நீட்டினான். கல்லூரி தினங்களுக்குப் பிறகு அவன் லிஃப்ட் கேட்டு வண்டி மாறிமாறிச் சென்றதில்லை. ஒருவேளை இப்போது அணிந்திருக்கும் டை உதவலாம். அல்லது வண்டியோட்டிக்கு, ஏமாற்றுவதற்காக போட்ட வேஷமாகக்கூட அதுபடலாம். அபாயம்! ஆனால் தொப்பலாக அவன் நனைந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். தானே இது போல ஒருவனுக்கு லிப்ட் தந்திருப்போமா? கொஞ்ச நேரத்தில் முயற்சியை கைவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கியதும், சற்று தூரத்திலேயே ஒரு கார் நிற்பதையும் அதன் பின் பக்கத்து சிவப்பு விளக்கு களையும், அதிலிருந்து ஒருவன் விரித்த குடையுடன் இறங்கி அவனை நோக்கி ஓடிவருவதையும் பார்த்தான்.அது அந்த காரோட்டி. குட்டையான கால்களில் நொண்டிக்கொண்டு வந்தான். மேலனுக்கருகில் வந்து குடையை அவன் தலைக்கு மேலே பிடித்தான். காற்றில் குடை அலைக்கழித்து புரண்டது.

ரொம்பவும் தாமதாகிவிட்டது, என்றான் மேலன்.

தயவுசெய்து வேண்டாம், என்று பயனின்றி மேலனின் தலைக்கு மேல் பிடித்தான். வாருங்கள், தயவு செய்து வாருங்கள். மேலனை அழைத்துக் கொண்டு காருக்கு அழைத்துச் சென்றான். கதவைத் திறந்துவிட்டான். அவன் மீண்டும், தயவு செய்து, என்ற கூறமுற்பட மேலன் தயங்கினான்.

மேலன் உள்ளே ஏறினான். காரோட்டி போக்குவரத்திற்குள் நுழைய, பணம் தந்துவிடுகிறேன், என்றான் மேலன்.

வேண்டாம். பணம் வேண்டாம். பாருங்கள்! மீட்டரைத் தொட்டுக் காண்பித்தான். அது நிறுத்தப்பட்டிருந்தது.

அபத்தம் நிச்சயம் நான் பணம் தந்து விடுவேன்.

இல்லை. ஒரு பரிசு. ஆனால் தயவு செய்து புகார் செய்துவிடக்கூடாது, என்ன?

மேலன் அந்த மனிதனின் கண்களை கண்ணாடியில் கவனித்தான். ஆ, என்றான்.

புகார் கூடாது. ம்?

புகார் இல்லை. ஆனால் கண்டிப்பாக பணம் தருவேன்.

உங்களுக்கு என் பரிசு. அமெரிக்கன், இல்லையா? கலிஃபோர்னியாவா?

மேலன் இதனை எளிதாக்க விரும்பி, ஆம், என்றான். ஓஹியோ என்று சொல்வது கோட்பவர்களைக் குழப்பி விடுகிறது. மேலும் அங்கே இருந்து வருடங்களாகின்றன.

என்ன கார் வைத்திருக்கிறீர்கள்? செவர்லே? இந்த வாடகைக் கார் என் மாமனாருடையது. மிக்கேல். அவருக்கு உடல்நலமில்லை. பணக்கஷ்டம் அதுதான்.

அந்தக் காரோட்டி தொண தொணத்துக் கொண்டேயிருந்தான். அவன் மாமனாரின் உடல் நலக்குறைவு, அவன் சகோதரியின் நோய், வாடகை வண்டி உரிமத்தில் உள்ள பிரச்சனை. பேசும் போது கண்ணாடியில் மேலனின் ஒப்புதலை சரிபார்த்துக்கொண்டு வந்தான். அவன் பேசுவது திட்ட மேலாளர் ஒருவர் சமாதானங்கள் கூறுவதைப் போல, ஒப்பந்தத்தை வென்றெடுக்க முனைகிறாற்போல மேலனுக்குத் தோன்றியது. சலிப்பாக வும், ஏமாற்றமாகவும் இருந்தது. மலைப்பகுதியைச் சேர்ந்த குலமரபினனாகவும், வெறி தணிக்க முடியாமல் பழிவாங்கப் புறப்பட்ட அல்பேனியனாகவும் அவனை நினைத்து பயந்ததற்கு இது போதும்.

ஓட்டலுக்கு எதிரே அவர்கள் வந்து நின்றதும், மழை விட்டு, வாயில் காப்போன் மாலை வெளிச்சக் கதிர்களிலிருந்து தன் கண்களை மறைத்துக் கொண்டு முன் வந்தான். காரோட்டி கீழே இறங்கி, அவனை முந்திக்கொண்டு கதவை மேலனுக்காகத் திறந்து, பெண்ணிற்கு நீட்டுவதைப் போல் தன் கையை நீட்டினான். மேலன் பொருட்படுத்தாது ஈரமாக வெளியே வந்தான்.

சரியா? காரோட்டி கேட்டான். உங்கள் குடை, எங்கே உங்கள் குடை? மேலனை ஒதுக்கிவிட்டு காருக்குள் குனிந்தான். இதோ! நண்பர்கள் நாம், சரியா?

புகார் செய்யப்போவதில்லை, என்றான் மேலன்.

வாயில் காப்போனிடம் காரோட்டி, மிஸ்டர் கலிஃபோர்னியா என்று அறிமுகப்படுத்தினான். ஹாலிவுட்ஙு சரியா?

ஆம், என்றான் மேலன். ஹாலிவுட்.


டோபியாஸ் உல்ஃப்

1945ல் அலபாமாவில் உள்ள பர்மிங்ஹாமில் பிறந்த வர். அமெரிக்க நவீன எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர். பெரும்பாலும் சிறுகதைகளையே கடந்த 20 வருடங்களாக எழுதி வந்த இவரது இருநாவல்கள் சமீபத்தில் வெளிவந்துள் ளன. ‘‘எனது பெரும்பான் மையான படைப்புகள் ஏதோ ஒரு விதத்தில் என் சொந்த அனுபவங்களிலிருந்தே எடுக்கப் பட்டவையாக இருக்கின்றன. ஓட்டலில் வெயிட்டராக, பேருந்து ஊழியனாக, காவல்காரனாக, நான்கு மாதங்கள் பத்திரிகை நிருபராக, நான்கு வருடங்கள் ராணுவத்தில் என்று என்னென்னவோ வேலை பார்த்திருக்கிறேன்’’ என்று குறிப்பிடும் உல்ஃப் வியட்நாம் போரின்போது விருப்பமேயின்றி சிறப்பு படை அதிகாரியாக பணி யாற்றியிருக்கிறார். அந்த அனுபவங்களைப் பற்றி In Pharoahs’ Army என்ற தலைப்பில் நினைவுக் குறிப்புகளாக எழுதியுள்ளார்.

‘‘ஃபாரோவின் ரதங்கள் விழுங்கப்பட்டன. அவனது குதிரைப் படை வீரர்கள் குழம்பினர். அவரது எல்லா மகத்துவமும் நிலைதெரியாது வீழ்ந்தன. அது ஒரு மலக்குழி’’ என்று அந்த வியட்நாம் போர் தினங்களைப் பதிவு செய்கிறார்.

‘‘நவீன சிறுகதை பல்வேறு வேடங்களைப் பூண்டு, பல்வேறுபட்ட உள்நோக்கங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்க, இந்த பலதரப்பட்ட மந்தையின் மேய்ப்பாளராக இருக்கக் கூடிய தகுதி டோபியாஸ் உல்ஃபிற்குத்தான் இருக்கிறது’’ என்று இவருக்கு 1989ம் வருடத்திய ரியா விருது வழங்கப்பட்டபோது நடுவர்களாக இருந்த ஸ்டான்லி பெர்கும் லின்ட் மைகேல் கர்டிஸ்ஸீம் குறிப்பிடுகின்றனர்.

இவரது சிறுகதை தொகுப்புகள்: In the Garden of the North American Martys, Back in the world, The Night in Question.

சிராகூஸ் பல்கலைக்கழகத்தில் Writer - in - residence ஆக பணிபுரியும் டோபியாஸ் உல்ஃப் தன் மனைவியோடும் மூன்று குழந்தைகளோடும் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

Pin It